Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

தப்பு பண்ணாலும் அடாவடியா குரலை உயர்த்தினால் ஜெயித்துவிடலாம் போல.பமீலா மாதிரி
பமீலாவும் பாவம்தான்
Insecurity feeling-ல ஏதோ
தப்பு பண்ணிட்டாள்
 
இரண்டாவது தாரம் அவங்க பிள்ளைகள்
எப்போதும் ஒரு தாழ்வு மனப்பான்மையில் தான் இருப்பாங்க
பமீலா அந்த மாதிரி இருக்கா
கமலி தெளிவாக முடிவுக்கு வந்து விட்டா
அண்ணன் தம்பி ஒற்றுமை அருமையாக இருக்கு
சிவகாமி நல்ல முடிவு செய்வாங்கனு நினைக்கிறேன்
 
அத்தியாயம் – 18

கமலி வனமாலியிடம் இப்படியான ஒரு பேச்சினை எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் அதிர்ந்த பார்வையிலேயே தெரிய, வனமாலியோ, விடை எதுவும் கிடைக்குமா என்னுடைய வேதனைக்கு வடிகால் எதுவும் தெரியுமா என்று கமலியின் கண்களைத்தான் பார்த்துகொண்டு இருந்தான். அவனுக்கு மனதினில் பாரம் போட்டு அப்படி அமிழ்த்தியது..

ஒருபுறம் கமலியை காயப்படுத்தி, இதோ இப்போது பமீலா காயம்பட்டு கிடப்பதற்கும் அவனே காரணியாகி ச்சே இதெல்லாம் என்னடா வாழ்க்கை என்று தோன்றிவிட்டது.. பிடித்துத்தான் திருமணம் செய்தான். அது அவளுக்கும் தெரியும். இருந்தும் அவர்களை சுற்றி இருக்கும் சூழல் எதையுமே உணர வைக்க முடியாத நிலை..

இத்தனை வருடங்களாய் பகை.. வெறுப்பு.. துவேசம் என்றுமட்டுமே கொண்டிருந்த உறகவுளிடையில் திடீரென இப்படியொரு வாழ்வு அமைந்திட, அதில் கண் முன்னே தெரியும் நிஜமான நேசத்தை கூட அவளும் சரி அவனும் சரி இயல்பாய் வெளிப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

அனைத்தையும் தாண்டி இருவரும் நெருங்கும் வேலையில் இதோ இப்படி எல்லாமே சொதப்பலாய் முடிய, வனமாலி தன்னையே வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டான் என்றுதான் சொல்லவேண்டும்.

கமலிக்கோ இப்போது மற்றது எல்லாம் மறந்து, வனமாலி இப்படி ஓய்ந்து போன தோற்றத்திலும், கசந்துபோய் பேசுவதும் மட்டுமே கருத்தில் நிற்க, அவளுக்கு அது சுத்தமாய் ஏற்றுகொள்ளவே முடியவில்லை. ஒருபுறம் தன்னை நினைத்தே விந்தையாய் இருந்தாலும் கூட,

அதெல்லாம் விட்டு “என்னங்க?? என்ன பேச்சு இது..” என்றாள் ஒன்றும் விளங்காது..

“எல்லாமே என்னால தான் கமலி.. எல்லாமே.. ம்ம்ச் எல்லாரையும் போல நானும் சும்மா இருந்திருக்கணும்.. நீயும் நிம்மதியா உன் வழில போயிருப்ப.. பமீலாவும் எப்பவும் போல இருந்திருப்பா.. நான் தான் எல்லாரையும் ஒண்ணு சேக்கணும்.. எல்லாருக்கும் நல்லது செய்யனும்னு நினைச்சு..” என்று முகத்தை சுறுக்க,

“அச்சோ என்ன பேச்சு இது..” என்றாள் இன்னும் அதிர்ந்து..

“உண்மை அதானே கமலி..” என்று திரும்பவும் அவள் முகம் பார்க்க,

“கண்டிப்பா இல்லை.. எல்லாத்துக்கும் காரணம் நான்தான்..” என்றவள், இப்போது இந்த பேச்சு வேண்டாம் என்றெண்ணி,

“சரி சொல்லுங்க என்ன சண்டை?? உங்கக்கூட பமீலா சண்டை போட்டாளா??” என்று கேட்டாள்.

