Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீயின்றி வாழ்வேனோ 8 1

Admin

Admin
Member
பகுதி – 8

ரிஷியும் சாதனாவும் பகலில் நன்றாக ஓய்வு எடுத்திருந்ததினால்... இருவருக்குமே படுத்ததும் உறக்கம் வரவில்லை.... வெகுநேரம் கழித்தே உறங்கியதால்...விடிந்து வெகு நேரம் வரை எழுந்துகொள்ளவில்லை....

சாதனாவாக எழுந்து கீழே வருவதற்காகக் காத்திருந்த ஜோதி அவள் வரவில்லை என்றதும், மாடிப்படியில் இருந்தே குரல் கொடுத்தார்.

தன் அம்மாவின் குரல் கேட்டு, மற்றொரு அறையில் படுத்து இருந்த ரிஷி உடனே விழித்து விட.... சாதனா அப்போதும் எழுந்துகொள்ளவில்லை....

ஐயோ ! செத்தடா ரிஷி நீ இன்னைக்கு. ரெண்டு பேரும் தனித்தனியா தூங்கினது தெரிஞ்சிது.... அதுக்கு வேற ஒரு பஞ்சாயத்து நடக்குமே என நினைத்தவன், மெதுவாகக் கதவை திறந்து பார்க்க.... ஜோதி கீழே இருந்து தான் குரல் கொடுத்துக் கொண்டு இருந்தார்.

அப்போது சாதனாவும் உறக்கத்தில் இருந்து விழித்தவள், சோம்பலாகக் கண்திறக்க.... ஜோதியின் குரலை கேட்டுவிட்டு பதறி அடித்து எழுந்து வந்தாள்.

ஜோதி பார்ப்பதற்குள் தன் அறைக்குச் சென்று விட நினைத்து ரிஷி வேகமாக வர.... அதே நேரம் சாதனாவும் எழுந்து வந்து கதவை திறக்க... அதை எதிர்ப்பார்க்காத ரிஷி சாதனா மீது பலமாக மோத.... இருவரும் சென்று உள்ளே தரையில் விழுந்தனர்.

திடிரென்று ஏற்பட்ட அதிர்ச்சியில் சாதனா வாய்விட்டு கத்தப் போக... அதை உணர்ந்த ரிஷி அவளின் வாயை பொத்தினான். அப்போது தான் கண்திறந்து பார்த்தவள், மோதியது ரிஷி தான் என்றதும் அமைதியானாள்.

ரிஷி அவள் மேலிருந்து எழுந்துகொள்ள நினைக்கும் போதே “மெதுவா வர தெரியாதா.... இப்படியா வந்து விழுவீங்க. சீக்கிரம் எந்திரீங்க.” எனச் சாதனா சிடுசிடுக்க.... ரிஷிக்குக் கோபம் வந்துவிட்டது.

“முடியாது, என்ன செய்வ?” என அவள் மீது இன்னும் அழுத்தமாகப் படுத்துக்கொண்டான்.

சாதனாவிற்கு மூச்சே விட முடியவில்லை.... அவள் அவனைத் தன் மேலிருந்து தள்ளப் பார்க்க.... அவளால் அவனை அசைக்கக் கூட முடியவில்லை... ரிஷி தலையை மட்டும் தூக்கி, அவளது முயற்ச்சியை பார்த்துக்கொண்டு இருந்தான்.

அப்போது மாடிக்கு வந்த ஜோதியின் நாத்தனார் உமா “என்ன அண்ணி இங்க நிற்கிறீங்க?” என்றதும்,

“இல்ல குலதெய்வ கோவிலுக்குப் போகணும், அதுதான் ரிஷியையும் சாதனாவையும் சீக்கிரம் கிளம்பச் சொல்லணும்.” அவர் தயங்கித் தயங்கி சொல்ல....

“நீங்க இருங்க, நான் போய் அவங்களைக் கிளம்பச் சொல்லிட்டு வரேன்.” என்றவர், வேகமாகப் படிஏறி மேலே வர... அங்கே ரிஷியின் அறை கதவு திறந்திருப்பதைப் பார்த்ததும், அவர் பார்வை உள்ளே சென்றது.

