Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Idhaya thirudan Episode 6.1

நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

“ஆதி மாங்காய் பச்சடி கேட்டான். நான் மாங்கா வாங்கிட்டு வரச்சொல்லி சொல்ல மறந்துட்டேன். இப்ப என்ன பண்றது?” என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டு  யோசித்தார் பார்வதி.

 



Advertisement

“நம்ம தோட்டத்தில் நிறைய மாங்கா காய்த்து இருந்ததே அத்தை.”

 

“அதை பக்கத்து வீட்டு மரகதம் ஆசையா கேட்டான்னு கொடுத்துட்டேன். ஏற்கனவே இருந்த மாங்காயையும் நாம மாங்கா ஊறுகாய் போட்டாச்சு.”

Advertisement

 

Advertisement

“ஓ அப்படியா? சரி பரவால்ல விடுங்க. நான் அவன்கிட்ட அப்புறம் செய்ஞ்சு தரேன்னு  சொல்லிடறேன்.” என்றாள் மலர்.

 

“இல்லைமா. குழந்தை ஏமாந்து விடுவான். சரி.  பக்கத்து வீட்டு பையன் இருக்கிறானான்னு  பார்த்துட்டு வரேன். அவன் கிட்ட சொல்லி மாங்காய் வாங்கிட்டு வர சொல்லலாம். பக்கத்துலதான் கடை இருக்குதுல்ல?”

Advertisement

 

“அத்தை வேணாம் இருங்க. நான் போயிட்டு வந்துடறேன்.” என்று கூறியவள்  தன் அறைக்கு சென்று  பணத்தை எடுத்துக்கொண்டு செருப்பை  மாட்டிக் கொண்டு தன்னுடைய ஸ்கூட்டியை எடுத்து ஓட்டி பக்கத்தில் இருந்த கடைக்கு சென்றாள்.

 

“என்னமா நீங்களே வந்திருக்கீங்க? மரிக்கொழுந்து வரல?” என்று ஆச்சரியமாக கேட்டார் கடைக்காரர்.

 

“மரிக்கொழுந்து ரெண்டு நாளா வீட்டு வேலைக்கு வரல. அவ புருஷனுக்கு உடம்பு சரி இல்லையாம்”

 

. “அப்படியா சரி. என்ன வேணும் சொல்லுங்க.”

 

“எனக்கு நாலு மாங்காய் வேணும்” என்றாள் அங்கு இருந்த மாங்காயை கையிலெடுத்து பார்த்தபடி.

 

.

“என்னது மாங்காய் வேணுமா? உங்க வீட்டு தோட்டத்திலேயே தான் மாங்காய்க்கு காய்க்குமே.”

 

“ஆமாம். ஆனா நாங்க எல்லாம் மாங்காயையும் பறித்து ஊறுகாய் போட்டு விட்டோம். அதனால இப்போ பிஞ்சு மாங்காய் தான் இருக்கு. அதுல பச்சடி செஞ்சா பச்சடி கசக்கும்.”

“ஆமாம். ஆமாம். நீங்க சொல்றது சரிதான்.” என்று கூறியபடியே 4 பெரிய ஒட்டு மாங்காய் எடுத்து எடை போட்டு கொடுத்தார்.

 

மாங்காயை வாங்கியவள் பணத்தை கொடுத்துவிட்டு திரும்பினாள்.

 

அப்போது அங்கு சித்தப்பா, ரத்தினம், சரோஜாவின் கணவர் நின்றிருந்தார்.

 

“என்னமா மலர். இந்த வெயில்ல  காய்கறி கடைக்கு வந்து இருக்க. அதுவும் ஸ்கூட்டியில் வந்திருக்க. பாரு வெயிலில் அலைந்ததால் முகமெல்லாம் வியர்த்து போயிருக்கு.” என்று அவள் மீது அக்கறையாக கூறுவதுபோல ஆரம்பித்தார்.