“ம்ம்ஹும் சண்டைன்னு இல்லை.. ஆனா நான்தான் கொஞ்சம் கோவமா பேசினேன்..” என்றவன் நடந்தவைகளை முழுதாகவே சொன்னான்..

வந்தனா மணிமேகலையிடம் தன் திருமணத்திற்குள் அனைத்தும் பேசி முடியுங்கள், இப்படியே சண்டை சச்சரவு என்று வீட்டில் இருந்தால், பின் நான் வீட்டிற்கே வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு செல்ல, மணிராதாவோ முற்றிலும் ஆடித்தான் போனார்..

ஏற்கனவே இப்போது மகன்கள் ஒவ்வொரு பக்கம்.. இப்போது மகளும் அப்படி சொல்ல, எங்கே அனைவரும் தனி தனி ஆகிடுவரோ என்றெண்ணி திரும்ப அங்கே இந்திராவையும் பமீலாவையும் காண சென்றார். கோவர்த்தன் அப்போது தான் வந்து உண்டுகொண்டு இருக்க,

“என்னம்மா....” என்றான்..

“வனாக்கு போன் போடு தனா....”

“ஏன்?? நீயே போட வேண்டியது தானே..” என்றபடி கோவர்த்தன் அண்ணனுக்கு அழைக்க,

“அவனை இங்க வர சொல்லு. கொஞ்சம் பேசணும்..” என்றார் மணிராதா..

அனைத்தையும் கவனித்தாலும் பமீலா ஒன்றுமே பேசாது கோவர்த்தனுக்கு தட்டில் என்ன இருக்கிறது என்று பார்த்து வைத்துக்கொண்டு இருக்க, கோவர்த்தனோ “அண்ணா.. மாமா வீட்டுக்கு வர்றியா.. ம்மா பேசணும் சொல்றாங்க..” என,

“என்னவாம்..??” என்றான் இவனோ கடுப்பாய்..

“ம்மா என்ன விஷயம்??” என்று கோவர்த்தன் இங்கே அம்மாவிடம் கேட்க, “என்னன்னு சொன்னா தான் வருவானா?? வர சொல்லு.. மாமா எழுதின உயில் விசயமா பேசணும்.. வந்தனா கல்யாணத்துக்கு முன்ன எல்லாத்தையும் பேசி முடிக்கணும்.. யாருக்குமே நிம்மதியில்லை.. எல்லாத்தையும் பேசினா அவங்க அவங்க வாழ்க்கைய பார்த்துட்டு நிம்மதியா இருப்பீங்கல்ல..” என்று மணிராதா சொல்வது வனமாலிக்கும் கேட்க,

கோவர்த்தன் “ண்ணா..” எனும்போதே “வர்றேன்..” என்றுவிட்டு வைத்தவன், அடுத்த ஒரு அரைமணி நேரத்துக்குள் வந்தான்.

அதற்குமுன்னே மணிராதாவோ இந்திராவிடம் “உனக்கு எதுவும் சொல்லனும்னா சொல்லிடு இந்திரா.. மகுடா அப்படியொரு உயில் எழுதுவான்னு தெரியலை.. நமக்குள்ள முதல்ல பேசி முடிச்சிடோம்னா நாளைக்கு சங்கிலி அய்யா, சிவகாமி கமலி கூப்பிட்டு வச்சு எல்லாம் பைசல் பண்ணிடலாம்.. எப்போ பாரு ஏன் வீண் சண்டை..” என, இந்திராவோ மகளின் முகம் பார்த்தார்.

“அம்மா இனி எதுவும் பேச மாட்டாங்க.. எல்லாம் என் முடிவுதான் இனி..” என்றாள் பமீலாவோ பார்வையை எங்கோ வைத்து.

கோவர்த்தனோ “பமீ உன் முடிவு நீ மட்டும் தான் கேட்டுக்க முடியும்... எல்லாரும் ஏத்துக்கணும்னா நம்ம அனுசரிச்சுதான் போகணும்..” என, “எனக்கு அப்படி அவசியமில்லை..” என்றாள் பட்டென்று.

“பமீ..” என்று கோவர்த்தன் அதட்டும் போதே வனமாலி வந்திட, இந்திரா “வா வனா..” என்று சொல்ல, பமீலா அப்போதும் முகத்தை தூக்கித்தான் இருந்தாள்.

