Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் அத்தியாயம் 42

Advertisement

parvathi

Active member
Member
Thanks to all readers for ur genuine support. Pls give ur feedbacks.

என் கதைகள் ஆடியோவில் கேட்க விருப்பப்பட்டால்@ BalaThiagarajanTamil Novels. utube. Com என்ற சேனலுக்கு வருகை தாருங்கள். Last BUT NOT THE LEAST PLS LIKE COMMENT SHARE N SUBSCRIBE 🙏🏻


Sorry friends I have given the last ud a little bit later. Hope u all will enjoy reading. Waiting for ur comments eagerly.Pls inform me how many days this story should be in site. Tomorrow i will give the first epi of my most favourite story nenjukkul nee. Hope u will enjoy reading .Thanks to all of u for ur genuine support,



அத்தியாயம் 42

"எல்லாரையும் எதற்காக இங்கே வரவழைத்திருக்கேன்னு தெரியுமா? கேன் எனி ஒன் ஆஃப் யூ கெஸ் இட்?"



வெங்கட்ராமன் கணீரென்று தன் கம்பீரக் குரலில் கேட்க அருகில் நின்ற ஸ்ரீராம் தோள்களை குலுக்கினான்.சுந்தரம் ஆச்சரியமாகப் பார்த்தார்.நந்தகுமாரன் தீவிர யோசனையில் இருந்தான். ஜானகி காயத்ரி தேவகி மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.சந்தியாவும் பாலசந்தரும் அவர் சொல்லப் போவதை கேட்கும் ஆவலுடன் நின்றிருந்தனர். மோகனும் ரேகாவும் கூட விழிகளில் கேள்வியுடன் அவரை ஏறிட்டனர். ஏன் சற்றே கலங்கிய விழிகளுடன் நின்றிருந்த கௌரி கூட திகைப்புடன் அவரைத் திரும்பிப் பார்த்தாள்.ராதாவோ சலனமேயின்றி நின்றிருந்தாள்.. சுஜாதா ஒருத்தி மட்டுமே தனக்குத் தெரியும் என்று சொல்வது போல் புன்னகையுடன் நின்றிருந்தாள்.ஆனால் யாரும் வாய் திறந்து ஏதும் சொல்லவில்லை.



வெங்கட்ராமன் எதிரே நின்றிருந்த ராதாவைப் பாரத்தார்.

வெள்ளை காட்டன் புடவை.வெறுமையான நெற்றி.அழுது சிவந்த விழிகள்.துவண்ட அல்லி மலரென அவள் நின்றிருந்த கோலம் நெஞ்சை பிராண்டியது.



முதன்முதலில் கல்லூரியில் அவளைப் பாரத்தபொழுது அவர் மனதில் சுரந்த பாசமும் அன்பும் இன்று மேலும் கூடியிருக்கிறதே தவிர கிஞ்சித்தும் குறையவில்லை. ஆனால் எதிரில் இருப்பவள் தான் அன்று பார்த்த கல்லூரி மாணவியாய் கலகலப்பாய் இல்லை.



ஜடியல் ஸ்டூடன்டுக்கான பரிசைப் பெற மேடையேறிய ராதா,

கல்ச்சுரல்ஸில் சிற்றஞ்சிறுகாலே நின்னை சேவித்து என்று ஆண்டாள் பாசுரத்தை தேனினும் இனிய குரலில் பாடிய ராதா,

மணமேடையில் அவர் மகன் அருகே மணமகளாய் சர்வலங்காரத்துடன் அமர்ந்திருந்த ராதா,

எத்தனையோ சந்தர்ப்பங்களில் அவர் பார்த்திருந்த அத்தனை ராதாக்களும் மறைந்து போய், இப்பொழுது துவண்ட அல்லிமலரென எதிரில் நிற்பவள் மட்டுமே மனதில் விஸ்வரூபம் எடுக்க, அந்த காட்சியைக் காணச் சகிக்காதவராக கண்களை மூடிக் கொண்டார் வெங்கட்ராமன்.