அங்கே தரையில் சாதனாவும், அவள் மீது ரிஷியும் இருப்பதைப் பார்த்தவர், தன்னையுமறியாமல் “ஐயோ ! “ என வாய்விட்டு கத்திவிட....

அதுவரை வேறு எதையும் உணராமல்... சண்டை போடும் தீவிரத்தில் இருந்த ரிஷியும், சாதனாவும், அவர் குரலில் பதறி அடித்து விலகினர்.

ரிஷியின் அத்தைக்கு அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை.... அவர்கள் எழுந்துகொள்ளும் முன் அங்கிருந்து விரைந்து சென்றார்.

“ஐயோ ! மானமே போச்சு...” ரிஷி தலையில் அடித்துக்கொள்ள...

“எல்லாம் உங்களால தான்.” என்றாள் சாதனா...

“எதாவது பேசின கொன்னுடுவேன். எங்க அம்மா எவ்வளவு நேரமா கூப்டிட்டு இருக்காங்க. நல்லா கும்பகர்னி மாதிரி தூங்கிட்டு...இப்ப பெரிசா பேச வந்துட்டா....”

“நான் மட்டுமா தூங்கினேன். நீங்களும் தான நல்லா தூங்கி எழுந்து வந்து என் மேல விழுந்து வச்சீங்க.... அவங்க அதைப் பார்த்து தான் தப்பா நினைச்சிட்டு போறாங்க. எல்லாம் உங்களால தான்.” சாதனாவும் பதிலுக்குச் சண்டை பிடிக்க...


ரிஷிக்குக் கோபத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை.. கட்டிலில் இருந்த தலையணையைத் தூக்கி சாதனா மீது வீச...

தன் மீது திடிரென்று தலையணை வந்து விழுவும், திடுக்கிட்டுப் போய்ப் பார்த்த சாதனா.. அதை எடுத்து ரிஷியின் மீது திருப்பி அடிக்க... அவள் செய்வதைப் பார்த்துக்கொண்டு இருந்ததால்... ரிஷி அதைக் கைகளால் பிடித்துக்கொண்டான்.

கட்டிலில் இருந்த இன்னொரு தலையணையைச் சாதனா எடுத்துக்கொள்ள... இருவரும் சிறிது நேரம் தலையணையால் சண்டை போட்டுக் கொண்டனர்.

“அவங்களைச் சீக்கிரம் கிளம்பி வர சொன்னீங்களா...” சமையல் அறையில் இருந்த ஜோதி உமாவிடம் கேட்க....

“அவங்க ரெண்டு போரையும் பார்த்தா இப்ப வர மாதிரி தெரியலை....” என்ற தன் நாத்தனாரை ஜோதி புரியாமல் பார்த்தார்.

“உங்க மகன் இருக்கிற வேகத்தைப் பார்த்தா... இன்னும் எட்டு மாசத்தில நீங்க பாட்டி ஆகிடுவீங்க போலிருக்கே...” என்றார் உமா சிரிப்புடன். ஜோதிக்கு அவர் சொன்னதை நம்பவும் முடியவில்லை... நம்பாமல் இருக்கவும் முடியவில்லை...

“நாம முன்னாடி போய்க் கோவில்ல பொங்கல் வைப்போம். அவங்க ரெண்டு பேரும் சாமி கும்பிட வரட்டும் போதும்.” உமா சொல்வது அவருக்கும் சரி என்று பட்டதால்.... கோவிலுக்குக் கிளம்பும் வேலையைப் பார்த்தார்.

இங்கே ரிஷியும் சாதனாவும் வாய் சண்டையில் ஆரம்பித்து, கை சண்டையில் முடித்து, களைத்துப் போய் ஆளுக்கு ஒரு பக்கம் ஒருவரை ஒருவர் முறைத்தபடி உட்கார்ந்து இருந்தனர்.

அப்போது ரிஷியின் கைப்பேசி அழைக்க... “இந்தா அம்மா தான்.” என அவன் சாதனாவிடம் கொடுக்க...

