Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீயின்றி வாழ்வேனோ 7 1

Advertisement

Admin

Admin
Member
பகுதி – 7

இரண்டு திருமணங்கள் நடக்க இருப்பதால்.... மண்டபத்தில் நடத்தினால் இடம் போதாது என்று சந்தானத்திற்கு சொந்தமான பெரிய இடத்தில்.... பிரம்மாண்டமான மேடை அமைத்து இருந்தனர்.

ராஜ்மோகன் சந்தானம் அவர்கள் இருவரின் உறவினர்கள், நண்பர்கள், கட்சி ஆட்கள் அதோடு இப்போது கூட்டணி வைத்திருக்கும் கட்சியினர் என்று அந்த இடமே திருவிழா போல் ஜகஜோதியாக இருந்தது.

சரியாக திருமணம் நடக்கும் நேரத்திற்கு தான் மணப் பெண்கள் அழைத்து வரப்பட்டனர். முதலில் ஆரஞ்சு வண்ண பட்டு புடவையில் அமர்க்களமாக ப்ரீதா வந்து இறங்க....

அடுத்து சிறிது நேரத்திற்கு எல்லாம் வந்த சாதனா பச்சை பட்டில் மணமகள் அலங்காரத்தில் இன்னும் அழகாக இருந்தாள்.

மணப்பெண்கள் இருவரும் மேடையை நோக்கி சென்ற போது... அவர்கள் எதிரே வெற்றியும், ரிஷியும் வந்தனர்.

“சூப்பரா இருக்க டி...” என ப்ரீதவை பார்த்து சொன்ன வெற்றி அவளை அழைத்துக்கொண்டு மேடைக்கு செல்ல....

சாதனாவின் முன்பு வந்து நின்ற ரிஷி அமைதியாக இருக்க..... அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் இன்றும் கண்ணாடி அணிந்திருக்க.... அதை கழட்டி தன்னிடமே வைத்துக்கொண்ட ரிஷி, அவள் முன்பு மூன்று விரல்களை காட்டி.... “இது என்ன சொல்லு?” என்றதும், சாதனா அவனை முறைத்தாள்.

அவளுக்கு பார்வை தெரிகிறதா என்று சோதித்து பார்க்கிறானாம். சாதனா வேண்டுமென்றே “நாலு...” என்று சொல்ல...

“வெரி பெர்பெக்ட்... வா...” என ரிஷி அவளை அழைத்துக்கொண்டு செல்ல.... சாதனாவிற்கு சிரிப்பாக வந்தது.

திருமணம் நடத்தி வைக்க மூத்த அரசியல் தலைவர் வருவதால்... அதுவரை மணமக்களை மேடையில் இருந்த இருக்கையில் அமர வைத்தனர்.

அப்போது மேடைக்கு வந்த ஒருவர் ஒலிப்பெருக்கியில் “அனைவருக்கும் வணக்கம். மணமக்களின் குடும்பத்தார் சார்பாக உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.” என அவர் வாழ்த்துரை ஆரம்பிக்க... அவருக்கு அடுத்து ஒருவர் பின் ஒருவராக வந்து பேச....

வெற்றியும், ப்ரீதவும் நிமிர்ந்து உட்கார்ந்து மிக கவனமாக கேட்டுக்கொண்டு இருந்தனர்.

ரிஷிக்கு போர் அடித்தது. “எனக்கு கல்யாணம் நடக்கிற பீலே இல்லை... எதோ கட்சி கூட்டத்துக்கு வந்த மாதிரி இருக்கு...” என்றான்.

பக்கத்தில் உட்கார்ந்திருந்த சாதனா அவனை ஓரக்கண்ணில் பார்க்க.... அவன் சேரில் சரிந்து உட்கார்ந்து இருந்தான். உண்மையிலேயே அவன் போர் அடித்து போய் உட்கார்ந்திருக்கிறான் என நன்றாகவே தெரிந்தது.

“ஒழுங்கா உட்காருங்க...” சாதனா முனங்க....

“என்ன சொன்ன?” என ரிஷி அவள் அருகே குனிய....

“ஒழுங்கா உட்காருங்க, இன்னும் கொஞ்ச நேரம் தான்.” என்றாள்.

அப்போது மேடைக்கு வந்த ஜோதி மாலையை சரி செய்வது போல் “ரெண்டு பேரும் கொஞ்சம் பேசாம இருக்கீங்களா.... கல்யாணம் முடிஞ்சு வீட்டுக்கு போனதும் நல்லா பேசுங்க. நான் ஒண்ணுமே சொல்லமாட்டேன்.” என்றார்.