'நோ! விடமாட்டேன்.யார் என்ன சொன்னாலும் சரி. ரோஜா மோட்டை மலர விடாமல் வாடி போக விடக் கூடாது.நான் சொல்லப் போவதை கேட்கும் பொறுமை இவர்களுக்கு இருக்குமா? கடவுளே! இவர்கள் அனைவரும் என்னை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.என்னுடன் ஒத்துழைக்க வேண்டும். தெய்வமே! நான் இதுவரை எதற்காகவும் உன்னிடம் வேண்டிக் கொண்டதில்லை.இப்போ வேண்டிக்கறேன்.நான் மனதில் நினைத்திருப்பதை நல்ல முறையில் நடத்தி வைக்க நீ தான் அருள் புரிய வேண்டும்.'



நீண்ட யோசனைக்குப்பின் நிதானமாக பேச ஆரம்பித்தார் வெங்கட்ராமன்.

"வெல்! நான் சொல்லப் போற விஷயம் கேட்டு நீங்கல்லாம் அதிர்ச்சியோ ஆத்திரமோ அடையக் கூடாது. ஆனால் கொஞ்சம் விவேகத்தோட சிந்திச்சுப் பார்க்கனும்.என் விருப்பத்தை ஏத்துக்கற பெருந்தன்மையான மனசை உங்களிடம் எதிர்பார்க்கிறேன். என் எதிர்பார்ப்பை கெடுத்துடமாட்டிங்கனு நம்பறேன்.நான் என்ன சொல்ல வர்றேன்னு யாருக்காவது புரியுதா? "



அவருடைய கேள்விக்கு ஒருவராவது பதில் சொல்ல வேண்டுமே! ஊகூம்….இதென்ன பீடிகை பலமாகயிருக்கிறதே என்ற திகைப்பு தான் அனைவரின் முகங்களிலும்.



வெங்கட்ராமன் மெதுவாகத் திரும்பி சுஜாதாவைப் பார்த்தார்.அவளோ புன்னகை மாறாமல் மேலே சொல்லுமாறு தலையசைத்தாள். வெங்கடராமன் இப்பொழுது சுந்தரத்திடம் திரும்பினார்.



"ராதா என் மருமகள்ன்ற முறையில் அவள் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படவும் முடிவெடுக்கவும் எனக்கு உரிமையிருக்குனு நெனைக்கிறேன்.நீங்க என்ன நெனைக்கறிங்க சுந்தரம்?"



"நிச்சயமா சம்பந்தி. உங்களுக்கில்லாத உரிமையா?"



"நன்றி.அப்படின்னா நான் ராதாவோட எதிர்காலம் நல்லாயிருக்க எடுக்கற எந்த முடிவுக்கும் நீங்க எல்லாரும் கட்டுப்படுவிங்க தானே?"



என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழித்த சுந்தரத்தை மேலும் அதிர்ச்சி அடைய வைத்தார் வெங்கட்ராமன்.



"நான் ராதாவுக்கு மறுமணம் செய்து வைக்க விரும்பறேன்.உங்களுக்கு ஆட்சேபனையில்லையே?"



சுந்தரத்தின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல், விருவிருவென்று தேவகியின் அருகில் சென்ற வெங்கட்ராமன் கைகளிரண்டையும் கூப்பி கெஞ்சும் குரலில் யாசித்தார்.



"ராதாவை உங்க மருமகளாக்கனும்ன்னு ஆசைப்படறேன். .அவளை ஏத்துப்பிங்களா அம்மா! என் ஆசையை நிறைவேற்றுவிங்களா? ப்ளீஸ்…."



"நோ!....மாமா……"

சலனமேயின்றி நின்றிருந்த ராதா இப்பொழுது வீறிட்டு அலறியபடி அவர் அருகில் வரப் பார்க்க, ரேகா அவளைத் தடுத்து ஆறுதலாய் அணைத்துக் கொண்டாள்.



"ஏ…ஏன் மாமா? நான் உங்களுக்கு பாரமாய் இருக்கறதா நெனச்சால் என்னை அம்மா வீட்டுக்கே அனுப்பிடலாமே.இந்த உலகத்தை விட்டே கூட போக தயாரா இருந்தவளை காப்பாற்றி மறுபடியும் எதற்கு இந்த விஷப்பரீட்சை? வேண்டாம் மாமா…..ப்ளீஸ்….வேண்டாம்…."



வாழ்க்கையில் அடி மேல் அடி வாங்கியதில் உணர்வுகள் மரத்து போய், காதால் கேட்ட விஷயத்தை ஜீரணிக்கும் சக்தியின்றி மனசும் உடலும் தள்ளாட மயங்கிச் சரிந்தாள் ராதா.



