Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் அத்தியாயம் 24

Advertisement

parvathi

Active member
Member
Thanks to all readers for ur genuine support. Pls give ur feedbacks.

என் கதைகள் ஆடியோவில் கேட்க விருப்பப்பட்டால்@ BalaThiagarajanTamil Novels. utube. Com என்ற சேனலுக்கு வருகை தாருங்கள். Last BUT NOT THE LEAST PLS LIKE COMMENT SHARE N SUBSCRIBE



அத்தியாயம் 24

வாணலியில் காய வைத்திருந்த எண்ணெயில் தாளித சாமான்களை சேர்த்து பொரிய விட்டு வெங்காயம் தக்காளி தேங்காய் துருவல் போட்டு வதக்கினாள் காயத்ரி .பின் அடுப்பை அணைத்து விட்டு நெற்றிவியர்வையை முந்தானையால் துடைத்துக் கொண்டு வெளியே வந்தவள் ஹாலில் ஓரமாக அமர்ந்து முழங்காலில் முகம் புதைத்துக் கொண்டிருந்த ராதாவின் அருகில் சென்றாள்.



"என்ன ராதா காலங்கார்த்தால இப்படி உட்கார்ந்திருக்கே? எழுந்து குளிச்சு ட்ரஸ் பண்ணிக்கோம்மா போ.."



"ஏன் அவால்லாம் சாயரட்சை தானே வருவா.நான் இப்பவே ட்ரஸ் பண்ணின்டு அவாளுக்காக காத்திருக்கனுமா? "



ராதாவின் குரலில் எரிச்சல் அப்பட்டமாக தெரிய காயத்ரி சமாதானம் செய்தாள்.



"இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் கோவிச்சுண்டா எப்படி ராதா? பொண்ணா பிறந்தால் நாலு பேர் பொண்ணு பார்க்க வரத் தானே செய்வா?"



"வேண்டாம்.என்னை யாரும்பார்க்க வர வேண்டாம். அம்மா! ப்ளீஸ் உன்னை கெஞ்சிக் கேட்கறேன்.எனக்கு கல்யாணமே வேணாம் நான் இப்படியே இருந்துடறேன்."



ராதாவின் விழிகளில் கண்ணீர் குளமாய் தேங்கியது.



"சீ அசடு! நல்ல நாளும் அதுவுமா யாராவது அழுவாளா? ஒரு அஞ்சு நிமிஷம் வர்றவா முன்னால நிக்கறதுக்கு இந்த பயம் பயந்தேன்னா நீயெல்லாம் கல்யாணம் பண்ணி எப்படி குடித்தனம் நடத்த போற? அசடாட்டம் பேசாமல் எழுந்து ஆகற வேலையைப் பாரு ராதா. வர்றவா என்ன உனக்கு முன்ன பின்ன தெரியாதவாளா? வெங்கட்ராமன் ஊரிலேயே பெரிய மனுஷர் அவர் நம்ம ஆத்துல சம்பந்தம் பேச வர்றாருன்னா அது நம்ம அதிர்ஷ்டபாக்கியம். பாட்டி உன்னை சதா துக்கிரினு தூத்திண்டிருக்காளே

அவோ வாயை அடைக்கவாவது இந்த சம்பந்தம் நல்லபடியா தெகஞ்சு வந்துடனும்னு நான் அம்பாளை வேண்டின்டிருக்கேன்.நீ என்னடான்னா அசமஞ்சமாட்டம் பேசிண்டிருக்கே?"



காயத்ரி பெரிதாக அங்கலாய்த்தாள்.

ராதாவிற்கு புரொபஸர் வெங்கட்ராமனின் மீது மதிப்பும் மரியாதையும் இருந்ததென்னவோ வாஸ்தவம் தான்.ஆனால் தேனாய் இனித்தவர் என்று தன் மகனுக்காக அவளை பெண் பார்க்க வருவதாக சொல்லியனுப்பினாரோ அன்றே வேம்பாய் கசந்து விட்டார்.



