Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ராஜா ராணி - 2

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
காதல் 2:

ஒரு மாதம் கழித்து , மதுரவசனி தனது தந்தை சிவச்சந்திரனிடம்,

“அப்பா….. என்னப்பா எதுவும் பேசாம இருக்கீங்க….” என நீண்ட நேரம் நிலவிய அமைதியைக் கலைத்துக் கேட்டாள் .
அவள் வேலைக்குச் செல்ல அனுமதி வேண்டி தந்தையிடம் கேட்க.

சிவாவோ, “நம்ம ஆத்தா கிட்டத் தான் டா கேட்கனும்… ஆனா…. ஏன் டா… சென்னை வரைக்கும் போகனும்… இங்கேயே நம்ம ஆடிட்டர் கிட்ட டிரெயினிங் எடுக்கலாமில்லயா….. நம்ம கம்பெனி அக்கௌண்ட்ஸ் பாத்தாலே போதும் மா….”

“இல்லப்பா… எனக்கு வெளியே போய் வேலைப் பார்க்கனும்னு ஆசைப்பா…. ப்ளீஸ்ப்பா…. நானும் வெளி உலகத்தைப் பார்க்கனும் பா… என் திறமைக்குக் கிடைச்ச வேலைப்பா…. ப்ளீஸ் பா… ப்ளீஸ்பா….. இது வரைக்கும் நீங்க சொன்ன எல்லாம் நான் கேட்டேன்ல….” என தாஜா செய்ய

காலையிலேயே டைமண்ட் குழுமத்திடமிருந்து அவளுக்கு இமெயில் வந்து விட்டது. அதனால் தான் தன் குடும்பத்தினரின் சம்மதம் வேண்டித் தந்தையைக் காக்கா பிடிக்க வந்தாள்.

“என்னம்மா… நீ…. அப்பா கேட்டா நான் செய்ய மாட்டேனா…. ஆனா ஆத்தா பெரியப்பாலாம் ஒத்துப்பாங்களா…டா… நம்ம பொன்னு வெளியில வேலைக்குப் போனா.. நமக்கு என்ன மரியாதைடா…”

“அப்போ…. என்னை அனுப்ப மாட்டீங்க…. ராமண்ணா என்ன கேட்டாலும் செய்வீங்க….. மஹா கேட்டா செய்வீங்க… வத்சன் டூர் போக கேட்டப்போ ஓகே சொன்னீங்க…. நான் கேட்டா செய்ய மாட்டீங்க…..” எனக் கோபமாக முகம் சிவக்கச் சொல்ல,

“ப்ச்… என்னமா நீ…? நான் அம்மாகிட்டப் பேசுறேன்… எல்லாருமே என் பசங்க தான் டா… ஏன் நீ பிரிச்சுப் பேசுற… எங்க எல்லாருக்கும் எல்லாரும் ஒன்னுதான் மது… ஸ்ரீராம் தான் என் மூத்தப் பிள்ளை ப்ரீக்குட்டி தான் என் கடைசிப்பொன்னு… உனக்கு வேலைக்குப் போகனும்.. அவ்வளவுதானே... அப்பா பெரிப்பா கிட்டச் சொல்லிடுறேன்.. அவர் ஆத்தா கிட்ட பேசுவார்… என்ன சரியா….?” எனக் கேட்ட நேரம்,

மோகனா குரல் கொடுத்தார், “மாமா மஹா வந்துட்டா… நீங்க சீக்கிரம் வாங்க…”

“சரிம்மா…. வரேன்….” என்றவர் மகளிடம் திரும்பி ,

“அக்கா… வந்துருக்கா இல்ல…. அவளையும் மாப்பிள்ளையும் வந்து கூப்பிடு….. என்ன….?

“ம்ம்ம்ம்… சரிப்பா” என்றாள்

அங்கே வாசலிலே மஹாவுக்குத் தடபுடலான வரவேற்பு. ரவிச்சந்திரன் மஹாலஷ்மியையும் அவளது கணவனையும் போய் அழைத்து வந்துவிட்டார்.

