Irulil Thedum Oliyaai Nee 27
ஒளி 27 ::-
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை!
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை!
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா!
மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா!
காய்ச்சல் வந்து படுக்கையில் துடிப்பதும் உன் முகம்!
அம்பாரியாய் ஏற்றிக் கொண்டு அன்று சென்ற ஊர்வலம்!
தகப்பனின் அணைப்பிலே கிடந்ததும் ஓர் சுகம்!
Advertisement
கனவாக இருக்கக் கூடாதோ என்று நினைக்கக் கூட கால அவகாசம் இல்லாமல் எல்லாம் முடிந்து சாந்தி தன் மகளோடு பிறந்த வீடு வந்து ஒரு மாதம் ஆகிற்று…
Advertisement
அவரின் இதயம் துடிக்கவில்லை என்று அறிந்த நொடி அதிர்ச்சியில் ஸ்தம்பித்தவள் தான் அதன்பின் எல்லோரும் வந்து தன் தாயைக் கட்டி பிடித்து கதறிய கதறலில் தான் நிதர்சனம் உணர்ந்தாள். மனம் ஏனோ மறத்து போய் அழுகை கூட அவளுக்கு வரவில்லை.
Advertisement
வீடு வாசல் இல்லாமல் அவரை எங்கு கொண்டு செல்வது என்று எல்லோரும் குழம்பவும், பாண்டியன் அவர்கள் வீட்டிற்கு கொண்டு செல்லலாம் என்று கூறினார்.
ரதி அமைதியாக எழுந்து வந்து, “மாமா! அப்பாவை எங்க வீடு இருக்க இடத்திலேயே வைச்சு இறுதி காரியம் செய்யலாம்” என்று சொன்னாள்.
Advertisement
எல்லோரும் அதிர்ந்து போய் அவளைப் பார்க்க, ரதியோ நிதானமாக “எங்களுக்கு அந்த இடம் இப்ப வேணாம் மாமா! ஆனால் அப்பாவோட கடைசி காரியம் எல்லாம் அங்க வைச்சு தான் செய்யணும்… நாம இத்தனை பேர் இருக்கோம் நம்மை மீறி யார் என்ன பண்ணிட போறாங்க…”என்று அவள் ஒரு திடத்துடன் பேசினாள்.
அவர்களை வீட்டில் தங்க வைத்த பெரியவரும் “அந்த பொண்ணு சொல்றதும் சரி தான்… என் பையன் தான் இந்த தெரு கவுன்சிலர்… யார் என்ன பிரச்சனை பண்ணாலும் பார்த்துக்கலாம்…” என்று தைரியம் கொடுக்க, அனைவருக்கும் அதுவே சரியாகப்பட்டது.
கமலம்மாவிற்கு ஏதோ அவசர கூட்டம் இருந்தததால் அவர் இங்கு இல்லாதிருப்பதும் இவர்களுக்கான எதிர்ப்பும் குறைவாகவே இருந்தது. அப்படியும் கமலம்மா அனுப்பிய போலீஸ் இவர்களின் காரியங்களை முடுக்க செய்ய அந்த தெருவில் இருந்த மக்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து எதிர்த்ததால் அவர்களாலும் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதை விட அதற்கான முயற்சி செய்யவில்லை.
ஏனெனில் வந்த போலீஸ் அதிகாரியிடம் ராஜதுரை குடும்பத்திற்கு நடந்த அவலத்தை அந்த தெருவின் கவுன்சிலர் சொல்லியிருந்தார். அதனால் அவர்களின் எதிர்ப்பும் இல்லாதிருந்தது. அதன் பின் எல்லாம் துரித கதியில் நடந்தேறியது.
சில அல்ல பல நேரங்களில் நம்முடைய நெருக்கமான உறவுகளை விட நம் சுற்றத்தாரே நம்மை அரவணைக்கின்றனர்.
ராஜதுரையின் இறுதி ஊர்வலத்தில் ரதியைக் கொண்டே அனைத்தும் செய்ய, சிவா அதை முடித்து வைத்தான்.