"எனக்கு சுத்தமா பிடிக்கல.ஆனால் உனக்காக நின்னு தொலைக்கறேன். ஆனால் தானம் கொடுக்கற மாட்டை பல்லை பிடிச்சு பார்க்கற மாதிரி ஆடத் தெரியுமா பாடத் தெரியுமான்னெல்லாம் கேட்டா முகத்திலடிச்சா மாதிரி எதாவது பேசிடுவேன்.அதுக்காக என்னை குத்தம் சொல்ல கூடாது.சொல்லிட்டேன்."



"ஏண்டி உனக்குத் தான் நன்னா பாட வருமோன்னோ?அவா முன்னால ரெண்டு கீர்த்தனை பாடினா என்ன தப்பு?"



"முடியாதும்மா. அதான் இப்பவே உங்கிட்ட சொல்லி வைக்கிறேன்."



"என்னடீது வம்பு பண்றே? நீ பேசறதை பார்த்தால் இந்தகல்யாணம் நடக்க கூடாதுனு கங்கணம் கட்டிண்டு ஆகாத வேலை பாக்கறயோனு சந்தேகமா இருக்கே. உனக்கு இதில இஷ்டமில்லாத மாதிரின்னா பேசறே?"



"அதை நீ புரிஞ்சுண்டா சரி தான்."



வெடுக்கென்று பதில் சொல்லிவிட்டு ராதா விருட்டென்று எழுந்து போக காயத்ரி விக்கித்துப் போய் நின்றாள்.



'என்ன ஆயிற்று இந்த பெண்ணிற்கு? ஏன் இந்த துடுக்குத்தனம்? மாப்பிள்ளை பையனை பிடிக்கவில்லையோ? அதெப்படி மாப்பிள்ளையை அவள் இன்னும் பார்க்கவேயில்லையே.? ஒருவேளை காதல் கீதல்னு எதிலயாவது மாட்டிண்டிருக்காளோ? கடவுளே! நான் என்ன செய்வேன்?'



அடிவயிற்றை பயம் கவ்விபிடிக்க சிலையாக நின்ற காயத்ரியை உலுக்கினார் சுந்தரம்.



"என்னடி இது பிரமை பிடிச்ச மாதிரி நின்னுண்டிருக்கே? எனக்கே ரொம்ப டென்ஷனாத்தானிருக்கு. நம்மாத்துல நடக்கப் போற முதல் விசேஷம்.நன்னா எந்த குறையுமில்லாமல் நடக்கனுமேனு விசனமாயிருக்கு."



'ஐயோ! நீங்க தான்னா மாய்ஞ்சு போறேள்.உங்க பொண்ணு என்னடான்னா விட்டேத்தியா பேசிண்டிருக்கா.எனக்கு பயமாயிருக்கு…'



மனதின் புலம்பல் வெளியே வரும் முன் நிதானித்த காயத்ரி அடுக்களை காரியங்களை கவனிக்கச் சென்றாள்.



"அக்கா! இந்த சந்தியாவை பாரேன். என்னை அடிக்கறாக்கா.."



ஈரத்தலையை உதறி காய வைத்துக் கொண்டிருந்த ராதா கடைகுட்டி மீனுவின் புலம்பலில் திரும்பினாள்.



"நீ எதாவது விஷமம் பண்ணியிருப்பே.அதான் சந்தியா அடிச்சிருப்பா. அவகிட்ட வம்பு செய்யாதேன்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது மீனு?"



வழக்கமாய் சமாதானப்படுத்தும் ராதா இன்று எரிச்சலாக பேசவும் மீனு அழத் தோடங்கிவிட்டாள்.அப்பொழுது தான் தன் இயலாமையையும் எரிச்சலையும் சின்னப்பெண் மீனுவிடம் காட்டி விட்டது புரிய ராதா மீனுவை சமாதானப்படுத்த முற்பட்டாள்.



"அச்சோ! மீனுகுட்டி சாரிடா சந்தியா தானே அடிச்சா.அப்பா கிட்ட சொல்லி சந்தியாவை அடிக்க சொல்லலாமா?"



