Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Irulil Thedum Oliyaai Nee

Irulil Thedum Oliyaai Nee 16

ஒளி 16 :::

 

நிலவைப்போல் உனை தூரத்தில் தூரத்தில்!
பார்க்கின்றபோதெல்லாம் துள்ளுகின்றேன்!
நீ எனது உயிராக!
நான் உனது உயிராக!
ஓர் இரவு நெஞ்சத்தில் தோன்றிடும் நேரம்!
நீ காணும் கனவெல்லாம் நான் காணும் கனவாகி!
நாம் சேர்ந்து ஒன்றாக பார்த்திட வேண்டும்!

 



Advertisement

“ஒரு வார்த்தையா!”

 

“சரி ! புதுப்படமா பழையபடமா?”

Advertisement

 

Advertisement

“செடி கொடியா? அப்படி என்ன படம் வந்திருக்கு… நெளியாம ஒழுங்கா சொல்லுடி…”

 

“விஜி ! ஒழுங்கா ஆக்ஷன் பண்ணு… வெளிய என்ன தெரியுது? உலகம்… எல்லோரும்… கூட்டம்.. இருட்டு…இதுல எதாவது ஒரு வார்த்தையா?” என்று கீர்த்தனா கடுப்பாக கேட்க,

Advertisement

 

“வண்டி இன்னும் எடுக்கலையே விளையாடுவோம்னு ஆரம்பிச்சால் இவ இன்னும் ஒரு படத்தைக் கூட கண்டுபிடிக்கல, இதுல நான் தான் ஆக்ஷன் பண்ணுவேன்னு அடம்பிடிச்சு வேற வாங்கினா…” என்று ஜெய் கிண்டலாக சொன்னாள்.

 

ரதியோ இதையெல்லாம் ஒரு புன்சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள். ஏனெனில் அவள் தான் அந்த படத்தின் பெயரைக் கண்டுபிடிக்க சொல்லி சொல்லியிருந்தாள்.

 

வண்டி செங்கல்பட்டில் இருந்து எடுக்க வேண்டிய நேரம் தாண்டி அரை மணி நேரமாக இன்னும் ஸ்டேஷன்லேயே நின்றிருக்க, நேரம் போகாமல் எல்லோரும் டம்சரஸ் விளையாடிக் கொண்டிருந்தனர்.

  

“விஜி லாஸ்ன்னு ஒத்துக்கோ டைம்ஸ் அப்…” என்று ஜெய் சொல்ல,

 

“போய் தொலைங்க… ஒரு படத்துக்கே நாக்கு தள்ளுது… எவ்ளோ ஆக்ஷன் பண்றேன்… இந்த எருமைக்கு ஒன்னு கூட தெரியல..” என்று கீர்த்தனாவைப் பார்த்து விஜி கடுப்போடு சொன்னாள்.

 

“போடி நீ ஒழுங்கா ஆக்ஷன் பண்ணாம என்னை சொல்ற ?” என்று அவளும் பதிலுக்கு பேசினாள்.

 

[the_ad id=”6605″]

 

 

 

“சரி சரி விடுங்க ! நான் இப்ப ஆக்ஷன் பண்றேன் கண்டுபிடிங்க…” என்ற ரதியிடம்,

 

“ம்ம்ம் ! இப்ப நீ மட்டும் எப்படி கண்டுபிடிக்க வைக்கறேன்னு பார்க்கிறேன்..” என்று விஜி சிலிர்த்துக் கொண்டாள்.

 

“நீ சொல்லு ரதி !” என்று கீர்த்தனா வீராப்புடன் கேட்டாள்.

                                  

“ஒரே பெயர் ! கைன்னு வார்த்தை வருமா? செடி கொடிக்கு வேற பேரா?”

