Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Naan Sirithal Deepavali - 9

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
விடியத்தான் இரவு வேண்டும்...
இன்னல்கள் தீரத்தானே வேண்டும்...

ஏறக்குறைய பதினைந்து நாட்களுக்குப் பின்னர் இன்றுதான் குளியல். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாடி வாஷ் செய்தே இரண்டு வாரங்களை ஓட்ட வேண்டிய நிலைமை அகல்யாவிற்கு... ஆகவே இன்று இதமான பதமான் வெந்நீரில் உடல் குளிரக் குளிரக் குளியல்... குளித்து முடித்து நைட்டி அணிந்து காற்றாடிக்குக் கீழ் நாற்காலியில் அமர்ந்தாள் அகல்யா. லதா தலை துவட்டி சிக்கெடுத்து விட்டாள்.

“அக்கா சீப்போட முடியும் கொத்தா வருதுக்கா”

“பின்ன வராது மாத்திரை மருந்துல உடம்பு சூடாயிருக்கும்... தலை சீப்பைப் பார்த்தே பல நாளாச்சுல்ல... முடி கொட்டத்தான் செய்யும்...”

“தலைவலி முதுகுவலியெல்லாம் தேவலையாக்கா?”

“ம்... பெட்டரா இருக்கு... கொஞ்சம் தெம்பும் வந்திருக்கு”

“அக்கா... பெரியண்ணனை சும்மா சொல்லக் கூடாது. தவியா தவிச்சுப் போச்சு... நீங்க எந்திரிச்சு உக்கார்ந்ததும்தான் அண்ணன் மொகத்துல தெளிவே வந்திருக்கு” என்றாள் லதா.

ஆனால் அகல்யாவிடம் வழக்கமான மௌனம்.

“தலை நல்லா காயட்டும். ஃபேனுக்கு கீழயே உக்காந்திருங்க ... நான் போயி சாப்பாடு எடுத்துட்டு வரேன் .’’ லதா.

“லதா லதா ரசத்தைப் பார்த்தாலே வெறுப்பா இருக்கு சுள்ளுன்னு வத்தக்குழம்பு அப்பளம் எடுத்துட்டு வா...” என்று சொல்லி அவளை அனுப்பிவிட்டு தொலைக்காட்சியை ஆன் செய்தாள் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது. தயா மேலேறி வந்தான்.“குளிச்சிட்டியா?”

“தலையாட்டினாள் அகல்யா?”

“சாப்டு மறக்காம டானிக் குடிச்சிடு... நான் வேலை விஷயமா திருநெல்வேலி போறேன்... நைட்டு தான் வருவேன்” என்று சொல்லிவிட்டு போனான்.

அகல்யாவின் கவனம் சினிமா பாடலில் இருந்து விலகி தயாவின் மீது சென்று நின்றது.

‘இது என்னவிதமான மனப்பாங்கு! நீ எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போ என்னுடைய பங்களிப்பில், அன்பில், அக்கறையில் குறை எதுவும் இருக்காது... அதாவது எனக்கு வெறுப்பை காட்டத் தெரியாது என்பது போல...’

எங்கேயோ போய்விட்ட சிந்தனைக் குதிரையை இழுத்துக்கட்ட, வந்து சேர்ந்தது சூடான உணவு. சின்ன வெங்காயம் மிதக்க வற்றல் குழம்பு, பீன்ஸ் உசிலி, அப்பளம்... ஒரு பிடி பிடித்தாள். நாக்கு ருசி கண்டிருந்தது. உணவை முடித்தபின், ஒரு நல்ல தூக்கம் போட்டு எழுந்தாள். பிரெட் சாப்பிட்டு பால் குடித்தாள். லதா வந்து தலையைப் பின்னிவிட்டு வீட்டில் பூத்த ரோஜாவை சூட்டிவிட்டாள்.

வெகுநாட்களுக்குப் பின்னர் தனது கட்டுப்பாட்டில் வந்த உடம்புடன் ரேடியோவுடன் பால்கனியில் அமர்ந்தாள். அப்பா எத்தனை நாட்களாயிற்று உடம்பும், மனசும் லேசாகிப் பறந்தது. துன்பத்தை அடுத்து வருவது இன்பமேன்பதும் எவ்வளவு பெரிய உண்மை? கண் மூடி வானொலியில் லயித்தாள்..

“நீ என்னென்ன சொன்னாலும் கவிதை உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை”

டி.எம்.எஸ்ஸின் குரல் அகல்யாவை எங்கேயோ இழுத்துக் கொண்டு போனது.

