Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
கரிசல் 16:

“கையைப் பிடிச்சா..நீ அடிப்பியா..?” என்று முத்துவின் அம்மா கேட்க...

“கண்டிப்பா அடிப்பேன்...!” என்றான் முகிலன் இப்போதும் உறுதியாக.

“கேட்டுக்கங்க நியாயத்தை...! எல்லார் முன்னாடியும் தான சொல்றான்..!” என்று அவர் அங்கிருந்தவர்களை நியாயத்திற்கு அழைக்க...

“என்ன இருந்தாலும் நீ செஞ்சது தப்பு முகிலா..!” என்று அங்கிருந்தவர்கள் அவனுக்கு அறிவுரை வழங்க....

“என்ன நீங்க..? எங்க மருமகப் பிள்ளையைத் தப்பு சொல்றிங்க..? இதுக்கெல்லாம் காரணமானவ..அங்க சிவனேன்னு இருக்கா...இங்க என்னடான்னா...முகிலன் பண்ணது தான் தப்புங்கிற மாதிரி பேசுறிங்க..!” என்று திலகா பிரச்சனையை ஊத்தி விட...

தன் அம்மா சண்டை போடுவதைக் கண்டு அந்த இடத்திற்கு முத்துவும் வந்தான். அவன் வந்தது முகிலனுக்கு அறவே பிடிக்கவில்லை.

“அந்த வண்ண மதியைக் கூப்பிட்டுக் கேளுங்க...!” என்று அரசியும் எடுத்துக் கொடுக்க...

“தேவையில்லை..இதுல எதுக்கு அவளை இழுக்குறிங்க..! அவ சின்ன பொண்ணு...!” என்றான் முகிலன்.

“யாரு அவளா சின்ன பொண்ணு..அவ ஆளும்,நடையும்,மேனா மினுக்கித் தனமும்....நாங்களும் பார்த்துகிட்டு தான இருக்கோம்..!”

என்று திலகா சொல்ல...அதுவரை அவளை நல்ல விதமாய் நினைத்தவர்களுக்கு கூட லேசாக சந்தேகம் வர ஆரம்பித்தது.

“மதியை அப்படி பேசாதிங்க அண்ணி..!” என்று மலரும் பரிந்து கொண்டு வர...அவர்கள் மதிக்கு ஆதரவாய் பேச பேச...திலகாவிற்கு உள்ளே கனன்று கொண்டே இருந்தது.அவர்களிடம் மதி நல்ல பெயர் வாங்கிவிட்டால்.. அவருடைய திட்டம் தவிடு பொடியாகி விடும் என்ற கவலை அவருக்கு.

“அம்மா..நீ வாம்மா..!” என்று முத்து அவன் அம்மாவை இழுக்க....அவரும் கொஞ்சம் மனம் இறங்கி செல்லலாம் என நினைக்க போக...
“இதென்ன..? கிடைச்ச சந்தர்ப்பம் இப்படி வீணாப் போகப் போகுதே..! விடக்கூடாதே...!” என்று நினைத்த திலகா....

“என்ன முத்து..முகம் எல்லாம் இப்படி வீங்கிப் போயிருக்கு...?” என்று ஒன்றும் அறியாதவராய் கேட்டு வைக்க...அதுவரை கொஞ்சம் மனம் மாறி இருந்த அவனுடைய அம்மாவுக்கு...மீண்டும் சாமி ஏறிக் கொண்டது.

“முகிலன் என் பையனை அடிச்சதுக்கு மன்னிப்புக் கேட்டாதான்....நாங்க இங்க இருந்து நகருவோம்..!” என்று அவரும் நின்று விட்டார்.
“நான் எந்த தப்பும் பண்ணலை..என்னால மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது..?” என்று தெனாவெட்டாய் நின்றான் முகிலன்.

“மன்னிப்பு தான முகிலா..கேட்டுடு...!” என்று மலரும் சொல்ல...

“அம்மா..! நான் தான் தப்பு பண்ணலையே..! ரெண்டு மூணு தடவை சொன்னேன்..அவன் கேட்கலை..! அப்பறம் தான் வாங்கிக் கட்டிகிட்டான்..!” என்றான்.

தான் அடிவாங்கியது அனைவருக்கும் தெரிந்ததையே அவமானமாய் உணர்ந்தான் முத்து.