“சொல்லுங்க அத்தை...” எனச் சாதனா சொன்னதும்,

“சாதனா... நாங்க முன்னாடி கோவிலுக்குப் போறோம். நீயும், ரிஷியும் பின்னாடி வாங்க. கீழ டிபன் ரெடியா இருக்கு. சாப்டிட்டு ரொம்ப லேட் பண்ணாம வந்திடுங்க.” ஜோதி சொல்ல.... கேட்ட சாதனாவிற்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.

“இதோ கிளம்பிட்டே இருக்கேன் அத்தை.... இப்ப வந்திடுறேன்.” சாதனா பொய் சொல்லி சமாளிக்க.... அவளிடம் இருந்து செல்லை பறித்த ரிஷி “அம்மா அவ பொய் சொல்றா.... இன்னும் பல்லு கூட விலக்கலை....” என அவன் கனகச்சிதமாகப் போட்டு கொடுக்க....

அவனை முறைத்தபடி செல்லை அவனிடம் இருந்து பறித்த சாதனா “இவங்க தான் அத்தை என்னைக் கிளம்பவே விடலை....” என்றாள்.

அவள் ஒரு அர்த்தத்தில் சொல்ல... ஜோதி ஒரு அர்த்தத்தில் புரிந்து கொண்டார்.

இந்தப் பொண்ணு இதையெல்லாம் நம்மகிட்ட சொல்லுதே என நினைத்தவர் “சரிமா சீக்கிரம் கிளம்பி வாங்க.” என்றபடி போன்னை வைக்க.... இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்தபடி கிளம்ப ஆரம்பித்தனர்.

சாதனா குளிப்பதற்கு உடை எடுப்பதற்குள், ரிஷி துண்டை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குள் சென்று புகுந்து கொண்டான்.

“கிளம்பிட்டேன்னு அம்மாகிட்ட பொய்யா சொல்ற... இரு ஒருமணி நேரம் கழிச்சு தான் வெளிய வருவேன்.” என அவன் சொல்லிக்கொண்டே கதவை அடைக்க....

“போடா டேய்....” என மனதிற்குள் சொல்லிக்கொண்ட சாதனா பக்கத்து அறைக்குச் சென்று வேகமாகக் குளித்து, அந்த அறையிலேயே புடவை கட்டிக்கொண்டு வந்தாள்.

ரிஷி குளியல் அறையில் இருந்து வந்த போது... சாதனா பட்டுப்புடவையில் தயாராக நின்றாள். அவளைப்பார்த்து உள்ளுக்குள் வியந்தாலும், வெளியே ஒன்றும் காட்டிக்கொள்ளாமல் ரிஷி சென்று தயார் ஆனான்.

இருவரும் கீழே சென்ற போது... வீட்டில் ஆள் நடமாட்டமே இல்லை.... சாதனா சென்று ரிஷிக்கு உணவு எடுத்து வைக்க.... ரிஷி வேண்டுமென்றே வேறு ஒரு தட்டை எடுத்து அவனே பரிமாறிக்கொள்ள....

அவனை அலட்சியமாகப் பார்த்த சாதனா... அவனுக்காகத் தான் பரிமாறிய தட்டை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள். இருவரும் அவரவரே எடுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிட்டு முடித்தனர்.

சாப்பிட்டு முடித்து இருவரும் கிளம்ப.... வெளியே அவர்களுக்காகக் காரோடு டிரைவர் காத்திருந்தார். டிரைவர் இருந்ததால் காரில் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை....

இவர்கள் கோவிலுக்குச் சென்று சேர்ந்த போது... அங்கே அப்போது தான் பொங்கல் வைக்க ஆரம்பித்து இருந்தனர். சாதனா சென்று அவர்களோடு சேர்ந்து கொண்டாள்.
அதற்குள் விஷயம் பரவியிருக்க.... உறவினர்கள் சாதனாவை குறுகுறுவென்று பார்க்க.... ஏன் இப்படிப் பார்க்கிறார்கள் என்று அவளுக்கு முதலில் சுத்தமாகப் புரியவில்லை... பிறகு சிறிது நேரம் சென்று தான் புரிந்தது.

