Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kannaa Varuvaayaa

KV 3 2

இவர்கள் இருவரும்   அருகில் சென்றதும் “நீங்க ஃபர்ஸ்ட் இயர் தான. உங்க பேரு என்ன?” என்று சற்று மிரட்டலாக அங்கிருந்த மாணவன் ஒருவன் கேட்க, சந்தியா, சித்தார்த் என்று இருவரும் தங்கள் பெயர்களைச் சொன்னதும், அங்கிருந்த ஒரு பெண் “நாங்க உங்க சீனியர்ஸ் தெரியும் இல்ல, கான்டீன் போய் எங்க எல்லோருக்கும் சமோசா, பிஸ்கட், ஜூஸ் எல்லாம் வாங்கிட்டு வாங்க…” என்றாள் அதிகாரமாக.

 சந்தியா மகிழ்ச்சியுடன் சரி என்று தலையாட்ட, சித்தார்த்துக்கு எரிச்சலாக இருந்தது. அவன் “இங்க ராக்கிங் இல்லைன்னு சொன்னாங்களே…” என்றான். 

அது நாங்க அப்படித் தான் வெளிய சொல்லி வச்சிருக்கோம்…” என்று ஒரு பெண் சொல்ல, “இதெல்லாம் ஒரு ராக்கிங்கா பிரதர், போங்க சீக்கிரம் போய் வாங்கிட்டு வந்து கொடுத்திட்டு, க்ளாஸ்க்கு போங்க…” என்றான் இன்னொருவன். 



Advertisement

சந்தியாவும், சித்தார்த்தும் காண்டீன் நோக்கி சென்றனர்.

நாம் ஏன் இவங்க சொல்றது செய்யணும், நாம போய் சார் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணலாம்…” என்று சித்தார்த் சொல்,

மெடிக்கல் காலேஜ்ல படிக்கிறோம். இதெல்லாம் கூட இல்லைன்னா எப்படி. அவங்க நம்மள தப்பாவா எதுவும் செய்யச் சொன்னாங்க. சாப்பிட தான கேட்டாங்க, இதுக்குப் போய் முகத்தைத் தூக்கி வச்சிக்கிட்டு இருக்க இன்னைக்கு அவங்க செய்யச் சொன்னதை நாளைக்கு நாமளும் நம்ம ஜூனியர்ஸ் கிட்ட கேட்கலாம் வா…”  என்று சந்தியா சித்தார்த்தை சமாதானம் செய்து அழைத்துச் சென்றாள்.

Advertisement

சந்தியாவும், சித்தார்த்தும் சீனியர் மாணவர்கள் கேட்டதையெல்லாம் வாங்கி வந்து கொடுக்க, அதில் இருந்த சாக்லேட்டை பார்த்துவிட்டு “ஹே இது என்ன சாக்லேட், நாங்க சொல்லவே இல்லை…” என்று  அந்த சீனியர் பெண்களில் ஒருத்தி சொல்ல 

Advertisement

அது நானா தான் வாங்கிட்டு வந்தேன்.  முதல் முதல்ல கொடுக்கும் போது ஸ்வீட் இல்லைன்னா எப்படி? அதுக்குத் தான்…” என்றாள் சந்தியா. 

“so sweet girl….” என்றாள் அங்கிருந்த மற்றொருத்தி.

 “ஸ்வீட் எடு கொண்டாடுன்னு சொல்ற…” என்று சீனியர் மாணவன் ஒருவன் சொல்ல, சந்தியா புன்னகைத்தாள். 

Advertisement

அவளின் வெகுளியான பேச்சு சீனியர் மாணவர்களைக் கவர்ந்துவிட, அவர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். அதோடு அன்றிலிருந்து அவளோடு நடப்பாகவும் பழகினார்கள். சீனியர் மாணவர்களின் சப்போர்ட் இருந்ததனால், ஹாஸ்டலிலும் சந்தியாவிடம் யாரும் வம்பிழுக்கவில்லை. அதனால் சந்தியாவிற்குக் கல்லூரி வாழ்க்கை நன்றாகவே சென்றது. 

நடுவில் கல்லூரியில் விழா வர, அதில் முதல் வருட மாணவர்களை நடனம் ஆட சொல்லியிருந்தனர். சந்தியாவும் விருப்பத்துடன் நடனத்திற்கு தன் பெயரை கொடுக்க, கிராமத்து பொண்ணுக்கு வெஸ்டெர்ன் டான்ஸ் வருமா, இதை எப்படிச் சந்தியாவிடம் சொல்வது என்று மற்ற மாணவர்கள் நினைத்தனர்.

