Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நள(ன்)தமயந்தி - 12

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம்: 12

தமயந்தியின் வாழ்க்கையில் நடந்ததனைத்தையும் கேட்ட நளன், சுந்தரத்திடமும், விசாலம் மீனாட்சியிடமும் சில ஆறுதல் வார்த்தைகளை கூறிவிட்டு சென்றனர்..

தமயந்தி தானாகவே ஆறுதல் அடைந்து அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றாள். அவளின் வருத்தம், கவலை எல்லாம் மாமா தர்மாவின் மறைவு குறித்து மட்டுமே..

அஸ்வினைப் பற்றி சற்றும் சிந்தித்து பார்த்ததில்லை அவள். ‘அவனிடமிருந்து நல்ல வேளையாக தப்பித்தோம்’ என்பது மட்டும் தான் தமயந்தி அவனைப்பற்றி நினைப்பது.

‘அஸ்வினோடான திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததால் தான் தன் அன்பு மாமாவை இழந்து விட்டோம். திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தது தான் மிகவும் தவறு.’ என்று மாமா தர்மாவின் மறைவிற்கு அவள் மட்டுமே காரணம் என்பதை உறுதியாக இன்றும் நம்புகிறாள் தமயந்தி.

அடுத்த ஒருவாரமும் சுந்தரம் குடும்பத்தினருக்கு அமைதியாகவே கழிந்தது.

அந்த வாரம் முழுவதும் நளனும் விசாலமும் நிறைய நிறைய பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.

தமயந்தியை நளனின் மனம் விரும்ப தொடங்கியதும் அந்த வாரத்தில் தான்.

தமயந்தியை விரும்ப ஆரம்பித்ததை விசாலம், மகனின் முகத்தைப் பார்த்தே அறிந்துக்கொண்டார். அதை அவனிடம் சுட்டிக்காட்டவும் அவர் மறக்கவில்லை.

மகனின் விருப்பத்தை அறிந்தக்கொண்ட விசாலம் மேலும் நாட்களை கடத்த விரும்பாமல் அன்றே தமயந்தியின் வீட்டிற்கு சென்றார்.

நளனும் சுந்தரத்திடம் நேரடியாக பேசப் போவதாக கூறிவிட்டு ‘நளாஸ்’ க்கு சென்றான்.

தமயந்தியின் வீட்டிற்கு சென்றதும் மீனாட்சியின் வரவேற்பை இன்முகத்துடனே ஏற்றுக்கொண்டு வந்த விஷயத்தை சொல்ல தொடங்கினார் விசாலம்.

தமயந்தியும், சுந்தரமும் ‘சுந்தரதர்மா’ விற்கு சென்றிருந்தனர்.

“மீனு..!! நான் நேரடியா விஷயத்துக்கே வரேன்..” என்ற விசாலத்தைப் பார்த்தார் மீனாட்சி.

நளனிற்காக விசாலம் பெண் கேட்பதற்கு முதலே தமயந்திக்கு வேறு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற முடிவை எடுத்திருந்தார் மீனாட்சி.. அதை சுந்தரத்திடமும் தெரிவித்திருந்தார்.

தமயந்தியின் மனம் சற்றே குணம் ஆன பின்னர் இதைப் பற்றி பேசிக்கொள்ளலாம் என்ற முடிவையும் அவர்கள் எடுத்திருந்தனர்.

விசாலம் கேட்டதை தான் அவர்கள் சற்றும் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. அதையும் நல்லதுக்கு என்றே எடுத்துக்கொண்டனர் சுந்தரம் தம்பதியினர். விசாலம் கேட்டதைக்கொண்டே தங்கள் பெண்ணிடம் வேறு திருமணத்தைப் பற்றி பேச முடிவெடுத்தனர். அதற்காக சரியான நேரத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் மீனாட்சிக்கு விசாலத்தின் வரவு நல்லவிதமாகவே பட்டது..

“மீனு!! தமயந்தியை என் பையன் நளனுக்கு கல்யாணம் செஞ்சு தரியா? நாங்க அவளை நல்லா பார்த்துக்கறோம்..! இதில உனக்கு சம்மதம் தானே..!!” என்று கேட்டார் விசாலம்.

