Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

“முகிலா..! நில்லு. அவளுக்கு உடம்புக்கு சரியில்லை..! காலையில போய் பார்த்துக்கலாம்..!” என்று மலர் கத்திக் கொண்டிருந்தது, அவன் காதில் விழவேயில்லை. அதற்குள் அவன் மதியின் வீட்டின் முன் நின்றிருந்தான்.

“இவனுக்கு என்னங்க ஆச்சு..?” என்றார் மலர்.

“பார்த்தா தெரியலை, இனி மதியில்லாம உன் மகன் ஒரு நாள் கூட இருக்க மாட்டான்..! என்னமோ நடந்திருக்கு. ஆனா என்னன்னு தான் தெரியலை..!” என்றார் பெரியசாமி.

“அவளுக்கு வேற அங்க காய்ச்சல், இவன் பேசாம அங்க போய் ஏதாவது ஏடாகூடமா பேசிட போறான்..!” என்று மலர் பதட்டம் அடைந்தார்.

“அதெல்லாம் பேசமாட்டான். மதியை பார்த்தாலே, உன் மகனுக்கு பாதி சரியாகிடும். பேசாம இரு..!” என்றார்.

“என்னங்க நீங்க..? நான் என்ன சொல்லிட்டு இருக்கேன், நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க...?” என்றவர், தானும் மதியின் வீட்டிற்கு சென்றார்.

“யாரு இப்படி கதவைத் தட்டுறது...? வினோதினி யாருன்னு பாருமா..!” என்றார் பார்வதி.

“சரி பெரியம்மா..!” என்றவள், சென்று கதவைத் திறக்க, புயல்போல் உள்ளே நுழைந்தான் முகிலன். அவனைப் பார்த்த வினோதினிக்கு அடையாளம் சுத்தமாகத் தெரியவில்லை. பின்னே கல்லூரி மாணவனாய் பார்த்தவனுக்கும், கட்டிளங் காளையாய் பார்ப்பவனுக்கும் வித்யாசம் இருக்கத்தானே செய்யும்.

“வாவ்..! ஹீரோ...!” என்று அவள் வாயைப் பிளக்க, அவள் ஒருத்தி அங்கு இருந்ததையே சட்டை செய்யாமல் உள்ளே சென்றான் முகிலன்.

“யாரு வினோ..!” என்றபடி பார்வதி வர, முகிலனை அந்த நேரத்தில் பார்த்தவர்,

“வாங்க தம்பி..! என்ன இந்த நேரத்துல...” என்றார் புரியாமல்.

“மாமியார் வீட்டுக்கு நேரம் காலம் பார்த்து தான் வரணுமா அத்தை..!” என்றான்.

“இல்ல தம்பி, இந்த நேரத்துக்கு வந்ததில்லையேன்னு கேட்டேன்..!’ என்றார்.

“இனி எந்த நேரத்துலையும் வருவேன்.இனி எல்லாத்தையும் எதிர்பாருங்க..!” என்றவன்,

“மதி எங்க..?” என்றான்.

“உள்ள தூங்கிட்டு இருக்கா தம்பி..!” என்றார் பார்வதி.

“இங்க ஒருத்தன், இவளால தூக்கம் போய் தவிக்கிறேன்..! இவ எப்ப பார்த்தாலும் தூங்கிட்டு தான் இருக்கா...இவளை..” என்று முகிலன் பல்லைக் கடிக்க,

“நீ கூட இந்நேரம் வரைக்கும் தூங்கிட்டு தான இருந்த..” என்று மனசாட்சி ஒரு பக்கம் கிண்டல் அடிக்க, அதை ஒரு புறம் ஒதுக்கியவன்,

அன்று போல், அவளுடைய அறைக்கு உடனே செல்லவில்லை. அன்று சுமதி வெளியில் இருந்தாள். இன்று உள்ளே இருந்தாள். அவள் முன்பு அப்படி செல்வது அவனுக்கு சரியாகத் தோன்றவில்லை.(இதெல்லாம் வக்கனையாத்தான் யோசிக்கிறான்.)

“மதியை கூப்பிடுங்க..! கொஞ்சம் பேசணும்..!” என்றான்.

“இல்ல தம்பி, அவ நல்லா தூங்கிட்டு..” என்று அவர் முடிக்க கூட இல்லை...மலர் வந்து விட்டார்.

“முகிலா, என்ன இது..? வா வீட்டுக்கு. காலையில பார்த்துக்க...!” என்றார் மலர்.

“ஏன் இந்த நேரத்துக்கு என்ன...? நான் எவளோ ஒருத்தியை பார்க்க இந்த நேரத்துக்கு வரலை. அவ என் பொண்டாட்டி..!” என்றான் முகம் இறுக.

“யாரு இல்லைன்னு சொன்னா..? அவளுக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியலை. அதான் சொல்றேன் வா..!” என்றார்.

“மதிக்கு என்னாச்சு...?” என்றவனுக்கு, இப்போது சுற்றி யார் இருக்கிறார்கள் என்ற கவலை பின்னுக்கு சென்றது.

“ரெண்டு நாளா காய்ச்சல் தம்பி..!” என்றார் பார்வதி.

“காய்ச்சலா..? இதை ஏன் நான் வந்த உடனே சொல்லலை..! டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனிங்களா இல்லையா..?” என்றபடி மதியிடம் சென்றான்.

