Skip to content
Post Views: 2,203
அத்தியாயம் 13
கால நேரம் தெரியாமல்
சேகரித்துக் கொண்டே திரிகிறேன்
உந்தன் மாயப் புன்னகையை!!!
Advertisement
அடுத்து வந்த நாட்களில் யுக்தா மற்றும் யுவனுக்கு ஒரு மாதிரி தான் கடந்தது. ஒரே வீட்டில் ஒரே அறையில் இருந்தாலும் இருவருக்குள்ளும் ஒரு விரிசல் வந்தது போல தான் இருந்தது.
Advertisement
என்ன தான் பழைய படி இருக்கலாம் என்று இருவரும் எண்ணினாலும் இருவராலும் சில விஷயங்களில் சகஜமாக நடந்து கொள்ள முடியவில்லை.
Advertisement
யுக்தாவிடத்திலும் விவரிக்க முடியாத பல மாற்றங்கள் வந்திருந்தது. அவளது பேச்சு எல்லாம் குறைந்து போனது. அவள் பேசுவதே அவனிடத்தில் மட்டும் தான். அவனும் ஒதுங்கிப் போக அவள் இன்னும் அமைதியாகி விட்டாள்.
Advertisement
என்ன தான் அவள் அமைதியாக இருந்தாலும் சுந்தரி சில விஷயங்களில் வேண்டுமென்றே அவளிடம் வம்பிழுக்கவும் செய்தாள்.
யுவன் முன்பு சுந்தரி யுக்தாவை ஏதாவது சொன்னால் அவன் அன்னைக்கு பதிலடி கொடுத்து விடுவான். ஈஸ்வரனும் சுந்தரியை திட்டி விடுவார். அதனால் மற்ற நேரங்களில் யுக்தா பாவம் போல் சுந்தரியிடம் மாட்டிக் கொண்டு விழிப்பாள்.
சில நேரம் சுந்தரியின் பேச்சில் யுக்தாவுக்கே கோபம் வரும், சில நேரம் எரிச்சல் வரும், அழுகை கூட வரும். ஆனால் எந்த உணர்வையும் தப்பித் தவறி கூட சுந்தரி முன்பு யுக்தா காட்டி விட வில்லை. அதுவே சுந்தரிக்கு எரிச்சலாக வரும். “மண்ணு மாதிரி இருக்குறதைப் பாரேன்”, என்று கத்திவிட்டுச் செல்வாள்.
மற்ற வீட்டில் மாமியார் மருமகள் எப்படி இருப்பார்களோ அப்படி தான் இவர்கள் வீட்டிலும் இருந்தது. ஆனால் யுவன் மற்றும் ஈஸ்வரன் இருவரின் ஆதரவு தனக்கு இருப்பதால் யுக்தா சுந்தரியின் பேச்சை கண்டு கொள்ளவே மாட்டாள்.
இடையிடையே தாமரையும் மகளை வந்து பார்த்து விட்டுச் செல்வாள். ஆனால் மகள் மற்றும் மாப்பிள்ளையின் வாழ்வு வெறும் நட்பின் அடிப்படையில் இருப்பது மட்டும் அவளுக்கு கவலையாக இருக்கும்.
“மாப்பிள்ளை மனசு கோணாம நடந்துக்கோ. வா போன்னு கூப்பிடாதே. ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்”, என்று மட்டும் தான் அந்த தாயால் சொல்ல முடிந்தது. தாமரை அப்படிச் சொல்லும் போதெல்லாம் “நான் மனசு கோணாம நடந்துக்க ரெடி தான். ஆனா உங்க மாப்பிள்ளை தான் ரெடி இல்லை”, என்று யுக்தாவின் உள் மனது கவுண்டர் கொடுத்தது. அந்த அளவுக்கு யுக்தா மாறியிருந்தாள்.
