Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

டிங் டாங் காதல் - 2

Advertisement

Bookeluthaporen

Well-known member
Member
மக்க கலங்குதப்பா
மக்க கலங்குதப்பா மடி
புடிச்சி இழுக்குதப்பா மடி
புடிச்சி இழுக்குதப்பா

நாடு கலங்குதப்பா
நாட்டு மக்க தவிக்குதப்பா
என்னப் பெத்த மகராசா...


காலை எழுந்ததும் வாசல் கூட்ட சென்ற மஹேஸ்வரிக்கு இன்முகமாய் இருந்த எதிர்வீட்டினரை கண்டதும் தானே அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கும் உணர்வு. அதே மகிழ்ச்சியில் சென்று கணவனுக்கு காபி கலந்து கொடுத்தவர் காலை உணவை புத்துணர்ச்சியோடு தயாரித்துக்கொண்டிருக்கும் பொழுது தான் மேலிருந்து கேட்டது அந்த பாட்டு சத்தம்.

"உன் பொண்ணு ஆரமிச்சிட்டா" தலையை ஆட்டி சிரித்தார் சுந்தரம்.

"ஆமா" என்றவர் வேகமாக அடுப்பிலிருந்து சாதத்தை அனைத்தவர் வேகமாக மாடினோக்கி சென்றார். படியில் செல்லும் பொழுதே மகள் எதிர் வீட்டை பார்த்துக்கொண்டே பல் துலக்குவது தெரிந்தது.

"வைஷ்ணவி பாட்டு சவுண்ட் கம்மி பண்ணு இல்லனா ஆப் பண்ணு" என்றார் ஆணையாக.

"போ மா" என்றவள் சத்தத்தை இன்னும் அதிகப்படுத்தி வைத்தாள்.

மஹேஸ்வரி சென்று வேகமாக அதை நிறுத்திவிட, "மம்மி அத ஆன் பண்ணிட்டு விட்டுடு இல்லனா அடுத்து நடக்க போற சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை சொல்லிட்டேன்"

"முதல்ல பல்ல விழக்கிட்டு பேசுடி. கேவலமா இருக்கு" என்றவர் கட்டிலில் மதிக்காமல் களைந்து கிடந்த போர்வை, கீழே கிடந்த தலையணையை பார்த்து, "பொம்பள பிள்ளைன்னு பாத்தா மட்டும் தான் தெரியும் ஆனா எந்த வேலையும் ஒரு பொண்ணு பண்ற மாதிரி இருக்குறது இல்ல" வசைபாடிக்கொண்டே அறையை சுத்தம் செய்து வைக்க துவங்கினார் மஹேஸ்வரி.

அதற்குள் பல் துலக்கி முகம் கழுவி வந்த வைஷ்ணவி மீண்டும் வேறு பாட்டை அலறவிட்டாள்.

"வைஷு..." அதற்குமேல் சத்தமாக பேசி பழகியிராத மஹேஸ்வரியால் அவளை அடக்க முடியவில்லை.

"ம்மா இப்டி பாட்டு கேட்டா தான் கிக்கா இருக்கும். காலைல ஒரு எனர்ஜி ஏத்த வேணாம்?" பாட்டிற்கு ஏற்றார் போல் தாயின் முன்னாள் வந்து வராத நடனத்தை ஆடினாள்.

"ம்ம்ம் ஆடு... நீ நல்லா ஆடு. எதுக்கு தான் உன்ன மாதிரி அடங்கா பிடாரிய கடவுள் எனக்கு குடுத்தாரோ? ஆம்பள பையனே அமைதியா இருக்கான் நீ தான் அவன் பண்ண வேண்டிய எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்க" வரிசையாக குற்றாலம் சாட்டினார்.

"அவன் ஆம்பள பையன் மாதிரி இல்லனு தான் கடவுள் உனக்கு என்ன குடுத்துருக்காரு மம்மி... தேங்க் ஹிம் (Thank him)" அன்னை கண் முன் வந்து பரதமாடிக்கொண்டே அவர் வேலை செய்வதை தடுத்துக்கொண்டிருந்தாள்.