“என் சம்மதம் மட்டும் போதுமா விசாலம்?” என்று வினவினார் மீனாட்சி.

“சுந்தரம் அண்ணன் கிட்ட நான் பேசறேன்..”

“விசாலம் உன் நல்ல மனசு எனக்கு புரியுது.. எங்க சம்மதம் இதில முக்கியமே இல்லை.. தமயந்தி என்ன முடிவு எடுத்தாலும் எங்களுக்கு சம்மதம் தான்..” என்றார் மீனாட்சி.

“சரிதான் மீனு..!! இதில தமயந்தியோட முழு சம்மதம் இருந்தா தான் அவங்களோட வாழ்வு நல்ல இருக்கும்.. தமயந்திக்கு என் பையனை பிடிக்காட்டாலும் அவளுக்கு பிடிச்ச பையனாப் பார்த்து கல்யாணம் செஞ்சு வச்சிடு மீனு.. அவளுக்கு வாழ்க்கைத்துணை கண்டிப்பா அவசியம்..” என்ற விசாலம் அவரைப்பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

“என்னோட கணவர் இறந்தபோது எனக்கு முப்பத்தியைந்து வயசு மீனு..!! நளனுக்கு வயசு பத்து.. அக்கம் பக்கம் இருக்கிறவங்களுக்கு எல்லாம் என்னோட துக்கம் கண்ணுல படல.. என் உடம்பு தான் அவங்க கண்ண உறுத்திச்சு.. எனக்கு மறைமுகமா ரொம்ப தொந்திரவு கொடுக்க ஆரம்பிச்சாங்க..இதெல்லாம் அவங்கவங்க வீட்டு பொம்பளைங்களுக்கு தெரியாம செஞ்சாங்க.. நான் போய் சொன்னதையும் அவங்க யாருமே நம்பலை.. ஒருக் கட்டத்துல ரொம்ப தொந்திரவு தாங்காம தற்கொலை வரைக்கும் கூட போனேன்.. அப்போ நளன் என்ன சொன்னான் தெரியுமா மீனு..!! என்றார் விசாலம்.

‘சொல்லு’ என்பதைப் போல பார்த்தார் மீனாட்சி.

“அவனை கொண்டு போய் ஆசிரமத்துல விட்டுட்டு நான் வேறக் கல்யாணம் செஞ்சிக்கணும்ன்னு என் கிட்ட ரொம்ப தெளிவா பேசினான்.
அவனும் அவன் அப்பாவும் ரொம்ப நெருக்கமா இருப்பாங்க.. பத்து வயசு குழந்தைன்னு நினைக்காம குடும்ப நிலையையும், இந்த சமூகத்தைப் பற்றியும் அவனுக்கு நிறைய நிறைய சொல்லி தருவார் என் வீட்டுக்காரரு.. நளனும் ரொம்ப புத்திசாலி.. எல்லாத்தையும் நல்லா புரிஞ்சுப்பான்.
எனக்கு அவர் மேல வருத்தமா கூட வரும்.. சின்ன குழந்தை கிட்ட நம்ம குடும்ப நிலையெல்லாம் சொல்கிறாரேன்னு..!!

ஆனா அது தான் எனக்கு நிறைய உதவி செய்தது.. அவனோட ஆசைகள் எல்லாமே எங்க குடும்ப நிலையைப் பொறுத்து தான் எப்போவுமே இருக்கும்.. சில பேருக்கு அவன் என் கல்யாணத்தைப் பற்றி பேசியது அதிகப்ரசங்கித் தனமா தான் இருந்திருக்கலாம்.. ஏன்னா அவனோட வயசு அப்படி.. ஆனா என்னோட கஷ்டத்தை புரிஞ்சிக்கிட்டனாதுல தான் என்னை கல்யாணம் செஞ்சிக்க சொல்றான் என்பது எனக்கு புரிஞ்சது மீனு..!! அதுக்காக வேற கல்யாணத்தை எல்லாம் என் மனசு சுத்தமா ஒத்துக்கவே இல்லை.