ப்ச்சு! வேண்டாங்கா.பாவம் சந்தியாக்கா அழுவா.பரவாயில்லை.விட்டுடலாம். "



நிமிஷத்தில் மன்னித்து மறந்து விடும் மீனுவின் குழந்தைமனம் தனக்கில்லையே என்று ஏங்கினாள் ராதா.

குழந்தையாக இருப்பதில் தான் எத்தனை சௌகரியங்கள்?

பெற்றோருக்கு பாரமாக இருக்கிறோமே என்ற கவலையில்லை.

பெண் பார்க்க வருபவர்களின் முன் காட்சிப்பொருளாக நிற்க வேண்டிய அவசியம் இல்லை.

முக்கியமாய் காதல் கீதல் என்று மாட்டிக் கொண்டு அவஸ்தைப்பட வேண்டியதில்லை.

பதின்பருவ வயதின் தொல்லைகள் இன்றி டாடீஸ் லிட்டில் ப்ரின்சஸாக ஹாயாக சலுகையுடன் சுற்றிவரக்கூடிய அந்த மழலை வயதிற்காக இப்பொழுது ஏங்கி என்ன புண்ணியம்?



"அக்கா! இங்க பாரேன்.இது மாடியாத்து டாக்டர் அங்கிளோட ஷர்டில்லையோ? இங்கே எப்படி வந்தது?"



மீனு சுட்டிக் காட்டிய இளநீல ஸ்லாக்கை கையிலெடுத்தபொழுது நந்தகுமாரையே ஸ்பரிசித்ததைப் போல் ஒரு பரவசம் ஏற்பட்டது.



"காற்றில் பறந்து வந்து கீழே விழுந்துடுச்சு போல.மாடிக்குப் போய் குடுத்துட்டு வரலாமா மீனு வர்றியா?"



ராதா கேட்ட வினாடியே குதித்துக் கொண்டு கிளம்பினாள் மீனு.



"போலாம்க்கா.நான் போய் அம்மா கிட்ட சொல்லிட்டு வந்துடறேன்…"



"ஐயோ! அம்மா கிட்ட எதுக்கு ….""



ராதா தடுப்பதற்குள் மீனு ஓடியே போய்விட்டாள்.சற்று நேரத்தில் கையில் எதையோ மறைத்து எடுத்துக் கொண்டு வந்தவள் "வாக்கா போகலாம் "என்று அழைத்தாள்.



"கையில என்ன மீனு? "



"ஒண்ணும் இல்லையே…"



"ஒண்ணுமில்லென்னா ஏன் பின்னாடி மறைச்சு வெச்சுக்கறே? சரி.அம்மா கிட்ட என்ன சொல்லிட்டு வந்தே? "



"மாடியாத்துக்கு அங்கிளை பார்க்க போறதா சொன்னேன்.அம்மா வேலையாயிருந்ததால வெறுமனே சரினு தலையாட்டினா."



"நானும் உன்கூட வர்றதா சொல்லலையா?"



"அச்சோ! சொல்லலையே.இப்போ வேணா போய் சொல்லிட்டு வந்துரவா?"



"ஐயோ! வேற வினையே வேண்டாம்.பேசாமல் வாயை மூடிண்டு வா."



ஞாபகமாய் உலர வைக்க வேண்டிய

துணிகளை எடுத்துக் கொண்டாள் ராதா.

அம்மாவோ பாட்டியோ கேட்டால் துணிகள் காய வைக்க மொட்டை மாடிக்கு போனதாக சொல்லலாமே..

காதல் வந்தால் கள்ளமும் மனதில் வந்து விடுகிற மாயம் தான் தெரியவில்லை.

மாடியேறியவர்கள் திறந்திருந்த வாசற்கதவின் முன் நின்று உள்ளே பார்க்க அங்கே ஹாலில் யாருமில்லை.



