Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennadi Maayaavi Nee

Ennadi Maayaavi Nee 9

மாயாவி 9 :::

 

வேண்டாமென்று என்னை…

ஒதுங்கி போக வைத்த நீ !



Advertisement

இன்று என்னையே உன்னை…

தேட வைக்கிறாயே!

என்னடி மாயாவி நீ !

Advertisement

 

Advertisement

மறுநாள் காலை எப்போதும் போல எழுந்து அலுவகம் செல்ல தயாராகி அவனுக்காக காத்திருக்க வெகு நேரமாகியும் அவன் வராததால் அவன் அறை கதவை தட்டியதும் அது தன்னாலே திறக்க, அந்த அறையின் வெறுமையே அங்கிருந்து அவன் சென்று விட்டதை அவளுக்கு பறை சாற்றியது.  

 

அவன் அங்கு தங்கியிருந்த இந்த மூன்று மாதத்தில் ஒரு முறையும் அவள் அந்த அறைக்கு சென்றதில்லை. அது மட்டுமில்லாமல் சாப்பாட்டை தவிர அவனது தேவைகளை அவனே செய்து கொண்டிருந்தான்.

Advertisement

 

இதுவரை அவளுக்காக அவன் ஒரு துரும்பையும் அசைத்து இல்லை… ஒரு குண்டூசி அளவு நேசம் கூட காட்டியது இல்லை… ஆனால் கட்டாயத்தின் பேரில் அவன் கட்டிய அந்த தாலி அவளுக்கான அவன் உறவை மனதின் மூலையில் எங்கோ பதிய வைத்திருந்ததோ.. அதனால் தானவோ என்னவோ இன்று திடீரென அவன் மாயமானதை எண்ணி தவிக்கிறாள்… அவளே அறியாள்…

இந்த வாழ்க்கையில் இருந்து விலகி அவனுக்கான வாழ்க்கையை வாழ சொன்னதெல்லாம் எங்கோ ஓடி சென்று மறைய அவ்வளவு தானா விட்டுவிட்டு போய் விட்டானா என்று அதிர்ந்து நின்று விட்டாள்…

 

அவளின் அதிர்வு ஒரு இரண்டு நிமிடம் கூட கடந்திருக்காது அதற்குள் கவி அழைத்து இருந்தான்.

 

“ஹே ! பூனை எவ்வளவு நேரம் வெயிட் பண்றது… இரண்டு பேரும் இன்னும் என்ன பண்றீங்க? இன்னைக்கு ப்ராஜெக்ட் சப்மிட் பண்ணனும்… சீக்கிரம் கீழே வா… நேரமாகுது…” என்று அவன் சொன்னதும்,

 

“ஒரு ஐஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணு கவி இதோ வரேன்…” என்றவள் வெளியே வந்து அந்த அறையின் கதவோடு சேர்த்து தன் மனதையும் இழுத்து பூட்டியவள் ஒரு இரண்டு நிமிடம் சோபாவில் அமர்ந்து தன்னை நிலைப்படுத்தினாள்.

 

“எங்க போயிருப்பாங்க? ஊருக்கா இல்லை இங்க பிரெண்ட் வீட்டுக்கு எங்கும் போயிருப்பங்களா?” என்று யோசித்தவள் விஷயம் வெளியே வரும் போதே தெரிந்து கொள்ளுவோம் என்று அதை புறம் தள்ளிவிட்டு எப்போதும் போல தன் இறுக்கத்தை அணிந்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள்.

 

தனியாக அவள் மட்டுமே வந்து காரில் ஏறுவதை குழப்பமாக பார்த்தவன்,

 

“அவர் எங்க காரு? நேத்து நடந்ததுல இன்னும் கோவமா இருக்காரா? நான் வேணும்னா போய் அவரை சமாதானப்படுத்தி கூட்டிட்டு வரேன்…” என்று காரில் இருந்து இருங்கியவனை நிறுத்தி,

 

“அவர் இங்க இல்லை…” என்றாள்.

