Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kannaa Varuvaayaa

Kannaa Varuvaayaa 6 2

மாலை ஆனதும் தூங்கி எழுந்த லக்ஷ்மி, அவர் கணவரின் தேவைகளைக் கவனித்துவிட்டு வெளியே வந்தவர், ஹாலில் அமர்ந்திருந்த சந்தியாவைப் பார்த்ததும் முகம் மாறினார்.  அதுவரை கதிரின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சந்தியா, அவள் அத்தையைப் பார்த்ததும் டிவி பார்ப்பது போல் நடித்தாள்.

லக்ஷ்மி முனங்கிக்கொண்டே சமையல் அறையில் வேலை பார்க்க, சிறிது நேரத்தில் கதிரும் தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்து அமர்ந்தான். சந்தியா அவனை ஓரக்கண்ணால் ஆராய்வதைப் பார்த்தவன், அங்கிருந்து எழுந்து அவன் அப்பா இருந்த அறைக்குள் சென்றான். ஐந்து மணி ஆனதும், கதிர் அவன் அப்பாவுக்காக ஏற்பாடு செய்திருந்த பிசியோதெரபிஸ்ட் வந்து பெரியசாமிக்குத் தேவையான பயிற்ச்சிகள் கொடுத்துவிட்டு, அவரும், கதிரும் சேர்ந்து பெரியசாமியை இரு பக்கமும் பிடித்துக்கொண்டு சிறிது தூரம் வீட்டிலேயே நடக்க வைத்தனர். 

சந்தியா அதை எல்லாம் அமைதியாகப் பார்த்து கொண்டிருந்தாள். ஒரு மணி நேரம் சென்று பிசியோதெரபி செய்தவர் கிளம்பும் போது, கதிர் அவரிடம் ஐநூறு ரூபாயை எடுத்து கொடுக்க,  அவர் அடுத்துச் செவ்வாய்க்கிழமை வருவதாகச் சொல்லி சென்றார். வாரம் மூன்று நாட்கள் பிசியோதெரபிஸ்ட் வருவதாகவும், மற்ற நாட்களில் கதிரே தன் தந்தைக்குப் பயிற்சி செய்வதையும் ஏற்கனவே அவள் ஆச்சியின் மூலம் சந்தியா தெரிந்து கொண்டிருந்தாள். 



Advertisement

சிறிது நேரம் கழித்துச் சந்தியா எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு ஹாஸ்டலுக்குக் கிளம்ப, லக்ஷ்மி முகத்தைத் திருப்பிக்கொள்ள, கதிர் கடைசி வரை அவளோடு பேசவே இல்லை. சந்தியா பஸ் ஸ்டான்ட் நோக்கி மெதுவாக நடந்தாள். அப்போது அவளை உரசிக்கொண்டு ஒரு பைக் வந்து நின்றது, சந்தியா திடுக்கிட்டுப் போய்ப் பார்க்க, அந்த வண்டியில் வந்தது கதிர்.

 கதிர் மாமா இப்போ எதுக்கு வந்திருக்காங்க என்பது போல் சந்தியா பார்க்க, கதிர் அவளைப் பார்த்து வண்டியில் ஏறு என்றான். சந்தியாவால் நம்பவே முடியவில்லை, அவள் மகிழ்ச்சியோடு வண்டியில் ஏறி அமர்ந்தாள். 

வீட்டில் தன்னைக் கண்டுகொள்ளாத கதிர், இப்போது அவனாகவே வந்து வண்டியில் ஏற்றிக்கொள்ளவும் சந்தியா சிறகில்லாமல் வானத்தில் பறந்தாள். ‘வீட்ல அத்தை இருந்ததுனால தான் பேசலைப் போல..’ என்று அவளாகவே நினைத்துக்கொண்டாள்.

Advertisement

கதிரை வண்டியின் முன்புற கண்ணாடி வழியாகப் பார்த்துக்கொண்டு வந்தவள், சிறிது தூரம் சென்றதும், கதிரின் அருகில் நெருங்கி அமர, கதிருக்கு முதலில் ஒன்றும் தெரியவில்லை. சிறிது நேரத்தில் வித்தியாசத்தை உணர்ந்தவன், முன்புறம் இருந்த கண்ணாடியில் சந்தியாவைப் பார்த்து முறைக்க, அவள் அவனைப் பார்த்து புன்னகைத்தாள். 

Advertisement

கதிர் பல்லைக்கடித்துக் கொண்டு வண்டி ஓட்ட, சந்தியா இப்போது இன்னும் நெருங்கி அமர்ந்து, அவன் இடையைச் சுற்றி கைபோட, பொறுக்க முடியாத கதிர் வண்டியை ஓரம் கட்டி நிறுத்தியவன், திரும்பி சந்தியாவைப் பார்த்து இறங்கு என்றான்.

