Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennavalin Innisai

Ennavalin Innisai 20 1

அத்தியாயம் 20

உன் இதயக் கதவைத்

திறந்து பார்த்தால் தெரியும்

நான் உனக்காக காத்திருப்பது!!!



Advertisement

“நான் வந்து..”, என்று தயங்கினாள். அவள் திக்கித் திணறியதில் அவள் மனம் அவனுக்கு தெளிவாக புரிந்தது.

Advertisement

“என்னை உனக்கு பிடிக்குமா?”

Advertisement

“ம்ம்”, என்று அவள் சொன்னதும் அவளை முத்தமிட்டுவிட்டே காரைக் கிளப்பிக் கொண்டு சென்றான். 

Advertisement

ஒரு வழியாக தேன்மொழி நவீன் திருமண நாளும் வந்தது. பெரியவர்களின் ஆசியோடு தேன்மொழி கழுத்தில் தாலியைக் கட்டினான் நவீன். ஸ்ருதி தான் நாத்தனார் முடிச்சைப் போட்டாள்.  

அவர்கள் திருமணத்தில் மற்ற அனைவரும் சந்தோஷமாக இருக்க மணமக்கள் மட்டும் விலகியே இருந்தார்கள். திருமணச் சடங்குகள் எல்லாம் முடிந்து அவர்கள் மறுவீட்டுக்கு வந்தார்கள். தேன்மொழியைத் தவிர மற்ற அனைவரிடமும் நன்கு பேசினான் நவீன். 

மதிய உணவு தயாரானதும் அனைவரையும் சாப்பிட அழைத்த ராஜி “தேனு, மாப்பிள்ளையை சாப்பிடக் கூட்டிட்டு வா”, என்றாள். 

அவனை அழைக்க வந்த தேன்மொழி மனதில் இருப்பதை அவனிடம் கேட்டே விட்டாள்.

“நவீன், எதுக்காக என்னை அவாய்ட் பண்ணுறீங்க?”

“அவாய்ட் பண்ணுறேனா? அவாய்ட் பண்ணுறவன் தான் உன் கழுத்துல தாலி கட்டிருக்கேனா?”

“அது கட்டினீங்க தான். ஆனா என் கிட்ட சரியாக் கூட பேச மாட்டுக்கீங்க?”

“என்ன பேசணும்னு நினைக்கிற?”

“என் மேல உங்களுக்கு என்ன கோபம்? உங்களை லவ் பண்ணுறேன்னு எங்க வீட்ல சொன்னேன் தான். ஆனா உங்களைக் கட்டாயப் படுத்தலையே? என்னைப் பிடிக்கலைன்னு நீங்க எங்க வீட்ல சொல்லிருக்கலாம்ல? என்னை பிடிக்காம கல்யாணம் பண்ணி இப்படி கஷ்டப் படுத்துறீங்க? நீங்க பேசாம இருக்குறது கஷ்டமா இருக்கு. எனக்கு உங்களைப் பிடிக்கலைன்னா கூட பரவால்ல என்னால உங்க அமைதியை சகிச்சிக்க முடியும்? ஆனா உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதனால ரொம்ப வலிக்குது”

அவள் பிடித்திருக்கிறது என்று சொன்னது சந்தோஷமாக இருந்தாலும் “அப்ப உண்மையை என் கிட்ட மறைச்சது எனக்கு கஷ்டமா இருக்காதா?”, என்று கேட்டான். 

“என்ன உண்மை?”

“உனக்கு ஸ்ருதியை தெரியும் தானே? எத்தனை தடவை என் குடும்பத்தை பத்தி உன் கிட்ட பேசிருக்கேன்? அப்ப எல்லாம் எதனால என் கிட்ட ஸ்ருதி உன் பிரண்டுன்னு சொல்லலை? அன்னைக்கு போன்ல பேசினதும் நீ தானே?”

“அது.. அது வந்து…”

“என்ன பதில் சொல்ல முடியலையா? எனக்கு என்னமோ நீ பிளான் பண்ணி எல்லாம் செஞ்ச மாதிரி இருக்கு”

“நான் என்ன பிளான் பண்ணப் போறேன்?”