“பமீலா..” என்று இந்திரா சொல்லவும் வேண்டா வெறுப்பாய் “வாங்க வனா மாமா..” என்றவள், “என்ன உங்க பொண்டாட்டி இன்னும் பஞ்சாயத்து வைக்காம இருக்காங்க..” என்று சண்டைக்கு அவளே பிள்ளையார் சுழி போட,

வனமாலியோ தம்பியிடம் “என்ன தனா??” என்றான்..

“இல்லண்ணா மாமா உயில் விஷயம்...”

“அது நம்ம மட்டும் பேச முடியாதே..” என்றவன் “தாத்தாக்கு போன் போடுறேன்.. எல்லாம் வரட்டும்..” என்றான்..

“இல்ல.. முதல்ல நமக்குள்ள பேசிப்போம்..” என்று மணிராதா சொல்ல,

“எது எப்படி இருந்தாலும், சம்பந்தப்பட்ட எல்லாரும் இல்லாம நம்ம முடிவு எடுத்து என்ன செய்யப் போறோம்..” என்றான் வனமாலி அதிகாரமாய்.

“ஏன் ஏன் செய்ய முடியாது.. யார் சம்மதமும் இல்லாம கல்யாணம் மட்டும் செய்ய தெரிஞ்சதில்ல.. அப்போ இதையும் செய்யுங்க..” என்றாள் பமீலா..

“பமீலா.. நாங்கதான் பேசுறோமே..” என்று மணிராதா சொல்ல,

“நீங்க பேசவே வேணாம் அத்தை.. நீங்க ஆரம்பத்துல இருந்து பேசினதுனால தான் இப்போ எல்லாமே இப்படி..” என்றவள்,

“இங்க பாருங்க வனா மாமா.. நானோ அம்மாவோ இங்க வீட்டை விட்டுகொடுக்க மாட்டோம்.. இது நான் பிறந்து வளந்த வீடு.. அப்பா என்ன நினைச்சு உயில் எழுதினார்ன்னு தெரியாது.. ஆனா கண்டிப்பா இதை நான் விட்டு கொடுக்கமாட்டேன்.. நீங்க இதை அவங்கக்கிட்ட சொல்லிடுங்க..” என்றாள் பிடிவாதமாய்.

கோவர்த்தனோ ‘என்ன இவ இப்படி பண்றா..’ என்று எரிச்சலாய் பார்க்க, இந்திராவோ “வனா, எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை.. ஆனா எனக்கும் இந்த உயில்ல அப்படியொண்ணும் உடன்பாடு இல்லை..” என்று சொல்ல,

“அப்போ உங்களுக்கு மாமாவை விட, அவர் முடிவை விட, உங்களுக்கு இந்த வீடும் உங்க உரிமையும் தான் பெருசு..” என்றான் வனமாலி இந்திராவைப் பார்த்து.

மணிராதாவோ “என்ன இந்திரா இது..” என்று கேட்க, இந்திரா “இல்லண்ணி.. நீங்கதானே சொன்னீங்க இந்த வீட்ல இருந்தா மட்டும்தான் உங்களை எல்லாம் மதிப்பாங்க அப்படின்னு..” என்று இழுத்தார்..

இம்முறை வனமாலியும் கோவர்த்தனும் மணிராதாவை ஒருவித பார்வை பார்க்க, கூனி குறுகித்தான் போனார் மணிராதா. அவர் விதைத்தது தானே எல்லாம்.. இன்று அவருக்கே வினையாய் வந்து நிற்கிறது..

“அத்தை.. நம்மளோட மதிப்பு நம்ம எங்க இருக்கோம்னு இல்லை.. எப்படி இருக்கோம்னு பொறுத்துதான்.. எப்படி நடந்திக்கிறோம்ன்னு பொறுத்துதான்..” என்று வனமாலி சொல்ல,

கோவர்த்தனோ “நாங்க சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க..” என்றும்சொல்ல,

“முடியாது.. முடியவே முடியாது..” என்றாள் பமீலா..

“உன்னோட பேச்சையும் யாரும் ஏத்துக்க மாட்டாங்க பமீலா..”

