Ennadi Maayaavi Nee 14
மாயாவி 14 :::
உந்தன் கடந்த காலம் எல்லாம்
நனவாகாமல் நித்திரையில் கண்ட
Advertisement
பயங்கர கனவாக மாறாதோ!
அந்த கனவில் இருந்து…
நான் உன்னை கலைத்து எந்தன்…
Advertisement
மடி சாய்த்து கொள்ள மாட்டேனோ!..
Advertisement
என்று என்னை கலங்க வைக்கிறாயே!
என்னடி மாயாவி நீ !
Advertisement
திருமணம், கணவன், புதுப்பெண், கல்யாண கனவு என்று இதைப்பற்றிய எந்த அரிச்சுவடியும் பெரிதாக அறியாமல் அதை உணரவும் இல்லாமல், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே தாலி கட்டி நடக்கும் சடங்கே திருமணம் என்ற அளவில் மட்டுமே தெரிந்த குழலி இதோ அந்த சடங்கை முடித்து கொண்டு வெளி நாட்டிற்கு பயணமானாள்.
இன்றைய காலகட்டத்தை போல பத்து வருடத்திற்கு முன்னே மொபைல் போன் பெண்களிடத்தில் புழக்கத்தில் இல்லையே… அதனால் நிச்சயத்தின் போதும் திருமணத்தின் போதும் மட்டுமே மாப்பிள்ளையை சந்தித்தாள். இன்னும் இருவரிடையேயும் பேச்சு வார்த்தை கூட நடக்கவில்லை…
தங்கையின் உறவை முற்றிலும் முறிக்காமல் குடும்பத்தோடு திருமணத்திற்கு அழைத்திருக்க, மாறனும் தன் குடும்பத்துடன் கலந்து கொண்டார். ஏதோ எங்கோ தப்பு நடக்கிறது என்று அவர் உள்மனம் சொன்னாலும் அதை என்னவென்று இனம் காணமுடியாமல் ஒரு தவிப்போடு அங்கிருக்க, அவரின் மகனோ,
“அப்பாடா ! இனிமேல் இவளோட பந்தா பேச்சை கேட்க வேணாம்… சும்மாவே இவங்களை கையில பிடிக்க முடியாது இதுல வெளிநாட்டுக்கு வேற போனா அவ்வளவு தான்… எதுவா இருந்தா என்ன? நமக்கு அவகிட்ட இருந்து விடுதலை…” என்று எண்ணியவன் என்னவோ அவளை அனுதினமும் பார்ப்பது போல அவனுக்குள்ளே சலித்துக் கொண்டான்.
எல்லாம் முடிந்து அவள் வெளிநாட்டிற்கு கிளம்பும் மாறன் வீடு வந்தவள்,
“மாமா ! நான் போயிட்டு வரேன்…” என்று கலங்கிய குரலில் சொன்னவளை,
“பத்திரமா இருக்கணும்… புது இடம் புது மனுஷனுங்க… தனியா எங்கையும் போகாதே…” என்றவரின் கையை இறுக்கமாக பிடித்து,
“மாமா ! எனக்கு என்னவோ பயமா இருக்கு…” என்று தவிப்போடு சொன்னவளை தன் தோளோடு அணைத்தவருக்கு கண்கள் என்னவோ கலங்குவது போலிருக்க,
“கருத்தம்மா… ரொம்ப தூரம் போறல்ல அதான்… வேற ஒண்ணுமில்லை… நீ தான் ரொம்ப தைரியமான பொண்ணாச்சே… எதுவானாலும் இந்த மாமா இருக்கேன்… சரியா…” என்று அவளுக்கு ஆறுதலித்தார்.
“தம்பி ! இவ இன்னும் குழந்தை தான் அதனால எங்க பொண்ணை பத்திரமா பார்த்துக்கோங்க…” என்றவரிடம் அரவிந்த் வெறுமனே தலையசைத்து அவளை கூட்டி சென்றான்.
