Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூவாசம் மேனி வீசுதம்மா - 1

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
பூவாசம் மேனி வீசுதம்மா – 1

“ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா..
நாங்க எண்ணி வந்த வரம் கொடுக்க – வாருமம்மா..”

என்று பாடல் ஒலித்துக்கொண்டு இருக்க, தோப்புப்பட்டி, கம்மாய் ஓரத்தில் இருக்கும் மாரியம்மன் கோவலில் பெண்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

அன்று வெளிக்கிழமை. நிறைந்த பௌர்ணமி வேறு. அக்கிராமத்தின் ஐதீகம், பௌர்ணமி என்றெல்லாம் வெள்ளிக் கிழமையில் வருகிறதோ அன்றெல்லாம், மாரியம்மனுக்கு மஞ்சள் பால் அபிஷேகம் செய்தால், அக்கிராமத்திற்கே நல்லது வந்து சேரும் என்று.

பல வருடங்களாய் இதை தங்கள் வாழ்வோடு, அங்கிருக்கும் மக்கள் பழக்கப் படுத்திக்கொண்டனர்.

தோப்புப்பட்டி – அழகிய மலை அடிவார கிராமம். குக்கிராமம் என்றெல்லாம் சொல்லிட முடியாது. பேருந்து வசதிகள், படித்தவர்கள் என்று இருக்கும் கிராமமே. அப்பா அம்மா எல்லாம் நிலபுலன் விவசாயம் பார்த்தால், அவர்களின் பிள்ளைகள் ஓரளவேனும் படித்து, பக்கத்து டவுனில் இருக்கும் மில்லில் ஒரு வேலையில் இருந்தனர்.

அப்படி இளையத் தலைமுறைகள் வீட்டில் ஒருவரேனும் வேலையில் இருக்கக் காரணம், கமலக்கண்ணன். அவன்தான் பக்கத்து டவுனில் இருக்கும் மில்லில் மேனேஜர்.

ஆக கிராமத்தில் யார் வந்து “கண்ணா.. எப்படியோ காலேஜு முடிச்சுப்புட்டான்.. ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்ணித்தாயேன்..” என்று கேட்டால்,

“நாளைக்கு வந்து மில்லுல பாக்க சொல்லுக்கா..” என்றுவிட்டு போவான்.

சொன்னதுபோல் வேலையும் ஏற்பாடு செய்து கொடுத்திடுவான். அப்படி இங்க இல்லை என்றாலும், அவர்களின் மில் வேறு எங்கெங்கு இருக்கிறதோ அப்படியே அங்கே யாரையேனும் பிடித்து ஒருவேலையில் அமர வைத்துவிடுவான்.

ஆகையால் ஊருக்குள் கமலக்கண்ணனுக்கு, நல்ல பெயர் மட்டுமல்ல, அவன்மீது ஒரு தனிப்பட்ட மரியாதையும்.

இளவட்டங்கள் கூட “அண்ணா...” என்று பாசமாகவும், மரியாதையாகவும் தான் அழைப்பர். எது என்றாலும், அவன் முன்னே போய் நின்றிடுவார்.

‘காட் ஃபாதர்’ போல இவன் அங்கே ‘காட் ப்ரதர்...’

“ஏன்டா சண்டைப் போட்டு மண்டை உடைச்சிட்டு வந்து என் முன்னாடி நிக்கிறீங்க.. நான் என்ன டாக்டரா இல்லை நாட்டாமையா..” என்று சிடு சிடுத்தாலும், பின் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பான்.

அன்றும் அப்படித்தான் யாரோ நால்வர் மல்லுக்கட்டி, ஒருவனுக்கு கையில் ரத்தக் காயம். கமலக்கண்ணன் வேலைக்குக் கிளம்பிக்கொண்டு இருக்க, “அண்ணா...!!” என்று வாசலில் அழைப்புக் கேட்டது.

அவன் எழுந்து வந்து பார்க்கும் முன்னமே “என்னடா.. என்னாச்சு??” என்று வாசலில் சத்தம் கேட்டது. முருகேஸ்வரி தான் விசாரித்துக்கொண்டு இருந்தார். கண்ணனின் அம்மா.