 

“இங்க இல்லைன்னா வேற எங்க போயிருக்காங்க?..” 

 

“தெரியல….”

 

“என்ன தெரியலைன்னு சொல்ற… உன் வீட்டுக்காரர் எங்க போயிருக்காங்கன்னு கூட தெரியாம நீ என்ன தூங்கிட்டு இருந்தியா?” என்று அவளை காரமாக கேட்டவனை முறைத்தவள்,

 

“ஆமா ! நான் தூங்கிட்டு இருக்கும் போது தான் போயிருக்காங்க… அவர் பெட்டி எல்லாம் ரூம்ல இல்லை… எங்க போயிருக்காங்கன்னு தெரியாது… ஏன்னா என்கிட்ட சொல்லிட்டு போகலை…” என்று எந்தவித உணர்வும் இல்லாமல் சொன்னவளை ஆராய்ந்தவாறு, 

 

“சரி! அவருக்கு போன் பண்ணி கேளு…” என்றவனிடம், 

 

“என்கிட்ட அவர் நம்பர் இல்லை…” என்றவளை எதுவும் சொல்ல முடியாமல் முறைத்தவன், தன் போனை எடுத்து அமுதனை அழைக்க அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

 

“நேத்து நீயும் நானும் சேர்ந்து அவரை ரொம்ப பேசிட்டோமா.. அதான் இப்படி கோவிச்சிக்கிட்டு போயிட்டாரா?” என்று வருத்தமாக கேட்டவனை பார்த்து,

 

“நம்ம எதுவும் அப்படி தப்பா பேசல…” என்றவளின் இறுக்கமான பதிலில் வேறு ஏதோ பொதிந்திருப்பதை உணர்ந்தவன், 

 

“காரு,வீட்டுக்கு வந்த அப்புறம் அவரை எதுவும் பேசினியா?” என்று கேட்டதும் அவள் மேலோட்டமாக அவர்களின் பிரிவை பற்றி பேசியதை தவிர்த்து மற்றதை மட்டும் சொல்ல,

 

“உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? ஆபீஸ்ல பேசினது பத்தாதுன்னு வீட்டுக்கு வந்தும் வேற பேசி வைச்சிருக்க? இவ்வளவு வருஷம் அவர் இப்படி இருந்த போதெல்லாம் சும்மா விட்டுட்டு திடீர்னு இப்ப வந்து மாறுன்னு சொன்னா அவர் மாறிடணுமா…” என்று அவன் படபடவென பொரிந்து தள்ள,

 

“ஆமா ! மாற வேணாம் நீ கூட அப்படி தானே இருந்த… அதான் அவருக்கு சப்போர்ட் பண்ற… உங்கிட்ட பணம் இருந்துச்சு அதனால நீ அப்படி இருந்தது யாருக்கும் பாதிப்பு இல்லை… ஆனால் இங்க அப்படி இல்லையே… மாமா இன்னும் எவ்வளவு நாள் கஷ்டப்படுவாங்க…” என்று அவளும் பதிலுக்கு பேசினாள்.   

 

“உன்கிட்ட பேசி சமாளிக்க முடியாது…” என்றபடி ஆபீஸ்க்கு வண்டியை விரட்டினான். ஆபீஸ்க்கு வந்து ப்ரொஜெக்ட்டை சப்மிட் செய்ய அது திருப்தியாக இல்லாமல் வாடிக்கையாளர் கம்பெனியால் நிராகரிக்கப்பட்டது.

 

அவர்களின் முதல் தோல்வி வேறு… இருவருக்கும் அதுவே ஒரு சோர்வை கொடுத்தது. அது அன்றைய நாள் மட்டுமே தொடர்ந்தது. மறுநாள் அந்த தோல்வியை எப்படி ஈடுகட்டுவது என்ற பரிசீலனையில் இறங்கினர். 

