Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

1. இனித் தேடப் பாதையில்லையே!

Advertisement

ITP

New member
Member
காலைப் பொழுதில் சூரிய ஒளிக் கதிர்கள் எல்லா இடங்களிலும் நன்றாகப் பரவி ஒளி வீசிக் கொண்டிருக்கும் சமயத்தில்,

எங்குப் பார்த்தாலும் பச்சைப் பசேலென்று காணப்பட்ட அந்தக் கிராமத்தில் இருக்கும் ஒரு வீட்டின் உள்ளே பேச்சுக் குரல்கள் கேட்டது.

“உன்னோட பொருட்களை எல்லாம் எடுத்துட்டியான்னுச் செக் பண்ணு” என்று தன் தங்கையிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் நதியா.

“எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டேன் க்கா. இங்கே பாரு” என்று தனது தோற்பையை அவளிடம் காட்டினாள் அவளது தங்கை நளினி.

“ம்ம். சூப்பர்! இப்போ பத்திரமாகப் போயிட்டு வா” என அவளைத் தோளில் தட்டிக் கொடுத்தவளிடம்,

புன் சிரிப்புடன்,”எப்பவும் ஸ்கூல் பஸ் வர்ற வரைக்கும் என் கூடவே வந்து வெயிட் பண்ணிட்டு இருப்பியே? இப்போ என்னாச்சு?” என்று சந்தேகத்துடன் வினவவும்,

“இதோ வரத் தான் போறேன்” என்று கூறியபடியே அவளுடன் இணைந்து நடக்கத் தொடங்கினாள் நதியா.

“அச்சோ!” என்று தலையிடித்தபடி நடையைப் போட்டாள் அவளது தங்கை நளினி.

இருவரும் சேர்ந்து அவளது பள்ளிப் பேருந்து வந்து நிற்கும் இடத்தை அடைந்து விட்டிருக்க, அங்கே இருந்த பெஞ்ச்சில் அமர்ந்து கொண்டு காத்திருக்கலானார்கள்.

“எனக்கு ஈவ்னிங் என்னச் சமைச்சுத் தரப் போற?” எனத் தன் அக்காவிடம் ஆர்வத்துடன் கேட்டவளைப் பார்த்துப் புன்னகைத்த நதியாவோ,

“என்ன வேணும்னாலும் சொல்லு. நான் சமைச்சுத் தர்றேன்” என்று அவளுக்கு உறுதி அளித்தாள்.

“ம்ஹ்ம்! வெஜ் புலாவ் பண்ணி வை க்கா “ என்றாள் அவளது தங்கை.

“ஓகே டன்!” என்று அவளுக்கு வாக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் போதே பள்ளிப் பேருந்து வந்து விட்டது.

அதனால்,”பஸ் வந்துருச்சுப் பாரு. போயிட்டு வா” என அவளை அதில் ஏற்றி, ‘டாடா’ காட்டி விட்டுத் தன் இல்லத்திற்கு விரைந்தாள் நதியா.

அந்த வீடு அமைதியே உருவாக காணப்பட்டதைப் பொருட்படுத்தாமல் தனது ஆன்ட்ராய்டு ஃபோனைக் கையிலெடுத்து, அதில் ‘யூடியூப்’ என்னும் செயலியைத் திறந்து, அதில், தனது தங்கை கேட்ட ‘வெஜ் புலாவ்’ செய்வது எப்படி? என்ற காணொளியைத் தேடிப் பார்க்கத் தொடங்கி விட்டாள்.

அஃது அவளது அன்றாட வேலைகளில் ஒன்றாகும். தன்னுடைய உடன்பிறந்த தங்கைக்குப் பிடித்தமான உணவு வகைகளைத் தினமும் அவள் பள்ளியை விட்டு வந்தப் பிறகுச் செய்து கொடுப்பது தான் அவளது வழக்கமாக இருந்தது.

நதியா மற்றும் நளினியின் பெற்றோருக்குச் சொந்தமாக ஒரு மெஸ் உள்ளது. அங்கு தான், அவர்கள் இருவரும் காலை மற்றும் இரவு வரை சென்று வியாபாரத்தைப் பார்ப்பார்கள்.