 சந்தியா முகத்தைத் தொங்க போட்டுக் கொண்டு இறங்க, கதிர் “நீ ஆட்டோவுல போ…” என்றான்.

 சந்தியா அவனைப் பார்த்து முறைத்தவள் “இருட்டு நேரம் தனியா ஆட்டோவுல போகச் சொல்றீங்க. நான் ஒழுங்கா பஸ்லயே போய் இருப்பேன். எல்லாம் உங்களால தான்…” என்று புலம்ப,

Advertisement

“அப்ப என்னோட வர்றதுன்னா ஒழுங்கா வரணும். பொம்பளைப் பிள்ளை மாதிரியா நடந்துக்கிற. இந்த ஊருக்கு வந்து ரொம்பக் கெட்டு போய்ட….” என்று சொல்லியபடி கதிர் வண்டியை கிளப்ப, சந்தியா சிரிப்பை அடக்கியபடி அவன் பின்னே அமர்ந்தாள். 

வண்டி சைதாபேட் சிக்னலில் நிற்க, இவர்கள் அருகில் இன்னொரு பைக் வந்து நின்றது, அதில் இருந்தவர்கள் காதலர்கள் போல், ரொம்ப நெருக்கமாக இருந்தார்கள். பின்புறம் அமர்ந்திருந்த பெண் இருபக்கமும் கால் போட்டு அமர்ந்து, சுவற்றில் இருக்கும் பல்லி போல முன்புறம் இருந்தவனின் முதுகில் ஒட்டிக்கொண்டு அவன் காதில் எதையோ சொல்ல, அதைக் கேட்ட அந்த இளைஞன் சிரித்தான். 

நாம மட்டும் இப்படித் தள்ளி உட்கார்ந்து வர,  இவங்க மட்டும் இப்படி நெருக்கமா இருக்காங்களே என்று அவர்களைப் பார்த்த சந்தியாவுக்குப் பொறாமையாக இருந்தது.

 “பொது இடத்தில எப்படி நடந்துக்கிறதுன்னே தெரியலை….” என்று அவள் சத்தமாக முனுமுனுக்க, அதைக் கேட்ட அந்தக் காதலர்கள் திரும்பி சந்தியாவை முறைக்க,

“பேசாம இரு….” என்று கதிர் சந்தியாவை அடக்க, அவளா அடங்குவாள். 

“லவ் பண்ண வேற இடமே கிடைக்கலையா..?” என்று கேட்க, 

பக்கத்து வண்டியில் இருந்தவன் “உண்மையாவே இல்ல மேடம். நீங்க வேணா வேற இடம் பார்த்து தரீங்களா….” என்றான் கிண்டலாக.

சந்தியா மேலும் அவனிடம் எதோ சொல்லவர, ‘இவளை பேசவிட்டா இன்னைக்கு ஏழறைய கூட்டிடுவா…’ என்று நினைத்த கதிர், பின்னால் அமர்ந்திருந்த சந்தியாவின் கையைப் பிடித்து இழுத்து தன் இடுப்பை சுற்றி போட்டவன், அவளைக் கண்ணாடியில் பார்த்து ‘இப்ப சந்தோஷமா…’ என்று கேட்க, சந்தியாவும் பக்கத்தில் இருந்தவர்களை மறந்துவிட்டு கதிரை பார்த்து சந்தோஷமாக சிரித்தாள். 

சிக்னலில் இருந்து வண்டி சீறிப்பாய,  சந்தியா கதிரோடு மேலும் ஒண்டினாள். அவளுக்கு இன்று நடப்பதெல்லாம் கனவு போல் இருந்தது. நாம நிஜமாவே கதிர் மாமாவோட வண்டியில போறமா? என்று ஆராய்ச்சி செய்தபடியே அமர்ந்திருந்தாள்.

 வண்டியை கல்லூரி ஹாஸ்டல் வாசலில் நிறுத்தாமல், கதிர் சற்று தள்ளி நிறுத்த, சந்தியா வண்டியில் இருந்து இறங்கி “தேங்க்ஸ் மாமா. நான் போயிட்டு வரேன்…” என்றவள் கதிரை திரும்பி, திரும்பி பார்த்தபடி செல்ல,

 அவள் சிறிது தூரம் சென்றதும் கதிர் “சந்தியா….” என்று அழைத்தான். 

கதிர் அழைத்ததும் துள்ளி குதித்து ஓடி வந்தவள், “என்ன மாமா கூப்பிட்டீங்களா….” என்று ஆவலாக அவன் முகம் பார்க்க, கதிரின் முகம் கடுமையாக இருந்தது. 

“இனி எங்க வீட்டுக்கு வராத…” என்றான். 

