Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

24. விடை தேடி

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
நேரம் காலம் எல்லாம் பார்க்கவில்லை. விறுவிறுவென குளக்கரை கோயிலுக்கு வந்த ரத்தினம், உடனே ஹோமத்தை ஆரம்பித்தார். நேரம் சூரிய உதயத்தை நெருங்கும் நேரம் வந்தார் யோகி.

ரத்தினா.. எக்காரணம் கொண்டும் பூஜையை நான் சென்று வரும் வரை நீ நிறுத்தவேக் கூடாது. உன் முழு சக்தியையும் இப்பூஜையில் நிறுத்து. இன்று நாம் அதை அழிக்கும் வழிவகையை உருவாக்கியே ஆக வேண்டும். ம்ம் நிறுத்தாதே... உரக்க மந்திரங்களை உச்சரி.

கோவிலை சுற்றி வலம் வந்த யோகி.. கண்களை மூடி கிழக்கில் உதயமாகிக் கொண்டிருக்கும் செங்கதிரோனை வணங்கி, ஒரு தீர்க்கமான பார்வையுடன், குளத்தில் இறங்கினர். உள்ளேயே சிலமணி நேரம் தியானத்தில் அமர்ந்திருந்தவர், ஒரு திடுக்கிடலுடன் கண்களைத் திறந்து வேக நடையோடு மீண்டும் கோவில் உள்ளே நுழைந்தார்.

ரத்தினா... நாம் அதை அழிக்கும் வழி உண்டு. ஆனால் அதற்கு முழுப் பலனும் கிடைக்க சில மாதங்கள் பிடிக்கும்.

இப்போது அந்த உருவம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் குடும்பத்தில் பிறந்த ஒருவன் தான் அந்த உருவத்தின் அழிவிற்கு காரணமாக இருப்பான். அவன் மூலமே அதன் அழிவு அமையும்.

ஆனால்... ஆனால் அவளது தாயின் ஆத்ம பலத்தால் மட்டுமே அது முடியும்.

சாமி.....

ம்ம்.. ஆம் அவளது ஆத்மா தான் அவளது மகனுக்காக சக்தியாய் உருமாறும். இன்றிலிருந்து ஒரு மண்டலம் அவளை தொடர்ந்து வீட்டில் குலதெய்வ வழிபாடு செய்யச் சொல். ஒரு மண்டலம் முடிந்த மறுநாள் வீட்டில் நற்செய்தி வந்து சேரும்.

அச்செய்தி சேர்ந்த மறுவாரமே இவளது உயிர் பிரியும். அதுவும் கணவனோடு. அனைத்திற்கும் அவளை தயாராக இருக்கச் சொல். அவளது மகனுக்கு பலன் கிட்டும் சமயம் நாகர்மலை பயணப்படுவான். நீயும் ஒரு காரணியாக இருக்க வேண்டும் என்பது அந்த எம்பெருமானின் கட்டளை.

நாம் இவ்வளவு செய்து உருவாக்கும் அந்த பலன், உருவத்தை விடுவித்தவன் அலைந்து திரிந்து உயிருறுகி நாகர்மலை சென்று அவன் மூலமே அவன் மகனுக்கு செய்தியாய் தெரிவித்தால் மட்டுமே தெரிய வர வேண்டும்.

முடிந்தால் நான் கூறும் வார்த்தைகளை நாகர்மலையினில் அவனுக்கு தெரியப்படுத்துவது சாலச் சிறந்தது.

ஆத்மபலன் பூஜை செய்து அவளுக்கு அன்னையவள் செஞ்சாந்தை கொடுத்தனுப்பு. தினமும் அவளது நெற்றியில் அச்சாந்து நீங்காது இடம் பெற்றிருக்க வேண்டும். நினைவில் வைத்துக் கொள். நான் கூறிய அனைத்தையும்.

இப்போது நான் கிளம்புகிறேன். மீண்டும் தக்க சமயத்தில் வருவேன்.. காத்திரு. என்றதோடு அவர் சென்று விட்டார்.

மறுபடியும் பூஜை செய்து யோகி கூறியபடி அனைத்தையும் சொன்ன, ரத்தினம், தனாவை கைகாட்டி இவனாக கூட இருக்கலாம் என்று சொல்லி அனுப்பினார்.

ஆக, நாதனுக்கு முன்பே, மகா அம்மா தன் மரணத்தை அறிந்து, தன் குடும்பத்திற்க்காக அவரையே பலமாக மாற்றிக் கொண்டார்.

அவர் நெற்றியில் இருந்த செஞ்சாந்து தான் அந்த உருவத்தை நெருங்க விடாமல் தடுத்தது. இறக்கும் தருவாயில் மனமுருகி வேண்டி, என் ஆத்ம பலத்தால் அந்த உருவத்தை அழிக்கும் பலம் என் மகன்...என் மகன் என மற்ற இருவரின் பெயரையும் உச்சரிக்க முயற்சி செய்ய அவரால் முடியவில்லை. என் மகன் கீர்த்தனாவிற்கு கொடு என்பதோடு அவரது உயிரும் உடலை விட்டுப் பிரிந்தது.