“ஏன் ஏன் வனா மாமா.. என்னோட பேச்சை ஏத்துக்கலைன்ன உங்க பேச்சை கேட்பாங்களே.. கமலி.. அவ அம்மா.. எல்லாரும்..” என்றவள், “எனக்காக பேசுங்க மாமா ப்ளீஸ்..” என்றாள் கெஞ்சலாய்..

என்னடா இது கத்திக்கொண்டு இருந்தவள் திடீரென்று கெஞ்சவும், அனைவரும் புரியாது பார்க்க, பமீலாவோ யாரும் எதிர்பார்க்கா வன்னம் “இல்ல மாமா நீங்க பேசணும்.. எங்களுக்காக பேசணும்.. நாங்க இந்த வீட்ல இல்லைன்னா, எங்களை யாருமே கண்டுக்கமாட்டாங்க.. இந்த வீட்ல இருந்தா மட்டும் தான் எனக்கும் எங்கம்மாக்கும் மரியாதை கிடைக்கும்..” என்று சிறுவயதில் இருந்து தன் மனதில் பதிந்ததை சொல்லி, அவனின் காலை இறுகப் பற்றிக்கொண்டாள்..

சுற்றி இருந்த அனைவரும் வின்னாரில்லை விரைத்தாரில்லை, பமீலாவோ சொன்னதையே திரும்ப சொல்லி “நீங்க சொன்னா அவங்க கேட்பாங்க.. ப்ளீஸ் மாமா..” என்று சொல்லிக்கொண்டே கெஞ்ச,

“ஐயோ பமீலா என்ன இது..” என்று வனமாலி திணறியவன்,

“டேய் தூக்கு டா..” என்றான் தம்பியைப் பார்த்து.

அதற்குள் மணிராதாவும், கோவர்த்தனும் பமீலாவை தூக்கிட, இந்திராவோ மகளின் இச்செயலைக் கண்டு “அவதான் இவ்வளோ சொல்றாளே..” என்றார் பரிதாபமாய்.

வனமாலிக்கு மிகவும் தர்ம சங்கடமாய் போனது. யார் எப்படி சொன்னாலும் நியாயம் என்ற ஒன்று உண்டுதானே.. அதுவும் இத்தனை ஆண்டுகளாய் சிவகாமியும், கமலியும் அனைத்தில் இருந்து ஒதுங்கி நின்றாலும் அவர்களுக்கு பரிசாய் கிடைத்தது எல்லாம் அநியாயங்கள் மட்டுமே. அப்படியிருக்க இன்று பமீலா காலுக்கு விழுகிறாள் என்றதுமே எப்படி வனமாலி அவளுக்குச் சார்பாய் பேச முடியும்.

கோவர்த்தனோ “பமீ நீ என்ன செய்ற??!!” என்று கத்த,

“நீங்க சும்மா இருங்க.. உங்கனால முடியாதுதானே.. அப்போ சும்மாயிருங்க..” என்றவள் “நான் காலுக்கு விழுந்தும் கூட உங்க மனசு மாறலைல..” என்றாள் ஆங்காரமாய் வனமாலியைப் பார்த்து.

மணிராதாவே குழம்பிப் போனார். என்ன இவள் மாற்றி மாற்றி பேசுகிறாள் என்று. ஒன்றுமே புரியவில்லை. கெஞ்சுகிறாளா இல்லை மிரட்டுகிறாளா என்று. ஒன்றும் புரியவில்லை எனும்போது பமீலாவை என்ன சொல்லி சமாளிக்க முடியும்.

வனமாலியோ “பமீலா.. இது நான் மட்டும் எடுக்கிற முடிவில்லை.. அதுவுமில்லாம மாமாவோட உயில் தான் செல்லுபடியாகும்..” என,
“இல்லை இல்லை இல்லை.. நீங்க சொன்னா அவங்க கேட்பாங்க..” என்று அவள் சொன்னதையே திரும்ப சொல்ல, “ஏய் பமீலா உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா??” என்றான் கோவர்த்தன்.