சுலோச்சனா ஆரத்தி எடுக்க, உள்ளே வந்தாள் மஹாலஷ்மி. மூன்று மாதம் கழித்துப் பிறந்த வீட்டிற்கு வந்தவளைக் குடும்பமே சூழ்ந்துக் கொண்டது.

அனைவருக்கும் பழச்சாறு கொண்டு வந்துக் கொடுத்தார் மோகனா. ஆண்கள் அனைவரும் வீட்டு மாப்பிள்ளையோடு பேசிக்கொண்டிருக்க , பெண்கள் அனைவரும் தனியே ஒரு மாநாடு நடத்தினர்.
“மஹா….. உங்க வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களாமா…..”

“எல்லாம் நல்லாயிருக்காங்கமா… ஆமா... அமுதன்,வத்சன்லாம் எங்க…?”

“அவனுங்க ரெண்டு பேருக்கும்… இன்னிக்கு ஸ்கூல்.. மஹா…..” எனச் சொன்னார் சுலோச்சனா.

“ஆயுஷ் குட்டி அத்தைக் கிட்ட வர மாட்டீங்களா….?.. ஏன் உம்முன்னு இருக்கீங்க…?” என அண்ணன் மகனைக் கை நீட்டி அழைக்க

அத்தையிடம் ஓடியவன், அவளிடம், “அத்த… இந்த மம்மி… என்னை அடிச்சிடுச்சு…..”எனப் புகார் வாசிக்க ,

“ஏன் ஹரிணி அடிச்ச….?”

“மஹா… உன் மருமகனுக்கு ஆப்பிள் ஐ.போன் கொடுத்தாதான் சாப்பாடு இறங்குது.. இதனால் நான் தான் ஆத்தாகிட்ட அரைப்படுறேன்… அதான்… போன் தர மாட்டேன்னு சொன்னேன்.. இவன் அடம்பிடிச்சானா….அதான் ஒன்னு வைச்சேன்..”

“ஏன் ஹரிணி.. குழந்தை மேல கை வைக்கிற…. சின்ன குழந்தைக்கு என்ன தெரியும்….. வாயால சொன்னா கேட்கப் போறான்..” எனச் சீரியசாக அட்வைஸ் செய்த மோகனாவை சிரிப்போடும் முறைப்போடும் பார்த்தாள் அவரது மகள் ப்ரியா.

“என்னடி.. அப்படி முறைக்கிற…?”
“ஏன் ப்ரிகுட்டி அம்மாவை முறைக்கிறீங்க…” என மஹா தன் குட்டித் தங்கையிடம் கேட்க ,

“இல்லக்கா…. நேத்து மட்டும் அண்ணாவை அடிச்சாங்க….. என்னைப் போன வாரம் ஃப்ரைடே அடிச்சாங்க… இப்ப மட்டும் இப்படி அடிக்க கூடாதுன்னு அண்ணிக்கிட்ட சொல்றாங்கல…”

“அடிச்ச கிழமை கூட ஞாபகம் இருக்கும்.. ஆனா ஏன் அடிச்சன்னு ஞாபகம் இருக்காது… அவன் சின்னகுழந்தைடி… உனக்குப் பத்து வயசாகப்போது…. இன்னமுமா நீ குழந்தை… நீ குட்டிப்பிசாசுடி.”

“ப்ச்.. விடு மோகனா….. பிள்ளைங்க மேல கை நீட்டாத…. அத்தைக்குப் பிடிக்காது…” எனச் சுலோச்சனா சொல்ல

“அக்கா… உங்க பாப்பா… எப்ப வெளியே வரும்…” எனப் ப்ரியா ஆர்வமாய்க் கேட்க

“அக்காவோட பாப்பா…. இன்னும் ஃபோர் மந்த்ஸ்ல வெளியே வரும் ப்ரிகுட்டி….”

“அப்போ…. நிறையா நாள் இருக்கா….”

“ஆமாடா…. உனக்கு லீவ் வரும்ல அப்போ பாப்பா வரும்..."

“பாப்பா… என்னை என்னச் சொல்லிக் கூப்பிடும்… அக்கா…”

“பாப்பா உன்னை சித்தின்னு கூப்பிடும்டா..”