“நான் ஒரு தப்பும் செய்யலை..வேணுமின்னா மதிகிட்டையே கேட்டுப்பாருங்க..!” என்று முத்துவும் வாயை விட..

“வயசு பிள்ளையை அப்படி எல்லாம் கூட்டிட்டு வந்து கேட்க முடியாது..!” என்றான் முகிலன்.

“உன் மேல தான் தப்பு இல்லையே..? அப்பறம் ஏன் பயப்படுற..?” என்றான் முத்து.

“யாரு நான் பயப்படுறேன்...! நீ பார்த்த...வாங்குன அடி மறந்து போய்டுச்சு போல...!” என்றான் முகிலன்.

“மதி வந்தா தான உண்மை தெரியும்..!” என்றான் முத்து.எப்படியும் மதி தன்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாள் என்ற நம்பிக்கையில்.

“வேண்டாம்...மதியை இங்க எல்லாம் கூப்பிட வேண்டாம்...நான் மன்னிப்பே கேட்குறேன்..!” என்று முகிலன் சொல்ல...

“நீ எதுக்கு மருமவனே மன்னிப்பு கேட்கணும்...! அவ வந்து சொன்னா பிரச்சனை முடிய போகுது..” என்று அரசியும் சொல்ல..

“உங்க வேலையைப் பாருங்க முதல்ல...ஒண்ணுமில்லாத பிரச்னையை பெரிசாக்குறதே உங்களுக்கு வேலையா போய்டுச்சு..” என்றான்.

“பார்த்திங்களா மதினி...நான் இவனுக்கு ஒசரம் பேசுனா..என்னையவே இப்படி பேசிப்புட்டான்..!” என்று அரசி சொல்ல...

“என்ன முகிலா..அத்தைகிட்ட போய் அப்படி பேசுற..?” என்று மலர் யாருக்குப் பேசுவது என்று தெரியாமல் முழிக்க...அதற்குள் பிரச்சனை பார்வதியின் காதுகளை எட்டி விட்டது.

அவர் காதில் வதந்தியாய் பரவிய விஷயங்கள் விழ..வேகமாக வீட்டிற்குள் சென்றவர்...”மதிஈஈ...” என்று கத்தினார்.

“அம்மா...!” என்றபடி அவள் வர..

“என்ன நடந்தது ரோட்ல...?” என்றார் கோபமாய்.

“ஒன்னும் நடக்கலைமா...” என்று சொல்லி முடிப்பதற்குள்..அங்கிருந்த குச்சி விளக்கு மாரை எடுத்தவர் அவளை அடித்து விளாசித்தள்ள...

“அம்மா..விடும்மா..வலிக்குதும்மா...விடும்மா..வலிக்குதும்மா...!” என்று அவள் தன் அம்மாவைத் தடுக்க...தன் பிள்ளையை ஒருத்தர் இப்படி சொல்லிவிட்டாரே என்ற கோபம் அவர் கண்ணை மறைத்து விட்டது.

“எத்தனை தடவை சொன்னேன்..! அந்த முத்து பய கூட பேசாத, பேசாதன்னு...கேட்டியா...? இப்ப பாரு ஊறுதுன்னா பறக்குதுன்னு சொல்ற ஊர்ல இருந்துகிட்டு இந்த பேரு உனக்குத் தேவையா..தேவையா..?” என்று அவளை வெளுத்து வாங்க...

“அம்மா..நான் ஒண்ணுமே பண்ணலம்மா...விட்டுடுங்கம்மா..!” என்று அவள் தேம்பித் தேம்பித் அழ...அவர் விட்ட பாடில்லை.

எங்கிருந்து தான் வந்தானோ முகிலன் தெரியவில்லை.அசுர வேகத்தில் உள்ளே வந்தான்.

“அத்தை..என்ன பண்றிங்க..? விடுங்க முதல்ல..விடுங்கன்னு சொல்றேன்ல...!” என்றபடி அவரைத் தடுக்க...

“மணி மாமா..மணி மாமா...! அம்மாகிட்ட சொல்லுங்க மாமா...நான் ஒன்னும் பண்ணலைன்னு..!” என்று அவனின் முதுகின் பின்னால் ஒளிந்து கொண்டவள்..அவன் சட்டையை இறுகப் பிடிக்க...அந்த நிமிடம் முகிலன் செத்தே விட்டான்.