“உங்க அண்ணன் லவ்வுக்காக தான் நீ என் கூட ஃபிரண்ட் ஆனேன்னு எனக்கு தோணுது. அதனால தான் என்னை இதுல கோத்து விட்டுருக்க? என்ன நான் சொல்றது கரெக்டா?”, என்று அவன் கேட்க “உன் தலை. அப்படியே உல்டாவா சொல்றியே டா?”, என்று எண்ணி அமைதியாக இருந்தாள். 

“நீ உன் அண்ணனுக்காக தானே என்னைக் கல்யாணம் பண்ணின? அது அப்படியே இருக்கட்டும். ஆனா என் கிட்ட நீ உண்மையை மறைச்சதை என்னால மன்னிக்க முடியலை. அதனால நம்ம வாழ்க்கை இப்படி தான் இருக்கும்”

“நான் செஞ்சது தப்பு தான். அதை கொஞ்சம் கொஞ்சமா உங்களுக்கு புரிய வைக்க டிரை பண்ணுறேன். இப்ப சாப்பிட வாங்க. அம்மா கூப்பிட்டாங்க”

“நீ போ, நான் வரேன்”, என்று சொன்னதும் அவள் சென்று விட்டாள். அதற்கு பிறகு அமர் உள்ளே வந்தான். அவனைக் கண்டு அவன் புன்னகைக்க முயல “இங்க பாருங்க மாம்ஸ், எங்க அக்காவை இன்னொரு தடவை இப்படித் திட்டுறதை பாத்தேன், நான் மனுசனா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்”, என்று திட்ட அவனை ஆர்வமாக பார்த்தான் நவீன். 

“என்ன பாக்குறீங்க? அவ உண்மையை மறைச்சான்னு சொல்றீங்களே? அது எதுக்குன்னு தெரியுமா?”

“எதுக்கு டா? உங்க அண்ணன் லவ்க்காக தானே?”

“உங்க தலை”

“ஏய்”

“உங்க தங்கச்சியோட லவ்க்காக தான் அவ உண்மையை மறைச்சா”

“என்ன உளறுற? ராகவனும் ஸ்ருதியும் ஒண்ணா வேலை பாக்குறாங்க. அதனால லவ் பண்ணினாங்க. இதுல உங்க அக்கா என் கிட்ட காலேஜ் படிக்கும் போதுல இருந்து எதுக்கு மறைக்கணும்?”

“ஸ்ருதி அண்ணி ஒண்ணும் இப்ப எங்க அண்ணனை லவ் பண்ணலை. நயன்த் படிக்கும் போதுல இருந்து விரும்புறாங்க”

“என்னது?”

“ஆமா, அவங்க அண்ணனை விட்டு வரப் பிடிக்காம தான் ஸ்கூல் படிக்கும் போது சூசைட் பண்ண டிரை பண்ணினாங்க. தேன்மொழி கூடவே இருக்கணும்னு நினைச்சது கூட அதுக்கு தான். தேன்மொழி அவங்களை விட்டு போயிட்டா அண்ணியால அண்ணனைப் பத்தி தெரிஞ்சிக்க முடியாதோன்னு பயந்து தான் தேன்மொழியை பிரியக் கூடாதுன்னு நினைச்சாங்க. அவங்க நட்பு உண்மை தான். ஆனா அந்த நட்பு ஸ்ட்ராங்க் ஆனது என்னோட அண்ணனால தான்” 

“அமர் நீ சொல்றது உண்மையா?”

“உண்மையா தான் சொல்றேன் மாம்ஸ். அண்ணன் கூட இருக்கணும்னு தான் அண்ணா படிச்ச காலேஜ்ல ஸ்ருதி அண்ணி சேந்தாங்க”

“அப்படியா? அவளுக்கு இன்ஜினியர் ஆக விருப்பம்னு நினைச்சேனே?”