“அப்போ… என்னை அத்த….” என ஆயுஷ் மழலைக் குரலில் கேட்க

“உன்னை பாப்பா மாமானு சொல்லனும் ஆயுஷ் …”

“மாமாவா…. அப்போ…. நான் பிக் பாயா…..?” எனக் கண்ணில் ஆர்வம் மின்னக் கேட்க ,

“ஆமா… பிக் பாய் தான்... நீ…”

“அப்போ… பாப்பாவ நீங்கத் தரீங்களா… நான் தூக்க….?” என ஆசையோடு வினவ ,

“டேய்… அது என் பாப்பா…. உனக்கு நான் தர மாட்டேன்….டா…” என அவனை விட நாலு வயது பெரியவளான ப்ரியா மல்லுக்கட்ட
 
மோகனா ஈசியாக, “ப்ரிகுட்டி நீ மஹா அக்கா பாப்பாவ கொஞ்சிக்கோ… ஆயுஷ்.. நீ மதுக்கா பாப்பாவ கொஞ்சிகோ…. சரியா…. அதுக்கு ஏன் சண்டை….” எனத் தீர்வு சொல்ல

“சித்தி………………..” என மதுரவசனி முறைக்க,

“சித்தி… ஏன் மது குழந்தையைக் கொஞ்சனும்…. இவங்க அம்மாவையே இன்னொன்னு பெத்து தரச் சொல்ல வேண்டியதுதான், மதுக்கு இனிமே மாப்பிள்ளைப் பாத்துக் கல்யாணம் பண்ணி அவ மாசமாக எத்தன நாள் ஆகுமோ…?” என மஹா சொல்லி சிரிக்க, ஹரிணியின் முகம் சிவந்துப் போனது.

“ஆள விடுங்கப்பா… நான் அப்பா கிட்டப் பேசப் போறேன்… ஸ்கைப்ல வரேன்னு சொல்லியிருக்கிறார்…” என்றபடியே அங்கிருந்து ஓடிப்போனாள் ஹரிணி.

“ஆமா மது…. எக்சாம் எப்படி செஞ்ச…?”

“நல்ல செஞ்சேன் மஹா…. அப்புறம் பாப்பா உதைக்குதா….?”

“இல்லடி….. லைட்டா எப்போவாது அசையும்…”

“ஐஞ்சு மாசம் தானே இன்னும் கொஞ்ச நாள்ல நல்ல உதைக்கும்..” என சுலோ பெரியம்மா சொல்ல

“ப்ரியா…………………………….” என்ற மதுரவல்லியின் குரல் கேட்க

“ஹே…! ஒன்ற ஜாண்…. ஆத்தா கூப்பிடுறாங்க…. போய்.. என்னன்னு கேளுடி….” என மோகனா மகளை விரட்ட,

ஆத்தாவிடம் சென்று வந்த ப்ரீக்குட்டி , “பெரியம்மா…. அம்மா… உங்க எல்லாரையும் ஆத்தா கதைப் பேசாம… சீக்கிரம் சமையலை முடிக்கச் சொன்னாங்க.. சாயந்தரம் கோவிலுக்குப் போய் அக்காவுக்கு மருந்து கொடுக்கனுமாம்.. இல்லனா உங்களை எல்லாம் ஆத்தா பிச்சுபுடுமாம்….” என்று ப்ரியா சொல்ல
“சித்தி…. கடைசி வரி மட்டும் இவ சொந்த சரக்காட்டம் தெரியுதே..” என மதுரவசனி சொல்ல

“அக்கா…. இப்படி போட்டுக்குடுத்திட்டியே…..” என்றவாறே தப்பித்து ஓடிப்போனாள் ப்ரியா. அதன்பின் அனைவரும் சமையலில் பிசியாக இருந்து பசியாக இருப்பவர்களைக் கவனித்தனர்.

மாலையில் நல்ல நேரமாகப் பார்த்து அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று மஹாலஷ்மிக்கு மருந்துக் கொடுத்தனர்.