 

“சித்தப்பா வெயில் எல்லாம் எனக்கு பழக்கம் தான். அதுவும் 9 மணி வெயில் தானே. ரொம்ப ஒன்னும் சூடா இல்லை.  இன்னும் கேட்டா, இந்த நேரத்து வெயிலில் இருக்கிறது  எலும்புகளுக்கு ரொம்ப நல்லது.  முடிஞ்சா நீங்களும் தினமும் இந்த நேரத்துல வாக்கிங் போங்க .”என்றாள் புன்னகையுடன்.

 

“அதுக்கு இல்லை மலர். உங்க வீட்ல மாதவனுக்கு ஒரு கார் இருக்கு. அண்ணாமலைக்கு இன்னொரு கார் இருக்கு. ஆனால் ஆறுமுகத்துக்கு கார் கிடையாது. உனக்கு ஒரு ஸ்கூட்டி, அவனுக்கு ஒரு பைக் மட்டும்தான் இருக்கு. உன் மாமனார் உனக்கும் ஆறுமுகத்துக்கும் ஒரு கார் வாங்கிக் கொடுத்திருக்கலாம்.” என்று ஆதங்கப்படுவதுபோல கூறினார் சித்தப்பா.

 

“வீட்ல இருக்கிற ரெண்டு காருமே எல்லோருக்கும் பொதுதான். மாதவன் கார், மாமா கார் இப்படி எல்லாம் நாங்க பிரிச்சு பார்த்தது கிடையாது. யாருக்கு கார் தேவைப்படுதோ அவங்க எடுத்துட்டு போயிட்டு வருவாங்க. அவ்ளோதான். எங்க வீட்டில எல்லாமே அப்படிதான். இந்த ஸ்கூட்டி, பைக் ரெண்டுமே அப்படிதான்.” என்று அவரை தீர்க்கமாக பார்த்து சொன்னாள்.

 

தோல்வியை மறைத்துக்கொண்டு

“சரி. அதை விடு. சரோஜா அந்த  நில  விஷயத்தை  சொன்னாளா?” என்றார்.

 

“ஆமாம் சொன்னாங்க. நானும் அவங்க கிட்ட என்ன  சொல்லனுமோ அதையும் சொல்லிட்டேன்.”

 

“சரி. உன்னோட சித்தப்பாவா நான் உனக்கு ஒரு நல்லது சொல்லட்டுமா?” என்று பொறுமையாக கேட்டார்.

 

மலருக்கு எரிச்சல் வந்தது.

“வேணாம்னா விடவா போறீங்க?

சொல்லுங்க. அந்த நொல்லதை கேட்போம்.”என்று நக்கலாக கேட்டாள்.

“என்ன?” என்று புரியாதவர் போல சித்தப்பா கேட்டார்

“இல்லை சித்தப்பா ஏதோ நல்லது சொல்ல போறேன்னு சொன்னீர்களே. அதான் கேட்டேன்.”

 

“அதுதான் மலர். நீ உன் புருஷன் கிட்ட சொல்லி அந்த நிலத்தை வாங்குவதற்கான ஏற்பாட்டை பண்ண சொல்லு. அது ரொம்ப நல்ல விளைச்சல் கொடுக்கிற நிலம். அது உங்களுக்கு கிடைச்சா நல்ல லாபம் வரும்.” என்று சொல்ல வந்ததை நேரடியாக கூறினார் சித்தப்பா.

 

“எங்களுக்கு இப்போ அந்த நிலம் வேண்டாம். நீங்க வேற ஏதாவது பேசுவதாக இருந்தால் பேசுங்க. இல்லைன்னா நான் கிளம்புகிறேன்.” என்று ஸ்கூட்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.

 

“நான் வேற என்ன சொல்ல போகிறேன்? எல்லாம் உன்னோட நல்லதுக்கும் ஆதித்யாவின் நல்லதுக்குத்தான் சொல்றேன்.”