“எங்க அண்ணன் டாக்டர்க்கு படிச்சிருந்தா அண்ணியும் அதை தான் படிச்சிருப்பாங்க. அது மட்டுமில்லாம தேன்மொழியையும் அவங்க இன்ஜினியரிங் தான் சேரச் சொன்னாங்க”

“அப்புறம் எப்படி அவ டாக்டர்க்கு?”

“தேனுக்கு சின்ன வயசுல இருந்து டாக்டர் ஆகுறது தான் கனவு. ஆனா அண்ணிக்காக அதை விட்டுட்டு இன்ஜினியரிங் சேர முடிவு பண்ணினா. அவ மனசுக்குள்ள போராடுறதை பாக்க முடியாம அண்ணா கிட்ட சொன்னேன். அவன் என்ன சொன்னானோ தேன்மொழி உங்க காலேஜ்ல படிக்க வந்தா. நீங்க அண்ணியோட அண்ணன்னு அப்புறம் தான் தெரிஞ்சது. உண்மையைச் சொல்ல தான் நினைச்சா. ஆனா நீங்க தான் காதல் தப்பு அது இதுன்னு பேசினதுனால உண்மையை மறைச்சா. அவ வேணும்னு ஒண்ணும் உங்களை தேடி வந்து பிடிக்கலை. அவளுக்கு பாரின் மாப்பிள்ளை வந்துச்சு”

“ஆமா சொன்னா அவளுக்கு பாரின் போக பிடிக்கலைன்னு”

“உங்க தலை”

“டேய், நீ ரொம்ப பேசுற டா”

“நீங்க மட்டும் அவளை பேசலாமா? யாராவது பாரின் ஆபரை விடுவாங்களா? அவ பாரின் டாக்டரைக் கல்யாணம் பண்ணினா அவளுக்கும் அங்கயே வேலை கிடைக்கும். அது அவளுக்கு சந்தோஷம் தான். ஆனா அவ பாரின் போயிட்டா அண்ணி தனியாகிருவாங்க. தேன்மொழி ஸ்ருதி அண்ணியை விட்டு தூரம் போனா ராகவன் அண்ணனும் போய்ருவாங்களோன்னு அண்ணி பயப்படுவாங்க. அதனால தேன்மொழி ஸ்ருதி அண்ணி கூடவே இருக்க நினைச்சு தான் பாரின் மாப்பிள்ளையை வேண்டாம்னு சொன்னது. இப்ப ராகவன் அண்ணனுக்கும் அண்ணிக்கும் கல்யாணம் ஆகப் போகுது. இப்ப கேட்டு பாருங்க பாரின் போக ஆசையான்னு. சந்தோஷமா வருவா. உங்களை இதுல இழுத்து விட்டது கூட அவளே அறியாம தான். அந்த நேரத்துல வாய்க்கு வந்த பேரைச் சொன்னா. ஆனா அது உங்க பேர். அப்புறமும் உங்களைக் கல்யாணம் பண்ணினா அண்ணியும் அண்ணனும் சேர வாய்ப்பு இருக்கான்னு தான் யோசிச்சா. அவளை போய் இப்படி பேசுறீங்களே? அப்புறம் இதெல்லாம் நான் சொன்னேன்னு சொல்லிறாதீங்க. அவ கிட்ட யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்னு சத்தியம் பண்ணிருக்கேன்”

“சத்தியம் பண்ணிட்டு என் கிட்ட சொல்லிட்ட?”, என்று சிரிப்புடன் கேட்டான். தன்னுடைய தங்கைக்காக அனைத்தையும் செய்திருக்கும் மனைவியை புரிந்து கொண்டதால் அவன் மனதில் இருந்த பாரம் அனைத்தும் அவனை விட்டு அகன்றிருந்தது. 