முன்பு இருந்த யுக்தாவாக அவள் இப்போது இல்லை. எந்நேரமும் அவள் முகத்கில் ஒரு சிந்தனை குடி கொண்டிருந்தது. சில நேரம் அவனுக்கே தெரியாமல் அவனை ரசிப்பாள். அவனிடம் கொஞ்சமாவது மாற்றம் தெரிந்து விடாதாதா, தன்னை காதலாக பார்த்து விட மாட்டானா என்று அவனைக் கவனித்த படியே இருந்தாள்.
அவனுக்கோ உடை மாற்றும் போது, ஒரே கட்டிலில் தூங்கும் போது, ஒரே அறையில் உலாவும் போது, யாராவது கணவன் மனைவி என்று உரிமையாக பேசும் போது தன்னாலே ஒரு சங்கடம் எழுந்தது. அதனால் தான் அவளை விட்டு விலகி விலகி சென்றான்.
நாட்கள் மாதங்களாக நகர்ந்தது. ஆனால் இவர்கள் வாழ்க்கையில் மட்டும் மாற்றம் வரவில்லை. இருவரும் ஒரே அறையில் ஒன்றாக இருந்தாலும் இரண்டு பட்டு தான் இருந்தார்கள்.
திருமணம் முடிந்த பிறகு நடந்த படம் வெளியீட்டு விழாவில் யுவனுடன் கலந்து கொண்ட யுக்தா பிரஸ் மீட்டில் இனி நடிக்க போவதில்லை என்று சொல்லி விட்டாள். செல்வம் பெட்டிப் பாம்பாக அடங்கிப் போனார். ஆனால் அவர் மூளை எல்லாம் எப்படி சொத்தை அடிப்பது என்பதிலே இருந்தது.
யுக்தாவுக்கு சுந்தரியால் வந்த குடைச்சல் தான் பல. அமைதியாக போனாலும் திட்டு தான். இல்லை அவளுக்காக யுவன் பரிந்து பேசினாலும் யுக்தாவுக்கு திட்டு தான் கிடைத்தது. ஈஸ்வரனும் சுந்தரிக்கு எவ்வளவோ அறிவுரை சொல்லி விட்டார்.
“அந்த பொண்ணோட நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாத்தா நீ இந்த அளவுக்கு அவ மேல கடுமையை காட்ட மாட்ட சுந்தரி. தாமரை வந்தாலும் அவங்களையும் பேசுற? உன் இன்னொரு மருமகளை நல்லா தானே வச்சிருக்க? அப்புறம் இவளை மட்டும் ஏன் இப்படி கரிச்சுக் கொட்டுற? இத்தனைக்கும் அவளை விட இவ பணக்காரி”
“பணம் எனக்கு முக்கியம் இல்லை. கௌரவம் தான் முக்கியம். என் மகனை அல்லக்கை மாதிரி வச்சவ தானே இந்த யுக்தா? அவனோட கனவை சிதைச்சவங்க இவ”
‘இதுக்கு உன் மகன் கவலைப்பட்டானா? இல்லை தானே? அவன் நல்லா தானே இருக்கான்? வீட்ல இருந்தே பல கம்பெனிக்கு வேலை செஞ்சு கொடுத்து சம்பாதிக்கிறான். அப்புறம் என்ன?”
“பாரினுக்கு போக மாட்டிக்கானே? அது இவளால தானே? நல்லா மயக்கி வச்சிருக்கா. அதான் அவன் இப்படி ஆடுறான்”
“நீ பேசுறது தப்பு சுந்தரி”
“எது தப்பு? அவ என் மகன் வாழ்க்கைல வந்தது தான் தப்பு”, என்று அவள் சொன்னதும் ஈஸ்வரனுக்கு சலிப்பு தான் வந்தது.
ஈஸ்வரனுக்கு யுக்தாவின் அமைதி, அடக்கம், தன்னைக் கண்டால் அவள் காட்டும் அக்கறையும் பணிவும் அதிகம் பிடிக்கும். அதனால் முடிந்த அளவு மனைவியைக் கடிந்து கொள்வார். ஆனால் சுந்தரி, அவர் பேச்சை எல்லாம் கேட்டுக் கொள்ளாதது தான் பிரச்சனை.
