Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Maiyam Kollum Puyal

Maiyam Kollum Puyal 10 1

அத்தியாயம் 10

என்னுள் நிலையான

பிம்பமாய் பதிந்து கிடக்கிறது



Advertisement

உந்தன் முக வடிவம்!!!

அடுத்த நாள் காலை யுக்தாவின் அலுவலகத்துக்கு செல்வதற்காக கிளம்பிக் கொண்டிருந்தான் யுவன். சுஜி காலேஜ்க்கு கிளம்பிச் சென்றவுடன் யுவனுக்கும் ஈஸ்வரனுக்கும் உணவு பரிமாறினாள் சுந்தரி. 

Advertisement

Advertisement

அப்போது “யுவன், பாஸ்போர்ட் எல்லாம் சரியா இருக்கு தானே? எந்த பிரச்சனையும் வராதே? அதுல எல்லா டீட்டேயில்ஸும் சரியா இருக்கான்னு ஒரு தடவை பாத்துக்கோ டா. நம்ம  பக்கம் எல்லாம் சரியா இருக்கணும். சரியா இல்லைன்னா இப்பவே மாத்திறலாம்”, என்றார் ஈஸ்வரன். 

“அதெல்லாம் சரியா தான் பா இருக்கு. ஆனா பாஸ்போர்ட் இன்னும் எதுக்கும் யூஸ் ஆகாதுன்னு நினைக்கிறேன்”, என்று யுவன் சொன்னதும் “என்ன டா சொல்ற?”, என்று குழப்பமாக கேட்டாள் சுந்தரி. 

Advertisement

“நான் பாரின் போகலை மா”, என்றான் யுவன். 

“உனக்கு என்ன பைத்தியமா டா? நேத்துல இருந்து நான் உன்னை நினைச்சு கனவு கண்டுட்டு இருக்கேன். நீ என்னடான்னா அசால்ட்டா போகலைன்னு சொல்ற?”

“பொறுமையா இரு சுந்தரி. அவன் பக்கமும் என்ன யோசிக்கிறான்னு நாம கேக்கணும்ல?”, என்று ஈஸ்வரன் சொன்னதும் “என்னங்க பொறுமையா இருக்குறது? அவன் சொல்றது எனக்கு திக்குன்னு இருக்கு. இது அவன் எதிர் காலங்க”, என்றாள் சுந்தரி. 

“உன் ஆதங்கம் எனக்கு புரியுது. ஆனா நீ சொல்றது எல்லாம் அவனுக்கும் புரியும் தானே? அவன் இவ்வளவு பெரிய முடிவு எடுத்துருக்கான்னா அதுக்கு ஏதாவது காரணம் இருக்கும். அது என்னன்னு முதல்ல கேப்போம்”, என்று சுந்தரியிடம் சொன்ன ஈஸ்வரன் மகன் புறம் திரும்பி “என்ன ஆச்சு யுவன்? நேத்து கூட போகணும்னு தானே சொன்ன? உன்னோட கனவும் அது தானே டா?”, என்று கேட்டார். 

“அது வந்துப்பா… யுக்தா… “, என்று தடுமாறினான் யுவன். தான் சொல்வதை பெற்றவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்று பயமாக இருந்தது. 

“யுக்தாவுக்கு என்ன?”

“அவ பாவம் பா. அவளுக்கு துணையா நான் இங்க இருக்கணும்”

“நினைச்சேன், அந்த யுக்தா பிசாசு தான் இவனை பிடிச்சு ஆட்டும்னு. எப்ப பாத்தாலும் யுக்தா யுக்தா… சே எனக்கு எரிச்சலா வருது”, என்று கத்தினாள் சுந்தரி. 