"வைஷு அப்பாக்கு டைம் ஆச்சு அவரை கவனிக்கிறது விட்டுட்டு உன்ன வந்து பாக்குறேன். எதுத்த வீட்டுல நல்ல காரியம் நடந்துட்டு இருக்கு அதுக்கு எழவு பாட்டு போட்டனா நாள பின்ன எப்படிடி அவங்க முகத்துல முழிக்க முடியும்?"

"எதுத்த வீட்டுல இருக்கவங்கட்ட பேசாத ம்மா"

செய்துகொண்டிருந்த வேலையை நிறுத்தியவர் மகளைப் பார்த்து, "நீ என்ன பண்ணுன?"

கையும் களவுமாக மாட்டிக்கொண்டதை அறிந்தும் சிறிதும் பதட்டம் கொள்ளாதவள் வேகமாகத் தாய் அருகே வந்து அவர் தோளில் கை போட்டு, "இப்ப தான் மம்மி பாய்ண்டுக்கு வந்துருக்க நீ. நான் நா வாட்டுக்கு வெளிய நின்னுட்டு இருந்தேன் மம்மி அங்க அந்த வீட்டுல இருந்து ஒரு பையன்"

தாய் விட்டுப் பிரிந்தவள் கார்ட்டூனை போல் இரண்டு முறை குறுக்கும் நெடுக்கும் நடந்து காட்டி, "இப்டி இப்டிஈஈ... நடக்குறான் மா அதுவும் சட்டை போடாம இடுப்புல ஒரு துண்டு மட்டும் கட்டி. இத தட்டி கேட்ட என்ன மதிக்காம அவன் வாட்டுக்கு போய்ட்டான்மா"

"கரைச்சான் காவடி தூக்குறது எதுக்குன்னு எனக்கு தெரியும். வந்து பாத்திரம் கழுவி குடு இல்லனா துணிக்கு சோப்பு போட ரெடியா இரு" ஒதுக்கி வைத்துக்கொண்டிருந்த கட்டிலை அப்படியே போட்டுவிட்டு கீழே சென்றுவிட்டார்.

அன்னை சென்ற பாதையைப் பார்த்தவள் மீண்டும் கட்டிலைப் பார்த்து ஒரு தோள் குலுக்கலுடன் அப்படியே போட்டு வெளியில் வந்தாள். சரியாக வைஷ்ணவி மாடியில் தன் அறைக் கதவைப் பூட்டும் பொழுது சிவப்பு நிற சட்டையும், பட்டு வேட்டியுமாய் சுறுசுறுப்பாக கீழே சென்றுகொண்டிருந்தான்.

வேகமாக, "துண்டு பறக்குதே..." கேலியாகச் சத்தம் கொடுத்து கீழே அமர்ந்துகொண்டு தனக்கு முன்னாள் இருந்த இரண்டடி திண்டின் ஓட்டையில் அவன் எதிர்வினையை ஆர்வமாய் வைஷ்ணவி பார்க்க, தன்னை சீண்டவே இவள் அழைத்துள்ளாள் என்று அறியாத கார்த்திக் பிரேக் அடித்தார் போல் நின்று அவள் வீட்டின் மாடியைத் தான் பார்த்தான்.

அந்த பார்வையில் பதட்டமோ, கோவமோ, அல்லது இரண்டுமா தெரியவில்லை ஆனால் அவன் தன்னை நொடியில் புரிந்துகொண்டதை எண்ணி வாயை மூடி சிரித்தாள் வைஷ்ணவி.

சில நொடிகள் நின்று அவள் வீட்டின் மொத்த மாடியையும் ஒரு மிரட்சியோடு பார்த்த கார்த்திக் தன் பிரமை தான் போல் என்று எண்ணி தலையைக் குலுக்கி கீழே சென்றான்.

அவனை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த வைஷ்ணவிக்கு அடக்க முடியாமல் சிரிப்பு பீரிட்டு வந்தது, "சரியான மாங்கா" சிரிப்புடன் அவனைத் திட்டிவிட்டு கீழே சென்றாள்.