“யுக்தா நம்ம கைக்கு கிடைச்ச வைரம் டி. அவ அருமை உனக்கு எங்க புரியும்? ஒரு நாள் புரியும் போது காலம் கடக்காம இருக்கணும்”, என்று சொல்லி விட்டு விலகிச் சென்று விடுவார். ஆனால் அவருக்கு மனைவி மகன் வாழ்க்கையில் எதுவும் சிக்கலைக் கொண்டு வந்து விடுவாளோ என்ற பயம் இருந்து கொண்டே தான் இருந்தது.
அதற்கு மகனும் மருமகளும் ஒன்றாக வாழ்ந்து விட்டால் பரவாயில்லை என்று தோன்றும். ஆனால் இங்கே தான் இருவரும் இரண்டு பட்டு இருக்கிறார்களே.
அவன் அறைக்குள் சென்றான் என்றால் அவன் குளித்து உடை மாற்றி வெளியே வரும் வரை யுக்தா ஹாலிலே அமர்ந்திருப்பாள்,. அதே போல தான் அவனும்.
திருமணம் நடப்பதற்கு முன் அவர்களுக்குள் இருந்த நெருக்கமும் அன்பும் இப்போது இல்லாமல் போனதை என்னவென்று சொல்ல?
முன்பெல்லாம் காலேஜ் லீவ் விட்டால், சூட்டிங் லீவ் விட்டால் மணிக் கணக்கில் போனில் பேசும் இருவரும் இப்போதெல்லாம் வார்த்தைக்கே பஞ்சம் வந்தது போல நடந்து கொண்டனர்.
ஒரே வீட்டில் இருந்தாலும் வேறுவேறு திசையில் பயணிக்கும் அவர்களை என்ன செய்ய என்று தெரியாமல் விழி பிதுங்கினார் ஈஸ்வரன்.
முதல் நாள் இரவு போல அடுத்து வந்த நாட்களிலும் அவள் ஒரு ஓரத்திலும் அவன் ஒரு ஓரத்திலும் படுப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்கள். அதுவே தொடர்கதையானது தான் பரிதாபம்.
“மருமகப் பொண்ணை எங்கயாவது வெளிய கூட்டிட்டு போ டா”, என்று பல தடவை யுவனிடம் சொல்லி விட்டார் ஈஸ்வரன்.
“ஒரு முக்கியமான புராஜெக்ட் செய்யச் சொல்லிக் கொடுத்துருக்காங்க பா. அதைப் பண்ணிக் கொடுக்கணும்”, என்று சொல்லி கழண்டு கொள்வான் யுவன்.
இருவரும் விலகி இருப்பது ஈஸ்வரனுக்கு மட்டுமா தெரிந்த விஷயம்? அது சுந்தரிக்கும் தெரியுமே. அவள் மனதில் பல கணக்குகள் உதயமானது. அவள் இதை எதிர்பார்த்தாள் என்று கூட சொல்லலாம்.
திருமணம் முடிந்து கிட்டத் தட்ட நான்கு மாதங்கள் ஆகியும் மருமகள் மகனுடன் இணங்கி வாழவில்லை என்றதும் ஈஸ்வரனிடம் குத்தி காண்பித்துக் கொண்டே இருந்தாள்.
“உன் வேலையைப் பாரு சுந்தரி. தேவையில்லாம அவங்க விசயத்துல தலையிடாதே. இதெல்லாம் அவங்களோட விருப்பம்”, என்று திட்டினார் ஈஸ்வரன்.
“அது எப்படி தலையிடாம இருக்க முடியும்? என்னோட மத்த பிள்ளைங்களுக்கு எல்லாம் பிள்ளைங்க இருக்கு. சுஜி கூட மாசமா ஆகிட்டா. அப்படின்னா யுவனோட குழந்தையை நான் பாக்க வேண்டாமா? கேட்டா தேவையில்லாத விசயம்னு சொல்றீங்க?”