“இல்ல பெரிம்மா...” என்று வந்தவர்கள் விளக்கம் சொல்லத் தொடங்க,

“அதானே பார்த்தேன்.. சண்டை போடுறது நீங்க. வைத்தியம் பாக்கணும்னா என் மகன் கிட்ட வரணுமா. அவன்கிட்ட காசு இல்லை.. வெள்ளிக்கிழமை அதுவுமா வர்றானுங்க.. ரத்தம் வழிய... ஓடிருங்க..” என்றபடி, அம்மா திரும்பவும் வீட்டினுள் வருவது தெரிந்தது.

கண்ணன் காது கேளாதது போல் இருந்துகொண்டான்.. என்னவென்று கேட்டால், ‘எல்லாம் நீ கொடுக்குற இடம்...’ என்று அவனையும் ஒரு பிடி பிடிப்பார்.

பேசாமல் கிளம்பியவன் “ம்மா நான் போயிட்டு வர்றேன்..” என்று சத்தமாகச் சொல்ல, வாசலில் இருந்த நால்வர் அப்போது இல்லை.

உள்ளிருந்து முருகேஸ்வரி மீண்டும் வெளி வந்தவர், வாசலில் நின்று சுற்றிமுற்றி பார்த்துவிட்டு “கண்ணா.. இப்பவும் சொல்றேன்.. அந்த பயலுக எங்கனையாவது நிப்பானுங்க.. பணம் கொடுத்த அவ்வளோதான்...” என,

“சரிம்மா.. எனக்கென்ன தெரியாதா...” என்று தன்மையாகவே சொல்ல,

“ம்ம்ம்... போறப்போ உங்கய்யா தோட்டத்துல இருந்தா ஒரு சத்தம் கொடுத்துட்டுப் போ.. அவர் வரவும் தான் கோவிலுக்குப் போகணும்.....” என்ற அம்மாவிடம், சரி சரி என்றுசொல்லி கண்ணன், தன் பல்சரை கிளப்பிக்கொண்டு வெளி கேட் தாண்டுகையில்,

“என்ன கண்ணா கிளம்பியாச்சா...” என்றபடி வந்தாள் பக்கத்து வீட்டு முத்தரசி.

“ஆமாக்கா..” என்று அவன் சொல்வதற்குள், “அக்காக்கு இதை மட்டும் பாத்துக்குடு கண்ணா.. சித்திக்கிட்ட கணக்கு சொல்றதுக்குள்ள மண்டை ஒடையுது..” என்று ஒரு சீட்டு நோட்டினை நீட்ட, கண்ணன் ஏகத்துக்கும் முறைத்தான்.

“முறைக்காத ராசா.. நான் என்ன செய்ய.. இத்தனை வருசமா நானும் சீட்டுப் போடுறேன்.. உங்கம்மாவும் சீட்டு வாங்குது... ஆனா இந்த கணக்கு மட்டும் புரியல...” என்று தலையை சொரிய,

“அதுக்கு.. நான் கிளம்புற நேரம்தான் வரணுமா..” என்றான் உர்ரென்று.

“பார்த்துக்குடு கண்ணு..” என்று முத்தரசி இன்னமும் இளித்துக்கொண்டு நிற்க, “இப்போ முடியாது..” என்றுசொல்லி, அப்படியே பல்சரை சர்ரென்று கிளம்பிக்கொண்டு சென்றுவிட்டான்.

தயவு, தாட்சண்யம் எல்லாம் எங்கே யாரிடம் காட்டிட வேண்டுமோ அங்கே மட்டும் தான் காட்டுவான். உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு கண்டிப்பாய் செய்வான். ஆனால் உதவி என்கிற பெயரில் தன்னைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தால், இதோ இப்படித்தான் யாரென்றும் பாராது முகத்தினில் அடித்தமாதிரி தான் பதில் வரும், இல்லை என்றால் நகர்ந்துவிடுவான்.

