Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே EPISODE 01

Advertisement

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……01



அச்சன் கோவில் ஆண்டவருக்கு எதிராக இருப்பவராம்
பதினெட்டு படிகளும் காவலாக இருப்பவனாம்
எங்க கருப்ப சுவாமி அவர் எங்க கருப்ப சுவாமி


என பேயாடிக்கோட்டை கோவில் பெரிய கருப்பர் கோவில் திருவிழாவில் ஒலிபெருக்கியில் பாட்டு சத்தம் காதை கிழிக்க; ஆங்காகே போடப்பட்டிருந்த திருவிழா கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இந்த ஊரில் ஆடித்திருவிழா எப்பொழுதுபோல இந்த வருடமும் களைகட்டியது.
அங்கு பெரிய கருப்ப சுவாமி சன்னதியில் பக்தர்கள் அலைமோதினர்,

அந்த கூட்டத்தில் “ சின்னாத்தா… சின்னாத்தா,,, நீ எங்க இருக்க??” என கத்திகொண்டே அங்கு தெரிந்தவர்களிடம் சின்னாத்தாவை பார்த்தீர்களா என கேட்டுக்கொண்டே தன் அம்மாவின் தாயை தேடிக்கொண்டிருந்தாள் பூந்தென்றல் செல்வி.

பூந்தென்றல் செல்வி இன்னும் ஒருவாரத்தில் பத்தொன்பது முடிந்து இருபது ஆரம்பமாக போகிறது. சற்றே பூசிய உடல் வாகு. நல்ல கலையான முகம். மாநிறத்துக்கு சற்றே கூடுதல் நிறமும், வட்டமுகத்தில் கூர்நாசியும் அழகிய கண்களும் நல்ல உப்பிய கன்னங்களும், சிரிக்கும் போது விழும் கன்ன குழி அழகும் என பார்ப்போரை குழந்தையென கொஞ்ச தோன்றும் வஞ்சியவள்,

“ ஏண்டியம்மா செல்வி. உள்ள கோவில் பூஜைக்கு மணி அடிக்குறாக அங்குன போகாம இங்க என்ன செய்ற??. போத்தா போ சீக்கிரம் அந்த கருப்பரை கும்புடுத்தா” என கோவிலுக்குள் சென்றுகொண்டிருந்த ஐம்பது வயது இருக்கும் பேச்சியம்மாள் கூற

“ இல்லங்க அத்தை சின்னாத்தாவும் நானும் தான் கோவிலுக்கு வந்தோம். நான் போய் உண்டியலுல காசு போடுறதுக்குள்ள ஆளை காணோம். அதான் தேடிகிட்டு இருக்கேன்”

“ சின்னாத்தா அம்மாவா அவுங்க அதோ அங்க பாரு ஐயனார் சாமிகிட்ட நின்னுகிட்டு இருந்தாங்க. சரித்தா நான் போய் சாமிகும்புடுறேன் சீக்கிரம் வாங்க” என கூறிவிட்டு பேச்சியம்மா கோவிலுக்குள் போய்விட்டார்.

நல்ல பெரியதாக கோவிலுக்கு வெளியில் குதிரை மேல் இருந்த ஐய்யனாரின் முன் தன் வெள்ளை முடியை அள்ளிமுடிந்து, தன்னுடைய மாநிறத்துக்கு எடுப்பாக பச்சை மஞ்சளில் கட்டம் போட்ட காட்டன் சேலையை பின் கொசுவம் வைத்து நாட்டு கட்டு கட்டி, இடுப்பில் சுருக்கு பையும் நெற்றியில் விபூதியை மூணு பட்டையாக வைத்து, சின்ன கோலங்களை பச்சை குத்திய வயோதிகத்தால் சுருங்கிய இரு கைகளிலும் கருப்பு நிற பிளாஸ்டிக் வளையலை அணிந்து கொண்டு நல்ல உயரமாக எழுபது வயதிலும் கம்பீரமாக தன் இரு கைகளையும் தன் தலைக்கு மேல் குவித்து வணங்கி கொண்டிருந்த சின்னாத்தாவை
கண்ட பூந்தென்றல் செல்வி,

“ சின்னாத்தா…. சின்னாத்தா…..” என அருகில் சென்று கத்த,

மூடிய தன் இரு விழிகளையும் திறவாது வணங்கி கொண்டிருந்த சின்னாத்தாவின் காதில் “ சின்னாத்தா!!!!” என மீண்டும் கத்த அதே நேரம் ஒலிபெருக்கியில் ஓடிக்கொண்டிருந்த பாட்டு நின்றது.