“சத்தியம் பண்ணும் போதே உனக்கு ஏதாவது பிரச்சனை வந்தா அப்ப இந்த சத்தியம் செல்லுபடியாகாதுன்னு சொல்லி தான் சத்தியம் பண்னினேன்”

“நல்ல விவரம் தான்”

“அண்ணி ஒரு விதத்துல பாவம்னா தேனும் பாவம் தான் மாம்ஸ்”

“எனக்கும் அவளை பிடிக்கும் டா. என்ன அதை நான் தெளிவா யோசிக்கலை. இல்லைன்னா அவளுக்காக நான் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுப்பேனா? அவ சொன்னான்னு மட்டும் நான் அவளை கல்யாணம் பண்ண முடியுமா? எனக்கும் பிடிச்சிருந்தது பண்னினேன்”

“அப்படினா இனி அவளை திட்ட மாட்டீங்க தானே?”

“கண்டிப்பா மாட்டேன் போதுமா?”, என்று அவன் சொல்ல “டேய் அமர், மாமாவை சாப்பிட கூட்டிட்டு வான்னு உன்னை அனுப்பினா நீ இங்க நின்னு கதை பேசிட்டு இருக்க?”, என்று மகனை கடிந்து கொண்ட ராஜி நவீனிடம் “சாப்பிட வாங்க மாப்பிள்ளை”, என்று அழைத்தாள்.

“இதோ வரேன் அத்தை”, என்று சொன்ன நவீன் அமரின் தோள் மீது கை போட்டு சாப்பிட சென்றான். இருவரும் புன்னகையுடன் பேசிக் கொண்டு வருவதைப் பார்த்த தேன்மொழிக்கு உள்ளுக்குள் எரிந்தது. 

“எல்லார் கிட்டயும் பல்லைக் காட்டுறான். என்னைக் கண்டா மட்டும் தான் இவனுக்கு ஆகாது போல?”, என்று எண்ணிக் கொண்டாள்.

“என்ன அக்கா ஏதோ கருகுற வாசம் வருது”, என்று கேட்டுக் கொண்டே அவளுக்கும் நவீனுக்கும் இடையில் அமர்ந்தான். அமர் அப்படிக் கேட்டதும் அவனை முறைத்தாள்.

“சரி சரி முறைகக்காத. புருஷன் பொண்டாட்டியை பிரிச்ச பாவம் எனக்கு வேண்டாம். மாம்ஸ் நீங்க இங்க வாங்க”, என்று சொல்லி நவீனை தேன்மொழி அருகில் அமர வைத்தான். 

“பக்கத்துல வந்துட்டா மட்டும் பேசிக் கிழிச்சிறுவான்”, என்று தேன்மொழி எண்ண டேபிள் அடியில் அவளுடைய கையை இறுக பற்றினான் நவீன்.

அவனிடம் இருந்து இப்படி ஒரு செய்கையை எதிர்பாராமல் அவள் திகைத்து விழிக்க அவளைப் பார்த்து கண்களைக் சிமிட்டினான். அவனது தொடுகையும், கண் சிமிட்டலும், அவளைப் பார்த்து அவன் சிந்தும் புன்னகையையும் கண்டவளுக்கு இந்த கனவா நினைவா என்று சந்தேகமே வந்து விட்டது. 

“மாம்ஸ், நாங்க இங்க தான் இருக்கோம்”, என்று அமர் சொல்ல அவன் தலையில் கொட்டினாள் ராஜி. அவன் அப்படிச் சொன்னதும் தேன்மொழி அவனிடம் இருந்து பார்வையைத் திருப்பிக் கொண்டாள். ஆனால் நவீன் அவள் கையை விட வில்லை. உரிமையாய் அன்பாய் அவளது கையை பற்றி இருந்தான்.

“எல்லாரும் வந்தாச்சு. இந்த ராகவனைக் காணும் பாருங்க”, என்று ராஜி புகார் வாசிக்க “நீங்க ஆரம்பிங்க. நான் அவனை பாத்துட்டு வரேன்”, என்று சொல்லி சென்றார் மதன். 

