Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீயின்றி வாழ்வேனோ 6 2

Advertisement

Admin

Admin
Member

“எப்படி இருக்கீங்க அண்ணி?” ஒரே நேரத்தில் சாதனாவும் ப்ரீதாவும் கேட்க ஆரம்பித்தவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.

“முதல்ல நல்ல நேரம் இருக்கும் போதே கல்யாண புடவையை எடுத்திடலாமே...பிறகு உட்கார்ந்து பேசுங்க.” ஜோதி சொல்ல....
சரி அப்படியே பண்ணலாம்.” என்றார் ராஜ்மோகன்.

ஜோதி வேறு யாரையும் அழைக்கவில்லை.... இவர்கள் மட்டும் தான் இருந்தனர். ஜோதி குரல் கொடுத்ததும், புடவைகளை எடுத்துக்கொண்டு இருவர் வந்தனர்.

ஹாலில் தரையில் புதுப் போர்வை விரித்து அதில் ஒவ்வொரு புடவையாக எடுத்து வைக்க.....

“போ ப்ரீதா... நீயும் போ சாதனா... ரெண்டு பேரும் உங்களுக்குப் பிடிச்ச புடவையா எடுங்க.” ராஜ்மோகன் சொல்ல.... சாதனா உடனே எழுந்துகொள்ள.... அவள் எழுந்ததும் வெற்றியை பார்த்த ப்ரீத்தா “நீங்க செலக்ட் பண்ணுங்க.” என்றாள்.

“ஹே எனக்குப் புடவையைப் பத்தி ஒன்னும் தெரியாது.... நீயே எடு.” வெற்றிச் சொன்னதும் ப்ரீதா முகம்வாட....

அதைக் கூட வெற்றியால் தாங்க முடியவில்லை.... “நீ செலக்ட் பண்ணு நான் நல்லா இருக்கா... இல்லையான்னு சொல்றேன்.” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டதும் ப்ரீத்தாவின் முகம் மலர.... அவள் சென்று சாதனாவின் அருகே அமர்ந்தாள்.
ப்ரீதா அவளுக்குப் பிடித்த புடவைகளை ஒவொன்றாக எடுத்து மேலே போட்டு வெற்றியிடம் காட்ட.... சோபாவில் அமர்ந்திருந்த வெற்றி எல்லாமே நல்லா இருக்கு என்று தான் சொன்னான்.

வெற்றியையும் ப்ரீதாவையும் கவனித்த ராஜ்மோகன் சாதனாவையும் பார்த்தவர் “ஏன் இன்னும் ரிஷி வரலை...” என ஜோதியை பார்த்து கேட்க...

“தெரியலைங்க.... நான் காலையில போன் பண்ணி வீட்டுக்கு வர சொன்னேன்... வரேன்னு தான் சொன்னான் இன்னும் வரலை...” என்றார்.

மனைவி சொன்ன பதிலில் கடுப்பான ராஜ்மோகன் அவரே ரிஷியை கைப்பேசியில் அழைத்தார். ரிஷி தினமும் வீட்டில் தங்க மாட்டான். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு இடத்தில் இருப்பான்.

அவர்கள் பண்ணை வீடு.... இல்லயென்றால் அவர்களின் நட்சத்திர ஹோட்டல்... இப்படி எங்காவது இருப்பான்.

பேசிவிட்டு வைத்தவர் வீட்டுக்கு தான் வந்திட்டு இருக்கானாம் என்றார்.


ரிஷி வரப்போகிறான் என்றதும், சந்தோஷத்திற்குப் பதில் சாதனாவிற்கு ப் பயமே வந்தது. அவள் படபடப்பாக உணர்ந்தாள்.

ரிஷி வருவதற்குள் ப்ரீதா புடவைகளைத் தேர்ந்து எடுத்து விட.... அந்த நேரம் சரியாக வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

ரிஷியின் வேகமான அதே சமயம் அழுத்தமான காலடி ஓசை... அவன் நெருங்கி விட்டதைச் சொல்ல.... சாதனா தீவிரமாகப் புடவைகளைப் பார்ப்பது போல் குனிந்து கொண்டாள்.

வேகமாக நடந்து வந்த ரிஷி ஹாலில் இருந்த வெற்றியையும் சாதனாவையும் பார்த்ததும் தன் வேகத்தைக் குறைக்க....