ரதியின் கண்ணில் கண்ணீர் வந்ததே ஒழிய என்னவோ ஒரு இறுக்கத்தைக் கொண்டு சிதறாமல் இருந்தாள்.
அவள் இங்கு பாண்டியன் வீடு வந்தும் எதிலும் உயிர்ப்பில்லாமல் இருந்தவளைக் கண்டு எல்லோரும் வருந்தினர். இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக சாந்தியைத் தேற்றினர்.
“சாந்தி ! இன்னும் நீ இப்படியே இருந்தா ரதிக்கு ஆறுதல் சொல்லுவா? அவ கிட்ட கொஞ்சம் பேசு… பிள்ளை ரொம்ப வாடிக் கிடக்குது” என்று வாசுகி சொல்ல,
“அவக் கிட்ட நான் என்னன்னு ஆறுதல் சொல்லுவேன்…” என்று குமைந்தவாறே ரதியிடம் சென்றார்.
அறையின் ஓரத்தில் கண்மூடி அமைதியாக படுத்திருந்தவளிடம் சென்று அவள் நெற்றியை மிருதுவாக வருடி விட்டார். அவள் தூங்கவில்லை என்பதை அசையும் கண்மணி காட்டிக் கொடுத்தது.
[the_ad id=”6605″]
“அம்மு!”
“சொல்லுங்கம்மா!”
“இப்படியே இருந்தா எப்படிடா? அப்பாக்கு நீ இப்படி இருக்கறது பிடிக்காதுல்ல எழுந்து நார்மலா இரும்மா” என்று மென்மையாக சொல்ல,
“எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலம்மா?”என்று அவரின் மடியில் படுத்தவாறு சொன்னாள்.
“நீ எதுவும் பண்ண வேணாம்.. தனியா இருக்காத… எல்லோர் கூடவும் பேசு.. அது போதும்…”
“ம்ம்ம் ! சரிம்மா ! முயற்சி பண்றேன்.”
அன்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவள் சித்தம் தெளிந்தாள். அதில் சிவாவின் பங்கு அதிகம். இந்த இடைப்பட்ட காலத்தில்,
அவர்களின் இந்த நிலைமைக்கு எல்லோரும் சேர்ந்து சூழ்ச்சி செய்திருப்பது தெரிந்தது. அந்த இடத்தை வாங்குபவன் முழு இடத்தையும் கேட்க, என்றோ அண்ணன் பாதுகாப்பிற்காக கொடுத்த பத்திரத்தை தன் சுயநலத்திற்காக அதுவும் பணத்திற்காக மாற்றி எழுதியிருக்கிறார் கமலம்மா. இதற்கு மற்ற அண்ணன்களின் வாரிசுகளும் உடந்தை, அவர்களுக்கும் பணம் கொடுத்து சரி செய்திருக்கிறார்.
இதெல்லாம் தெரிந்ததும் பழனி அவர்கள் மேலே கேஸ் போடலாம் என்று சொல்ல ரதியோ தந்தையின் வார்த்தைக்கு மதிப்பளித்து மறுத்து விட்டாள். இப்படியே நாட்கள் ஓடியது,
விஷயம் அறிந்து தோழிகள் வந்து விசாரித்து ஆறுதல் கூறி சென்றிருந்தனர். விஜி மட்டும் அவ்வப்போது வந்து சென்றாள்.
“ஏன் அம்மு ! நீ மறுபடியும் வேலைக்கு போயேன்… அங்க ட்ரைன்ல உன் பிரெண்ட்ஸ் கூட போயிட்டு வேலைக்கும் போனா உனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்ல… என்ன சொல்ற?” என்ற சாந்தியிடம்,
“இல்லைம்மா… என்னால இப்போதைக்கு யாரையும் பார்த்து பழைய மாதிரி இருக்க முடியும்னு தோணலம்மா.. ப்ளீஸ்!”
