Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீயின்றி வாழ்வேனோ 11 1

Advertisement

Admin

Admin
Member
பகுதி – 11

வெளியே போய் விட்டு வந்து, சாதனாவை அவள் பிறந்த வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி சென்ற ரிஷி, மதியம் ஒரு மணி வரை வரவேயில்லை....



சாதனா வாசலை வாசலை பார்த்தபடி இருந்தாள். அங்கே வெற்றியும் அவர்கள் வருகிறார்களா எனப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

ஜோதி செல்லில் அழைத்து “என்ன டா இன்னும் வரலை? உன் மாமனார் வீட்டுக்கு போக வேண்டாமா...” என்றதும்தான் கிளம்பி வந்தான்.

அவன் வந்ததும் உடனே கிளம்பியும் கூட... இவர்கள் அங்கே போய்ச் சேர இரண்டு மணி ஆகி விட்டது. வெற்றி வாயிலுக்கே வந்து வரவேற்றான்.

“வாங்க ரிஷி, வா சாதனா....” என வெற்றி வீட்டின் தலைமகனாக வரவேற்க... ரிஷியும் போனால் போகிறது என்று தலையை அசைத்து வைத்தான்.

உள்ளே சென்றவர்களைச் சந்தானமும் அவரது சகோதரரும் வரவேற்றுச் சோபாவில் உட்கார வைக்க..... அதற்குள் அவர்கள் வந்தது தெரிந்து பெரியம்மா மேகலாவும், ப்ரீதாவும் உள்ளே இருந்து வந்தனர்.

“வா அண்ணா... வாங்க அண்ணி.” என்ற ப்ரீதா சென்று தன் அண்ணனின் அருகே உட்கார....

“என்ன ஒரே பளபளன்னு இருக்க...” என்றான் ரிஷி ப்ரீத்தாவின் பூரிப்பான முகத்தைப் பார்த்து....

புதிதாகத் திருமணம் ஆன பெண்களுக்கு முகத்தில் கல்யாண கலை வருவது இயல்பானது..... அதுவும் கணவனோடு தாம்பத்திய வாழ்வில் அடியெடுத்து வைத்தவளுக்குப் பூரிப்பு இருக்கத் தானே செய்யும்.

தன் கரங்களால் கன்னத்தைத் தொட்டு பார்த்து விட்டு ப்ரீதா, “எப்பவும் போலத் தான் இருக்கேன்.” என்றாள்.

ஆண்கள் அனைவரும் ஹாலில் அமர்ந்து பேச... பெண்கள் எழுந்து உள்ளே சென்றனர்.

“அண்ணி, சாதம் சூடா இருக்கா... அவருக்குச் சாதம் சூடா இருந்தா தான் பிடிக்கும்.” சாதனா சொல்ல....

“ஹலோ, உங்க அவர் எனக்கு அண்ணங்க. எனக்கு என் அண்ணனை பத்தி தெரியாதா....” ப்ரீதா கிண்டலாகச் சொல்ல.... சாதனா நாக்கை கடித்துக்கொண்டாள். நிஜமாகவே அவளுக்கு அது மறந்திருந்தது.

நேரமாகிவிட்டதை உணர்ந்து “சாப்பிடுவோம் வாங்க.” எனச் சந்தானம் ரிஷியை அழைக்க... அவனோடு மற்றவர்களும் வந்தனர்.

“நீயும் மாப்பிளையோட உட்காரு...” சாதனாவின் பெரியம்மா சொல்ல....

“இல்ல... நான் உங்களோடையும் அண்ணியோடையும் சாப்பிடுறேன்.” சாதனா மறுக்க...

“கல்யாணம் ஆகி முதல் தடவை மாப்பிள்ளையோட வந்திருக்க... அதனால அவரோட சேர்ந்து உட்காரு...” என்று கண்டிப்பாகச் சொன்னவர், அவள் ரிஷியின் அருகே உட்கார்ந்ததும் தான் பரிமாறவே ஆரம்பித்தார்.

“மாப்பிள்ளை, உங்களுக்கு ஸ்வீட் பிடிக்காதாமே... ஆனா சாஸ்த்திரத்துக்குக் கொஞ்சம் சாப்பிடுங்க.” என்றபடி மேகலை இனிப்பை பரிமாற...