இந்த புள்ளைய விட்டுட்டு போக அவருக்கு எப்படி மனசு வந்ததுன்னு கொஞ்சம் கோபம் கூட வந்தது.. இதெல்லாம் நம்ம கையில இருக்கா, என்ன?ன்னு என்னை நானே தேத்திக்கிட்டேன்.. திரும்பவும் அண்ணன் வீட்டுக்கே போயிடலாம்ன்னு முடிவு எடுத்தேன். அதுவரைக்கும் அண்ணன் குடும்பத்துக்கு நாம ஏன் பாரமா இருக்கணும்ன்னு தான் அங்க போறதைப் பத்தி சிந்திக்காமல் இருந்தேன்..

ஆனா நளனுக்காக அண்ணன் வீட்டுக்கு போகும்படி ஆனது. அவனுக்கு நான் அதே ஊரிலேயே இருந்தால் உயிரை விட்டுவிடுவேன் என்று புரிஞ்சுடுச்சு.அண்ணன் வீட்டுல அண்ணி, அப்படி இப்படின்னு சில சமயம் சொல்லிக்காட்டினாலும் எனக்காக எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டான் அவன்..

என் அண்ணன் பொண்ணையும் சொந்த தங்கை மாதிரி பார்த்துக்கிட்டான். அவ கல்யாணத்துக்கு அண்ணனுக்கு நிறையவே உதவி செஞ்சான்.. இப்போ கூட அவ கொழந்தைங்களுக்கு தாய் மாமன் சீர் எல்லாம் செஞ்சிட்டு தான் இருக்கான்.. ரொம்ப பொறுப்பான பையன் தான் மீனு.. கடின உழைப்பாளியும் கூட.. மனுஷனாப் பிறந்தா சில குறைகள் இருக்கத்தான் செய்யும்.. அதுபோல அவன் கிட்டயும் சில குறைகள் இருக்கத்தான் செய்யும்.. கொஞ்சம் முன் கோபி, வெளில சாப்பிடறது பிடிக்காது.. சில விஷயத்துல பிடிவாதமும் இருக்கும்.. கோபமோ, பிடிவாதமோ எதுவா இருந்தாலும் வார்த்தைகளை மட்டும் யோசித்துதான் விடுவான்.. அதுனால அவன் கிட்ட இருக்கிற சில சின்ன சின்ன குறைகள் கூட எங்களுக்கு தெரியாது.. எங்க கிட்ட சொத்து பத்து குறைச்சலா இருந்தாலும் எந்தவித கடனும் இல்லாம நிறைவா இருக்கோம்.. அதுல என் பையனை நினைச்சு எனக்கு பெருமை தான்.

இதெல்லாம் ஏன் சொல்றேன் தெரியுமா மீனு?” என்று கேட்டார் விசாலம்.

“புரிஞ்சும் புரியாமலும் இருக்கு விசாலம்..” என்று உள்ளதை மறைக்காமல் சொன்னார் மீனாட்சி.

“என் துணைக்காவது நளன் இருந்தான்.. நாளப்பின்ன உங்க காலத்துக்கு பிறகு தமயந்திக்கு யார் துணை இருப்பா? சொல்லு..!! அது மட்டுமில்லை நானாவது, பத்து பன்னெண்டு வருஷம் அவர் கூட சந்தோஷமா வாழ்ந்தேன்.. எனக்கு வயசும் ஆகிப்போச்சு. அவர என்னால மறக்கவும் முடியல.. அதனால நான் வேற கல்யாணத்தைப் பத்தி யோசிக்கலை..

ஆனா தமயந்திக்கு வந்தவனோ ஒரு ஏமாத்துக்காரன்.. வக்கிர குணம் உள்ளவன்.. அவன் கிட்ட இருந்து தப்பிச்சதே பெரிய விஷயம்ன்னு நினைச்சுக்கிட்டு மேற்கொண்டு அவளுக்கு வேற வாழ்க்கை அமைத்துக்கொடுக்கணும் மீனாட்சி.. அதுக்கு தான் என் கதையை சொன்னேன்.
என்ன அவளுக்கு ஒரு இருபத்தி மூணு வயசிருக்குமா? அவளுக்கு பிடிச்ச மாதிரியான வாழ்க்கை வாழ இது தான் சரியான வயசு.. அவளுக்கு இப்போ கல்யாண வாழ்க்கை மேல வெறுப்பு ஏற்பட்டிருக்கலாம்.. ஆனா பெரியவங்க நீங்க தான் அவ வாழ்க்கைக்கு துணை அவசியங்கறதை புரிய வைக்கணும்..” என்று முடித்தார் விசாலம்.