 

“நீங்க என்மேல வச்சிருக்கிற அக்கறைக்கு ரொம்ப  நன்றி. நான் போயிட்டு வரேன்.” என்று கூறியவள்  அதற்கு மேல் அங்கே நிற்க பிடிக்காமல் ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டு வீடு வந்தாள்.

 

“எத்தனை தடவை சொன்னாலும் இந்த சித்தப்பா சித்திக்கு  புரியவே மாட்டேங்குது” என்று தனக்குத்தானே கூறி சலித்துக்கொண்டாள்.

எதிர்பார்த்தபடி மலர் நடந்து கொள்ளாதது ரத்தினத்திற்கு ஏமாற்றமாக இருந்தது. அந்த ஏமாற்றத்துடன் வீடு வந்தார்.

வீடு வந்தவரை பார்த்த சரோஜா

“என்ன முகம் வாடிப்போன பூவாட்டம் வாடி இருக்கு.” என்று விசாரித்தார்.

 

“இன்னிக்கி காய்கறி கடையில தற்செயலா மலரை பார்த்தேன்.”

 

“அப்படியா? ஏதாவது பேசினீங்களா?”

 

“ஆமா சரோஜா பேசினேன். ஆனால் எதுக்கும் மசியவே மாட்டேங்குது அந்த பொண்ணு மலர்.” என்று சோர்வாக கூறினார்.

 

“பாத்தீங்களா இவ்வளவு நாளா அவளோட மனசை மாற்ற முடியலன்னு என்னை தீட்டுவீர்கள்! இப்போ  நீங்களும் அவகிட்ட தோத்து போய் தானே வந்து இருக்கீங்க.

எனக்கு என்னமோ மலர் மனசை மாத்தி அந்த குடும்பத்தில் பிரச்சனை பண்ண முடியும்னு தோணலை. அந்த பொண்ணு சரியான கல்லு.” என்றார்

 

“கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் அப்படின்னு ஒரு பழமொழி இருக்கு தெரியுமா? பாப்போம் நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கட்டும். அப்போ கரைத்து விடுவோம்.

வீட்டுக்கு இப்போதைக்கு இவள் மட்டும்தான் மருமகளா இருக்கிறாள். அதனாலதான் ஒரு பிரச்சனையும் இல்லாமல் போயிட்டு இருக்கு. மாதவனுக்கும் கல்யாணம் ஆகி இன்னொரு மருமகள் வரட்டும்.  அப்புறம் எப்படியும் இவளோட மரியாதை அங்க குறையும். அப்படியே  குறையவில்லை  என்றாலும்  ஏதாவது சின்ன பிரச்சனை ஆவது வரும். அப்போ அந்த வாய்ப்பை பயன்படுத்தி நாம பிரச்சனையை பெரிது பண்ணிடுவோம். அப்படி பண்ணினா தான் நாம் நினைத்தது நடக்கும்.” என்று ஒரு திட்டத்துடன் உறுதியாக இருந்தார் ரத்தினம்.

 

இரத்தினம், அண்ணாமலை கடை வைத்திருக்கும் இடத்திற்கு பக்கத்தில்  ஒரு கடை வைத்து  அதில்  ஹேண்ட் பேக், சூட்கேஸ் போன்ற பொருட்களை விற்று வந்தார். நல்ல செல்வாக்குடன் வாழ்ந்து வந்தார்.

வேலை விஷயமாக வட நாட்டிற்கு மகன், திருமணம் செய்து கொண்டு அங்கேயே இருந்து விட்டான். அவனுடன் தங்கிவிடும் திட்டத்தில் இவரும் சென்றார..

ஆனால்  நினைத்த மாதிரி இவர்களால் அந்த ஊரில் மருமகளுடன் இருக்க முடியவில்லை. எனவே ஆறு மாதம் கழித்து சொந்த ஊருக்கே திரும்பி வந்தனர்.