கமலக்கண்ணன், செல்லவுமே, “பாரு சித்தி எப்படி போறான்னு..” என்று முத்தரசி கேட்டபடி வர,

“உனக்கு நல்லா வேணும்... நானும் பொழுதன்னைக்கும் சொல்றேன்.. அவன் கிளம்புறப்போ வந்து நிக்காதன்னு..” என்று அவரும் சொல்ல,

“அப்போ ஒன்னு நீயாவது எனக்கு புரியுற மாதிரி சீட்டு கணக்கு சொல்லு..” என,

“அடி போடி.. சீட்டு போடுறாளாம் சீட்டு.. இந்த கணக்கே உனக்குத் தெரியலைன்னா.. நான் அம்பது நூறு கம்மி பண்ணி காசு கொடுத்தா என்ன டி செய்வ..??” என்று முருகேஸ்வரியும் கேட்க,

“ஆ..!!! அந்த அம்பது நூற வச்சுதான் நீ மச்சு வீடு கட்டப் போற.. போ சித்தி...” என்றவள், “இந்தா இதுல இந்த மாசம் சீட்டுக்காசு இருக்கு.. நீயே கணக்கு எழுதி வை...” என்றுவிட்டு, முருகேஸ்வரி சொல்ல சொல்ல அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.

முருகேஸ்வரி முனங்கியபடி வீட்டினுள் செல்ல, கமலக்கண்ணன், அவர்களின் திராட்சை தோட்டத்திற்கு முன் வண்டியை நிறுத்த, இவனின் வண்டிச் சத்தம் கேட்டதுமே, அவனின் அப்பா, சந்திரபாண்டி உள்ளிருந்து வெளிய வந்துவிட்டார். அவரும் வீட்டிற்குத்தான் கிளம்பிக்கொண்டு இருப்பார் போலும்.

“என்ன கண்ணா...” என்றபடி வர,

“அம்மா வர சொல்லுச்சுப்பா..” என்றவன், அப்படியே நிற்க, “என்னடா எதுவும் விசயமா..??” என்றார்.

“ஒண்ணுமில்ல..” என்று தலையை மறுப்பாய் ஆட்டியவன், மீண்டும் பல்சரைக் கிளப்ப, சந்திரபாண்டி நின்று பார்த்துகொண்டு தான் இருந்தார்.

என்னவோ இப்போதெல்லாம் மகன் தன்னோடு முகம் கொடுத்து சரியாய் பேசுவதில்லையோ என்று பட்டது அவருக்கு. நிஜமும் கூட அதுதான். அவரே என்னவென்று கேட்டாலும், அவன் இதோ இப்போது சொன்னதுபோல் ஒன்றுமில்லை என்றுதான் சொல்லிச் செல்கிறான்.

“என்னன்னு சொன்னாதானே தெரியும்...” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டவர்,

“ஏலேய் மாரி... பெட்டில எல்லாம் அடுக்கி வையி.. சாப்புட்டு வந்திடுறேன்..” என்று சொல்லியபடி நடந்து போனார்.

சந்திரபாண்டிக்கு இந்தத் திராட்சை தோட்டம் தான் எல்லாமே. குடும்பம் எல்லாம் அதன் பின்னர்தான். மிக மிக கௌரவம் பார்க்கும் மனிதர். தோட்டத்திற்கு வந்தால், மற்றது எல்லாம் மறந்து போகும். என்னதான் சோளக்காடு, தென்னந்தோப்பு என்று இருந்தாலும், அவருக்கு இந்த திராட்சை தோட்டத்தின் மீது அலாதி பிரியம். பொழுது விடிந்து, பொழுது சாயும் வரைக்கும் முக்கால்வாசி நேரம் இங்கேதான் இருப்பார்.

கமலக்கண்ணன் என்னதான் மில்லில் வேலை என்றாலும், அவனுக்கும் நேரம் கிடைக்கும் போதேல்லாமும், பின் வார இறுதி நாட்களிலும் அவனுமே இந்த விவசாயம் தான். படித்திருக்கிறோம் என்றெல்லாம் பார்த்திடவே மாட்டான். இறங்கி ஆட்களோடு ஆட்களாய் வேலையில் நிற்ப்பான்..