“அம்மா, இன்னைல இருந்து அவளை அவ அப்பா ஆஃபிஸ்க்கு வரச் சொல்லிருக்கார். அங்க என்ன வில்லங்கம் இருக்கும்னு தெரியலை. அதனால அவளுக்கு துணைக்கு போறேன். இப்ப மட்டும் இல்லை. எப்பவுமே“, என்று யுவன் சொன்னதும் அவனை முறைத்தாள் சுந்தரி. 

“யுவன், உன் அம்மா கோப படுறது சரின்னு இப்ப எனக்கும் தோணுது. அவ பாவம் தான். ஆனா இது உன் எதிர்காலம்”, என்றார் ஈஸ்வரன். 

“இல்லைப்பா, அவளை எப்படியோ போகட்டும்னு இங்க தனியா விட்டுட்டு என்னால அங்க போக முடியாது. அப்படி போனாலும் அங்க என்னால நிம்மதியா இருக்க முடியாது. அவளுக்கும் எனக்கும் என்ன பந்தம்னு தெரியலைப்பா. ஆனா அவ எனக்கு ஸ்பெஷல். எப்ப அவளைப் பாத்தேனோ அப்ப இருந்து என்னோட யோசனை எல்லாம் அவளை டிபண்ட் பண்ணி தான் இருக்குது”

“பாத்தீங்களாங்க, இவன் சொல்றதை. அவ யாருங்க இவனுக்கு? இவன் கூட எத்தனை பொண்ணுங்க படிச்சாங்க? அவங்களை எல்லாம் இவன் கடந்து வரலையா? இந்த லூசை மட்டும் எதுக்கு தலைல தூக்கி வச்சிட்டு இப்படி அறிவு கெட்ட தனமா பண்ணுறான்?”, என்று சுந்தரி கேட்டதும் அவளை முறைத்த யுவன் “அம்மா அவளை லூசுன்னு சொல்லாத சொல்லிட்டேன்”, என்றான். 

“லூசை லூசுன்னு தான் சொல்லுவேன். என் மகனோட எதிர்காலத்தையே கேள்வி குறி ஆக்கிட்டாளே பாவி”

“சுந்தரி, கொஞ்சம் அமைதியா இரு. யுவன் நீ எங்கயோ வெளிய போக கிளம்பினல்ல. போயிட்டு வா பா. அப்புறம் பேசிக்கலாம்”, என்று சொல்லி இப்போதைக்கு இருவரையும் அமைதிப் படுத்த முயன்றார் ஈஸ்வரன். 

“சரிப்பா, நான் யுக்தாவோட ஆஃபிஸ்க்கு தான் போறேன்”, என்றவன் பெற்றவர்கள் கேள்வி கேட்பதற்கு முன் தன்னுடைய வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான். 

“இப்ப என்ன பண்ண போறீங்க?”, என்று கோபமாக கணவரிடம் கேட்டாள் சுந்தரி.

“இதுல நாம பண்ண என்ன இருக்கு? இது அவன் வாழ்க்கை, அவன் எதிர்காலம். அவன் ஆசைப் பட்டதை செய்ய அவனுக்கு உரிமை இருக்கு சுந்தரி”

“என்ன இப்படி சொல்றீங்க? இது அவனோட எதிர்காலம். அவன் கனவுங்க இது”

“ஏன் அவன் எதிர்காலத்துக்கு என்ன? உன் மத்த பிள்ளைங்க எல்லாம் இங்க தானே இருக்காங்க? அப்ப இவனுக்கு மட்டும் இங்க வேலை கிடைக்காதா? அவனோட கனவை அவளுக்காக விட்டுக் கொடுக்குறான்னா அதுக்காக அவன் எவ்வளவு யோசிச்சிருப்பான்? அதுக்கு மேல நாம என்ன சொல்ல முடியும்? யுவனுக்கு இங்க இருக்க தான் விருப்பம்னா நான் அதுக்கு தான் ஆதரவு கொடுப்பேன் சுந்தரி”

“ஐயோ அவனுக்கு பிடிச்சிருந்தா கூட பரவால்லைங்க. ஆனா அவன் அந்த பொண்ணுக்காக இப்படி பண்ணுறானே. அந்த அளவுக்கு அந்த பொண்ணு இவனுக்கு யாருங்க?”