அவளின் கண்ணீர்..அவனின் முதுகுப்புற சட்டையை முழுதாய் நனைக்க...அந்த கண்ணீருக்கு தானும் ஒரு காரணம் ஆகிவிட்டோம் என்று உள்ளுக்குள் செத்தே விட்டான்.

“நீ விலகு முகிலா..இவளுக்கு குளிர் விட்டுப் போய்டுச்சு...! எத்தனை தடவை சொன்னேன்..! கேட்டாளா..?” என்று அவர் மூச்சு வாங்க...
“அவமேல எந்த தப்பும் இல்லை...! நான் சொல்றேன்ல விடுங்க..!” என்று அவன் சொல்ல...

விளக்கமாரை கீழே போட்டவர் ஓய்ந்து அமர்ந்து அழத் தொடங்கினார்.

“இவ படிச்சு...நல்ல வேலைக்கு போவான்னு நான் இருந்தா....இப்படி பேரு வாங்கிட்டு வந்து நிக்குறாளே..!” என்று பார்வதி தலையில் கைவைத்து அழ..

“இப்ப என்ன நடந்து போய்டுச்சு...இதெல்லாம் ஒரு விஷயமா..எனக்கும் அவனுக்கும் தான் பிரச்சனை...இதுல மதியோட தப்பு எங்க இருக்கு..?” என்று முகிலன் புரியாமல் கேட்க....

அப்போதுதான்..அந்த விஷயம் ஊருக்குள் எப்படி பரவி இருக்கிறது என்றே அவனுக்குத் தெரிந்தது.தெரிந்த நிமிடம் துடித்து விட்டான் முகிலன்.

மதியை தன் பின்னால் இருந்து இழுக்க...அவளோ பயத்துடன் அவன் முதுகுப் பக்கமே ஒண்டினாள்.

அவளை இழுத்துக் கொண்டு வெளியே சென்றவன்...வெளியில் இருந்த மற்றவர்களின் முன்னால் நிறுத்தினான்.அவன் வந்த உடனேயே...அந்த கூடமும் பின்னே வந்திருந்தது.முத்துவும் அவன் அம்மாவும் அவர்கள் வீட்டுத் திண்ணையில் கோபமாய் இருக்க...
“யாரு மதியை தப்பா பேசினது..? சொல்லுங்க முத்து கூட வச்சு யார் பேசினது..?” என்றான் கோபமாய்.

“என்ன மருமவனே...இல்லாததையா பேசிட்டாங்க..! நெருப்பில்லாம புகையாது.இன்னைக்கு இல்லைன்னாலும் என்னைக்காவது ஒரு நாள் விஷயம் வெளிய தெரிஞ்சிருக்கும்..!” என்று திலகா சொல்ல...

“வாயை மூடுங்க..!” என்றான்.

அதுவரை அமைதியாக இருந்த முத்துவின் அம்மா...வேகமாய் எழுந்து வந்தவர்...

“மதியை யாரு தப்பா பேசினது.நான் முகிலன் ஏன் என் மகனை அடிச்சான்னு கேட்க தான் போனேன்..! மதியைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்..அவ புடம் போட்ட தங்கம்..!” என்று அவரும் வக்காலத்து வாங்க...

அவரின் பேச்சில் பார்வதியும் வெளியே வர...

“இங்க பாருங்க மதினி...இவுக இவ்வளவு பேசினதுக்கு அப்பறம்....சும்மா இருக்க கூடாது...மதி பேசாம எனக்கு மருமகளா வந்துடுடி..அத்தை நான் நல்லா பார்த்துக்கறேன்..! பேசாம முத்துவைக் கட்டிக்க..!” என்றார் ஒரே போடாய்.

“என்னது கட்டிக்கிறதா...உங்க பையன் வயசு என்னன்னு தெரியுமா...? “ என்று முகிலன் நக்கலாய் கேட்க..

“நல்லா தெரியுமே..அந்த காலத்துல இவன் அப்பாவுக்கு கூட பதினெட்டு வயசுல தான் கல்யாணம்..அவரு கல்யாணம் பண்ணலை...இதோ இவனை நாங்க பெக்கலை..?” என்று அவர் கேட்க...

“நான் கல்யாணம் எல்லாம் பண்ண மாட்டேன்...!” என்றாள் மதி முதன் முறையாக வாய் திறந்து..!”