சும்மாவே ஆள் ஆஜானுபாகு தான். இதில் வேலைகள் செய்து செய்து, பார்க்கவே அப்படியொரு அம்சமாய் இருக்கும். அதிலும் அவன் தினமும் வேலைக்குக் கிளம்பிச் செல்லும் அழகினைப் பார்த்து முருகேஸ்வரி பூரித்துப் போவார்.

‘எம்மவன் ராசாவாட்டம் இருக்கான்... குணமாவும் இருக்கான்..’ என்று அடிக்கடி தனக்குத்தானே வேறு சொல்லிக்கொள்வார்.
கமலக்கண்ணனை காலையில் காண வந்திருந்த அந்த நால்வரும், அவனுக்காக காத்திருக்க, சரியாய் அவனும் அங்கே சென்று வண்டியை நிறுத்தினான்.

டீ கடை... அப்படித்தான் அங்கிருக்கும் அனைவரும் சொல்வர். ஆனால் தோப்புப்பட்டியின் ஒரே ஒரு வியாபார ஸ்தாபனம். டீ, காபி கடையும் அதுவே. வடை போண்டா வகையறாக்கள் கடையும் அதுவே. பெட்டிக்கடையும் அதுவே. உணவு விடுதியும் அதுவே. காய்கறி கடையும் அதுவே..

அதன் உரிமையாளர் செல்லப்பாண்டி, ஒருவகையில் கண்ணனுக்கு மாமா முறை. அங்கே சென்று வண்டியை நிறுத்தியவன், இறங்காது “என்னங்கடா பிரச்சனை..” என்று பசங்களிடம் கேட்க,

“ண்ணா பிரச்சனை எல்லாம் ஒண்ணுமில்லன்னா.. இவன் லேசாத்தான் தள்ளுனான்.. நான்தான் பொத்துன்னு விழுந்துட்டேன்...” என்று காயம் பட்டவனே சொல்ல,

“நல்லா சாப்பிடனும்... இல்லன்னா இப்படித்தான்..” என்றவன், “இந்தாங்க.. என்ன வேணுமோ வாங்கிச் சாப்பிட்டு, டாக்டர போய் பாருங்க..” என்று இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை நீட்ட,

“தேங்க்ஸ் ண்ணா...” என்றனர் அவர்களும்

“பள்ளிக்கூடம் ஒழுங்கா போறதில்ல.. தேங்க்ஸ்ண்ணாவாம்... அடுத்து இப்படி சண்டை போட்டு வந்தா தொலைச்சி கட்டிடுவேன்..” என்று மிரட்டியவன் பார்த்த பார்வையில் அவர்களுமே சற்று அடங்கித்தான் போயினர்.

“ம்ம்..” என்றபடி, மீண்டும் வண்டியை கிளப்ப, கடையினுள் இருந்த செல்லப்பாண்டியோ, ஒருவார்த்தை அவனோடு பேசிடவில்லை. அவனுமே அப்படிதான்.. ‘என்ன மாமா..’ என்றுகூட கேட்டிடவில்லை.

இருந்தும் கண்ணனுக்கு மனதில் என்னவோபோல் இருக்க, பைக் கண்ணாடி வழியே பின்னே பார்க்க, அவள் வந்துகொண்டு இருந்தாள், அவள் கஸ்தூரி..

செல்லப்பாண்டியின் மகள். தோப்புப்பட்டியின் பேரழகி.. அப்படித்தான் அனைவரும் சொல்வர். அது நிஜமும் கூட.

இந்த கிராமத்தில் இப்படி ஒருத்தியா??!!

பைக்கின் வேகம் தன்னப்போல் குறைந்திட, சற்று தள்ளிப்போய் நின்றேவிட்டான் கண்ணன்.

