Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் அத்தியாயம் 17

Advertisement

parvathi

Active member
Member
Thanks to all readers for ur genuine support. Pls give ur feedbacks.

என் கதைகள் ஆடியோவில் கேட்க விருப்பப்பட்டால்@ BalaThiagarajanTamil Novels. utube. Com என்ற சேனலுக்கு வருகை தாருங்கள். Last BUT NOT THE LEAST PLS LIKE COMMENT SHARE N SUBSCRIBE 🙏🏻








அத்தியாயம் 17

வீணையை உறையிலிட்டு மூடிவிட்டு பூஜையறையில் ஓரத்தில் மேடையில் வைத்து விட்டு ராதா ஹாலுக்கு வந்தாள்.

"ப்ளீஸ்க்கா எனக்கு பரீட்சை முடியற வரை உன் வாசிப்பை கொஞ்சம் நிறுத்திக்கயேன்.எங்கே உன் இசையில் மயங்கி பரீட்சையில் கோட்டை விட்ருவேனோனு பயமாயிருக்கு. "

சந்தியாவின் கெஞ்சலில் ராதா சிரித்துக் கொண்டே தலையாட்ட, சுந்தரம் அவசரமாக குறுக்கிட்டார்.

"ஐயோ ! சந்தியா சொல்றாளேன்னு நீ வீணை வாசிக்கறதை நிறுத்திடாதம்மா. நான் சாப்பிடாமல் கூட இருந்துடுவேன்.ஆனால் உன் வீணை இசையை கேட்காமல் இருக்க முடியாது.."

"ஐயோ போதுமே ! அப்பாவும் பொண்ணுமா ரொம்பத்தான் அசடு வழியறிங்க. என்னிக்கிருந்தாலும் ராதா இன்னொரு ஆத்துக்கு மாட்டுப்பொண்ணா போக வேண்டியவ.அவ கல்யாணம் ஆகி போய்ட்டா என்ன பண்ணுவிங்க? அவகூடவே நீங்களும் போய் அங்கேயும் அவளைப் பாடச் சொல்லி கேட்பிங்களா?"

காயத்ரி கேலி பேசவும்,சுந்தரம் சுள்ளென்று கோபப்பட்டார்.

"நா ஏண்டி அவாத்துக்கு போய் கேட்கறேன்? என் பொண்ணோட வாசிப்பை டேப்ரிக்கார்டர்ல பதிவு பண்ணி வெச்சுண்டு கேட்பேன். ஏன் முடிஞ்சா வீடியோ பிலிம்மா கூட எடுப்பேன்.நீ யார் என்னை கேள்வி கேட்க?"

"ஏன்னா, நீங்க ரெக்கார்ட் பண்ணுவேளோ,இல்லை வீடியோ பிலிம் எடுப்பேளோ வசதியிருந்தால் என்ன வேணா பண்ணுங்கோ. நான் வேணாங்கல.ஆனால் இப்போ வந்து ஒரு வாய் சாப்பிட்டு போனால் தேவலை.எனக்கு நாழியாறது. அம்மா அப்பவே படுத்துட்டா. ஹாலில் விளக்கெரியறதை பார்த்தான்னா இன்னுமா தூங்கலேன்னு கோபிச்சுப்பா.."

காயத்ரி சொல்லி வாய் மூடவில்லை. பாட்டியின் குரல் எதிரொலித்தது.

"ஏண்டா சுந்தரம் இன்னுமா தூங்கலே? சீக்கிரமாய் படுத்தோமா காலையில் நேரத்தோட எழுந்தோமான்னு இல்லாமல் ராவேளையில் என்ன பாட்டும் கூத்தும் வேண்டியிருக்கு? மனுஷாளை சித்த நேரம்தூங்கவிடாமல் அப்படியென்ன பாடறா அவ? எல்லாரும் படுக்கற வழியைப் பாருங்க.."

கல்லையும் கரைய வைக்குமாம் இசை.ஆனால் பாட்டிக்கு உடம்பு உலோகத்தால் ஆனதோ என்ற சந்தேகம் ராதாவிற்கு வரத் தான் செய்தது.

நான் சொன்னேனோல்லையோ என்று பார்வையாலேயே கேட்ட காயத்ரியை தொடர்ந்து சத்தமின்றி சமையலறைக்கு சென்றவர்கள் உண்டு முடித்து தூங்க ஆயத்தமானார்கள்.