அவளை கைத்தாங்கலாய் பற்றி அறையினுள் அழைத்து சென்று படுக்கையில் கிடத்தி ரேகாவின் உதவியுடன் ஜானகி சிகிச்சையளிக்க,

வெளியே வெங்கட்ராமன் இன்னமும் தேவகியின் முன் இறைஞ்சலுடன் நின்றிருந்தார். தேவகி தர்மசங்கடமான மனநிலையில் திரும்பி தன் மகனைப் பார்த்தார்.ராதாவிற்கு திருமணமான நாள் முதல் மகன் படும் பாடு அவர் அறியாததில்லை.இன்னும் உண்மையை உடைத்துச் சொல்ல வேண்டும் என்றால் அம்மா பிள்ளைக்கிடையே பேச்சு வார்த்தை சுமுகமாக இல்லை என்பது தான் வாஸ்தவம்.



இதோ இந்த கணத்தில் உலகத்து ஏக்கத்தையெல்லாம் ஒன்று திரட்டி அம்மா இப்பொழுதாவது நல்லபதில் சொல்வாளா என்று ஆவலாதியாய் பார்த்து பார்வையாலேயே யாசித்துக் கொண்டிருக்கிறானே நந்தகுமாரன் அந்த நிமிடம் முடிவு செய்து விட்டாள் தேவகி.



ராதாவை தவிர வேறு பெண்ணை மணம் செய்ய மாட்டேன் உனக்கு மட்டும் மகனாய் இருந்து விட்டுப் போகிறேன் என்று சொன்ன வாக்கில் வீம்பாய் உறுதியாய் நிற்கும் மகனின் விருப்பத்திற்கு இணங்க ராதாவை தன் மருமகளாக்கிக் கொள்ள வெங்கட்ராமனிடம் மனப்பூர்வமாக சம்மதித்தாள் தேவகி.



"ஹூர்ரே! "

மகிழ்ச்சியில் ஸ்ரீராம் நண்பனைத் தூக்கி ஒரு சுற்று சுற்றி இறக்க, சுற்றியிருந்த

அனைவரின் மனதிலும் மகிழ்ச்சி மத்தளம் கொட்டியது.அனைவரும் நந்தகுமாரனுக்கு உளமாற வாழ்த்துக்களை தெரிவித்தபொழுது அவன் ஒதுங்கி நின்றிருந்த சுஜாதாவைப் பார்த்து முறுவலித்தான்.



அவனுக்குத் தெரியும். அவனையும் ராதாவையும் இணைக்க சுஜாதா எடுத்த முயற்சியின் பலன் தான் வெங்கட்ராமனின் விருப்பம் என்ற உண்மை அவனுக்கு மட்டுமே தெரியும். எல்லாம் சரிதான்.ராதா! முடிவு அவள் தானே எடுக்க வேண்டும் ?

என்ன செய்யப் போகிறாள்? ராதா என்ன செய்யப் போகிறாள்?



அக்னி ஜ்வாலை விட்டுக்கொண்டு எரிகிறது. அந்த தீக்கொழுந்துகளிடையே முரளியின் முகம் தெரிகிறது.

'வா.வா ராதா . என்னிடம் வந்து விடு '

என்று கை நீட்டி அழைக்கிறான் முரளி. ராதாவும் அவனை நோக்கி ஓரடி எடுத்து வைக்கிறாள்.ஆனால் பின்னாலிருந்து யாரோ இழுக்கவும் திரும்பிப் பார்க்கிறாள்.



'வேண்டாம் ராதா! என்னை விட்டுப் போய் விடாதே!....'

என்று நந்தகுமாரன் அங்கே கெஞ்சிக் கொண்டிருக்கிறான். ராதாவும் அவனிடம் வந்து விடத் தான் ஆசைப்படுகிறாள். ஆனால் முடியவில்லையே. முரளி அவளை பலமாக தன்னிடம் இழுக்கிறானே.



'நான் என்ன செய்வேன்? என்னால வர முடியலையே. எனக்கு பயமாயிருக்கே…'



.

அவளுக்கு பயமாக இருக்கிறது.பயம்…பயம்….

"அம்மா…."

