Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் - 03

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
*3*



உன்னுள் தொலைந்து

என்னில் காண்பதே

காதல்!!!!



சாளரம் வழி சத்தமின்றி வந்த சூரியன், தன் வலுக்கரங்களை கொண்டு வெளிச்சம் பரப்ப, கண் விழித்த பேரின்பன் உள்ளங்கைகளை பரபரவென தேய்த்து, அதில் முகம் வைத்தான். நெடிய நிமிடத்திருக்கு பிறகு கண் திறந்தவன் முன்னே, சுவரில் மாட்டியிருந்த சட்டத்திற்குள் புகுந்திருந்த அவன் அன்னை ஆதூரமாய் அவனை கண்டு சிரித்தார்.



மனத்தின் சுனக்கங்களும், அந்த நேர அவன் பிடிப்பில்லா வாழ்க்கையும் அவனை விட்டு தள்ளி நிற்க, ஆசையாய் தன் அன்னையை நெருங்கினான். அவர் முகத்திருக்கு நேரே சென்றவன், “ம்மா! இந்த நாளும் உன் முகத்துல தான் முழிச்சுருக்கேன்! உன் சிரிப்புல தான் என் நாளை ஆரம்பிக்குறேன்! எவ்ளோ அடிச்சாலும் தாங்குற மனவலிமையை என்னைக்கும் போல இன்னைக்கும் குடு! நான் கோவப்பட்டு எந்த விபரீதமும் ஆகாம இருக்க நீதான் துணை நிக்கணும்!! முடிந்தவரைக்கும் பல்லை கடிச்சுக்கிட்டு எல்லாத்தையும் பொறுத்துகிட்டு தான் இருக்கேன்! எல்லை மீறாம பார்த்துக்கோ!” தன் அன்னையிடம் தினமும் வைக்கும் அதே கோரிக்கையை சளைக்காது வைத்துவிட்டு, கலைந்திருந்த போர்வையை மடித்து வைத்தான்.



தன் பீரோவை திறந்து ஒரு சட்டை வேட்டியை எடுத்துக்கொண்டவன், “நீ போறப்போ எனக்கு மட்டும் இப்படி இரு, அப்டி இருன்னு அட்வைஸ போட்டு சதி பண்ணியே! அதுல கொஞ்சமாது உன் சின்ன மவனுக்கு சொல்லிருக்க கூடாது! ரொம்ம்ம்ம்ப சீண்டுறான்!” அலுத்துக்கொண்டு குளிக்க சென்றான் பேரின்பன். அடுத்த கால்மணியில் கலக்கலாக தயாராகி கீழே சென்றவனை நடுக்கூடத்தில் இருந்த ஒரு புதியவர், “தம்பி, வணக்கம்!!” என்றார்.



பதில் வணக்கம் வைத்தவன், கூடத்தில் யாரும் இல்லாததை கண்டு, “யாரை பாக்கணும் ஐயா?” என்றான்.

“தம்பி, எனக்கு ஈரோடு டவுனு... கல்யாண தரகரா இருக்கேன்! உங்க வீட்ல கல்யாணம் ஆகாத ரெண்டு பசங்க இருக்கீங்கன்னு ஊருல சொன்னாங்க, எல்லார் வீட்லயும் வாங்குனமாறி, அப்டியே உங்க வீட்லயும் ஜாதகம் வாங்கிகிட்டு போலாம்ன்னு.....” என்று இழுத்தவரிடம், “ஓ” என்ற இன்பன், “சொல்லிட்டீங்களா?” என கேட்டான்.



“அம்மாகிட்ட விசயத்தை சொன்னேன், ஜாதகம் கொண்டு வரேன்னு உள்ளே போயிருக்காங்க!!” என்றார் அவர்.

இன்பன், “நல்லது! நீங்க உட்காருங்க!” என்று அமர சொல்லிவிட்டு உள்ளே செல்ல திரும்பியவன் மீண்டும் வந்து, “சாப்பிட்டீங்களா நீங்க?” என்று விசாரிக்க, அவர் “ஹான்! ஆச்சுங்க” என்றார் ஒரு மரியாதைகாய். அவர் பேச்சில் நம்பிக்கையற்றவனாய், “முகத்தை பார்த்தா சாப்பிட்ட மாறி தெரியலையே? சாப்பிட்டிருந்தாலும் பரவால, ஒரு ரெண்டு இட்லி சாப்பிடுங்க என்னோட!” என்று வம்படியாய் அவரை அழைத்துக்கொண்டு உணவறைக்கு சென்றான் இன்பன்.