"அக்கா என்னோட போர்வை காணலையே. நீ பார்த்தியோ?"

படுக்கையில் படுக்கும் முன் மீனு கேட்க, அப்பொழுது தான் நினைவிற்கு வந்தவளாக காயத்ரி சொன்னாள்.

"ஐயோ ! கார்த்தால மீனுவோட போர்வையை துவைத்து மொட்டைமாடி வெயிலில் கொண்டு உணர்த்தினேன். அதை எடுக்க மறந்து போச்சு. சரி பரவாயில்லை.மீனு இன்னிக்கு அம்மா போர்வையை போர்த்திப்பா. என்ன மீனும்மா?"

"ஊகூம் மாட்டேன் எனக்கு என் போர்வை தான் வேணும்."

மீனு அழவே ஆரம்பித்தாள்..

"ப்ச்சு என்ன மீனு எதுக்கு இப்ப அழறே? அம்மா போர்வை வேணாம்.அக்கா போர்வை தரவா? ரெண்டு பேரும் சேர்ந்து போர்த்திக்கலாம்.அக்கா உனக்கு கதை சொல்றேன்.."

ராதாவின் சமாதானம் பலிக்கவில்லை. மீனு இன்னும் சத்தமாக அழ தொடங்கினாள்.

"மீனு சமர்த்து பொண்ணு தானே? சொன்னபேச்சு கேட்ப தானே? இன்னிக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கம்மா. நாளைக்கு கார்த்தால அக்கா உன் போர்வையை எடுத்துத் தரேன்."

"ஊகூம் எனக்கு இப்பவே வேணும்"

"நீ ஏன்மா இவ போர்வையை எடுத்து துவைச்சே? இப்ப பாரு இவ அழறதை…"சலித்துக் கொண்டாள் ராதா.

"என்னக்கா நீ நன்னா நாலு கொட்டு கொட்டி படுக்க வைப்பியா? இந்தக் குட்டிபிசாசு கிட்ட வெட்டியா பேச்சு வார்த்தை நடத்திண்டிருக்கியே. ஏய் மீனு வாயை மூடிண்டு படுக்கறயா இல்ல அடி வேணுமா?"

பக்கத்தில் படுத்திருந்த சந்தியா அடிக்குரலில் மிரட்டவும், மீனு பெருங்குரலெடுத்து கத்த ஆரம்பித்தாள்.

"ஏண்டி ராவேளையில் குழந்தையை அழ விடறே? என்ன வேணுமாம் மீனுவிற்கு?"

சுந்தரம் அவர் அறையிலிருந்து குரல்கொடுக்க, காயத்ரி சின்னக்குரலில் சந்தியாவிடம் கெஞ்சினாள்.

"சந்தியா மொட்டைமாடிக்கு போய் இவ போர்வையை எடுத்துண்டு வாடி. இல்லேன்னா இந்த கடன்காரி நம்மை தூங்க விடமாட்டா. சிவராத்திரி தான் நமக்கு.."

"போம்மா. அதுக்கு வேற ஆளைப்பாரு. இப்ப தூங்கினா தான் விடிகாலையில் எழுந்து படிக்க முடியும். என்னை தொந்தரவு பண்ணாதே.."

சந்தியா திரும்பி படுத்து கொள்ளவும், காயத்ரி புலம்பினாள்.

"உங்கப்பாவுக்கு பிரஷர் மாடியேற முடியாது. உங்கண்ணா தூங்கறான்.இந்த கடன்காரி போர்வை இல்லாமல் படுக்க மாட்டேன்னு அழிச்சாட்டியம் பண்றாளே.நான் என்ன செய்ய?"

"ஐயோ அவ அழறது பத்தாதுன்னு நீ வேற புலம்பாதேம்மா.நான் போய் எடுத்துண்டு வர்றேன்.."

"நீயா? ராவேளையில் தனியாவா? இருட்டுன்னாலே பயப்படுவியே ராதா நீ எப்படி?"

"பரவாயில்லம்மா.நம்மாத்து மொட்டைமாடி தானேம்மா? என்ன பயம்? நான் போய் எடுத்துண்டு வர்றேன்.."