அவனுக்கு பமீலாவாய் தெரிவதை விட, தன் மனைவி இப்படி செய்கிறாளே என்றுதான் இருந்தது. ஆனால் பமீலாவோ, “உங்களை வாயை மூட சொன்னேன்..” என்று அரட்டியவள், வனமாலியிடம் போய் ,

“கடைசியா கேட்கிறேன்.. எங்களுக்காக நீங்க பேச முடியுமா முடியாதா?” என,

“நான் உனக்கும் பேசலை கமலிக்கும் பேசலை.. மாமா முடிவுதான் இதுல பேசும்..” என்று அவனும் சொல்ல,

“அப்போ.. அப்போ.. எல்லாம் சேர்ந்து எங்கம்மாவையும் என்னையும் இங்க இருந்து அனுப்பப் பாக்குறீங்கதானே.. நான் இவ்வளோ சொல்லியும் யாரும் கேட்கலை தான..” என்று சொல்லிக்கொண்டே போனவள், கொஞ்சம் தள்ளியிருந்த டைனிங் டேபிளில் இருந்த கத்தியை எடுத்து அனைவரும் சுதாரிக்கும் முன்னே கைகளை பலமுறை வெட்டிக்கொண்டாள்..

“இது என் வீடு..” என்று அவளின் அலறல் வீடு முழுதும் கேட்க, “பமீலா...!!!” என்ற மற்றவர்களின் கதறலோ அதைவிட எதிரொலித்தது...
இதனை நேரில் காணும்போது வனமாலிக்கு எப்படி இருந்ததோ, அதைவிட இப்போது கமலியிடம் சொல்லும்போது இன்னும் வலித்தது..

“நிறைய ரத்தம் கமலி.. அப்டி ஆழமா கட் பண்ணிட்டா.. எனக்கு என்ன செய்யன்னே தெரியலை..” என்றவனுக்கு கிட்டத்தட்ட தன்னை தானே தண்டிக்கும் நிலைக்கு சென்றுவிட்டான். அவளை சமாதானம் செய்வதற்காகவாவது அந்நேரத்தில் அவள் கேட்கையில் சரி என்று சொல்லியிருக்கலாமோ எதுவுமே செய்யாது தான் பெரிய இவனாட்டம் நியாயம் பேசியது தவறோ என்று தோன்ற,

அமர்ந்திருந்த இருக்கையின் இரும்பு கை பிடியில் “எல்லாம் என்னால தான் ...” என்று ஓங்கி பலமுறை வனமாலி குத்த,

“அய்யோ... என்ன நீங்க??!!” என்று பதறிப்போய் கமலி அவனின் கரங்களை மறுமுறை இறுகப் பற்றினாள்..

“என்னை விடு கமலி.. நான் எப்படியோ போறேன்.. என்னால யாருக்குமே நிம்மதியில்லை.. பெரிய இவனாட்டம் நான்..” என்று அவன் பேசிக்கொண்டே போக,

“ஷ்...!! என்று அவனி வாயில் விரல் வைத்தவள் “எதுவும்.. எதுவும் பேசக்கூடாது.. எதுவுமே.. கிளம்புங்க வீட்டுக்கு போலாம்..” என்றாள்..

“எ.. என்னது??!!”

“என்கூட வாங்க.. வீட்டுக்கு போலாம்..” என்றவள் அவனைப் பிடித்து எழுப்ப, அவனையும் அறியாது எழுந்தவன் “ஏன். அப்.. அப்போ பமீலா..” என்று பார்க்க,

“அவளுக்கு எதுவும் ஆகாது..” என்றவள் “என்னோட வாங்க..” என்றுசொல்லி அவனை கை பிடித்தே அழைத்துக்கொண்டே போக,

சிவகாமியும் அங்கே வந்துவிட்டு இருந்தார். மகளையும் மருமகனையும் பார்த்தவர் அப்படியே நிற்க, சிவகாமி வருவார் என்று யாரும் நினைக்காததால் அனைவரும் லேசாய் எழுந்துவிட,

“உக்காருங்க..” என்றவர், வந்தனாவிடம் சென்று “கொஞ்சம் தள்ளும்மா..” என்றுசொல்லி இந்திராவிடம் போய் அமர்ந்துகொண்டார்..

கமலி அவரைப் பார்க்க, அவளுக்குப் புரிந்தது அம்மா என்ன செய்யப் போகிறார் என்று. சிவகாமியோடு ராணியும் இருக்க, “ம்மா.. இவருக்கு எப்படியோ இருக்காம்.. நாங்க வீட்டுக்கு போறோம்..” என,

அனைவர்க்கும் முந்தி கோவர்த்தன் தான் “முதல்ல அதை செய்யிங்க.. இங்க இருந்தா கண்டிப்பா அண்ணன் ஒருவழி ஆகிடுவான்..” என்றான்.