‘வரட்டும் இன்னிக்கு இவ..’ என்று இதழ்கள் முனுமுனுக்க, கஸ்தூரியோ “யப்பா.. இந்தா சாவி.. கோயிலுக்குப் போறேன்...” என்று வீட்டு சாவியினைக் கொடுக்க,

“ம்ம் போனோமா வந்தோமான்னு வரணும்..” என்றார் செல்லப்பாண்டி ஒரு கண்டிப்புக் குரலில்..
அடர் சிகப்பு நிற சேலை, அவளுக்குத் தூக்கி அடித்தது. சந்தன நிறம்தான். நெளி நெளியான கூந்தல், இடை வரை இல்லையெனிலும், அடர்த்தியாய் இருக்கும். சிகப்பு நிற சாந்து பொட்டு மட்டுமே அவளின் முகத்தினில். தலையில் சிறிது கனகாம்பரம் வைத்திருந்தாள்.

அவ்வளவே.. வேறெதுவும் இல்லை. ஆனால் அதுவே அவளின் பொழிவினை ஏற்றிக்காட்டியது. அலங்காரம் என்றில்லை, கிழிசல் கட்டினால் கூட கஸ்தூரி அழகியாய்த்தான் தெரிவாள். ஒருசிலருக்குத் தோற்றம் அப்படியிருக்கும்.

நிறம் மங்கிய ஆடைகள் உடுத்தினாலும், அவர்கள் பளிச்சிடுவர்.. அப்படியானதொரு வனப்பு கஸ்தூரிக்கு.

செல்லப்பாண்டி சொன்னதற்கு “ம்ம்...” என்றவள், நடையைப் போட, தூரத்தில், கமலக்கண்ணன் வண்டி வைத்து நிற்பது தெரிந்தது..

“சோ..!! இவன் வேற..” என்று இதழ்கள் முணுமுணுக்க, சுற்றிலும் பார்வையை ஓட்டினாள், யாரேனும் அங்கே இருக்கிறார்களா என்று.

யாருமில்லை. ஆக வேகமாய் நடையைப் போட்டாள் கஸ்தூரி.

கஸ்தூரி – படிப்பு பத்தாவதோடு நிறுத்தப்பட்டு விட்டது.. காரணம் வேறாரும் இல்லை. அவளின் அம்மாவும், ஊராட்களும் செய்த செயல்கள் எல்லாம் செல்லப்பாண்டியை அப்படிச் செய்யச் செய்துவிட்டது.

கஸ்தூரியின் அம்மா, அதாவது சந்திரபாண்டியின் ஒன்றுவிட்ட தங்கை.. அதாவது அவருக்கு உடன்பிறப்பு என்ற உறவில் இருந்த ஒரே பெண், செல்லப்பாண்டியின் மனைவி, இப்போதிருக்கும் கஸ்தூரியை காட்டிலும் பலமடங்கு அழகி.

செல்லப்பாண்டிக்கும் அவருக்கும் உருவப் பொருத்தம் என்பது சிறிதும் இல்லை..!! அது அவரின் மனதில் ஆழப் பதிந்திருந்தது..!! அதுவே ஏகப்பட்ட பிரச்னைகளை கொண்டு வந்தது அவர்களின் வீட்டினில்..

இதற்கிடையில், ஊரினில் வேறு ஒரு பேச்சு ‘செல்லப்பாண்டி உன் பொண்டாட்டி சரியில்ல.. பார்த்துக்கோ..’ என்று.
அரசல் புரசலாய் நிறைய பேச்சுக்கள். செல்லப்பாண்டி கொதித்துப் போனார். வீட்டினில் வந்து கேட்க, ஏகப்பட்ட ரகளை.

செல்லப்பாண்டி கோபமாய் கடையினில் சென்று படுத்துக்கொள்ள, மறுநாள் பார்த்தால், கஸ்தூரியின் அம்மா வீட்டினில் இல்லை. ஊரினிலும் இல்லை.. எங்கே போனார், யாரோடு போனார் என்றெல்லாம் தெரியவே இல்லை.

அப்போது கஸ்தூரிக்கு வயது பத்து.

‘அம்மா வீட்டினில் இல்லை..’ என்று தெரியவும், அப்பாவிடம் சென்று சாதாரணமாய் சொன்னாள்.