“அதை உன் மகன் தான் சொல்லணும். ஆனா எனக்கு தெரிஞ்ச வரைக்கும் உன் மகன் அவளை எப்பவுமே விட்டுக் கொடுக்க மாட்டான்”

“அப்படின்னா? என்ன சொல்ல வறீங்க?”

“யுவன் இன்னும் யுக்தா பத்தி யோசிக்கலை சுந்தரி. அவ அவனுக்கு யாரு? அவங்களுக்கு நடுவுல என்ன இருக்குனு அவன் இன்னும் புரிஞ்சிக்கலை. முழுசா அவளைப் பத்தி யோசிச்சா தான் அவன் தெளிவா ஆவான்”

“ஐயோ எனக்கு தலையே வெடிக்குது. இதுக்கு எப்ப தான் தீர்வு கிடைக்கும்? எத்தனை நாள் தான் இவன் யுக்தா யுக்தான்னு சுத்திக்கிட்டு இருப்பான்?”

“ஒரு வேளை அந்த பொண்ணு மேல இவனை விட இன்னொரு ஆளுக்கு உரிமை இருக்குனு தெரிய வர வரைக்கும் இருக்கலாம்”

“என்னங்க சொல்றீங்க? புரியுற மாதிரி சொல்ல மாட்டீங்களா?”

“அவளை நல்லா பாத்துக்கணும்னும், அது அவனால மட்டும் தான் முடியும்னும் யுவன் முழுசா நம்புறான். அதை செய்யவும் செய்வான். யுக்தாவுக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் உன் மகன் இப்படி தான் இருப்பான். அந்த பொண்ணுக்கு இவனை விட இன்னொரு ஆள் முக்கியம்னு இவனுக்கு புரியுற வரைக்கும் இவன் இப்படி தான் இருப்பான்”, என்று சொல்லி விட்டு எழுந்து சென்றார் ஈஸ்வரன். சுந்தரிக்கோ அந்த யுக்தாவை மகன் வாழ்வை விட்டு விரட்ட வேண்டும் என்ற வெறியே எழுந்தது. 

உடனே தாமரையின்] எண்ணுக்கு அழைத்து விட்டாள். தாமரை தான் எடுப்பாள் என்று எண்ணி தான் அழைத்தாள். அதனால் அந்த பக்கம் போன் எடுக்கப் பட்டதும் படபடவென்று பொரிய ஆரம்பித்து விட்டாள். 

“நீங்க பண்ணுறது நல்லா இல்லை தாமரை. இப்படி அநியாயமா என் மகன் வாழ்க்கையை கெடுத்துட்டீங்களே? உங்க மகளை நானும் பாவம்னு தான் நினைச்சேன். அதுக்காக என் மகனையே அவளுக்காக தூக்கி கொடுக்க முடியுமா? பெரிய கம்பெனில இருந்து அவனை வேலைக்கு கூப்பிட்டுருக்காங்க. அதுவும் பாரீன்ல இருந்து. ஆனா யுவன் என்னடான்னா உங்க மகளை விட்டு போக மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறான். நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது. இனிமே உங்க மக என் மகன் வாழ்க்கைல வரக் கூடாது. அவன் கண்டிப்பா பாரின் போகணும். அது நடக்கணும்னா உங்க மகளுக்கு நீங்க வேற மாப்பிள்ளை பாத்து கட்டி வைங்க. அவளுக்கு ஏதாவது ஒரு அரை லூசு மாப்பிள்ளையா கிடைப்பான். எனக்கு என் மகன் வேணும்”, என்று பொரிந்து விட்டு போனை வைத்தாள் சுந்தரி.

