Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீயின்றி வாழ்வேனோ 1௦ 1

Advertisement

Admin

Admin
Member
பகுதி – 10

திருமணம் விரும்பி நடந்ததோ விரும்பாமல் நடந்ததோ.... அவன் நண்பர்கள் அவனிடம் மது விருந்து கேட்க... ரிஷியும் அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டு இருந்தான்.

அவர்களுக்குச் சொந்தமான குடோனில் நண்பர்களுடன் அமர்ந்து ரிஷியும் மது அருந்த...மது அருந்துவதில் ரிஷிக்கு அவ்வளவு விருப்பம் என்று சொல்ல முடியாது. ஆனால் நண்பர்கள் வற்புறுத்தினால் கொஞ்சமாகக் குடிப்பான்.

இன்றும் அதுபோல்... அவர்களுக்குக் கம்பெனி கொடுக்க... மதுவை சிறிது சிறிதாகச் சுவைத்துக் கொண்டே நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தான்.

“ரிஷி, எங்களுக்கு எல்லாம் உன் கல்யாணம் நடந்ததுல எவ்வளவு சந்தோசம் தெரியுமா...” ரிஷியின் நண்பன் குரு பேச்சை ஆரம்பிக்க....

“ஆமாம் டா... ஆனா நீ அந்த வெற்றி வீட்டுக்கு மாப்பிள்ளையா போய் இருக்கப் பாரு... அதை நினைச்சா தான் கோபமா வருது.” என்றான் இன்னொரு நண்பன் சுந்தரம்.

“அது கூடப் பரவாயில்லை டா... ஆனா உன் தங்கச்சியைப் போய் அவனுக்குக் கட்டிக் கொடுத்து, அவனை இப்படிப் பெரிய ஆளா ஆகிடீங்களே டா...” என்றான் மகேஷ்.

“அவன் எல்லாம் ஒரு ஆளா டா... உன்னைப் பார்த்தா தலை தெறிக்க ஓடுற பய....” என ஆளுக்கு ஒன்று பேச....

“போதும், வந்த வேலையை மட்டும் பாருங்க. கல்யாணம் முடிஞ்சிடுச்சு இனி இதைப் பத்தி எல்லாம் பேச வேண்டாம்.” என எச்சரித்த தீனா....

“ரிஷி, உனக்கு நேத்து தான் கல்யாணம் ஆகி இருக்கு. நீ இவ்வளவு நேரம் இங்க இருக்கக் கூடாது கிளம்பு. இவங்களை நான் பார்த்துகிறேன்.” என்றதும், ரிஷியும் மறுக்காமல் உடனே கிளம்பிவிட்டான்.


ரிஷி அவன் நண்பர்களிடம் எதுவும் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் மனதிற்குள் கொந்தளித்துக் கொண்டு தான் இருந்தான்.

நள்ளிரவு வரை ரிஷி வீடு திரும்பாததால்... ஏற்கனவே ஜோதியிடம் ராஜ்மோகன் கத்திக்கொண்டு இருந்தார்.

“கல்யாணம் ஆகி ரெண்டு நாள் கூட ஆகலை... அதுக்குள்ள ப்ரண்ட்ஸ் கூடச் சேர்ந்து கூத்து அடிக்கப் போனா... அந்தப் பொண்ணு என்ன நினைக்கும்.”

“சீக்கிரம் வந்துடுறேன்னு சொல்லிட்டு தாங்க போனான்.”

அந்த நேரத்தில் ரிஷியும் வந்து விட... மாடி ஜன்னல் வழியாக அவன் வந்ததைக் கவனித்த சாதனாவும் கீழே இறங்கி வந்தாள்.

மாலை உறங்கி எழுந்திருந்ததால்.... உறக்கம் வராமல்... இவ்வளவு நேரம் தன்னுடைய பெட்டிகளைப் பிரித்து அடுக்கிக் கொண்டு இருந்தாள்.

தாமதமாக வந்ததும் இல்லாமல்... ரிஷி குடித்து விட்டு வந்தது வேறு ராஜ்மோகனின் கோபத்தை அதிகமாக்க....

“உனக்கு நேத்து தான் கல்யாணம் ஆகி இருக்கு நியாபகம் இருக்கா...” அவர் சூடாகக் கேட்க....

