Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Nee Enai Neengaathae Anbae 7.2

Advertisement

Admin

Admin
Member


இவ்வளவு நேரம் பொறுமையாகச் செய்ததெல்லாம் வீண்... அதைப் பாராட்டத்தான் ஆளில்லையே.... பிரின்சிக்குக் கோபமாக வந்தது, அவள் மெல்லிய குரலில் அதை ஜெப்ரியிடம் சொல்ல...

“நீ முதல்ல அவளோட பேசுறதை நிறுத்து... அப்பத்தான் நீ உருப்படுவ...” என்றான் அவன் கடுப்பாக.

ப்ரின்சியின் வருத்தமோ, கோபமோ எதுவும் லின்சியைப் பாதித்ததாகத் தெரியவில்லை... அவள் எப்போதும் போல் அலட்டலாக மண்டபத்தை வளைய வந்தாள்.

விருந்தினர்கள் மேடைக்கு வந்து வாழ்த்து சொல்லி புகைப்படம் எடுக்க ஆரம்பித்ததும் ஜெப்ரியும், ப்ரின்சியும் தங்கள் சண்டையை விட்டு அதில் கவனமாக ஆரம்பித்தனர்.

ஸ்டீபன் ஜெனியை உணவு அருந்த அழைக்க... “அப்பா ப்ளீஸ் அவ என்னோட இருக்கட்டும். நான் நைட் வீட்டுக்கு போகும்போது அவளை உங்க ரூம்ல கொண்டு வந்து விட்டுட்டு போறேன்.” என்ற புனிதாவின் விருப்பத்திற்கு இணங்கி ஸ்டீபன் தன் மனைவியை மட்டும் அழைத்துக்கொண்டு சாப்பிட சென்றார்.

உணவு அருந்தி முடித்ததும் ஸ்டீபன் “ரொம்ப நேரம் இருக்க வேண்டாம். சீக்கிரம் வந்துடுங்க...” என்றார். அவர் இவ்வளவு விட்டதே பெரிது என்பதால்... புனிதாவும் ஜெனியும் மகிழ்ச்சியுடன் சரி என்றனர்.

ஸ்டீபன் லீனாவுடன் அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலுக்குச் சென்றார். ஹோட்டல் மண்டபத்திலிருந்து பக்கம் தான்.

வரவேற்ப்பு முடிந்த பிறகு... குடும்பத்தினர் சாப்பிட சென்றனர். புனிதாவும் ஜெனியும் அவர்களுக்கு வேண்டியதை தட்டில் எடுத்துக்கொண்டு ஒரு இடத்தில் உட்கார்ந்து சாப்பிட... அப்போது ப்ரித்வி புனிதாவை அழைக்க... “ஒரு நிமிஷம் வந்திடுறேன்...” என்றபடி புனிதா எழுந்து சென்றாள்.

அவள் சென்றதும் ஜெனி மட்டும் தனியே உட்கார்ந்திருந்தாள். அவள் தனியே இருப்பதைப் பார்த்த விஜய் அவள் அருகே சென்று உட்கார்ந்து சாப்பிட... மைகேல் இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று தன் மற்ற நண்பர்களையும் அழைத்துக்கொண்டு அவர்களிடம் சென்றான்.

தன் நண்பர்களைப் பார்த்ததும் விஜய் புன்னகைக்க.... “உன் கூடப் பேச நாங்க வரலை.... சிஸ்டர் கிட்ட ஒரு நியாயம் கேட்கணும்.” என்றதும், விஜய்யின் முகம் மேலும் மலர்ந்தது.

ஜெனி அவர்களைப் புரியாமல் பார்க்க... விஜய் “ஜெனி இவங்க என்னோட க்ளோஸ் ப்ரண்ட்ஸ்.... எங்க காலேஜ் டேஸ்ல இருந்தே.....” என்று ஒவ்வொருவரையும் தனித் தனியாக அறிமுகப்படுத்த... ஜெனி புன்னகையுடன் “ஹலோ...” என்றாள்.

உறவினர்களிடம் பேசிக்கொண்டிருந்த புனிதா திரும்பி ஜெனியை பார்த்தவள்... அவளுடன் விஜய் இருந்ததால்... நிம்மதியாகத் தன் பேச்சை தொடர்ந்தாள்.

அறிமுகப்படலம் முடிந்ததும் மைகேல் “சிஸ்டர் நாங்க இவனை நம்பிதான் பாண்டிச்சேரி வந்தோம். ஆனாப் பாருங்க இவன் எங்களைப் பாதியிலேயே கழட்டி விட்டுட்டு போய்ட்டான்... இது நியாயமா நீங்களே சொல்லுங்க.” என்றதும், ஜெனி திரும்பி விஜய்யை பார்த்து புன்னகைக்க...