“அத்தே!! சாப்பாடு!!” என்ற குரலுக்கு, கையில் இட்லிசாம்பார் போசியோடு வந்தார் தங்கம். புதியதாய் இருப்பவரை யாரென்றும் கேளாது, “வாங்க” என சொல்லிவிட்டு அவருக்கும் சேர்த்து உணவு பரிமாற்ற, காலையில் வெறும் வயிற்றில் வீடு வீடாய் சென்று ஜாதகம் பேசி வாங்கிய களைப்பில் ஐந்து இட்லிகளை அசால்ட்டாய் உள்ளே தள்ளிக்கொண்டிருந்தார் தரகர்.



“இன்னும் ரெண்டு வைக்கவா?” என வந்த தங்கத்தை தடுத்தவர், “போதுங்க போதுங்க! உங்க புள்ளையை பத்தி ஊருல ரொம்ப பெருமையா பேசுனாங்க! அளவுக்கு மீறி புகழ்றாங்கலோன்னு நினைச்சேன்! ஆனா இப்போதான் புரியுது, இவரை புகழ்றது தப்பே இல்லன்னு! அடுத்தவன் பசியரிஞ்சு காவயிறு கஞ்சி ஊத்துறவன், கடவுளுக்கு சமம்!” வயிறு நிறைந்ததில் வார்த்தைகள் அவரை மீறி வந்தன. தங்கத்திருக்கு தான் வளர்த்த மகனை கண்டு பூரிப்பானது.



கையில் ஒரு ஏடோடு வந்த சிவகாமி, “இது எங்க சின்ன பேரன் ஜாதகம்! அவனுக்கு இப்போ கல்யாணம் செய்யுற ரோசனை எங்களுக்கு இல்ல, மூத்தாளுக்கு தான் முடிக்க போறோம்! வீடு தேடி வந்து கேட்டதால குடுக்குறேன்! நல்ல இடமா இருந்தா சொல்லுங்க, பைய யோசிச்சு செய்யுறோம்!” என்றார்.



“ரொம்ப சந்தோஷம்” என கையில் வாங்கிக்கொண்ட தரகர், “மூத்தவருக்கு பொண்ணு பாத்தாச்சா?” என்றார் ஆவலாய். சிவகாமியும், “எங்க பங்காளி சொந்தத்துல ஒரு பொண்ணு இருக்கு, இந்த ஊரு தான்!! அவளை தான் பேசி முடிக்க போறோம்!!” என்றார். உண்டுக்கொண்டிருந்த இன்பனின் கைகள் வேலை நிறுத்தம் செய்தது.



“குடுத்து வச்ச பொண்ணு!” மனமார சொன்னவர், “உங்களுக்கு பேரங்க மட்டும் தானா? பேத்தி இல்லையாம்மா?” அடுத்து கேட்ட தரகரின் இக்கேள்வியை சற்றும் எதிர்ப்பார்க்காத சிவகாமி, வெகுவாய் தயங்க, உணவை பாதியில் விடுத்து எழுந்த இன்பன், “பேரங்க மட்டும் தான்!!” என்றான் மிக அழுத்தமாய். தரகர் பின்னே முறையாய் விடைபெற்று வெளியே சென்றார்.



கண்ணுக்கெட்டிய தொலைவு வரை பச்சைபசேல் என செழித்து நிற்கும் பயிர்கள். வற்றாத பவானி அன்னையின் தயவில் தடையின்றி நடந்துக்கொண்டிருந்தது விவசாயம். காலை இளவெயிலில் வேலை தொடங்கினால், மணி பன்னிரெண்டை நெருங்கும் நேரம் உணவு இடைவெளி விடுத்து, பின், மாலை மூன்று மணிக்கு மேல் மீண்டும் வேலை ஆரம்பிக்கும். வேலை செய்பவர்களுக்கு காலை உணவை வயலுக்கே வரவழைத்து கொடுத்துவிடுவார் ஒன்டிவீரர். சிலருக்கு மதிய உணவும் அங்கேயே நடக்கும்!!