இதோ அவள் வெளிநாட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. அவளின் அன்றாட வழக்கங்களையே இப்போது தான் பழக ஆரம்பித்து இருந்தாள். அவளிடம் அத்தியாவசிய பேச்சைத் தவிர வேறு எதுவும் பேசாமல் தனி அறையில் வாசம் செய்யும் கணவனின் வித்யாசம் அவளுக்கு பெரியதாக தெரியவில்லை… மேலும் ஒரு வாரம் சென்ற நிலையில், அவளே அரவிந்தனிடம் வந்து,
“இங்க எந்த காலேஜ் சேர்க்க போறீங்க ? வீட்ல ரொம்ப போர் அடிக்குது… விட்ட செமஸ்டர்ல இருந்து நான் படிக்கலாமா இல்ல முதல்ல இருந்து படிக்கணுமா? நீங்க எங்க என்ன வேலை செய்யறீங்க? காலேஜிக்கு நீங்களே கூட்டிட்டு போவீங்களா இல்ல பஸ்ல போகணுமா?” என்று வரிசையாக கேட்டவளுக்கு எந்த பதிலும் அளிக்காமல் அமைதியாக டிவி பார்த்துக் கொண்டிருந்தவனை பார்த்து கொண்டிருந்தான்.
“நான் கேட்டுகிட்டே இருக்கேன் நீங்க எதுவும் சொல்லாமல் அமைதியா இருக்கீங்க…” என்றவளை பார்த்து சடாரென அவன் எழவும், அவள் அதிர்ந்து பின்னே செல்ல,
“உனக்கு படிப்பு ஒன்னு தான் கேடு… ஏதோ கிடைச்சிருக்க இந்த வெளிநாட்டு வாழ்க்கையை வாழ்ந்துட்டு, போடறதை சாப்பிட்டுக்கிட்டு அமைதியா இரு… சும்மா நொய்நொய்ன்னு பேசிட்டு இருக்காத… என் கண்ணு முன்னாடி வராதே…” என்று அவளிடம் கோபமாக பேசியவன் தன் அறைக்கு சென்று கதவை படாரென அடித்து சாத்தினான்.
இதுவரை அவளை யாரும் அதட்டி பேசியது கூட இல்லை அப்படி இருக்க அவனின் கோபம் அவளை வெகுவாக பயமுறுத்தியது. “படிக்க வைப்பாங்கன்னு தானே கல்யாணம் பண்ணாங்க…. இப்ப இவங்க இப்படி பேசறாங்க?” என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டு காலத்தை ஓட்டியவள், முடியாமல் ஒரு நாள் மறுபடியும் அவனிடம் படிப்பை பற்றி பேச, அவனோ அவளை ஓங்கி அறைந்திருந்தான்.
“உன்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கேன்… என் முன்னாடி வராதே அப்படியே வந்தாலும் என்கிட்ட பேசாதன்னு சொன்னா கேட்க மாட்டியா?” என்று தன் எதிரே இருந்தவளை கீழே தள்ளி விட, அங்கிருந்த சேரில் இடித்துக் கொண்டு அவனை அதிர்வோடும் பயத்தோடும் பார்க்க,
“ஏற்கனவே உன்மேல நான் செம காண்டுல இருக்கேன்…இன்னொரு முறை என் எதிர்ல வந்து நின்ன அவ்வளவு தான்… “என்றவன் விரல் நீட்டி எச்சரித்து விட்டு வெளியேறினான்.
“நான் என்ன பண்ணேன்… எதுக்கு என்மேல இவ்வளவு கோபம்? என்னை ஏன் இப்படி அடிக்கறாங்க?..” என்று நடந்த அவள் அதிர்ந்து போயிருக்க அதற்கான விடையெல்லாம் அவளுக்கு இரண்டு நாளிலே தெரிந்தது.
இரண்டு நாள் கழித்து காலை வேளையில் அந்த நாட்டின் பெண் ஒருத்தியுடன் நெருக்கமாக இடுப்பில் கையை போட்டவாறு வீட்டிற்கு அழைத்து வந்தவனை பார்த்து அதிர்ந்தவள் அவனிடம் கேட்க வாயை திறப்பதற்குள் அவனின் அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தான்.
மாலை கதவை திறந்து வெளியே வந்தவன் அந்த பெண்ணை வழி அனுப்பி விட்டு தள்ளாடியபடியே வந்து சோபாவில் அமர, அவனிடம் பேசலாம் என்று நினைத்தவள் அவனின் போதையை பார்த்து சோர்த்து போய் தன் அறையில் படுத்தவளுக்கு உறக்கம் எங்கோ தூரம் சென்றது.