கமலிக்கு அந்நிலையில் கூட அண்ணன் தம்பி புரிதலை எண்ணி வியப்பாய் இருந்தது. கண்களில் ஒரு நன்றியை சொல்லிவிட்டு “வர்றீங்களா...” என்று வனமாலியைப் பார்த்து கேட்க, அவனோ இல்லை என்று மறுக்க,

“நீங்க வரணும்..” என, மணிராதாவும் “வனா நீ வீட்டுக்கு போ.. உன் தப்பு எதுவுமில்லை..” என்றவர், அதிசயத்திலும் அதிசயமாய்,

“அவனுக்கு முதல்ல சாப்பிட ஏதாவது கொடு..” என்று கமலியிடம் சொல்ல, அவரை நேருக்கு நேராய் பார்த்த கமலியோ “ம்ம்..” என்றுமட்டும் சொல்லி அவனை அழைத்துக்கொண்டு போனாள்.

கமலிக்கு மனதில் நிறைய கேள்விகள் இருந்தது.. ஆனால் அதெல்லாம் தாண்டி இப்போது வனமாலி மட்டுமே..மனதில் அவன் மீது நிறைய கோவம் இருந்தது. ஆனால் இப்போதிருக்கிறதா என்று தெரியவில்லை.. அதை யோசிக்க அவள் விரும்பவில்லை. யோசித்து என்னாகப் போகிறது என்ற எண்ணம். எப்படியிருந்தாலும் வனமாலியை இப்படியே விட முடியுமா..?? முடியாதே..

அப்போது உன் கோபத்தை விடு என்றது மனது.. நொடியும் யோசிக்காது சரியென்றுவிட்டாள். வனமாலிக்காக, தானே தன்னிடம் தோற்றுக்கொண்டாள் கமலி.. எப்படி இவளுக்காக.. இவளின் அம்மாவிற்காக என்று அவனின் மொத்த குடும்பத்தையும் வனமாலி எதிர்த்து நின்றானோ அதுபோல தன் கோபத்தை எதிர்த்து தானே தோற்றும்போனாள் கமலி.

அதில் அவளுக்கு எவ்வித வருத்தமும் இல்லை.. வீடு வரும் வரைக்கும் இருவரிடமும் எவ்வித பேச்சும்மில்லை, ஆனால் கமலியின் பார்வை அவ்வப்போது வனமாலியின் மீதும் சாலையின் மீதும் தான் இருந்தது. வீட்டிற்கு வந்தபின்னேயோ சாப்பிட என்ன இருக்கிறது என்று பார்த்தாள்.

அவனோ “எனக்கு எதுவும் வேணாம்..” என்று அப்படியே ஹாலில் கீழேயே அமர்ந்துவிட,

“எனக்கு பசிக்குது சோ நீங்களும் சாப்பிடனும்..” என்றவள், உள்ளே போய் என்ன இருக்கிறது என்று பார்க்க, மதியம் வைத்த சாப்பாடு இருக்க, இருவருக்கும் ஒரே தட்டில் போட்டு, எடுத்துக்கொண்டு வந்து அவன் முன்னே அமர்ந்தாள்.

“ம்ம் வாய் திறங்க..” என்றவள், அவனுக்கு ஊட்டப் போக, அவனோ அதிசயமாய் பார்க்க, “அப்புறம் பாக்கலாம்.. எனக்கும் பசிக்குது..” என்றவள், அவனுக்கு ஊட்ட வனமாலியோ மறுப்பேதும் சொல்லாது வாய் திறந்தான்..

நான்கு வாய் சாப்பாடு உள்ளே போகவும் “ம்ம் நீ சாப்பிடு..” என்றுசொல்ல,

“நீங்க முதல்ல சீக்கிரம் சாப்பிடுவீங்கலாம்...” என்றவள் அடுத்த வாயும் அவனுக்கே கொடுக்க, அவனோ அவள் கையை மடக்கி அவளின் வாயருகே வைத்தான்..

