Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

3. இனித் தேடப் பாதையில்லையே!

Advertisement

ITP

New member
Member
அதற்குப் பிறகு, நதியாவைப் பற்றிய எந்தச் செய்தியையும் கேள்விப்பட்டதில்லை அவன்.

ஆனால், அவளது காதலனுடனான திருமணம் நின்று போய் விட்டது என்பதை சில காலங்கள் கழித்து அறிந்து கொண்டான் பிரகதீஸ்வரன்.

அந்தச் செய்தி தன்னுடைய தாயின் காதுகளையும் எட்டியிருக்க,

எனவே,”அவங்க குடும்பத்தைப் பத்தித் தெரிஞ்சிக்கிட்டு நானா வலியப் போய் அவங்ககிட்டப் பொண்ணுக் கேட்டேன். ஆனால், அந்தப் பொண்ணு ஏற்கனவே ஒரு பையனைக் காதலிக்கிறா, அவனுக்குத் தான் கல்யாணம் செய்து வைக்கப் போறோம்ன்னு சொல்லவும் மனசுக்கு ரொம்ப கஷ்டமாகப் போச்சு. இப்போ அந்தப் பையன் அவங்க மூஞ்சியிலே கரியைப் பூசிட்டுப் போயிட்டான்! என்னத்தைச் சொல்ல? அவரவர் விதி!” என்று தன் அக்கம் பக்கத்து வீட்டாரிடம் சொல்லிக் கொண்டு இருந்தார் மங்கலவல்லி.

அதைக் கேட்ட அவரது மகனோ,”ம்மா! இங்கே வாங்க” என்று அவரை உரக்க அழைக்கவும்,

உடனே வீட்டிற்குள் போய்,”என்னப்பா?” என்றார் அவனது அன்னை.

“என்னம்மா பண்ணிட்டு இருக்கீங்க? அந்தப் பொண்ணைப் பத்தியோ, அவளோட விதியைப் பத்தியோ பேசுறதுக்கு நமக்கு என்ன உரிமை இருக்கு? இதையெல்லாம் அவங்ககிட்ட போய்ச் சொல்லி என்னச் செய்யப் போறீங்க?” என்று அவரைக் கடிந்து கொண்டான் பிரகதீஸ்வரன்.

அதில் கொஞ்சம் திடுக்கிடல் ஏற்பட அவனிடம் சென்ற மங்கலவல்லியோ,”நான் என்னோட ஆதங்கத்தைக் கூட பேசக் கூடாதா டா? அன்னைக்கே உன்னைக் கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு வந்திருந்தால் எவ்வளவு நல்லா பார்த்திருப்போம்? என்னச் செய்ய? அவளுக்குக் கொடுத்து வச்சது அவ்வளவு தான்!” என்று அவனிடமும் புலம்பி முடித்தார்.

“அந்தப் பொண்ணுக்கு ஏற்கனவே ஒரு பையனைக் கல்யாணம் பண்ணி வைக்க முடிவு செய்ததுக்கு அப்புறமும் நீங்கப் போய்ப் பேசினது தப்பு தானே ம்மா?” என்று தன்னிடம் வினவிய மகனிடம்,

“அது எனக்கு முன்னமேயே தெரியாதே ப்பா! அப்படித் தெரிஞ்சு இருந்தால் நான் போயிருப்பேனா?” எனத் தன் பக்க நியாயத்தை அவனுக்கு விளக்கினார் மங்கலவல்லி.

“சரி. அதில் உங்க மேலே தப்பு இல்லை தான் ம்மா, ஆனால், அதுக்கப்புறம் அந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் நடந்தால் என்ன? நடக்கலைன்னா என்ன? எதுக்கு இப்படி அவளைப் பத்தி அவதூறு பரப்புறீங்க?” என்று அவரிடம் தன்மையாக உரைத்தான் பிரகதீஸ்வரன்.

“அவதூறு பரப்புறேனா? நீ என்னப்பா அவளுக்கு இப்படி வக்காலத்து வாங்கிட்டு இருக்கிற?” என்று எரிச்சலுடன் கூறியவரிடம்,

“வக்காலத்துன்னு ஒன்னும் இல்லைம்மா. அவங்களுக்கும், நமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைன்ற அப்போ அவங்களைப் பத்தி எல்லார்கிட்டயும் குறை சொல்றது நல்ல விஷயம் இல்லை தானே ம்மா? அதான் சொன்னேன்” என்று இவன் இன்னும் விளக்கிக் கூறவும்,

அதில், ‘ஏன் தான், இவன் வீட்டில் இருக்கும் சமயத்தில் பக்கத்து வீட்டாரிடம் பேசிக் கொண்டிருந்தேனோ?’
என்று தன்னையே மனதிற்குள் கடிந்து கொண்ட மங்கலவல்லியோ,

“சரிப்பா. நான் இனிமேல் அவளைப் பத்திப் பேசலை” என்று அவனிடம் சமாதானமாகச் சொல்லி விட்டார்.

