Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kannaa Varuvaayaa

KV 4 2

ரொம்ப நேரம் ஆகியும் அவன் வரவில்லை என்றதும் ஒருவேளை அவனுக்கு உடம்பு சரியில்லையோ. அல்லது வீட்டில் வேறு யாருக்கும் உடம்பு சரியில்லையோ என்று கவலைபட்டவள் கல்லூரிக்கு செல்ல திரும்ப. அங்கே கதிர் எதிரில் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். 

கதிரை பார்த்ததும் சந்தியாவின் முகம் மலர. “மாமா…” என்று அழைத்தபடி கதிரின் அருகே செல்ல,

 அவளை ஒரு அந்நிய பார்வை பார்த்த கதிர் “எல்லாத்தையும் நாசம் பண்ணிட்டு. இப்ப எதுக்குடி என் பின்னாடி சுத்துற. நீ வார வாரம் இங்க வந்து நிக்கிறது எனக்குத் தெரியும். எந்தத் தைரியத்துல இங்க வர்ற…?” என்று கதிர் கடுமையான குரலில் கேட்க,சந்தியாவின் கண்கள் கண்ணீரால் நிறைந்தது. 

“சாரி மாமா…” என்றாள் மெதுவாக.



Advertisement

“நீ மன்னிக்கிற மாதிரி தப்பை பண்ணல சந்தியா. நான் நிம்மதியா இருக்கனும்னு நினைச்சா, இனி என்னைப் பார்க்க இங்க வராத. உங்க அப்பா, அம்மா உன்னை நம்பி இங்க படிக்க அனுப்பியிருக்காங்க அவங்க நம்பிகையையாவது காப்பாத்து…” என்ற கதிர் அங்கிருந்து வேகமாகச் செல்ல, சந்தியா அவன் செல்வதையே கண்களில் நீருடன் பார்த்துக்கொண்டிருந்தாள். 

தன் மாமா கதிரை பார்த்துவிட்டு வரும் சந்தியா எப்போதும் சோகமாகத் தான் இருப்பாள். ஆனால் இந்த முறை முன்னேற்றமாக அழுது வடிந்தாள். கண்களில் கண்ணீர் நிறைவதும், அதைத் தன் துப்பட்டாவில் துடைப்பதுமாக இருந்தாள். காரணம் புரியாமல் அனு சித்தார்த்தை பார்க்க. அவன் முகம் கடுமையாக இருந்தது. 

“இவளுக்கு இதே வேலையா போச்சு. இந்த முறை என்ன ஆச்சுன்னு தெரியலை….” என்று மனதிற்குள் திட்டியவன், சந்தியாவிடம் ஒன்றும் கேட்கவில்லை அமைதியாக இருந்தான்.

Advertisement

மாலை வரை சித்தார்த் எதுவும் கேட்கவில்லை என்றதும், சந்தியா அவளாகவே சித்தார்த்திடம் “டேய். இங்க ஒருத்தி அழுதுட்டு இருக்கேன். நீ என்னன்னு கேட்கமாட்டியா…” என்று மிரட்டுவது போல் பேச.

Advertisement

“உன்னோட தெய்வீக காதலன் இன்னைக்கு வரலையா….” சித்தார்த் நக்கலடித்தான். 

சந்தியா அவனைப் பார்த்து முறைத்துவிட்டு அங்கிருந்து செல்ல. சித்தார்த் அவளைத் தடுத்து அருகில் இருந்த பெஞ்சில் அமர வைத்து தானும் அவள் அருகில் அமர்ந்துகொண்டான்.

“நீ அழுதுட்டே இருந்தா கடுப்பா இருக்காதா. சொல்லு என்ன ஆச்சு?” என்றான். 

Advertisement

“எங்க மாமா இன்னைக்கு என்னை அங்க பார்த்துட்டாங்க. இனிமே அங்க என்னை வர கூடாதுன்னு சொல்லிட்டாங்க…” என்று சந்தியா சோகமாகச் சொல்ல,

“ஹப்பா. இனிமே வாரம் ஒரு நாள் உன்னோட அழுது வடியிற முகத்தைப் பார்க்க வேண்டாம்…”  என்று சித்தார்த் போலியாகச் சந்தோஷப்பட, சந்தியா அவனை முறைத்தாள். 

“சரி உங்க மாமா உன்னை அவரோட ஆபீஸுக்கு தான் வர வேண்டாம்னு சொன்னார். வீட்டுக்கு வர கூடாதுன்னு சொல்லலையே. நீ அவரோட வீட்டுக்கு போ….” என்று சித்தார்த் யோசனை சொல்ல, சந்தியாவின் முகம் வாடியது.