 

தாமரை குளிக்க சென்றதால் செல்வம் தான் அவளது போனை எடுத்தார். அவள் சொன்னதை எல்லாம் கேட்டு “தாமரை உன்னோட பிளான் இது தானா? உன் மகளையும் சொத்தையும் காப்பாத்த தான் அந்த பையன் கூட உன் மகளை பழக விட்டியா? நான் இருக்குற வரைக்கும் இதை நடக்கவே விட மாட்டேன்”, என்று மனதில் நினைத்துக் கொண்டார். பின் அந்த அழைப்பை டெலிட் செய்து விட்டு போனை இருந்த இடத்திலே வைத்து விட்டார். அதனால் சுந்தரி அழைத்தது தாமரைக்கு தெரியாமலே போனது. 

சிறிது நேரத்தில் யுக்தா அலுவலகம் செல்ல கிளம்பி கீழே வந்தாள். அவளைக் கண்டதும் “என்ன யுக்தா கிளம்பலாமா?”, என்று கேட்டார் செல்வம். 

அவள் தலையை ஆட்டியதும் தாமரையை ஒரு பார்வை பார்த்து விட்டு மகளை அழைத்துக் கொண்டு சென்றார் செல்வம். 

அவர்கள் சென்றதும் அவர்கள் கிளம்பிய விஷயத்தை யுவனுக்கு அழைத்துச் சொன்னாள் தாமரை. “கவலைப்படாதீங்க ஆண்ட்டி. நான் ஆபீஸ் வந்துட்டேன். இனி எல்லாம் நான் பாத்துக்குறேன்”, என்றான் யுவன். 

“உங்க வீட்ல ஒண்ணும் சொல்லலையா பா?”

“அதெல்லாம் நான் பேசிட்டேன் ஆண்ட்டி. நீங்க யுக்தாவைப் பத்தி இனி கவலைப்படாதீங்க”, என்று சொல்லி போனை வைத்தான். 

யுக்தாவும் செல்வமும் காரில் செல்லும் போது அவர்களுக்குள் மௌனமே நிலவியது. “இவர் ஏன் மத்த அப்பா மாதிரி இல்லை?”, என்று மனதில் நினைத்த படி வந்தாள் யுக்தா. 

செல்வமோ யுக்தா பெயரில் இருக்கும் சொத்தை எப்படி தன் வழிக்கு கொண்டு வர முடியும்  என்ற யோசனையில் இருந்தார். இருவரும் அலுவலகத்துக்கு வந்ததும் அவர்களை வரவேற்றது யுவன் தான். அவனை கண்டு முகம் மலர்ந்த யுக்தா “யுவன்”, என்று ஒரு நொடி ஆர்ப்பரித்து விட்டு பயத்துடன் செல்வத்தைப் பார்த்தாள். 

அவனைக் கண்ட செல்வம் “இவன் என்ன இங்க?”, என்ற யோசனையோடு காரில் இருந்து இறங்கினார். அவர்களை நோக்கி வந்தான் யுவன். அவனைக் கண்டு செல்வம் எதுவோ சொல்ல வருவதற்குள் அவர்கள் அருகில் வந்த யுவன் “ஹாய் அங்கிள்”, என்று அவருக்கே வணக்கம் வைத்தான். 

அவர் அவனை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்க “என்ன ரெண்டு பேரும் அசையாம நிக்குறீங்க? நல்ல நேரம் முடியுறதுக்குள்ள ஆஃபிஸ்குள்ள போகலாம், வாங்க”, என்றான் யுவன். 

“என்னது நீ உள்ள வரியா? யாரு டா நீ? உனக்கு இங்க என்ன வேலை?”, என்று அவனிடம் கேட்டார் செல்வம். 

