Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Idhaya Thirudan Episode 1

நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற கதைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு மிகவும் நன்றி .  இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

“மது  கிளம்பிட்டியா” என்று ஒரு குரல் அந்த அதிகாலை நேரத்து அமைதியை கலைத்து சென்னை சூளைமேட்டில் அமைந்திருந்த வீட்டினுள் ஒலித்தது.

தாயின் குரல் கேட்டதும் அவசர அவசரமாக தன்னுடைய நகை பெட்டியை எடுத்து வைத்துக்கொண்டு தங்கத்தில் வைரக்கல்   பதித்து இருந்த லட்சுமி கம்மல் மற்றும் ஜிமிக்கியை எடுத்து அணிந்தாள்.  பிறகு  அதேபோன்ற வைரக்கல் பதித்திருந்த லட்சுமி வடிவினை கொண்டிருந்த இரண்டு தங்க வளையல்களை எடுத்து அணிந்து கொண்டாள்.

“என்ன மது கூப்பிடறது  காதுல  விழலை?” என்று சிறிது கோபத்துடன் கேட்டபடியே மது என்கிற மதுமிதாவின் அறைக்கு வந்து கொண்டிருந்தவர் அவளது தாய் வள்ளி.



Advertisement

“விழுந்துச்சு விழுந்துச்சு 2 மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க.” என்று அவரிடம் கூறிவிட்டு அவள் அந்த அலமாரியில் இருந்த நகை பெட்டிகளை எடுத்து வைத்து எதையோ தேடிக்கொண்டிருந்தாள்.

அவள் அணிந்திருந்த ஜிமிக்கி மற்றும் வளையலை பார்த்த வள்ளி

“என்ன திரும்பவும் ஆரம்பிச்சிட்டியா?” என்றார்.

Advertisement

மதுமிதா தாயை நிமிர்ந்து பார்த்தாள். அரக்கு நிற பட்டுப்புடவை அதற்கு பொருத்தமான தங்கநகை மற்றும் தலையில்  மல்லிகையும் ஆக பார்ப்பதற்கு பளிச்சென்று வந்து நின்றுகொண்டிருந்த தாயை பெருமை பொங்க பார்த்தாள் மதுமிதா.

Advertisement

“என்னமா அதுக்குள்ள கிளம்பிட்டீங்களா? இப்பதானே புடவை கட்ட  ஆரம்பிச்சீங்க?” என்றாள் ஆச்சரியமாக.  “பின்ன  உன்னை மாதிரியா?

ஒரு மணி நேரமா புடவை   கட்டிகிட்டு இருக்க.  எப்படியோ கட்டி முடிச்சிட்ட போல இருக்கு. “ என்று கிண்டலாக சிரித்தபடி தன் மகளை பார்த்தார்.  அந்த அடர்ந்த பச்சை நிற பட்டுப்புடவையில்  மகளின் அழகு கூடி இருப்பதை ரசித்தார் வள்ளி.

“நீங்கள் தினமும் புடவை  கட்டறீங்க.  அதனால உங்களுக்கு புடவை கட்டுவது ஈஸியா இருக்கு.  நான் அதிசயமா என்னைக்கோ ஒரு நாள்  கட்டறேன்.  அதனால  எனக்கு புடவை கட்ட டைம் எடுக்குது.  அதுக்காக நீங்க என்னை பார்த்து இப்படி கிண்டல் பண்ணி சிரிக்க வேண்டாம்.” என்று சிறிது கோபமாக கூறினாள் மதுமிதா.

Advertisement

“ஆமா இந்த கோபத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. சரி சரி சீக்கிரம் கெளம்பு.”  என்று அவசரப்படுத்தினாள்  வள்ளி.

“எதுக்குமா இப்படி றெக்கை கட்டிக்கொண்டு  பறக்கறீங்க? அப்பாவையும் அண்ணாவையும் பாருங்க.  எவ்வளவு பொறுமையா எனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க.   அவங்களை பார்த்து எப்படி பொறுமையா இருக்கிறதுன்னு கத்துக்கோங்க.” என்றாள் மதுமிதா.

