Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Ennavo Maatram Enakkul 7 2

 

“இதுதான் கடவுள் சித்தம்னா ஒண்ணும் செய்ய முடியாதுடா. நான் ஏதோ நினைச்சேன். பையன் குடும்பம் நல்லவங்கன்னு பூவு சொன்னா. குணம் இருந்தால் போதாதா? பையன் முகத்துல அவ்வளவு சந்தோஷம் தெரியுது. அவ்வளவு மோசமில்ல” என்று தனக்குமே சமாதானம் செய்தார் இசக்கி.

சதீஷின் வீட்டிலேயே பையன் வீட்டு சடங்கு செய்ய… மாலை ஐந்து மணியளவில் விடைபெற வந்த இசக்கி, சூர்யாவின் கழுத்தில் இரண்டு பவுனில் டிசைனிங் நெக்லஸ் போட்டு கையால் திருஷ்டி சுற்றி, “நாங்க கிளம்புறோம் வெள்ளச்சி. எப்பவும் என் பொண்ணு சந்தோஷமா இருக்கணும்” என்றார்.

“இசக்கிம்மா ஏற்கனவே செயின் போட்டிருக்கீங்க? இப்ப இந்த நகை எதுக்கு? வேண்டாம்மா” என்று மறுக்க…



Advertisement

“மூச்! இது அம்மா வீட்டு சீதனம். எனக்கு பொண்ணு இருந்தா போட்டு அழகு பார்க்க மாட்டேனா? அது மாதிரிதான். பாரு பையனா போயிட்டான். இவனுக்கா போட்டுப் பார்க்க முடியும்” என்று மகனை வம்பிக்கிழுத்தார்.

“ஏன் போட்டுத்தான் பாருங்களேன்” என மிரட்டி, “சரி வாங்க டைமாகுது” என்று தாயை முறைத்தான்.

“அண்ணா! அம்மா சும்மாதான சொல்றாங்க. இதுக்கெல்லாமா முறைப்பாங்க?”

Advertisement

“முறைக்கிறதா? நிஜமாவே டைமாகுது வெள்ளச்சி. இப்பக் கிளம்பினால்தான் காலையில நான் கடைக்குப் போக முடியும்.”

Advertisement

“அவன் சொல்றதும் சரிதான்மா. நாங்க கிளம்புறோம். பாப்பா பை சொல்லிட்டு வா” என்று குழந்தையிடம் சொல்ல…

“பை அம்மா” என்றதும்… “பை செல்லம்” என்று பதிலளித்துக் கன்னத்தில் முத்தமிட்டு வழியனுப்ப…

அதைப் பார்த்தபடியே வந்த விக்னேஷிற்கு ‘அம்மா’ என்ற அழைப்பு முகத்திலடித்தாற் போலிருந்தது. “யார் குழந்தை சூர்யா?”

Advertisement

“எங்க சபரி மச்சான் குழந்தைங்க. அழகாயிருக்காள்ல? ஆனா பாருங்க அவளுக்கு அம்மா இல்லையாம். பாவம்ல?”

“பாவம்தான். அதுக்கு ஏன் உன்னை அம்மா சொல்லணும்?” என்று அவள் முகத்தை நேருக்கு நேர் பார்க்க…

“எனக்கே ஆச்சர்யம்தான். முதல் முறையா பார்க்கிறேன். தாய்ப்பாசத்துக்காக ஏங்குறா போல. கடவுள் அவள்மேல கரணை காட்டியிருக்கலாம்.”

“நீ கூட எனக்குக் கொஞ்சம் கருணை காட்டலாம்” என்றான் பேச்சை மாற்றி.

 

[the_ad id=”6605″]

 

 

“நானா? உங்களுக்கா? எப்படி?” என எந்த விகல்பமுமில்லாமல் கேட்டவளில் மனம் மயங்கி, “இப்ப நாம புருஷன் பொண்டாட்டி. நிச்சயத்தப்ப கேட்ட முத்தத்தை இன்னைக்குத் தரலாம்ல?”