முன்பெல்லாம் மணி ஒன்பதை கடக்கும்போது வேலைக்கு வருபவர்கள் வேகாத வெயிலில் பாடுபட்டு உழைத்து மாலை மங்கி பசியோடு வீடு செல்வதை பார்க்கவே மனம் பாராமாக இருக்கும். இப்போது அவர்கள் பழுவை குறைக்கும் இந்த யோசனையை சொல்லி காண்டீபன் மூலம் நடைமுரைப்படுத்தியிருக்கிறார் ஒன்டிவீரர். யோசனையின் ஆணிவேர் பேரின்பன் என்றால், அது யோசனையாக மட்டுமே போய்விடும் என்றே காண்டீபனிடம் அதை தன் ஆலோசனையாக சொல்லியிருந்தார் அவர்.



நடுவயலில் வரப்பில் அமர்ந்து லேசாக வாடியிருந்த ஒரு கொத்து பயிர்களை ஆராய்ச்சி பார்வை பார்த்துக்கொண்டிருந்த தன் கனிஷ்ட குமாரனை அணுகிய சத்தியராஜன், “காண்டீபா!” என்றார். அழைத்ததும் நிமிர்ந்தவன் எழுந்துக்கொள்ள பார்க்க, அவன் தோள் பற்றி அழுத்தியவர் அவன் அருகிலேயே அமர்ந்துக்கொண்டார்.



“என்னப்பா பார்த்துட்டு இருக்க?”

காண்டீபன், “கொஞ்சம் பயிர் மட்டும் வாட்டமா தெரியுதுப்பா! அதான் பாக்குறேன்!!”

“ம்ம்!! அது வாட்டாமா இருந்தா உனக்கென்ன?” அவர் கேள்வியில் திரும்பிய காண்டீபன், “என்னப்பா இப்படி கேக்குறீங்க? புள்ளையாட்டம் வளர்க்குற பயிர் வாடுனா மனசு வலிக்காதா?” என்றிட, “அப்போ என் புள்ள வாடுனா? என் மனசு வலிக்கும்ல!” என்று பயிரில் இருந்து பையனுக்கு முடிச்சு போட்டார் சத்தியராஜன்.



“ப்பா??”

“கொஞ்சம் நாளா நானும் உன்னை பார்த்துட்டு தான் இருக்கேன்! நீ முன்னமாறி இல்ல! ஏதோ யோசனையாவே இருக்க! அவன்கிட்ட ரொம்ப கோவப்படுற! எதையோ மனசுல வச்சுக்கிட்டு தான் இப்டி இருக்கேன்னு தோணுது? அப்பாக்கிட்ட சொல்ற விசயமா இருந்தா சொல்லு!” தோழனாய் மாறி கேட்டவரை கண்டு இயல்பாய் சிரிக்க முயன்றான் காண்டீபன்.



“எப்பவும் இப்படிதானேப்பா!? எனக்கு அவனை பிடிக்காது! இப்போ ரொம்ப பிடிக்காம போச்சு! அவ்ளோதான் வித்தியாசம்!” என்றவன் சிறிது நிறுத்தி, “நான்... நான் கொஞ்ச நாள் வெளியூர்ல போய் தங்கலாம்ன்னு நினைக்குறேன்ப்பா!” எங்கோ பார்த்துக்கொண்டே சொன்னான் காண்டீபன். தந்தை அதற்க்கு சம்மதிக்க மாட்டார் என்பது அவனுக்கு திட்டவட்டமாய் தெரியும். இருந்தும் மனமின்றி கேட்டுவிட்டான்.



அதிர்ந்து போன சத்தியராஜன், “ஏன்ப்பா இப்படி சொல்ற?”

“இ..இல்லப்பா... அது... கொஞ்சநாள் மட்டும்” என்று இழுக்க, எதுவோ சரியில்லை என்பது அவருக்கு ஊர்ஜிதமானது.

“என்ன பிரச்சனை உனக்கு? அவனை வேணுன்னா எங்கயாது அனுப்பி விட்டுடவா?” இளையவனுக்காக மூத்தவனை ஊர்கடத்த துணிந்தார் அவர்.



“ப்ச்!! நான் கொஞ்சம் வெளில இருக்கேன்ப்பா! நானும் வெளியுலகம் பார்க்க வேணாமா?”



“பாருடா! தாராளமா பாரு! ஆனா இந்த அப்பனையும் கூடவே கூட்டிட்டு போய்டு! நீ இல்லன்னா நான் மட்டும் இங்க என்னடா செய்வேன்? எனக்குன்னு யாரு இருக்கா?” ‘போகவா?’ என கேட்டதற்கே மனதளர்ந்து கண் கலங்கும் தந்தையை கண்டு இளகி போனான் காண்டீபன். அவருக்கு இருக்கும் ஒரே பிடிமானம் அவன்தான்!!