முல்லைக் கொடியென கரங்களில் வளைந்து,
முத்துச் சரமென குறுநகை புரிந்து...
சின்னஞ்சிறுமலர் பனியில் விழுந்து,
என்னை கொஞ்சம் தழுவிட நினைந்து,
பொன்னில் அழகிய மனதினில் வரைந்து,
பொங்கும் தமிழென கவிதைகள் புனைந்து,
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை

பாட்டுவரிகளும் இசையும் அகல்யாவைத் தழுவிக் கொண்டு போனது. அவள் அங்கேயே இல்லை... இசையின் மகத்துவம் தான் என்னே!

ஒருவர் மனதில் அலைவரிசையையே அதிரடியாக மாற்றி விடுகிறதே! இரவு இடியாப்பமும், தேங்காய்பாலும் திவ்யமாய் உண்டுவிட்டுப் படுத்தாள்.

வெகு நாளைக்குப் பின் அயர்ந்த தூக்கம்... கனவில்எம்.ஜி.ஆர் கதாநாயகியை இழுத்தவாறு பாடுகிறார். தூக்கத்திலேயே சிரித்தாள். திடீரெண்ட பெருஞ்சத்தம், பதறி எழுந்தமர்ந்து திருவிழாவில் தொலைந்த குழந்தையாய் சுற்றும் முற்றும் பார்த்தாள்...

ஓ! நடுநிசி ஆயிற்றா செல்போனில் மணி பார்த்தாள்... பன்னிரெண்டு அருகில் திரும்பிப் பார்த்தாள்.

வழக்கம்போல் முதுகு காட்டிப் படுத்திருந்தான் தயா. தயா வந்து படுத்தது கூடத் தெரியாமல் தூங்கியிருக்கிறேன். ஜன்னல் வழியே பெருமழை பெய்யும் சத்தமும், இடியும்... ஒளிக்கீற்றாய் மின்னலும்...

தயா அசைவின்றி அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்க, அகல்யாவிற்கு தூக்கம் விடை பெற்றுச் சென்றுவிட்டது. அரை வெளிச்சத்தில் தயாவின் ஏற்றி வாரிய தலை முடியும், தீர்க்கமான மூக்கும், பனியன் முதுகும் அவளை... என்னவோ செய்தன...

இவன் எனக்கு சொந்தமானவன்... ஆனால், நான் உரிமை கொண்டாடியதே இல்லை... என்னை இவனுக்கு சொந்தமாக்கியதுமில்ல... இதுவரை... கணவன்-மனைவி இருவருக்குமிடையே இருந்த கண்ணாடி சுவரை, தயாவின்அன்பும், அக்கறையும் பெருந்தன்மையும், கம்பீரமான ஆண்மையும், எதிர்ப்பார்ப்பற்ற காதலும் காலி செய்திருந்தன.

அகல்யா மெதுவே கை நீட்டினாள். சுவரில்லை... தடையில்லை... தயங்கவில்லை...

தயாவின் மென்மையான ஆனால் உறுதியான முதுகுப்பகுதி கைகளில் தட்டுப்பட்டது. தயாவின் மீது தொடுவது போல் வைத்த கையை அகல்யாவால் விலக்கிக்கொள்ள முடியவில்லை. மெதுவே படரவிட்டாள்...

‘நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்’ என்ற கேள்வியை அறிவு எழுப்புவதற்குள், ஒரு பெரும் இடி கிளம்பி சத்தத்தை எழுப்ப, சில வினாடிகள் டபடபவென நீடித்த நிலையில் இடி சத்தம் அடங்கியபோது...

அகல்யா தயாவின் கரங்களுக்குள் அடைக்கலாமாயிருந்தாள்... அவனது திமிர்ந்த தோள்களுக்குள், அகல்யாவின் பூப்போன்ற தேகம் தன்னை புதைத்துக் கொண்டது.

தயாவிற்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த பேரானந்தம்...

வெள்ளி பனிமலை அருவியில் விழுந்து
வெற்றித் திருமகன் மடியினில் கிடந்தது
இந்த உலகை ஒரு கணம் மறந்து...

கண் முன்னே கைக்கெட்டும் தூரத்தில் வைத்துப்பார்த்து பார்த்து ஏங்கியலட்டு, இன்று என் நாவினில் அமர்ந்து இனிக்கிறது. விடுவானா அவன்...?

ஏங்கிய ஆண்மையும், இளகிய பெண்மையும் கலக்க, அகல்யாவின் ஆழ் மனதில் பாடல் ஓடுகிறது...

பொன்னில் அழகிய மனதில் வரைந்து...
பொங்கும் தமிழென கவிதைகள் புனைந்து...



விடிந்தது... தயா. அகல்யாவின் பிரம்மசரிய விரதமும் முடிந்தது. அவர்களின் அனுமதியில்லாமலே...

மலரும் நேரமும் உதிரும் நேரமும் உயிர்களுக்கு மட்டுமல்ல உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் கூட உண்டு...