இரவானதும் மீண்டும் தந்தையிடம் வந்த மது, “அப்பா… பெரியப்பா கிட்டப் பேசுனீங்களா…?” எனக் கேட்க

“என்ன மது நீ… பொறுமையே உனக்குக் கிடையாதா…? இப்போதான மஹா வந்திருக்கா…. அவ போகட்டும்….. நான் அப்புறமா பேசுறேன்…” என்று கொஞ்சம் எரிச்சல் எட்டிப்பார்க்கச் சொல்ல

“ஓஹ்…… பொறுமையா இருக்கனும்னா எருமையா இருக்கனும்னு நம்ம ஆத்தா தான் சொல்லியிருக்கு… எந்த வேலையும் தள்ளிப்போடக் கூடாதுன்னு உங்கம்மா சொல்லித்தரல… நான் வெயிட் பண்ணுவேன்…. அந்த கம்பெனி வெயிட் பண்ணுமா…..? மஹா வந்தா என்ன…? நான் காலையில சொன்னேன்… இப்போ கோவிலுக்கும் போயிட்டு வந்தாச்சு… இப்போதாவது நான் பேசுறேன்மா அப்படின்னு நீங்க சொல்லக் காணோம்….. அப்போ இப்படியே இழுத்தடிச்சு.. கடைசில…. என்னை வேலைக்குப் போக விடாம பண்றதுதான் உங்க ப்ளான்…. அப்படித்தானே…” என்று கிடுகிடுப்பிடி போட்டப் பெண்ணின் கூற்று உண்மையே.
மகள் கேட்டதுமே தன் தமையனிடம் சென்று அவர் விசயத்தை சொல்ல, “இல்லடா சிவா… இதெல்லாம் சரியா வராது….. சென்னைக்கெல்லாம் அனுப்ப வேண்டாம்… அவளை கொஞ்சம் விட்டுத் தான் பிடிக்கனும்… அதனால எடுத்தவுடனேயே முடியாதுன்னு சொல்லாத… அவ பிடிவாதம் தான் ஜாஸ்தியாவும்… நம்ம குடும்பத்துப் பொண்ணுச் சம்பளத்துக்குப் போய் எதுக்கு வேலைப் பார்க்கனும்..?” என அவர் கோபம் கொள்ள

“அதைத் தான் நானும் சொன்னேன் அண்ணா… அவ கேட்டா தானே….”

“சரி விடு சிவா…. பார்த்துக்கலாம்…….” என்று ரவி சொல்லிவிட்டார், ஆனால் மகள் மீண்டும் வந்து கேட்கவும் அவரது கோபம் அதிகமானது. இருந்தும் கோபம் அவளது பிடிவாதத்தை வளர்க்கும் என்று தெரிந்தவர் அமைதியாக,

“நாளைக்கே பேசிடறேன் மா..” என

“அந்த நாளைக்குன்னு ஒன்னு வராதுப்பா…. நானே பார்த்துக்கிறேன்…” என்று கடுப்போடு சொன்னவள் வேகமாக மதுரவல்லியின் அறைக்குள் சென்றாள்.
 
அதைக்கண்ட சிவா தன் அண்ணனிடம் சென்று சொல்ல, மஹாலஷ்மி மதியழகன் தவிர அனைவரும் நடுவீட்டில் தான் அமர்ந்து தொலைக்காட்சிப் பார்த்தனர். அவர்கள் என்னவென்று கேட்க, ரவி சொல்ல

பூம்பொழில் உடனே, “ஐயோ…. இவ ஏன் இப்படி செய்றா…? அத்தை வந்து சாமியாடப் போறாங்க….. என்ன பொண்ணுப் பெத்து வைச்சிருக்கேன்னு….. இவளோட ஒரே ரோதனையாப் போச்சு…” என்று புலம்ப

“இன்னிக்கு கோட்டா இல்லன்னு நினைச்சேன்… இவ ஆரம்பிச்சிட்டா….” – இது மோகனா

“ரெண்டு பேரும் வாயை மூடுறீங்களா….. அவளைத் திட்டுவாங்கன்னு நினைக்காம… சும்மா..” என்று சுலோச்சனா எரிச்சலுற,