“வீட்டுக்கு போனா அத்தை, மாமா எல்லாம் இருப்பாங்க சித்து. அத்தை என்னைத் திட்டுவாங்களே…” என்று சந்தியா பயப்பட,

சந்தியாவின் முகத்தைத் தீவிரமாக ஆராய்ந்த சித்தார்த் “சந்தியா நீ என்ன தப்பு பண்ண…? எதுக்கு இப்படிப் பயப்படுற…? உன்னோட நடவடிக்கைய பார்த்தா. நீ தான் எதோ தப்புப் பண்ணியிருக்க மாதிரி இருக்கு. நான் இத்தனை நாள் கதிர் மேல தான் தப்புன்னு நினைச்சிட்டு இருந்தேன்.” என்றதும், சந்தியா தலை குனிந்தாள். 

“சொல்லு சந்தியா இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?” என்ற சித்தார்த் அவளின் முகம் பார்க்க.

“கதிர் மாமாவோட தங்கச்சி காவேரி லவ் பண்ணாங்க. அவங்க வீட்டுக்கு தெரியாம ஓடிப்போய்க் கல்யாணம் பண்ணிக்கப்  பார்த்தாங்க. நான் அவங்களுக்கு உதவி செஞ்சேன்.” என்று சந்தியா சொன்னதைக் கேட்ட சித்தார்த்துக்கே அதிர்ச்சியாக இருந்தது.

சந்தியா சொன்னதில் இருந்து அவன் கதிரை பற்றி நன்றாகப் புரிந்து கொண்டிருந்தான். கதிர் நேர்தியான வாழ்க்கை முறையைப் பின்பற்றுபவன், மற்றவர்கள் தன்னைப் பார்த்துத் தேவையில்லாமல் எதுவும் பேசிவிடக் கூடாது என்று கவனமாக இருப்பவன், இந்த இள வயதிலேயே, தனக்கென்று ஒரு மரியாதையை ஏற்படுத்திக் கொண்டவன், அப்படிப்பட்டவனுக்குத் தன் தங்கை ஓடிப்போய்த் திருமணம் செய்து கொண்டால், அது எவ்வளவு பெரிய தலை குனிவாக இருந்திருக்கும். 

அதுவும் கிராமத்தில் இப்படி நடந்தால் கேட்கவே வேண்டாம். அவனுடைய குடும்பத்தைப் பற்றி எல்லோரும் கண்டிப்பாகத் தவறாகப் பேசி இருப்பார்கள். அதுவும் கதிரின் அப்பா அந்தக் கிராமத்தில் முக்கிய மனிதராக இருப்பவர், அவருக்கு எவ்வளவு அவமானமாக இருந்திருக்கும் என்று நகரத்தில் வளர்ந்த சித்தார்த்கே புரிந்தது. அது ஏன் சந்தியாவுக்குப் புரியவில்லை? என்று நினைத்தான். 

சித்தார்த் நினைப்பது சந்தியாவுக்குப் புரியாமல் இல்லை. ஆனால் அவள் அப்படி ஏன் செய்தாள் என்று எந்த விளக்கமும் சொல்லவில்லை. அமைதியாக இருந்தாள்.  அவளின் அமைதியை பார்த்து சித்தார்த்க்கு ஆத்திரம் வர,

 “உன்னை அப்படியே இழுத்து நாலு அறைவிட்டா என்னன்னு தோணுது….” என்றான் கோபமாக.

“ஏற்கனவே எல்லார்கிட்டயும் அடி வாங்கிட்டேன். நீ ஒருத்தன் தான் பாக்கி…” என்று சந்தியா சாதாரணமாகச் சொல்ல.

“கதிரும் உன்னை அடிச்சாரா….” என்று சித்தார்த் வருத்தத்துடன் கேட்க.

 சந்தியா “இல்லை. என்னை அடிச்சிருந்தா கூடப் பரவாயில்லை. அன்னையிலிருந்து என்னோட பேசவே இல்லை…” என்றாள் விரக்தியாக.

சித்தார்த்க்கு சந்தியாவைப் பார்க்கவும் பாவமாக இருந்தது. அவளும் அப்போது சின்னப் பெண் தானே. அவளுக்கு அவ்வளவு விவரம் இருந்திருக்காது. காவேரி பண்ணதுக்கு பாவம் மாட்டினது சந்தியா தான். கண்டிப்பா எல்லோரும் சேர்ந்து நல்லா மொத்தியிருப்பாங்க. நாமும் அவளை நோகடிக்க வேண்டாம் என்று அவன் மனம் தன் தோழியின் சார்பாகவும் வாதிட்டது. 