“நீ சின்ன பிள்ளை...பேசாம இரு..நாங்க பேசிக்கிறோம்..! நீங்க சொல்லுங்க பார்வதி மதினி...மதியை பேசாம முத்துக்கு குடுத்துடுங்க...பையன் இல்லாத வீட்டுக்கு உங்களுக்கு பையனா இருப்பான்..!” என்றார் அவர்.
 
“இல்ல...நான் பண்ண மாட்டேன்..!” என்று முத்துவைப் பார்க்க..அவனோ தலையை கீழே போட்டு அமர்ந்திருந்தான்.

பார்வதியின் அமைதியைப் பார்த்து முகிலனுக்குள் பக்கென்று இருந்தது. உள்ளே லேசான பயம் ஏற்பட...பார்வதியைப் பார்த்தான்.அவர் வாயைத் திறக்கும் முன்னரே...

“யாருக்கு யார் மாப்பிள்ளை...எனக்கு முகிலன் மட்டும் தான் மாப்பிள்ளை..!” என்று குளறிக் கொண்டே மனோகரன் வர...அவரைக் கண்ட பார்வதிக்கு எரிச்சல் தான் வந்தது.

மகளின் இந்த நிலைக்கு அவரும் ஒரு காரணம்.பெத்த தகப்பன் ஒழுங்காக இருந்தால் தானே...அவதூறு பேசும் நபர்களுக்கு கொஞ்சம் பயம் இருக்கும். இங்கு மனோகரனின் பொறுப்பில்லாத தன்மையே முக்கால்வாசி பிரச்சனைகளுக்கு காரணம் என்று நினைத்தார் முகிலன்.

“குடிகாரன் மகளுக்கு...முகிலன் கேட்குதா..?” என்று திலகா வாயைவிட...

“ஏய்..! அண்ணன் பொண்டாட்டி ஆச்சேன்னு பொறுமையா இருக்கேன்..இல்லைன்னா நடக்குறதே வேற..?” என்றார் போதையில்.

“என்ன நடக்கும்...துரை அப்படியே சீவிடுவிகளோ...குடிகாரப்பயலே..!” என்று அவரும் சண்டைக்குத் தயாராக..
“நீங்க பேசாம இருக்க போறிங்களா இல்லையா..?” என்றார் பார்வதி.

“என் பொண்ணை யாருக்கு குடுக்கணும்,யாருக்கு குடுக்க கூடாது....இதைப் பத்தி எல்லாம் நான் தான் கவலைப் படனும்....ஆனா ஒன்னு..முத்துவுக்கு குடுக்க..எனக்கு துளியும் விருப்பம் இல்லை..!” என்றவர்...

“மதி...உள்ள போ..!” என்றார் அதட்டலாய்.

தாயின் குரலுக்கு பயந்து மதி உள்ளே செல்ல....பார்வதியின் பேச்சில் முத்துவுக்கும்,அவன் அம்மாவிற்கும் அப்படி ஒரு கோபம் வந்தது.

“எங்களை எல்லாம் பார்த்தா...உங்களுக்கு மனுசரா தெரியுமா..? பசை இருக்குற இடமாத்தான் குடுப்பிக...?” என்று அவர் மூக்கை சீந்த..பார்வதி அதை கண்டு கொள்ளவே இல்லை.

“நீயும் வீட்டுக்கு கிளம்பு முகிலா..!” என்றார் பார்வதி.

“நான் கிளம்புறேன்..! நான் போனதுக்கு அப்பறம் மதியை அடிக்க கூடாது...!” என்றவன் அவளை பரிவாய் பார்த்து வைக்க..அவனின் அன்பு அவளுக்கு ஏதோ ஒரு விதத்தில் புரிந்தது போலும்.அவளுடைய கண்களும் கலங்கின.

ஒரு சின்ன பிரச்சனை..பலரின் வன்மம்..வார்த்தை சாடல்களால் இந்த அளவிற்கு கொண்டு வந்து விட்டு விட்டது.வீடே மயான அமைதி போல் காட்சி அளிக்க...இதெல்லாம் புரியாத வயதில் சுமதி இருந்தாள்.

மதிக்கு அடி வாங்கிய இடம் எல்லாம்..கந்தி வீங்கிப் போயிருக்க.. இன்னமும் அவளின் தேம்பல் மட்டும் நிற்கவேயில்லை.அவளின் தேம்பல் ஒலியில்..பார்வதியின் மனம் கணக்க...

