Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Maiyam Kollum Puyal

Maiyam Kollum Puyal 13 2

அன்றோடு அவன் புராஜெக்ட் வேலை முடிந்திருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் அந்த புராஜேக்ட்க்கான டெமோ கொடுப்பதற்காக அவன் லண்டன் செல்ல வேண்டியது இருந்தது. இன்று வேலை முடிந்ததால் அறையில் ரிலாக்ஸாக அமர்ந்திருந்தான். அப்போது உள்ளே வந்த யுக்தா பாத்ரூமுக்குள் சென்று குளித்து முடித்து இரவு உடையில் வெளியே வந்தாள்.

அவளையே பார்த்த படி அமர்ந்திருந்தான் யுவன். கண்ணாடி முன்பு போய் நின்றவள் கற்றாழை ஜெல்லை எடுத்து முகத்துக்கு போட்டு விட்டு தன்னுடைய தலை முடியை எடுத்து கொண்டை போட்டாள்.



Advertisement

அவள் கையைத் தூக்கியிருந்ததால் அவளது வயிறு கண்ணாடி வழியே அவன் கண்களுக்கு தரிசனம் கொடுக்க ஒரு நொடி தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

கொண்டை போட்டு முடித்தவள் “உன் வொர்க் எல்லாம் முடிச்சிட்டியா யுவன்?”, என்று கேட்டதும் தான் அவன் பார்வை அவள் முகத்துக்கு திரும்பியது.

Advertisement

Advertisement

“ஆன்.. அது,…. முடிச்சிட்டேன் யுக்தா. சரி நீ தூங்கு. நான் கொஞ்ச நேரம் மொட்டை மாடில நடந்துட்டு வரேன்”, என்று அவசரமாக சொல்லி விட்டு வெளியே வந்து விட்டான்.

“ஏன் யுவன் என்னை விட்டு ஒதுங்கி ஒதுங்கி போற? முன்னாடி பேசுற மாதிரி கூட பேச மாட்டிக்கிற? நீ நண்பனாவே இருந்துருக்க கூடாதான்னு இருக்கு டா”, என்று எண்ணிக் கொண்டே படுத்த யுக்தா சிறிது நேரத்தில் தூங்கி விட்டாள்.

Advertisement

மொட்டை மாடிக்கு வந்த யுவன் “உனக்கு என்ன டா ஆச்சு? ஏன் உன் புத்தி இப்படி தப்பு தப்பா யோசிக்குது?”, என்று தன்னையே கேட்டுக் கொண்டிருந்தான். அப்போது அங்கே வந்தார் ஈஸ்வரன்.

அவரைக் கண்டதும் “அப்பா தூங்கப் போகலையா?”, என்று கேட்டான்.

“நான் போறது இருக்கட்டும். நீ இந்நேரம் இங்க என்ன டா செய்ற?”

“சும்மா காலார நடக்கலாம்னு வந்தேன் பா”

“நடக்குறது சரி, யுக்தாவையும் கூட்டிட்டு வந்துருக்கலாம்ல?”

“அது வந்துப்பா”

“ஏண்டா இப்படி அவ கிட்ட இருந்து விலகி விலகி போற?”

“அப்பா”

“நான் உன் கிட்ட முன்னாடியே சொன்னேன். உங்க வாழ்க்கை எப்படி இருக்குனு மத்தவங்க பார்வைல விழக் கூடாதுன்னு”

“அது வந்துப்பா….”

“உன் மனசு புரியுது டா. நான் உன்னை உடனே மாறச் சொல்லலை. உடனே எல்லாம் நடக்கணும்னு நான் சொல்ல வரலை, அதைப் பத்தி யோசின்னு தான் சொல்ல வரேன். இனிமே உனக்கு அவ தான் டா எல்லாம். அதை புரிஞ்சிக்கோ. அவ கஷ்டத்துல தோள் கொடுக்குற தோழனா இருக்குற நீ அவளை மனைவி அப்படிங்குற கண்ணோட்டத்துலயும் பாரு. ஆனா நீ என்னடான்னா நண்பன் அப்படீங்குற உறவுல இருந்தும் வெளிய வந்து நிக்குற. ரொம்ப யோசிச்சு ஸ்ட்ரெஸ் ஆகாத யுவன். ஆனா நல்ல முடிவா எடு. உங்க அம்மா உங்களை நோட் பண்ணிட்டே இருக்கா. உன் அக்கா வேற அவ நாத்தனா பத்தி பேசி உன் அம்மா மனசை மாத்துறா. நீ தான் எதுக்கும் இடம் கொடுக்காம இருக்கணும் டா”