இது தான் வைஷ்ணவி. நம் கதையின் நாயகி. குறும்பு, சேட்டை, வாய் இவை அனைத்தும் அதிகம் இருந்தாலும் அதிக துணிச்சல் உள்ளவள். எவர் எதிரில் வந்தாலும், 'வந்து பார்' என்று நிற்கும் ரகம்.

தந்தை சுந்தரம், செங்கோட்டையில் உள்ள ஒரு தனியார்ப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக இருப்பவர் அதட்டி எந்த காரியத்தையும் செய்வதில் விருப்பமில்லாமல் பொறுமையை மட்டுமே வீட்டிலும் சரி பள்ளியிலும் சரி சிரமேற்கொண்டு நடப்பவர். அன்னை மகேஸ்வரி, இல்லத்தரசி இவரது அமைதியான குணத்தில் ஈர்க்கப்பட்டு இருபத்தி எட்டு வருடங்கள் முன்னாள் வீட்டினரை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்டார்.

ஒரு மூத்த சகோதரன், சித்தார்த். திருநெல்வேலியில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ஹச்.ஆர் ஆக பணிபுரிவதால் அங்கேயே ஒரு விடுதியில் தங்கி விடுமுறை நாட்களில் இல்லம் வந்து செல்வான். சகோதரியின் பேச்சுகளையும் அடிகளையும் வாங்காமல் அவன் வார இறுதி நாட்கள் நிச்சயம் ஓடாது. சித்தார்த்தும் அன்னை தந்தையைப் போலவே அமைதியாக இருப்பவன்.

அந்த மொத்த இல்லத்திற்கும் சேர்ந்து சரவெடியைத் தினமும் வெடிப்பவள் தான் வைஷ்ணவி.

படியை விட்டு கீழே இறங்கி வந்த பொழுது தங்கள் எதிர் வீட்டினை வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தவள் இறுதி படியில் சற்று மேலே தூக்கி இருந்த நாய் சங்கிலியைப் பார்க்கத் தவறிவிட்டாள்.

சரியாக அவள் வந்த பொழுது அவளைப் பார்த்து மிரண்ட அந்த அழகிய போமேரியன் வேகமாக எழுந்து சங்கிலியைப் பற்றிக்கொண்டு ஓடும் வேகத்தில் எழுந்து எங்கோ பாய அதன் சங்கிலியில் கால் இடறி வந்த வேகத்தில் வைஷ்ணவி தரையை வணங்கும் நோக்கில் பொத்தென விழுந்தாள்.

அவள் விழுந்த சத்தம் கேட்டு வெளியில் வேகமாக வந்து எட்டிப் பார்த்த அவள் தந்தை வைஷ்ணவி முகத்தைச் சுளித்து வைத்துக்கொண்டு எழுவதைப் பார்த்து, "இத்தனை நாள் நீ அத கொஞ்சம் நஞ்சமா கொடுமை பண்ணுன அதுக்கு தான் அது ஒரே நாள்ல உன்ன மண்ண கவ்வ வச்சிடுச்சு"

நக்கலாகச் சிரித்துக்கொண்டே உள்ளே சென்றவர், "மகேஷ் உன் பொண்ண பாரேன்..." மனைவியையும் மகளைக் கிண்டல் செய்ய அழைத்தார். அவர் சிரிப்பில் கடுப்பானவள் சங்கிலியை உதறி ஓடும் நோக்கிலிருந்த நாய் இப்பொழுது தன்னை பார்த்து மூச்சு வாங்க நாக்கை வெளியில் போட்டுப் பார்ப்பதைப் பார்த்து இன்னும் கடுப்பேற்றியது.

வேகமாக எழுந்தவள் அதன் வாயைத் தாடியோடு பற்றி கன்னத்தில் இரண்டடி போட்டாள், "என்னடா கோழி குண்டா நினைச்சிட்டு இருக்க? அந்த தடியன் வீட்டுல இருக்கான்ற தைரியத்துல என்னையே தள்ளி விடுறியா? இரு உன்னெலாம் அந்த வெறி புடிச்ச நாய் கூட்டத்துல விட்டா தான் சரிப்படும்" அதன் சங்கிலியைப் பிடித்து வெளியே அழைத்துச் சென்று சிறிது நேரத்தில் தனியாக வந்தாள்.