“யப்பா.. அம்மா காணோம்.. எங்கயும் இல்ல..” என்று சொல்ல, இச்செய்தி, காட்டுத்தீ போல் பரவியது அங்கே..

கிராமம் வேறு.. சொல்லவா வேண்டும்... கண் காது மூக்கு என்று எல்லாம் வைத்து பேசி பேசி ஒருவழியாகி, செல்லப்பாண்டியையும் ஒருவழி ஆக்கிவிட்டனர். மூன்று நாட்கள் கடந்திருக்க கஸ்தூரியின் அம்மா எங்கோ வடப்பக்கம் போய்விட்டதாய் தகவல் வந்தது..

ஆனால் யாரோடு என்று இப்போது வரைக்கும் தெரியவில்லை. ஆனால் பெயர் கெட்டது நிஜம். அக்குடும்பத்தின் அமைதி கெட்டது நிஜம். செல்லப்பாண்டிக்கு ஒருவித அசிங்கம் என்றால், கஸ்தூரிக்கு ஒருவித பாதிப்பு.

அத்தனை ஆண்டுகளாய், அழகி அழகி என்று ஊரில் பலர் கொண்டாடிய பெண், திடீரென ‘ஆத்தாள போல பிறந்து வச்சிருக்காளே... இவ என்னத்த செய்ய போறாளோ..’ என்று கிளம்பியது.

அப்போது கூட அதெல்லாம் புரியவில்லை அவளுக்கு.. வீட்டினில் செல்லப்பாண்டியின் அம்மாவும் இருக்க, “ஆச்சி..” என்று எது சொன்னாலும், அவரோ “அடக்க ஒடுக்கமா இருக்கப்பாரு..” என்பார்..

பத்து வயது பெண்ணுக்கு இதெல்லாம் என்ன புரியப் போகிறது. அம்மா இல்லை.. அப்பாவோ கண்டுகொள்வதே இல்லை.. பாட்டியோ எதற்கும் திட்டு என்று நாட்கள் நகர, அவள் பத்தாவது படிக்கையில் தான் வயதுக்கு வந்தாள். அத்தோடு முடிந்தது எல்லாம்.

‘இனி படிக்க அனுப்பவேணாம்.. போதும்..’ இது ஆச்சி..

‘பேசாம ஒரு மாப்பிள்ள பார்த்து கல்யாணம் பண்ணிடலாம்..’ இது சொந்த பந்தங்கள்..

செல்லபாண்டி முழித்தார் என்ன செய்வது என்று.

அடுத்து பாட்டியும் இல்லாது போய்விட ஒருநாள் அழுதபடி “யப்பா.. கல்யாணம் பண்ணி என்னை அனுப்பிடாதப்பா.. நீ என்ன சொன்னாலும் நான் கேட்டுக்கிறேன்..” என்றாள் கஸ்தூரி.

அவ்வளோதான் அதன் பின் அவளின் வாழ்வே மாறிப்போனது.

செல்லப்பாண்டி எதுவென்றாலும், முன்னெல்லாம் சந்திரபாண்டியோடு தான் கலந்து பேசுவார். இப்போது அவர்களோ பேச்சு வார்த்தையை முற்றிலும் நிறுத்தி இருந்தனர். ஊரெல்லாம் கஸ்தூரியின் அம்மாவினைப் பேச, சும்மாவே எதற்கும் கௌரவம் பார்க்கும் மனிதர், இத்தோடு இவர்கள் வீட்டின் உறவினை முடித்துக்கொண்டார்.

அதில் செல்லப்பாண்டிக்கு பெரும் கோபமும் வருத்தமும்.

கஸ்தூரி வயது வந்தபோது கூட, தாய் மாமா முறை செய்ய வரவில்லை அவர். அதாவது பரவாயில்லை, முருகேஸ்வரியோ அப்போதிருந்து காணும் போதெல்லாம் ஏச்சு பேச்சுத்தான்.. நாட்கள் ஆக, ஆக, வயது கூட கூட, கஸ்தூரியின் அழகு கூட கூட, அவளின் பாட்டியும் இல்லையென்று ஆகிட, அவள் மிக மிக இறுகித்தான் போனாள்.