பயமில்லை என்று சொல்லிவிட்டாளே தவிர மனதில் கொஞ்சம் பயத்துடன் தான் படிகளில் ஏறினாள் ராதா.மாடியில் நந்தகுமாரின் வீட்டில் இன்னமும் விளக்கெரிந்தது. காற்றில் சிட்டிபாபுவின் வீணையிசை மிதந்து வந்தது. இசையை ரசித்துக் கொண்டே ஏறியவள், படியில் படுத்திருந்த பூனையை கவனிக்காமல் மிதித்துவிட, அது கத்திக் கொண்டு அவள் மீது தாவ முற்பட,வாய் விட்டு அலறியபடி, மாடிக்கு ஓடினாள்.

ராதாவிற்கு பூனை என்றால் பயம் அலர்ஜி என்று கூட சொல்லலாம். இப்பவும் பயத்தில் சர்வாங்கமும் பதறிப் போய் போர்வையை எடுத்துவிட்டாலும், மீண்டும் கீழேயிறங்க தைரியமில்லாதவளாக அவள் நின்ற நாழிகையில்,தேவகியின் வற்புறுத்தலுக்காக மாடியேறி என்ன விஷயம் என்று பார்க்க வந்தான் நந்தகுமார்.

பயத்துடன் அடி மேல் அடி எடுத்து வைத்து நகர்ந்த ராதாவை பயமுறுத்தியே தீர்வதென்று கங்கணம் கட்டிக் கொண்டு அந்த பொல்லாத பூனை மாடிக்கே வந்து விட, பதறியடித்து ஓடி வந்த ராதா படியேறி வந்த நந்தகுமாரின் மீது மோதிவிட்டாள். படிகளில் உருண்டு விழயிருந்தவளை தடுத்து தாங்கிக் கொண்டவனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. கீழே விழுந்து கிடந்த போர்வையும் சின்னக் கண்களால் உறுத்து பார்த்து விட்டு மியாவ் என்று கத்திக் கொண்டு ஓடிய பூனையும் விஷயத்தை விளக்க, அவனுக்கு அடக்க முடியாமல் சிரிப்பு தான் வந்தது. ஆனால் மிரண்ட அவள் கோலத்தை கண்டு சிரிப்பை அடக்கியவன் சின்னக் குரலில் கேட்டான்.

"பூனையைப் பார்த்தா அப்படி பயப்பட்டே?"

அப்பொழுது தான் அவன் அவளைத் தாங்கிக் கொண்டிருப்பது ராதாவிற்கு புத்தியில் உறைத்தது. சட்டென்று விலக முற்பட்டவளை விட மனமில்லாதவனாக நந்தகுமாரின் பிடி இன்னும் இறுகியது.அவன் கைகள் அவள் இடையில் அழுத்தமாக பதிந்து அவளை வளைத்துக் கொள்ள,அவன் ஸ்பரிசத்திலும், நெருக்கத்திலும் உடலில் கிளர்ந்த பல்வேறு உணர்ச்சிகளின் தாக்கத்தில் ராதாவின் மேனியில் ஹைவோல்டெஜ் மின்சாரம் பாய்ந்து உடல் சிலிர்த்து நடுங்கியது.

"நான் கேட்டதுக்கு பதில் சொல்லலையே ராதா.பூனைனா உனக்கு பயமா?"

என்றுமில்லாத விதமாக அவன் பெயர் சொல்லி உரிமையுடன் ஒருமையில் அழைத்தது ராதாவிற்கு பிடித்திருந்தாலும், எந்த உரிமையில் பெயர் சொல்லி பேசுகிறார் என்ற சிணுங்கலும் மனதில் எழாமல் இல்லை.

பதில் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்தவளின் மேனி இளந்தளிரென சிலிர்க்க, நந்தகுமார் அவள் காதருகே கிசுகிசுத்தான்.

"அதான் பூனை போய்டுச்சே. இன்னும் என்ன பயம்? யார்கிட்ட பயம்?"

"நீங்க இன்னும் போகலியே?"

ராதாவின் குரலும் நடுங்கியது.

"மை குட்நெஸ் ! என் கிட்டயா பயப்படறே? நான் ரொம்ப நல்லவன் ராதா. எங்கம்மா கிட்ட கேட்டுப் பாரு. என்னை மாதிரி நல்ல பிள்ளை இந்த உலகத்தில் இனிமேல் பிறந்தால் தான் உண்டுனு சத்தியமே பண்ணுவா. ஐ ஹாவ் வெரி க்ளீன் ரெக்கார்ட்ஸ் யு நோ…."

