Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kannaa Varuvaayaa

KV 4 1

  அத்தியாயம் – 4

 கதிரை பார்த்துவிட்டு கல்லூரிக்கு வந்த சந்தியா பாடத்தில் கவனமாக இருக்க, சித்தார்த்தும் அப்போதைக்கு அவளிடம் எதுவும் கேட்கவில்லை. அவனுக்குச் சந்தியா கதிரை காதலிக்கிறாள் என்று புரிந்தது. ஏதோ குடும்பத்துக்குள் பிரச்சனை, அவளே சொல்லட்டும் என்று நினைத்தான்.

 இப்படியே சிறிது நாட்கள் சென்றது. சந்தியா வாரம் ஒரு நாள் சென்று கதிரை பார்த்துவிட்டு வருவது மட்டும் தொடர்ந்தது. சித்தார்த் அதைக் கண்டும் காணாமல் இருந்தான். ஒரு வார நாளில், கல்லூரி விடுமுறை என்பதால் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து  தி. நகரை சுற்றிவிட்டு, ஒரு உயர்தர உணவகத்திற்கு மதியம் சாப்பிடச்  சென்றனர். 

உணவருந்திவிட்டு வெளியே வரும்போது கதிர் அவனுடன் பணிபுரிபவர்களுடன் பேசிக்கொண்டே உள்ளே வருவதைப் பார்த்த சந்தியா அருகில் இருந்த அனுவிடம் “நீங்க எல்லாம் போங்க, எனக்குத் தெரிஞ்சவங்க இங்க இருக்காங்க, நான் அவங்களோட பேசிட்டு வரேன்…” என்றவள் திரும்பி ஹோட்டலின் உள்ளே சென்றாள். 



Advertisement

அனு மட்டும் தனியே வருவதைப் பார்த்த சித்தார்த் அவளிடம் சந்தியா எங்கே என்று கேட்க “அவளுக்குத் தெரிஞ்சவங்க வந்திருக்காங்களாம். பேசிட்டு வரேன், நீங்க போங்கன்னு சொன்னா….” என்றாள். 

“சரி நீங்க எல்லாம் போங்க, நான் அவளோட வரேன்…” என்ற சித்தார்த்தும் சந்தியாவைத் தேடி ஹோட்டலின் உள்ளே சென்றான்.

சந்தியா அங்கே ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தாள். மதிய நேரம் என்பதால் ஹோட்டல் மிகவும் கூட்டமாக இருந்தது. உட்கார கூட இடம் இல்லை. சந்தியாவின் பார்வை செல்லும் திசையில் பார்த்த சித்தார்த், அங்கே கதிர் அமர்ந்திருப்பதைப் பார்த்து, ‘ஓ… அவங்க மாமாவை பார்க்க தான் இங்க வந்தாளா…’ என்று நினைத்தவன் அவளுக்காக வெளியே சென்று காத்திருந்தான். 

Advertisement

ஒரு மணி நேரம் சென்று கதிர் அவன் நண்பர்களுடன் வெளியே வர சந்தியாவும் அவன் பின்னே வெளியே வந்தாள். சித்தார்த் கதிரையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன் முகம் கடினமாக இருந்தது. அவன் அருகில் வந்தவன் “நீங்க சரியாவே சாப்பிடலை கதிர்…” என்றதற்கு,

Advertisement

 “பசியில்லை…” என்று சொல்லிக்கொண்டே கதிர் சித்தார்த்தை கடந்து சென்றான். 

கதிர் சென்றதும் சித்தார்த் சந்தியாவின் முகம் பார்க்க அவள் கண்கள் கலங்கி இருந்தது. 

“உங்க மாமா உன்னைப் பார்க்கலையா…?” 

Advertisement

“பார்த்தாங்க. ஆனா, பேசலை…” 

“ஏன்…?” 

ரொம்பச் சின்னக் கேள்வி ஆனால் சந்தியாவால் தான் பதில் சொல்ல முடியவில்லை. அதனால் அவள் மெளனமாக நடக்க சித்தார்த் அவளுடன் இணைந்து நடந்தான். 

“நீ உங்க கதிர் மாமாவை லவ் பண்றியா…?” என்று சித்தார்த் கேட்டதும், சந்தியா ஆமாம் என்பது போல் தலை அசைத்தாள். 

“அப்ப வேற என்ன பிரச்சனை? உங்க மாமா உன்னை லவ் பண்ணலையா….?” என்ற சித்தார்த் மேற்கொண்டு நகராமல் அதே இடத்தில் நிற்க சந்தியாவும் வேறு வழியில்லாமல் நின்றாள். ஆனால் பதில் சொல்லவில்லை. 

சந்தியா இப்படி அமைதியாக இருப்பது சித்தார்த்துக்கு எரிச்சலாக இருந்தது. அதோடு அவனுக்குச் சந்தியா கால் கடுக்க ஒரு மணி நேரம் நின்றும், கதிர் அவளைக் கண்டுகொள்ளாமல் சென்றது வேறு கோபம். அதைச் சந்தியாவிடம் காட்டினான். 