இப்போதும் கூட, அதிகாலையிலேயே அவர்களது தந்தை கணேசன், அங்கே கிளம்பிச் சென்று விட, தாயோ, மகள்கள் இருவருக்கும் சமைத்து வைத்துச் சென்று விட்டார்.

அதற்குப் பிறகு தான், தனது பள்ளிக்குத் தயாராகித், தமக்கையுடன் சம்பாஷித்து விட்டுப் பள்ளிப் பேருந்தில் ஏறிப் போயிருந்தாள் அந்த வீட்டின் இளையவள் நளினி.

அவள் சென்றதும், தனது வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள் நதியா.

அப்போது, அவளது செல்பேசி இசைக்கவும், அதை எடுத்து அட்டெண்ட் செய்து காதில் வைத்தவளோ,”ம்மா! நளினி ஸ்கூலுக்குக் கிளம்பிப் போயிட்டா. இப்போ தான் விட்டுட்டு வந்தேன்” என்று அவரிடம் கூறவும்,

“இதை நான் கால் பண்றதுக்கு முன்னாடியே நீயே ஃபோன் பண்ணி சொல்லி இருக்கனும் தானே? நான் உனக்கு எத்தனை தடவை சொல்றது? அக்காவும், தங்கச்சியும் மட்டும் வீட்டில் இருந்தால் போதும்! எல்லாத்தையும் மறந்துட வேண்டியது!” என்று மகளை அதட்டினார் சிவசெல்வி.

“சாரிம்மா” என அவரை மலையிறக்கும் விதமாக மன்னிப்புக் கேட்டாள் நதியா.

“ம்ஹூம். சரி, சரி. உங்கப்பா மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துருவார். நீ சமைக்கிறியா? நான் செய்யவா?” என்றார் அவளது அன்னை.

“நீங்களே சமைங்க ம்மா. ப்ளீஸ்!” என்று அவரிடம் வேண்டினாள் அவரது மூத்த மகள்.

“ஏன்? அவளுக்காக இன்னைக்கு ஏதாவது புது ஐட்டம் செஞ்சுத் தரப் போறியா?” எனக் கேட்கவும்,

“ஆமாம் மா” என்று அசடு வழிந்தபடி உரைத்தாள் நதியா.

“ஓகோ! உங்கப் பாசத்துக்கு நான் பாயாசம் ஆகனுமா?” என்று அவளிடம் கடுகடுத்தார் சிவசெல்வி.

“இந்த ஒரு தடவை ம்மா!” என்று அவள் அதிகமாக கெஞ்சவும், அதற்குப் பிறகும் அவர் தன் பிடியைத் தளர்த்திக் கொள்ளாமல் இருப்பாரா?

ஆகவே,”நானே சமைக்கிறேன். காயையாவது வெட்டி வை டி!” என்று அவளிடம் கூறி விட்டு அழைப்பை வைத்தார் அவளது தாய்.

அதன் பின்னர், காணொளியைப் பார்க்கும் வேலையைத் தொடர்ந்தாள் நதியா.

கணேசன் மற்றும் சிவசெல்வியின் மூத்த மகள் தான் இந்த நதியா!

தனது முதுகலைத் தமிழ்ப் படிப்பை முடித்து விட்டு இப்போது வீட்டிலேயே டியூஷன் எடுத்துக் கொண்டு இருக்கிறாள். அதற்கு முந்தைய வருடங்கள் யாவும் அவளுக்கு மறையாத வடு ஒன்றை மனதினுள் புகுத்தி விட்டு அவளைக் கண்ணீர் வடிக்கச் செய்திருந்தது. இப்போது தான், அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிக் கொண்டிருக்கிறாள்.

அவளது பெற்றோரோ, மகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் முனைப்புடன் செயல்படுகிறார்கள்.

தானும் அதற்கு ஒப்புக் கொண்டு விட்டாள் நதியா. சொல்லப் போனால், இதற்கு அவள் முழு மனதாகத் தான் சம்மதித்து விட்டிருந்தாள்.

ஏனென்றால், இனிமேல் தன்னுடைய வாழ்க்கையை மனதார ரசித்து, நிம்மதியாக வாழ வேண்டும் என்ற ஆவல் பிறந்தது அவளுக்கு.

அதனால் தான், தன் பெற்றோர் தனக்காகத் தேர்ந்தெடுக்கும் மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்டத் தயாராகி விட்டாள் நதியா.