“ ஏண்டி கூறுகெட்டவளே சாமி கும்பிட்டு இருக்கயில எதுக்குடி வந்து காதுல கத்துற??”

“ ஏன் ஆத்தா நான் எம்புட்டு நேரமா உன்னைய தேடுறேன். நீ என்னனா இங்க இருக்குற. சரின்னு பக்கத்துல வந்து கூப்புட்டா நீ கண்டுக்கல. அதான் காதுல கத்தினேன்” என மறுபடியும் பூந்தென்றல் கத்த

“ ஏண்டி ஒன்னு பேசுனா காதுல வந்து பேசுவ. இல்லைனா மெதுவா பேசுற. நீ இப்போ என்ன சொன்னேனே எனக்கு கேட்கல போ.”

“ ஆமா இல்லைனா மட்டும் உனக்கு கேட்டுருமாக்கும்” என பூந்தென்றல் சத்தமாக சலிக்க

“ கேட்கும்படி கேட்கும் கண்டிப்பா அந்த கருப்பனுக்கு நான் வேண்டுனது கேட்கும்” என சின்னாத்தா சம்மந்தமில்லாமல் கூற

அதில் கடுப்பான பூந்தென்றல் சின்னாத்தாவை நெருங்கி,

“ ஏன் ஆத்தா எனக்கு ஒரு சந்தேகம்” என சத்தமாக கேட்க

“ ஏண்டி கொஞ்சம் சத்தமா பேசுன்னு சொன்னா எதாவது வாய்க்குள்ள முணுமுணுக்குற எனக்கு அது மெதுவாத்தான் கேட்குது” என சலித்துக்கொண்டே “ ஹ்ம்ம் சொல்லு உனக்கு என்ன சந்தேகம்”

“ இல்ல இங்க ஐய்யனாரு முன்னாடி வேண்டிட்டு கருப்பனுக்கு கேட்டுருக்கும்ம்ன்னு சொல்ற”

“ அடியே கோவிலில வச்சு கூறுகெட்ட தனமா பேசாம வாடி” என பூந்தென்றல் செல்வியை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றார்.

இந்த பேயாடிக்கோட்டையில் பிறந்தவர்தான் செல்லையன். இவர்களின் குடும்பம் பரம்பரை பரம்பரையாக விவசாயம் பார்த்தவர்கள். செல்லையனும் கடும் உழைப்பாளி.

இவர் தன் சொந்த அக்காள் மகள் சின்னாத்தாவை திருமணம் செய்தார். சின்னாத்தாவும் நன்றாக உழைப்பவர். இவர்களுக்கு கண்ணன், தாமரை செல்வி என இரு மக்கள்.
கண்ணனுக்கும் தாமரைக்கும் ஐந்து வருட இடைவெளிதான்.

கண்ணனுக்கு பன்னிரெண்டு வயது இருக்கும் போது பஞ்சம் ஏற்பட இவர்களின் வாழ்வாதாரமும் பாதிப்படைந்தது. அதோடு செல்லையனும் தன் நண்பர்களோடு பிழைப்பு தேடி வெளியூருக்கு செல்ல மூன்று வருடம் கழித்து உடல் நிலை பாதிக்கபட்டு வீடு திரும்பினார். பின் ஆறு மாதத்தில் செல்லையன் இறந்துவிட அவரின் பங்காளிகளும் சின்னாத்தாவை ஏமாற்றி இருந்த நிலங்களையும் அபகரித்தனர்.

பின் தனி மனுஷியாக உழைத்து தன் பிள்ளைகளை வளர்த்தார் சின்னாத்தா. தாமரைக்கு பதினெட்டு வயதில் பக்கத்தூரில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்துவைக்க. ஒரே வருடத்தில் பூந்தென்றல் செல்வியை பெற்று எடுத்துவிட்டு குடும்ப தகராறில் கோழைத்தனமாக முடிவெடுத்து தென்றலை அனாதையாகி தற்கொலை செய்து கொண்டார்.