“வா ரிஷி.... இன்னைக்கு முஹுர்த்த புடவையும், வரவேற்பு புடவையும் எடுக்கிறாங்க. உன் தங்கச்சி அவளுக்கு எடுத்திட்டா... இன்னும் சாதனா எடுக்கலை நீ அவளுக்கு ஹெல்ப் பண்ணு....” ராஜ்மோகன் சொல்ல.....

ரிஷிக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை... ஆனால் அங்கே வெற்றியும் சாதனாவும் இருப்பதால் அடக்கிக் கொண்டான்.

“சரி மாமா நான் கிளம்புறேன். சாதனா இருந்து புடவை பார்த்திட்டு வரட்டும்.” என வெற்றி எழுந்து கொள்ள....

“என்ன மாப்பிள்ளை அதுக்குள்ளே கிளம்புறீங்க. விருந்து ரெடி ஆகிட்டு இருக்கு. இருந்து சாப்டிட்டு தான் போகணும்.” ஜோதி சொல்ல.... ராஜ்மோகனும் அதை அமோதித்தார்.

“நான் சாப்பிட மூன்னு மணி ஆகும் அத்தை.”

“பரவாயில்லை.... அதுவரை ப்ரீதாவோட பேசிட்டு இருங்க.”

“இல்லை நிறைய வேலை இருக்கு. இன்னையில இருந்து கல்யாண பத்திரிகை வைக்க ஆரம்பிக்கணும். இன்னும் ஒரு மாசம் கூட இல்லையே.... அதனால கல்யாணத்துக்கு அப்புறம் இந்த விருந்து எல்லாம் வச்சிக்கலாம்.” வெற்றி உறுதியாக இருக்க....

ராஜ்மோகனும் ஜோதியும் வேறு வழியில்லாமல் சரி என்றனர். “சாதனா நான் போயிட்டு உனக்குக் கார் அனுப்புறேன்.” என்ற வெற்றி எல்லோரிடமும் பொதுவாகச் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான்.

ரிஷி அவனோடு பேசவில்லை... அதனால் அவனும் ரிஷியிடம் சொல்லிக் கொள்ளவில்லை.... அவனோடு வெளியே வரை வந்த ப்ரீதா “ஏன் அதுக்குள்ள கிளம்புறீங்க? என முகம் வாட....

“நான் இருந்தா உங்க அண்ணனுக்குத் தான் கஷ்ட்டமா இருக்கும். அவன் ப்ரீயா இருக்க மாட்டான். சாதனா பாவம் இல்ல..... அவளுக்கு ரிஷியோட இருக்கனும்னு ஆசை இருக்கும். அதனால தான்.”

“இன்னும் கொஞ்ச நாள் தான் அப்புறம் நீ நம்ம வீட்டுக்கு வந்திடுவ...நான் உன் கூடவே இருப்பேன்.” என்றபடி வெற்றி ப்ரீதாவிற்கு க் கைகொடுக்க.... பதிலுக்குக் கைகொடுக்க ப்ரீதா வெட்கப்பட்டாள்.

“என்ன நீ போன்ல மட்டும் அவ்வளவு பேசுற.... நேர்ல பார்த்தா இப்படி வெட்கப்படுற....” வெற்றி கேலி செய்ய.... ப்ரீதா புன்னகையுடன் அவனுக்குக் கைகொடுக்க... அவளின் கையை இதமாகப் பிடித்து அழுத்திய வெற்றி... அவளிடம் விடைபெற்றுச் சென்றான்.

“எனக்கும் கல்யாண வேலை தலைக்கு மேல இருக்கு... நானும் கிளம்புறேன்.” என்றபடி ராஜ்மோகன் கிளம்பிவிட..... ஜோதி எதோ சமையல் அறையில் வேலை இருப்பது போல் உள்ளே சென்றவர், ப்ரீதாவையும் ஜாடை காட்டி தன்னோடு அழைத்துச் சென்றார்.

இங்கே ரிஷியின் முகத்தை மெதுவாக நிமிர்ந்து பார்த்த சாதனாவிற்கு ... அதிலிருந்த கடுகடுப்பே அவன் கோபத்தைச் சொல்ல.... எதற்கு வம்பு என்று அவளே இரண்டு புடவைகளைத் தேர்ந்து எடுத்தாள்.

“அத்தை...” சாதனா குரல் கொடுக்க....