“இந்த பொம்பளைங்களே இப்படித்தான்…. கொஞ்சம் அமைதியா இருங்க… கதவைத் திறக்கட்டும்….” என்று சங்கிலி புங்கிலி கதவைத் திற என்று சொல்லாத கணக்காகக் கதவைப் பார்க்க ,

முதலில் கதவைத் திறந்து வந்தவர் மதுரவல்லி. வெளியே நின்றவர்களைப் பார்த்து,

“எதுக்கு இப்படி எல்லாரும் நிக்கிறிங்க.. ரவைக்குத் தூங்கினா தானே கருக்கல்ல எந்திரிக்க முடியும்…..?” என அதட்ட

“இல்லமா…. அது மது…… உங்கிட்ட பேச வந்தா…..?” என ரவிச்சந்திரன் இழுக்க,

“ஆமா வந்தா… இங்க தான் நிக்கிறா… நான் என்ன என் பேத்தியைக் கடிச்சா தின்பேன்…. வந்துட்டானுவோ… காவலுக்கு….. அவளுக்கு காம்பவுண்டுலேயே வேலை கிடைச்சிருக்காம்… அதனால் போகனும்னு ஆசைப்படுறா… போய் ஒரு ஆறு மாசம் செய்யட்டும்… அதுக்கப்புறம்…. கல்யாணத்துப் பார்க்கலாம்னு சொல்லிட்டேன்….”

“காம்பவுண்டா….” என அமுதன் கேட்க

ஸ்ரீசரண் “டேய் கேம்ப்ஸதான் அப்படி சொல்றாங்க….” என்றான்.
“அம்மா… என்னம்மா நம்ம பொண்ணுப் போய் இன்னொருத்தர்கிட்ட வேலைப் பார்க்கனுமா…? அவ தான் புரிஞ்சிக்காம இருக்கா நீங்களுமா…?” என்ற பெரியப்பாவை உஷ்ணப்பார்வைப் பார்த்தாள் மது.

“அட…. எந்த காலத்துல இருக்க ரவி…..?அப்புறம் எதுக்குப் படிச்சா இவ… சும்மா வீட்டுல சமைக்கவா….. இன்னொரு வீட்டுக்குப் போனா…. அங்க அவங்க இவ வேலைக்குப் போக ஒத்துப்போவோளோ என்னவோ…… இப்போ போகட்டுமே..” என்று ஆத்தா சொல்ல, அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்தனர்.
 

மதுரவல்லி கட்டுப்பாடானவர் ஆனால் கட்டுப்பெட்டித்தனமானவர் அல்ல.

மது மட்டும் மனதில், “வரவன் போறவன்லாம் என் லைஃபை டிசைட் பண்ணுவாங்களா…? நெவர்…. வரவங்கிட்டையும் சொல்லிடனும்… நான் வேலைக்குப் போவேன்னு….” என்று உறுதியெடுத்தாள். அது உடையப்போகும் என்பதை அவள் அறியவில்லை…!

அம்மாவே சொன்னபின் ரவிச்சந்திரன் வாயைத் திறப்பாரா என்ன….? அமைதியாகி விட்டார்.

“நம்ம ப்ளாட் மெட்ராஸுல இருக்கே….. அங்க போய் தங்கிக்கட்டும்…… ஹாஸ்டல்லாம் ஒத்துவராது… நம்ம கந்தசாமி பொண்ணு ஹம்சாவும் போறாளாம்.. ரெண்டு பேரும் சேர்ந்து இருந்துக்கட்டும்.... சரணு… நீ போய் அவளை விட்டுட்டு வா… ரவி நீ நாளைக்கே நம்ம செந்தில் கிட்டச் சொல்லி வீட்டைச் சுத்தப்படுத்தி வைக்கச் சொல்லு… இப்போ எல்லாரும் போய் படுங்க..” என அவரவருக்கு ஆணைப் பிறப்பித்து விட்டுத் தன்னறைக்குள் செல்ல,

மதுரவசனி இடுப்பில் கைவைத்து எல்லாரையும் கெத்தாகப் பார்த்தாள்…. “எப்பூடி..” என்பதாக.

அதையேத்தான் அனைவரும் கேட்டனர்.

“கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்கிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்'' என்று புனித நூலில் உள்ளதைச் சொல்ல

“அப்போ கேட்டதுமே ஆத்தா ஒத்துக்கிச்சா…?” என ஸ்ரீசரண் ஆவலாய்க் கேட்க

“கேட்டதுமே ஒத்துக்கல… ஆனா ஒத்துக்கிற மாதிரி கேட்டேன்….” என்று சொல்ல, அதில் கடுப்பான சரண்

“திமிரு…… ஹம்ம்.. நடத்து நடத்து.. அப்பா நானும் நாளையிலர்ந்து ஆபிஸ் வரேன்” என்று திடுமெனச் சொல்ல

“என்னடா… திருந்திட்டியா சரண்..” என சித்தப்பா கார்த்திக்கேயன் வினவ

“ப்ச்சு… போங்க சித்தப்பா…. பொம்பளைப்புள்ள இவளே வேலைக்குப் போகும்போது ஆம்பிள நான் உட்கார்ந்தா ஆத்தா என்னை அவ்வளவுதான்……” என்றபடி அவன் செல்ல,

மதுவுக்கு மனம் கொதித்தது.. ‘அது என்ன… பொண்ணே வேலைக்குப் போகும்போது இவன் போகனுமா…. அது என்ன இவளே…. அப்படி நான் எதில் குறைந்துப் போனேன்…. பெண் வேலைக்குச் செல்லக் கூடாதா….? பாசமாக இருப்பவன் தனக்குப் பரிந்துப் பேசுபவன்…. அவன் கூடத் தன்னைப் பெண் என்பதால் தன்னை இறக்கிப் பேசியது அவளைக் கோபப்படுத்தியது…’ ஆனாலும் தான் வேலைக்குப் போக அனுமதிக் கிடைத்த மகிழ்ச்சியில் உறங்கச் சென்றாள்.

ஆனால் சுலோச்சனா, பூம்பொழில் இருவரும் புலம்பினர்,

‘மது எப்படி சமாளிப்பாள் தனியே….’ என

மோகனாவோ, “விடுங்க கா…. இப்போ அவளை மட்டுமே சமாளிக்க முடியலன்னா… நாளை பின்னப் போய் எப்படி ஒரு குடும்பத்தைச் சமாளிப்பா… அதெல்லாம் அவ பார்த்துப்பா… பாவம் கா… எனக்குக் கூட வேலைக்குப் போகனும்னு ஆசை…. அங்கேயும் ஒத்துக்கல… இங்கேயும் ஒத்துக்கல… ஒரு கட்டத்துல… குழந்தைங்க வந்தப் பின்னாடி… அந்த ஆசையும் அடங்கிப் போயிடுச்சு….. எப்போவாது தூக்கத்தில் திடீர்னு தோணும்… நமக்குத் தான் கொடுப்பின இல்ல… அவ போகட்டும்…” என

“என்னமோ போ… நம்மக்கிட்ட என்ன காசா இல்ல…? அதுக்காகத் தெரியாத ஊருக்குப் போய்….. தேவையா என்ன?” என்று பூம்பொழில் கேட்க

“அக்கா…. மது காசுக்காக போகல… அவள் தனது லட்சியத்துக்காகப் போறா… வேலைக்குப் போறது நமக்கு சுயமரியாதையைத் தரும்… அது ஒரு நம்பிக்கை… அதான் ஹம்சா கூடப் போறாளே…. அவ பொறுமைசாலி வேற… சோ அவ நம்ம மதுவைப் பார்த்துப்பா… இப்போ போய் தூங்குங்க…. வெள்ளனுமே எந்திரிக்கனும்…..” என்று சொல்ல அனைவரும் உறங்கப் போயினர்.

அடுத்து வந்த வாரத்தில் மதுரவசனி தனது தோழி ஹம்சாவோடு சென்னையில் தங்களது ப்ளாட்டில் குடியேறினாள்.
 