“உங்ககிட்ட இப்ப யாராவது பெர்மிஷன் கேட்டாங்களா...” என ரிஷி கடுப்புடன் கேட்க....

“சும்மா இருங்க...” என்று அவனை அதட்டிய சாதனா “நாங்க பேசலை அத்தை. நீங்க போங்க.” என்றாள்.

ஜோதி வந்ததுக்கு ப்ரீதாவிடமும் சென்று பேசிவிட்டு சென்றார். திருமணத்தை நடத்தி வைக்கும் அரசியல் தலைவர் வந்ததும், பட்டாசு மழை பொழிய... அவரோடு இன்னும் சில முக்கியஸ்தர்களும் வந்தனர்.

மேடை ஏறிய தலைவரை வாழ்த்தி ராஜ்மோகன் பேசி முடித்ததும். தலைவர் தாலி எடுத்து கொடுக்க.... அந்த தங்க தாலியை ரிஷி சாதனாவின் கழுத்தில் அணிவித்து தன் மனைவி ஆகிக்கொண்டான். ஒரு நொடி தான் அதற்குள் திருமணம் முடிந்து விட்டது. பிறகு இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர்.

சாதனாவிற்கு நெகிழ்ச்சியாக இருந்தது என்றால்... ரிஷிக்கு ஹப்பாடா முடிந்தது என்பது போல் உணர்ந்தான். அடுத்து அதே போல் வெற்றி ப்ரீதா திருமணமும் நடந்தது.

திருமணத்தை நடத்தி வைத்த தலைவர் மேடையில் உரை ஆற்ற.... அவரை தொடர்ந்து அவருடன் வந்தவர்கள் பேசிமுடித்து, கடைசியாக சந்தானம் நன்றி உரை ஆற்றி. புகைப்படம் எடுத்து பின்பு அவர்கள் மேடையில் இருந்து இறங்கியதும், வந்திருந்த உறவினர்களும், கட்சி ஆட்களும் மேடை ஏறினர்.

காலையில் ஆரம்பித்தது மதியம் வரை மேடையில் நின்றிருந்தனர். மணமக்களுக்கு நின்று நின்று காலே வலித்து விட்டது.

விட்டால் மாலை வரை நிற்க வைப்பார்கள் என்று நினைத்த ரிஷி, இதுக்கு மேல நமக்கு ஆகாதுப்பா... என சாதனாவை அழைத்துக்கொண்டு மேடையில் இருந்து இறங்கிவிட்டான்.

அவனை திரும்பி பார்த்த வெற்றி “வா நாமும் போகலாம்.” என ப்ரீத்தாவுடன் அவனும் இறங்கி விட...”

“என்ன அதுக்குள்ளே இறங்கிடீங்க?” என்ற ராஜ்மோகனை ,

‘என்னது அதுக்குள்ளவா....’ என்பது போல் பார்த்த ரிஷி, “எங்களால இவ்வளவு நேரம் தான் நிக்க முடியும். வேணும்னா நீங்களும் அம்மாவும் போய் நில்லுங்க. துணைக்கு வேணா உங்க சம்பந்தியையும் கூடிட்டு நில்லுங்க.” என்றான்.

அவன் சொன்ன பாவனையில் வெற்றிக்கு கூட சிரிப்பு வந்துவிட்டது. ப்ரீதா சிரிப்பை அடக்கிக் கொண்டு நிற்க...

“எல்லோருக்கும் முன் எப்படி மானத்தை வாங்கிறான்.” என நினைத்த ராஜ்மோகன் அவனை முறைக்க கூட முடியாமல் நிற்க...

“இல்லை மாமா நின்னு நின்னு கால் வலிக்குது.” என்றாள் சாதனா...

அவர்கள் உண்மையிலேயே களைத்துப் போய் இருப்பதை பார்த்தவர் “சரிமா போய் சாப்பிடுங்க.” என்று அவர்களை அனுப்ப... விட்டால் போதும் என்று நால்வரும் சென்றனர்.

தங்கள் மனைவிமார்களை நடுவில் விட்டு ரிஷியும், வெற்றியும் ஓரத்தில் அமர்ந்தனர். இப்போது கூட இருவரும் சேர்ந்து உட்காருவதை கவனமாக தவிர்த்தனர்.