ராகவனோ ஒரு இடத்தில் சிலை போல நின்றிருந்தான். அமரும் நவீனும் பேசியதைக் கேட்டவனுக்கு எல்லாமே அதிர்ச்சி தான். தன்னை ஸ்ருதிக்கு அளவுக்கு அதிகமாக பிடிக்கும் என்று தெரியும் தான். ஆனால் தன்னையே அவள் நிழலாக பின் தொடர்கிறாள் என்று தெரியாது. அது மட்டுமில்லாமல் தேன்மொழிக்கு ஸ்ருதி மீது இவ்வளவு அன்பு இருக்கும் என்றும் தெரியாது.

ஸ்ருதி போல ஒரு காதலியையும் தேன்மொழி போன்ற தங்கையையும் பெற தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

கூடவே நவீனும் தேன்மொழியும் விரும்ப வில்லை என்ற உண்மையும் புரிந்தது. அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்குமோ என்ற கலக்கத்தில் இருந்தவனை அழைத்தார் மதன்.

“சாப்பிட வா ராகவா. என்ன அப்படியே நின்னுட்ட?”

“ஒண்ணும் இல்லைப்பா, சின்ன யோசனை. வாங்க சாப்பிடலாம்”, என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு அங்கு சென்றான். 

தங்கை வாழ்வு எப்படி இருக்குமோ என்று எண்ணி பயத்துடன் சென்றவனுக்கு நவீனின் முகத்தில் இருந்த காதலும், தேன்மொழி முகத்தில் இருந்த வெட்கமும் பெருத்த நிம்மதியைக் கொடுத்தது. சந்தோசமாக அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினான். 

அன்று இரவு நவீன் வீட்டுக்கு தேன்மொழியும் நவீனும் வந்து விட்டார்கள். அன்று தான் அவர்களுக்கு முதலிரவு ஏற்பாடு செய்ய பட்டிருந்தது. 

ஆனால் ஸ்ருதியோ தேன்மொழி தன்னுடைய வீட்டுக்கு வந்து விட்டாள் என்பதில் சந்தோஷப் பட்டு அவளுடன் கதை பேசிக் கொண்டிருந்தாள். 

“பேசினது போதும். எல்லாரும் போய் படுங்க. தேன்மொழி உன்னோட ரூமுக்கு போ மா. ஸ்ருதி நீயும் தூங்கு”, என்று சொன்னாள் வேணி.

தேன்மொழி தயக்கத்துடன் நவீன் அறைக்குச் சென்றாள். சென்றது மட்டும் தான் நினைவில் இருக்கிறது. அவன் எப்போது கதவை அடைத்தான், எப்போது அவளை நெருங்கினான், எப்போது அவளை கட்டிலில் தள்ளி அவள் மீது படர்ந்தான் என்று எதுவுமே நினைவில் இல்லை.

நவீனின் இதழ்கள் தேன்மொழியின் நெற்றி, கன்னம், காது என்று சென்று கொண்டிருக்க அவளோ இந்த உலகத்தில் இல்லை.

அவனுடைய மாற்றமும் அவன் தன்னை ஏற்றுக் கொண்டதும் சந்தோசத்தைக் கொடுத்தாலும் “நவீன் என்ன இது?”, என்று கேட்டாள்.

“என்ன டி?”

“இது என்ன இப்படி பண்ணுறீங்க?”

“பர்ஸ்ட் நைட் ரூம்ல என்ன பண்ணுவாங்களோ அதை தான் பண்ணுறேன்”

“ஐயோ கடவுளே, காதல் எல்லாம் இல்லாம இது எப்படி சாத்தியம்?”

“காதல் இல்லைன்னு யார் சொன்னா?”

“பொய், நீங்க தானே என்னை வெறுத்தீங்க?”

“என்னைப் பொறுத்த வரைக்கும் நீ என் அம்மா அப்பா பாத்த பொண்ணு. இப்போதைக்கு என்னோட பொண்டாட்டி. அதனால என் பொண்டாட்டியை நான் ரொம்ப லவ் பண்ணுறேன். ஐ லவ் யு. அதனால எனக்கு எந்த தயக்கமும் இல்லை. உனக்கு என்னைப் பிடிக்கலைன்னா சொல்லு, விலகிறேன்”, என்று சொன்னவன் அவளுடைய கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!