“சரிங்க மகாராணி நான் அவங்ககிட்ட ஃப்ரீ டைம்ல டியூஷன் எடுத்துக்கறேன்.  இப்போ நீ கிளம்பி வரியா”

“2 மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க. நெக்லஸ் எடுத்து போட்டுக்கிட்டு  வர்றேன்.” என்றாள்  விடாப்பிடியாக.

 

“இந்த ஜிமிக்கி வளையல் ரெண்டுத்துக்கும்  மேட்சிங்கா நெக்லஸ் தேடிக்கிட்டு இருந்தா நாம விசேஷத்துக்கு போன மாதிரி தான்.” என்று சலித்துக் கொண்டார் வள்ளி.

“அம்மா  ப்ளீஸ் என்று  சினுங்கினாள் மகள்.

“என்னடி ப்ளீஸ்? இந்த கம்மல் வளையல் எங்க அம்மா எனக்கு கொடுத்தது. இதோட  செட் நெக்லஸ் தான் நீ தொலைத்து விட்டாயே.  அப்புறம் என்னடி தேடிக்கிட்டு இருக்க? என்ன மறந்துட்டியா?”

என்று கோபமாக  இடுப்பில் கைவைத்தபடி கேட்டார் வள்ளி.

“ அம்மா அதெல்லாம் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.”  என்றாள் மகள் தாயின் முகத்தை பார்த்து.

“அப்புறம் என்னடி தேடிக்கிட்டு இருக்க?” என்றார் தாய் கோபமாகவே.

“என்கிட்ட இருக்கிற நகையில் ஏதாவது  இந்த ஜிமிக்கி வளையலுக்கு சூட் ஆகுதான்னு பார்க்கிறேன்.” என்று கூறிய படி அவளிடம் இருந்த நகையை ஆராய்ந்து கொண்டு இருந்தாள் மதுமிதா.

அது எப்படி டி சூட் ஆகும்? அது எங்க அம்மா ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி  ஆசாரி கிட்ட சொல்லி செய்தது. அந்த மாதிரி லக்ஷ்மி டிசைன் செய்யறது அவ்வளவு ஈஸி கிடையாது. அதுவும் இல்லாமல் அது எங்க அம்மா எனக்கு கொடுத்த நகை.  அதை நான் அவங்க ஞாபகமா பத்திரமா பொக்கிஷமாக வச்சிருந்தேன். அதை தொலைச்சிட்டு  வந்துட்டு அதுக்கு சூட் ஆகுற மாதிரி நகை  தேடுகிறேன்னு சொல்லி டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்க.” என்றார் சிறிதும் கோபம் குறையாமல்.

வள்ளியின் கோபத்தை பார்த்து மதுமிதா

“அப்பா” என ஹாலை நோக்கி குரல் கொடுத்தாள். அதிகாலை நாலரை மணிக்கெல்லாம் எழுந்து கிளம்பி தயாராகி  மகள் மற்றும் மனைவி  கிளம்புவதற்காக    சோபாவில் உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்தவர் இல்லை இல்லை உட்கார்ந்தபடியே காத்துக்கொண்டு இருந்த நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர் மகளின் “அப்பா” என்ற குரல் இனிய சங்கீதமாக  காற்றில் மிதந்து வந்து காதில் விழ உறக்கம் கலைந்து எழுந்தார்.

“என்னமா?” என்று கேட்டபடியே எழுந்து விரைந்து மகளின் அறைக்கு வந்தார்.

“என்ன மது கூப்பிட்டியா?” என்று மகளை மறைத்து நின்று கொண்டிருந்த மனைவியை அந்தப்பக்கம் தள்ளி விட்டு வந்து நின்று கேட்டார்.