தனாவிற்கு இன்று வரை துணையாய் இருந்து காத்து வருவதும் அந்த பலன் தான்.

எல்லாவற்றையும் சொல்லி முடிக்க, தனா அப்படியே மயங்கிச் சரிந்தான்.

குமரவேல், வேலன், யாழினி என மூவரும் பதட்டப்பட, ரத்தினமும், நீலகண்டரும் பதட்டப்படாமல் அமைதியாக அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

யாழினி வேகமாகச் சென்று தண்ணீரை கொண்டு வந்து அவனது முகத்தில் தெளிக்க, கண்களை கசக்கியபடி எழுந்து அமர்ந்தான்.

என்ன தனா நான் சொன்னதை கேட்டதும் மயங்கிட்ட.

இல்ல ஐயா அம்மா.. அம்மாவோட குரல் எனக்கு கேட்டுச்சு. எனக்கு ஒன்னும் புரியல... அம்மா... அம்மா இங்க தான் எங்கயோ இருக்காங்க... நான் போறேன்.

தனா... நில்லு. எங்க போற. மகா இறந்து ஆறுமாசம் ஆச்சு. இறந்து போன உங்க அம்மா எப்பிடி இங்க வரமுடியும்.

இல்ல ஐயா நான் கேட்டேன். அம்மா குரல் தான். என்னை கீர்த்தனா கீர்த்தனான்னு கூப்பிட்டாங்க.

குரலை வச்சு எப்பிடி நீ உங்க அம்மான்னு சொல்லுற.

அய்யோ ஏன் யாரும் நம்ப மாட்டேங்குறீங்க. நான் கேட்டேன் கேட்டேன்..கேட்டேன்.

அப்போ கேட்டது உங்க அம்மா குரலா?

ஆமா.

எங்கிருந்து கேட்டது.

இங்க தான். இங்க எங்கோ பக்கத்துல இருந்து.

இல்ல.

ஆமா.

இல்ல இங்க பக்கத்துல இருந்து கேக்கல. உன்கிட்ட... உன்கிட்ட இருந்து தான் கேட்டிருக்கு.

ஐயா.

ஆமா. உனக்கு உங்க அம்மாவோட குரல் கேட்டது உண்மை. ஆனா அது வெளிய இருந்து கேட்கல. உனக்குள்ள இருந்து தான் கேட்டிருக்கு.

ஐயா...

ஆமா தனா.. உனக்குள்ள இருந்து தான் கேட்டிருக்கு. அதான் உன்னோட பலம். உன் அம்மா உன்கிட்ட தான் இருக்காங்க. ம்ம் இன்னும் நல்லா கவனி. உன்கிட்ட ஏதாவது பேசலாம்.

பட்டரே...

ம்ம் கவனி தனா.

ம்ம்கூம்.. அவன் மனதை இப்போது அவனால் அமைதிப்படுத்தவே முடியவில்லை.

அய்யோ முடியலையே...

உன்னால முடியும்.... ம்ம் கேளு.....

அதிர்ந்து எல்லோரும் திரும்பி பார்க்க, அகரயாழினி தான் பேசியிருந்தாள்.

உன்னால் முடியும் கீர்த்தனா.. முயற்சி செய். உன் முயற்சியின் முடிவில் கிடைக்கப் போகும் பதில் தான் உன் பயணத்தையே தீர்மானிக்கப் போகிறது.

ம்ம்... ஆழ்ந்த மூச்சிழுத்து என் கண்களை பார்த்தபடி இப்படி வந்து நில்.

சாந்தம் நிறைந்த அந்த கண்களை கண்ட நொடி... அவன் மனம் மெல்ல மெல்ல அமைதியடைய தொடங்கியது.

யோசித்தான். அவனும் மகாவும் ஒன்றாக இருந்த நிகழ்வுகள் அனைத்தையும் யோசிக்க,

கீர்த்தனா....

அம்மா...

அழாத கீர்த்தனா.. அம்மா எப்போவும் உன் கூட தான் இருப்பேன்.

நான் உன்ன நம்பி தான் நம்ம குடும்பத்தை விட்டுட்டு போனேன்.

அண்ணனுங்களும் உன்ன விட்டு போனது உனக்கு ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும். ஆனாலும் தளராம நீ உனக்கான பதில தேடி வந்துட்ட கீர்த்தனா.

நம்ம குடும்பத்துல இருக்குற மத்தவங்களை நீ தான் காப்பாத்த போற. தைரியமா இரு. உனக்கு பலன் என்னோட ஆத்மா தான். புரிஞ்சு நடந்துக்கோ.

அம்மா எது சொன்னாலும் நீ கேட்ப தானே.

ஆமாம்மா...

அப்போ நீ... நீ....


விடை தேடி பயணம் தொடரும்....
Prabhaas....
 
Top