பின் தாமரையின் கணவன் புது மாப்பிள்ளையாக தென்றலோ வேண்டாத பழையதாகிப்போனாள். தென்றலின் மூணு வயதில் அவளின் ஆதரவு இல்லாத நிலையை பார்த்த சின்னாத்தா தன் பேத்தியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

மூணு வயதில் இருந்து ஐந்து வயது வரை தன் மாமனின் செல்லத்திலும் பாட்டியின் பாசத்திலும் சந்தோஷமாகத்தான் சென்றது சுந்தரி வரும் வரை. என்று சுந்தரிகும் கண்ணனுக்கும் திருமணம் ஆனதோ அன்றே வீட்டில் பிரச்சனைதான்.

ஆரம்பத்தில் தென்றலின் மீது அன்பு காட்டவில்லை என்றாலும் ஒதுக்கமும் காட்டவில்லை சுந்தரி. ஆனால் சுந்தரிக்கு விமலன் பிறந்ததுக்கு பின் அந்த வீட்டின் அனைத்து உரிமையும் தன் மகனுக்கே கிடைக்க வேண்டுமென தவறான வழியில் செல்ல இன்று தென்றல் தன் படிப்பை எட்டாம் வகுப்போடு நிறுத்தி முழுக்க முழுக்க வீட்டு வேலை செய்து உலக அறிவு இல்லாது வீட்டோடு ஒடுக்கபட்டாள்.

ஆரம்பித்தில் இதனை கண்டிக்க ஆர்மபித்த கண்ணனும் பின் மனைவின் சொல்லையே கடைபிடிக்க ஆரம்பிக்க சின்னாத்தாவாலும் எதுவும் செய்ய முடியாத நிலை. வயது முதிர்வால் தனக்கு பின் தன் பேத்திக்கு ஒரு ஆதரவு வேண்டுமென அமைதியாக, சுந்தரிக்கு தென்றலை ஒடுக்குவது ஒதுக்குவதும் சுலபமானது.
பதிமூணு வயது விமலனுக்கு தென்றலை பிடித்தாலும் சுந்தரிக்கு பயந்து அதிகம் பேசமாட்டான்.

காலையில் எழுந்து வாசல் தெளித்து மண் அடுப்பை வைத்து காலை சமையல் முடித்து வீட்டை சுத்தப்படுத்தி அனைவரின் துணிகளையும் துவைத்து என அனைத்து வேலைகளையும் முடித்து மத்திய சமையலையும் முடித்து மதியம் அனைவரும் உறங்கிய பின்னர் தென்றலின் ஒரே பொழுது போக்கு தொலைக்காட்சியில் சீரியல் பார்ப்பதுதான்.

பின் மீண்டும் அனைத்து வேலைகளையும் முடித்து பதினோரு மணி அளவில் ஹாலில் தன் பாட்டியுடன் உறங்கிவிடுவாள். பூந்தென்றலும் நன்றாக கலகலப்பாக பேசக்கூடியவள்தான். ஆனால் அது சின்னாத்தாவிடம் மட்டுமே அடுத்து அவள் மனசு விட்டு பேசுவது பேயாடிக்கொட்டை அந்த கருப்ப சாமியிடம் தான் .

கோவிலில் அர்ச்சனை செய்து பூஜையை முடித்துவிட்டு வீடு திரும்பினர் இருவரும். வீடு பூட்டி இருந்தது.

“ ஏன் ஆத்தா வீடு பூட்டி இருக்கு??. அத்தையும் மாமாவும் எங்க போயிருப்பாங்க ??”

“ தெரியலையே செல்வி வா முதல்ல உட்காருவோம்” என கூறி அந்த ஓட்டு வீட்டின் முன் இருந்த திண்ணையில் அமர்ந்தனர் பூந்தென்றல் செல்வியும் சின்னாத்தாவும்.

இவர்களுடைய வீடு ஒரு நீள் வாக்கில் ஹாலும் அதான் ஒரு முடிவில் நெல்லை வைக்க குதிரும் இன்னோரும் முடிவில் ஒரு அறையும் கொல்லை புற வாசலும் இருக்கும். இன்னொரு அறை நடு ஹாலை ஒட்டி இருந்தது. ஹாலில் இருந்த ஒரு அலமாரியில் சாமி படங்களை வைத்திருந்தனர். சமையலுக்கு கொல்லை புறத்தில் ஒரு ஓலைக்குடிசை வைத்து அதில் மண் அடுப்பை பதித்திருந்தனர்.

