Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kannaa Varuvaayaa

Kannaa Varuvaayaa 8 2

கதிரை பற்றிக் கேட்கவே வேண்டாம். அவன் காலையில் எழுந்து அவன் அப்பாவுக்குப் பல் தேய்க்க, குளிக்க, உடை அணிய, சாப்பிட உதவிவிட்டுப் பின் தானும் கிளம்பி அலுவலகம் செல்பவன், இரவு எட்டு மணிக்கு மேல் தான் வீடு திரும்புவான். வீட்டிற்கு வந்ததும் அவன் அப்பாவோடு சிறிது நேரம் செலவழிப்பான். 

பிறகு இரவு உணவு அருந்திவிட்டு, அவன் மடி கணினியில் வேலை பார்க்க ஆரம்பித்துவிடுவான். நள்ளிரவு வரை வேலை பார்த்துவிட்டு தான் தூங்குவான். இதில் அவனுக்குத் தருணை கவனிக்க எல்லாம் நேரம் இல்லை. காவேரியின் மீது கோபம் இருந்த போதும், அவன் தருணை தள்ளிவைக்கவில்லை. குழந்தை தவழ்ந்து அவனிடம் வந்தால், சிறிது நேரம் தூக்கி வைத்திருப்பான். அவ்வளவு தான் அவனால் முடிந்தது. 

அதனால் இங்கே காவேரியே முழு நேரமும் தருணின் பின்னால் ஓட வேண்டியது இருந்தது. தருண் மிகவும் துரு துருப்பானவன். ஒரு இடத்தில் இரண்டு நிமிடங்களுக்கு மேல் இருக்கமாட்டான். அங்கிருந்தாலாவது சுபாஷும், அவன் பெற்றோரும் தருணை பார்த்துக்கொள்வார்கள். இங்கே அதற்கும் வழியில்லாமல் காவேரி அல்லாடினாள். 

பிறந்த வீட்டிற்கு வந்து சீராட முடியவில்லை என்ற ஏக்கம் ஒருபுறமும். தன் விருப்பத்திற்குத் திருமணம் செய்து கொண்டதால் தள்ளி வைக்கிறார்களோ என்று குற்ற உணர்ச்சி ஒருபுறமும் காவேரியின் மனதை போட்டு படுத்த, ஒரு நாள் வாய்விட்டே கேட்டுவிட்டாள்.



Advertisement

“ஏன் மா என்னோட நேரம் செலவு செய்ய மாட்றீங்க…? தருணை கூடக் கவனிக்கமாட்றீங்க, நாங்க வேண்டாத விருந்தாளியா…” என்றாள் அழுகையுடன்.

லக்ஷ்மிக்கு அவள் சொல்ல வருவது புரிந்தது. அவருக்கு அவள் மேல் அதிகமான கோபம் இருந்தது உண்மை தான். ஆனால் அவரால் அதைப் பிடித்து வைத்திருக்க முடியவில்லை. காவேரியின் மீது இருந்த கோபம், தருணை பார்த்ததும் காற்றில் கரைந்த கற்பூரமாய் மறைந்திருந்தது. அது தான் தாய் உள்ளம். 

“நீ செஞ்சதை அவ்வளவு சீக்கிரம் மறந்திட முடியுமா? நீ மட்டும் ஓடிப்போய்க் கல்யாணம் பண்ணி இருந்தா, காலம் முழுசும் இன்னாரோட பொண்ணு ஓடிப் போயிருச்சுன்னு தான் இருந்திருக்கும். எந்தச் சாமி புண்ணியமோ உங்க அண்ணன் நேரத்துக்கு வந்தான். இல்லைன்னா, உங்க அப்பா உயிரோட இருந்திருப்பாருன்னு நினைக்கிறியா, அதை நினைச்சாலே எனக்கு மனசெல்லாம் பதறுது.

Advertisement

உன் மேல வருத்தம் இன்னும் இருக்கு தான் இல்லைன்னு சொல்லமாட்டேன். ஆனா, அதனால உன்னைக் கவனிக்காம இருக்கலை. நீயே பார்க்கிற எனக்கு எவ்வளவு வேலை இருக்குன்னு, வேலைக்கு ஆள் வச்சு பார்க்கும் நிலையில நாம இப்ப இல்லை. 