தீனமாக முனகிக் கொண்டே திரும்பி படுத்தாள் ராதா. தலையில் எதையோ தூக்கி வைத்தாற் போல் பாரமாக கனத்தது. விழிகள் எரிந்தன. கஷ்டப்பட்டு கண்களை திறந்து பார்த்த பொழுது எதிரே வெங்கட்ராமன் தெரிந்தார்.அடுத்து நின்ற ஸ்ரீராம் நந்தகுமாரன் , சுந்தரம், காயத்ரி, ஜானகி, ரேகா அனைவருமே இப்பொழுது பார்வைக்கு புலப்பட, மெதுவாக எழுந்து அமர்ந்த ராதாவிற்கு அப்பொழுது தான் வெங்கட்ராமன் அவளுடைய மறுமணம் பற்றி பேசியதும் அவள் அதிர்ச்சியில் மயங்கி விழுந்ததும் நினைவிற்கு வர சப்தமில்லாமல் அவர் கைகளை பற்றிக் கொண்டு அழுதாள்.வெங்கட்ராமன் மருமகளின் தலையை பரிவுடன் வருடி விட்டார்.



"அழக்கூடாதும்மா ராதா. இனிமேல் நீ கண் கலங்கவே கூடாது. எனக்காகவும் என் மகனுக்காகவும் நீ அனுபவித்த கஷ்டங்கள் போதும் . இனிமேலாவது ஒரு நல்ல குடும்ப வாழ்க்கை உனக்கு அமையனும்னு நான் ஆசைப்படறதில் ஏதாவது தப்பிருக்கா சொல்லு…"



தழுதழுத்த குரலில் வெங்கட்ராமன் கேட்க, கண்ணீருடன் தலையசைத்தாள் ராதா.



"நீங்க ஆசைப்படறதில் தப்பில்ல மாமா. ஆனால் எனக்குத் தான் உங்க ஆசையை நிறைவேற்றும் தகுதியும் கொடுப்பினையும் இல்லை.வேண்டாம் மாமா.நடக்க முடியாத விஷயங்களுக்காக ஆசைப்படறதும் தப்பு தான்."



"ஏன்மா நடக்காது? ஏன் நடக்காதுன்னேன்? அதை நடத்தி வைக்க நாங்க எல்லாருமே தயாராயிருக்கறப்போ நீ மட்டும் ஏன்மா தயங்கறே? பயமா? நீ யார் கிட்டமா பயப்படறே? அடுத்தவர்களை வாழ விடாமல் வம்பு பேசறதை மட்டுமே பொழுதுபோக்காய் கருதும் அசட்டு ஜனங்களை நினைச்சு பயப்படறியா? இல்லே நம்ம சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு இது சரி வராதுனு நினைச்சு பயப்படறியா? சரிம்மா.நான் உன் வழிக்கே வர்றேன். சாஸ்திர சம்பிரதாயப்படி அம்மி மிதிச்சு அருந்ததி பார்த்து உன்னைக் கல்யாணம் பண்ணின்ட என் பிள்ளை முரளி அதை மதிச்சானா? கட்டின மனைவியை புருஷன் கொடுமைப்படுத்தலாம்னு எந்த சாஸ்திரமும் சொல்லலையேம்மா. ஆயுள் முழுவதும் துணையிருப்பதாகச் சொல்லித் தான் அக்னியை சுற்றி வந்து சங்கல்பம் பண்றாங்க தம்பதியர்.ஆனால் இந்த காலத்தில் எத்தனை பேர் அந்த சங்கல்பத்தை காப்பாத்தறாங்க? ஈகோ, வரட்டுப் பிடிவாதம், பொருளாதார சுதந்திரம் தர்ற ஆணவம், அசட்டு நம்பிக்கையில் விவாகரத்து பண்றவங்க மத்தியில் விதவை மறுமணம் ஒண்ணும் பெரிய விஷயமேயில்லை. நீ ஒண்ணும் நல்ல புருஷனுக்கு வாழ்க்கைப்படலே அவன் நினைவுகளே போதும்னு மிச்ச வாழ்நாளைக் கழிக்கறதுக்கு. உன்னைக் கூட்டிக் கொடுக்க நெனச்ச ஒரு கயவனுக்காக நீ கைம்பெண் ஆகனும்னு எந்த அவசியமும இல்லை. என்னம்மா திகைச்சுப் போய்ட்டே? மகன்னும் பார்க்காமல் முரளியை அதுவும் செத்துப் போனவனை நிந்திக்கிறேனேனு பார்க்கறியா? நான் வருத்தப்படறேன் ராதா.