கேஸ் அடுப்பு இருந்தாலும் அதனை பூந்தென்றல் உபயோகிக்க கூடாது. மண் அடுப்பில் தான் சமைக்க வேண்டும். சுந்தரி அவளின் அவசர தேவைக்கே கேஸ் அடுப்பை பயன்படுத்துவாள்.

“ ஏன் ஆத்தா இம்புட்டு நேரமாச்சு எங்க போயிருப்பாக அத்தையும் மாமாவும்”

“ மாவா???. அது எதுக்குடி இந்நேரத்துக்கு ஆட்டபோற இன்னும் கொஞ்ச நேரம் செல்லட்டு அப்புறம் உரல்ல போட்டு ஆட்டிக்கலாம்” என சின்னாத்தா தன் கால்களை நீட்டி வெத்தலை போட்டுகொண்டு கூற

“ அதுசரி உன்கிட்ட போய் மெதுவா பேசுனே பாரு என்னைய சொல்லணும்”

“ என்னத்த மெல்லனும்??. ஏண்டி எனக்கு என்ன வயசா திரும்புது வெத்தலையை போட்டு மெல்ல. இருக்குறதே நாலு பல்லு. அதான் இடிச்சு போடுறேன், இதுல என்னத்துக்கு என்னைய மெல்ல சொல்ற” சின்னாத்தா வெத்திலையை வாயில் உதப்பிக்கொண்டு சொல்ல.

அதில் கடுப்பான பூந்தென்றல் “ சின்னாத்தா!!” என உரக்க கத்தவும் சுந்தரியும் கண்ணனும் வீட்டிற்கு வரவும் சரியாக இருந்தது.

“ நான் சொல்லல உங்க தங்கச்சி மக அமைதியெல்லாம் இல்ல சும்மா நம்ம முன்னாடி நடிக்குறான்னு. பார்த்திங்களா அவ போட்ட சத்தத்தை. அதுவும் அத்தை பேரை சொல்லி கூப்புடுறது” என சுந்தரி வந்தது பூந்தென்றலாய் பத்தி முறைப்புடன் கூறினாள்.

அதுக்கு எதுவும் கூறாது பூந்தென்றல் அமைதியாக தலை குனிந்து நிற்க.

“ ஆமா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. போ போய் சமைக்குற வேலைய பாரு. இந்தா சாவி” என்றாள் சுந்தரி.

அமைதியாக சாவியை வாங்கிக்கொண்டு யாரையும் நிமிர்ந்து பாராது தன் வேலைகளை பார்க்க சென்றாள் பூந்தென்றல்.

சுந்தரி பேசுனது எதுவும் சின்னாத்தாவுக்கு கேட்கவில்லை என்றாலும் இதுவரை சந்தோசமாக சிரிப்புடன் இருந்த பேத்தி வாடிய முகத்துடன் செல்வதை வைத்தே சுந்தரி எதுவோ கூறி உள்ளாள் என கணித்த சின்னாத்தா கோபத்துடன் அமைதியாக இருந்தார்.

“ அத்தை….. அத்தை……… நம்ம தரகர் பரமசிவம் இருக்காருல” என சத்தமாக சுந்தரி பேச சின்னாத்தா எதுவும் கூறாது தன் சுருக்கு பையில் இருந்த சில்லறைகளை எண்ணிக்கொண்டிருந்தார்.

அதனை கண்ட சுந்தரி ‘ இந்தா கிழவிக்கு உண்மையிலயே காது கேட்கலையோ இல்ல நான் பேசுறதை வேணும்ன்னே கேட்காத மாதிரி உட்கார்ந்துருக்கா’ என கடுப்புடன் எண்ணிக்கொண்டு கண்ணனிடம் கண்களை காட்டிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டாள் சுந்தரி.

“ அம்மா… அம்மா…” என சத்தமாக கண்ணன் அழைக்க சின்னாத்தா அமைதியாகவே இருந்தார்.

என்று சுந்தரியின் பேச்சுக்கு கண்ணன் தலையை உருட்ட ஆரம்பித்தாரோ அன்றிலிருந்து சின்னாத்தா தன் மகனிடம் பேச்சை குறைத்துவிட்டார். அதுவும் கடந்த இரண்டு வருடமாக சுத்தமாக பேச்சையே நிறுத்திவிட. அதைக்கூட உணராது இருக்கிறார் அம்மாவுக்கு காது கேட்கவில்லை என்று நினைத்துக்கொண்டு.