"மீனு !அங்கிளை கூப்பிடும்மா…"



மெதுவாக கிசுகிசுத்த ராதாவைத் தொடர்ந்து கிண்கிணிகுரலில் மீனு அங்கிள் என்று அழைக்க படுக்கையறை கதவு திறந்து இடுப்பில் சுற்றிய லுங்கியுடன் துவாலையால் தலையை துடைத்தபடி வந்தான் நந்தகுமார்.பரந்து விரிந்திருந்த வெற்று மார்பில் கருமையாக மண்டியிருந்த ரோமப்புதர்கள் அவனுடைய சிவந்த நிறத்தை மேலும் மெருகேற்ற ஆடவனின் இளமைக்கட்டான தேகத்தை அருகிலிருந்து பார்த்ததால் ஏற்பட்ட வெட்கத்தில் ராதா தன் பார்வையை திருப்பிக் கொள்ள நந்தகுமார் இளநகையுடன் அவசரமாய் அறைக்குள் சென்று ஸ்லாக்கை மாட்டிக் கொண்டு பட்டனை போட்டபடி வெளியே வந்தான்.



"என்ன மீனு திடீர் விசிட்?"



மீனுவிடம் கேட்டவன் ராதாவின் பார்வை தேவகியைத் தேடுவதை உணர்ந்து அவள் சுஜாவுடன் கோவிலுக்கு சென்றிருப்பதாக சொன்னவன் குறும்பாக ஒற்றை புருவத்தை உயர்த்தியபடி கேட்டான்.



"அம்மாவைப் பார்க்கவா ராதா மாடியேறி வந்தாய்?"



ராதா உதட்டை கடித்துக் கொண்டாள்.அவன் பார்வை அவள் உதட்டில் படியவும் அவசரமாய் முகத்தை திருப்பிக் கொண்டாள்.



"யூ ஆர் இன்வைடிங் மீ ராதா…."



மீனுவிற்கு கேட்காத ஹஸ்கி வாய்சில் அவன் இதைச் சொல்ல, ராதா வெட்கத்தில் கன்னம் சிவந்து போனாள்.



"இதுக்கெல்லாம் ஒண்ணும் குறைச்சலில்ல…."

முணுமுணுத்தவள் சட்டென்று சொன்னாள்.



"மீனு அங்கிள் கிட்ட ஷர்ட்டை கொடுத்துட்டு வா.போகலாம்.நாழியாச்சு…"



அக்கா நீட்டிய ஷர்டை வாங்கி நந்தகுமாரிடம் கொடுத்த மீனு தான் கையில் மறைத்து எடுத்து வந்திருந்த மைசூர்பாகு விள்ளையையும் நீட்டினாள்.



"ஓ! ஹௌவ் ஸ்வீட்? எனக்காக கொண்டு வந்தாயா மீனும்மா? ம் பரவாயில்ல உனக்காவது இந்த அங்கிள் மேல கரிசனம் இருக்கே!."



அவன் மறைமுகமாக ராதாவை குற்றம் சாட்ட, அவளோ மனம் குமுறினாள்.



'எனக்கு கரிசனமில்லையாமே! ஏன் இவருக்கு மட்டும் என்மீது கரிசனமிருக்கிறதா என்ன? அது இருந்திருந்தால் இப்படி அடுத்தவன் வந்து பெண் பார்க்கும்படி விட்டிருப்பாரா?'



"ஆத்துல என்ன விசேஷம் மீனு? ஸ்வீட் கொண்டு வந்திருக்கே?"



"ராதாக்காவுக்கு கல்யாணம் நடக்கப் போறதே உங்களுக்கு தெரியாதா? இன்னிக்கு அக்காவை பொண்ணு பார்க்க வர்றாளாம். அவாளுக்கெல்லாம் கொடுக்க அம்மா ஸ்வீட் பண்ணினா.நான் உங்களுக்கு கொஞ்சம் எடுத்து வந்தேன்."



நந்தகுமார் அதிர்ச்சியுடன் ராதாவை திரும்பிப் பார்த்தான்.அவளோ விழிகளில் கண்ணீர் தளும்ப தலைகுனிந்தாள்.