கலப்பது தெரியாமல் கலப்பதே சிறப்பு... இனிமை... ஆனால் விடியலில் அகல்யா முகம் மலரவில்லையே... ஏதோ குற்றமிழைத்துவிட்டதைப் போலல்லவா உணர்ந்தாள்... ஓரிரவில் தான் மகாராணி அரியாசனத்தில் இருந்து, இறங்கி தரைமீது விழுந்து விட்டதை போல் கூசிக் குறுகிப் போனாள்.

‘என்னுடைய தன்மானத்தை உடல் சுகம் அழித்து விட்டதா...? சராசரிப் பெண்களை போல, முந்தானை விரித்து விட்டேனா...? என்னை நான் எப்போது எங்கே தொலைத்தேன்...?’ என்று அகல்யா கண்களை திறக்காமலே, படுக்கையில் புரள... இவளுக்கு நேரெதிர் மனநிலையில் தயா...

இல்லற வீட்டின் வாயிற்காவலாளியாய் நின்றிருந்தவன்... இன்று தான் கேட்பாஸ் கிடைத்து வீட்டிற்குள் நுழைந்ததைப் போல பெருமிதமாய் உணர்ந்தான்.

என்னுடைய ஆண்மைக்கும் அழகுண்டு... அர்த்தமும் உண்டு... கோடானுகோடி ஆண்களை போல, நீயும் ஒரு முழுமையான கணவன்...

தனது ஸ்வீட் ஸ்டாலின் மொத்த ஸ்வீட்டும் தொண்டையில் வந்து இறங்கியது போல ,திகட்ட திகட்ட இனித்தது தயாவிற்கு... நடந்தது என்னவோ ஒ ரே சம்பவம் தான்... அதை பார்க்கும் பார்வைதான் வேறுபட்டு நிற்கிறது...

அகல்யா எழுந்தமர்ந்து தலைமுடியை அள்ளி முடிந்தாள்... குளித்து முடித்து கண்ணாடி முன்பாக நின்று பவுடர் அடித்துக்கொண்டிருந்த தயாவைப் பார்க்கையில் பற்றிக்கொண்டு வந்தது.

தான் அவனிடம் தோற்றுப்போய் விட்டதைப்போல உணர்ந்தாள் அகல்யா... ஆத்திரம் வார்த்தைகளில் வெடித்தது...

“என்ன... பெரூசா என்னை ஜெயிச்சிட்டதா நினைப் போ...” இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத தயா திகைத்து...

“என்ன அகல்யா?? என்ன சொல்றே??” என்றான்

“நடிக்காதீங்க... நான் எதை சொல்றேன்னு தெரியாது உங்களுக்கு...”

“ஓ... நேத்து ராத்திரி நடந்ததை...”

அவன் முடிக்கும் முன், அகல்யா மேசை மீதிருந்த தம்ளரை எடுத்து வீச, அது தயாவின் நெற்றியில் சிவப்பு கொடு போட்டது. ராத்திரியப்பத்திபேசினீங்க... பொல்லாதவளாயிடுவேன். சொல்லிட்டேன்” என்று விரல் நீட்டினாள்...

“சரிம்மா... சரி... பேசல ‘’”

“சிறிது நேர மௌனம். தயா கண்ணாடியில் பார்த்து, நெற்றி ரத்தத்தை துணியால் துடைத்து, தேங்காயெண்ணையை தடவினான்.

‘பிடி கிடைத்துவிட்டது. முழுமையாக மனைவி தன்னிட வர அதிக காலம் பிடிக்காது’ என்று நினைத்துக் கொண்டான்... வேகமாய் கட்டிலை விட்டு இறங்கி வந்து, தயாவின் பனியனை பிடித்தாள் அகல்யா...

“நேத்து நடந்ததை வைச்சிட்டு, இனி தினமும் எங்கிட்ட உறவை கொண்டாடலாம்னு நினைக்காதீங்க...”

“பெரிசா கனவு காணாதீங்க... அது நடக்காது. வேற ஏதாவது விபரீதமாக நடந்துடும்... ஒகே...” என்றாள்...

“சரி... நானா வந்து உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்... நிம்மதியா இரு... முகம் கழுவி காபி குடி...”

“தெரியும் உங்க வேலையை பாருங்க...”

முதல் நாள் இரவு, இதே படுக்கை அறை தொட்ட இன்பத்தின் எல்லைக்கும், இன்றைய உரையாடலுக்கும் துளியும் தொடர்பில்லை மனத்திற்குள் பூதம் இருந்து ஆட்டுவிக்கிறது... மனிதர்கள் ஆடுகிறார்கள்... அறிவுக்கு இங்கே அதிக வேலையில்லை.
 
Top