“ அம்மா தரகர் இன்னைக்கு ஒரு சம்மந்தம் கொண்டு வந்தாரு. நம்ம தென்றலுக்கு. பெரிய இடம். மாப்பிளை வீடு மெட்ராஸ்ல இருக்கு” என தன் போக்கில் கண்ணன் கூறிக்கொண்டிருக்கையில்,

தன் பேத்தியின் வாழ்க்கைக்காக தன் வைராக்கியத்தை உடைத்து பேசினார் சின்னாத்தா,

“ பெரிய இடம், மதராசுக்கு வேறயாக்கும். அந்த சம்மந்தம் எல்லாம் வேணாம். இம்புட்டு தொலைவுல எல்லாம் பொண்ணை கட்டிக்குடுக்க முடியாது. அப்படியே கட்டிக்குடுத்தாலும் பொழைக்குற பிள்ளையை மாதிரியா வளர்த்துருக்கோம் செல்விய” என வீட்டின் உள்ளே பார்த்து சுந்தரியை குத்துவது போல் கூறிவிட்டு

“ அதனால் உள்ளூர்லயோ இல்ல பக்கத்தூருலையோ நல்ல மாப்பிள்ளையா பாரு” என வேற எங்கோ பார்த்து கூறினார்.

இதனை உள்ளிருந்து கேட்டுக்கொண்டிருந்த சுந்தரிக்கு கோவம் கனன்றது. ‘ நான் ஒன்னும் நினைச்சா இந்த கிழவி நடக்கவிடாது போல’ என எண்ணிக்கொண்டு கொல்லைப்புற வழியாக ஓலைகுடிசையில் சமைத்துக்கொண்டிருந்த தென்றலின் முன் நின்றாள்.

வெளியே நடக்கும் பேச்சுவார்த்தை தென்றலுக்கு கேட்டாலும் யாருக்கு வந்த விருந்தோ என திருவிழாவின் காரணமாக மதியத்திற்கு விருந்து சமைத்துக் கொண்டியிருந்தாள்.

அப்போது அங்கு வந்த சுந்தரியை பார்த்து செய்துகொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு அமைதியாக தலை குனிந்து நிற்க,

“ ஆனா…. ஊனா… குனிஞ்சு நின்னுக்க” என சுந்தரி கடுப்புடன் கூற

“ ஆமா உங்க முகத்தை பார்க்க பிடிக்காமல் தான்” என மனதில் எண்ணிக்கொண்டு அமைதியாக நின்றாள்.

வெளியே கூறிவிட்டாள் பெரிய பிரளயமே வரும் என அறிந்த தென்றல் சிறுவயதில் இருந்து அதிகம் யாருடனும் பேசாமல் இருந்தாலும் சின்னாத்தாவை தவிர மற்ற அனைவரிடமும் மனதில் பதில் கூறிக்கொண்டு அமைதியாக நிற்பாள்.

“ உன்னைத்தாண்டி ஒழுங்கா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோ. ஒரு பொட்டு நகை வேணாம்ன்னு சொல்லி பொண்ணு மட்டும் போதுன்னு சொல்றாங்க. கல்யாண செலவும் அவுங்களோடது. இந்த மாதிரி ஓசியில யாரு உன்னைய கட்டிப்பா சொல்லு. போ போயி உன் ஆத்தாவுக்கு சொல்லி புரிய வை” என சுந்தரி கூறிவிட்டு மீண்டும் திண்ணையில் போய் கண்ணனுடன் நின்றுகொண்டாள் ஒரு முடிவு தெரியும் நோக்கத்துடன்.

சுந்தரியை தொடர்ந்து வந்த தென்றல்,

“ ஆத்தா எனக்கு அத்தையும் மாமாவும் சொல்றவங்களை கட்டிக்குறதுல சம்மதம்தான்” என சத்தமாக கூறினாள்

“ ஏண்டி கூறுகெட்டவளே உன்னையால இங்க இருந்து பக்கத்து தெருவுக்கே தனியா போக முடியாது. இதுல நீ அம்புட்டு தொலைவுல கட்டிக்குடுக்க சொல்றியா. அதுவும் தெரியாதவங்ககிட்ட” என சின்னாத்தா கடிய

“ ஏன் ஆத்தா அத்தையும் மாமாவும் என் வாழ்க்கையை கெடுக்கவா பார்ப்பாக. ஒரு வேளை இதுதான் என் தலையில எழிதிருக்கோ என்னவோ” என முடிவுடன் தென்றல் கூறினாள்.