ஆனால், அதன் பின்னர் வந்த நாட்களில், அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, அந்தப் பெண்ணைத் தனக்கு மீண்டும் கேட்டுப் பார்க்குமாறு தன்னிடம் வந்து நின்றவனை, உச்சபட்சக் கோபத்துடன் ஏறிட்டார் அவனது அன்னை.

“உங்களோட கோபம் எனக்குப் புரியுது ம்மா. ஆனால், எனக்கும் இன்னும் எந்தப் பொண்ணும் அமையலை. அந்தப் பொண்ணோட கல்யாணமும் நின்னுப் போச்சு! அதனால், நான் அவளையே கல்யாணம் செய்துக்கிறேனே?” என்று இயல்பாகச் சொல்லிய தன் மகனிடம்,

“நீ ஏன் அவளைக் கல்யாணம் பண்ணிக்கனும்? உனக்கு என்ன அவளை மாதிரி காதல் தோல்வியா? உனக்கு எந்தச் சம்பந்தமும் அமையலைன்னு யாருடா சொன்னா? ஒரு நாளைக்கு எத்தனைப் பொண்ணோட ஜாதகம் வருதுன்னுத் தெரியுமா? நீ அதில் யாராவது ஒருத்தியைத் தேர்ந்தெடு. மத்ததை நான் பார்த்துக்கிறேன். அதை விட்டுட்டு இப்படி கிறுக்குத்தனமாகப் பேசிட்டுத் திரியாதே டா!” என்று அவனைக் கன்னாபின்னாவென்று திட்டித் தீர்த்து விட்டார் மங்கலவல்லி.

“ப்ச்! ம்மா! இப்போ எதுக்குக் கத்துறீங்க? எனக்கு அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கத் தான் இஷ்டம். உங்களால் கேட்க முடியலைன்னா சொல்லுங்க. நான் போய் அவங்க வீட்டில் பேசுறேன்” என்றவுடன்,

“பேசுவடா! பேசுவ! நான் என்னச் செத்தா போயிட்டேன்? உனக்கு யாருமே இல்லாத மாதிரி உன் கல்யாணத்துக்கு நீயே போய்ச் சம்பந்தம் பேசப் போறியாக்கும்?” என்று இன்னும் சாமியாடினார் அவனுடைய தாய்.

“இப்போ என்ன தான் ம்மா சொல்றீங்க?” என்று அவரிடம் முடிவாக கேட்டான் பிரகதீஸ்வரன்.

அதற்கு அவரோ,”கொஞ்ச நாள் பொறு. நான் அவங்ககிட்டே பேசுறேன்” என மகனுடைய கூற்றிற்கு இணங்கிச் சம்மதம் தெரிவித்தார் மங்கலவல்லி.

“சரிம்மா” என்றவனுக்கு, இதற்கு முன்பு நதியாவின் மீது எந்தத் தனிப்பட்ட விருப்பமும் ஏற்பட்டதில்லை.

ஆனால், அவள் தான் தன்னுடைய தாய் தனக்கு முதல் முதலாகப் பார்த்தப் பெண் என்ற எண்ணமும், அவளுடைய முதல் காதலின் தீவிரமும் தான் அவளைத் திருமணம் செய்து கொள்ளப் பிரகதீஸ்வரனை முடிவெடுக்கச் செய்தது.

அந்த அளவிற்கு அவளது ஆழமான காதலைப் பற்றி அறிந்திருந்தான்.

அதனாலேயே, அவளைத் தன்னுடைய மனைவியாக்கிக் கொள்வதற்கு விருப்பப்பட்டான் பிரகதீஸ்வரன்.

ஆனால், அதே காரணத்திற்காகத் தான், நதியாவைத் தன் மகன் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதை எதிர்த்தார் அவனது அன்னை.

ஒருவனைக் காதலித்து, அவனைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஊரறிய பரவி விட்டப் பின்னர் அந்தத் திருமண ஏற்பாடு எதிர்பாராத விதமாக முறிந்து போனதும் அவளைத் தன்னுடைய மகனுக்குக் கல்யாணம் செய்து வைக்கும் அளவிற்குத் தனக்குப் பரந்த மனமில்லை என்பதை அவனிடம் பலநூறு முறைகள் சொல்லிப் பார்த்துக் களைத்துப் போய் விட்டார் மங்கலவல்லி.