“இந்தக் காலத்தில் போய் மாமா பையன், அத்தை பொண்ணு, காதல், கல்யாணம் இதெல்லாம் கேட்கவே சுத்த மடத்தனமா இல்ல. நீ டாக்டருக்கு படிக்கிற சந்தியா…” என்று சித்தார்த் சொல்லிக்கொண்டிருந்த போதே அவனைக் கை காட்டி தடுத்த சந்தியா “நான் சென்னை மெடிக்கல் காலேஜ்ல சேர்ந்ததே கதிர் மாமா இங்க இருக்காங்கன்னு தான். மத்தபடி நீ நினைக்கிற மாதிரி பெரிய டாக்டர் ஆகணும்னு இல்லை…” என்றாள் அழுத்தமாக. 

அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த சித்தார்த், காலேஜ்ல முதல் மார்க் வாங்கும் பெண்ணா இவள் என்றே நினைத்தான். சந்தியா வேறு காரணத்திற்காக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த போதும், படிப்பில் என்றும் பின்தங்கியது இல்லை. அவளுக்கு இயல்பாகவே நன்றாகப் படிப்பு வந்தது. 

“நீ தான் மாமா மாமான்னு உறுகுற அவர் உன்னைக் கண்டுக்காம போயிட்டார்…” என்றான் சித்தார்த் குறையாத எரிச்சலுடன்.

“அது எப்பவுமே அப்படித் தான், மனசுல இருக்கிறத வெளிய காட்டிக்காது. ஆனா. எனக்குத் தெரியும் அதுக்கு நான்னா ரொம்பப் பிடிக்கும். இப்பவும் என்னோட பேசாம போனதுக்கு அது மனசுக்குள்ள வருத்தப்படத் தான் செய்யும். அது அப்படி வருத்தப்படக் கூடாதுன்னு தான், நான் இத்தனை நாள் அதை மறைஞ்சு நின்னு பார்த்தேன்…” என்றாள்.

சந்தியா சொன்னதைக் கேட்ட சித்தார்த்துக்கு மேலும் கதிரை பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் எழுந்தது. அவன் சந்தியாவிடம் “நீ இப்படி உறுகுற அளவுக்கு உன் மாமாக்கிட்ட என்ன இருக்கு சொல்லு, நானும் தெரிஞ்சிக்கிறேன்.” என்றான் ஆர்வமாக 

சந்தியாவுக்குக் கதிரை பற்றிப் பேசுவது என்றால் சக்கரை பொங்கல் சாப்பிடுவது போல். அதுவும் விருப்பபட்டு சித்தார்த் அவனாகவே வழிய வந்து மாட்டும் போது அவள் விடுவாளா? சந்தியாவின் சிறு வயதில் ஆரம்பித்து இரண்டு வருடம் முன்பு திருவிழாவின் போது கதிர் அவளுக்காகச் சண்டை போட்டது வரை சினிமா படம் போல் சுவாரசியமாகச் சந்தியா சொல்ல, சொல்ல, சித்தார்த் முகத்தில் புன்னகையுடன் அவள் சொல்வதைக் கேட்டிருந்தான். 

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே ரயிலில் ஏறி சந்தியா இறங்க வேண்டிய இடத்துக்கு வந்திருந்தனர். சந்தியா “சரி நான் கிளம்புறேன், நாளைக்குக் காலேஜ்ல பார்ப்போம்…” என்று சொல்லிவிட்டு செல்ல. 

சித்தார்த் அவளைத் தடுத்து “என்ன பாதியிலேயே விட்டுட்டு போற முழுசா சொல்லு. உன்கிட்ட பக்கம் பக்கமா காதல் வசனம் பேசாம தன்னோட கண்ணியமான நடத்தையினாலேயே உன்னை அவர் பின்னாடி சுத்த வச்சிருக்கார் பாரு. ஐ லைக் யுவர் கதிர் மாமா…”  என்று மனதிலிருந்து சொன்னவன் 

“அப்படி இருந்த ரெண்டு பேரும், இப்ப ஏன் பேசாம இருக்கீங்க?” என்ற சித்தார்த் சந்தியாவின் முகம் பார்க்க 

தன் மாமாவை பற்றிப் பேசும் வரை முழு நிலவாக ஒளி வீசியவளின் முகம் இப்போது சுருங்கி  “அதைப் பத்தி மட்டும் கேட்காத சித்து ப்ளீஸ்…” என்றவள் வேகமாக அங்கிருந்து சென்றாள். 

சித்தார்த் அவள் சொல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவன், ‘சம்திங் சீரியஸ்…’  என்று தனக்குள் சொல்லியபடி அங்கிருந்து சென்றான்.

மறுநாள் கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு அனாடமி வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு மாணவி பயத்தில் மயங்கி விழ. மற்ற மாணவிகள் அவளைத் தூக்கி கொண்டு வந்து வெளியே அமர வைத்தனர். 

அந்த இடமே பரபரப்பாக இருந்தது. அப்போது அங்கே வந்த சித்தார்த்தும் சந்தியாவும் என்ன ஆனது? என்று விசாரிக்க. மற்ற மாணவர்கள் நடந்ததைச் சொல்ல. சந்தியா விழுந்து, விழுந்து சிரித்தாள். 