ஆம் முடிவுடன்தான் யாருக்கும் பாரமாக இல்லமால் எப்பிடியாவது இங்கிருந்து சென்றுவிட வேண்டுமென. அதுவும் தனக்காக ஒரு பைசா செலவு செய்ய வேண்டியது இல்லை. ஒருவேளை சின்னாத்தா வேற சம்மந்தம் பார்த்தாலும் இதுபோல் வரதட்சனை நகை கேட்காமல் இருப்பார்கள் என்பதுக்கு என்ன நிச்சயம். அதோடு ஒரு வேளை வரதட்சனை நகைக்காக தன் கல்யாணம் நடக்காமல் போனால் கடைசிவரை இங்கு தன் ஆத்தாவுக்கு பாரமாக இருக்க வேண்டிய சூழல் வரும் என எண்ணி இந்த கல்யாணத்திற்கு ஒத்துக்கொண்டாள்.

“ ஏண்டி நீ என்னமோ மனசுல நினைச்சுகிட்டு சொல்ற”

“ இல்ல ஆத்தா முழு சம்மதத்தோடு தான் சொல்றேன்”

“ செல்வி கொஞ்ச பொறுமையா பார்போமேத்தா. இங்குன உள்ளூர்லயோ இல்ல பக்கத்தூர்லயோ….” என சின்னாத்தா கூறிக்கொண்டிருக்கையில் இடைபுகுந்த சுந்தரி

“ ஆமா இப்படி பக்கத்துல பக்கத்துலன்னு உங்க பொண்ணை பறிகொடுத்தது பத்தாதாக்கும்” என கூறினாள்

சுந்தரியின் பேச்சில் முகம் வாட அதோடு அமைதியாக இருந்த சின்னாத்தாவிடம்,

“ அம்மா மாப்பிள்ளை நம்ம பக்கத்தூர்ல இருந்தாருல பெரிய தனக்காரர் அரியநாயகம் அவரோட பேரன்மா” என கண்ணன் கூற

“ என்னடா சொல்ற அரியநாயகம் பேரனா???. அவனுக்கு ஒரு பையன் ரெண்டு பொண்ணுல”

“ ஆமா அம்மா அந்த பையன் அதான் திருவாசம் இருக்காருல அவரோட ரெண்டாவது பையன் மாறவர்மனுக்குத்தான் நம்ம தென்றலை கேட்குறாங்க”

“ இவ்வளவு பெரிய இடத்துலையா ஹ்ம்ம்…” என யோசித்த சின்னாத்தாவுக்கு மனதில் ஆசை,

‘ ஒரு வேளை நம்ம கருப்பன் காட்டுற இடமோ???. நம்ம பேத்தி பட்ட கஷ்டத்துக்கு நல்ல இடமா அமையுதோ??” என எண்ணிக்கொண்டு

“ சரிப்பா நாளைக்கு நான் யோசிச்சு சொல்றேன்” என கூறிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட கண்ணனும் பூந்தென்றல் செல்வியும் தங்கள் வேலைகளை பார்க்க சென்று விட்டனர்.

எஞ்சி இருந்த சுந்தரி திண்ணையில அமர்ந்த சிறுது யோசனைக்கு பிறகு ‘ ஒருவழியா இந்த தொல்லைபிடிச்சது இங்க இருந்து போக போது. நம்ம திட்டப்படி இந்த கல்யாணம் மட்டும் நடக்கட்டும் அப்புறம் இருக்கு கச்சேரி’ என மனதில் வன்மத்துடன் எண்ணிக்கொண்டிருந்தாள்.

சுந்தரியின் திட்டம் என்ன???.


கல்யாணம் நடக்குமா ????.

அடுத்த அத்தியாயத்தில் பாப்போம் friends


Plz drop ur comments friends





Sema pa
 
மாப்பிள்ளை சரியில்லையா. இந்த கல்யாணத்தில் சுந்தரிக்கு ஏன் வன்மம். அருமை சிஸ்.
 
Top