அந்த நேரம் சரியாகச் சுந்தரம் பள்ளிக்குக் கிளம்ப வண்டியை வீட்டை விட்டு எடுத்துக்கொண்டிருந்தார், "எங்க மா போய்ட்டு வர்ற?"

"நாலாவது தெருவுக்கு ப்பா" மேலே எதுவும் பேசாமல் வீட்டிற்குள் வேகமாகச் சென்றவள் அன்னை தனக்காக வைத்திருந்த ஓரளவு சூடிருந்த காபியைச் சென்று நிம்மதியாகத் துயிலில் ஆழ்ந்திருந்த சகோதரன் முகத்தில் கொட்டினாள்.

முகத்தில் நெருப்பை அள்ளிக் கொட்டியது போல் வேகமாக எழுந்தவன் தனக்கு முன் பத்ரகாளியாக நின்றவளை முறைத்து, "காலைலயே ஆரமிக்காத வைஷு நைட் தூங்கவே ரொம்ப லேட் ஆகிடுச்சு" வைஷ்ணவியின் துப்பட்டாவில் முகத்தைத் துடைத்து மீண்டும் போர்வைக்குள் ஒளிந்துகொண்டான்.

"தெரியும்டா நீ எப்படி தூங்குவ? அந்த வீனா போன ஆஸ்கார்ர வச்சு என்ன விழ வச்சல நீ அதுக்கு தான் ராத்திரி முழுசும் ட்ரைனிங் குடுத்துருப்பன்னு தெரியும்டா" போர்வையை மீறி அவன் குலுங்கி சிரிப்பது தெரிந்தது.

சில நொடிகள் பொறுத்தவன் அதிலிருந்து வெளி வந்து, "நான் எதுக்கு வைஷு அப்டி பண்ண போறேன்? ஹாஹாஹா ஹாஹா ஆனாலும் நீ விழுந்தத நினைச்சு பாக்கவே சிரிப்பு வருது... என்ன நான் தான் அத பாக்க இல்ல"

அவனை ஏளனமாக பார்த்து சிரித்தவள், "நல்லா சிரிச்சுக்கோடா இன்னும் அரை மணி நேரத்துல உன் நாய் நிலைமையை பாத்து இதே மாதிரி சிரிக்கிறியான்னு பாக்கறேன்" சகோதரியின் விஷம சிரிப்பில் வீறுகொண்டு எழுந்தவன் வரவேற்பறையில் வசமாக அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

"ஏய் ஆஸ்கார்ர என்ன பண்ண?"

"வேணும்னா நீயே போய் தேடிக்கோடா" அழுத்தமாய் அவள் கூற, "ம்மா இவளை பாருங்கமா ஆஸ்கார்ர என்னமோ பண்ணிட்டா" வாசலை நோக்கிச் சென்றவன் சகோதரியை முறைத்துக்கொண்டு தன்னுடைய நாயைத் தேடி ஓடினான்.

"போடா போடா புண்ணாக்கு இவன் முறைக்கிறதுக்கெலாம் நாங்க பயந்துடுவோமா? நான் கேட்ட டாபர் வாங்காம ஒரு குழந்தைய வாங்கிட்டு வந்தல்ல அனுபவிடா"

மகள் கருவுவதை பார்த்து முறைத்த மகேஸ்வரி, "உன்ன கல்யாணம் பண்ணி அனுப்புனா தான் இந்த வீடு நிம்மதியா இருக்கும்"

நீண்ட மூச்சு விட்ட வைஷ்ணவி, "சொல்லிட்டே தான் இருக்கியே தவற செய்ய மாட்டிக்கிற. பேசாம நானே ஒரு பையன புடிச்சிட்டு வரட்டா? எதுக்கு வயசான காலத்துல நீயும் சுந்தரும் கஷ்டப்படணும்?"

வாசலில் மெல்லிய சிரிப்பு சத்தம் கேட்டு இருவரும் திரும்பி பார்க்க அங்கு இன்முகமாய் நின்றிருந்தார் மஹாலக்ஷ்மி, கார்த்திக்கின் அன்னை.