Advertisement

எனக்கும் என் பேரனோட நேரம் செலவு பண்ணனும்னு ஆசை இருக்கு. ஆனா இப்ப முடியாது. முதல்ல உங்க அப்பாவுக்கு உடம்பு சரி ஆகட்டும்…” என்றவர் தொடர்ந்து, 

“தப்பு செஞ்ச உனக்கே, நான் உன்னோட பேசாம இருக்கிறது கோபம் வருதே, ஆனா, சந்தியா கிட்ட எத்தனை தடவை என்னோட கோபத்தைக் காமிச்சிருக்கேன் தெரியுமா, ஒரு முறை கூட, அவ எனக்கு இந்தக் கல்யாணத்தைப் பத்தி தெரியாதுன்னு வாய் திறந்து சொல்லலை. நான் எத்தனை முறை அவளை அலட்சிய படித்தியிருக்கேன், அப்பாவும் அவ அமைதியா தான் இருப்பா, அவ மட்டும் எனக்கு இந்தக் கல்யாணத்தை பத்தி தெரியாது, உங்க பொண்ணு என்னை ஏமாத்தி கூட்டிட்டு போனான்னு சொல்லியிருந்தா, எனக்குத் தான அசிங்கம். நான் என் மூஞ்சிய எங்க கொண்டு வச்சிக்கிறது சொல்லு…” என்றார் காவேரியை பார்த்து, காவேரி தலை குனிய,

“ரொம்ப நல்ல பொண்ணு சந்தியா, அவ உங்க அண்ணனை கல்யாணம் பண்ணி நம்ம வீட்டுக்கு வர, நாம கொடுத்து வச்சிருக்கணும்…” என்றவர், கதிர் வரும் நேரம் என்பதால், எழுந்து இரவு உணவு சமைக்கச் சமையல் அறைக்குச் சென்றார். 

Advertisement

கதிர் இன்று சற்று முன்பே வந்தவன், காவேரியும், அவன் அம்மாவும் பேசியது அனைத்தையும் வெளியே நின்று கேட்டுக் கொண்டுதான் இருந்தான். வீட்டிற்குள் வந்த கதிர் அவர்கள் பேசியது எதையும் கேட்டதாக காட்டிக்கொள்ளாமல், அமைதியாக அவன் வேலையைப்  பார்த்தான். 

இரவு கதிர் ஹால் சோபாவில் அமர்ந்து தன் மடி கணினியில் வேலை பார்க்க, காவேரி தன் மகனுக்குத் தரையில் அமர்ந்து  சோறு ஊட்டிக்கொண்டிருந்தாள்.  

தருணின் கவனமெல்லாம் சற்று தள்ளி இருந்த தண்ணீர் டம்ளரை கைபற்றுவதிலேயே இருந்தது. அவன் மெதுவாக நகர்ந்து அதை எடுக்க பார்க்க, காவேரி அவனுக்கு வேகமாக ஒரு வாய் உணவு கொடுத்துவிட்டு, தண்ணீரை அவன் கைகளுக்கு எட்டாத தூரத்தில் தள்ளி வைத்தாள்.

இப்படி அவனை ஏமாற்றி தான் அவனுக்கு உணவு ஊட்ட முடிந்தது. சிறிது நேரத்தில் தாயின் தந்திரத்தை புரிந்து கொண்ட தருண், அதன்பிறகு உணவு வாங்க வாயே திறக்கவில்லை.

தருணுடன் போராடிய காவேரிக்கு எரிச்சலாக இருந்தது. அந்த நேரம் பார்த்து தருண் டம்ளரை தட்டிவிட, அதில் இருந்த தண்ணீர் முழுவதும் கொட்டியது. காவேரி கோபத்தில் தருணின் முதுகில் பட்டென்று அடி வைத்து “சொன்ன பேச்சு கேட்கவே மாட்டேங்குது. இந்த வயசுலேயே எவ்வளவு பிடிவாதம்…” என்றாள்.

அடிவாங்கிய தருண் சத்தமாக அழுதான். லக்ஷ்மி வந்து அவனை தூக்கி கொண்டு சென்றார். கதிர் நிமிர்ந்து காவேரியை பார்த்து முறைத்தவன் “சின்ன குழந்தை அவனுக்கு என்ன விவரம் தெரியும். அவன் உன் பேச்சை கேட்கலைன்னு அடிக்கிறியே. உனக்கு நம்ம அப்பா ஊர்ல எவ்வளவு முக்கியமான மனுஷன்னு தெரியாது. நம்ம குடும்பத்தை பத்தி தெரியாது. அப்படி தெரிஞ்சிருந்தும் வீட்டுக்கு தெரியாம  கல்யாணம் பண்ண துனிஞ்சிருக்க, உன்னை என்ன பண்றது…?” என்றான் கோபமாக,

“இன்னும் எத்தனை நாளுக்கு அதையே சொல்லிக் காட்டுவீங்க? இப்ப அதனால என்ன ஆச்சு…?” என்று காவேரி அலட்சியமாக கேட்க,

“என்ன ஆச்சா, நீ ஏன் கேட்கமாட்ட, எப்பவும் நீ உன்னை பத்தி தான கவலைப்படுவ, உனக்கு யாரு எப்படி போனா என்ன?  நம்ம அப்பா இப்படி இருக்கிறது உன் கண்ணுக்கு தெரியலையா…”  என்றான் கதிர் பதிலுக்கு ஆத்திரமாக.