சந்தியா தன் வகுப்பில் அனைவரிடமும் நன்றாகப் பழகினாள். அதனால் அவளின் மனது வருந்தும்படி எப்படிச் சொல்வது என்று தெரியாமல். ‘சரி ஆடட்டும் பார்ப்போம். சரியா ஆடலைன்னு சொல்லி அனுப்பிடலாம்…’ என்று நினைத்தனர். 

அவர்களுக்குத் தெரியாது இல்லையா சந்தியா எப்படி ஆடுவாள் என்று. நடன பயிற்சி தொடங்கியது, மற்றவர்களை விடச் சந்தியா நன்றாக ஆட, நல்லவேளை இவளை எதுவும் சொல்லவில்லை என்று மற்ற மாணவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். 

சித்தார்த்துக்கு சந்தியாவைப் பார்க்கும் போது ஆச்சர்யமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் சந்தியா அவனுக்குப் புதுமையாகத் தெரிந்தாள்.  அவன் இருக்கும் குடும்பச் சூழல், அவனுக்கு மனிதர்களைப் பணம், பதவி, தகுதி போன்றவற்றை வைத்து தான் பழகச் சொல்லித் தந்திருந்தது. 

ஆனால், சந்தியாவிடம் தான் அவன் அன்பால் எதையும் சாதிக்கலாம் என்று புரிந்து கொண்டான்.  கல்லூரியில் முதல் செமஸ்டர் முடிந்து, அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் தொடங்கியிருந்தது. அப்போது ஒரு நாள் கல்லூரிக்கு வந்த சித்தார்த் சந்தியாவின் அருகில் அமர்ந்தவன் “தோழியா என் காதலியா, யாரடி நீ என் கண்ணே….” என்று அடிக்கடி பாடிக்கொண்டிருந்தான். 

அதைக் கேட்ட சந்தியாவிற்கு முதல் நாள் கல்லூரியில் தன்னை விட்டுச் சென்ற தந்தை சொன்னது தான் நினைவுக்கு வந்தது. 

நம்ம குடும்பத்தில நடந்த பிரச்சனை எல்லாம் உனக்குத் தெரியும். அதனால நாம எல்லோரும் எவ்வளவு கஷ்டப்படுறோம்னும் உனக்கு நல்லாவே தெரியும். திரும்பி அதுமாதிரி ஒரு பிரச்சனை வந்துட்டா, படிச்சு முடிக்கிற வழிய பாரு. இனி திரும்ப அது மாதிரி ஒரு விஷயம் நம்ம குடும்பத்தில நடந்தா, அதைத் தாங்கும் சக்தி யாருக்கும் இல்லை…” என்று சொல்லிவிட்டுச் சென்றிருந்தார். 

அதை நினைத்த சந்தியாவுக்குக் கண்கள் கலங்க, அவள் திரும்பி சித்தார்த்தின் முகத்தைப் பார்த்தாள். அவள் எதற்கு இப்படிப் பார்க்கிறாள் என்று தெரியாமல், சித்தார்த் என்ன என்பது போல் தன் புருவத்தை உயர்த்தினான். 

எப்பொழுதும் சித்தார்த்திடம் நன்றாகப் பேசும் சந்தியா அன்று ஏனோ அமைதியாக இருந்தாள். காலை வகுப்பு இடைவேளையில் சித்தார்த் சந்தியாவை டீ குடிக்க அழைத்ததற்கும் வரவில்லை என்று சொல்லிவிட்டாள். 

சித்தார்த்தும் அவன் மட்டும்  மற்ற நண்பர்களோடு சேர்ந்து காண்டீன் சென்றான். மதிய உணவு வேளையில் ஒரு பெரிய கும்பலே ஒன்றாக அமர்ந்து தான் சாப்பிடுவார்கள். அன்றும் அது போல் அமர்ந்திருந்த போது, சித்தார்த் தான் வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை சந்தியாவுக்குக் கொடுத்துவிட்டு, அவளுடையதை எடுக்க, 

அவனிடம் இருந்து அதைப் பறித்த சந்தியா “பரவாயில்லை நான் என்னோடதே சாப்பிட்டுக்கிறேன்…” என்றாள். 

சித்தார்த் அவளை ஆச்சர்யமாகப் பார்த்தான். கல்லூரி தொடங்கிய இந்த ஆறு மாத காலமாகத் தினமும் அவன் தான் அவளுக்கு மதிய உணவு கொண்டு வருகிறான். அதை நான்றாக முழுங்கிவிட்டு அதில் ஆயிரத்தெட்டு நொட்டை சொல்லுவாள். இன்றைக்கு என்ன ஆச்சு? என்று குழம்பியபடி உணவு அருந்தியவன், சந்தியாவை பார்க்க, அவள் அருகில் இருந்த அனுவுடன் பேசியபடி உணவருந்தி கொண்டிருந்தாள். ஆனால் எப்போதும் அவள் முகத்தில் இருக்கும் மலர்ச்சி இல்லை. 