 

மாதவன் அண்ணாமலையின் கடையை விரிவுபடுத்தி அதில் அவர்  விற்று வந்த பொருட்கள் மட்டும் இல்லாமல் மேலும்  பல பொருட்களையும் சேர்த்து விற்க ஆரம்பித்து விட்டான் என்பது வந்ததும் தான் தெரிந்தது.

 

இரத்தினம் அண்ணாமலையின் விரிவுபடுத்திய கடையை பார்த்து ஆச்சரியமும் பொறாமையும் பட்டார். எனினும்  அவர் தனது கடையை தொடர்ந்து நடத்தி வந்தார்.

ஆனாலும் அவருக்கு வியாபாரம் பெரிதளவு குறைந்தே இருந்தது. மகனுக்கு அந்த கடையின் மீது ஆர்வம் இல்லாததால் அவரால் அதனில் முதலீடு போட்டு பெரிது படுத்தவும் முடியவில்லை எனினும் பழையபடி அந்தக் கடைத்தெருவில் செல்வாக்குடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் அவரை வேறு வழியில் செல்ல வைத்தது.

 

அந்த குடும்பத்தில்  தன் தூரத்து சொந்தமான மலர் மூலமாக குழப்பத்தை ஏற்படுத்தி அண்ணன், தம்பி இருவருக்கும் சண்டை மூட்டி விட்டால் சொத்தை  பிரித்து விடுவார்கள்.  அப்படிப்  பிரித்தால் நிலத்தை விட பல மடங்கு விலை உயர்ந்த அந்த அண்ணாமலை ஸ்டோர்ஸ் ஒருவருக்கு போக வழியே கிடையாது. எனவே விற்றுவிடுவார்கள். அப்படி அந்த கடையை விற்றால்தான் இவருடைய கை மீண்டும் அந்த கடைத்தெருவில் உயரும் என திட்டமிட்டார்

 

 

எனினும் மலரின் நல்ல குணம் இவருக்கு ஒரு தடையாக இருந்தது. குடும்பத்தில் குழப்பத்தை  ஏற்படுத்தும் வாய்ப்புக்காக காத்திருந்தார். மலருக்கு இவரது நோக்கம்  தெரியாது. எனினும் இவர்கள் கூறுவதை அவள் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் அவளை அவளது புகுந்த வீட்டில் அப்படி தங்கமாய் தாங்கினார்கள். இவர்கள்  ஏதோ  புரளி பேசுவதாக நினைத்து அவர்கள் பேசுவதை  அலட்சியப்படுத்தினாள்.

 

ஒரு வேனில் பெரிய பெரிய பாத்திரங்கள்  வந்திருந்தது.  இரண்டு பையன்கள் அந்த பாத்திரங்களை கைத்தாங்கலாக  தூக்கி இறக்கி கொண்டிருந்தனர். இதனை கவனித்த மாதவன் வெளியில்  வந்தான்.

 

அப்பொழுது இரண்டு பையன்களில் ஒருவனின் காலில் ஒரு பெரிய பாத்திரம் விழுந்தது.

 

“ஆ” என்று அலறியபடி அந்தப் பையன் அந்த இடத்திலேயே உட்கார்ந்து கொண்டான். மாதவன் ஓடிச்சென்று  அந்த பையனுக்கு என்ன ஆனது என்று  பார்த்தான். அவன் காலில் அடிபட்டு ரத்தம் வந்து கொண்டிருந்தது. ரத்தத்தை பார்த்த மாதவன் கடைக்குள் ஓடிச்சென்று முதலுதவி பெட்டி எடுத்து வந்து அவனுக்கு கட்டு போட்டு விட்டான்.

 

“என்ன தம்பி? பார்த்து இறக்கக் கூடாதா?” என்று அவனை  வாஞ்சையாக பார்த்தபடி கேட்டான்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!