வெற்றியும் ப்ரீதாவும் பேசிக்கொண்டே சாப்பிட... ரிஷி பசியில் இருந்ததால்.... சாப்பிடுவதில் கவனமாக இருக்க... நிச்சயத்தன்று அவன் சாப்பிடாமல் சென்றது நினைத்து, சாதனாவும் அவனிடம் பேச முயலவில்லை.... தான் எதாவது பேசி அவன் சாப்பிடாமல் சென்று விட்டால். அதனால் அவளும் அமைதியாக இருந்தாள்.

மதிய உணவு முடிந்ததும், சாதனாவும் ப்ரீதாவும் தங்கள் புகுந்த வீடு கிளம்பினர். ஜோதிக்கு வீட்டுக்கு வரும் மருமகளை பார்ப்பதா.... அல்லது பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீடு செல்லும் மகளை பார்ப்பதா என்று தெரியாமல் திணறினார்.

அவர்கள் வீட்டில் வெற்றியின் அம்மா இருந்தால்... இவ்வளவு கவலைப்பட மாட்டார். மாமியார் இல்லாத வீடு என்பதால்... ப்ரீதா என்ன செய்வாளோ என்ற கவலை.

“ப்ரீதா அவங்க வீட்ல பெரியவங்க என்ன சொல்றாங்களோ... அதை கேட்டு நடந்துக்கோ.... உன் அத்தையும், மாமாவும் உன்னோட வருவாங்க. பார்த்து இருந்துக்கோ...” என மகளை வழி அனுப்பினார்.

ப்ரீதாவிற்கு கலக்கம் எல்லாம் இல்லை.... வெற்றி உடன் இருப்பதால்... சந்தோஷமாகவே கிளம்பி சென்றாள்.
ஜோதி தன் மகனையும் மருமகளையும் அழைத்துக்கொண்டு தங்கள் வீடு சென்றார். ஆரத்தி எடுத்து உள்ளே சென்ற நொடி.... ரிஷி மாடியில் இருந்த அவன் அறைக்கு சென்று விட...

புது மருமகள் செய்ய வேண்டிய சடங்கு சம்ப்ரதாயங்கள் முடிந்து. ஹாலில் வந்து அமர்ந்த சாதனாவை உறவுக் கூட்டம் சுற்றிக்கொண்டது.

சாதனா அவர்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டு இருந்தாள்.

“சாதனா... நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு வா....” என ஜோதி அவளை கீழே இருந்த அறைக்குள் அழைத்து சென்று விட...

அப்படியே தலை அலங்காரத்தோடு படுக்க முடியாது என்பதை உணர்ந்தவள் “அத்தை, தலை அலங்காரத்தை கலைச்சிட்டு வேற வாரிகட்டுமா...” என்றதும், சரி என்ற ஜோதி அவளுக்கு உதவ உறவுப்பெண் ஒருவரை அனுப்பி வைத்தார்.

தலைவாரி முகம் கழுவி... அதே புடவையில் கட்டிலில் படுத்த சாதனாவிற்கு உறக்கம் மருந்துக்கும் வரவில்லை.... இனி ரிஷி எப்படி நடந்துகொள்வான் என்ற எண்ணம் தான் இருந்தது.

இதுவரை அவன் நன்றாக தான் நடந்து கொண்டான். இனி தனிமையில் அவனை சந்திக்க வேண்டுமே... காதல் கணவனாக அவன் கசிந்துருகி விட மாட்டான் தான். ஆனால் வேறு எப்படி நடந்து கொள்வான் என்றும் தெரியவில்லை....

இப்படியே யோசித்துக்கொண்டே தன்னையும் மீறி நன்றாக உறங்கிவிட்டாள். இரண்டு முறை அவள் இருந்த அறைக்குள் வந்து பார்த்த ஜோதி, மூன்றாம் முறை வந்த போது... இதற்கு மேலும் தாமதப்படுத்த முடியாது என அவளை எழுப்பி விட....

பதறி அடித்து எழுந்தவள், ஜோதியை பார்த்ததும் “சாரி அத்தை ரொம்ப நேரம் தூங்கிட்டேனா....” என்றாள்.

“இருக்கட்டும் டா.... முகம் கழுவி தலை வாரி இந்த பூவை வச்சிட்டு வா... நான் காபி குடுத்து அனுப்புறேன்.” என்றவர், சொன்னது போலவே ஒரு பெண்ணிடம் சிற்றுண்டியும் காபியும் கொடுத்து விட்டார்.