 

ரதி ஆக்ஷன் காட்ட கீர்த்தனாவும் கூட ஒரு பொண்ணும் அதற்கு பெயர்கள் சொல்லிக் கொண்டு வர.. விஜியோ கீர்த்தனாவை நக்கலாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“இந்திரா ஆன்ட்டி ஒரு முந்திரி பிஸ்கட் கொடுத்து விடுங்க…எனக்கு பசிக்குது.. வண்டியும் இப்ப எடுக்கறா போல இல்லை, இவளும் இப்போதைக்கு அந்த படத்தோட பெயரைக் கண்டுபிடிக்க போறதில்லை…” என்று விஜி அந்த பெட்டிக்கே கேட்பது போல கத்திக் கேட்க ,    

 

எல்லோரும் திரும்பி இவளை முறைத்தனர். திடீரென பெட்டியில் ஏதோ சலசலப்பு ஒரு கூச்சல்…

 

பெட்டியில் இவர்கள் இருக்கும் பகுதிக்கு பின் பகுதியில் தான் சத்தம் என்று எல்லோரும் எழுந்து பார்க்க, அங்கு ஒரு கர்பிணிப் பெண் ஏதோ அசௌகரியமாக அமர்ந்திருப்பதைப் பார்த்து தான் அந்த பதட்டம் என்று புரிந்தது.

 

ரதி வேகமாக அந்த பெண்ணிடம் விரைந்து, “சித்ரா அக்கா ! என்னாச்சு ? என்ன பண்ணுது?” என்று பதட்டமாக கேட்டாள்.

அந்த பெண் சொன்னதைக் கேட்டு என்ன செய்வது என்று தெரியாமல்   வயதில் பெரியவர்களான பெண்மணிகள் பேசிக் கொண்டிருக்க, ரதிக்கோ அந்த சூழ்நிலை ஏனோ பதறச் செய்தது.  

 

“அக்கா ! அக்கா ! ஃபிரீயா இருங்க… நான் இதோ வந்துடறேன்…” என்று சொல்லிவிட்டு,

 

வண்டியில் இருந்து இறங்கி ஸ்டேஷன் மாஸ்டர் ரூமை நோக்கி ஓடினாள். செங்கல்பட்டு ஜங்ஷன் என்பதால் இங்கு ஏதேனும் அவசர உதவி கிடைக்கும் என்று ஓடினாள்.

 

வண்டி நின்றதால் பெரும்பாலான ஆண்கள் வெளியே காத்தாட நின்று பேசிக் கொண்டிருந்தனர். இவளோ எதையும் கவனிக்காமல் ஓடியவள் யார் மீதோ மோதினாள்.

 

“சாரி !” என்று சொல்ல திரும்பியவள் அங்கிருந்தவனைக் கண்டு  நிம்மதியடைந்தாள். 

 

அவனோ எப்போதும் போல் அவளை முறைத்தவாறு நிற்க, அவளோ  “அங்க …. அங்க … கம்பார்ட்மெண்ட்ல… “என்று மூச்சு வாங்கியபடி சொல்லியவளின் பதட்டம் அவனுக்கு எதையோ உணர்த்த,

 

“ஒண்ணுமில்லை! ஈஸி! என்னன்னு சொல்லு முதல்ல…”  என்று மென்மையாகக் கேட்டான்.

 

அவளோ அவனை உடன் வருமாறு அழைத்து வந்தாள்…அருகே வந்ததும் அது பெண்கள் பெட்டி என்பதால் தயங்கியவன் அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்து என்ன ஆனதோ? என்று அவளைத் திரும்பி பார்த்தான்.

 

அவள் விஷயத்தை சொன்னதும் அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்து அவனுக்கு கோபம் வந்தது.

 

எல்லோரும் இப்படி வேடிக்கை பார்ப்பது போல சூழ்ந்து கொண்டால் அந்த பெண்ணுக்கு எப்படி காத்து வரும். இவளிடம் காட்டமாக திரும்பி, “அவங்களை முதல நகர சொல்லு… கொஞ்சம் காத்து வரட்டும்..” என்றவன் அவளின் கையைப் பிடித்து உள்ளே கூட்டி சென்றான். 

 

ரதியின் தோழிகளுக்கு அவன் யார் என்ற கேள்வி எழுந்தாலும் யாரோ தெரிந்தவராக இருக்கும் என்றெண்ணியவர்கள் கண்டிப்பாக ஜிம் பாடி என்று யோசிக்கவில்லை என்பதை விட அந்த நேரத்தில் அவர்களின் ஞாபகத்தில் வரவில்லை. அவன் சொன்னது போல எல்லோரையும் கலைத்தனர்.