மதியைத் தேடி வந்த அவன் வேகமெல்லாம், அவளை அப்படி ஒரு கோலத்தில் பார்த்தவுடன், அப்படியே வடிந்தது. துவண்ட கொடியாய் படுத்திருந்தாள். சிவந்த அவள் கண்ணங்கள் காய்ச்சலினால் மேலும் சிவந்து, அனலாய் இருந்தது.

“மதி..!” என்றபடி அவள் கைகளைப் பற்றியவனுக்கு, அவள் உடலின் சூடு கண்டு கோபம் தான் வந்தது.

“இவ்வளவு காய்ச்சல் வர வரைக்கும் என்ன பண்ணிங்க..? ஹாஸ்பிட்டல் போனிங்களா..? இன்ஜெக்ஷன் போட்டாங்களா..? என்ன பீவர்ன்னு செக் பண்ணிங்களா..?” என்றான் விடாமல்.

“முகிலா..! கொஞ்சம் மூச்சு விட்டுட்டு பேசு. வைரஸ் காய்ச்சல்ன்னு சொன்னாங்க..! இன்னும் ரெண்டு நாளைக்கு மாத்திரை குடுத்திருக்காங்க.பார்வதி மதினி கூட, நானும் தான் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்தேன். நீ இங்க இருந்திருந்தா, அந்த அலைச்சலும் இல்லை எங்களுக்கு..!” என்றார் மலர்.

அந்த காய்ச்சலிலும் அவன் குரல் கேட்டு, மெல்ல கண்களைத் திறந்தாள் மதி.

“ஏதாவது சாப்பிட்டாளா அத்தை..!” என்றான்.

“சாப்பிட மாட்டேங்கிறா தம்பி. நானும் கெஞ்சிப் பார்த்துட்டேன்..!” என்றார் பார்வதி.

ஒரு நிமிடம் அவளையும், அங்கு இருந்தவர்களையும் பார்த்து யோசித்தவன், மறுநிமிடம், அவளை அப்படியே கைகளில் தூக்கிக் கொண்டான்.

“என்ன பண்ற முகிலா..? அவளை விடு..!” என்று மலர் கத்த,

“என்ன தம்பி பண்றிங்க...?” என்று பார்வதியும் பதறினார்.

“உங்க யாரையும் நம்பி, இனி அவளை விட முடியாது. அவளை எப்படி பார்த்துக்கணும்ன்னு எனக்குத் தெரியும். விலகுங்க..! இனி இவ என்கூடத் தான் இருப்பா..!” என்றான்.

“முகிலா..என்ன இது..? அதுக்குன்னு ஒரு நேரம் காலம் வேண்டாமா...? ஒரு நல்ல நாளா பார்த்து...” என்று மலர் முடிக்கவில்லை.

“அம்மா..! இவ எப்ப நம்ம வீட்டுக்கு வராளோ, அது தான் நமக்கு நல்ல நேரம்..இப்போதைக்கு இவளுக்கு என்ன தேவையோ, அதை மட்டும் வாங்கிட்டு வாங்க..!” என்றவன், யாரையும் சட்டை செய்யாமல் கிளம்பிவிட்டான்.

காய்ச்சலில் துவண்டிருந்த மதிக்கு, நடப்பது கொஞ்சம் புரிந்தாலும், தெளிவான சிந்தனை இல்லை. “மணி மாமா..!” என்றவள், முகிலனின் நெஞ்சிலேயே சாய்ந்து கொண்டாள்.

அந்த நிலையிலும், அவளின் ‘மணி மாமா’ என்ற அழைப்பு, அவன் உயிர் வரைத் தீண்டி, அவனுக்குள் இருந்த காதல் உணர்வைத் தூண்டிவிட்டது. மேலும் அவளை நெஞ்சோடு இறுக்கிக் கொண்டான்.

அங்கு நடந்ததை எல்லாம், வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள் வினோதினி.

“என்னடா நடக்குது இங்க..? இது எப்படி சாத்தியம். மதி அவனுக்கு பொண்டாட்டியா...? நானும் கூடவே தானடா இருந்தேன். எனக்குத் தெரியாம இதெல்லாம் எப்படா நடந்துச்சு..?” என்று வடிவேல் பாணியில் யோசித்துக் கொண்டிருந்தாள்.

“எதுவும் நினைச்சுகிடாதிங்க மதினி...! அவன் வந்தப்பவே முகம் சரியில்லை. இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கலை..!” என்று மலர் வருத்தப்பட,

“விடுங்க மதினி..! நல்ல நாள்ல அவ அங்க வருவதா தான இருந்துச்சு. அது முன்னாடியே நடந்திடுச்சு. எது எப்படியோ...இனி மதி உங்க பொறுப்பு மதினி..!” என்றார் பார்வதி.

“நான் சொல்லத் தேவையில்லை மதினி. இருந்தாலும் சொல்றேன், முகிலன் என்னைவிட மதியை நல்லா பார்த்துப்பான்..!” என்றார் மலர்.

மதியோ, மாமனின் நெஞ்சில் தஞ்சம் அடைந்திருந்தாள்.
Super
 
Super mam??next epic sekkiramma thanga plz...... one of my favourite hero my mugi chlm???
 
சூப்பர்டா இவங்களை நம்பினா வேலைக்காகாதுன்னு நீயே தூக்கிட்டு வந்துட்ட.
 
Top