“என்ன சாதனா புடவை எடுத்திட்டியா...” என்றபடி வந்த ஜோதி அவளின் புடவைகளை வாங்கிப் பார்த்தவர் “நல்லா இருக்கு...” என்றார்.

பின் அவருக்குப் புடவை எடுக்க உட்கார்ந்தவர் “ரிஷி கொஞ்சம் அம்மாவுக்கு எடுத்துக் கொடுடா....” என்றதும், மறுக்காமல் வந்தவன், அவருக்கு மிதமான அளவில் ஜரிகை இருந்த புடவையைத் தேர்ந்து எடுத்துக் கொடுத்தான்.

சாதனாவிற்கு ஆச்சர்யமாகப் போய்விட்டது. இவனுக்கு இதெல்லாம் தெரியுமா என்பது போல் பார்த்தாள். அதைக் கவனித்த ப்ரீதா “அம்மாவே புடவை எடுத்தா.... பட்டிக்காடு மாதிரி இது என்ன புடவைன்னு அண்ணன் திட்டும். அதனால எப்பவும் அம்மாவுக்கு அண்ணன் தான் எடுத்துக் கொடுக்கும்.” அவள் சொல்ல....

“ஆமாம் சாதனா எனக்கு அவ்வளவா புடவை எடுக்கவெல்லாம் தெரியாது. என்னமா இப்படிக் கட்டிட்டு வரேன்னு ரிஷி திட்டுவான். அதனால அவனைத் தான் எனக்கு எடுக்கச் சொல்வேன்.” ஜோதி வெகுளியாகச் சொல்ல.... சாதனா புன்னகைத்தாள்.

“அண்ணா என் புடவை நல்லா இருக்கா....” ப்ரீதா கேட்க....

“இது நல்லா இருக்கு... இது நல்லா இல்லை....” என்றவன், அவனே ஒரு புடவை தேர்ந்து எடுத்து கொடுக்க....

“தேங்க்ஸ் அண்ணா இது சூப்பரா இருக்கு.” என ப்ரீதா மகிழ்ச்சியுடன் சொல்ல... சாதனாவின் கண்கள் அவள் தேர்ந்தெடுத்த புடவைகளுக்குச் சென்றது.

அவள் இரண்டுமே மிதமான நிறத்தில் எடுத்திருந்தாள். இப்போது ப்ரீதா ஜோதி இருவரின் புடவைகள் தான் நன்றாக இருப்பது போல் தோன்றியது.

“ஐயோ ! நம்ம புடவை மட்டும் நல்லாவே இல்லை...” என்று நினைத்தவள் “எனக்கும் எடுத்து தாங்க....” என ரிஷியை பார்த்து கேட்டே விட்டாள்.

அவளைப் பார்த்து முறைத்தாலும், அவள் கேட்டதை ரிஷி செய்தான். அவளுக்கு வேறு இரண்டு நிறங்களில் புடவை எடுத்துக் கொடுத்தவன் “உனக்கு எங்க அம்மாவே பரவாயில்லை.... நீ அவங்களை விடக் கேவலமா செலக்ட் பண்ற.” என்றான்.

என்ன இப்படிச் சொல்லிட்டான் என்பது போல் ப்ரீதாவும், ஜோதியும் பார்க்க.... சாதனா அலட்டிக்கொள்ளவே இல்லை....

“அது தான் நீங்க இருக்கீங்க இல்ல.... அப்புறம் என்ன?” என்று புன்னகைத்தவள், அவளின் புடவைகளை ஆவலாகக் கையில் எடுத்து பார்த்தாள். உண்மையாகவே அவன் அவ்வளவு அழகாகத் தேர்வு செய்திருந்தான்.

கொஞ்சம் இடம் கொடுத்தா தலையில ஏறி உட்காருறா பாரு என்று நினைத்த ரிஷி “நீ எடுத்த புடவையைக் கட்டிட்டு என் பக்கத்தில நின்னா... என மானமும் தான போகும். அதனால தான் நானே எடுத்துக் கொடுத்தேன்.” என்று அவன் வேண்டுமென்றே சொல்ல....

“உங்க நல்ல எண்ணத்துக்கு ரொம்பத் தேங்க்ஸ்.” என்றாள் சாதனா அலட்ச்சியமாக.

“உடம்பெல்லாம் கொழுப்பு....” என்று நினைத்த ரிஷி மாடியில் இருந்த அவன் அறைக்குச் சென்று விட.... புடவை கடைக்காரர் மூட்டையைக் கட்டிக்கொண்டு கிளம்ப.... பெண்கள் மூவரும் அரட்டை அடித்தனர்.