“உன் மாமியார் புத்தியை ஆரம்பிக்காத சுந்தரி”
“நான் அப்படித் தான் இருப்பேன். நம்ம மீனுவோட நாத்தனார் இருக்கே வசுந்தரா”
“ஆமா அவளுக்கென்ன?”
“சென்ட்ரல் கவர்ன்மெண்ட்ல வேலை பாக்குறா? அவளை நம்ம யுவனுக்கு கட்டிக் கொடுக்க அவங்க வீட்ல ஆசைப் படுறாங்க”
“உனக்கு என்ன பைத்தியமா? யுவனுக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சு டி. அது மட்டுமில்லாம அவங்க வீட்ல பேசினது யுவன் கல்யாணத்துக்கு முன்னாடி”
“இல்லையே நேத்து கூட மீனு சொன்னாளே. இப்ப கூட அவங்க வீட்ல யுவனுக்கு கொடுக்க ரெடியா தான் இருக்காங்களாம்”
“அதுக்கு?”
“இந்த யுக்தா நமக்கு வேண்டாங்க. அவளால் என் மகனுக்கு நல்ல வாழ்க்கை அமையாது”
“அடிச்சு மூஞ்சு முகரையை எல்லாம் பேத்துருவேன். வாயை மூடிட்டு தூரப் போ. பெரிய மனுஷி மாதிரி நடந்துக்கோ”, என்று சொல்லி விட்டு அவர் திரும்பும் போது அங்கே மாடியில் காயப் போட்டிருந்த ஈஸ்வரனின் துணிகளை மடித்து கையில் வைத்த படி நின்றிருந்தாள் யுக்தா.
அவளைப் பார்த்து சுந்தரி கழுத்தை நொடிக்க “உள்ள வா மா யுக்தா. அடடே எல்லாம் மடிச்சிட்டியா?”, என்று கேட்டுக் கொண்டே அந்த துணிகளை வாங்கினார் ஈஸ்வரன்.
யுக்தா துணிகளை அமைதியாக கொடுக்கவும் “நாங்க பேசினதை நீ கேட்டுட்டன்னு எனக்கு புரியுது மா. அவ பேசினதை எல்லாம் பெருசா எடுத்துக்காத டா”, என்று சமாதானப் படுத்தினார் ஈஸ்வரன்.
சுந்தரியை ஒரு பார்வை பார்த்தவள் “யுவன் என்னோட புருஷன் மாமா. அடுத்தவங்களுக்காக எல்லாம் அவனை விட்டுக் கொடுத்துற மாட்டேன். எல்லா ஜென்மத்துலயும் அவன் தான் என் புருஷன். இவங்க தான் என் மாமியார். நிறைய தடவை இப்படியே சொல்லிட்டு இருக்காங்க. நான் அமைதி தான். ஆனா என் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு. அட்டைக்கு புரியுற மாதிரி சொல்லுங்க”, என்று சொன்ன யுக்தா அமைதியாக வெளியே சென்று விட்டாள்.
ஈஸ்வரனே அவள் பேச்சில் அதிர்ந்து போய் நின்று விட்டார் என்றால் சுந்தரியை கேட்கவும் வேண்டுமா? ஆ என்று வாயை பிளந்த படி நின்ற மனைவியைப் பார்த்து சிரித்தவர் “அப்பாடி எனக்கு பெரிய பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கு”, என்றார்.
“அவ என்னை நக்கல் அடிச்சிட்டு போனது உங்களுக்கு கொண்டாட்டமா இருக்கா? பாரம் குறைஞ்சிருச்சாம்ல?”, என்று அவரை முறைத்த படி கேட்டாள் சுந்தரி.
“அது நக்கல் இல்லை டி. சரியான பதிலடி. இனி என் மகன் வாழ்க்கையை அவன் பொண்டாட்டி பாத்துக்குவா. நீ என்ன வில்லத்தனம் பண்ணினாலும் உன்னால ஒண்ணும் செய்ய முடியாது”
“பேசினா மட்டும் போதாது. அவன் கூட வாழ்ந்து காட்டணும். பிள்ளையை பெத்துக் காட்டணும்”
“வாழ்ந்து காட்டுவோம்னு சொல்லி தான் டி யுக்தா பேசிட்டு போறா. பரவால்ல டி உன்னையும் பாராட்டனும்”
“எதுக்குங்க?”