"ஓகோ இப்படி தன்னை தானே புகழ்ந்துக்கறது தான் நல்ல பிள்ளைக்கான லட்சணமா?"

பேசியது தான் தானா என்று ராதாவிற்கே புரியும் முன் அவன் கண்களில் மின்னல் வெட்ட, அவள் வெகு சகஜமாய் பேசியதற்காக அவன் சந்தோஷப்படுவது புரிய, ராதா தன்னியல்பாய் உதட்டைக் கடித்துக் கொண்டு அவனை ஏறிட்டாள்.

நந்தகுமாரின் பார்வை இப்போது அவள் உதட்டில் பதியவும், அன்றொரு நாள் ஜானகி சொன்னது நினைவிற்கு வந்து தொலைத்தது.

'நீ இப்படி உதட்டை கடிச்சுக்கறப்ப பொம்பளை எனக்கே உன்னை கிஸ் பண்ணத் தோணும் .டாக்டர்க்கு எப்படியெல்லாம் தோணும்னு நெனச்சுப் பாரு…'

அந்த நினைப்பே கன்னம் சிவக்க வைத்தது. அந்த அரையிருட்டும், ஆளில்லாத தனிமையும்,அருகிலிருந்த ராதாவின் அழகும், சிவந்த இதழ்களில் வெண்முத்துக்களாய் பற்கள் பதிந்திருக்க, வெட்கத்துடன் அவள் நின்ற கோலமும் நந்தகுமாரை நிலை தடுமாற வைத்தன.ராதாவின் அருகாமை அவன் இளமையை வெகுவாக சோதித்தது.

"யூ ஆர் இன்வைடிங் மீ ராதா…"

கண்கள் மயங்க, கிறக்கத்துடன் ஆங்கிலத்தில் அவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரியாதவளா ராதா….

அவன் பார்வையிலும் பேச்சிலும் இருந்த தாபம் புரிந்து அவசரமாக தலை குனிய, அவள் தலை அடைக்கலம் புகுந்த இடம் அவன் நெஞ்சமாக இருந்தது. பதட்டத்துடன் நிமிர்ந்தவளை தன் தோளில் சாய்த்து கொண்டான் நந்தகுமார்.

"ப்ளீஸ்..என்னை விட்டுடுங்க…"

பலகீனமாய் முனகியவளின் முகம் தொட்டு நிமிர்த்தியவன், மெதுவாக கேட்டான்.

"டூ யூ லவ் மீ ராதா?"

அவளிடம் பதிலில்லை.அவள் பதிலை எதிர்பார்க்காமலேயே பேசினான்.

"நான் உன்னை விரும்பறேன் ராதா.உனக்காக தான் இந்த வீட்டுக்கே குடி வந்தேன். உன்னை கல்யாணம் பண்ணிக்கவும் ஆசைப்படறேன்.உன் சம்மதத்தை நான் தெரிஞ்சுக்கலாமா? ப்ளீஸ்.."

இந்த நேரடி தாக்குதலை ராதா சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. அவள் பதில் சொல்லாமல் அவன் தன் பிடியை விடுவதாகவும் இல்லை

சங்கடமான சில நிமிடங்களின் மௌனத்திற்கு பின் ராதா மெதுவாக முணுமுணுத்தாள்.

"நான் மிகவும் அதிர்ஷ்டசாலி."

அவள் தலையுச்சியில் இதழ் பதித்த நந்தகுமார் மெதுவாக சொன்னான்.

"அதை நான்தான் சொல்லனும்.என் காதலியோட தயவும் கிடைச்சதுன்னா என்னை விட அதிர்ஷ்டசாலி வேற யாருமில்ல.."

அவன் வார்த்தைகளின் உள்ளர்த்தம் புரிந்து முகம் சிவந்தவளாய் அவள் மறுபடியும் உதட்டைக் கடித்து கொண்டாள்.நந்தகுமார் அந்த அழகில் வசீகரிக்கப்பட்டு அவள் முகம் நோக்கி குனிய, சட்டென்று தன் விரல்களால் அவன்உதட்டை மூடினாள் அவள்.