மதிய உணவு நேரத்தில் ஜோதி ரிஷியை சாப்பிட அழைக்க.... அவன் வந்து சாப்பிட அமர்ந்ததும், அவன் பக்கத்தில் சென்று சாதனா அமர்ந்தாள்.

ரிஷி அவளை ஒருமாதிரி பார்த்தாலும் ஒன்றும் சொல்லவில்லை.... ஜோதி அவர்கள் இருவருக்கும் பரிமாறி விட்டு உள்ளே சென்று விட....

“ஆமாம் அன்னைக்கு நிச்சய மோதிரத்தை திருப்பித் தந்தீங்க. ஆனா இன்னைக்குப் புடவை எல்லாம் எடுத்து தரீங்க.” சாதனா கேட்க....

“நான் எடுத்து கொடுத்தேனா....” ரிஷி கேலியாகச் சொல்ல....

“நான் தான் கேட்டேன் போதுமா....ஆமாம் நிச்சய மோதிரத்தை எதுக்கு என்கிட்டே கொடுத்தீங்க?” சாதனா கேட்க....

“உனக்கும் எனக்கும் நிச்சயம் நடந்தாலும், ஏன் கல்யாணமே நடந்தாலும்.... நான் என் இஷ்ட்டப்படி தான் இருப்பேன். என்னை எதுவும் யாரும் கட்டுபடுத்த முடியாது. அதுக்குத்தான் புரியுதா....”

“ஓ... அப்ப கல்யாணம் நடக்குமா....”

“கல்யாணம் நடக்கும். ஆனா ஏன் நடந்துச்சுன்னு நீ நினைக்கப் போற....”

ரிஷி சொன்னதைச் சாதனா ஒன்றும் பெரிதாக நினைக்கவில்லை. எதோ கோபத்தில பேசுகிறான். கல்யாணத்திற்கு பிறகு சரி ஆகிடும் என நினைத்தாள். அவன் கல்யாணத்தை நிறுத்த போவது இல்லை என்பதே அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அதன்பிறகு எதுவும் பேசாமல் இருவரும் சாப்பிட்டு முடித்தனர். சாதனா வீட்டிற்குக் கிளம்ப...

“ரிஷி நீ போய் அவளை அவங்க வீட்ல விட்டுடுடா.... கல்யாணம் நிச்சயம் ஆன பொண்ணைத் தனியா அனுப்பக் கூடாது.” ஜோதி சொல்ல....

“என் கார் வந்திருக்கும் அத்தை, நான் அதுலேயே போய்க்கிறேன்.” என்றாள் சாதனா.

“இல்லமா அது நல்லா இருக்காது.ரிஷி நீ போய் விடு....” ஜோதி கண்டிப்பாகச் சொல்ல...

“சரி வா....” என ரிஷி முன்னே செல்ல.... ஜோதி சாதனாவை பார்த்துக் கட்டை விரலை உயர்த்த.... சாதனா பதிலுக்கு அவரைப் பார்த்து கண்சிமிட்டி விட்டு வந்தாள்.

சாதனா தனது காரை அனுப்பிவிட்டு ரிஷியின் காரில் ஏறிக்கொண்டாள். ரிஷி எதுவும் பேசாமல் அமைதியாக வர.... சாதனாவிற்கு அவர்கள் இருவரும் முதல் தடவை காரில் சென்றது நினைவுக்கு வந்தது.

அப்போது அவர்கள் இருவரும் அன்னியர்கள். ஆனால் இப்போது.... நினைக்கவே மகிழ்ச்சியாக இருந்தது. அவளுக்கு அவனோட இருக்கும் நேரத்தை நீடிக்க வேண்டும் போல் இருந்தது. வீட்டிற்குப் போகவே பிடிக்கவில்லை...

“இன்னைக்கு ரொம்ப வெயில்ல....” சாதனா மெதுவாக ஆரம்பிக்க....

மதுரைல என்னைக்கு வெயில் இல்லாம இருந்திருக்கு.... என்பது போல் ரிஷி அவளைப் பார்த்தான்.

“சில்லுன்னு எதாவது குடிச்சா நல்லா இருக்கும்.”

“இப்ப தான வீட்ல நல்லா கொட்டிகிட்டு வந்த....”