 

கூட்டத்தை  நகர்த்தியவன் அந்த பெண்ணின் முகத்தில் வலியின் சாயல் தெரியவும் அருகே வந்து “என்னாச்சும்மா? வலி ஏதும் இருக்கா?”என்று மென்மையாக கேட்டான்.

 

“அதெல்லாம் பொம்பளைங்க விஷயம் நீங்க போங்க…” என்று அங்கிருந்தவர்கள் கத்தரித்து பேசினார். ரதியோ அந்த பெண்மணியை முறைத்தாள். 

 

அவனோ அதெல்லாம் பொருட்படுத்தாமல்,” கண்டிப்பா நீங்க சொல்றது ஒத்துக்கறேன் ஆனால் அவங்களுக்கு என் உதவி தேவைப்பட்டால் கண்டிப்பா செய்வேன்…” என்று அழுத்தமாக கூறினான்.

 

அவன் சொல்லுவதைக் கேட்டு இன்னொரு பெண்மணியோ எதையோ யோசித்து அவனை தனியே அழைத்தார்.

 

[the_ad id=”6605″]

 

 

    

“சொல்லுங்கம்மா”

 

“தம்பி! அந்த பொண்ணுக்கு எட்டு மாசம் தான் ஆகுது அதனால நீ நினைக்கற போல வலி இல்லை… அது வந்து…” என்று அவர் தயக்கத்தோடு நிறுத்த …  

 

“நான் ஒன்னும் நினைச்சுக்க மாட்டேன் யார்கிட்டேயும் இது பத்தி பேசவும் மாட்டேன்…தயங்காம சொல்லுங்க…” 

 

“அவளுக்கு இப்ப யூரின் போகணும் தம்பி, ரொம்ப நேரமாக வண்டி நின்னதால போக முடியாம கண்ட்ரோல் பண்ணி இருக்கா, அதனால அடி வயிறு  இழுத்து பிடிச்சு வலி அதிகமா இருக்கு… நார்மல் பொண்ணா இருந்தாலே கஷ்டம் இதுல பிள்ளை முழுகாம இருக்குல்ல அதான்  வலி அதிகமா இருக்கு… இங்க இருக்க ரெஸ்ட் ரூம்க்கு போகலாம்ன்னு பார்த்தல் படி ஏறி போகணும், அந்த பொண்ணால வலியில அசையக்  கூட முடியல.. எங்களுக்கும் என்ன பண்றதுன்னு தெரியல.. வண்டி வேற இன்னும் எடுக்கல… “என்று தயக்கமும் தவிப்புமாக அவர் சொல்ல,

 

“நான் கூட்டிட்டு போறேன்ம்மா…”என்று அவன் உடனே கூறினான்.

அவரோ இன்னமும் தயக்கமாக பார்த்தார்… 

 

“நீங்க தயங்குறது எனக்கு புரியுது ஆனால் இப்ப நமக்கு வேற வழி இல்லை.. வண்டி எடுக்க அரை மணி நேரம் ஆகும்னு சொன்னாங்க…ஊர் போய் சேர இன்னும் முக்கால் மணி நேரம் ஆகும்… ரிஸ்க் எடுக்க வேணாம்…” என்று சொல்லியவாறே அந்த பெண்ணிடம் சென்றான்.     

 

அந்த பெண்ணின் முகத்தில் வலியின் சாயல் அதிகமாகியிருப்பதைப் பார்த்தவன்… “நான் கூட்டிட்டு போறேன் வாம்மா.. கூட யாரும் கூட்டிக்கோ… உன் கூட பிறந்தவனா நினைச்சுக்கோ…தயங்காதம்மா…  ரிஸ்க் எடுக்க வேணாம்…” என்று மென்மையாக கூற அந்த பெண்ணோ தயங்கினாலும் அவனுடன் செல்லத் தயாரானாள்.    

 

நொடியில் அந்தப் பெண்ணைக் கையிலேந்தி ஓர் அடி எடுத்து வைத்து திரும்பி யவன், இத்தனை நேரம் அவன் செயலைப் பார்வையாளராக பார்த்திருந்த ரதியை அழைத்தான்.

 

“ஓய்!” 