அப்போது ரிஷியோடு சண்டை போடும் மும்முரத்தில் இருந்ததால்... வேறு எதையும் யோசிக்கவில்லை... ஆனால் இப்போது அவன் தன் மீது படுத்திருந்ததை நினைக்கும் போது... உடல் சூடாகி... முகம் சிவக்க ஆரம்பித்தது.

அவள் மெதுவாக ரிஷியை பார்க்க... அவன் உறவினர்களுடன் அரட்டையில் இருந்தான். மாநிறத்திற்கும் சற்று கூடுதலான நிறம். அடர்த்தியான சிகை, அதை அவன் ஒதுக்கி விடுவதைப் பார்க்கவே அழகாக இருக்க. அதுவும் அவன் புன்னகைக்கும் போது தெரியும் பற்களின் வரிசை... அவனை இன்னும் களையாகக் காட்டியது.

சாதனா ரிஷியை பார்த்து ரசித்துக் கொண்டு இருக்க.... அப்போது ரிஷியும் அவளைப் பார்த்தான். அவள் சும்மா உட்கார்ந்திருப்பதைப் பார்த்தவன் “அம்மா நீங்க ஏன் மா வேலை செய்றீங்க? உங்க மருமகளைச் செய்யச் சொல்ல வேண்டியது தான....” என அவளை வேண்டுமென்றே வம்பிழுக்க....

“ஆமாம் மருமகனே..... விட்டா நீங்களும் உங்க பொண்டாட்டியும் இன்னைக்குச் சாயங்காலம் தான் ரூம்ல இருந்து வெளியவே வந்திருப்பீங்க போல... இதுல உங்க பொண்டாட்டியை நாங்க வேலை வாங்கிட்டாலும்.” என உமா கிண்டலாகச் சொல்ல.... அதைகேட்ட மற்ற உறவினர்கள் கொள்ளென்று சிரித்தனர்.

இது உனக்குத் தேவையா என்பது போல் சாதனா ரிஷியை பார்க்க... “இன்னைக்குக் காலையில இருந்தே எல்லாமே சொதப்புது. எல்லாம் இவளால தான்.” என நினைத்து ரிஷி பதிலுக்கு அவளை முறைத்தான்.

பொங்கல் வைத்து முடித்து ரிஷியின் அருகில் நின்று சாமி கும்பிடும் போது.... சாதனா நிறைவாக உணர்ந்தாள். நேற்று மனதில் இருந்த கலக்கம் இப்போது இல்லை.... மிகவும் சந்தோஷமாக இருந்தாள். அப்போது அவளுக்குத் தெரியவில்லை..... அவன் தெளியவைத்து தெளியவைத்து அடிப்பான் என்று.....

பதினோரு மணிக்கெல்லாம் கோவிலில் இருந்து திரும்பி விட்டனர். அன்று மதியம் மண்டபத்தில் இருபக்க உறவினர்களுக்கும் அசைவ விருந்து கொடுப்பதாக இருந்தது. அது முடிந்து உறவினர்கள் எல்லோரும் அன்றே கிளம்பி விடுவார்கள்.

விருந்திற்காகச் சாதனா வேறு புடவை கட்டி தயாராக... அவளை வந்து பார்த்த ஜோதி “இன்னும் அதிக நகை போடு...” என்றவர், அவளுக்குத் தலை நிறைய மல்லிகை பூவை வைத்து விட்டு சென்றார்.

ஜோதி சொன்னபடி மேலும் சில நகைகள் அணிந்து கண்ணாடியில் சரி பார்க்கும் போது.... ரிஷி உள்ளே நுழைந்தான். குளியல் அறைக்குள் சென்று முகம் கழுவி வந்தவன், சில நொடிகளில் வேறு உடை மாற்றித் தயாராகி விட....

“இவன் எவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்டான். இதே நாம கிளம்ப எவ்வளவு நேரம் ஆச்சு....” என நினைத்துச் சாதனா பெருமூச்சு விட....அவளை கவனித்த ரிஷி தலைவாரிக்கொண்டே “என்ன?....” என்றான்.