“நானா? நான் யாருன்னு நீங்க தான் சொல்லணும். ஐ மீன் நீங்க தான் எனக்கு போஸ்டிங் கொடுக்க போறீங்க? என்ன வேலையா இருந்தாலும் பரவால்ல அங்கிள்”

“நீயெல்லாம் என் கம்பெனில வேலை பாக்க போறியா? கனவு கூட காணாத. என் கம்பெனில பி. ஏ வேலை பாக்க கூட உனக்கு தகுதி இல்லை”, என்று செல்வம் சொன்னதும் “இது நல்லா இருக்கே. இன்னைல இருந்து முதலாளி மேடம்க்கு நான் தான் பி. ஏ”, என்று புன்னகையுடன் சொன்ன யுவன் “இனி யுக்தாவுக்கு நிழலா நான் இருப்பேன்”, என்று அழுத்தி சொன்னான். 

அவன் தைரியத்தை வியப்பாக பார்த்த செல்வம் “அதுக்கு நான் சம்மதிச்சா தானே? இப்பவே உன்னை வெளிய விரட்டுவேன்”, என்றார். 

“சந்தோஷம். எனக்கு மட்டும் உங்க கூட எல்லாம் வேலை பாக்கணும்னு ஆசையா என்ன? என் யுக்தாவுக்காக தான் இங்க வந்தேன். அவ இப்ப எல்லா பொறுப்பையும் எடுக்கணும்னா அதுக்கு நான் இங்க இருக்கணும். இல்லைன்னா யுக்தாவும் ஆஃபிஸ்க்கு வர மாட்டா”, என்றவன் அவள் புறம் திரும்பி “உங்க அப்பா கிட்ட சொல்லு யுக்தா. நான் இருக்கணுமா? போகனுமா?”, என்று கேட்டான். 

“நீ இருக்கணும்”, என்று சொன்ன யுக்தா செல்வம் புறம் திரும்பி “யுவன் இங்க இருந்தா தான் நானும் உள்ள வருவேன்”, என்று தாமரை சொன்ன படியே சொன்னாள். என்ன தான் தாமரை சொன்ன படி அவள் சொன்னாலும் அவளுக்குமே யுவன் அங்கு வந்தது, அவன் தன்னுடனே இருக்க போவது அதிக மகிழ்ச்சியை தந்தது. அதனால் தைரியத்தைக் கூட்டிச் சொல்லி விட்டாள். 

“உன்னை எப்ப என்ன பண்ணணும்னு எனக்கு தெரியும் டா”, என்று மனதுக்குள் கருவிக் கொண்ட செல்வம் யுக்தாவை பார்த்து “வா”, என்ற சொல்லோடு முன்னே நடந்தார். அவர் பின்னே புன்னகையுடன் இருவரும் சென்றார்கள். 

அன்றே யுக்தாவை எம். டி சீட்டில் அமர வைத்தார் செல்வம். அடுத்து வந்த நாட்களில் சொன்னது போலவே அவளுக்கு நிழலாக இருந்தான் யுவன். எவ்வளவு தான் பிளான் பண்ணினாலும் யுக்தாவிடம் இருந்து செல்வத்தால் சொத்தை எழுதி வாங்க முடியவில்லை. 

“என் பெர்மிசன் இல்லாம நீ எதுலயும் கையெழுத்து போடக் கூடாது”, என்று யுவன் சொல்லியதால் யுக்தா அதில் தெளிவாக இருந்தாள். யுவன் அவளை நன்கு பார்த்துக் கொண்டான். கம்பெனி பொறுப்புகளை அவளுக்கு தெளிவாக சொல்லிக் கொடுத்தான். 

கம்பெனி விஷயமாக எங்கு செல்வதாக இருந்தாலும் அவனுடனே செல்வதால் இருவருக்குள்ளும் நெருக்கமும் அதிகரித்தது. ஆனால் அது என்ன உறவு என்றெல்லாம் இருவரும் யோசிக்க வில்லை. ஆனால் யுக்தா அதிகப் படியாக அவனை சார்ந்திருக்க ஆரம்பித்தாள். அதன் விளைவு என்னவாகும்? யுவன் இல்லையென்றால் தான் என்னவாவோம் என்றெல்லாம் அவள் யோசிக்கவே இல்லை. 