"சாரி பால் குடுக்க வந்தேன்..." கையில் ஒரு தட்டில் நான்கு பேப்பர் கப்பில் பால் கொண்டு வந்து நின்றார்.

"உள்ள வாங்க இதுக்கெல்லாம் ஏன் சாரி சொல்லணும். உக்காருங்க"

வைஷ்ணவியும் எழுந்து, "சும்மா விளையாட்டுக்கு பேசுனேன்னு சொல்ல மாட்டேன் ஆண்ட்டி நிஜமா தான் சொல்றேன் இந்த அம்மா தொல்லை தாங்கல ரொம்ப அனத்திட்டே இருக்கு"

வாய் விட்டுச் சிரித்தவர் மகேஸ்வரியைப் பார்த்து, "வெள்ளந்தியான பேச்சுங்க உங்க பொண்ணுக்கு" என்றவர் முதலில் வைஷ்ணவியிடம் வந்தவர் அவள் கையில் ஒரு டம்ளர் பாலை வைத்து அதன் பிறகு மற்றதை எல்லாம் மஹேஸ்வரி கையில் கொடுத்தார்.

"மதியம் சாப்பாடுக்கு வீட்டுல இருக்க எல்லாரும் வந்துடுங்க" என்றார் சிரிப்பு மாறாமல்.

"வீட்டுல யாரும் வர மாட்டாங்க ஆண்ட்டி என் அண்ணனுக்கு புடிச்ச நாட்டுக்கோழி குழம்பு. எனக்கு தான் ஆகாது. நான் வேணா உங்க வீட்டுக்கு வர்றேன்" மகள் எதற்காக அடி போடுகிறாள் என்பதை அறிந்த மஹேஸ்வரி வைஷ்ணவியை முறைத்தார். அதைக் கண்டு கொண்டால் அது வைஷ்ணவி இல்லையே...

மஹாலக்ஷியும் சிரித்துக்கொண்டே, "மதியம் சைவம் தான் மா"

"நீங்க பழைய சாப்பாடு போட்டாலும் அவ வருவா" மகளை சரியாக காலை வாரினார் அவள் அன்னை.

"சரிங்க வர்றேன்"

அவர் சென்றதும் அன்னையைப் பார்த்து இல்லாத காலரைத் தூக்கிவிட்டவள், "உன் மகளுக்கு ஒடம்பெலாம் மச்சம் மம்மி பாரு ஆடு தானா வந்து சிக்குது. சரி காசு ஒரு மூவாயிரம் எடுத்து வை, உன்னோட ஆஸ்கார் போர்ல இருந்து வந்துடும்"

"என்னடி பண்ண பிள்ளையை?"

"என்னைக்காவது எனக்காக இப்டி துடிச்சிருக்கியா நீ?"

"கேக்குறதுக்கு பதில் சொல்லு பிள்ளையை எங்க விட்டுட்டு வந்த?" அசால்டாக தோளை குலுக்கி, "ரொம்ப நாளா அவன் ஆசைப்பட்டு கேட்டது தான் நாலாவது தெருல விட்டுட்டு வந்தேன்" நெஞ்சே வலித்தது மஹேஸ்வரிக்கு.

"அந்த புல் டாக் (Bull Dog) இருக்க ஏரியால பச்சை பிள்ளையை விட்டுட்டு எப்படிடி மனசாட்சியே இல்லாம இருக்க?" என்றவர் வேகமாக மகனுக்கு அழைத்தார்.

அந்த புல் டாக் நாய் ஒரு முறை தெருவில் சென்றிருந்த ஒரு நாயை சங்கிலியை பிடிங்கி வந்து கடித்து அந்த நாயும் இறந்துள்ளது. அதனாலே அந்த பக்கம் ஆஸ்காரை அழைத்து செல்வதை இவர்கள் குடும்பமே தவிர்த்தனர். மொத்த குடும்பமும் பிள்ளையாய் வளர்த்த நாயை தேடிக்கொண்டிருக்க இங்கு வைஷ்ணவி மதியம் என்ன என்ன செய்யலாம் என்ற யோசனையில் மூழ்கிப்போனாள்.

Epdi iruku makkale??

Comments Please
 

Advertisement

Top