சென்னையில்……………………

இன்றோடு வேலையில் சேர்ந்து இருவாரமாகிறது. மதுரவசனி புது வித அனுபவத்தில் இருந்தாள். இங்குள்ள வானிலையைத் தவிர எல்லாம் அவளுக்குப் பிடித்து விட்டது. ஆனாலும் இத்தனை ஆண்டுகள் ஒன்றாகவே இருந்துவிட்டு இப்போது தனியாக இருப்பது அவளுக்குக் கஷ்டமாக இருந்தது. அதையும் மீறிப் புது வேலை, புது மனிதர்கள், புது இடம் என்று புதுவித உணர்விலேயே இருந்தாள்.
சுதந்திரகாற்றை சுவாசிக்கத் தொடங்கினாள். ஆனால் ஒன்று அவள் சுதந்திரத்தைத்தான் விரும்பினாள். விடுதலையை அல்ல….! தான் உண்டு, தோழி உண்டு, அலுவலகம் உண்டு, வீடு உண்டு என்று இருந்தாள். ஊர் சுற்றல் என்பது மாதிரி எதுவும் தோழிகள் இருவரும் செய்யவில்லை. அலுவலகத்தில் கூட ஆண்களிடம் அளவாகத் தான் பேசினாள். ஒரே ஒரு கொடுமை மட்டுமே அவள் சமைப்பதை உண்பதுதான்..! அவளே செய்து அவளே சாப்பிட எரிச்சலாக இருந்தது. ஹம்சாவின் சமையலும் சுமாரே. தனது அம்மா பெரியம்மாவின் சமையலுக்கு ஏங்கினாள்.

தினமும் அவளது குடும்பத்தார் யாரெனும் ஒருவராவது அவளிடம் போனில் ஒரு முறையாவது பேசிவிடுவர்.

அலுவலகம் செல்ல ஹம்சாவும் அவளும் ஷேர் ஆட்டோவில் ஏறி அவளது அலுவலகமான டைமண்ட் குரூப்ஸில் நுழைந்தனர்.

அலுவலகம் சென்ற பின், ஹம்சாவும் மதுரவசனியும் அவர்களது இருக்கையில் அமர்ந்து வேலைப்பார்க்கத் தொடங்கினர்.

ஒரு பத்து மணி வாக்கில் அந்த கம்பெனியின் எம்.டி ராஜதீபன் தனது டிப்டாப்பான உடையில் வந்தான். ராஜதீபன் இருபத்தியாறு வயது இளைஞன். அவனது தந்தை சுந்தர்ராஜன் தான் அந்த நிறுவனத்தின் சேர்மன். இருவரும் சேர்ந்து தான் கம்பெனியை நிர்வாகம் செய்கின்றனர்.

ராஜதீபன் மாநிறத்தில் ஐந்தரை அடியில் டிரிம் செய்யப்பட்ட மீசை, ப்ர்ஞ்ச் பியர்ட் என்று கம்பீரமாக இருப்பான். பார்த்தால் கவரும் காந்தம் போல் ஈர்க்கும் கம்பீரம் அவனது.
அவன் உள்ளே வந்ததும் அனைவருக்கும் புன்னகையைப் பரிசாகத் தந்து காலை வணக்கம் சொன்னான். மதுரவசனியிடமும் அவன் பார்வை நிலைத்தது.அதைக் கண்டு மதுவுக்கு உள்ளே அனலடித்தது.

அவளும் இந்த இரண்டு வாரமாகப் பார்க்கிறாள் யாரும் அவளை இப்படி பார்ப்பதில்லை. ஆனால் இவன் பார்வை எப்போதும் அவளிடம் நிலைப்பதை அவள் விரும்பவில்லை. அதிலும் அவனது அறைக்கு நேர் எதிரில் இவளது இடம் இருக்கும். அதுக்குப் பின்னால் ஹம்சாவின் இருக்கை. ராஜதீபனின் பார்வையைக் கண்டுக்கொண்டவள் தோழியிடம் இரண்டு நாட்கள் கழித்துச் சொல்லிவிட , ஹம்சாவோ

“ஒருவேளை உன்னை லவ் பண்றாரோ மது……?” என சந்தேகமாய் இழுக்க

“ப்ச்…. இந்த காதல் கத்திரிக்காவெல்லாம் எங்க வீட்டு சம்பாருக்கு செட் ஆகாதுன்னு உனக்குத் தெரியாதா…..? எனக்கு அவன் பார்க்கிறது எரிச்சலா வருதுடி……”

“வீட்டுக்குத்தானே பிடிக்காது.. உனக்குப் பிடிச்சிருக்கா..” என விளையாட்டாகக் கேட்க ,

“சே சே…. அவனைப் பார்த்தா லவ்லாம் ஒன்னும் வரல… வரவும் வராதுடி….”