 

அதன் முதற்கட்டமாக நல்ல திறமையான அனுபவம் வாய்ந்த ஒருத்தரை சிவில் பிரிவில் எடுக்கலாம் என்று குழலி சொல்ல, மறுபடியும் கவி அமுதனுக்காகவே பரிந்துரை செய்ய அவளின் கோபம் எல்லை மீறுவதைக் கண்டு, இறங்கி வந்தவன் அந்த வேலைக்கு விளம்பரம் கொடுத்திருந்தான்.  

 

இடையில் மாறனுக்கு போன் செய்து நடந்ததை சொல்லி தன் சார்பாக மன்னிப்பும் வேண்டி, அங்கு ஊருக்கு சென்றிருக்கிறானா என்று அவனின் வருகையையும் சேர்த்து உறுதி செய்திருந்தான் கவியரசன்.

 

இங்கு குழலியும் தற்காலிகமாக அமுதனின் நினைவை தள்ளி வைத்திருந்தாலும் மூன்று மாதத்திற்கு மேல் தன்னுடன் அலுவகத்திலும் வீட்டிலும் இருந்தவனின் நினைவு அவ்வப்போது எட்டிப்பார்த்தாலும் அதை தடுக்க முடியாமல் அவளும், மாறனிடம் சொல்லியாற்று இதற்குமேல் அவர் பார்த்து கொள்வார்  என கவியும், அவர்களின் அடுத்தகட்ட வேலையில் இறங்கினர்.

 

இங்கு இவர்கள் இப்படி இருக்க அமுதனோ தனது பழைய வாழ்வை மீண்டும் தொடங்கியிருந்தான்… டிப்ளமோ கல்லூரியில் பெரிதாக எந்த வேலையும் இருக்காது யாரும் எதுவும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்று தான் அங்கு வேலை செய்து கொண்டிருந்தான்… 

 

அங்கும் சரிவர போகாததால் இப்போது மறுபடியும் அவனை அங்கு வேலைக்கு சேர்த்துக் கொள்ளவில்லை… அதனால் வீட்டில் சும்மா இருந்தபடி நண்பர்களுடன் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தவனை இயலாமையோடு பார்த்து கொண்டிருந்த மாறன் அவன் வந்து நின்ற நாளை எண்ணினார்…

 

“டேய் ! என்னடா ? நீ மட்டும் வந்து இருக்க ? ஆபீஸ் லீவா? கருத்தம்மா வரலையா ?” என்று அவர் கேட்டதும்,

 

“யாரும் வரல… நான் மட்டும் தான் வந்தேன்…” என்றவனை குழப்பமாக பார்க்க,

 

“எனக்கு அங்க இருக்கவும் பிடிக்கல… அந்த வேலையும் பிடிக்கல… அதான் கிளம்பி வந்துட்டேன்…” என்று அலட்சியமாக சொன்னவனை பார்த்து அதிர்ந்து,

 

“என்னடா சொல்ற? என்று மாறன் கேட்க, 

 

“ஆமாப்பா! நான் இனி அங்க போகல… அம்மா ! பசிக்குது… நான் குளிச்சுட்டு வரேன் சாப்பாடு எடுத்து வைங்க…” என்று தாய் செல்வியிடம் சொல்லி விட்டு தன் அறைக்கு சென்றான்.

 

மகன் வேலை, கல்யாணம் என அவன் வாழ்க்கை இனி நன்றாக இருக்கும் என்ற அவரின் எண்ணத்தை தவிடு பொடியாக்கி இப்படி வந்து நிற்கிறானே என்று தவித்தவரின் எண்ணம் உடனே மருமகளிடம் சென்றது. அதற்கேற்றாற் போல கவி போன் செய்து அனைத்தையும் சொல்ல முற்றிலுமாக தளர்ந்து போனார்.