“சரி ! நான் உன்னை கட்டாயப்படுத்தல… நீ சும்மா இருந்தா அது உனக்கு நல்லதுக்கு இல்லை… எதாவது படிக்கிறியா? மாமா கிட்ட சொல்றேன்…” என்று சாந்தி சொல்ல,
சிறிது நேரம் யோசித்தவள்,” நான் புதுசா எதுவும் படிக்கலம்மா… வேணும்னா நீங்க முன்னாடி கேட்டா போல கவர்ன்மென்ட் எக்ஸாம்ஸ்க்கு படிக்கிறேன்”
சாந்திக்கும் அவள் இந்த அளவிற்கு இறங்கி வந்ததே போதும் என்றானது. “சரி அம்மு ! உனக்கு என்ன தோணுதோ அதை செய்… நான் மாமாகிட்ட சொல்றேன்” என்றவாறே அவர் வெளியேறினார்.
அவர் சென்றதும் இத்தனை நேரம் மனதில் இடித்துக் கொண்டிருந்த குரல் வெளியே வந்தது. தாய் ட்ரைன் பற்றிப் பேசியதும் அவள் நினைவில் வந்தவனை எண்ணி வருந்தினாள்.
“நான் எதிர்பார்க்காத அப்ப என்கூட வந்த நீங்க, நான் எதிர்பார்த்த நேரத்தில வந்திருந்தா அன்னைக்கு நடந்த எதையும் நடக்க விடாம பண்ணியிருப்பீங்கல்ல… ஏன் வரல?”
“நீங்க கடைசியா சொன்ன போல என்னை சாய்க்கற அளவுக்கு எல்லாம் நடந்து முடிஞ்சு போச்சு…நீங்க சொன்ன போல உடைஞ்சுதுக்கான காரணம் தெரிஞ்சாலும் சரி பண்ண முடியாம தவிக்கிறேன்…நான் இப்ப என்ன பண்ணனும்னு தெரியல…”
“எனக்கு சின்ன சின்னதா பிரச்சனை வரும் போது என்கூட சப்போர்ட்டா இருந்த நீங்க, இப்ப இவ்வளவு பெரிய விஷயம் நடக்கும் போது என்கூட ஏன் இல்ல…? என்னை சுத்தி இவ்ளோ பேர் இருக்காங்க ஆனால் எனக்கு உங்க வார்த்தையைத் தான் கேட்கணும் போல இருக்கு… ஏன்னு தெரியல? எங்க இருக்கீங்க?” என்று மனதோடு அவனுடன் பேசியவளின் தேடல் அன்று ஆரம்பித்தது.
துக்கத்தில் மூழ்காதவாறு தன்னை படிப்பில் மூழ்கடித்தாள். அப்படியும் இரண்டு முறை தோல்வியடைந்து மூன்றாம் முறையே வெற்றியடைந்தாள்.
அவளிடம் பழி வெறியோ வஞ்சகமோ எதுவும் இல்லை… தன் தந்தை சொன்னது போல தங்களுக்கு உரியது அதுவே கைக்கு வந்து சேரும் என்று திடமாக நம்பினாள்.
முழுக்க முழுக்க அவர்களுக்கு உரிமையான இடமாக இருந்தாலும் தன் தந்தையின் உயிரைக் கொடுத்து அது தங்களுக்கு கிடைத்ததாக இருக்க வேண்டாம் என்று தான் பணம் கொடுத்து மறுபடியும் வாங்கினாள். தந்தையின் ஆத்மாவிற்கு சாந்தம் கொடுத்த திருப்தி அவளிடம்…
அவள் இந்த இடத்தை வாங்குவது அறிந்து எல்லோருக்கும் ஆச்சர்யம் மற்றும் அதிர்ச்சியே கமலம்மாள் உட்பட… ஏனெனில் முடிந்தது என்று அவர்கள் முடித்து வைத்த விஷயத்தை இன்று ரதி சாதித்து இருந்ததைப் பார்த்து பொருமினர்.