“சரி விடு சந்தியா. நீ செஞ்சது தப்பு தான் இல்லைன்னு சொல்லலை. ஆனா நீ உதவி பண்ணலைன்னா மட்டும் காவேரி ஓடிப்போகாமையா இருந்திருக்கப் போறாங்க….” என்று சித்தார்த் அவளைச் சமாதனம் செய்வதற்காகச் சொன்னது, உண்மையிலேயே சந்தியாவுக்கு ஆறுதலாக இருந்தது. 

கதிருக்கு சந்தியா எப்போதிலிருந்து அவனைப் பார்க்க வருகிறாள் என்று தெரியாது. அந்த ஐந்து மாடி கட்டிடம் முழுவதுமே அவர்கள் அலுவலகம் தான். அவன் இருக்கை இருப்பது ஐந்தாம் தளத்தில். ஒரு நாள் தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தவனை, அவன் நண்பன் வேலையில் எதோ சந்தேகம் என்று அழைக்க.

கதிர் அவன் நண்பனின் இருக்கைக்குச் சென்றவன், அங்கிருந்த ஜன்னல் வழியாகச் சந்தியா யாரோ ஒருவனோடு நின்று பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தான். 

தூரத்தில் இருந்து பார்த்ததால் அவனால் எதையும் சரியாகக் கவனிக்க முடியவில்லை. ஆனால், சந்தியாவின் கண்கள் அடிக்கடி தன் அலுவலகத்தைப் பார்ப்பதை வைத்து, அவளுக்கு இது தன் அலுவலகம் என்று தெரிந்து தான் வந்திருக்கிறாள் என்று புரிந்து கொண்டான்.

கதிர் இறங்கி சென்று பார்த்த போது சந்தியா சென்றுவிட்டாள். ஆனால் அவளோடு பேசிக்கொண்டிருந்தவன் மட்டும் நின்று கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அவனும் வண்டியில் சென்றுவிட்டான்.

அன்றிலிருந்து தினமுமே அலுவலகம் வந்ததும், அவன் நண்பனோடு பேசுவது போல் ஜன்னல் அருகே நின்று சந்தியா இருக்கிறாளா என்று பார்ப்பான். கண்ணாடி இருந்ததால் சந்தியா அங்கிருந்து பார்த்தாலும் கதிர் நிற்பது தெரியாது. 

சந்தியாவை திரும்ப அவன் மறுவாரம் தான் பார்க்க முடிந்தது. தான் அலுவலகம் வரும் போது. அவள் எதிரில் இருக்கும் கடையில் நின்று பார்க்கிறாள் என்று புரிந்து கொண்டான். 

சிறிது நாட்கள் சென்று அவளை ஒரு நாள் ஓட்டலில் சந்தித்தான். அன்றும் அப்படித்தான் ரொம்ப நேரம் நின்று கொண்டிருந்தாள். நண்பர்களோடு வந்திருந்ததால் எதுவும் பேசமுடியவில்லை.

அவர்களோடு சிறிது தூரம் சென்றவன், அவர்களிடம் பொய்யாக எதோ காரணம் சொல்லிவிட்டு சந்தியாவிடம் இனி என்னைப் பார்க்க வராதே என்று சொல்ல தேடி வந்தான்.  அவன் வந்த போது, அன்று தன் அலுவலகத்தின் அருகே பார்த்தவனிடம் சந்தியா ‘நான் என் மாமாவுக்காக தான் இந்த ஊருக்கு வந்தேன்…’ என்று சொன்னது காதில் விழுந்தது. 

அவன் சந்தியாவுடன் மருத்துவ கல்லூரியில் படிப்பவனாக இருக்கும் என்று புரிந்து கொண்டவன்,  சித்தாதார்த் இருந்ததால் எதுவும் பேசாமல் திரும்பி சென்றான்.  

ஆனால், அவள் மீண்டும், மீண்டும் அலுவலகத்தின் முன்பு வந்து நிற்பது கோபத்தை தூண்ட, இன்று அவளை திட்டிவிட்டான். அவள் அழுது கொண்டே செல்வதை பார்த்தவனுக்கு வேதனையாக இருந்தது.  இரவு தூங்க முடியாமல் தவித்தவன், இவளுக்கு இதெல்லாம் தேவையா. எப்படி ராணி மாதிரி இருந்தா என்று நினைத்தவனுடைய நினைவு கடந்த காலத்திற்குச் சென்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!