ஆனால், அவரது பேச்சைப் பிரகதீஸ்வரன் கேட்க வேண்டுமே?

அதனால், என்ன தான் அவனிடம் சம்மதம் தெரிவித்து இருந்தாலும் கூடச் சிறிது நாட்கள் காத்திருக்கலாம் அவனது மனம் மாறி விட வாய்ப்புண்டு என்று முடிவெடுத்தார் மங்கலவல்லி.

அவர் காத்திருந்த நாட்கள் தான் வீணாகியதே தவிர பிரகதீஸ்வரனுடைய முடிவில் எந்த மாற்றமும் வரவில்லை. எனவே, அவன் வழிக்கே வர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு வந்து விட்டார் அவனுடைய தாய்.

இப்படியாகத் தான், வேண்டாவெறுப்பாக நதியாவின் பெற்றோரிடம் சென்று மீண்டும் ஒருமுறை தன் மகனுக்காகப் பெண் கேட்கும் விதமாக, அவர்களது மெஸ்ஸைத் தேடிக் கண்டுபிடித்துப் போய்,

அங்கே கல்லாவில் அமர்ந்திருந்த கணேசனிடம்,”ஐயா! என்னை அடையாளம் தெரியுதுங்களா?” என்று அவரிடம் பேச்சைத் தொடங்கினார் மங்கலவல்லி.

அவரை நன்றாக உற்றுப் பார்த்து விட்டு,”தெரியலையே ம்மா?” என்கவும்,

“நான் கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி உங்ககிட்ட வந்து என் பையனுக்காகப் உங்கப் பொண்ணைக் கேட்டு வந்தேனே! என்னை ஞாபகம் இல்லையா?” என்று அவரிடம் மறுபடியும் வினவினார் பிரகதீஸ்வரனின் அன்னை.

“ஓஹ்! என்ன விஷயமாக என்னைத் தேடி வந்திருக்கீங்க ம்மா?” என்றார் கணேசன்.

“நான் இப்பவும் உங்ககிட்டே பொண்ணுக் கேட்டுத் தான் வந்திருக்கேன் ஐயா” எனவும்,

“என்னது?” என்று தன்னிடம் அதிர்ச்சியுடன் கேட்டவரிடம்,

“நீங்க சரியாகத் தான் கேட்டிருக்கீங்க” என்று அவரிடம் இன்னொரு முறை விஷயத்தைச் சொன்னார் மங்கலவல்லி.

“அப்படியா ம்மா? நான் உடனே பதில் சொல்ல முடியாதே” என்று அவரிடம் தர்மசங்கடத்துடன் கூறினார் கணேசன்.

“ஒன்னும் பிரச்சினை இல்லை ஐயா. கொஞ்சம் தாமதமானாலும் பரவாயில்லை. நாங்க காத்திருக்கோம்” என்று கூறியவரோ, அவரிடம் தன்னுடைய செல்பேசி எண்ணைக் கொடுத்து விட்டுச் சென்றார் பிரகதீஸ்வரனின் தாய்.

அதற்குப் பிறகுத் தான், தன்னுடைய மணாளினியிடம் இந்தச் செய்தியைக் கூறி அவரது விருப்பத்தைக் கேட்டிருந்தார் கணேசன்.

அவர்கள் இருவரும் அதைப் பற்றிய யோசனையில் இருக்க, தன் பெற்றோர் பேசியதைக் கேட்டிருந்த நதியாவும் அவர்கள் தன்னிடம் வந்து கேட்டால் என்னப் பதில் சொல்வது என்பதை யோசித்துக் கொண்டு இருக்கிறாள்.

ஆனால், கணேசனும், சிவசெல்வியும் இந்த நிகழ்வு நடந்தது என்பதை இன்னும் கூட அவளுக்குத் தெரிவிக்கவில்லை. எனில், இந்தச் சம்பந்தம் வேண்டாமென்று தானே பெரியவர்கள் இருவரும் முடிவெடுத்து இருப்பார்கள் என்று ஒரு மனநிலைக்கு வந்திருந்தாள் நதியா.

அவளுடைய அந்த எண்ணத்திற்குத் திருப்பம் கொடுக்கும் வகையில், அடுத்த நாளே, தங்கள் இரண்டு மகன்களையும் அழைத்து உட்காரச் சொன்னார்கள் நதியா மற்றும் நளினியின் பெற்றோர்.

“அக்கா! அந்த விஷயத்தைப் பத்தித் தான் பேச நம்மளைக் கூப்பிட்டு இருக்காங்க போல” என்று தனது தமக்கையின் மெதுவாக ஓதினாள் இளையவள்.