“ஏன் நியாபகம் இல்லாம.... அதுவும் எனக்கு விருப்பம் இல்லாத கல்யாணம். எப்படி மறக்கும்? நல்லாவே நியாபகம் இருக்கு.” என்றான் அவன் மேலும் கடுப்பாக.

“என்ன விருப்பம் இல்லாம... உன்னைக் கேட்டுட்டு தான கல்யாண ஏற்பாடு பண்ணேன்.”

“முன்னாடியே பத்திரிக்கைக்கு எல்லாம் நியூஸ் கொடுத்திட்டு... அப்புறம் சாவகாசமா எனக்கு நீங்க தகவல் தான் சொன்னீங்க.”

“இப்ப அதுனால என்ன குறைஞ்சிடுச்சு... உனக்கு நல்ல பொண்ணு தானே பார்த்திருக்கேன்.”

“அதை நீங்க சொல்லக் கூடாது நான் சொல்லணும்.”

“ஏன் டா இப்படி எல்லாம் பேசுற அந்தப் பொண்ணு காதுல விழுந்தா என்ன நினைக்கும்.” சாதனா படியில் நின்று கேட்டுக்கொண்டிருப்பது தெரியாமல் ஜோதி சொல்ல....


“ஏன் விழுந்தா என்ன? அவ என்ன ரொம்ப யோக்கியமா... நான் வேற ஒருத்தியை விரும்புறேன்னு தெரிஞ்சும் தான என்னைக் கல்யாணம் பண்ண சம்மதிச்சா...” என்றான் அலட்சியமாக.

அவன் சொன்னதைக் கேட்ட சாதனாவிற்கு அப்படியே மண்ணுக்குள் புதைந்து விட மாட்டோமா என்று இருந்தது.

“இங்க பாரு... நீ குற்றம் சொல்றதுன்னா.... என்னை மட்டும் சொல்லு. அந்தப் பெண்ணை இழுக்காத.... அது அவங்க அப்பா சொன்னதைக் கேட்டிருக்கும்.” ராஜ்மோகன் கண்டிப்பாகப் பேச....

“சரிதான் பதவிக்காகப் பிள்ளைங்க வாழ்க்கையையே பலி கொடுத்தவர் தான நீங்க. அதனால உங்களைத் தான் சொல்லணும்.”

ரிஷி சொன்னது ராஜ்மோகனை மிகவும் காயப்படுத்தியது. “என்ன சொன்ன? பலி கொடுத்தேனா... ஏன் உனக்கும் உன் தங்கச்சியும் நல்ல வரனை தான கல்யாணம் பண்ணேன்?” என அவர் கோபப்பட...

“அந்த வெற்றி எல்லாம் ஒரு ஆளா... அவனுக்குப் போய் ப்ரீதாவை கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கீங்க. எதோ அதிர்ஷ்ட்டத்துல மேல வந்தவன், காத்துல குப்பையும் உயர பறக்குமே அப்படி...”

ரிஷியின் நக்கலான பேச்சு சாதனாவின் பொறுமையைச் சோதிக்க... . அதுவரை மறைந்து நின்றிருந்தவள், வேகமாகப் படி இறங்கி கீழ வந்து “என்னைப் பத்தி மட்டும் பேசுங்க. எங்க அண்ணனை பத்தி பேசாதீங்க.” என்றாள் கோபமாக.

“உங்க அண்ணனை சொன்னதும் ரோஷம் பொத்துகிட்டு வருதா.... சொன்னா என்னடி பண்ணுவ?....”

“வேண்டாம் ரிஷி....”

“என்னது வேண்டாம்.”

“எங்க அண்ணன் இந்தக் கல்யாணம் வேண்டாம்னு தான் சொன்னாங்க. நீங்க தெரியாம பேசாதீங்க.”
“இதை என்னை நம்பச் சொல்றியா....”

“நீங்க வேணா பெரிய திறமைசாலியா இருக்கலாம். அதுக்காக எங்க அண்ணனை மட்டமா பேசாதீங்க.”

“இங்க பாருடா... அண்ணனை சொன்னதும் கோபம் பொத்துக்கிட்டு வருது...”