இப்படியொரு பிள்ளையை பெத்துட்டோமேன்ற வருத்தத்தை விட அவனுக்கு பலிகடாவா உன்னை நேர்ந்து விட்ட குற்ற உணர்ச்சி தான் என்னை இப்ப கொல்லாமல் கொல்லுது. அவன் இராவணன்னு தெரிஞ்சிருந்தும் இராமனா நீ மாற்றுவாய்ன்ற தவறான நம்பிக்கையில் உன்னை பலி கொடுத்துட்டேன்மா. தவறு செய்தவன் தானே அதை சரி பண்ணனும். இப்போ அந்த தப்பை சரி செய்ய சந்தர்ப்பம் கிடைச்சிருக்குனு சந்தோஷப்படற நேரத்தில், உன்னோட வீண் பயங்களால அதை நீ கெடுத்துடாதம்மா.ப்ளீஸ்….நல்லா யோசிச்சுப் பாரும்மா…நல்ல புருஷனோட மகிழ்ச்சியான மணவாழ்க்கை வாழ்ந்து விதவையானவங்களே துணை வேண்டி மறுமணம் செய்துக்கற காலமிது.

இதில ஒரு காட்டுமிராண்டியை கணவனாக அடைந்து அடி உதையைத் தவிர வேறு எந்த சுகமும் அறியாத நீ ஏன்மா மறுமணம் செய்துக்க கூடாது?"



வெங்கட்ராமனின் உணர்ச்சிகரமான பேச்சில் பார்வையாளர்களாய் நின்றிருந்தவர்கள் மெய் சிலிர்த்துப் போனார்கள். உரக்க கைதட்டி பாராட்ட நினைத்த தன் உணர்வுகளை ஸ்ரீராம் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான்.



ஆனால் மாமனாரின் பேச்சில் கன்வின்ஸாக வேண்டிய ராதாவோ, அதுவரையில் ஒன்றுமே பேசாமல் ஓரமாக ஒதுங்கி நின்றிருந்த மீனாட்சி பாட்டியிடம் ஓடினாள். பாட்டியின் கைகளைப் பற்றிக் கொண்டு நெஞ்சே வெடித்து விடும் போல கதறினாள்.



"பாட்டீ! நீ சொன்ன மாதிரியே நான் அதிர்ஷ்டம் கெட்டவள் தான்னு இப்போ புரிஞ்சுண்டேன். பூவையும் பொட்டையும் இழந்தவளுக்கு மறுபடியும் மாமா பூச்சூட ஆசைப்படறார். தாலிபாக்கியம் நிலலக்காத துக்கிரி நான்னு நீயாவது அவருக்கு எடுத்துச் சொல்லு பாட்டி. ப்ளீஸ்… இந்த மூதேவிக்கு மறுமணம் செய்தாலும் புண்ணியமில்லேனு நீயாவது அவருக்கு எடுத்து சொல்லு.சொல்லு பாட்டீ…"

பைத்தியம் பிடித்தவளைப் போல உலுக்கிய ராதாவை தடுத்து அணைத்துக் கொண்டாள் மீனாட்சி பாட்டி.



கருங்கல்லிலும் ஈரம் கசியுமோ?

இது என்ன விந்தை?

மீனாட்சி பாட்டியின் விழிகளில் சுரந்த கண்ணீர் அவருடைய வயதான சுருங்கிய கன்னங்களில் சரசரவென இறங்கியது.



"பாட்டீ! நீயாவது சொல்லு நான் துக்கிரிப் பொண்ணுனு….."

விம்மிய ராதாவின் வாயை அவள் மேற்கொண்டு ஏதும் பேசும் முன் பொத்திய

மீனாட்சி பாட்டியின் உதடுகள் துடித்தன.