“அவ வயசு இருபத்திரண்டு விசாலம்.. போனவாரம் தான் அவ பிறந்தநாள் வந்துச்சு.. நீ சொன்னது எல்லாமே புரியுது.. நீ அவளைப் பெண் கேட்பதற்கு முன்னாடியே இதைப்பத்தி அவர்கிட்ட சொல்லிட்டேன்..அவ உடம்பு கொஞ்சம் குணம் ஆனதும் அவளிடம் பேசலாம் என்று முடிவெடுத்திருந்த நிலையில் தான் நீ வந்து அவளை உன் பையனுக்கு கேட்ட..” என்ற மீனாட்சியிடம்,

“அவ உடம்புக்கு என்ன மீனு?” என்று விசாலம் கேட்டார்.

“உடம்புக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை.. அவளோட மனசு தான் ரொம்ப உடைஞ்சு போயிருக்கு விசாலம்.. அந்த அஸ்வின் பேசின பேச்சால அவளுக்கு சாப்பாடு மேல வெறுப்பு ரொம்ப அதிகமா இருக்கு..ஒரு நாளைக்கு ஒருவேளை உணவு தான் அதுவும் பாதி வயிறு தான்.. டாக்டருங்க அவ மனசுக்கு மருந்து மாத்திரை கொடுத்ததுனால இப்போ கொஞ்சம் பரவாயில்லை..” என்றார் மீனாட்சி.

“பாவம் தான் தமயந்தி.. இந்த வயசுல இதெல்லாம் தேவையா இந்தப் பொண்ணுக்கு.. கடவுள் ஏன் தான் இப்படி சோதிக்கிறானோ..?” என்று கவலைப்பட்டார் விசாலம்.

சுந்தரதர்மாவினுள் சென்ற நளன் சுந்தரத்திடம் தனியே பேச விரும்புவதாக சொன்னான்... அதனால், தமயந்தியிடம் கடையைப் பார்த்துக்க சொல்லிவிட்டு நளனுடன் வெளியே சென்று பேசினார் சுந்தரம்.

அருகில் இருந்த சிறு கோவிலின் மரத்தடியில் அமர்ந்து இருவரும் பேச தொடங்கினர்.

தமயந்தியை விரும்புவதையும், அவளை திருமணம் செய்ய ஆசைப்படுவதையும் சுந்தரத்திடம் எடுத்துக்கூறிய நளன், இந்த முடிவு பரிதாபத்தால் எடுத்த முடிவு இல்லை என்பதையும் அவருக்கு தெளிவாக புரியவைத்தான்.

சுந்தரமும் தனக்கு இதில் சம்மதம் இருந்தாலும் தமயந்தியின் சம்மதமே முக்கியம் என்று சொன்னவர், தர்மாவுடனான சில நடப்புகளையும் பகிர்ந்துக்கொண்டார்.

நளனும் அவன் குடும்பத்தைப் பற்றியும், அவனுடைய வருமானம் மற்றும் சொத்துகளின் விவரங்களை சுந்தரத்திடம் பகிர்ந்துக்கொண்டான்.
அவர்களின் பேச்சு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் நீடித்தது. ‘நளாஸ்’ல் இருந்து நளனுக்கு அழைப்பு வந்ததால் அங்கிருந்து கிளம்பினான்.

செல்வதற்கு முன் சுந்தரத்திடம், தமயந்தியிடம் தன்னைப்பற்றி கூறுமாறு பணிவுடன் கேட்டுவிட்டு, அவளிடம் தனியே பேசுவதற்கு அனுமதியும் வாங்கிச் சென்றான் நளன்.

அடுத்த இரண்டு வாரத்தில் உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு தமயந்தியை தனியே அழைத்து சென்றான். தமயந்தியும் அவனுடன் தனியே சில விஷயங்களை பேசுவதற்கு தயாராகி சென்றாள்.
 
Top