ரிஷி வேண்டுமென்றே பேச்சை வளர்த்துக்கொண்டே செல்ல....

அதுவரை தவிப்பாக நின்றிருந்த ஜோதி, “சாதனா, அவன் குடிச்சிட்டுப் பேசுறான். இப்ப நீ எது பேசினாலும் எக்குத்தப்பா தான் பேசுவான். நீயாவது கொஞ்சம் விட்டுக்கொடுமா...” என்றதும்,

சாதனா விடுவிடுவெனப் படி ஏறி மேல சென்று விட....


ராஜ்மோகனும் ,ஜோதியும் அவள் செல்வதைக் கவலையாகப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

“நீங்க போய்ப் படுங்க.” எனத் தன் கணவரை பார்த்து சொன்ன ஜோதி “ரிஷி, நீயும் போய்ப் படு....” எனச் சொல்லிவிட்டு விளக்கணைக்க... ரிஷி மாடிக்குச் சென்றான்.

சாதனா மாடி ஹாலில் தலையைக் கைகளால் தாங்கியபடி அமர்ந்திருந்தாள். ரிஷி அவளைக் கண்டுகொள்ளாமல் அறைக்குள் சென்றான்.

சாதனாவிற்கு அழுகையாக வந்தது. வெற்றி எவ்வளவு சொன்னான், தான் அவன் பேச்சை கேட்டிருக்க வேண்டும் என்று இப்போது தோன்றியது. தன்னால் தானே தன் அண்ணனை பற்றிக் கேவலாமாகப் பேசிவிட்டான் என நினைத்து வருந்தினாள்.

வெகு நேரம் வரை வெளியவே அமர்ந்திருந்தவள், தங்கள் அறைக்குச் சென்ற போது... ரிஷி கட்டிலில் படுத்து உறங்கி இருந்தான்.

இப்போது அவன் அருகில் கட்டிலில் படுக்கக் கூடப் பயமாக இருந்தது. இதை வைத்தும் தன்னைக் கேவலமாகப் பேசினாலும் பேசி விடுவான் என்ற எண்ணத்தில்... அங்கிருந்த சோபாவில் சென்று படுத்துக்கொண்டாள்.

அவள் படுக்கத் தாராளமாகவே இடம் இருந்தது. படுத்தபடியே ரிஷியை பார்க்க... அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். காலையில் இருந்து எவ்வளவு கேலியும், கலட்டாகவும் செய்தான். இவன் தான் இப்போது இப்படிப் பேசினான் என்றால்… நம்பக் கூடக் கஷ்ட்டமாக இருந்தது.

அளவுக்கு அதிகமான போதையிலும் அவன் இல்லை.... குடித்துவிட்டுப் பேசுகிறான் என்று சொல்ல.... அவன் மனதில் இருப்பதைத் தான் சொல்லிவிட்டான்.


ஏதேதோ யோசித்து, வருந்தி எப்படியோ... விடியும் நேரத்தில் சாதனா தூக்கத்தைத் தழுவினாள்.

காலையில் எழுந்த ரிஷி கட்டிலில் சாதனா இல்லாததைப் பார்த்தவன், விடிஞ்சு ரொம்ப நேரம் ஆகிடுச்சோ.... என்றபடி எழுந்து அமர்ந்து செல்லை எடுத்து நேரத்தை பார்க்க... மணி எழு தான் ஆகியது..

இவ்வளவு சீக்கிரம் எழுந்து கீழ போயிட்டாளா என நினைத்தவன், அப்போது தான் சாதனா சோபாவில் படுத்திருப்பதைப் பார்த்தான்.

அதுதான பார்த்தேன்,இவளாவது இவ்வளவு சீக்கிரம் எழுந்துக்கிறதாவது. சரியான கும்பகரணி என மனதிற்குள் நினைத்தபடி குளியல் அறைக்குள் சென்றான்.

முகம் கழுவி வந்தவனுக்குத் தலை வலிப்பது போல் இருக்கவும், காபி குடிக்கலாம் என நினைத்து இண்டர்காமில் சமையல் அறையைத் தொடர்புகொண்டு காபி கொண்டு வர சொல்லிவிட்டு வைத்தான்.