உணர்வுகள் பொய்த்து போன இடத்தில் உறவுக்கு மதிப்பில்லை என்று அனுபவபூர்வமாக அறிந்தவளாயிற்றே… அதனால் அவள் அதை மட்டுமல்ல அவர்களையுமே ஒரு பொருட்டாக மதிக்கவில்லை…
இடையில் அவள் தோழிகள் மூவருக்கும் திருமணம் முடிந்திருந்தது. அவர்களின் திருமணத்தின் போது மறுபடியும் எல்லோரையும் நேரில் சந்தித்தது. மற்றபடி அவர்களுடன் போன் தொடர்பு மட்டுமே.
கண் மூடி திறப்பதற்குள் நான்கு வருடம் ஓடி விட்டது. என்னவோ எதிலும் ஒட்ட முடியாமல் அந்த நாள் இன்னும் துரத்துவது போல ஓடிக் கொண்டிருந்தாள். அதற்கே இந்த தனிமை வாசமும்…
இந்த தனிமை வாசத்தில் அவள் உடைந்து போகாமல் காத்தது தந்தையின் நினைவுகள் என்றால் கூடவே அவனுடனான சந்திப்பில் அவன் உதிர்த்த ஆறுதல் வார்த்தைகளும்…
ரோட்டில் செல்லும் வண்டிகளின் சத்தத்தில் நிகழ்காலம் வந்தாலும் இன்னும் அதன் தாக்கம் அப்படியே இருப்பதாக உணர்ந்தாள்.
ஒரு மூன்றே சந்திப்பில் அந்நியனாக அறிமுகமானவனின் ஆறுதலைத் தான் ஏன் இந்த அளவிற்கு தேடினோம்? இந்த அளவிற்கு தாக்கம் ஆகும் வகையில் அவர் என்ன செய்து விட்டார்? என்பது மட்டும் அவளுக்கு எப்போதும் புதிராகவே இருந்தது.
ஆனால் அவனின் இருப்பு அவளின் பலம் என்பதை அவளால் மறுக்க முடியாத உண்மை… அதிலும் இப்போது கிளம்பி வரும் போது அவனிடம் தான் பேசியதும் கதறி அழுததும் ஏன் என்று யோசித்தால் அவளிடம் விடையில்லை… ஒரு பெருமூச்செடுத்து தன்னை ஆசுவாசப்படுத்தி அதிலிருந்து வெளியே வந்தவள் மாமாவின் வீட்டை நோக்கி நடந்தாள்.
ஒருவேளை இவர் தான் தந்தை பார்த்த அந்த அப்பாடக்கர் என்பதை அறிய வரும் போது அவளுக்கு விடை கிடைக்குமோ… ஏனெனில் கண் பார்க்கும் முன் வார்த்தை பேசும் முன் மனம் உணர்ந்து விடுகிறதே இவர் தான் எனக்கானவன்… எனக்கே எனக்கானவன் என்று…
ஆனால் அதை ரதி இன்னமும் உணராத போது யார் உணர வைப்பர்.. மதிப்பும் மரியாதையையும் தாண்டி அவனின் மேல் உள்ள காதலை யார் அவளுக்கு உணர்த்துவர்…
அவள் தந்தை சொன்னது போல இந்த இக்கட்டான சூழ்நிலைகளில் சுற்றி அத்தனைப் பேர் இருந்தும் அவனை மட்டுமே தேடிய மனதின் உண்மை நிலையை அவளுக்கு யார் சொல்லுவர்.. தேடியது அவனை அல்ல அவளின் சரி பாதி என்று…
[the_ad id=”6605″]
அவனிடம் இருந்து வந்த வாழ்த்து மெசேஜ்ஜா… அல்லது தன் இடம் வந்து சேர்ந்த நிம்மதியா… எதுவோ ஒன்று அவளை இயல்பாக்கியது… எல்லோரும் கூடத்திலமர்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவளும் அவர்களோடு கலந்துக் கொண்டாள்.
“மாமா ! லோன் எனக்கு இந்த வாரம் கைக்கு வந்திடும் நீங்க கூட இருந்து வீட்டு கட்றது எல்லாம் பார்த்துக்கோங்க, நான் ஈவினிங் சென்னை கிளம்பறேன்…” என்று பாண்டியனிடம் சொல்ல
“சரிம்மா!” என்றார்.