“இத்தனை நாள் இப்படி எல்லாம் பேசாத பொண்ணு, எங்க அவ புருஷனை அவ கிட்ட இருந்து பிறிச்சிருவோம்னு பயத்துல பேசிட்டு போறா பாத்தியா? அவங்க மனசுல நட்பு இருந்தாலும் உன் மகன் அவ கழுத்துல கட்டின தாலி அவங்களை சேத்து வைக்கும் டி”
“அதையும் பாப்போம்”, என்று சொல்லி அவள் கழுத்தை வெட்ட அவளைக் கண்டு சிரித்தார் ஈஸ்வரன்.
சுந்தரி அங்கிருந்து சென்றதும் தன்னுடைய சிரிப்பை நிறுத்திய ஈஸ்வரன் “மருமக தெளிவா தான் இருக்கா. மகன் தான் சொதப்பிட்டு இருக்கான் போல? அவன் கிட்ட பேசனுமே?”, என்று எண்ணிக் கொண்டார்.
ஆனால் அவனுடன் தனியே பேச அவருக்கு சந்தர்பம் தான் அமைவதாக இல்லை. வேலை வேலை என்று சுற்றிக் கொண்டிருந்தான் யுவன். உண்மையிலே வேலை இருந்ததா? இல்லை, யுக்தாவின் அருகாமையில் இருந்து தப்பிக்க அப்படி சுற்றிக் கொண்டிருந்தானா என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.
ஒரே அறைக்குள் அவளுடன் இருக்கும் போது அவன் உணர்வுகள் கொஞ்சம் அவனை பாதித்தது நிஜம். இத்தனை நாள் அவளை தோழியாகவும் குழந்தையாகவும் பார்க்க முடிந்த அவனுக்கு இப்போதெல்லாம் சில பல சோதனைகள் வரத் தான் செய்தது.
அது மனைவி என்ற உரிமையா? தாலி கட்டியதால் வந்த உணர்வா? இல்லை அவள் மூலம் மட்டும் தான் தனக்கென்று ஒரு வாரிசு வர முடியும் என்ற உண்மை புரிந்ததால் வந்த உணர்வா என்று அவனால் பிரித்து அறிய முடியவில்லை.
அவள் அங்கே இங்கே திரும்பும் போது அவளது ஆடை விலகிய இடங்கள் அவன் கண்ணில் விழும் போது அவன் உணர்வுகள் அதை பார்க்க தூண்ட அவன் மனமோ அதை தவறு என்று வாதிட்டது. அவனும் அதை தவறு என்று நம்பியதால் தவறு செய்கிறோமே என்று வருந்தி அவன் மனதை அவனே வாட்டிக் கொண்டான். அதனால் தான் அவளது அருகாமையில் இருந்து விலகிச் சென்றான்.
அவனுக்குமே இந்த மாற்றங்கள் ஏன் வந்தது என்று புரியத் தான் இல்லை. ரிசப்சனுக்கு வந்த அவனுடைய நண்பர்களும் “பிரண்ட் பிரண்டுன்னு சொல்லிட்டு கல்யாணமே பண்ணிட்ட?”, என்று நக்கல் அடித்ததால் அவர்களிடம் கூட மனம் திறக்க பயந்தான். அவனை அறியாமலே கணவன் என்ற உரிமை உணர்வும் ஆதிக்க உணர்வும் அவனுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக புகுந்து கொண்டிருந்தது.
உன்னுடைய இளமை உணர்ச்சிகளின் வடிகால் உன்னுடைய மனைவியான யுக்தா தான் என்று அவன் மூளை சொல்லிக் கொண்டே இருக்க அதை ஏற்காம முடியாமல் அவன் மனது தடுமாறிக் கொண்டிருந்தது.
error: Content is protected !!