யுவனை நினைத்து எரிச்சல் அடைந்தது இரண்டு பேர் தான். ஒன்று செல்வம், மற்றொன்று சுந்தரி. யுக்தாவும் யுவனும் விரும்புகிறார்கள் என்று நினைத்த செல்வத்துக்கு அவர்களை எப்படி பிரிக்க என்று யோசனையாக இருந்தது. 

சுந்தரிக்கோ எவ்வளவோ மகனிடம் போராடியும் அவன் தனது பேச்சைக் காது கொடுத்து கேட்கவே இல்லை என்ற எரிச்சல். அந்த கோவம் அனைத்தும் தாமரை மேலும் யுக்தா மேலும் வளர்ந்து கொண்டே இருந்தது. யுவனைப் பற்றி மற்ற பிள்ளைகளிடம் புலம்பிய படியே இருந்தாள். 

யுவன் யுக்தா கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த இரண்டே மாதத்தில் செல்வத்துக்கு இருக்கும் இன்னொரு குடும்பம் பற்றி தெரிந்து கொண்டான். முதலில் அதிர்ச்சி வந்தாலும் அவர் குணம் ஏற்கனவே தெரிந்ததால் பேரதிர்ச்சி வரவில்லை. ஆனாலும் யுக்தா மற்றும் தாமரைக்கு இந்த விஷயம் தெரிந்தால் கவலைப் படுவார்கள் என்பதால் மறைத்து விட்டான். 

அந்த குடும்பத்துக்கு அதிக பணம் கம்பெனியில் இருந்து சென்றிருக்கிறது என்பதால் தான் அவனால் அதைக் கண்டு கொள்ள முடிந்தது. அடுத்த முயற்சியாக செல்வம் அக்கவுண்டுக்கு நேரடியாக வரும் பண மதிப்பை குறைத்தான். அதை தெரிந்து கொண்டு அவனிடம் நேரடியாக காரணம் கேட்டார் செல்வம். அப்போது அவரின் மற்றொரு குடும்பத்தைப் பற்றி சொல்லி அவருக்கே பி. பி ஏற்றினான். 

அதனால் சிறிது நாள் மௌனமாக இருக்க முடிவு எடுத்தார் செல்வம். ஆனால் கிட்டதட்ட ஒரு வருடம் ஆன பிறகும் கூட அவரால் யுக்தாவிடம் இருந்து சொத்தை எழுதி வாங்க முடியவில்லை என்றதும் தான் வேறு முடிவு எடுத்தார். அதாவது இருவரையும் பிரிக்க வேண்டும் என்றும் யுக்தாவை தன்னுடைய அதிகாரத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் முடிவு எடுத்தார். 

அவர் நினைத்தது அலுவலகத்துக்குள் நடக்க வாய்ப்பில்லை என்பதால் வேறு விதமாக யோசித்தார். 

ஒரு நாள் அலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் யுக்தா. தாமரை அவளுக்கு உணவு கொடுத்ததும் அமர்ந்து சாப்பிட்டாள். அப்போது அங்கே செல்வமும் வந்தார். 

உணவு உண்ட யுக்தா அலுவலகம் செல்ல வெளியே சென்ற போது அவள் காரை அவளுடைய டிரைவர் தயாராக வைத்திருந்தார். அவளுக்கென்று தனிக் காரை ஏற்பாடு செய்தது யுவன் தான். நம்பிக்கையான டிரைவரையும் போட்டிருந்தான். தன்னுடைய காரில் ஏறப் போன யுக்தாவை தடுத்த செல்வம் “நாம இன்னைக்கு ஆஃபிஸ்க்கு போகலை. வேற ஒரு இடக்துக்கு போகணும்”, என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!