காவேரி “அவருக்கு வயசாகிடுச்சு, வயசான்னா இப்படி எதாவது வரத்தான் செய்யும். அதுக்கு நானா பொறுப்பு?” என்றாள்.     

கதிரின் கண்கள் கோபத்தில் சிவந்தது. “காவேரி மேடம் இப்ப ஒன்னு தெரிஞ்சிக்கொங்க அப்பா இப்படி ஆனதுக்கு காரணம் நீங்க தான். நீ என்னைக்கு வீட்டுக்கு தெரியாம கல்யாணம் செய்யப் பார்த்தியோ, அன்னையில இருந்து அவர் சுகர் மாத்திரை, பிரஷர் மாத்திரை எல்லாம் போடாம இருந்திருக்கார். நீ அவருக்கு வாழற ஆசையே இல்லாம பண்ணிட்ட…” என்றான் குரல் அடைக்க,

காவேரிக்கும் இந்த விஷயம் அதிர்ச்சி தான். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. “காதலிக்கிறது அவ்வளவு தப்பாண்ணே, அப்பா ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தார்…”

“காதலிக்கிறது தப்பில்லை. ஆனா, நீ அதை வீட்ல சொல்லாம மறைச்சு, ஓடிப்போய் கல்யாணம் பண்ண பார்த்தது தான் தப்பு. அவர் கிட்ட நீ உன் காதலை சொல்லி அதை அவர் மறுத்திருந்தா, நீ வேற முடிவுக்கு போறதுல ஒரு நியாயம் இருக்கு. ஆனா நீ  அவருக்கு அப்படி ஒரு வாய்ப்பே குடுக்கலையே…”

“நம்ம அப்பா நம்மை விட்டு எங்காவது வெளியூர் சுத்தி பார்க்க போய் பார்த்திருக்கியா. இல்லை அவருக்குன்னு தனியா எதாவது செஞ்சு பார்த்திருக்கியா. அவரோட உலகமே நம்ம குடும்பம் தான். அப்படிப்பட்டவருக்கு தன் பொண்ணு தனக்கு, தெரியாம கல்யாணம் பண்ண நினைச்சது எவ்வளவு அதிர்ச்சியா இருந்திருக்கும் .”  

“அவர் நினைச்சிருந்தா உன்னை கட்டாயப்படுத்தி வேற யாருக்காவது கல்யாணம் செஞ்சு வச்சிருக்க முடியும். அவர் அந்த நிலையிலும் உன்னை பத்தித்தான் யோசிச்சார். ஆனா, நீ அவரைப்பத்தி யோசிச்சியா காவேரி…” என்று கதிர் கேட்டதும்,  

காவேரி “நான் செஞ்சது தப்பு தாண்ணே…” என்றவள், தன் தந்தை இருந்த அறைக்கு சென்று, அவர் அருகில் உட்கார்ந்து அழுதாள். பெரியசாமி நன்றாக தூங்கிக்கொண்டிருந்தார். திடீரென்று காவேரி வந்து அழுததும், அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

“ஏன்ப்பா இப்படி பண்ணீங்க, ஏன் மாத்திரை சாப்பிடாம இருந்தீங்க…”? நான் தான தப்பு செஞ்சேன். அம்மா, அண்ணன் எல்லாம் என்ன பண்ணாங்க…”? என்றாள் அழுகையுடன்,

பெரியசாமி “சரி விடு, அது முடிஞ்சு போனது. இப்ப எதுக்கு அதை பத்தி பேசிட்டு, நான் தான் நல்லா ஆகிட்டேனே….” என்றவர், லக்ஷ்மியிடம் இருந்த தருணை பார்த்து, வா என்றார்.

லக்ஷ்மி தருணை தூக்கி சென்று கட்டிலில் அவரின் அருகே உட்கார வைக்க, பெரியசாமி பேரனோடு விளையாட ஆரம்பித்தார். அவர் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை பார்த்து மற்றவர்கள் முகமும் மலர்ந்தது.    அன்றைக்கு பிறகு வீட்டில் பழைய கலகலப்பு திரும்பியது. முன்பு அவர்கள் ஊரில் இருந்த அளவு இல்லையென்றாலும், ஓரளவுக்கு எல்லோரின் மன இறுக்கமும் தளர்ந்திருந்தது. 

காவேரியும் தன் தவறை உணர்ந்தது போல் நடந்துகொண்டாள். அவள் சமையலை பார்த்துக்கொள்ள, லக்ஷ்மிக்கு பேரனோடு செலவு செய்ய நேரம் கிடைத்தது.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!