“அப்பா!! ப்பா!! நீங்க கண்ணு கலங்குனா நான் மொத்தமா கலங்கிடுவேன்!! ப்ளீஸ்ப்பா! நான் எங்கயும் போகமாட்டேன்! ப்ளீஸ்ப்பா!!” மகனின் சமாதானத்தில் நம்பிக்கையுற்றவர் அமைதியாக, அமைதியின்றி தவித்தது காண்டீபனின் மனம்.



காலை உணவு முடிந்தவுடன் வீட்டை விட்டு வெளியே வந்தான் பேரின்பன். காம்பவுண்டுக்கு அருகே நிழலான இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு கார்கள் அவனை ‘வா’ ‘வா’ என அழைக்க, நெருக்கமாய் சென்றவன், அதன் பின்னே, இரு நாட்களாய் உபயோகிக்காததால் தூசு படிந்திருந்த தனது ‘இன்டுசுசுக்கி’ பைக்கை வெளியே எடுத்தான்.



பைக் கவரில் இருக்கும் துணியை எடுத்து படிந்திருந்த தூசியை தட்டி சுத்தம் செய்தவன், ‘அம்மா வைதேகி, பைக்கை ஸ்டார்ட் பண்ணிகுடு’ தாயை வேண்டிக்கொண்டே கண்களை இறுக்க மூடிக்கொண்டு கிக்கரை ‘நங்’கென உதைத்தான். அடி கொஞ்சம் பலமாய் விழுந்ததாலோ என்னவோ, ‘புர்ர்ர்ரர்’ என ஸ்டார்ட் ஆன வண்டி அடுத்த சில நொடிகளில், ‘புஸ்ஸ்ஸ்’ என ஆஃபானது.



மனம் தளராதவன் மீண்டும் கிக்கரை ‘நங்ங்ங்’கென உதைத்தான். இம்முறை ‘புர்... புர்... புர்ர்ர்ர்ர்....” என பேரிரைச்சலோடு ஆரம்பித்து அவன் மகிழ்வாய் ‘ஹப்பாடா’ எனும்போது ‘ஏப்ரல் ஃபூல்’ என பளிப்பு காட்டி ஆஃபானது.



‘ஸ்...ஸோ..’ என வாய்விட்டே சொன்னவன், “இன்னைக்கும் நடராஜா தான்” என சொல்லிக்கொண்டே தன் பைக்கை தள்ளிக்கொண்டு வெளியேறினான். வீட்டை தாண்டி சிறிது தூரம் சென்றதுமே இருந்த அவனது ஆஸ்தான மெக்கானிக் கடையில் வண்டியை நிறுத்தி, “செல்வா, என் தம்பியை கொஞ்சம் கொஞ்சிட்டு குடுடா” என்றான் அங்கிருந்த கல்லில் அமர்ந்துக்கொண்டு.



அவனை கண்டதுமே, “ஹாஹா!! இன்னைக்கும் உங்க தம்பி கோச்சுக்கிட்டானா?” என கேட்ட செல்வம், “சோக் போட்டு ஸ்டார்ட் பண்ண வேண்டியது தானேன்னே?” என்று சொன்னதை செய்தான்.



“வெள்ள சட்டை அழுக்காகிடும்டா!” என்ற இன்பனை கண்டு கிளுக்கி சிரித்த செல்வம், “மில்லுல போய் கணக்கெழுதவா போறீரு?” என்றிட, “ஏய்ய்ய்ய்ய்...!!” என கோவம் போல பசாங்கு காட்டினான் இன்பன்.



“ஸ்டார்ட் ஆகிடுச்சுண்ணே!!”



“நன்றிடா தம்பி!!” என்றுவிட்டு தன் வண்டியில் ஏறி முன்னே செல்ல இருந்தவனை, முன்னே வந்து நின்று தடுத்தாள் சுசீலா. மேலும் கீழும் மூச்சு வாங்க, “மா..மா...!!” என அவள் திக்கி அழைக்க, என்னவோ ஏதோ என்று பதறி, “என்னாச்சும்மா?” என்றான் இன்பன் பரிவாய்.



“இந்த வெள்ளை சட்டையில சூப்பரா இருக்க மாமா!” சொன்னவளை தீயென முறைத்தான் இன்பன். ஒன்றும் சொல்லாமல் ஆக்சிலேட்டரை அவன் திருக்க, பட்டென சாவியை எடுத்துவிட்டாள் சுசீலா. பொறுமை பஞ்சாய் பறந்துக்கொண்டிருன்தது அவனுக்கு.