“முத்தமா?” என்று முகம் சுளித்தாள்.

“குழந்தைக்குக் கொடுப்ப புருஷனுக்குத் தரமாட்டியா?”

“அ..அது ஆள் வந்திருவாங்க. நாம அப்புறமா பேசலாமே” என்றபடி வெளியே செல்லப்போனவளைத் தடுத்துக் கட்டியணைத்து, “இதான் ஹக்! இதான் கிஸ்!” கன்னத்தில் முத்தமிட… உடலில் சிறு எதிர்ப்போ, வெட்கமோ இல்லாமல் கடமையே என நின்றிருந்தாள். பதிலுக்கு அவனை அணைக்கவில்லை. விக்னேஷ் அதை எதிர்பார்த்தானோ! “சூர்யா உனக்குப் பிடிக்கலையா?”

“எதுங்க?”

“உன்னைக் கிஸ் பண்றது.”

“நான் எப்ப சொன்னேன். அமைதியாதான நின்னேன்” என்றாள் அவன் சொல்ல வருவது புரியாது.

“நிற்கிற. ஆனா பதிலுக்கு கட்டிப்பிடிக்கவும் இல்ல. முத்தம் கொடுக்கவும் இல்லையே?”

“எனக்குக் குடுக்கணும்னு தோணலையேங்க. என்னவோ மாதிரியிருக்கு. அதான் நீங்க தர்றீங்கள்ல அதுபோதும்” என்றபோதும் அவன் அணைப்பின் இறுக்கத்தில் ஏதோ ஒரு வித்தியாசம். அதில் மனதிற்கு ஒவ்வாத உணர்வு வர, அவனைத் தன்னிடமிருந்து விலக்கப் போராடினாள்.

“ஸ்ஸ்… சும்மாயிரு சூர்யா. இந்த சந்தர்ப்பத்துக்காக எத்தனை நாள் காத்திருந்தேன் தெரியுமா? உன் அழகு அப்படியே பைத்தியம் பிடிக்க வைக்குது. பாருங்கடா என் ஒய்ஃப் எவ்வளவு அழகுன்னு கத்திச் சொல்லணும் போலிருக்கு” என்றான் காதோரம்.

அவனின் மூச்சுக்காற்று பட்ட இடம் நெருப்பாய் சுட, அவனின் அன்பான வார்த்தையில் அடங்க நினைத்தாலும் மனமும், உடலும் ஒத்துழைக்க மறுக்க… “அ..அத்தை வர்றாங்க” என்றதில் வேகமாக அவளை விட்டு விலக, சட்டென்று வாசல் சென்று “சாரி” என்றாள்.

“ஏய்! உன்னை…” பிடிக்க வந்தவனிடமிருந்து தப்பித்து வெளியே சென்றாள்.

“என்ன சூர்யாமா மாப்பிள்ளைகிட்ட பேசிட்டிருக்காம வெளில வந்துட்ட? போய்ப் பேசிட்டிரு. அம்மா காப்பி எடுத்துட்டு வர்றேன்.”

“இல்லமா. யார்கிட்டயோ போன் பேசிட்டிருக்காங்க. நான் கொஞ்ச நேரம் கழிச்சிப் போறேன்.” தாய் விட்டாலும் தொடர்ந்து அனைவரும் அதையே கேட்க, ‘சே… இதுக்கு உள்ள அவங்க இம்சையைத் தாங்கியிருக்கலாம் போல’ எனத் தோன்றியது.

சிறிது நேரத்தில் அவளின் தம்பி வர அவனுடன் விக்னேஷ் இருந்த அறைக்குள் சென்றாள். தன்னை முறைத்த கணவனைக் கண்டுகொள்ளாது தம்பியுடன் வெட்டியாகப் பேசியபடியிருக்க… “எப்படியும் நைட் சிக்குவதான… அப்பப் பார்த்துக்கறேன்” என்று காதோரம் கூறிச்செல்ல… அதுவரையில்லாத நடுக்கம் அவளுள் எழ, தம்பி பேசிய எதுவும் காதில் ஏறவில்லை.

