Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kannaa Varuvaayaa

Kannaa Varuvaayaa 8 1

அத்தியாயம் – 8

சந்தியா சொல்லி முடித்ததும் சித்தார்த்தை பார்க்க அவன் “உங்க அப்பா உன்னை ஒன்னும் சொல்லலையா..?” என்றான்.

“ம்ம்! அவரும் கொஞ்ச நாள் என் மேல கோபமா தான் இருந்தார், இருந்தாலும் நான் அவர் பெண்ணில்லையா, அதனால கொஞ்ச நாள்ல சரி ஆகிவிட்டார்.” என்றாள். 

சித்தார்த்துக்கு காவேரி திருமணத்தை தவிர வேறு எதோ பிரச்சனை இரு குடும்பத்திற்கும் இடையே இருக்கும் என்றே தோன்றியது. கதிரே அதை பற்றி சந்தியாவிடம் சொல்லாமல் இருக்கும் போது, நாம் அவளைத் தூண்டி விட வேண்டாம். கதிரே பார்த்துக் கொள்ளட்டும் என்று நினைத்தான். 



Advertisement

அந்த வார ஞாயிற்றுக்கிழமை சந்தியா ஹாஸ்டலில் பாட்டு கேட்டபடி மெதுவாக அவள் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அவள் செல் அழைத்தது. எடுத்துப் பார்த்தால் கதிரின் எண். 

மனதிற்குள் பட்டாம்பூச்சி பறக்க, சந்தியா ஆவலாக ஃபோனை எடுக்க, நீ இவ்வளவு சந்தோஷம் எல்லாம் படாதே என்பது போல், அந்தப் பக்கம் அவள் ஆச்சியின் குரல் கேட்டது.

“சந்தியா நீ இங்க வரியா கண்ணு, நானும், தாத்தாவும் இன்னைக்கு ஊருக்கு போறோம்…” என்றார். 

Advertisement

“சரி வரேன் ஆச்சி…” என்று  போனை வைத்தவள், நிதானமாக கிளம்பிச் சென்றாள். அவள் கதிர் வீட்டுக்கு சென்று சேர்ந்த போது மணி மூன்று.

Advertisement

அவள் வருவாளென்று ஆச்சி சாப்பிடாமல் காத்துக்கொண்டிருக்க, சந்தியா சாப்பிட்டுத்தான் கிளம்பினேன் என்றாள். இங்கே சாப்பிடக்கூடாது என்று சாப்பிட்டுவிட்டு வந்திருக்கிறாள் என்று எல்லோருக்கும் புரிந்தது. போன முறை சந்தியா வந்த போது தான் சாப்பிடு என்று சொல்லவில்லை. அதனால் தானோ என்று லக்ஷ்மிக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது.

“உன்னைக் கவனிக்க உங்க ஆச்சி இருக்காங்கன்னு தான் சந்தியா. நான் பேசாம இருந்தேன்…” என்றார் லக்ஷ்மி அவராகவே,

“இருக்கட்டும் அத்தை, நம்ம வீடு தான் பசிச்சா நானே போட்டு சாப்பிட போறேன். நான் என்ன விருந்தாளியா கவனிக்க…” என்று சாதாரணமாகச் சொன்னவள், அவள் மாமா இருந்த அறைக்குள் சென்றாள். 

Advertisement

பெரியசாமிக்கு இப்போது பேச்சு நன்றாகவே வந்தது. அவர் யாரையாவது பிடித்துக்கொண்டு நடக்கும் அளவிற்கு முன்னேறி இருந்தார். தன் மாமாவின் முன்னேற்றம் சந்தியாவுக்கு மகிழ்ச்சியை தந்தது.  மாலை ஐந்து மணிக்கு சந்தியா ஹாஸ்டலுக்கு கிளம்பி சென்றாள். இதுவே வாடிக்கை ஆனது.

சந்தியாவின் வருகையை பெரியசாமி ஆவலாக எதிர்பார்ப்பதால், அவரைப் பார்ப்பதற்காக வாரத்தில் ஒருநாள் கதிர் வீட்டிற்கு வரும் சந்தியா, அங்கே சாப்பிடமாட்டாள், அதே போல் கதிரையும் கண்டுகொள்ளாமல் இருந்தாள். கதிரும் அமைதியாக ஒதுங்கி சென்றான். 