சாதனா தயார் ஆகி ஹாலுக்கு வந்த சிறிது நேரத்திற்கு பிறகு தான் ரிஷி மாடியிலிருந்து இறங்கி வந்தான். அவன் வேறு உடை மாற்றி இருந்தான்.

யாரும் சொல்லாமலே ரிஷி சென்று சாதனாவின் அருகில் அமர்ந்தான்.

“நீ புடவை மாத்தலையா....”

“இல்ல அத்தை தான்.... இன்னைக்கு இந்த புடவையிலேயே இருக்க சொன்னாங்க.”

அவள் சொன்னதற்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை. அப்போது அங்கே வந்த ஜோதி “வந்ததும் நீ மாடிக்கு போயிட்டியா.... நான் பொண்ணு மாப்பிள்ளைக்கு பால், பழம் குடுக்கவே மறந்துட்டேன். ப்ரீதா இருந்து செய்ய வேண்டியது. அதுதான் மறந்து போச்சு...” என்றவர்,

ரிஷிக்கு தங்கை முறையில் இருந்து உறவுப்பெனை அழைத்து அவர்களுக்கு பாலும் பழமும் கொடுக்க சொன்னார்.

“இந்த நேரத்திலயா....” ரிஷி எரிச்சலுடன் கேட்க....

“சம்ரதாயம் டா.... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ....” என்றார்.

அவன் சித்தி பெண்ணோடு இன்னும் சில உறவுப்பெண்களும் வந்தவர்கள், சாதனாவிடம் பழத்தை கொடுத்து ரிஷிக்கு கொடுக்க சொல்ல....

அவள் வெட்கப்பட்டாலும் அவர்கள் சொன்னதை செய்தாள்.
ரிஷி பேருக்கு கொஞ்சமாக பழத்தை கடித்தான்.

அடுத்து ரிஷியிடம் பழத்தை கொடுத்து கொடுக்க சொல்ல.... சாதனா கொஞ்சமாக வாய் திறக்க.... ரிஷி மொத்த பழத்தையும் அவள் வாய்க்குள் வைத்து அமுக்கி விட்டான்.

அதை பார்த்த உறவுப்பெண்கள் சிரிக்க.... நல்லவேளை பாதிப்பழம் தான். அதனால் சாதனா சமாளித்து விழுங்கி வைத்தாள்.

ரிஷி விளையாட்டுக்கு செய்தானா... கோபத்தில் செய்தானா என்று தெரியாது. ஆனால் சாதனாவிற்கு கண்கள் கலங்கி விட்டது. அவள் புன்னகைப்பது போல் சமாளித்துக் கொண்டாள்.

அடுத்து பாலை சாதனாவிடம் கொடுத்து ரிஷிக்கு கொடுக்க சொல்ல.... சாதனா கொடுக்க மாட்டேன் என்று மறுத்து விட்டாள்.

“சும்மா கொடுங்க அண்ணி...” ரிஷியின் தங்கை விஜி சொல்ல.... மாட்டேன் என்று சாதனா உறுதியாக மறுத்து விட்டாள்.

“நீங்கதான் அண்ணா அண்ணியை பயம் காட்டிடீங்க. சரி நீங்க பாதி குடிச்சிட்டு, அண்ணிக்கு பாதி குடுங்க.” என்றதும், ரிஷி பாதி குடித்துவிட்டு சாதனாவிடம் டம்ளரை நீட்ட... சாதனா அதை வாங்கி குடித்தாள்.

அவர்கள் எல்லோரும் சென்றதும், சாதனாவின் முகத்தை பார்த்த ரிஷி “இதுக்கே பயந்தா எப்படி? இன்னும் இருக்கே....” என்றான் கேலியாக....

அவனை திரும்பி பார்த்த சாதனா “ஓ... அப்படியா.... நானும் இப்ப மாதிரி எப்பவும் சும்மா இருப்பேன்னு நினைக்காதீங்க.” என்று சொல்லிவிட்டு சட்டென்று அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள்.

அவள் பேசிவிட்டு பட்டென்று எழுந்து சென்ற விதம் ரிஷிக்கு மிகுத்த கோபத்தை வரவழைத்தது. இருடி என்கிட்டே தனியா மாட்டுவ இல்ல... அப்ப இருக்கு உனக்கு என்று நினைத்துக் கொண்டான்.
 
Top