“மதி...!” என்றார் அமைதியான குரலில்.ஆனால் அவள் திரும்பாமல் இருக்க..

“மதிம்மா..!” என்றார் தொண்டை கரகரக்க...

“அம்மா..!” என்றபடி சென்று அவரின் மடியில் படுத்துக் கொண்டாள் வண்ண மதி.

“அம்மா...நான் எந்த தப்பும் பண்ணலைம்மா..!” என்று அவள் தேம்ப..அவர் அடித்ததில் சிவந்து போன அவள் மேனியைக் கண்டு பார்வதியின் கண்களும் கலங்கின.

இது எப்போதும் நடப்பது தான்.ஆத்திரத்தில் அடித்து விடுவார்..ஆனால் கொஞ்ச நேரத்தில் அவரே அழுது விடுவார்.

“உன்மேல தப்பு இல்லை மதி.எனக்கு மகளா பிறந்தது தான் தப்பு..!” என்று அவர் சொல்ல..

“என்னம்மா சொல்றிங்க..? புரியலை..!” என்று மதி கேட்க..

“உங்க பெரியம்மாங்களுக்கு நான்னு சொன்னாலே ஆகாது.அதான் என்மேல இருக்குற வெறுப்பு எல்லாம் உன்மேல திரும்புது..!” என்றார் உண்மையைக் கணித்தவராய்.

“உன்னைய இவங்க நிம்மதியா படிக்க விடமாட்டாங்க மதி..பேசாம கல்யாணம் பண்ணிக்கிறியா...? இன்னைக்கு இப்படி பேசுனவங்க..நாளைக்கு எப்படியும் பேசுவாங்க..!” என்று பார்வதி சொல்ல..மதியின் பதில் அமைதியே.

“அதைத்தான் மதினி நானும் சொல்ல வந்தேன்..!” என்ற குரலில் திரும்ப அங்கே மலர் நின்றிருந்தார்.

“வாங்க மதினி..!” என்று பார்வதி அழைக்க....

“பேசாம மதிக்கும்,முகிலனுக்கும் கல்யாணத்தைப் பண்ணி வச்சிடலாம். அப்பறம் நாக்கு மேல பல்லைப் போட்டு பேசாது இந்த ஊரு..!” என்று மலர் சொல்ல..

“அவகிட்ட என்ன கேட்குற மலரு...என்பொண்ணு முகிலனுக்கு தான்..அவ உன் வீட்டு மருமக..! நீ தாராளாமா கூட்டிட்டு போ..!” என்று மனோகரன் உளற...ஏனோ அப்பாவின் மீது வெறுப்பாய் வந்தது மதிக்கு.

இவ்வளவு பிரச்சனையிலும்..என் பொண்ணை எப்படி அப்படி சொல்லலாம் என்று ஒரு தகப்பனாய் அவர் வராதது அவளுக்கு ஏமாற்றம் தான். பார்வதியும் அவளைத் தான் அடித்தாரே தவிர அவளிடம் ஒரு வார்த்தை கேட்கவில்லையே என்ற ஆதங்கம் அவளுக்கு.மனதில் மூலையில் ஒரு விரிசல்.

“பெரிய சாமி அண்ணன்..இதுக்கு ஒத்துக்கணுமே மதினி..!” என்று பார்வதி தயங்க...

“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்..!” என்று மலர் சொல்ல...அங்கே மதியின் திருமணத்திற்கு அச்சாரம் இடப்பட்டது.
“என்னம்மா..? என்ன சொல்றிங்க..?” என்று அதிர்ந்தான் முகிலன்.

“ஆமா முகிலா..நீ மதியை கல்யாணம் பண்ணிக்க...!” என்றார் மலர்.

“அம்மா...! நான் பண்ண மாட்டேன்னு சொல்லை..! ஆனா அதுக்கு இப்ப என்ன அவசியம் வந்தது..? அது மட்டும் இல்லாம அவ சின்ன பொண்ணுமா..? நான் படிச்சுட்டு இருக்கேன்..! இதை நினைச்சு கூட என்னால பார்க்க முடியலை..” என்றான்.