“சாவியை குடு சுசி”



“ஹையோ! நீ சுசின்னு சொல்றப்போ எனக்கு எப்படி இருக்கு தெரியுமா?” நடுரோட்டில் நின்று காதல் செய்பவளை அவன் என்னவென்று சொல்ல!

உதட்டை அழுந்த கடித்துக்கொண்டான். சூடாய் எதுவும் சொல்லிவிடாதே என்று!!

“காலேஜு போலியா?”



“ப்ச்! அங்கன எல்லாம் என்னத்துக்கு மாமா? நீ பெரிய படிப்பு படிச்சியேன்னு தான் நான் காலேஜுக்கே சேர்ந்தேன்! அதுவும் இனி எதுக்கு படிச்சுகிட்டு! நம்மதான் கட்டிக்க போறோமே!” பைக்கில் அமர்ந்திருந்தவனை நெருங்கினாள்.



நகர முடியாது போக, “ரோட்ல நின்னு என்ன பேச்சு பேசிட்டு இருக்க சுசீலா?” என அதட்டியவன் ‘சுசி’யை கவனமாய் தவிர்த்தான்.



“அப்பா நமக்கு எப்போ பரிசம் போடுறதுன்னு நாள் கேட்க சொன்னாங்க மாமா?” அவனை அதட்டியதை பொருட்படுத்தாது மேற்கொண்டு பேசினாள்.



“இதெல்லாம் பெரியவங்ககிட்ட பேசனும்ன்னு தெரியாதா உன்கொப்பனுக்கு!”



“சரிதான் சரிதான்! நான் என் அப்பாக்கிட்ட சொல்லிடுறேன்!” உடனே அவள் ஒப்புக்கொள்ள, “நகரு, வேலைக்கு நேரமாச்சு!” என்றான் இன்பன்.

“உனக்கு வழிய விடுறதுக்கா நான் மூச்சு பிடிக்க ஓடியாந்தேன்? என்னை காலேஜுல இறக்கி விடு” அவன் அனுமதியை கூட கேட்காது பின் சீட்டில் ஏறி அமர்ந்து அவன் இடுப்பை பற்றிக்கொண்டாள். அவள் தொட்டவுடன் “கையை எடு சுசீலா, எல்லாரும் பார்க்குறாங்க” என்றான் ஆளில்லாத அச்சாலையை காட்டி.



“மாமனுக்கு வெட்கமோ!?” என சிரிப்பவளை ஒன்றும் சொல்லாது கல்லூரியில் இறக்கிவிட்டு, அவள் தோழிகளின் கேளிசிரிப்பை பொட்டலம் கட்டி வாங்கிக்கொண்டு தங்களது மில்லை நோக்கி வண்டியை செலுத்தினான் பேரின்பன்.



மில்லுக்குள் சென்று வண்டி நிறுத்துமிடத்தில் தனது தம்பியை பார்க் செய்தவனை கவரில் இருந்த ஒரு பழைய சட்டையை எடுத்து போட்டுக்கொண்டு தனது வெண்சட்டையை மடிப்பு கலையாது மடித்து வைத்தான்.



“ண்ணே!!” என்ற கூவலோடு அவன் இருபுறமும் வந்து நின்றனர் வெட்டுக்கிளியும், பச்சைகிளியும்!



“வந்துட்டீங்கலாடா?” என்றவன் வேலையை பார்க்க சென்றான்.

பச்சைக்கிளி, “நாங்க அப்போவே வந்துட்டோம், நீ ஏன்னே லேட்டு?”

“வழக்கம் போல வண்டி மக்கர்” என்ற இன்பன், சுசீலாவை பற்றி மூச்சுவிடவில்லை.



வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டவன் வேலையை கவனிக்கலானான். நேற்று இன்பனிடம் அடிவாங்கி பல் தொலைத்தவன், கவனமாய் அவன் கண்முன்னே வரவேயில்லை. லாரியில் இருந்த அரிசி மூட்டைகளை இறக்கி குடவுனில் சேர்க்கவே மதியம் வரை ஆனது. அதன் பின்னே அங்கேயே அமர்ந்து, கொண்டு வந்த உணவை முடித்தவன், பாலிஷ் செய்து ரகம் பிரிக்கப்பட்ட அரிசி மூட்டைகளை கணக்கெடுத்து, அனுப்ப வேண்டிய இடங்களுக்கு வண்டி ஏற்றினான். மாலை கடந்து வேலை முடிகையில் அவன் கையில் சுளையாய் நானூறு ரூபாய் கூலியாய் கொடுக்கப்பட்டது. மீண்டும் தன் வென்சட்டைக்கு மாறியவன், கிளிகளுக்கு ‘பை’ சொல்லிவிட்டு வண்டியை கிளப்பிக்கொண்டு வீடு நோக்கி சென்றான். அதுவரை அந்த நாள் முழுக்க அவன் கண்ணில் காண்டீபன் விழவில்லை.