"அங்கிள்! எங்க ராதாக்கா கல்யாணத்துக்கு நீங்க அவசியம் வரனும்."



பெரிய மனுசி போல் பேசிய மீனுவின் கன்னத்தை செல்லமாய் தட்டினான் நந்தகுமார்.



"நிச்சயமா மீனு.நானிருந்தால் தான் உன் அக்காவுக்கு கல்யாணமே நடக்கும்."



அவன் பேச்சை புரிந்து கொள்ளும் வயசில்லை மீனுவிற்கு. புரிந்து கொண்ட ராதாவிற்கோ அனுபவிக்கும் மனசில்லை.

வினாடிகள் மௌனத்தில் கரைய கீழே காரொன்று வந்து நிற்கும் ஓசையில் கலைந்து நிமிர்ந்தாள் ராதா.



"வா மீனு போகலாம்."



அவர்கள் அவசரமாக கிளம்புவதற்குள் தேலகி சுஜாதா பின்தொடர வந்து விட்டாள்



"அடடே! ராதாவா! என்ன அதிசயமா வந்திருக்கே! இன்னிக்கு மழை தான் வரப்போறது …ஆமா இன்னிக்கு யாரோ உன்னை பொண்ணு பார்க்க வரப்போறதா உங்கம்மா சொன்னாளே.எப்போ வர்றா?"



ராதா பதில் சொல்லும்முன் சுஜாதா கூவினாள்.



"பாருங்கோம்மா இவளை! இவளுக்கு நானும் ஒரு சினேகிதினு தான் பேரு. ஆனால் என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னாளா பாருங்கோ.ஏண்டி ராதா என்கிட்ட மறைச்சே?"



"ஐயோ! மறைக்கனும்னெல்லாம் நினைக்கல சுஜா…மறந்து போச்சு.."



"அதுசரி கல்யாணத்துக்காவது மறக்காமல் கூப்பிடுவியா?"



புன்னகை என்ற பெயரில் உதட்டை பிரித்து காட்டிவிட்டு தலையசைத்தாள் ராதா.அதற்குள் உரிமைப்பட்டவள் போல் சுஜா சமையலறைக்குள் நுழைந்து காபியை கலந்து கொண்டு வந்து ராதாவிற்கு நீட்ட, தர்மசங்கடத்துடன் தயங்கினாள் ராதா.



"பார்த்தியா பேசிட்டேயிருந்ததில் உன்னை உபசரிக்கனும்னு கூட எனக்கு தோணல.ஆனால் சுஜா எள்ளுன்னா எண்ணெய்யா நிக்கறா.அவ்வளவு சமர்த்து சுறுசுறுப்பு…"



சுஜாவைப்பற்றி பேச ஆரம்பித்தால் லேசில் அம்மா ஓயமாட்டாள் என்று நந்தகுமாருக்கு தெரியும்.அதனாலேயே குறுக்கிட்டான்.



."அம்மா! என் ஷர்ட் உணத்தறப்போ க்ளிப் போடலையா நீ? காத்துல பறந்து கீழே விழுந்ததை கொடுக்க தான் அவங்க ரெண்டு பேரும் வந்தாங்க."



"அட! ஆமாம். க்ளிப் போட மறந்துட்டேன் போல.ரொம்ப தாங்ஸ்மா ராதா..சுஜா இந்த ஷர்டை உள்ளே கொண்டு வெச்சுடும்மா.."



சுஜாதா மிகவும் உரிமையுடன் சட்டையை உள்ளே எடுத்து செல்ல, ராதா ஓரவிழிப்பார்வையில் நந்தகுமாரை பார்க்க அவன் பார்வையிலோ தப்பாய் நினைத்து கொள்ளாதே ராதா ப்ளீஸ் என்ற கெஞ்சல் தெரிந்தது.

அதற்கு மேல் அங்கிருக்க மனமின்றி கிளம்பினாள் ராதா.
 
Top