“ஷ்.. இப்படி மடக்கினா கைதான் வலிக்கும்..” என்றவள், அவனைப் பார்த்து லேசாய் முறுவலித்துவிட்டு அவளும் உண்ண, அடுத்த இரண்டு வாய் உணவும் அவளையே உண்ண வைத்தான் வனமாலி.

இப்படி மாறி மாறி இருவரும் உண்ண, வயிர் நிறைந்த பின்னே மனதில் ஒரு தெளிவும் வருவதாய் இருந்தது. அதை அவனின் முகமே காட்ட, “ம்ம் இப்போ கொஞ்சம் தெளிவா இருக்கா..” என்று கேட்டவள், அவன் பதில் சொல்லும் முன்னே உள்ளே சென்று தட்டை கழுவி வைத்துவிட்டு அவனுக்கு நீர் கொடுத்துவிட்டு,

“சரி இப்போ சொல்லுங்க நீங்க என்ன தப்பு செஞ்சீங்க..” என்று கேட்க,

அவனோ “தப்பில்லை.. ஆனா தப்பா போகிடுச்சு..” என்றான் ஒருவித இயலாமையில்..

“பமீலா அப்படி செஞ்சதுக்கு நீங்க ரீசன் இல்லை.. அவளே தான் ரீசன்.. அப்புறம்..” என்றவள், சிறிது அமைதிக்கு பிறகு “நா.. நான் உங்களை தப்பா நினைக்கலை..” என்றாள் அவனைப் பார்த்து..

“க.. கமலி...!!!!”

“ம்ம்.. கோபம் இருந்தது.. ஆனா விட்டுட்டேன்..”

“ஏ.. ஏன்??”

“ஏன்னா உங்களை விட முடியாதில்லையா..” என்றவளின் பதிலில் வனமாலிக்கு மனதினில் அப்படியொரு இதம் பரவியது.. அதை சொல்ல அவனுக்கு வார்த்தைகள் தான் இல்லை..

இத்தனை நேரமிருந்த வலி வேதனை குற்ற உணர்வு எல்லாம் கமலியின் இந்த ஒரு பதிலில் காணாது போய்விட “க.. கமலி..!!!” என்றான் திரும்பவும்..

அவனின் இதழ்களில் மீண்டும் ஒரு மெல்லிய புன்னகை. அவனின் அக்காரக் வசீகர புன்னகை சின்னதாய் எட்டிப்பார்க்க, “ம்ம்.. இன்னும் கொஞ்சம்..” என்றாள் அவனின் இதழ்களை தன் விரலால் நீட்டிவிட்டு..

அவளின் செய்கையில் “ஹா ஹா..” என்றே வனமாலி சிரித்துவிட, “அட இதில்லை மில்லி மீட்டருக்கும் செண்டிமீட்டருகும் நடுவில ஒரு சிரிப்பு..” என்றுசொல்ல,

“ஏய் போடி..” என்றான் சலுகையாய், அவள் சொல்லிய சிரிப்பை சிந்தி.

“இதோ இதோ இதுதான்..” என்றவள் “இன்னிக்கு வேறெதுவும் பேசக் கூடாது..வாங்க கொஞ்ச நேரம் தூங்குவோம்..” என்று அவனை அழைத்துப் போக, அவனுக்கோ அவள் செய்வதெல்லாம் வியப்பாகவே இருந்தது.

“என்ன பாக்குறீங்க.. கண்டிப்பா பமீலா சரியாகிடுவா.. அங்க அத்தனை பேர் இருக்காங்க தானே.. இங்க உங்களுக்கு நான் மட்டும் தான்..” என்றவள், அவனை ஒட்டியே படுத்துக்கொண்டாள் ..

“ஹேய் கமலி...” என்று அவனும் அவளை லேசாய் அணைத்துக்கொள்ள,

“தூங்க மட்டும்தான் சொன்னேன்..” என்றாள் இன்னும் அவனை நெருங்கிப் படுத்தபடி..

“எனக்குத் தெரியும்..” என்றவனின் குரலில் பழைய மிடுக்குத் திரும்பிட, முதல்முறையாய் கமலியின் மனதில் ‘எல்லாம் சரியாகிடனும்..’ என்ற எண்ணம் பிறந்தது.


Super , super epi sis..

Lively , I can feel the vanamalli feeling ...

Keep rocking dear ..
 
Top