ஒரு நாள் லக்ஷ்மி இல்லாத போது சந்தியா தன் மாமாவிடம் கதிரை பற்றி முறையிட்டாள். 

“மாமா நான் சின்னதுல இருந்து கதிர் மாமாவை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு நினைச்சிருந்தேன். ஆனா கதிர் மாமா எங்க கல்யாணம் நடக்காதுன்னு சொல்றாங்க. நீங்களே நியாயத்தை சொல்லுங்க மாமா…” 

சந்தியா சொன்னதை கேட்ட பெரியசாமி திரும்பி கதிரை பார்க்க, அவன் அங்கிருந்த ஜன்னல் வழியாக வெளியே வெறித்தபடி இருந்தான். அவன் கண்கள் கலங்கி சிவந்து இருந்தது. அவன் மனதிற்குள் ஒரு எரிமலையை அடக்கி கொண்டிருக்கிறான், என்று தெரியும். மகனை பார்க்க பெரியசாமிக்கு வேதனையாக இருந்தது.

“நான் நியாயம் சொல்ற தகுதிய இழந்து ரொம்ப நாள் ஆச்சு மா…’’   என்றார் பெரியசாமி விரக்தியாக.

 சந்தியா அவரை புரியாமல் பார்க்க “காலம் எல்லாத்தையும் மாத்தும் சந்தியா. நாம நல்லதையே நினைப்போம். நீ சங்கடப்படாம இரு…” என்றார்.     

இப்படியே சிறிது நாட்கள் செல்ல, ஒரு நாள் சந்தியா கதிர் வீட்டுக்குச் சென்ற போது அங்கே காவேரியும், சுபாஷும் தங்கள் மகன் தருணுடன் வந்திருந்தனர்.

சந்தியாவும், காவேரியும் திடீரென்று ஒருவரை ஒருவர் பார்த்ததும் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தனர். சுபாஷ் சந்தியாவைப் பார்த்து “நல்லா இருக்கியா…” என்று கேட்க, சந்தியா நன்றாக இருப்பதாக தலையசைத்தவள், வழக்கம் போல் அவள் மாமாவோடு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பிவிட்டாள். 

கதிரையும், சந்தியாவையும் கவனித்த சுபாஷுக்கு எதோ சரியில்லை என்று புரிந்தது. கதிர் சுபாஷை பார்த்து வாங்க என்று கேட்டதோடு சரி, அதன்பிறகு அவனாக எதுவும் பேசவில்லை. சுபாஷாக எதாவது கேட்டால் பதில் சொன்னான். 

இப்படி இருப்பவனிடம் எப்படிப் பேசுவது? என்று யோசித்த சுபாஷ்  “சந்தியாவுக்கு எதுவும் தெரியாது. காலேஜுக்கு போறோம்னு சொல்லித்தான் காவேரி அவளைக் கூட்டிட்டு வந்தா….” என்றான். 

ஒரு வேளை கதிர் அதனால் தான் சந்தியா மீது கோபமாக இருக்கிறானோ என்று நினைத்து.

“தெரியும்….” என்று ஒரு வார்த்தையில் பதில் சொன்ன கதிர், மேலும் அங்கிருக்காமல் எழுந்து தன் அப்பாவின் அறைக்குள் சென்றுவிட்டான். அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த லக்ஷ்மி காவேரியை பார்த்து முறைத்தார். 

ஒரு பெருமூச்சுடன் எழுந்த சுபாஷ், பக்கத்து அறையில் கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த தன் மகனின் அருகில் சென்று படுத்தவன், தலைக்குப் பின் தன் இரண்டு கைகளையும் கொடுத்து, விட்டத்தை வெறித்தபடி இருந்தான். அறைக்குள் வந்த காவேரி, அவன் அருகில் சென்று அமர்ந்தாள்.

“என்ன ஒரு மாதிரி இருக்கீங்க…?”

