ஸ்ருதியும் அந்த நிகழ்வை மறந்திருந்தாள். அது மட்டுமல்லாமல் அந்த படம் பெயர் கூட அவளுக்கு தெரியாது. அவள் பாட்டு படத்தில் வரும் என்றும் அவளுக்கு தெரியாது. ஆனால் ராகவனுக்கு தெரியுமே?
எப்படி அவளை அந்த படத்துக்கு அழைத்துச் செல்ல என்று அவனுக்கு யோசனையாக இருந்தது. இப்போதெல்லாம் அவளை சந்தோஷப் படுத்திப் பார்க்க வேண்டும் என்று அவன் மனது பரபரத்தது.
“என்ன செய்யலாம்?”, என்று அவன் எண்ணிக் கொண்டிருக்கும் போதே அதுக்கு ஒரு வாய்ப்பு வந்தது.
ஒரு அவசர மீட்டிங் ஏற்பாடு செய்யப் பட்டு “கைஸ், நம்ம புராஜெக்ட் வெற்றிகரமா முடிஞ்சதுனால நம்ம பாஸ் நம்மளை பாராட்டி கொஞ்சம் அமவுண்ட் ஸ்பான்சர் பண்ணிருக்கார். அதை எப்படி செலவு பண்ணன்னு ஐடியா கொடுங்க”, என்று அனைவரிடமும் கேட்டான் பிரகாஷ்.
ஆள் ஆளுக்கு ஒவ்வொன்றைச் சொல்ல ஸ்ருதியோ அவ்வப்போது தன்னுடைய நாயகனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“எனக்கு ஒரு ஐடியா தோணுது. சொல்லவா?”, என்று ராகவன் கேட்க “சொல்லு டா”, என்றான் பிரகாஷ்.
“ரெண்டு நாள் முன்னாடி புதுப்படம் ரிலீஸ் ஆகிருக்கு. லவ் அண்ட் ஃபேமிலி சப்ஜெக்ட் தான். அங்க போகலாமா? மதியம் படம் பாத்துட்டு ஹோட்டல்ல சாப்பிட்டு வரலாமா?”, என்று கேட்க அனைவருமே சந்தோஷமாக சரி என்று சொன்னார்கள்.
“சரி எல்லாரும் கிளம்புங்க. நான் பஸ்க்கு சொல்லிட்டு வரேன்”, என்று பிரகாஷ் எழுந்து கொள்ள “சார், நான் வரலை”, என்று சொன்னாள் ஸ்ருதி. அங்கு சென்றாலும் ராகவன் தன்னை கண்டு கொள்ள மாட்டான். அனைவரும் இருக்கும் போது அவன் அருகேயும் அமர முடியாது. அப்படி இருக்க எதற்கு அந்த படத்தை பார்க்க வேண்டும் என்று எண்ணினாள்.
அவளுக்கும் ராகவனுக்கும் இடையே ஒரு பந்தம் இருக்கிறது என்று உணர்ந்த பிரகாஷ் “ஸ்ருதி, உங்களோட மறுப்பை நீங்க உங்க டீஎல் கிட்ட சொல்லிருங்க”, என்று அவளை ராகவனுடன் கோர்த்து விட்டுவிட்டுச் சென்றான்.
வேறு வழியில்லாமல் ராகவனைத் தேடிச் சென்றாள் ஸ்ருதி. அவனைக் கண்டதும் அவள் வார்த்தைகள் திக்க அவன் அவளை சுவாரசியமாக பார்த்தான்.
“நான்… நான் படத்துக்கு எல்லாம் வரலை சார்”
“ஏன்?”
“தலை வலிக்குது”
“அந்த தலை வலி போறதுக்கு தானே இந்த அவுட்டிங்க் போறதே”
“இல்லை சார், நீங்க எல்லாம் போயிட்டு வாங்க”
“இப்ப என்ன உனக்கு பிரச்சனை?”, என்று அவன் சற்று கோபமாக கேட்க அவன் கோபத்தில் அவள் கண்கள் கலங்கியது.
