Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிறைமீட்டு உனைக் காக்கவா? - டீசர்

Advertisement

Ruthitha

Member
Member
வணக்கம் நண்பர்களே! இங்கே வெகுசிலருக்கு என்னை தெரிந்திருக்கலாம்.. பலருக்கு தெரியாமல் இருக்கலாம்... எல்லாருக்குமாக சேர்த்து குட்டியா ஒரு அறிமுகம்...

நான் ருத்திதா, இது என்னோட புனைபெயர்... முழுநேரமா எழுதலைன்னாலும் மனசுக்கு தோணினதை அப்பப்போ எழுதிட்டு இருக்கிறேன்... புது முயற்சியா தமிழ்நாவல் ரைட்டர்ஸ் சைட் போட்டியில கலந்துக்கப் போறேன்.. கதையோட தலைப்பு... “சிறைமீட்டு உனைக் காக்கவா?”

கதையின் நாயகன் – நாயகி : ரஞ்சன் – கார்த்திகா.

இது கொஞ்சம் வித்தியாசமான முயற்சி.. ஏன்னா இதுவரை என்னோட மெயின் லீட் எல்லாரும் படிச்சவங்க, நல்ல பதவியில இருப்பாங்க... இங்கே நாயகி பத்தாம்வகுப்பு படித்தவள், நாயகன் சிறைவாசி. இவங்களுக்கு இடையிலே நடக்கப் போகும் முடிச்சுகள்தான் “சிறைமீட்டு உனைக் காக்கவா?”

“பிழைதாண்டி உனை நேசிக்கவா?” என தலைப்பிடப்பட்ட புத்தகத்தை வெகுநேரமாக கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகில் வந்த விற்பனைப் பிரதிநிதி, “மேம்.. இந்த ஆத்தரோட புக்ஸ் நல்லா இருக்கும்.. ரெண்டு வருஷமா இவங்களோட புக்ஸ் நாங்கதான் பப்ளிஷ் பண்ணிட்டு இருக்கிறோம்... வாசிச்சு பாருங்க... மத்த புக்ஸ் டைட்டில்..” என புன்முறுவலுடன் பேச, அவரை நிமிர்ந்து பார்த்தவள் மெலிதாக இதழ்வளைத்தாள்.

“முத்தமிழ்” என குறிப்பிடப்பட்டிருந்த அந்த ஆசிரியரின் பெயரைத் தொட்டுப் பார்த்துக் கொண்டவள், “இவங்களோட கதைகள் தொடர்ந்து வாசிச்சிட்டுதான் இருக்கிறேன்.. எல்லா புத்தகமும் என்கிட்டே இருக்குது...” என சற்றே கர்வத்துடன் உரைத்தாள்.

புதிய வெளியீடான அந்தப் புத்தகத்தின் பக்கங்களை புரட்டிப் பார்த்தவள், அங்கேயே சில பக்கங்கள் வாசிக்கத் தொடங்கிவிட்டாள். விற்பனைப் பிரதிநிதியின் பார்வையில் தெரிந்த மாற்றத்தை உணர்ந்தவள், “மேம்... இந்த புக் வேணும்...” என தெரிவிக்க, அதைக் கையில் பெற்று விலையைப் பார்த்துவிட்டு, “250 ரூபாய் மேம்... பத்து பெர்சன்ட் டிஸ்கவுன்ட்... 225 ரூபாய் கொடுங்க...” என்றார்.

“இதோ...” என தனது பையைத் துழாவுகையில் வீட்டிலிருந்து புறப்படும் வேளையில் தனது தாய் அர்ச்சித்த வார்த்தைகள் நினைவுக்கு வந்துபோனது.

“கிளம்பியாச்சா? புக்ஃபேர்ன்னு பேப்பர்ல வந்த விளம்பரத்தை உத்துஉத்து பார்த்துட்டு இருக்கும்போதே நெனச்சேன்... எவ்ளோ துணி தைக்க வேண்டியதிருக்குது... அவளுகள்லாம் நாளைக்கு காலையிலேயே வந்து கேப்பாளுவ... சாயந்தரம் குத்துவிளக்கு பூஜைக்கு கட்டிக்கிட்டு போவணும்ன்னு... ஒழுங்கா உக்காந்து தைக்கிறதை விட்டுட்டு என்ன வேலை பண்ணிட்டு இருக்க... போறதெல்லாம் சரிதான்... புக்கு வாங்குதேன்னு கொண்டுபோற துட்டெல்லாம் செலவு பண்ணிட்டு வந்துநின்னா நடக்கதே வேற, சொல்லிட்டேன்...”

பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் புறப்பட்டு வந்திருந்தவளது செவிக்குள் இந்த வார்த்தைகள் ரீங்காரமிட, உலுக்கிக்கொண்டு மீண்டவள், “ரெண்டு புக் வேணும்க்கா...” என அதற்கான பணத்தை செலுத்திவிட்டு வெளியே வந்தாள்.

“ஆன்... ரத்னாக்கா... முத்தமிழோட புது புக் வாங்கிட்டேன்... நீங்களும் கேட்டியள்லா... அதான் ரெண்டா வாங்கிட்டேன்... ரெண்டு பக்கம் வாசிச்சேன், நல்லாருக்கு...” என இவள் பேசிக்கொண்டிருக்கும் போதே, எதிர்முனையில் இவளது அன்னை சரஸ்வதியின் குரல் கேட்டது.

“அதான கேட்டேன்... பஸ்சார்ஜ் தவிர வேற எதுவும் செலவழிக்க மாட்டேன்னு சொல்லிட்டுப் போயிட்டு ரெண்டு புக்கு வாங்கியிருக்கியோ? வீட்டுக்கு வா, உனக்கு இருக்கு... ஒழுங்கு மரியாதையா ரெண்டு புக்கையும் குடுத்துட்டு துட்டை வாங்கிட்டு வா...” என அவர் கறாராகப் பேச, “சரிம்மா...” என அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.

“ரத்னாக்கா... உன்னை யாரு எங்கம்மா இருக்கும்போது ஸ்பீக்கர்ல போட சொன்னது...” என மனதிற்குள் திட்டியவள், “இப்போ இந்த புக்கை எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போனா அம்மா கொலையே பண்ணிடுவாங்க... ஒளிச்சு வைக்கலாம்ன்னாலும் சிபிசிஐடி லெவலுக்கு கேள்வி கேட்பாங்க.. திருப்பி கொண்டு கொடுக்கவும் முடியாது...” என்னும் யோசனையுடன் புத்தகக் கண்காட்சி வாசலுக்கு வர, “சிறைக்கைதிகளுக்கு புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கலாம்...” என்னும் பெயர்தாங்கிய பெட்டி இருந்தது.

இதைக் கண்டவளுக்குள் சலனம் தோன்ற, “இதுவும் ஒருவகையில் நல்ல காரியம்தான்...” என்னும் எண்ணம் உந்தித் தள்ளியது. தாமதமின்றி அந்த பெட்டியில் தான் வாங்கிய இரண்டு புத்தகங்களையும் வைத்துவிட்டு தனது வழியில் நடந்தாள் கார்த்திகா.

“புதுசா நிறைய புக்ஸ் வந்திருக்குதாம்...” என அந்த சிறைச்சாலையில் புத்தக வாசிப்பில் ஆர்வம்கொண்ட கைதிகள் இருவர் பேசிக்கொண்டவாறே செல்ல, அவர்களுடன் தானும் சென்றான் ரஞ்சன்.

“பிழைதாண்டி உனை நேசிக்கவா? – முத்தமிழ்” என அச்சிடப்பட்டிருந்த புத்தகத்தை கண்ணுற்றவன், அதைக் கரத்தில் ஏந்தி தன் விரல்களால் தொட்டுப் பார்த்தான்.

ரஞ்சன் – கார்த்திகாவுக்கும் என்ன சம்பந்தம்? முத்தமிழ் யார்? இருவரது சந்திப்பும் எவ்வாறு நிகழும்? என்பதை கதையினூடே தெரிந்து கொள்வோம்... திங்கள், புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாயம் பதிவிடப்படும்... அப்பப்போ சர்ப்ரைஸ் யூடிகளும் உண்டு... கீப் சப்போர்ட்டிங் மக்களே... உங்களது அன்பையும் ஆதரவையும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்...
 
Top