லேசாகத் தான் என்றாலும் தன்னை தள்ளி விட்டதில் கடுப்பான  வள்ளி

“தாங்க முடியலடா! உங்க அப்பா பொண்ணு  லவ் பாண்ட்.” என்றார்.

“அப்பா இங்க பாருங்க.  அம்மா திரும்பவும் அந்த  நெக்லஸ் தொலைஞ்சு போனதுக்கு நான்தான் காரணம்னு என்னை  திட்டுறாங்க.” என்று  சினுங்கி கொண்டே புகார் கூறினாள் மதுமிதா.

“பின்ன அந்த நெக்லஸ் பக்கத்து வீட்டுக்காரியா போட்டுட்டு போய் தொலைச்சிட்டு வந்தா?” என்றார்  வள்ளி விடாப்பிடியாக.

“அப்பா பாருங்கப்பா திரும்பத்திரும்ப என்னையே தப்பு சொல்றாங்க. எவனோ ஒரு திருட்டு பையன் என்னோட நெக்லஸை திருடிட்டு போயிட்டான். அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? சொல்லுங்க.” என்று அந்த திருட்டு என்கிற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து  அவளுக்கு அவன் மீது இருந்த கோபத்தை காட்டி கூறினாள் மதுமிதா.

“அதுதானே எவனோ ஒருத்தன் தப்பு பண்ணதுக்கு என் பொண்ணு திட்டு வாங்கணுமா?” என்று மகளுக்கு பரிந்து மனைவியிடம் வாதிட்டார் சிதம்பரம்.

“ம்ம்ம்ம் பாருங்கப்பா. அந்த  பொறுக்கி  பையனால என் நெற்றியில் வெட்டு பட்ட காயத்தோட தழும்பு கூட இன்னும் போகல.” என்று தன் நெற்றியில் இருந்த  இரண்டு இன்ச் வெட்டுப்பட்ட தழும்பினை காட்டி கூறினாள்.

“அவன் மட்டும் என் கையில கிடைச்சா,  அவனை உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன்.”  என்று  கருவினாள் பெண்.

“ஏதோ நகையோடு போச்சேன்னு சந்தோஷப்படு.  என் பெண்ணை விட உனக்கு அந்த நகை பெருசா போச்சா?” என்று சிறிது கோபமாக சிதம்பரம் வள்ளியை பார்த்து கேட்க.

“நான் இப்போ அந்த நகை தான் பிரச்சனைனு சொன்னேனா? அந்த  ஜிமிக்கிக்கு பொருத்தமான  நெக்லஸ் தேடி டைம் வேஸ்ட் பண்ணாதன்னு   தான் சொல்லிட்டு இருக்கேன்.  நான் சொல்லி எதை உங்க பொண்ணு கேட்டு இருக்கா? அன்னிக்கி கூட பிரிண்ட் கல்யாணத்துக்கு இந்த  காஸ்ட்லி நகை போட்டுட்டு போகாதன்னு சொன்னேன் கேட்டாளா உங்க பொண்ணு?” என்று கேட்டபடி கணவனை முறைத்தார் வள்ளி.

மனைவியின் கோபத்தை பார்த்ததும்

“அப்படி இல்லை  வள்ளி.  எனக்கு  நீ மது மேல வச்சிருக்கிற பாசத்தை பத்தி நல்லா தெரியும்.  அவளுக்கும் தெரியணும் இல்லையா? அதனால தான் அப்படி கேட்டேன். நீ ஒன்னும் கவலைப்படாதே. ஆசாரி கிட்ட சொல்லி அதே மாதிரி நெக்லஸ் உனக்கு நான் பண்ணி கொடுக்கிறேன்.  இப்போதைக்கு இந்த பிரச்சனையை விட்டுட்டு நாம விசேஷத்துக்கு கிளம்பற வேலையை பார்ப்போம்.” என்று கூறி சமாதான கொடியை பறக்க விட்டார் சிதம்பரம்.