மறுநாள் அவன் எப்போதும் போல டிவி பார்த்து கொண்டிருக்க, அவனிடம் சென்று,
“நேத்து வந்த பொண்ணு யாரு? நீங்க குடிப்பீங்களா?” என்று அவள் கேட்டதும் அவளை காட்டமாக முறைத்தவன்,
“அதெல்லாம் உனக்கு தேவை இல்லாதது… ஒழுங்கா போய் உன் வேலையை பாரு…” என்றவனை கண்டு அவள் பயந்து ஓடாமல்,
“நீங்களா தானே என்னை பொண்ணு கேட்டு வந்து கல்யாணம் பண்ணீங்க? என்னை படிக்க வைப்பீங்கன்னு சொல்லி தானே என்னை இங்க கூட்டிட்டும் வந்தீங்க… ஆனால் இப்ப குடிக்கறீங்க யாரோ ஒரு பொண்ணை கூட்டிட்டு வர்றீங்க…?” என்று ஒரு வித ஆற்றாமையோடும் கோபத்தோடும் கேட்டவளை போட்டு அடித்தவன்,
“என்னையே கேள்வி கேட்கற அளவுக்கு வந்துட்டியா நீ?” என்றவாறே அவள் கையை முறுக்கினான்.
“வலிக்குதுங்க.. வலிக்குதுங்க.. விடுங்க… நான் என்ன தப்பு பண்ணேன்… எதுக்கு என்னை இப்படி கொடுமை படுத்தறீங்க…” என்று கதறியவளைப் பார்த்து,
“எல்லாம் உன்னால தாண்டி… நீ சொன்ன மாதிரி எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கல… வேற யாரையும் எனக்கு பிடிக்காது… அப்புறம் நீ கேட்டியே நேத்து வந்த பொண்ணு யாருன்னு? அவ தான் என் பொண்டாட்டி…” என்றவனை அதிர்ந்து பார்த்தவள்,
“என்ன சொல்றீங்க? அவங்க உங்க பொண்டாட்டியா? அப்ப நான் யாரு?” என்று கேட்டதும்,
“ஓஓ! உனக்கு தான் என்கதை தெரியாதில்ல… ஆமாண்டி அவ தான் என் பொண்டாட்டி மை லவ் எல்லாமே… அவளுக்கும் எனக்கும் கல்யாணம் நடந்து ஒரு வருஷமாகுது… இந்த நாட்டு பொண்ணை கல்யாணம் பண்ணதால தான் எனக்கு இந்த நாட்டோட குடிமகன்ற உரிமை எல்லாம் கிடைச்சுது… அதை வைச்சு தானே உங்க வீட்ல உன்னை எனக்கு கட்டி கொடுத்தாங்க…” என்று நக்கல் குரலில் சொன்னவனை பார்த்து,
“அப்ப எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க…” என்று கோபமாக கேட்டவளை அறைந்தவன்,
“என்ன ? குரல் உயருது…. தொலைச்சுடுவேன் பார்த்துக்க… உன் மேல ஆசைப்பட்டு ஒன்னும் உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கல… பணம் பணம்… பணத்தால் தான் உன்னை கல்யாணம் பண்ணேன்…” என்றவனை அதிர்ந்து போய் பார்க்க,
“நான் இங்க படிக்க வந்து 7 வருஷம் ஆகுது… பிடிச்சா வேலைக்கு போவேன் இல்லைன்னா எங்க அப்பா கொடுக்கற பணத்தை வைச்சு சாப்பிடுவேன்…. அப்ப தான் என் பேபியை பார்த்தேன், இரண்டு பேரும் லவ் பண்ணோம்… போன வருஷம் கல்யாணமும் பண்ணோம்…”
“இனி நான் சும்மா இருக்க முடியாதில்ல… என் பேபி பிசினஸ் பண்ணலாம்னு சொன்னதும் இந்தியா வந்து என் கல்யாண விஷயத்தை சொல்லி எங்க எங்கப்பன் கிட்ட பணத்தை கேட்டா…”
“அந்தாளு குடும்ப கௌவரம் அது இதுன்னு சொல்லி என் கல்யாணத்தையும் ஏத்துக்கல எனக்கு பணமும் தரல… என்னை மறுபடியும் இங்க வரவும் விடல… அப்படி நான் வரணும்னா வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் போகணும்னு சொல்லிட்டாங்க…”