"அடியம்மா! இன்னொரு தரம் அந்த வார்த்தையைச் சொல்லாதே. நான் பாவிம்மா! மகாபாவி! என் வாயே என் பேத்தி வாழ்க்கைக்கு சத்ருவாப் போயிடும்னு நான் நினைக்கவேயில்லடிம்மா . தங்கமே! என்னை மன்னிச்சுடு .நாம என்ன பேசினாலும் நம்மைச் சுற்றியுள்ள தேவகணங்கள் ததாஸ்துனு ஆசிர்வதிச்சுடும் அதனால நாம நல்லதை மட்டுமே பேசனும்னு பெரியவா சொல்லியிருக்கா தான் ஆனால் கிறுக்கு பிடிச்ச என் புத்திக்கு அது விளங்கலையே அதனால் தான் நான் தகாததைப் பேசி தப்பு பண்ணிட்டேன். நான் தான் பாவி.மகாபாவி. நான் மனசார சேவிக்கற அந்த லோகமாதாவே என்னை மன்னிக்க மாட்டாள். அந்த தெய்வம் என்னை ஊமையாகப் படைச்சிருக்கப்படாதோ? எனக்கு வாயைக் கொடுத்து இப்படி என் பேத்தி வாழ்க்கையை வஞ்சிச்சுடுத்தே. தப்ப பண்ணிட்டேன்டி கொழந்தே. நான் தப்புத் தான் பண்ணிட்டேன்…"



சதா சர்வகாலமும் மூதேவி துக்கிரி என்று கரித்துக் கொட்டும் பாட்டி, அன்பாய் கரிசனமாய் அவளை ஒரு நாளில் கூட அழைக்காத பாட்டி, இப்பொழுது ராதாவிற்காக ஒரேயடியாக மாய்ந்து போய் துக்கம் கொண்டாடுகிறாள்.



குழந்தே! தங்கமே! என்று வாய் நிறைய அழைக்கிறாள்.

தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்று பெற்ற பாசத்திற்கு விளக்கம் சொல்வார்களே.அது தானா இது?

இல்லை தனக்கேற்பட்ட விதவைகோலம் பேத்திக்கும் வந்து விட்டதே என்ற பரிதாபமா ?

அதுவும் இல்லையென்றால் தன் வாயால் தான் பேத்தியின் வாழ்க்கை கெட்டதோ என்ற குற்ற உணர்ச்சியா?

எதுவானால் தான் என்ன?

மீனாட்சிபாட்டி மனம் மாறியது நிஜம்.



"அம்மாடி ராதா! இந்த வெள்ளைப்புடவையும் கருமாந்திரமும் என்னோட தொலையட்டும். உனக்கும் வேண்டாம்டிம்மா குழந்தே! உன் மாமனார் சொல்றது தான் நல்லதுனு நேக்கும் படறது.

அம்மாடி காயத்ரி! குங்குமச்சிமிழ் இருந்தால் கொண்டு வா. குழந்தே நெத்திக்கு இட்டுக்காமல் இருக்கறது பார்த்தால் எனக்கு மனசு தாங்கலே…."



காயத்ரி முகமெல்லாம் மலர குங்குமச்சிமிழைக் கொண்டு வந்து கொடுக்கவும், பாட்டி ராதாவை அழைத்துக் கொண்டு நந்தகுமாரனிடம் வருகிறாள்.



"அம்பி! நீயாவது எங்காத்து பொண்ணை கண்கலங்காமல் நன்னா வெச்சுக்கோப்பா.நேக்கு வேற ஒண்ணும் சொல்லத் தெரியல. நீங்க ரெண்டு பேரும் தீர்க்காயுசா ஒற்றுமையா சந்தோஷமான தம்பதிகளா இருக்கனும் . இந்த குங்குமத்தை நீயே என் பேத்தி நெத்தியில இட்டு விடு மகராசனா இருப்பே! "



வாயார மனசார வாழ்த்துகிறாள் மீனாட்சி பாட்டி.

நந்தகுமாரன் விரல் சற்றே நடுங்க ராதாவின் நெற்றியில் பொட்டிடுகிறான். பின் அவர்கள் இருவரும் பாட்டியின் காலில் விழுந்து சாஷ்டாங்கமாக வணங்கி எழுந்த பொழுது அவரின் நாவிலிருந்து வார்த்தைகள் தென்றலாய் தவழ்ந்து வந்து அவர்களை ஆசிர்வதித்தன.



"தீர்க்க சுமங்கலி பவ! தீர்க்காயுஷ்மான் பவ! "

ஓ! இது போதுமே! பாட்டியின் வாழ்த்துக்கள் அந்த தம்பதியரை வரமாய் வாழ வைக்கும்.

சுபம்.
 
Top