சித்தார்த் அவளை அதட்டிவிட்டு, அந்தப் பெண்ணுக்குத் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிய வைத்தவன். அந்தப் பெண்ணிடம்

“உன் பெயர் என்ன?” என்று கேட்க,

“ஸ்ரீஜா…” என்றாள்.

அவளைப் பார்த்ததும் அவள் மலையாளி என்று நன்றாகத் தெரிந்தது. அளவான உயரத்தில், பாலில் சந்தனம் கலந்த நிறத்தில், இடைவரை இருந்த கூந்தலை எண்ணெய் தேய்த்து குளித்து மயில் தோகை போல் விரித்துவிட்டு. வட்ட முகத்தில் பெரிய கருவிழிகளில் மை தீட்டி, நெற்றியில் சந்தனம் இட்டு பார்க்க கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தாள்.

சந்தியா அவளிடம் “எலும்புக் கூடு பார்த்து பயப்படுறியே. இன்னும் நமக்கு எவ்வளோ இருக்கு பார்க்க படிக்க. அப்ப என்ன பண்ணுவ?” என்று கேட்டதும்,

ஸ்ரீஜாவின் முகம் கலவரமடைய, “எனக்கு இதெல்லாம் பார்த்தா பயமா இருக்கு. உங்களுக்கு இல்லையா…” என்று ஸ்ரீஜா சந்தியாவைப் பார்த்து அப்பாவியாகக் கேட்க,

“நான் வந்த அன்னைக்கே இவனைப் பார்த்துட்டேன், இவனும் அந்த எலும்புக் கூடு மாதிரி தான் இருந்தான். அதனால பயமா இல்லை…” சந்தியா சித்தார்த்தை காட்டி விளையாட்டாகச் சொல்ல,

அதை உண்மை என்று நம்பிய ஸ்ரீஜா, அப்போது தான் அருகில் நின்ற சித்தார்த்தை தன் பெரிய கருவிழிகளை உருட்டி நன்றாகப் பார்த்தாள். உயரமாக அதற்கேற்ற உடல் எடையுடன் இருந்தவனைப் பார்த்தவள் சந்தியாவிடம் “இவங்க ஒன்னும் அவ்வளவு ஒல்லியா இல்லையே….” என்று சந்தேகமாக இழுக்க,

“அது இப்போ. போன வருஷம் ரொம்ப ஒல்லியா தான் இருந்தான். என்னோட ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டு தேறிட்டான்.” என்ற சந்தியா “அப்ப இவன் நல்லா இருக்கான்னு சொல்றியா…” என்று ஸ்ரீஜாவை வம்பிழுக்க. அதைப் புரிந்து கொள்ளாத ஸ்ரீஜா ஆமாம் என்றாள். 

சந்தியா அந்த சிரிப்பை அடக்க. அவளைப் பார்த்து முறைத்த சித்தார்த் ஸ்ரீஜாவிடம் திரும்பி “டாக்டருக்கு படிக்க வந்துட்டு க்ளாஸ்க்கு பயப்படலாமா. நாம மனித உடலை பத்தி நல்லா தெரிஞ்சிக்கிட்டா தான் ட்ரீட்மென்ட் பண்ண முடியும். நாம இதையெல்லாம் பார்த்துப் படிக்கிறது, மத்தவங்க உயிரை காப்பாத்தன்னு நினைச்சு பாரு. உனக்கு பயமா இருக்காது.” என்றவன் தொடர்ந்து,

“மருத்துவர்களை தான் கடவுளுக்கு சமமா நினைப்பாங்க. அப்படி உயர்ந்த இடத்தை தரும் படிப்பு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும். நாம தான் தைரியமா இருக்கணும்…” என்று சித்தார்த் ஸ்ரீஜாவுக்குப் புரியும்படி விளக்க, அதை கேட்டு அவள் முகம் தெளிவானது. 

ஸ்ரீஜா கேரளாவை சேர்ந்தவள் என்றாலும் பிறந்து வளர்ந்தது சென்னையில் தான். ஸ்ரீஜா இயல்பிலேயே பயந்த ஸ்வாபம் கொண்டவள். அவள் பெற்றோருக்கு தங்கள் பெண் மருத்துவர் ஆக வேண்டும் என்று ஆசை. அதனால். மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருந்தாள். 

சித்தார்த்தும், சந்தியாவும் அவளுக்கு தைரியம் சொல்லிவிட்டு அவர்கள் வகுப்பிற்கு சென்றனர். அதன் பிறகு வந்த அனாடமி வகுப்புகளை சித்தார்த் சொன்ன வார்த்தைகளை மனதிற்குள் நினைத்து பார்த்துத் தைரியமாக எதிர்கொண்டாள் ஸ்ரீஜா. 

மறுவாரம் வழக்கம் போல் சந்தியா கதிரை பார்க்க சென்றவள், ரொம்ப நேரமாக அவனுக்காகக் காத்திருந்தும் அவன் வரவில்லை என்று அவன் அலுவலக வாசலையே பார்த்து கொண்டிருந்தாள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!