“ஸ்ருதி, இப்ப நீ கண்டிப்பா வரணும்னு நான் சொன்னா வருவியா மாட்டியா?”, என்று கேட்டான்.
“நீங்க சொன்னா என்னால மறுக்க முடியாது சார். அதனால நீங்க என்னை கம்பல் பண்ணாதீங்க”
“எனக்கு நம்ம டீம்ல இருந்து எல்லாரும் வரணும் ஆசை. சோ நீயும் வரணும். இன்னொன்னு நான் உன் பக்கத்துல உக்காந்து தான் படம் பாப்பேன். அதுக்கு மேல வரதும் வராததும் உன் விருப்பம்”, என்று சொல்ல அவளோ பெவென்று விழித்தாள்.
“இவன் பக்கத்துல உக்காந்து நான் படம் பாக்குற சான்ஸை மறுக்க மாட்டேன்னு இவனுக்கு இவ்வளவு நம்பிக்கை எப்படி வந்துச்சு? அப்படின்னா என் மனசுல இருக்குற எண்ணம் இவனுக்கு தெரியுமா? அப்புறமும் ஏன் இவர் மனசுல இருக்குறதைச் சொல்ல மாட்டிக்கார்?”, என்று எண்ணிக் கொண்டு அவனையே பார்த்தாள்.
“என்ன வர தானே?”, என்று அவன் கேட்க தன்னைக் கண்டு கொண்டானே என்று எண்ணி அவள் முகம் சிவந்தது. அதிலே அவள் பதிலைக் கண்டு கொண்டவன் “குட், கிளம்பு போகலாம்”, என்றான்.
தன்னை வற்புறுத்தி ஆசை காட்டி அவன் படத்துக்கு அழைத்துப் போகிறான் என்றால் அவனுக்கும் தன்னைப் பிடித்திருக்கிறதா என்று எண்ணி சந்தோசத்துடன் பஸ்ஸில் ஏறினாள்.
“என்ன டி முகம் டால் அடிக்குது?”, என்று கேட்டாள் வைஷ்ணவி.
“ப்ச் ஒண்ணும் இல்லை”
“நம்பிட்டேன்”, என்று சொல்லி விட்டு அவள் வேறு பேச ஸ்ருதியின் மனதிலோ இவ்வளவு பேர் இருக்கும் போது அவன் எப்படி தன்னருகே அமர முடியும்? என்று கேள்வி எழுந்தது.
தியேட்டர் உள்ளே சென்றதும் அனைவரும் பிரகாஷ் சொன்ன இடத்தில் அமர ஸ்ருதியும் வைஷ்ணவியும் அமர்ந்தார்கள்.
ஸ்ருதியின் ஒரு புறம் வைஷ்ணவி அமர்ந்திருக்க அவளுக்கு மறுபுறம் ஆர்த்தி என்ற பெண் அமரப் போனாள்.
சரியாக அந்த நேரம் “ஆர்த்தி இங்க வாங்க. அந்த ரோல அதுக்கு அப்புறம் நம்ம பாய்ஸ் உக்காருவாங்க. உங்க செஃப்டிக்காக தான்”, என்று அழைத்தான் பிரகாஷ். நண்பனை நன்றியோடு பார்த்தான் ராகவன்.
சொன்னது போலவே ராகவன் ஸ்ருதி அருகில் அமர்ந்து விட்டான். அவள் அவனையே தலையை திருப்பி பார்த்துக் கொண்டிருக்க அவள் கையை நகத்தால் சுரண்டினாள் வைஷ்ணவி. ,
அவனைப் பார்க்க விடாமல் டிஸ்டர்ப் பண்ணும் தோழியை முறைத்து பார்த்த ஸ்ருதி “என்ன டி?”, என்று கேட்டாள்.