“அது ரொம்பக் காரம். தாகமா இருக்கு....” சாதனா சொன்னதும், ரிஷி அவளிடம் தண்ணீர் எடுத்துக் கொடுக்க.....

“இது வேண்டாம் ஜிகிர்தண்டா தான் வேணும்.” என்றாள்.

அவளை முறைத்தாலும் ஒரு கடையின் பக்கம் காரை நிறுத்தினான். அவன் காரை நிறுத்திய இரண்டாவது நொடி, ஒருவன் பின்னால் இருந்த காரில் இருந்து வேகமாக இறங்கி ரிஷி இருந்த பக்கம் வர....

கொஞ்சமாக ஜன்னலை திறந்த ரிஷி “ஒரு ஜிகிர்தண்டா வாங்கிட்டு வா...” எனச் சொல்ல.... அவன் ஓடி சென்று வாங்கி வந்தான்.

“உங்களுக்கு வேண்டாமா...” என்ற சாதனா நிதானமாக ஒவ்வொரு துளியாக ரசித்துக் குடிக்க.... ரிஷி எதோ யோசனையில் இருந்தான்.

“நான் ஏன் இவ சொல்றது எல்லாம் கேட்டுட்டு இருக்கேன்.” என்று தான் அவன் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.

அவள் குடித்து முடித்துப் பாட்டிலை கொடுத்ததும், காரை வேகமாக ஒட்டிக்கொண்டு சென்று, அவள் வீட்டின் முன்பு நிறுத்தினான்.

காரில் இருந்து இறங்காமல் சாதனா ரிஷியை பார்க்க.... அவன் என்ன என்றான்.

“உங்க கை ஒரு நிமிஷம் கொடுங்க.” சாதனா சொல்ல... ரிஷிக்கு எரிச்சலாக வந்தது. அவன் கோபத்தில் கத்தும் முன், அவன் கைபிடித்துத் தன்னிடம் இருந்த மோதிரத்தை அவன் விரலில் நுழைத்தவள் “உங்களுக்கு இது இருந்தாலும் இல்லைனாலும் ஒன்னு தான... அப்ப போட்டுக்கோங்க.” என்றபடி மோதிரத்தை அவன் விரலில் போட்டுவிட்ட பிறகே காரில் இருந்து இறங்கினாள்.

ரிஷி அந்த மோதிரத்தை கழட்ட பார்க்க... அது மிகவும் இறுக்கமாக இருந்தது. அவனால் கழட்ட முடியவில்லை... அவன் தன் விரலை திருப்பிப் பார்க்க... சாதனா அதில் நூல் சுற்றி இருந்தாள்.

ரிஷி சாதனாவை கோபமாக முறைக்க... அவள் அவனைப் பார்த்து சிரித்து விட்டு சென்றாள்.

அவன் இடத்திற்குச் சென்ற பிறகு, ரிஷி அந்த மோதிரத்தை கழட்டி அதில் இருந்த நூலை எடுத்துவிட்டான்.

“இந்த மோதிரத்தை போட்டு இருக்கிறதுனால மட்டும் எதாவது மாறப் போகுதா.... அவள் சொல்வது உண்மை தான....என நினைத்தவன், அந்த மோதிரத்தை தன் விரலில் அணிந்து கொண்டான்.

அவ அண்ணன் என்னை அடிக்க ஆள் அனுப்பி இருந்த அன்னைக்கே... பதிலுக்கு நான் யாருன்னு காட்டி இருக்கணும்.

அப்ப இந்தத் தைரியம் அவளுக்கு வந்திருக்காது. நான் கொஞ்சம் விட்டு பிடிப்போம்னு நினைச்சது, எவ்வளவு தப்பா ஆகிடுச்சு... என்கிட்டையே விளையாடி பார்க்கிறியா சாதனா... பதிலுக்கு நான் விளையாட்டு காட்டினா எப்படி இருக்கும்னு நீ தெரிஞ்சிக்கத் தான் போற... என வன்மத்துடன் நினைத்துக்கொண்டான்.
 
Nice episode...
ஒரு ஜோடி இப்படி ....
ஒரு ஜோடி அப்படி....
சாதனா பாவம்...
ஆனாலும் மோதிரம் மாட்டி விட்டது
தைரியம் தான்...
புத்தாண்டு வாழ்த்துக்கள்...
வாழ்க வளமுடன்
 
Last edited:
Top