“டேய் நேத்து முழுசும் நான் உங்களோட சுத்தலை.....” விஜய் தன் நண்பனை மடக்க.... “அது நேத்து ஆனா இன்னைக்கு என்ன பண்ண? அழகான பொண்ணைப் பார்த்ததும் எங்களைப் பாதியிலேயே விட்டுட்டு போனியே டா மச்சான் அது நியாயமா....” மைகேல் விடாமல் வழக்கடிக்க... அதற்கு மற்ற நண்பர்களும் ஒத்து ஊதினர்.
விஜய் யாரோ பெண்ணைப் பார்த்தான் என்றதும் ஜெனி சுவாரசியமாக அவனைப் பார்க்க... “ஜெனி இவங்க சும்மா சொல்றாங்க நீ நம்பாத....” என்றான் விஜய்.

மைகேல் “யாரு நான் சும்மா சொல்றேன்னா.... ஜெனி நீங்களே சொல்லுங்க. நீங்க வந்ததுல இருந்து இவன் எங்களோட இருக்கானா இல்லை உங்களோட இருக்கானா....” என்றதும், ஜெனிக்கு அதிர்ச்சிதான்.

அவர்கள் யாரோ ஒரு பெண்ணைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று நினைத்தாளே தவிர.... அவர்கள் தன்னைப் பற்றித்தான் சொல்கிறார்கள் என்று சத்தியமாக அவள் நினைக்கவில்லை.

விஜய் தன் நண்பர்கள் மேலும் எதுவும் பேசும் முன் அங்கிருந்து கிளப்பிக் கொண்டு சென்றான். ஜெனி திரும்பி விஜய்யை பார்க்க... அவன் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு. அவன் நண்பர்கள் தவறாகச் சொல்லியிருந்தால் அவனுக்குக் கோபம் தானே வரவேண்டும்.

ஜெனிக்கு இப்போது பயம் வந்து விட்டது. விஜய் தன்னை நினைத்து மனதில் எதுவும் ஆசை வளர்த்து கொள்வானோ என்று... இனி என்ன வளர்க்க... ஏற்கனவே மனதில் அவளைத்தான் அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று பாவம் அவளுக்குத் தெரியவில்லை.

ஜெனிக்கு மனதில் குற்ற உணர்வு எழுந்தது. அவள் ராஜேஷை விரும்பும் போது... விஜய்யிடம் இயல்பாகப் பேசியது தவறோ என்று குழம்ப ஆரம்பித்தாள். அவளுக்கு விஜய்யிடம் ராஜேஷை பற்றிச் சொல்லவும் முடியாது. அதனால் விஜயிடமிருந்து விலகினால்.... அவன் புரிந்து கொள்வான் என்று நினைத்தவள்,

மேலும் சிறிது உணவு எடுக்கச் செல்வது போல்... அப்படியே புனிதாவின் அருகில் சென்று நின்று கொண்டாள். விஜய் திரும்பி ஜெனியை பார்க்க... அவள் புனிதாவோடு இருந்ததால்... அவனும் அவன் நண்பர்களோடு நின்று சாப்பிட்டான்.

அதன் பிறகு விஜய் சென்று ஜெனியிடம் பேச முயன்ற போது எல்லாம் அவள் அவனுக்குப் பிடி கொடுக்கவேயில்லை... விஜயின் முகத்தைப் பார்ப்பதையும் தவிர்த்தாள். விஜய்க்கும் அவள் தன்னைத் தவிர்க்கிறாள் என்று புரிந்தது.

இரவு மண்டபத்தில் இருந்து எல்லோரும் ஒன்றாகத்தான் ஹோட்டலுக்குச் சென்றனர். விஜய்தான் கார் ஓட்டினான். விஜயின் முகம் இறுகி இருந்தது. ஹோட்டலில் கார் நின்றதும் ஜெனி முதல் ஆளாக இறங்கி உள்ளே சென்று விட்டாள்.

ஜெனியை கவனித்த மைகேலுக்கே ஒரு மாதிரி ஆகி விட்டது. விஜயிடம் வந்தவன் “சாரி டா... நீயே பக்குவமா சொல்லி இருப்ப... நான் அவசரப்பட்டுச் சொதப்பிட்டேனோ...” என்று வருந்த...

“அவ ரொம்பப் பயந்த சுபாவம் டா... அவங்க அப்பா வேற ரொம்ப ஸ்ட்ரிக்ட்... அதனால அப்படி இருப்பா... நான் பார்த்துகிறேன்.” விஜய் தன் நண்பனையும் விட்டுக் கொடுக்கவில்லை... ஜெனியையும் விட்டுக் கொடுக்கவில்லை....