அந்தப் புலாவ் செய்யும் முறையைப் பார்த்து முடித்ததும், அதில் கூறப்பட்டிருந்த தேவையானப் பொருட்களை எல்லாம் தயாராக வைத்து விட்டு, காய்கறிகளை மட்டும் தங்கை வீட்டிற்கு வந்தப் பின்னர் வெட்டிக் கொள்ளலாம் என்று சிறிது நேரம் தொலைக்காட்சிப் பெட்டியில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

மதிய உணவு நேரம் வந்ததும், தனது தாய் வீட்டிற்கு வருவதற்குள் அவர் சமையல் செய்வதற்கு உதவியாக காய்கறிகளைத் துரிதமாக வெட்டி வைத்து விட்டுக் காத்திருந்தாள் நதியா.

அதற்குப் பிறகுச், சில நிமிடங்களிலேயே வீட்டிற்கு வந்த அவளது அன்னையோ,”ம்ம். காய் எல்லாம் கட் பண்ணி வச்சாச்சு போலவே?” என்றதும்,

“ஆமாம் மா” என அவர் குடிப்பதற்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்ததும் அதை வாங்கிப் பருகி முடித்து விட்டுச் சமையலை ஆரம்பித்தார் சிவசெல்வி.

அவருக்குத் தன்னாலான உதவிகளைச் செய்தாள் நதியா.

சமையலும் முடிந்திருக்க,”என் கூட சாப்பிட்றியா? உங்க அப்பா கூடச் சேர்ந்து சாப்பிடப் போறியா?” என்று மகளிடம் கேட்கவும்,

“உங்க கூடவே சாப்பிட்றேன் ம்மா” எனத் தட்டில் உணவை எடுத்துக் கொண்டு அவருடன் சேர்ந்து உண்டு முடித்தாள்.

“ஒரு பத்து நிமிஷம் ரெஸ்ட் எடுத்துட்டுப் போங்க” எனச் சொன்னாலும் அவர் கேட்பதில்லை.

உடனே கடைக்குச் சென்று விட்டுத் தன் கணவனை வீட்டிற்கு அனுப்பி வைத்தார் சிவசெல்வி.

“ரொம்ப பசிக்குது ம்மா” என்றதும், அவருக்கு உணவு பரிமாறினாள் நதியா.

“இன்னைக்கு உன் தங்கச்சிக்கு என்னச் சமைச்சுத் தரப் போற?” என்று அவளிடம் பேசியபடியே சாப்பிட்டார் கணேசன்.

அதற்கு அவளும்,”வெஜ் புலாவ் ப்பா” எனக் கூற,

“ம்ம். சூப்பர்!” என்றதொரு பாராட்டு அவரிடமிருந்து கிடைத்தது.

“தங்கச்சி வந்ததும் இரண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் துணையாகப் பத்திரமாக இருந்துக்கனும்” என அவளிடம் அறிவுறுத்தி விட்டு அவர் கடைக்குப் போய் விட, இனி இரவு தான், அவர்கள் இருவரும் வீடு திரும்புவார்கள்.

அவளது தங்கையும் கூட, மாலை ஐந்து மணிக்குத் தான் பள்ளி முடிந்து வருவாள் என்று அந்த நேரம் வரும் வரை உறங்கப் போய் விட்டாள் நதியா.

அவளோ, முதுகலைப் படிப்பை முடித்தப் பின்னர், வேலை பார்க்கலாம் என்று தேடிக் கொண்டிருக்கிறாள்.

அப்படி அவளுக்கு வேலை கிடைத்து விட்டால், திருமணமும் அமைந்து விட்டால், அவளுடைய எதிர்கால வாழ்க்கைச் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்த்துக் கொண்டுள்ளார்கள் அவளது பெற்றோர்.

மாலை ஆனதும், தனது தங்கையின் வரவை எதிர்பார்த்திருந்தாள் நதியா.

சரியாக, ஐந்து மணிக்கெல்லாம் வந்து விடுபவள், இன்றைக்கு வீடு திரும்ப தாமதமாகும் போலிருக்கிறதே! என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே வீட்டினுள் நுழைந்தாள் நளினி.