“நீங்க எவ்வளவு சீக்கிரம் கிளம்பிடீங்க.... இதே நான் கிளம்ப எவ்வளவு நேரம் ஆச்சு? பொம்பளைங்க தான் பாவம்.”

“யாரு நீங்க? ஆம்பிளைங்க கஷ்ட்டப்பட்டுச் சம்பாதிக்கிறதை எல்லாம் பட்டு புடவையும், நகையுமா வாங்கி மாட்டிக்க வேண்டியது. அப்புறம் பாவமாம். நாங்க தான் பாவம்.”

“நீங்க மாட்டிகிட்டா நல்லா இருக்காது இல்ல... அதுதான் நாங்க போட்டுக்கிறோம்.” சாதனா சிரித்துக்கொண்டே சொல்ல....

“நல்லா பேசுற நீ.... ஆமாம் நேத்து நைட் எங்க போச்சு இந்த வாய்? என்னைப் பார்த்து அப்படிப் பயந்த.....” ரிஷி கிண்டலாகக் கேட்க....

“யாரு பயந்தா? நானா.... அதெல்லாம் ஒன்னும் இல்லையே... நீங்க தான் என்னைப் பார்த்து பயந்திட்டு பக்கத்துக்கு ரூம்ல போய்ப் படுத்தீங்க.” சாதனா அலட்சியமாகச் சொல்ல....

“எல்லாப் பொம்பளைங்களும் இப்படித் தானா.... எப்படி டி இப்படி அப்படியே ஆம்பிளைங்க மேல போட்டுடுறீங்க.” எனப் போலியாக ஆச்சர்யபட்டவன், “நேத்து நீ அழுதது எனக்குத் தெரியும் சாதனா.... சும்மா பொய் சொல்லாத....” என்றான் கோபமாக....

“நீங்க ஏன் ரிஷி இப்ப டென்ஷன் ஆகுறீங்க? ஆமாம் கொஞ்சம் பயமா தான் இருந்தது போதுமா....” என்றாள் சாதனா....

“எதுக்குப் பயம்? இந்தப் பயம் அன்னைக்கு என்னைத் தனியா தேடி வரும் போது... இல்லையா....”

“அன்னைக்கு உங்களுக்கு ஆபத்துங்கிறது மட்டும் தான் என்னோட நினைவுல இருந்தது. நான் வேற எதையும் பத்தி யோசிக்கலை... அதுவும் எனக்கு உங்களைப் பத்தி தெரியும் ரிஷி. நீங்க தப்பாவெல்லாம் நடத்துங்க மாட்டீங்கன்னு ஒரு நம்பிக்கை தான்.”

“அந்த நம்பிக்கை நேத்து இல்லை போல....”

“உங்க மேல நம்பிக்கை இல்லாம இல்லை... நேத்து நீங்க ரொம்பக் கோபமா இருந்தீங்க. அதுதான் எப்படி நடந்துபீங்கலோன்னு கொஞ்சம் பயமா இருந்தது.”

“அதாவது உன்னோட உணர்வுகளுக்கோ.... சுயமரியாதைக்கோ.... எந்தப் பங்கமும் வந்திட கூடாதுன்னு நினைச்ச கரெக்டா...” ரிஷி கேட்க... சாதனா ஆமாம் என்று ஒத்துக்கொண்டாள்.

“உன்னைப் பத்தி இவ்வளவு யோசிக்கிறியே சாதனா.... என்னைப் பத்தி கொஞ்சமாவது யோசிச்சியா.... நான் வேற ஒரு பெண்ணை விரும்புறேன்னு உன்கிட்ட நானே சொன்னேன் தான.... அப்படி இருந்தும் இந்தக் கல்யாணத்துக்கு நீ எப்படிச் சம்மதிச்ச?”

“நான் போய் எங்க அப்பாகிட்ட உங்களைக் கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேட்கலை ரிஷி... அவர்தான் என்னைக் கேட்டார். எனக்கு உங்களைப் பிடிச்சிருந்தது. நான் சரின்னு சொன்னேன். உங்களுக்குப் பிடிக்கலைன்னா... நீங்க நிறுத்தி இருக்க வேண்டியது தான....”
 
Advertisement

Advertisement

Top