வீட்டிற்கு சென்று வண்டியை நிறுத்தியவனை, “முடியாதுன்னா முடியாது அம்மாயி! இத்தன வருஷம் இல்லாதது இப்போ என்ன வந்துச்சு!!” காண்டீபன் கதறிக்கொண்டிருந்தது வெளிவரை கேட்டது. வேலையாட்கள் ஒருவரும் வீட்டினுள் இல்லை. சண்டையோ, பேச்சுவார்த்தையோ எதுவாகினும் வெளியாள் முன் காண்டீபன் வைத்துக்கொள்ள மாட்டான் இன்பன் விடயத்தை தவிர.



‘ஆஹா! காண்டு செம்ம காண்டுல இருக்கான் போலயே!!’ என எண்ணிக்கொண்டே மெதுவாய் வீட்டினுள் வந்தான் பேரின்பன்.



பூஜையறையின் வாசலில் அழுது வடிந்த முகத்தோடு சிவகாமி இருக்க, ஈசி சேரில் கண்மூடி சாய்ந்திருந்தார் ஒன்டிவீரர். அடுக்களையில் இருந்து கண்ணீரோடு எட்டிப்பார்த்தார் தங்கம். அதற்குமேல் இன்பன் நிற்கவில்லை. வேறு யாரையும் காணவும் இல்லை. நேரே தன் பாட்டியிடம் சென்று, “அம்மாயி, எதுக்கு அழுறீங்க? என்ன நடந்துச்சு?” என்றான் தாள மாட்டாமல்.



ஒருவரும் ஒருவார்த்தையும் பேசவில்லை. சிவகாமியின் கண்களில் இருந்து கண்ணீர் சிதற, “யாராவது சொல்லுங்க என்ன நடந்துச்சுன்னு!” என்று குரல் உயர்த்தினான் பேரின்பன். ஒன்டிவீரர் பேசும் நிலையில் இல்லை. மனைவியின் கண்ணீர் அவரை உடைத்திருந்தது. எப்போதும் சபையில் பேசி பழக்கமிராத தங்கம் ஊமையாய் அழுதார். சத்தியராஜன் முகத்தை திருப்பிக்கொண்டு அமர்ந்திருக்க, காண்டீபன் மட்டுமே அவன் கண்டு நின்றான்.



வேறுவழியின்றி, “நீயாது சொல்லு காண்டீபா!” என்று இறைஞ்சினான் இன்பன். அவன் முகத்தை சுளித்துக்கொண்டு, “அவங்க பொண்ணு மேல திடீர் பாசம் வந்துடுச்சு! அவங்களை வீட்டுக்கு கூப்பிடனுன்னு சொல்றாங்க” என்றான். அதை கேட்டதும் சிவகாமியின் கண்ணீரில் கனிந்திருந்த மனம், கற்ப்பாறையாய் இறுக, “சாவே விழுந்தாலும் சரி, அந்தம்மா இந்த வீட்டு வாசல்படியை மிதிக்க கூடாது!!!” என கர்ஜித்தான் பேரின்பன். பேரமைதியில் இருந்த வீட்டில் பேரின்பனின் வார்த்தைகள் இடி போல ஒலித்தது.


-தொடரும்...
 
Super Super Super pa... Semma semma episode..... Inban அவன் அம்மா எப்படி vendikitaan paarungale che paavam pa.... இந்த kaandipan ku enna aachi ethuku வெளியூர் ku pooganum nu solraan... Athalayum inban ah சுத்தமா pidikalanu solran... சுசி ah love ? பண்றான் ah.... Athukula avan appa azhuthutaaru... இந்த சுசிலா avana போட்டு paadaa paduthura avanuku சுத்தமா இஷ்டம் இல்ல போல... அவங்களுக்கு பொண்ணு வாரிசும் irukaa.. Avanga வரணும் nu சொன்னது ku inban ku enna கோவம் வருது pa enna தான் aachi.... Onnum puriyala.. Super Super Super pa... Eagerly waiting for next episode
 
Top