சந்தியா அவன் சொன்னதைப் பெரிதாக எடுத்துகொள்ளவில்லை. அதனால் புன்னகையுடன் “நான் வருவேன்…” என்றாள்.

“நம்ம கல்யாணம் நடக்காது சந்தியா. வீணா மனசுல ஆசைய வளர்த்துக்காத…” என்றான் எங்கோ பார்த்துக்கொண்டு.

அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த சந்தியா “ஏன் மாமா?” என்றாள் எழும்பாத குரலில்.

“ஏன் நடக்காது? எதுக்கு நடக்காது? இப்படிக் காரணம் எல்லாம் கேட்காத. நடக்கதுன்னா நடக்காது அவ்வளவு தான். இத சொல்ல தான் உன்னைக் கூட்டிட்டு வந்தேன்…”

“எனக்குக் காரணம் தெரியனும். சின்ன வயசுல இருந்து உங்களைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு நினைச்சிட்டு இருந்தேன். உங்களுக்கும் விருப்பம் இருந்தது. இப்ப திடீர்னு வேண்டாம்னு சொன்னா… நான் என்ன நீங்க வச்சு விளையாடுற பொம்மையா? வேணும்னா வச்சிக்கவும், இல்லைன்னா தூக்கி போடவும்…” என்ற சந்தியாவின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது. 

“என்னால என்னோட அம்மா, அப்பா பேச்சை மீற முடியாது சந்தியா. ஏற்கனவே காவேரியால மனசு ஒடிஞ்சு இருக்கிறவங்களை, நானும் கஷ்டப்படுத்த முடியாது. அவங்க பெத்த ரெண்டு பிள்ளைகளுமே அவங்க பேச்சை கேட்கலைன்னா அவங்க ரொம்ப வருத்தப்படுவாங்க.” 

“முதல்ல எனக்கு ஒன்னு சொல்லுங்க மாமா. உங்களுக்கு அவங்க மட்டும் தான் முக்கியமா. நான் இல்லையா? உங்களுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை இல்லை. நீங்க என்னைக் காதலிக்கலை…”

“நீ என்னோட அத்தை பொண்ணு சந்தியா…. அதனால எனக்கு உன்னைப் பிடிக்கும். உன்னைத் தான் கட்டிகனும்னு நினைச்சேன். ஆனா, அது காதல் இல்லை சந்தியா. எங்க அம்மா, அப்பா உன்னை அவங்க மருமகள்னு சொன்னதுனால தான் அந்த ஆசை வந்துச்சு. அந்த இடத்தில நீ இல்லாம வேற பொண்ணு இருந்திருந்தா கூட… நான் அப்பவும் சரின்னு தான் சொல்லியிருப்பேன்…” என்று சந்தியாவின் தலையில் கதிர் நெருப்பை அள்ளி கொட்ட, சந்தியா துடித்துவிட்டாள்.

“அப்ப நீங்க என்னைக் காதலிக்கவே இல்லையா மாமா…” என்று சந்தியா அழுகையுடன் கேட்க, கதிர் இல்லை என்று அழுத்தமாகத் தலை அசைத்தான்.

 “நீங்க பொய் சொல்றீங்க மாமா. ஆனா ஏன் சொல்றீங்கன்னு தான் புரியலை. நான் காவேரி மதினிக்கு உதவி செஞ்சதுனாலயா…?” 

கதிர் இல்லை என்று தலை ஆட்ட,  அப்ப வேற என்ன காரணம் என்பது போல் சந்தியா பார்க்க,கதிர் மௌனத்தைத் தான் பதிலாகத் தந்தான். கண்ணீருடன் சிறிது நேரம் கதிரின் முகத்தையே பார்த்தபடி நின்ற சந்தியா 

“உங்களுக்கு என்னோட மனசு விளையாட்டா போய்டுச்சு இல்லை. நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து உங்களைத் தான் புருஷனா நினைச்சிருக்கேன். நீங்க என்னை விரும்பினாலும், விரும்பளைன்னாலும் நான் உங்களை விரும்புறேன் அது நிஜம். இனி நீங்களே வந்து என்னை விரும்புறேன்னு சொன்னாலும். நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்…” என்றவள் திரும்பி வேகமாக ஹாஸ்டலுக்குள் சென்றாள்.

கதிர் சந்தியா செல்வதையே பார்த்துக்கொண்டு இருந்தவன், அவள் உள்ளே சென்றதும் தன் வண்டியை எடுத்துக்கொண்டு சென்றான். சந்தியாவும், கதிரும் தங்கள் பேச்சிலேயே தீவிரமாக இருந்ததால், சித்தார்த் அங்கிருப்பதைக் கவனிக்கவில்லை. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!