“ம்ம் நம்ம விஷயத்துல தேவையில்லாம சந்தியாவை இழுத்து விட்டுட்டோமோன்னு தோணுது…” என்றான். அவன் சொன்னதைக் கேட்டு காவேரி மெளனமாக, 

“உங்க அண்ணன் நம்மக்கிட்ட சரியா பேசலைன்னா பரவாயில்லை. நாம தப்பு செஞ்சோம், அவருக்கு நம்ம மேல கோபம் இருக்கும். அது நியாயம் தான். ஆனா, சந்தியாவோட ஏன் பேசல? சந்தியாவுக்கு எதுவும் தெரியாதுன்னு சொன்னா, எனக்குத் தெரியும்னு சொல்றார். பிறகு இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வேற என்ன பிரச்சனை…”  என்று குழம்பியவன்,

“நீ இன்னும் கொஞ்ச நாள் இங்க தான இருப்ப, அவங்க ரெண்டு பேரும் எப்படி இருக்காங்கன்னு கவனிச்சு வை.” என்றான். 

காவேரியும் சரி என்றாள். சுபாஷ் அன்று இரவே விஜயவாடா திரும்பி விட, காவேரி தன் மகனுடன் அங்கிருந்தாள். திருமணத்திற்குப் பிறகு பிறந்த வீட்டிற்கு வரும் பெண்களுக்கு நடக்கும் சீராடல் எதையும் காவேரி இதுவரை அனுபவிக்கவில்லை. 

பெரியசாமிக்கு உடம்பு முடியாமல் போனதும் காவேரியும், சுபாஷும் வந்து பெரியசாமியை பார்த்தனர். அப்போது லக்ஷ்மி காவேரியிடம் “இனி நீ இங்கே வராத, உன்னைப் பார்த்தா, அவர் திரும்ப டென்ஷன் ஆவார். அது அவர் உடல் நிலைக்கு நல்லதில்லை…” என்று சொல்லி காவேரியை  அனுப்பிவிட்டார்.

அதன் பிறகு காவேரி இப்போது தான் வருகிறாள். காவேரியின் பிரசவத்தைக் கூட விஜயவாடாவிலேயே பார்த்துக்கொண்டனர். காவேரியின் மகனுக்கு இப்போது ஒன்பது மாதம். என்ன தான் புகுந்த வீட்டில் தங்க தட்டிலியே வைத்து தாங்கினாலும், பெண்களுக்குப் பிறந்த வீட்டில் கிடைக்கும் சுகம் தனி அல்லவா.

ஏனென்றால் அங்கே அம்மா என்று ஒருவர் இருப்பார். பிறந்த வீட்டிற்கு வரும் பெண்ணிற்கு வாய்க்கு ருசியாக வித, விதமாகச் சமைத்து பரிமாறி, அவள் குழந்தைகள் பின்னே ஓடி, அவர்களுக்குச் சோறு ஊட்டி, எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார். அதனால் பிறந்த வீட்டுக்கு வரும் பெண்கள் சந்தோஷமாக, நிம்மதியாக, தங்கள் பிள்ளைகள் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இருப்பார்கள்.

அதை எதிர்பார்த்து தான் காவேரியும் வந்திருந்தாள். சுபாஷும், அவன் பெற்றோரும் அவளை நன்றாகத் தான் பார்த்துக்கொண்டனர். இருந்தாலும் அவளுக்கு எதோ குறையாகவே இருந்தது. இத்தனை நாள் அவள் அப்பாவை நினைத்து தான் வர தயங்கினாள். இப்போது அவள் அப்பாவிற்கும் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதால், அவரையும் பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று வந்திருந்தாள். 

அப்படி வந்தவள் இரண்டு நாட்களிலேயே ஏன் இங்கு வந்தோம் என்று நினைக்க ஆரம்பித்து இருந்தாள். லக்ஷ்மிக்கு அவளோடு ஊட்கார்ந்து பேச நேரம் இல்லை. அவர் சமையலையும் கவனித்து, வீட்டு வேலையும் பார்த்து அதோடு பெரியசாமியையும் கவனித்துக் கொள்ளவேண்டும். பெரியசாமிக்கு காய்கறி சூப், பத்திய சமையல் என்று அவருக்கு வேலையின் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!