“நான் சொல்ல வரதைக் கொஞ்சம் கேளு முகிலா...ஊர்ல பேசுற பேச்சுக்கு...பார்வதி மதினி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவளுக்கு கல்யாணம் பண்ண தான் பார்ப்பாங்க...! அதுக்கு நீயே அவளைக் கல்யாணம் பண்ணிக்க...கல்யாணம் பண்ணி நம்ம வீட்ல விட்டுட்டு போய் படி..யாரு வேணான்னு சொன்னா..நம்ம வீட்ல உனக்கு பொண்டாட்டியா அவ இருந்தா யாரும் எதுவும் பேச முடியாது பாரு..!” என்று மலர் விளக்கி சொல்ல...
முகிலனுக்கு துளியும் இதில் உடன்பாடு இல்லை.அதுமட்டுமில்லாமல் அவன் எதிர்காலத்தில் ஒரு மருத்துவனாக ஆகப் போகிறான்..அவனே இப்படி விஷயங்களை எப்படி ஆதரிக்க முடியும்..?

“இல்லைம்மா..! எனக்கு இது சரியா தோணலை..நான் மதியைத் தான் கல்யாணம் பண்ணுவேன்.அதில் எந்த மாற்றமும் இல்லை.ஆனா இப்ப இல்லை.நான் படிச்சு முடிக்கணும்..அவளும் மேல படிக்கட்டும்..அதுக்கப்றம் பார்ப்போம்..!” என்று அவன் முடித்து விட...

“அப்ப கண்டிப்பா உனக்கு மதி இல்லை முகிலா.நான் அவ வீட்டுக்கு போறப்ப கூட..மதினி அவளை கல்யாணம் செய்துக்க சொல்லி தான் பேசிட்டு இருந்துச்சு...உனக்கு குடுத்து வச்சது அவ்வளவு தான்... அவளுக்கென்ன..எவன் பொண்ணு பார்க்க வந்தாலும்..உடனே கட்டிக்கிட்டு போய்டுவான்.. கிளி மாதிரி இருக்குற பொண்ணைக் கட்டிக்க எவனுக்கும் கசக்குமா என்ன..?” என்று சொல்ல..

“என்னம்மா இப்படி சொல்றிங்க..?” என்றான்.அவனுக்கு அந்த பயமும் மனதிற்குள் இருந்தது.

நான் உண்மையைத் தான் சொல்றேன் முகிலா.நம்ம ஊரைப் பத்தி தான் உனக்குத் தெரியுமே..? நம்ம முற்போக்கா இருந்தா எல்லாரும் அப்படி இருப்பாங்கன்னு எதிர்பார்க்க முடியுமா..? பார்வதி மதினிய சொல்லியும் குத்தமில்லை. பொண்ணைப் பெத்தவங்க...நாலையும் யோசிக்க தான் செய்வாங்க..! உனக்கு மதி வேணுமின்னா..
அப்படி நீ நினைச்சா..இப்பவே கல்யாணம் பண்ணிக்க..இல்லைன்னா முடியாது முகிலா...என்று அவர் எதார்த்தத்தை எடுத்து சொல்ல குழம்பிப் போனான்.

“எனக்கே கல்யாணம் பண்ற வயசு இல்லம்மா..இதுல மதியை எப்படி..?” என்று அவன் மீண்டும் அதே பல்லவியைப் பாட...

“இப்ப கல்யாணம் பண்ணி...மதி நம்ம வீட்ல இருக்கட்டும்....வாழ்க்கையைப் பத்தி அப்பறம் பார்ப்போம்..!” என்று நாசூக்காய் சொன்னார் மலர்.

யாருக்காவும்,எதற்காகவும் மதியை விட்டுக் கொடுக்க அவன் தயாராகவே இல்லை.தன் வீட்டில் தனக்கு மனைவியாய் இருந்தால்..அவள் நிம்மதியாக இருப்பாள்...என்று மனதார நம்பினான்.அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாய் அந்த திருமணத்திற்கு சம்மதம் சொன்னான் மணி முகிலன்.
 
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

அடப்பாவிகளா
ஒரு சின்ன விஷயம்
அதை ஊதி ஊதி இப்படி பெரியதாக்கி விட்டார்களே
 
Last edited:
ரெண்டு வீட்டுல பேசி முடி பண்ணின திருமணம் எப்படி சிக்கல் ஆகி இருக்கும்..... மதி யாரு எது பான்னாலும் பலி நம்ம தான்
 
Top