“கொஞ்சமாக எடுத்துக்கொண்ட ரிஷி மீதியை அருகில் இருந்த சாதனாவிடம் இயல்பாகக் கொடுத்தான். அதை வெற்றி நிறைவுடன் பார்த்துக் கொண்டு இருந்தான்.

சாப்பிடும் போது... சந்தானமும் அவரின் அண்ணனும் தான் அதிகம் பேசினர். ரிஷியும், வெற்றியும் அவர்கள் கேட்தற்கு மட்டும் பதில் பேசினர்.

உண்டு முடித்து மீண்டும் ஹாலில் வந்து உட்கார்ந்து பேசும் போது... சந்தானத்தைப் பார்க்க யாரோ வந்துவிட... அவர் ரிஷியிடம் சொல்லிக்கொண்டு எழுந்து தன் அலுவலக அறைக்குள் சென்றார்.

சந்தானத்தின் அண்ணனும் ஓய்வு எடுக்கச் சென்று விட... ஹாலில் ரிஷியும், வெற்றியும் மட்டுமே இருந்தனர். ரிஷிக்கு வெற்றியோடு தனியாக இருப்பது ஒருமாதிரி இருக்க, “சாதனா....” என அழைத்தான்.

பெரியம்மாவும், ப்ரீதாவும் உணவு அருந்த, சாதனா அவர்களோடு உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தவள், ரிஷியின் குரல் கேட்டு எழுந்து வந்தாள்.

“என்னங்க கூப்டீங்களா...”

“ம்ம்.. ஆமாம், இங்க உட்காரு...” என்றவன், தன் அருகில் அவளை உட்கார வைத்துக்கொண்டான்.

சாதனா தன் அண்ணனை பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே ரிஷியின் அருகில் உட்கார்ந்தாள்.
வெற்றிக்கு அவனின் சங்கடம் புரிந்ததால்.... “நீ அவரைக் கூடிட்டு போய் உன்னோட ரூமை காட்டு.” என்று தன் தங்கையிடம் சொல்ல....


“வரீங்களா.....” எனச் சாதனா ரிஷியை பார்க்க.... அவன் விட்டால் போதும் என்று உடனே எழுந்து கொண்டான்.

இருவரும் மாடியில் இருந்த அவளது அறைக்குச் சென்றனர். அவளுடைய அறை மனதிற்கு அமைதி தரும் இள நீல நிறத்தில் விசாலமாக இருந்தது.

“நீங்க கொஞ்ச நேரம் படுக்க ரிஷி.” என்றவள், அவனுக்குத் தலையணை எடுத்துக் கொடுத்து விட்டு, அவளுடைய புத்தகங்களை ஒரு பையில் அடுக்க ஆரம்பித்தாள்.

“என்ன இதெல்லாம்.” ரிஷி புத்தகத்தைக் காட்டி கேட்க....

சாதனா, “என்னுடைய காலேஜ் புக்ஸ். அடுத்த வாரத்தில இருந்து காலேஜ் போகணுமே.... பரீட்சை வேற வருது.” என்றாள்.

“ஓ... சின்ன வயசுல இருந்தே உனக்கு டாக்டர் ஆகணும்னு ஆசையா சாதனா....”

“அப்படியெல்லாம் எதுவும் இல்லை.... எங்க அம்மா வேற இல்லையா.. நான் ஹாஸ்டல்ல இருந்தேன். அப்ப அங்க இருக்கிற பிரண்ட்ஸ் எல்லாம் ரொம்ப ஊர் சுத்துவாங்க.”


“எனக்கு அவங்களோட ஒத்து வரலை.... அப்ப சத்யா ப்ரண்ட் ஆனான். அவன் ஒரு புத்தகப் புழு.... எப்பவும் படிச்சிட்டே இருப்பான். நானும் அவனோட சேர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். அவன் டாக்டருக்கு படிச்சானா.... நானும் அதே சேர்ந்துட்டேன்.”

சாதனா சொன்னதைக் கேட்டு ரிஷி “எதோ லட்சியம்னு சொல்வேன்னு நினைச்சேன். ஆனா இப்படி ஒரு கதை இருக்கும்னு எதிர்பார்க்கலை...” என முறுவலிக்க... சாதனாவும் பதிலுக்குப் புன்னகைத்தாள். ஆனால் அவளுக்குள் இருந்த வலி அவள் மட்டுமே அறிவாள்.