சிறிது நேரத்திற்க்கெல்லாம் இண்டர்காம் அழைக்க... சாதனா எழுந்துவிடுவாளோ என்ற பதட்டத்தில் வேகமாக எடுத்துப் பேசினான்.

“ஹலோ...”

“ரிஷி, அப்பா உன்கிட்ட பேசணுமாம். நீ கீழ வந்து காபி குடி.” ஜோதி சொல்ல....

“காலையிலேயே பஞ்சாயத்தா... வேற வேலை இல்லையா உங்களுக்கு.”

அவன் எரிந்து விழ... அதைக் கண்டுகொள்ளாமல் “உன்கிட்ட முக்கியமா எதோ பேசணுமாம். கொஞ்ச நேரம் வந்திட்டு போ...” என்ற ஜோதி அழைப்பை துண்டித்தார்.
ரிஷி சத்தம் வராமல் கதவை பூட்டிக் கொண்டு கீழே சென்றான். அவனுக்காகத் தோட்டத்தில் ராஜ்மோகன் காத்திருந்தார். அவர்கள் இருவருக்கும் ஜோதி காபி கொண்டு வந்தார்.

அவன் காபி குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்த ராஜ்மோகன் “நேத்து நீ ரொம்பப் பேசிட்ட.... எங்களைப் பேசினது பரவாயில்லை.... ஆனா இந்த வீட்டு மாப்பிள்ளையைப் பத்தி இனி நீ மரியாதை குறைவா ஒரு வார்த்தை பேசக் கூடாது.”

அவர் சொன்னதைக் கேட்ட ரிஷி கோபமாக எதோ சொல்ல வர.... “இரு நான் பேசி முடிச்சிடுறேன். நீ ஒழுங்கான பெண்ணைக் காதலிச்சிருந்தா... நான் மறுப்பு சொல்லி இருக்கவே மாட்டேன். உன் நல்லதுக்குத் தான் செஞ்சேன். அதை நீ ஒருநாள் புரிஞ்சிப்ப...”

“நீ உன் கோபத்தை எங்க மேல காட்டு. வெற்றி மேல காட்டாத... நீ எதாவது செஞ்சா அது உன் தங்கை வாழ்க்கையைப் தான் பாதிக்கும். அதை மட்டும் நினைவுல வச்சிக்கோ...”

“இன்னைக்கு உங்களுக்கு மறுவீட்டு விருந்து. அதுக்கு உன் பொண்டாட்டியோட நல்லபடியா போயிட்டு வா....” என்றவர், ரிஷி எதாவது சொல்வானா என்பது போல் பார்க்க... அவன் அமைதியாக இருக்கவும் அங்கிருந்து எழுந்து சென்றார்.

“ரிஷி, உனக்குப் பிடிக்கலைனா ஒதுங்கி இருந்துக்கோ... ஆனா மரியாதை குறைவா மட்டும் நடந்துக்காத டா... அது உன் பொண்டாட்டிக்கும் தங்கச்சிக்கும் தான் சங்கடமா இருக்கும். கொஞ்சம் அப்பாவுக்காகவும் பாருடா....”

“நீ அங்க போய்த் தங்க கூட வேண்டாம். மதியம் போங்க, சாப்பிடுங்க சாயங்காலம் வரை இருந்திட்டு, உன் தங்கச்சியையும் மாப்பிள்ளையையும் கூடிட்டு நம்ம வீட்டுக்கு வந்திடுங்க.”

“அங்க சாதனாவோட அம்மாவும் இல்லை இல்லையா... நான் எதாவது சொல்லி சமாளிச்சுகிறேன்.” ஜோதி சொல்ல.... ரிஷி சம்மதமாகத் தலையசைத்தான். மகன் இந்த அளவுக்கு இரங்கி வந்ததே போதும் என்று நினைத்தார் ஜோதி.
 
ரொம்பவே ஓவரா பண்ணுறேடா, ரிஷி
உனக்கு மேல உன்னோட ப்ரெண்ட்ஸ் இருக்கானுங்க
அவனுங்களும் அவனுங்க மூஞ்சிகளும்
தீனா ஒருத்தன்தான் நல்ல ப்ரெண்ட்
 
Last edited:
Top