அன்று இரவு விஜய்கும் ஜெனிக்கும் தூங்கா இரவாகக் கழிந்தது. மறுநாள் காலை ஸ்டீபன் ஹோட்டலை சுற்றி இருந்த தோட்டத்தில நடக்க... லீனா குளித்துக் கொண்டிருந்ததால்... ஜெனி அவர்கள் அறையின் வெளியே இருந்த லாபியில் நின்று கூண்டில் வைக்கப்படிருந்த பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது அறையில் இருந்து எதேச்சையாக வெளியே வந்த விஜய் ஜெனியை பார்த்ததும் அவள் அருகே செல்ல... யாரோ வருவதை உணர்ந்த ஜெனி திரும்ப... அங்கே விஜய்யை பார்த்ததும் சிரிக்க முயன்று தோற்றாள். அதைப் பார்த்ததும் விஜயின் பொறுமை பறந்தது.

“ஹே... இப்ப என்ன ஆச்சுன்னு உன் முகத்தை இப்படித் தூக்கி வச்சிகிட்டு இருக்க?”

“ஒரு கிண்டல் பேச்சை கூட உன்னால சாதாரணமா எடுத்துக்க முடியாதா...”

“நான் எதோ கைல தாலிய வச்சிக்கிட்டு உன் பின்னால சுத்துற மாதிரி ப்லிம் காட்ற...”


“நான் கருப்பா இருக்கேன். அதோட வெறும் ஹோட்டல் வச்சு நடத்திறவன். நீ யாரு பெரிய உலக அழகி இல்லை.... உனக்கெல்லாம் என்னைப் பிடிக்குமா...” கோபத்தில் விஜயின் மனதிலிருப்பது எல்லாம் வெளியே வர.... ஜெனி அவன் கோபத்தைப் பார்த்து பயந்து போய் நின்றாள்.

ஜெனியின் அம்மா அழைக்கும் குரல் கேட்டதும், விஜய் அங்கிருந்து வேகமாகச் செல்ல... ஜெனி சோர்ந்து போய் அவள் அறைக்குத் திரும்பினாள்.

விஜய் பேசியது அனைத்தையும் லீனா அவர்கள் அறை வாயிலில் நின்று கேட்டுக் கொண்டுதான் இருந்தார். அவருக்கு என்ன நடந்திருக்கும் என்று புரிந்தது? அதோடு விஜய்க்கு ஜெனியை பிடித்திருப்பதையும் புரிந்து கொண்டார்.

ஜெனி குளியல் அறைக்குள் சென்றவள், ஒரு மூச்சு அழுது தீர்த்து குளித்து விட்டு வந்தாள். வீங்கி சிவந்திருந்த கண்களே அவள் அழுதிருக்கிறாள் என்று லீனாவுக்குக் காட்டிக் கொடுத்தது.

ஸ்டீபன் வந்ததும் காலை உணவை அறைக்கே வரவழைத்து சாப்பிட்டவர்கள், ஒன்பது மணி ஆனதும் அறையைக் காலி செய்துக்கொண்டு சென்னை திரும்பக் காரில் ஏறினர்.

விஜயும் அப்போதுதான் அவன் நண்பர்களுடன் வந்தான். அவனைப் பார்த்த ஸ்டீபன் “என்ன விஜய் கிளம்பியாச்சா?” என்றார்.

“ஆமாம் அங்கிள்... மத்தவங்க எல்லாம் நாளைக்கு வருவாங்க. நான் ஹோட்டல் போகணும். அதனால இன்னைக்கே கிளம்புறேன்.” என்ற விஜய் ஒப்புக்கு கூட ஜெனியை திரும்பிப் பார்க்கவில்லை. ஜெனியும் குனிந்த தலை நிமிராமல் காரில் உட்கார்ந்திருந்தாள். லீனா இருவரையும் கவனித்துக் கொண்டிருந்தார்.

ஸ்டீபன் மெதுவாகக் காரை ஒட்டுவதால்... விஜயும் மெதுவாகத்தான் ஒட்டிக்கொண்டு வந்தான். அவன் நினைத்தால் சிட்டாகப் பறந்திருக்கலாம், அவனுக்கு அவர்களைத் தனியே விட்டு செல்ல மனமில்லாமல் மெதுவாக வந்தான்.

ஜெனி இரவு உறங்காததால்... பின் சீட்டில் படுத்து உறங்கி விட்டாள். அவள் உறங்கி விட்டால் என்று தெரிந்ததும், தன் பக்கத்தில் இருந்த கணவரிடம் லீனா மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார்.

சிறிது நேரம் புனிதாவையும் ப்ரித்வியையும் பற்றியும் பேசியவர். “இந்த விஜய் மட்டும் கருப்பா இல்லாம அவங்க அண்ணனுங்க மாதிரி கலரா இருந்திருந்தா நல்லா இருக்கும் இல்லையா... அதோட படிச்ச படிப்புக்கு வேலைக்கும் போகாம... எதுக்கு இந்த ஹோட்டல் எல்லாம் வச்சிக்கிட்டு...” என்றார் சலிப்பாக....