தன் தாயை இழந்த நிலையில் தான் அவளை ஹாஸ்டலில் சேர்த்தனர். தனக்கு யாருமே இல்லை... என அவள் தவித்த போது தான் ரிஷியை அவள் சந்தித்தாள். அவன் செய்த உதவி அப்போது அவளுக்குப் பேருதவி தான்.

அவனோடு அறிமுகமும் இல்லை பழக்கமும் இல்லை.. ஆனால் அவன் இருக்கும் இடத்தில் இருப்பதே பாதுகாப்பாக உணர்ந்தாள். சத்யா தான் அவளின் ஒரே நண்பன். சில வருடங்களில் ரிஷியும் வெளிநாடு சென்றுவிட... சத்யா மட்டுமே அவளுக்கு ஒரே ஆறுதல்.

அவனையும் இழக்க மனமில்லாமல் தான், அவன் சேர்ந்த மருத்துவப் படிப்பையே தேர்ந்தெடுத்தாள். மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பிறகுதான், இது எவ்வளவோ பேருக்கு எட்ட முடியாத கனவு என்று புரிந்தது. அதனால் தனக்குக் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல்... நன்றாகப் படித்து முடித்து, இப்போது மேற் படிப்பிலும் இரண்டாம் ஆண்டில் இருக்கிறாள்.

ரிஷியும், சாதனாவும் டிவி பார்த்துக்கொண்டு இருந்தனர். நேரத்தை பார்த்த ரிஷி “சாதனா, நாலு மணி ஆகிடுச்சு. நீ போய் ப்ரீதாவும் உங்க அண்ணனும் ரெடியான்னு பாரு... நம்ம வீட்டுக்கு கிளம்பலாம்.” என்றதும், அவளும் எழுந்து சென்றாள்.

வெற்றியின் அறைக்கதவு திறந்தே இருக்க... “உள்ளே வரலாமா...” எனக் குரல் கொடுத்தபடி சாதனா உள்ளே சென்றாள்.

“அண்ணி, ரெடியா கிளம்பலாமான்னு உங்க அண்ணன் கேட்க சொன்னார்.” சாதனா சொல்ல...

“இதோ இப்ப கிளம்பிடுறேன்.” என்ற ப்ரீதா “என்னங்க அப்படியே உட்கார்ந்திருக்கீங்க. சீக்கிரம் எந்திருச்சு முகம் கழுவி வேற டிரஸ் மாத்துங்க.” என அவள் வெற்றியிடம் சொல்ல... அவன் அப்போதும் அசையாமல் உட்கார்ந்து இருந்தான்.


அவனை ப்ரீதாவும், சாதனாவும் புரியாமல் பார்க்க.... நிதானமாகத் தன் கைகடிகாரத்தில் நேரம் பார்த்தவன் “உங்க அண்ணன் வந்து ரெண்டு மணி நேரம் இருக்குமா... அதுக்குள்ள கிளம்பியாச்சு... நீ என்னை உங்க வீட்ல வந்து நாலு நாள் இருக்கச் சொல்ற....இது உனக்கே நியாயமா படுதா...” என ப்ரீதாவை பார்த்து அவன் அழுத்தம் திருத்தமாகக் கேட்க....

ப்ரீதா சாதனா எதாவது சொல்வாள் என நினைத்து அவளைப் பார்க்க.... அவள் மெளனமாக அந்த அறையில் இருந்து வெளியேறினாள்.

“இப்ப நீங்க என்ன சொல்லவரீங்க?” என்ற ப்ரீத்தாவின் குரல் அழுகைக்குத் தயார் ஆக....

“நாம நாளைக்குப் போகலாம்.” என்றான் வெற்றி முடிவாக.
வெற்றியின் கண்டிப்பான பேச்சு.... ப்ரீதாவிற்குக் கண்ணை
கரித்துக்கொண்டு வந்தது. அவள் அந்த அறையில் இருந்து வெளியில் சென்றாள்.

சாதனா வந்ததும் ரிஷி அவளைப் பார்த்து “கிளம்பலாமா...” என்றான். வெற்றி சொன்னதைப் பற்றி எதுவும் சொல்லாமல்... சரி என்றவள், வேலை செய்பவரை அழைத்துத் தன் பைகளை எடுத்து சென்று காரில் வைக்கச் சொன்னாள்.
 
Top