 

“சரி சரி உங்க பஞ்சாயத்து  முடிஞ்சுதா? முகூர்த்தத்துக்கு நேரமாச்சு. சீக்கிரம் வாங்க.  தாலி கட்டுவதற்கு முன்னாடி போனா தான் நல்லாயிருக்கும்.  இல்லனா நேரா சாப்பாட்டுக்கு போன மாதிரி இருக்கும்.”  என்று அங்கு வந்த  மதுமிதாவின் அண்ணன் மதுசுதன் கூறவும் மதுமிதா

“சரி சரி” என்று கூறியபடி ஓரளவிற்கு பொருத்தமாக இருந்த ஒரு டாலர் செயின் ஒன்றை எடுத்து அணிந்துகொண்டு கண்ணாடியின் முன் நின்று எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை பார்த்தாள்.

‘பரவாயில்லை அழகாத்தான் இருக்கிறேன்’ என்று நினைத்துக்கொண்டாள்.

“சரி சரி சும்மா நின்னு பேசிகிட்டு டைம் வேஸ்ட் பண்ணாம சீக்கிரம் வாங்க எல்லாரும்.” என்று அங்கு இருந்த மற்றவர்களை  பார்த்து அதட்டினாள். “பாத்தியாடா கொழுப்பை.  இவ பொறுமையா  ஆற அமர கிளம்பிட்டு  நாம டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கிறதா  சொல்றா. இவளை என்ன தாண்டா பண்றது?” என்று மகனைப் பார்த்து தாய் கேட்க

தாயின் கன்னத்தை பிடித்து கிள்ளி முத்தமிட்டு

“இப்படி முத்தம்  கொடுக்கலாம்.” என்று மதுமிதா கூற வள்ளி கையை ஒங்கிக்கொண்டு அவளை துரத்தினாலும் கோபத்தை மறந்து சிரித்தார்.

அந்த பெரிய திருமண மண்டபத்தின் முன் சிதம்பரம் வள்ளி மற்றும்  மதுசூதன் இறங்கினார்கள்.

சிதம்பரம் மற்றும் வள்ளி  மண்டபத்தின் உள் நுழைய மதுசூதன் மதுமிதாவை பார்த்து

“அந்தப்பக்கம் பார்க்கிங் இருக்கு. பத்திரமா பார்க் பண்ணிட்டு வா.” என்று  கையை கார்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தை காட்டி கூறினான்.

“அதெல்லாம் நான், உன்னை விட நல்லாவே கார் ஓட்டுவேன். நான் பாத்துக்குறேன்.” என்று கூறிவிட்டு சென்று காரை விட்டுவிட்டு   திருமண மண்டபத்திற்குள்  நுழைந்தாள்.

 

திருமணம் விமரிசையாக நடந்தது.  பலவித பதார்த்தங்களுடன் மதிய உணவை முடித்த பிறகு  சிதம்பரம் ஒரு நாற்காலியில் சாவகாசமாக உட்கார்ந்து இருந்தார்.

அப்போது அங்கு வந்த அவரது நண்பர்

“மதுமிதா நல்லா வளர்ந்துட்டா.  என்ன  படிச்சி இருக்கா?” என்று கண்ணுக்கு அழகாக அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்த  மதுமிதாவை பார்த்தபடி கேட்டார்.

“பிபிஏ  முடிச்சிட்டா.” என்று சிதம்பரம் பதில் கூறினார். “ஓ அப்படியா மேல படிக்க போகிறாளா இல்லை கல்யாணம் பண்ண போறீங்களா?”

“அவள் வேலை செய்யணும்னு சொல்றா.”

“அப்படியா வசதியா போச்சு.  எங்கள் கம்பெனியில்  வேலைக்கு ஆள் தேவை படுது. அவளை எங்க கம்பெனியில் அப்ளை பண்ண சொல்லுங்க.” என்று கூறினார் அந்த நண்பர்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!