மகன் குளித்து வந்து சாப்பிட அமர்ந்ததும் பெங்களூர் வாழ்வையும், குழலியையும் செல்வி விசாரிக்க,

 

“அம்மா ! அவ சரியான திமிரு பிடிச்சவம்மா… அவளுக்கு கீழே வேலை போட்டு கொடுத்து என்னை எப்படி அதிகாரம் பண்றா தெரியுமா… போன மூணு மாசத்துலயே எனக்கு நிறைய வேலை கொடுத்து கொடுமை பண்ணா… அதான் போடி நீயும் வேணாம் உன் வேலையும் வேணாம்னு தூக்கி போட்டுட்டு வந்துட்டேன்…” என்று அவனை எதுவும் கேட்டு விட கூடாது என்பதற்காக சொன்னவன், 

 

பின்னாளில் இப்படி பேசியதை நினைத்து வருந்த போவதையும் அதை தடுக்க இயலாமல் தடுமாற போவதையும் அறியாமல் தாயிடம் சொல்ல, 

 

செல்வியோ, “பெரியவங்க இருக்காங்கன்ற அந்த மரியாதை எல்லாம் தெரியாம கல்யாணம் ஆன மறுநாளே உடனே இங்கிருந்து போனவ தானே… அதான் அவளோட உண்மையான குணம் போல… உங்க அப்பாவை எதிர்த்து ஒன்னும் பண்ண முடியாததால இந்த கல்யாணமும் நடந்து போச்சு…” என்று பொருமியவர் மகனின் பொறுப்பின்மையை அறியும் காலமும் வருமோ… 

 

அவன் வீட்டிற்கு வந்து இரண்டு வாரத்திற்கு மேல் ஆனது… முதலில் எப்போதும் போல நாட்களை கடத்தியவனுக்கு போக போக எல்லாம் வெறுமையாக தோன்ற ஆரம்பித்தது… நண்பர்களுடன் எத்தனை நாட்கள் பொழுதை கழிக்க முடியும்… 

அப்படியே பொழுது போகாமல் அவர்களை அழைத்தால் வேலை இருக்கு என்று அவர்களும் கையை விரித்தனர். ஏனெனில் இவனை போல யாரும் சும்மா இல்லையே… 

“அமுதா! நம்ம பக்கத்து வீட்டு வரதன் அண்ணா கடையில பில் போட ஆள் வேணுமாம்… சம்பளம் எட்டாயிரம்ப்பா… வேற யாருக்கும் கொடுக்க வேணாம் நீ வருவேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்… நாளையில இருந்து நீ போறியா…” என்று வெகுளியாக கேட்ட தாயின் கேள்வியில் அதிர்ந்தவன்,

 

“அம்மா ! என்னம்மா… நான் படிச்ச படிப்பென்ன நீ போக சொல்ற வேலை என்ன? படிக்காதவங்களே இப்ப எல்லாம் அந்த வேலை செய்யறாங்கம்மா…” என்று ஆதங்கத்தோடு கேட்டவனை பார்த்தவர்,

 

“இல்லப்பா வீட்ல சும்மா இருக்கியே உனக்கும் பொழுது போகும்னு தான்… அதுவில்லாமல் உன் பொண்டாட்டிக்கு முன்னாடி நீ இப்படி வேலை வெட்டி இல்லாமல் இருந்தா நல்ல இருக்காதில்லை…” என்றவரை வெறுமையாக பார்த்தவன் எந்த பதிலும் சொல்லாமல் உள்ளே செல்ல,  இருவரின் பேச்சு வார்தையையும் கேட்டுக்கொண்டிருந்த மாறன் விரக்தியாக சிரித்தார்.

 

சொல்லறிவும் சுயறிவும் கற்றுக்கொடுக்காத பாடங்களை கண்முன்னே நடத்திக்காட்டும் சூழ்நிலைகள் கற்றுக்கொடுக்குமோ… அப்படி கற்றுக்கொடுக்கும் போது அக்காலத்தினை கடக்க விடாமல் அந்த பாடத்தை தவற விடாமல் எழிலமுதன் கற்று கொள்வானா?

 

தாயின் கேள்வியில் முதல் முறையாக தன் நிலையை ஆராய்ந்து கொண்டிருந்தவனை இரண்டு நாள் கழித்து வந்த தொலைபேசி அழைப்பு முற்றிலும் நிலைகுலைய வைத்திருந்தது…  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!