"ப்ளீஸ்…வேண்டாங்க. இது மட்டும் வேண்டாம்…"

"ப்ளீஸ் ராதா…இந்த ஒரு முறை மட்டும்"

விடாகண்டனிலும் கொடாக் கண்டனாக இருந்தான் அவன்.

"கிணத்து தண்ணிய ஆத்து வெள்ளமா கொண்டு போய்டும்? அவசரப்படாதிங்க ப்ளீஸ்…"

"பழமொழி சொல்ற நேரமா இது? அதான் எனக்கும் சேர்த்து நீ பொறுமையா இருக்கியே. போறாது…"

அவன் என்ன சொன்னான் என்று ராதா புரிந்து கொள்ளும் முன் தான் நினைத்ததை சாதித்து விட்டான் நந்தகுமார். அவள் அசந்திருந்த நேரம் பார்த்து அவள் இதழ்களை தன் உதடுகளால் அழுத்திக் கொண்டான்.

வெண்ணிலா நேரத்திலே வேணுகானம்

மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்…

பக்கத்து வீட்டு எஃப் எம்மிலிருந்து வந்த பாட்டு அவர்களிருவரின் நிலையை அப்படியே பிரதிபலிப்பதாய்.. ஆழிப் பேரலையொன்றில் அமிழ்ந்து போவதாய்…. மூச்சு முட்டும் நெருக்கத்தில், சத்தமில்லாத அந்த முத்தத்தில் ராதா சுத்தமாய் கரைந்து தான் போனாள்.

நந்தகுமார் அந்த ஆலிங்கனத்திற்குப் பின் அவளை விடுவித்த போது, ராதாவிற்கு உதடுகள் கன்றி சிவந்து போய் மூச்சு வாங்கியது.

"நந்தூ.."

கீழிருந்து தேவகி மட்டும் குரல் கொடுத்திருக்காவிடில், அன்று அந்த பால் பொழியும் வெண்ணிலா வீணே காய்ந்திருக்காது.
 
வீணையின் உச்சஸ்தாயிலும்,
மீனுவின் உபயத்தாலும்,
பூனையின் உபித்திரத்தாலும்,
தேனின் ருசி கண்டது உதடுகள் இன்று!!!!
 
உதட்டை கடித்து வைத்து
உள்ளத்தை உருக்கி இழுத்து
உன்னருகில் உருகி நிற்க
உனக்குள் உருவான காதலை
உன் கண்களில் கண்டேனே
உரைத்திடு பெண்ணே
உன் சம்மதத்ததை_ மீண்டும்
உயிர் பெரும் துணையே
உன் இதழ் முத்தத்தில்....
உருகி மருகி நிற்கும்
உடல்கள் இரண்டு உள்ளங்கள் ஒன்றாக...... 💐💐💐💐💐
நந்தனும்💕 ராதையும்
 
இலை மறை கனியாய் அழகான கவிதை. அறுபது வயதிலும் என்னை வெட்கப்பட வைத்த விந்தை.
ஐயோ! இப்போ எனக்கு வெட்கமாயிருக்கே!
 
உதட்டை கடித்து வைத்து
உள்ளத்தை உருக்கி இழுத்து
உன்னருகில் உருகி நிற்க
உனக்குள் உருவான காதலை
உன் கண்களில் கண்டேனே
உரைத்திடு பெண்ணே
உன் சம்மதத்ததை_ மீண்டும்
உயிர் பெரும் துணையே
உன் இதழ் முத்தத்தில்....
உருகி மருகி நிற்கும்
உடல்கள் இரண்டு உள்ளங்கள் ஒன்றாக...... 💐💐💐💐💐
நந்தனும்💕 ராதையும்
கவிதை கவிதை இந்த கவிதை சொல்லாததையா நான் சொல்லி விட்டேன்?😀
 
வீணையின் உச்சஸ்தாயிலும்,
மீனுவின் உபயத்தாலும்,
பூனையின் உபித்திரத்தாலும்,
தேனின் ருசி கண்டது உதடுகள் இன்று!!!!
அதெப்படிம்மா ஒரு முழு எபியை நாலே வரிகளில் நச்சென கவிதையாய் சொல்லிடறிங்க.AMAZING💖
 
Top