அதற்கு மூத்தவளோ,”ம்ம். எனக்கும் அப்படித் தான் தோனுது” என்று இவளும் முணுமுணுக்க,

தனது குரலைச் செருமிக் கொண்டு,”நாங்க உங்க ரெண்டு பேர் கிட்டேயும் ஒரு விஷயத்தைப் பத்திப் பேசத் தான் கூப்பிட்டோம்” என்று நளினி தன் அக்காவிடம் சொன்னவற்றை அப்படியே அட்சரம் பிசகாமல் அவர்களிடம் உரைத்தார் கணேசன்.

அதைக் கேட்டதும், அக்கா, தங்கை இருவரும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர்.

“என்னடி ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்து சிரிச்சிக்கிறீங்க? அப்போ நாங்க எதைப் பத்திப் பேசப் போறோம்ன்னு உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?” என்று அவர்களிடம் சந்தேகத்துடன் வினவினார் சிவசெல்வி.

“இல்லை ம்மா. இது வேற. நீங்க சொல்லுங்க” என்கவும்,

“நதி ம்மா, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு அம்மா அவங்கப் பையனுக்காக உன்னைப் பொண்ணுக் கேட்டு வந்தாங்க! ஞாபகம் இருக்கா?” என்று தன்னிடம் வினவிய தந்தையை ஏறிட்டவளோ,

“எனக்கு அவ்வளவாக ஞாபகம் இல்லை ப்பா” என்று அவருக்குப் பதிலளித்தாள் நதியா.

அதைக் கேட்டவுடன், தமக்கை வேண்டுமென்றே பொய் சொல்கிறாள் என்று தனக்குப் புரிந்தாலும், அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் நளினி.

“ஆமாம் ங்க. அவளுக்கு எப்படி ஞாபகம் இருக்கும்?” என்று தன் கணவரிடம் கூறியவர்,

“அப்படி ஒருத்தவங்க எங்ககிட்ட வந்து பேசினாங்க. ஆனால், அப்போ இருந்த சூழ்நிலையில் நாங்க அந்தச் சம்பந்தத்தை வேண்டாம்னு மறுத்துட்டோம்” என்று இடைவெளி விட,

அதை மறுத்தது ஏன்? என்ற காரணம் அங்கேயிருந்த நால்வருக்கும் புரியும் ஆதலால், அவர்களுக்குள் சட்டென்று இறுக்கம் சூழ்ந்து கொண்டதை உணர்ந்தனர்.

சிறிது நேரம் கழித்து தெளிவடைந்து விட்டு மீண்டும் பேசத் தொடங்கிய சிவசெல்வியோ,”அவங்க இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி உங்கப்பா கிட்டே வந்து இதே விஷயத்தைப் பத்திப் பேசி இருக்காங்க” என்று கூறி விட்டுக் கணேசனைப் பார்க்கவும்,

அவரோ,“ஆமாம் டா. அவங்க அப்படி திடுதிப்புன்னுக் கேட்கவும் எனக்கு என்னச் சொல்றதுன்னே தெரியலை. என்ன தான், இதில் எங்களுக்கு விருப்பம் இருந்தாலும், உன்னோட சம்மதம் தானே முக்கியம். அதான், இப்போ உங்கிட்ட விஷயத்தைச் சொல்லிட்டோம். முடிவு உன் கையில் தான் இருக்கு! பொறுமையாக யோசிச்சு சொல்லு” என்று மகளுக்கு அறிவுறுத்தினார்.

அவர்கள் கூறியதை எல்லாம் பொறுமையாக கேட்டிருந்த நதியாவோ,”சரிங்க அப்பா. நான் கண்டிப்பாக யோசிச்சு நல்ல முடிவாகச் சொல்றேன்” என்று அவரிடம் சொல்லி விட,

“இதுக்கு எதுக்கு என்னையும் சேர்த்துக் கூப்பிட்டீங்க?” என்றாள் நளினி.

“இது உனக்கும் தெரியனும்ன்னு தான் டி!” என்று அவளுக்குப் பதில் சொன்னார் சிவசெல்வி.

“ஓஹ்ஹோ! சரிம்மா” என்று கூறி விட்டுத் தமக்கையை அழைத்துக் கொண்டு அறைக்குப் போய் விட்டாள் அவரது இளைய மகள்.

“செல்வி ம்மா! நம்மப் பொண்ணு நல்ல முடிவாகத் தானே எடுப்பா?” என்று தன் மனைவியிடம் கேட்டார் கணேசன்.

“ஆமாம் ங்க. நீங்க கவலைப்படாமல் கிளம்பி மெஸ்ஸூக்குப் போயிட்டு வாங்க” என அவரைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார் சிவசெல்வி.


- தொடரும்
 
Last edited:
Top