“சரின்னு எங்கப்பன் வழிக்கே போய் வேற கல்யாணத்துக்கு சம்மதிக்கறேன்னு சொன்னதும் பொண்ணு தேடினாங்க… பணத்துக்காக சம்மதம் சொன்னாலும் அந்த கல்யாணம் நடக்கறதுல எனக்கு விருப்பம் இல்லை… நடக்க கூடாதுன்னு வேண்டிக்கிட்டு இருந்தேன்…”
“ரொம்ப வசதி குறைவான பொண்ணை தான் தேடினாங்க அப்ப தான் என் விஷயம் தெரிய வந்தாலும் பெருசா முரண்டு பிடிக்காம இருப்பாங்கன்னு…”
“ஆனால் அதுக்கு வேலையே இல்லாம நீங்களா வந்து சிக்கனீங்க… ஏன்னா நாங்க உங்களுக்கு வலை விரிக்கவே இல்லை… எல்லாம் எதேர்ச்சையா நடக்க எங்கப்பன் அதை அப்படியே பிடிச்சிக்கிட்டு உன்னை எனக்கு கட்டி வைச்சுட்டான்…”
“இப்ப பணம் கேட்டா எங்கப்பன் ஏதேதோ காரணம் சொல்றான்.. அவளுக்கும் விஷயம் தெரிஞ்சு என்மேல கோவமா இருக்கா… இதுக்கெல்லாம் காரணம் நீயும் உன் குடும்பமும் தான்… எங்கப்பாவோட பணம் வசதி இது பத்தாதுன்னு வெளிநாட்டு மாப்பிளை அங்கேயே படிப்புன்னு சொன்னதும் என்ன ஏதுன்னு விசாரிக்காம அப்படியே உன்னை தூக்கி கொடுத்துட்டாங்க…”
“ஏண்டி இவ்வளவு சின்ன வயசுல க்ரீன் கார்டு வாங்கியிருக்கேன்னு சொல்லும் போது கூடவா உங்கப்பன் விசாரிக்கல…”என்று கேட்டவனின் குரலில் இருந்த எள்ளலை உணர்ந்தவள் கூனி குறுகி போனாள்.
அவன் சொல்வது எல்லாம் சரி தானே வெளிநாட்டு மாப்பிள்ளை என்ற ஒரே காரணத்திற்காக தானே இதற்கு சம்மதம் தெரிவித்தனர் என்று யோசித்தவளுக்கு மனம் கனத்து போக,
“உங்களுக்கு தான் என்னை பிடிக்கலைல்ல.. அதுவும் இல்லாம உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இருக்குல்ல… அப்ப என்னை எங்க அப்பாகிட்ட அனுப்பி விட்ருங்க… நான் இனி உங்களுக்கு தடையா இருக்க மாட்டேன்…” என்று வெறுமையாக சொன்னவளைப் பார்த்து,
“என்னது உன்னை விடறதா? உன்னை விட்டா எங்கப்பன் எப்படி பணம் தருவான்? நான் எப்படி என் பேபி கூட வாழறது? ஏற்கனவே பேபிக்கு என் கல்யாணம் விஷயம் தெரிந்து என்மேல கோவமா இருந்தவளை இப்ப தான் சமாதானம் பண்ணி கூட்டிட்டு வந்தேன்… எங்கப்பன் பணம் கொடுக்கற வரைக்கும் நீ இங்க தான் இருக்கணும்…”
“இங்கிருந்து நீ போக முடியாது… அதுக்கு அப்புறம் உன்னை வேற இடத்துல தங்க வைக்கிறேன்… எப்படி இருந்தாலும் உனக்கு பிடிச்ச வெளிநாட்டு வாழ்க்கை தானே அப்புறம் என்ன ? அமைதியா ஒரு மூலையில இரு சரியா… எல்லாம் சரியாகட்டும் இங்கயே உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்…” என்றவனை பார்த்து,
“என்னோட அனுமதி இல்லாமல் என்னோட வாழ்க்கையை பத்தி முடிவெடுக்க நீங்க யாரு? என்னோட வாழ்க்கையை உங்க இஷ்டத்துக்கு ஆட்டுவிக்க உங்களுக்கு யாரு அனுமதி கொடுத்தது… என்னை இங்கிருந்து கொண்டு போய் விடுங்க… எனக்கு இங்க இருக்க வேணாம்…” என்று ஆவேசமாக பேசியவளைப் போட்டு அடித்தவன்,
“இன்னொரு முறை என்னை எதிர்த்து எதுவும் பேசினா உன்னை உருத்தெரியாம அழிச்சுடுவேன்…” என்று அவளை எச்சரித்தவனை ஒன்னும் செய்ய முடியாமல் அவன் கொடுத்த அதிர்ச்சியிலும் அடியிலும் மயங்கிச் சரிந்தாள்.