 

“என்ன ?” என்றவாறு அவள் பார்க்க,

 

“இவங்க பேக் எடுத்துட்டு கூட வா… “என்று சொல்லிவிட்டு கூட்டம் இல்லாத இன்னொரு பிளாட்பார்ம் வழியாக கூட்டிச் சென்றான்.ரதியும் பேகை எடுத்துக் கொண்டு வேகமாக அவன் பின்னே ஓடினாள்.

 

அங்கிருந்த ரெஸ்ட் ரூமில் அந்தப் பெண்ணை விட்டுட்டு வெளியேறினான். ரதியும் கூட வந்த இரு பெண்கள் அந்த பெண்ணுடன் இருந்து பார்த்துக் கொள்ள அவன் வேகமாக ஸ்டேஷன் மாஸ்டர் இருக்கும் ரூமிற்கு சென்றான்.

 

அங்கிருந்த அதிகாரியிடம் சண்டையிட்டு உயர் அதிகாரிகளை உடனே வர சொன்னான். அவன் தனியாக இருப்பதாக எண்ணிக் கொண்டிருந்த அதிகாரி சரியாக பதிலளிக்காமல் இருப்பதைப் பார்த்து உடனே ட்ரைன் நபர்கள் அத்தனைப் பேரையும் ஒரே போன் காலில் வர வைத்தான். பாதி பேர் எந்த வண்டியையும் உள்ளேயும் வெளியேவும் போக அனுமதிக்காதவாறு தண்டவாளத்தில் அமர்ந்தனர்.

 

யாரோ மீடியாவிற்கும் அதற்குள் சொல்லி விட இருப்பது நிமிடத்தில்  அந்த இடமே பரபரப்பானது. உயர் அதிகாரிகளை வர வைத்து நிலைமையின் தீவிரத்தை அந்த பெண்ணின் உடல் நிலையை மறைத்து பொதுவாக சொன்னான்.

 

“எங்க ஊருக்கு போறதுக்கு என்ன சார் சிக்னல் பிரச்சனை              இருக்க போகுது… இப்ப கிராஸிங் கூட இல்ல… அப்புறம் எதுக்கு சும்மா இங்க போட்டிருக்கீங்க… லேடீஸ் எவ்வளவு கஷ்டப்படுவாங்க… என்னைக்கோ ஒரு நாளுன்னா பரவால்ல… வாரத்தில் மூணு நாள் இப்படி நடக்குதுன்னா அப்ப உங்ககிட்ட தான் பிரச்சனை… எங்களுக்கு இதுக்கு கண்டிப்பா நிரந்தர தீர்வு வேணும்…“

 

இன்னும் ஒரு இருப்பது நிமிடம் தீவிர பேச்சு வார்த்தைக்கு பிறகு உயர் அதிகாரி இனிமேல் இப்படி நடக்காது என்று வாக்குறுதி தந்தப் பின் தான் எல்லோரும் கலைந்தனர்.

 

அவன் நண்பர்களுடன் செல்ல, ரதியோ அவனைப் பின்தொடர்ந்தாள். அவனின் அதிரடியில் அசந்து தான் போனாள். 

 

எதேச்சையாக அவளைக் கவனித்தவன் நண்பர்களை முன்னே விட்டு அவளுடன் நடந்தான்.

 

“தேங்க்ஸ்!” என்று ரதி வார்த்தையாக சொன்னாலும் அவள் முகம் ஏனோ இன்னமும் பதட்டமாகவே இருப்பதை அறிந்தவன்,

 

“ஓய்!”

 

அவள் நிமிர்ந்து அவனைப் பார்க்க ,

 

“என்னாச்சு ? அதான் எல்லாம் ஓகேல்ல அப்புறம் ஏன் டல்லா இருக்க?” என்று கனிவாக கேட்டான்.

 

“தெரியல ஒரு மாதிரி பயமா படபடன்னு வருது?” 