‘ஏன் இப்படியிருக்கிறேன்? கல்யாணம் முடிந்து கணவன் குழந்தையென்று ஒரு அழகான கூட்டுக்குள் இருக்கத்தானே ஆசைப்பட்டேன். ஏன் எனக்கு என் கணவனின் தொடுகை பிடிக்கவில்லை?’

தோழி ஒருத்தியை அவளின் திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து பார்க்கச் சென்ற பொழுது, ‘அவளிடம் காணப்பட்ட ஒருவித மயக்கம், வெட்கம், நாணம் ஏன் தன்னிடம் இல்லை? நான் பெண்ணே இல்லையா? அப்படியென்றால் வயதிற்கு வரமாட்டார்களாமே. நான் அப்படியில்லையே. அப்புறமும் ஏன்? கேள்விகள் துரத்தும் என் வாழ்விற்கு விடிவே கிடையாதா?’ பைத்தியம் பிடித்துவிடும் போலும் அவள் நிலை. கண்மூடி திரும்பத் திரும்ப கந்த சஷ்டி சொல்லிக் கொண்டிருந்தாள்.

நேரமாக ஆக விக்னேஷின் பார்வைகளும், யாருமறியாத சீண்டல்களும் அவளை பயங்கொள்ள வைக்க… தனக்குக் கல்யாணமாகிவிட்டதை மனதினுள் மனனம் செய்ய ஆரம்பித்தாள்.

சதீஷின் வீட்டிலேயே முதலிரவை வைக்கப் பெரியவர்கள் பேசி முடிக்க… மகளிடம் வந்த பூவரசி “நல்லாயிருப்பமா” என்று மட்டும் சொல்லி வீட்டிற்குச் சென்றார்.

வீட்டின் சலசல சத்தம் அறைக்குள்ளும் கேட்டு சற்று நேரத்தில் அடங்கியதும், மனைவியைத் தனக்குள் அடக்க எண்ணி கட்டியணைத்து சரமாறியாக முத்தங்களிட்டு மேலும் முன்னேற எண்ணி, ஆடையைக் களைந்து உள்ளாடையுடன் நின்றவனைக் கண்டவள் கண்கள் பயத்தில் உறைந்து போனது. ஜன்னலோர நிலவொளியைத் தவிர மற்ற இடங்கள் இருளாக இருக்க, அவன் உருவத்திற்கும் இருளிற்கும் பார்க்கையில் ராட்சசன் போலும், கொரில்லா குரங்கொன்று தன்னைக் கடிக்கக் காத்திருப்பது போலும் தோன்ற தன்மேல் சரிந்தவனை எதுவும் செய்யவிடாது உடல் குறுக்கிப் படுத்துக்கொண்டாள்.

“சூர்யா ஏன் இப்படிப் பண்ற?”

“இல்ல வேண்டாம். எனக்குப் பிடிக்கலை” என்ற பதிலே திரும்பத் திரும்ப வர, வேகமாக வேஷ்டியைக் கட்டி லைட்டைப் போட்டு அவளைக்காண கலைந்த ஓவியமாய் மேலாடையை தோள் சுற்றி மூடி இறுக்கிப் பிடித்தபடி படுத்திருந்தாள்.

“சூர்யா எழுந்திரு” என்றதும் மெல்ல எழுந்து சுவரோரம் சாய்ந்தமர்ந்தவளிடம், “இதெல்லாம் ஹஸ்பண்ட் அன்ட் ஒய்ஃப்குள்ள சகஜம்தான். முதல் முறைன்றதால உனக்கு சங்கோஜமாயிருக்கு நினைக்கிறேன்.”

“இ..இல்ல எனக்கு ஒரு மாதிரி த..தலை சுத்துது.”