வழக்கமாக எப்போதும் போல ட்ரைனில் ஏறியதும் தானாகவே அவனிடமே அவள் நினைவுகள் சென்றது. “அவங்க கிட்ட அன்னைக்கு நிறைய பேசி இருக்கேன் என்ன நினைச்சாங்களோ?” என்று அவனை சந்திக்க தயங்கியவாறே அலுவலகம் சென்றாள்.
ஆனால் அவனோ எப்போதும் போல அவனின் வசீகரப் புன்னகையோடு அவளை வரவேற்றான். அவளிடம் ஒட்டியிருந்த தயக்கமும் பறந்தோட அன்றிலிருந்து அவர்களிடையே ஒரு நட்பு இழையோடியது. கூடவே நாட்களும்…
அலுவகத்தில் வேலை விஷயம் தவிர வேறு பேசியது இல்லை… குவார்ட்டர்ஸில் இருக்கும் பார்க்கில் எப்போதாவது இருவரும் சந்தித்துக் கொண்டால் சிறிது நேரம் பேசுவர். இதுவரையில் அவர்களிடையேயான பேச்சில் அதிகம் அவர்களைப் பற்றி பேசியது இல்லை…
அன்றும் அது போல பேசிக் கொண்டிருக்க, அவள் பேசினாலும் முகம் மட்டும் ஏதோ யோசனையில் இருப்பதை அறிந்தவன்…
“ஓய்!”
அவன் அழைப்பில் சரேலென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள். அன்று ஹோட்டலில் பேசும் போது அழைத்தது அதன் பின் இப்போது தான் அப்படி அழைக்கிறான்.
“ஓய் ! அப்படி என்ன யோசனையிலே இருக்க ?” என்று அவள் முன் கையை ஆட்டியவாறு கேட்க, அதில் தன்னிலைக்கு வந்தவள் இடவலமாக தலையசைத்தாள்.
“என்னன்னு சும்மா சொல்லு !“என்று அவன் மறுபடியும் கேட்டதும்,
“ஏதோ வரன் வந்திருக்காம் இந்த வாரம் வீட்டுக்கு வர சொல்லியிருக்காங்க…” என்று அவள் யோசனையோடு சொன்னாள்.
எப்போதும் குடும்ப விஷயங்கள் கூட பேசியதில்லை ஆனால் இன்று அவன் கேட்கும் போது தயங்காமல் சொன்னாள்.
“ஓஓ! ஏன் உனக்கு பிடிக்கலையா?”
[the_ad id=”6605″]
“இல்ல அதெல்லாம் யோசிச்சது இல்லை… வீடு கட்ற வரைக்கும் டைம் கேட்டிருந்தேன்… இப்போ கொஞ்சம் முடியற நேரம்… அதான் இப்பவே ஆரம்பிச்சுட்டாங்க… என்ன பண்றதுன்னு தெரியல…” என்று ரதி குழப்பமாக சொல்ல,
அமைதியாக இருந்த அவனிடமே, “என்ன பண்ணலாம்?” என்று ரதி கேட்டாள்.
“ம்ம்ம் ! நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கலாம்..” என்று காதலோடு அவன் சொல்ல,
“ம்ம்ம்! சரி !” என்று யோசனை கலையாமலே பதில் சொன்னவள் அதன் பின்னே அர்த்தம் உணர்ந்து அதிர்ந்து துள்ளி எழுந்தாள்.
“என்ன்ன்னது?” என்று தன் இரு விழிகளும் தெறித்து விழும் அளவிற்கு அவனிடம் கேட்டாள்.
அவனோ கண்ணோடு காதலையும், உதட்டோடு புன்னகையையும் நிரப்பிக் கொண்டு மனம் முழுவதும் நான்கு வருடமாக நிறைத்திருந்தவளின் விழிகளிலே இன்று தொலைந்து கொண்டிருந்தான்.
நீ கேட்ட பலத்தை நான் தந்து விட்டேன் !
நான் கேட்காமலே கேட்கும் உன் காதலை..
எனக்கே எனக்காக தருவாயா!…
காலம் முழுவதும் நான்(ம்) சுவாசிக்க!