“நீ ஒழுங்கா இந்த படத்தைப் பாக்கணும். நான் வெளிய வந்து ஒவ்வொரு சீன்ல இருந்தும் குவஸ்டீன் கேப்பேன் மவளே திருதிருன்னு முழிச்ச கொன்னுறுவேன்”, என்றாள்.
“சாரி வைசு, அவங்க பக்கத்துல இருக்கும் போது நீ இந்த படத்தோட பேரைக் கேட்டா கூட என்னால சொல்ல முடியாது. நான் அவங்களைப் பாப்பேனா? இல்லை போயும் போயும் இந்த படத்தைப் பாப்பேனா?”, என்று கேட்க “என்ன டி இப்படி வெக்கமே இல்லாம வழியுற?”, என்று கேட்டாள் வைஷ்ணவி.
“அதெல்லாம் அப்படி தான். டைட்டில் போட்டுட்டாங்க. நீ படத்தைப் பாரு. என்னை கவனிக்காம ஒழுங்கா படத்தை பாக்கணும் சரியா? அப்புறமா எனக்கு கதை சொல்லு?”, என்று அவள் மிரட்ட “எல்லாம் என் நேரம் டி”, என்று தலையில் அடித்துக் கொண்டாள் வைஷ்ணவி.
அங்கிருந்த அமைதியில் ஸ்ருதியின் பேச்சு தெளிவாக கேட்க மெய் சிலிர்த்துப் போனான் ராகவன். அதே போல படம் போட ஆரம்பித்ததும் அனைவரும் படத்தில் மூழ்க அவளோ ஓரக் கண்ணால் அவனைத் தான் பார்த்தாள்.
பாடகர் என்ற வரிசையில் ராகவன் ஸ்ருதி இன்னும் நான்கு பெயர்கள் வர ஸ்ருதி அதை கவனிக்கவே இல்லை. அவள் தன்னைப் பார்க்கிறாளா என்று தெரிந்தும் ராகவன் அவள் புறம் திரும்பவே இல்லை. அவளோ படத்தை கவனிக்கவே இல்லை.
இப்படியே பாதிப் படம் வந்தது. இண்டர்வல் விட்டதும் அனைவரும் எழுந்து வெளியே சென்றார்கள். எல்லாருக்கும் தேவையானதை பிரகாஷ் வாங்கிக் கொடுக்க “உனக்கு என்ன வேணும் ஸ்ருதி?”, என்று கேட்டான் ராகவன்.
அவன் கேட்டதே பெரிதாக இருக்க “எனக்கு எதுவும் வேண்டாம்”, என்றாள்.
சிறு சிரிப்புடன் அவன் நகர்ந்து விட்டான். எல்லாம் வாங்கி விட்டு உள்ளே வந்து அமர்ந்தார்கள். இன்னும் படம் போடாததால் எல்லாரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“ராகவன் சார் உங்க பாட்டு எப்ப வரும்? பர்ஸ்ட் ஆஃப்ல வரல தானே? ஆனா உங்க பேர் போட்டாங்களே?”, என்று கேட்டான் சேகர்.
“இனிமே தான் வரும் சேகர்”, என்று சொல்லி விட்டு தன்னுடைய கையில் இருந்த ஐஸ்கிரிமை ஸ்ருதியிடம் நீட்டினான்.
“எனக்கா?”, என்று கண்கள் மின்னக் கேட்க “உனக்கு தான். பிடி. உருகிறப் போகுது”, என்று சொல்ல அதை வாங்கிக் கொண்டு உண்ண ஆரம்பித்தாள். “ஏன் டி, எங்களுக்கு எல்லாம் பாப்கார்னும் கட்லட்டும். உனக்கு மட்டும் ஐஸ்கிரீமா? கலக்கு போ”, என்று சொன்னாள் வைஷ்ணவி.
“உன்னை என்ன சொன்னேன்? என்னைக் கவனிக்காம படத்தை பாக்கச் சொன்னேன் தானே?”