 

“ஒன்னுமில்லை எல்லாம் சரி ஆகிடுச்சு… ரிலாக்ஸ்… நல்லா மூச்சு இழுத்து விடு…“என்று அவன் சொல்லியும்,

 

அவள் தெளியாததைக் கண்டு, “ஒரு சில சமயம் நம்மளையே சாய்க்கற அளவுக்கு சூழ்நிலைகள் வரும் அந்த சமயம் கண்டிப்பா நம்ம முழுசா உடைஞ்சு கூட போகலாம்.. அந்த நேரத்தில நம்ப கூட யாரும் இருக்க மாட்டாங்க… எல்லாம் நமக்கு எதிராவே இருக்கும்… ஆனால் அதிலேயே உழலக் கூடாது… அதில் இருந்து வெளியே வந்தா தான் எதனால உடைஞ்சோம்னு தெரிஞ்சு சரி பண்ண முடியும்… இப்படி பயந்து பதறக் கூடாது புரியுதா?”

 

எதனால் அவன் அதை சொல்கிறான் என்பதை அவனும் அறியவில்லை.. அவளும் அறியவில்லை… இந்த சம்பவம் மட்டுமே அவளின் பதட்டத்திற்கான காரணம் இல்லை, வேறு என்னவோ மனதை திடீரென பிசைகிறது. ஆனால் காரணம் தான் அவளுக்குத் தெரியவில்லை…

 

இனிமேல் இருவரும் சந்திப்பதற்கில்லை என்பதால் கடைசி ஆறுதலாக அவன் சொன்னானோ அல்லது இப்போது அவள் சந்திக்க போகும் சூழ்நிலைக்கு சொன்னானோ அதை விதி மட்டுமே அறிந்தது…  

 

அவன் பேசியது எதுவும் அவள் அப்போது உணரவில்லை அதை உணரும் நேரம் அவளின் நிலை?…

 

அவனிடம் தலையசைத்து விட்டு அவள் இருக்கையில் வந்து அமர்ந்தாள்.. அவள் அமைதியைக் கண்டு எல்லோரும் கேட்க, டையர்டாக இருப்பதாக சொல்லி இருக்கையில் கண்மூடி சாய்ந்து விட்டாள்.  

 

இறங்கி வண்டி எடுக்கும் போது அவளின் முன்னே அவன் பைக்கில் செல்வதைப் பார்த்து அன்று போல இன்றும் தன்னுடன் வருவானா? என்று யோசித்தாள். ஆனால் வேறு வேறு சாலையில் இருவரும் பிரிய போகும் முன் ஒரு முறை அவன் திரும்பி பார்த்து தலையசைக்க அவள் மனம் இன்னும் கலங்கியது.

 

வீட்டின் அருகே செல்ல செல்ல அவளுக்கு ஏனோ பதறியது. இனம் புரியாத பயம்,பதட்டம். வீட்டின் முன்னே இருந்த கூட்டத்தைப் பார்த்து இன்னும் பதறியது. 

 

[the_ad id=”6605″]

 

 

 

இவள் வண்டி விட்டு இறங்கியதும் எல்லோரும் இவளைப் பாவமாக பார்ப்பது போல் தோன்ற ஓரடி  முன்னே சென்றவள் அங்கு கண்ட காட்சியில் திக் பிரம்மை அடைந்தது போல அதிர்ந்ததை இன்று நினைத்தாலும் மனம் பகீரென்றது.

 

“சமோசா ! ஆனியன் சமோசா !

 

“சூடான ஆனியன் சமோசா !”

 

என்ற குரலில் நிகழ் காலம் வந்தவள் பெருமூச்செடுத்து தன்னை ஆசுவாசப்படுத்தினாள்.

 

காலை வேலையிலேயே வண்டியில் நிறைய திண்பண்டங்கள் விற்பதைப் பார்த்ததும் அவளுக்கு சிரிப்பு வந்தது. இந்நேரம் விஜி இருந்திருந்தால் ஒரு பொருளையும் விட்டிருக்க மாட்டாள்.

 

ஒரு வேலை விஜியிடம் அன்றே அவனைக் காட்டியிருந்தால் இந்நேரம்  அவனின் பெயர் தேடல் இருந்திருக்காது என்று மனதோடு குமைந்தவாறே அவள் நிறுத்தத்தில் இறங்கி குவார்ட்ஸை அடைந்தாள்.   

 

அன்று உன்னைத் தேடி,

ஆரம்பித்த என் தேடல்!

இன்று உனக்கும் எனக்குமான உறவையும் சேர்த்து தேடுகிறதோ!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!