அவள் வயது பெண்கள் எல்லாம் அவளோடு பேசினாலும், மற்றவர்கள் இன்னமும் கூட ‘தாயைப் போல பிள்ளை...’ என்று பேச்சு காதினில் விழுகையில் அவளின் மனது அப்படியே சமைந்து போகும்.

அதிலும் முருகேஸ்வரி, கஸ்தூரியைக் காணும் போதெல்லாம் ஜாடைப் பேசுவார்..

‘ஹ்ம்ம் யார் குடியைக் கெடுக்கப் போறாளா... காலா காலத்துல கட்டிக்குடுத்து தள்ளி விடாம..’ என்று வாய்க்கு வந்தது எல்லாம் பேசுவார்.

பல நேரங்களில் கஸ்தூரி காது கேட்காதது போல் இருந்தாலும், சில நேரம் பொறுத்துக்கொள்ள முடியாது போகையில்
அவரினை பதிலுக்கு நன்கு முறைத்துவிட்டு போவாள்.

‘பாரு பாரு.. எப்படி போறா பாரு..’ என்று அதற்கும் பேச்சு வரும்.

சண்டையிடலாம் தான். ‘நான் உங்களோட எல்லாம் நின்னு பேச உங்க யாருக்கும் தகுதி இல்ல..’ இப்படிதான் பார்ப்பாள் கஸ்தூரி.
அவளின் சிறு சிறு நியாயமான ஆசைகள் கூட எதுவும் நிகழ்ந்ததில்லை. அவர்களின் வீட்டிற்குப் பின்னே அவர்களுக்கு வயல் இருந்தது. அதுமட்டுமே அவளின் அனைத்தும். அசராது வேலை செய்வாள். கடைக்கு எப்போதுமே செல்லப்பாண்டி அவளை வந்து அமர விடமாட்டார். ஆட்கள் நிறைய வருவர் என்று.

இப்போது சில காலமாய் கஸ்தூரிக்கு ஒரு புதிய தலைவலி.. அது கமலக்கண்ணன்.

பேசாது இருந்தவன் திடீரென பேச ஆரம்பித்தான். காணும் போதெல்லாம். ஆனால் அவன் பேசும் நேரம் யாரும் சுற்றி இருந்திட மாட்டர். அதுவே அவளுக்கு அப்படியொரு கோபம் கொடுக்கும்.

‘பேசணும்னா எல்லார் முன்னையும் பேசணும்.. அதைவிட்டு இதென்ன ஆள் யாருமில்லாம பேசுறது..’ என்று மனதினுள் அவனை வசைபாடுவாள்.

இப்போதும் அவனைக் கடந்து போக நினைக்க அழைத்துவிட்டான் “கஸ்தூரி..” என்று..

கழுத்தைக் கூட அவன் பக்கம் திருப்பிடக் கூடாது என்று எண்ணி முடிக்கும் முன்னே பார்வை அவன் பக்கம் சட்டென்று திரும்பிவிட்டது.

“ச்சே...!!” என்று தனக்குத்தானே நோந்துகொண்டவள், கோவிலை நோக்கி நடையை வேகமாய் எட்டுபோட,

“ஏய் நில்லு..” என்றபடி கமலக்கண்ணனும், பைக்கை உருட்டியபடி வர, கஸ்தூரி நிற்கவேயில்லை.




 
:love: :love: :love:

வாழ்த்துக்கள் சரயு.......

அத்தை மகள் கஸ்தூரி...... KK க்கு ஒரு கண்ணு போலவே........
ஓடிப்போன அம்மா போய்டுவா.......... புள்ளை உயிரை எடுப்பாங்க சுற்றி இருக்கவங்க........

ஏன் நிற்காமல் போறா? அத்தைக்கு அவ்ளோ பயமா?
God Brother பல்சர் தள்ளிட்டு போறாரே :p :p :p
 
Last edited:
Top