“அடப்பாவி இன்னும் படமே போடலை டி”
“அப்படியா?”, என்று அசடு வழிந்த ஸ்ருதி “படம் போடலைன்னா என்ன? அந்த பக்கம் இருக்குற விக்கி கிட்ட கடலை போடு”, என்று சொன்னாள். அதற்கு மேல் வைஷ்ணவி அவளை தொல்லை செய்ய வில்லை.
அதன் பிறகு ஸ்ருதி ராகவனைப் பார்த்துக் கொண்டே ஐஸ்கிரிமை உண்ண அந்த அழகைக் கண்டு ராகவன் அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.
அவன் பார்வையில் இருந்த வித்தியாசத்தில் இப்போது ஸ்ருதி அதிர்ந்து போனாள். முதல் முறையாக அவனுடைய பார்வை அவளை பாதிக்க அவன் பார்வைக்கான அர்த்தம் என்ன என்று தெரியாமல் தடுமாறிப் போய்த் தலை குனிந்தாள்.
ஒரு வழியாக படம் ஆரம்பிக்க முதலில் படத்தைப் பார்த்தவள் அவன் புறம் திரும்பினாள். அவன் அவளை திரும்பிப் பார்க்கவும் படக்கென்று தலையைத் திருப்பிக் கொண்டாள். சிறிது நேரம் இருவருக்கும் இடையே கண்ணாம்பூச்சி ஆட்டம் நடந்தது.
அப்போது அவள் காதோரம் குனிந்த ராகவன் அவள் காதில் தன்னுடைய உதடு படும் படி “நீ மட்டும் சாப்பிடுற? எனக்கும் ஐஸ்கிரீம் வேணும்”, என்றான்.
அவன் குரல் கேட்டு அவள் படக்கென்று திரும்ப இருவரின் உதடுகளும் ஒரு நொடி தொட்டு மீண்டது.
ஐஸ்கிரிமை மறந்து வாயைப் பிளந்த படி அவள் அவனையே பார்க்க அவனுக்கோ அந்த லேசான தொடுதல் பிடிக்கவே இல்லை . வன்மையாக அவளுடைய உதடுகளை சிறை செய்ய ஆவல் வந்தது.
அவள் அதிர்ச்சி புரிந்தவன் “என்ன தர மாட்டியா?”, என்று கேட்டான்.
“ஐயோ உண்மையா தான் கேக்குறானா?”, என்று எண்ணி “ஐயோ இது எச்சி”, என்றாள்.
“அதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு இப்ப வேணும்”
“இருங்க, நான் வாங்கிட்டு வரேன்”, என்று அவள் எழுந்து கொள்ள “ஏய் உக்காரு டி”, என்று அவள் கை பிடித்து இழுத்து அமர வைத்தான்.
“இப்ப எங்க போற?”, என்று அவன் கேட்க “உங்களுக்கு ஐஸ்கிரீம் வாங்க”, என்றாள் ஸ்ருதி.
“ஏன் உன்னோடதை தர மாட்டியா?”
“அதை நான் சாப்பிட்டேனே? எச்சி”
“ஏன் அன்னைக்கு மதியம் சாப்பிடும் போது உன்னோட டிபன் பாக்ஸ்ல இருந்து ரவி, கோகுல், வைஷு எல்லாம் அள்ளிச் சாப்பிட்டாங்களே? அவங்க கை எடுத்ததும் நீயும் அதை சாப்பிட்ட. அது எச்சி இல்லையா?”
“அதுவும் இதுவும் ஒண்ணா? அது பிரண்ட்ஸ் சாப்பாட்டை பகிர்ந்து கொள்வது? ஆனால் இது அப்படி இல்லையே?”, என்று எண்ணி “பிளீஸ் இது வேண்டாமே”, என்று அவள் கெஞ்ச “தருவியா மாட்டியா?”, என்று கேட்டான் ராகவன்.