“தலை சுத்துதா? நைட் சாப்பிட்டியா? இந்த பழத்தை சாப்பிட்டுப் படு. இதெல்லாம் நாளைக்குப் பார்த்துக்கலாம்.” தன் ஏமாற்றத்தை மறைத்து மென்மையாகக் கூறி தன் தோள் சாய்த்தபடி படுத்துக் கொள்ள… மெல்ல அவன் அணைப்பிலிருந்து விலகிப் படுத்தாள்.

 

[the_ad id=”6605″]

 

 

இரவு முழுக்க ஏதோ ஒரு தவிப்பில் இருவரும் தாமதமாகவே எழ… குளித்து புதுப்புடவை அணிந்து கோவிலுக்குச் சென்று வர, எதிர்ப்பட்டவர்களின் நல விசாரிப்பிற்குப் புன்னகையுடன் பதிலளித்தபடி வந்த மனைவியைப் பார்த்தவன், “நைட் ஏன் அப்படி நடந்துக்கிட்ட?” எனக்கேட்டான்.

“அது பயந்துட்டேன்ங்க” என்றாள் பட்டென்று.

“என்னது பயந்துட்டியா? என்னைப் பார்த்தா?” அதிர்ச்சியில் கேட்க…

“ஐயோ! பயமா இருந்திச்சி சொல்ல வந்தேன். தலைவேற சுத்திச்சா என்ன செய்யுறதுன்னு தெரியலைங்க” என்றாள் குரலிறங்க.

“வேற ஒண்ணுமில்லையே?”

“அப்படிலாம் இல்லைங்க.” தான் அவனின் உருவம் பார்த்து நிஜமாகவே பயந்ததைச் சொன்னால் எதுவும் தவறாக நினைப்போனோ என்று தனக்குள்ளேயே ஒழித்துக் கொண்டாள்.

விக்னேஷின் குடும்பத்தார் கல்யாணத்தன்று இரவே சென்னை சென்றுவிட்டதால், மூன்றாம் நாள் சென்னை செல்ல தனியார் பஸ்ஸில் டிக்கெட் புக் செய்திருக்க, சூர்யா சார்பில் சதீஷ் மட்டுமே சென்றான். அதுவும் அவன் வேலை செய்யுமிடம் அங்கே என்பதால்.

சதீஷிடம் அவ்வப்பொழுது தன் மகளைப் போய்ப் பார்த்துக்கொள்ளச் சொல்லி ஆயிரம் முறை சொன்ன பூவரசியிடம் வந்த விக்னேஷ், “உங்க பொண்ணை நல்லா பார்த்துக்கறேன் அத்தை. நீங்க கவலைப்படாம இருங்க. சூர்யா என்னுடைய பொறுப்பு” என்று ஆறுதலளித்து அழைத்துச் சென்றான்.

சென்னை மண்ணில் முதல்முறையாக கால் வைத்ததில் ஒரு ஆனந்தம் சூர்யாவிற்கு. அவளுக்குத் தேவையானதைக் கேட்டும் கேட்காமலும் நிறையவே செய்தான் விக்னேஷ்.

வேண்டாமென்று மறுத்தவளை அவனின் பெற்றோர், “அவன் அப்படித்தான்மா. பாசம் வச்சிட்டா பார்த்துப் பார்த்துச் செய்வான். வேண்டாம்னு சொன்னாலும் கேட்கமாட்டான். உன்னை அவனுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. கட்டினா உன்னைத்தான் கட்டுவேன்னு பிடிவாதமா கல்யாணம் செய்திருக்கான்” என்று மகனின் மனதையும் அவளிடம் சொன்னார்.

கணவன் மேல் மதிப்பெழ தம்பிகளுடன் அரட்டை அடிப்பவனையேப் பார்த்திருந்தாள். காதல் வந்ததா என்றால் இல்லைதான். சக மனிதனுக்கான அன்பு மட்டுமே அவன்மேல் வந்தது.

ஆனால், இரவில் மட்டும் அவளின் தலைச்சுற்றல் பாடாய்ப்படுத்தி, அவனை அவளிடம் நெருங்கவிடாமல் செய்ய… விக்னேஷின் பொறுமையும் குறைய ஆரம்பித்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!