“நிறத்தை மட்டும் வச்சு என்ன செய்ய? அவன் கருப்பா இருந்தாலும் அவன்கிட்ட என்ன குறை? யாரையும் சார்ந்திருக்காம சொந்தமா தொழில் பண்றான். அதோட அவன் ஹோட்டல் நடத்தும் இடம் அவனோட சொந்த இடம். அது மட்டுமே எத்தனை கோடிக்கு போகும் தெரியுமா... அவன் ஒன்னும் நீ நினைக்கிற மாதிரி சாதாரண ஆள் இல்லை...இன்னும் நல்லா வருவான் பாரு” என்றார் ஸ்டீபன் பெருமையாக...

உண்மையில் தன் கணவன் விஜயை பற்றி என்ன நினைக்கிறார் என்று தெரிந்து கொள்ளவே லீனா அப்படிப் பேசியது. அவர் போட்டு வாங்கியது தெரியாமல்... ஸ்டீபனும் மனதிலிருப்பதைச் சொல்லிவிட்டார்.

விஜயின் ஹோட்டலை தாண்டித்தான் ஸ்டீபன் செல்ல வேண்டும். விஜய் அவர்களுக்காக ஹோட்டல் முன்பு காத்திருப்பதைப் பார்த்து அவர் காரை நிறுத்த...

“அங்கிள் பன்னண்டு மணி ஆகிடுச்சு லஞ் சாப்பிட்டு போங்க...” என்று அவர்களைத் தன் ஹோட்டலுக்கு விஜய் அழைத்தான்.



“இல்ல வீட்ல போய்ச் சாப்ட்டிகிறோம். இன்னும் நேரம் இருக்கே...” ஸ்டீபன் மறுக்க...

“நீங்க டிராபிக்ல வீடு போய்ச் சேர இன்னும் ரெண்டு மணி நேரமாவது ஆகும். இங்கயே சாப்பிடுங்க அங்கிள்.” விஜய் வற்புறுத்த... ஸ்டீபன் திரும்பி லீனாவை பார்க்க... அவர் சம்மதமாகத் தலையசைத்தார்.

ஸ்டீபன் காரை ஓரமாக நிறுத்தி விட்டு இறங்க... ஜெனி அப்போதுதான் உறக்கத்தில் இருந்து கண் விழித்தாள். அவளுக்கு முதலில் எங்கே இருக்கிறோம் என்றே புரியவில்லை..... பிறகுதான் இது விஜய்யின் ஹோட்டல் என்று தெரிந்தது.

ஜெனி காரில் இருந்து இறங்க... விஜய் அவளைக் கண்டு கொள்ளாமல் எல்லோருக்கும் முன்பாக உள்ளே சென்று விட்டான்.

விஜய் அவர்களை நன்கு உபாரித்தான். அவர்கள் தயங்குவதால் அவனே அவர்களுக்கு வேண்டியது பார்த்து ஆர்டர் செய்தான். ஆனால் அவன் மறந்தும் ஜெனியின் பக்கம் மட்டும் திரும்ப வில்லை. அவன் ரோஷத்தை பார்த்து லீனாவுக்கு வியப்பாக இருந்தது.

அதே போல்தான் ஜெனியும். அவளின் ஒரு பார்வை விஜய்யை சமாதானம் செய்யப் போதும். ஆனால் அவள் அதைச் செய்யவில்லை... விஜய்யை சமாதனம் செய்ய முனைந்தால்... ஒன்று அவன் விருப்பத்திற்கு இணங்க வேண்டும். அல்லது ராஜேஷை பற்றிச் சொல்ல வேண்டும். இரண்டும் அவளால் முடியாது. அதனால் அவன் தன்னைப் பற்றித் தவறாக நினைத்தாலும் பரவாயில்லை என்று அமைதியாக இருந்து விட்டாள்.

உணவு அருந்தி முடித்ததும் ஸ்டீபனின் குடும்பம் விடை பெற... விஜய் அவர்களை வழி அனுப்பி வைத்தான். விஜய்க்கு ஜெனியை கேட்டால் சந்தோஷமாக மனம் முடித்துத் தந்து விட வேண்டும் என்று லீனா ஆசைப்பட... ஜெனி மனதில் இருக்கும் ஆசையை யாரறிவார்?
 
:love: :love: :love:

அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாளே ஜெனி......
அம்மாக்கு தெரிஞ்சாச்சு........ அப்பா கிட்ட பொண்ணு கேட்ட ஓகே சொல்லிடுவார் போல.....
ராஜேஷ் ஜெனி விஷயம் என்னவாகப்போகுது???
 
Last edited:
Top