“வா, உன்னை இன்னும் காணலையேன்னுப் பார்த்துட்டு இருந்தேன்” என்றாள் நதியா.

“இன்னைக்குக் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கிளாஸஸ் நடந்துச்சு நதி” என்று அவளிடம் சொல்லி விட்டு தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்தாள் அவளது தங்கை.

“நான் வர லேட் ஆனாலும் கூட நீ டீ போட்டுக் குடிக்க மாட்டல்ல?” என்று சலித்தவளிடம்,

“ஆமாம். எனக்கு ஒத்தை ஆளுக்கு மட்டும் எல்லாத்தையும் செய்துக்கிறதுக்கு ஒரு மாதிரி இருக்கு” என்று பதிலளித்தாள் நதியா.

“ஓஹ்ஹோ” என்றவளோ, அதன் பிறகுத், தாய்க்கு அழைத்து, தான் வீட்டுக்கு வந்து விட்டதாக தகவல் தெரிவித்து விட்டுத் தமக்கைத் தனக்குப் போட்டுக் கொடுத்த தேநீரைப் பருகினாள் நளினி.

முதலில் வீட்டுப் பாடங்களை முடித்து விட்டுப் பிறகுச் சகோதரியுடன் சேர்ந்து தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்து விட்டாள்.


இரவு நேரத்தில், தங்கள் மூவருக்கும் மதியம் சமைத்து வைத்த உணவே போதும் என்பதால், தங்கைக்கு மட்டுமாகப், புலாவ் செயயத் தொடங்கியவளோ,

தங்களது பெற்றோர், வீட்டிற்கு வரும் நேரத்தில் சாதம் வைத்துக் கொள்ளலாம் என்று சமைத்து முடித்தவள்,”புலாவ் ரெடி! வந்து சாப்பிடு, வா” எனத் தங்கையை அழைத்தாள் நதியா.

“உனக்கு மட்டும் தனியாகச் செய்துக்கிறது ஒரு மாதிரியாக இருக்கும் போது, எனக்கு மட்டும் இப்படி ஸ்பெஷலாகச் செய்றியே! இது எந்த விதத்தில் நியாயம்?” என்று அவளிடம் கேள்வி எழுப்பினாள் நளினி.

“எனக்கும், அப்பா, அம்மாவுக்கும் ஏதாவது சாப்பிடு பிடிச்சா அதைக் கண்டிப்பாக நான் சமைப்பேன் டி! நீ இப்போ இதைச் சாப்பிட்டுப் பாரு” என அவளுக்கு விளக்கம் கொடுத்து விட்டு உண்ணச் சொல்லிப் பரிமாறினாள் அவளது தமக்கை.

அவள் சமைத்ததைச் சாப்பிட்டுப் பார்த்து விட்டு,”எப்பவும் போல கலக்கிட்ட போ!” என்று அவளைப் பாராட்டி விட்டு உண்டாள்.

அதைக் கேட்டதும், இவளுக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

நளினி உணவுண்டு முடித்த சமயத்தில், அவர்களது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டனர்.

“ம்மா! ப்பா! அக்கா புலாவ் செஞ்சுக் கொடுத்தாளே!” என்று அவர்களிடம் பெருமிதத்துடன் கூறினாள்.

“ம்ஹ்ம்! எங்களுக்கும் கொஞ்சம் கிடைக்குமா?” என்று மக்களைப் பார்த்துக் கேட்டார் கணேசன்.

“கண்டிப்பாக கிடைக்கும் ப்பா” என அவர்களுக்கும் அதைப் பரிமாறினாள் நதியா.

அத்துடன் சேர்த்து, அவள் சாதமும் வைத்துக் கொடுக்க அவர்களும் தங்களது இரவு உணவை முடித்துக் கொண்டார்கள்.

நதியாவின் படிப்பு முடியும் வரை, நகரத்தில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார்கள் அவளும், அவளது குடும்பமும்.

அங்கே செலவுகள் கட்டுப்படியாகாததால், மூத்த மகளின் படிப்பு முடிந்ததும், இந்தக் கிராமத்திற்கு வந்து குடியேறி விட்டார்கள்.

அவர்கள் இங்கே வந்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. அது என்னவென்பது போகப் போகத் தான் வெளியே வரும்.

- தொடரும்
 
Top