மதிய உணவு முடிந்து வந்த சந்தியா சித்தார்த்தின் அருகில் அமராமல், அனுவின் அருகில் சென்று அமர்ந்துகொண்டாள். அதைக் கவனித்த சித்தார்த்துக்குக் கோபம் வந்தது. ‘என்ன ஆச்சு நேத்து நைட் பேசும் போது கூட நல்லா தான பேசினா, காலையில கூட வழக்கம் போலக் குட் மார்னிங் மெசேஜ் அனுப்பினாளே…’ என்று குழம்பியபடி அமர்ந்திருந்தான். 

வகுப்பு முடிந்து பேராசிரியர் வெளியே சென்றதும் அடுத்த ஆசிரியர் வகுப்புக்கு வரும் இடைவேளையில் சித்தார்த் மேஜையில் தலை சாய்த்து “தோழியா….என் காதலியா யாரடி நீ பெண்ணே” என்ற பாட்டை வாய்க்குள் முனங்கியவன், சட்டென்று எழுந்து அமர்ந்து சந்தியாவை பார்த்தான். 

காலையில் இந்தப் பாட்டைப் பாடியதில் இருந்து தான் சந்தியா தன்னுடன் சரியாகப் பேசவில்லை என்று அவனுக்குத் தோன்றியது. அது அவன் கோபத்தை மேலும் அதிகமாக்க, முகம் இறுகி அமர்ந்திருந்தான்.

மாலை வகுப்பு முடிந்து சந்தியா அனுவுடன் வெளியே வந்த போது, “நான் சந்தியாவுடன் கொஞ்சம் தனியா பேசணும்.” என்று சித்தார்த் அனுவிடம் சொல்ல அவளும் சரி என்று இருவரிடமும் விடைபெற்று சென்றாள். 

சந்தியா அமைதியாக நடக்க, சித்தார்த்தும் அவளுடன் நடந்தவன், சற்று தள்ளி வந்ததும் “நீ என்னைத் தப்பா நினைச்சிட்டே இல்ல, உனக்கு என் மேல இவ்வளவு தான் நம்பிக்கையா….” என்று கேட்டதும், சந்தியா நின்று சித்தார்த்தின் முகம் பார்க்க, 

நான் காலையில காலேஜ் வர்ற வழியில, அந்தப் பாட்டுக்  கேட்டேன், அதுல இருந்து அதையே பாடிட்டு இருந்தேன். உன்னை நினைச்சு பாடினேன்னு நினைச்சிட்ட இல்ல. உனக்கு என் கிட்ட எதாவது பிடிக்கலைன்னா நேரடியா சொல்லணும். இப்படிப் பேசாம இருப்பியா..?” சித்தார்த் வருத்தமாகச் சொல்லிவிட்டு வேகமாக நடக்க, சந்தியாவின் முகம் மலர்ந்தது. 

அவன் பின்னே வேகமாகச் சென்ற சந்தியா சித்த்தார்த்தின் கை  பிடித்து நிறுத்தினாள். இதுவரை சந்தியாவோ, சித்தார்த்தோ ஒருவரை ஒருவர் தொட்டு பேசியதே இல்லை. சித்தார்த் சந்தியா பிடித்திருந்த தன் கையையே பார்க்க,

அவள் “நீ என்னைப் பார்த்து தான் அப்படிப் பாடிட்டேன்னு தப்பா நினைச்சிட்டேன். நான் அப்படி நினைச்சிருக்கக் கூடாது. ஒரு நிமிஷம் ஒரு நல்ல ஃப்ரண்ட இழந்திடுவேனோன்ற பயத்தில தான் அப்படி நடந்துக்கிட்டேன். சாரி டா….” என்றாள். 

சந்தியா சொன்னதைக் கேட்டு சித்தார்த் திடுகிட்டான். தான் உண்மையிலேயே அவளைக் காதலித்திருந்தால், அவள் தன்னை விட்டு ஒதுங்கியிருப்பாள் என்று தானே சந்தியா சொல்கிறாள். அவளோடு பேசாமல் தன்னால் இருக்க முடியுமா, என்று நினைத்தவனுக்கு, நல்லவேளை நாம் அவளைக் காதலிக்கவில்லை என்றே எண்ணம் தோன்றியது. அவனுக்கு ஏனோ சந்தியாவிடம் அது போல் தோன்றவில்லை. அவள் என்றைக்கும் அவனுக்கு நல்ல தோழி தான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!