“அப்போ நீ லவ் பண்ணவே மாட்ட…”

“நீ செய்வியா என்ன ஹம்ஸ்….?”
“அடியே எங்கண்ணா என்னை வெட்டிப் போட்டுடுவான் டி… எனக்கு உயிர் மேல ஆசை ஜாஸ்திடி….” என அலற.

“அப்போ எனக்கு மட்டும் உயிர் பெரிசில்லையா….? உனக்காவது ஒரு அண்ணா…. எனக்கு இரண்டு பேருடி…. எங்கப் பெரியப்பாவே போதும்… என்னைப் போட்டுத்தள்ள… அரண்மனை ஹன்சிகா மாறி நல்லா வளர்ப்பாங்க.. ஆனா காதல்னு வந்துட்டா அவ்வளவுதான்.. மர்டர் தான்…” எனச் சொல்லி சிரிக்க

“நீ சொல்லிதான் நம்ம வீட்டைப் பத்தித் தெரியனுமா…. சும்மா விளையாட்டுக்கு கேட்டேன் டி… அப்படின்னா பேசாம வேலையை விட்டுப் போய்டலாமா…? எதுக்கு வீணா வம்பு…. நம்ம வீட்ல தெரிஞ்சாப் ப்ரச்சனைத்தான்….”

“இல்லடி… அவன் மூஞ்சியைப் பார்த்தா அப்படி ஒன்னு டெரர்ரா தெரியலடி… அவன் பார்வை ஒன்னும் மோசம் இல்ல… சைட் அடிக்கிறான்னு நினைக்கிறேன்… நாம போய் எதாவது செஞ்சு அது சைட் எஃப்க்ட் தந்துட்டா என்ன செய்றது… எப்போவும் பார்க்க மாட்டான்… காலையில் குட் மார்னிங் அப்போ… அப்புறம் ஈவினிங் டைம்ல போகும்போது... இத்தனைக்கும் தனியா அவன் ரூம்க்கு ரெண்டு வாட்டி நான் போய்ட்டேன்… அப்போவெல்லாம் ரொம்ப ஸ்டீரிக்டா கரெக்டா நேர்மையா பார்ப்பான் டி… அதான் ஒன்னும் புரியல….”

“சரி விடு… இனிமே பார்த்தா பார்த்துக்கலாம்..” என ஹம்சா சொல்ல

“எதைப் பார்க்க அவனையா…? போடி……… அவங்க அப்பாவைப் பார்த்தா சந்தோஷ் சுப்ரமணியம் பிரகாஷ்ராஜ் மாறி இருக்காரு…. இவனும் அப்பா சொன்னா சரிதான் டைப்பா இருக்கான்.. எதாவது வம்பு செஞ்சா நம்ம ஏன் ஊரை விட்டுப்போகனும்….. அவனை அவங்கப்பா கிட்டப் போட்டுக்கொடுத்துடுவேன்….” என்று சொல்லியிருந்தாள்.

இன்றும் அவன் அப்படி இவளைப் புன்னகையோடு பார்க்க, ஒரு முடிவு எடுத்தவளாக அவனது அறைக்குள் சென்றாள். இவள் கதவைத் தட்ட, அவள் இருக்கையிலிருந்து எழும்போதே பார்த்தவன்,

“எஸ் கமின்….மது..” எனப் புன்னகை முகமாகச் சொல்ல,

“சார்…. எதுக்காக நீங்க என்னை அப்படிப் பார்க்கிறிங்க ..?” என்று சூடாய் வந்த கேள்வியில் ராஜதீபனின் முகம் அதிர்ச்சியைக் காட்டியது.

ஆட்டம் தொடரும்…!!!
 
Top