“எங்களுக்குள்ள வெறுப்பு எதுவும் கிடையாதுப்பா. என்னைக்கும் நான் அவளை விட்டுக் கொடுக்க மாட்டேன். அப்புறம் எப்படி நானும் யுக்தாவும் பிரியுவோம்னு அம்மா நினைக்கிறாங்க?”

“நீங்க ரெண்டு பேரும் அன்பா தான் இருக்குறீங்க. ஆனா கணவன் மனைவி இடையே காதலும் அவசியம் யுவன்”

“ஆனா அவ என்ன யோசிக்கிறானு தெரியலைப்பா”

“எப்பவும் அவ ஒரு குழந்தை மாதிரின்னு சொல்லுவியே? அப்படின்னா குழந்தை எப்படி அவ மனசுல உள்ளதைச் சொல்லும். நீ தான் புரிஞ்சிக்கனும். இல்லைன்னா இது தான் வாழ்க்கைன்னு நீ தான் புரிய வைக்கணும். ஒதுங்கி இருந்தா எல்லாம் ஆச்சா?”

“எனக்கு ஒரு மாதிரி இருக்குப்பா”, என்று சங்கடமாக சொன்னான். ஒரு மகனாக தனக்கு தோன்றும் உணர்வுகளையும் அது தவறா சரியா என்று வரும் குழப்பதையும் தந்தையிடம் அவனால் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை.

ஆனால் வாழ்ந்து பார்த்தவருக்கும் அவனைப் பற்றி புரிந்தவருக்கும் அவன் உணர்வுகள் புரியாதா என்ன?

“கல்யாணம் முடிஞ்சு மாசம் கடந்துருச்சு டா. நீ இன்னும் இப்படியே இருந்தா நல்லது இல்லை. அவ கிட்ட மனசு விட்டு பேசு. முன்னாடி பிரண்டா பேசுற மாதிரியாவது பேசேன் டா”

“முன்னாடி மாதிரி அவளை பிரண்டா மட்டும் பாக்க முடியலைப்பா”, என்று உளறி பின் நாக்கைக் கடித்துக் கொண்டான்.

அவனைக் கண்டு சிரித்தவர் “எல்லாம் சரியாப் போகும் டா. அவ கிட்ட பேசு. சரி லண்டன்க்கு போக எல்லா ஏற்பாடும் செஞ்சிட்டியா?”, என்று கேட்டார்.,

“ஆமாப்பா”

“யுக்தாவையும் கூட்டிட்டு போ”

“வேலை விஷயமா போறேன் பா. அவ எதுக்கு அங்க?”

“இங்க இருந்தா உன் அம்மா அவளை புண்ணாக்கிருவா. அவ வீட்லயும் அவளுக்கு நிம்மதி இருக்காது. அதுமட்டுமில்லாம அங்க மனசு விட்டு பேச உங்களுக்கு தனிமை கிடைக்கும். உன் வேலை நேரம் போக மத்த நேரம் அவ கூட டைம் ஸ்பெண்ட் பண்ணவா முடியாது? கூட்டிட்டு போ டா. அவ போகாத இடம் இருக்காது. ஆனா உன் கூட போக அவ கண்டிப்பா ஆசைப் படுவா”

“சரிப்பா கூட்டிட்டு போறேன்”

“சொன்னது எல்லாம் புரிஞ்சதா டா?”

“புரிஞ்சதுப்பா’

“அப்பா கீழே வா. வாழ்க்கையை அதன் போக்குல வாழப் பழகிக்கோ டா, இந்த ஜென்மத்துல கடவுள் உனக்கு கொடுத்த துணை யுக்தா தான். உனக்கு என்ன தோணுதோ அது சரின்னு நினை. இது தப்பா ரைட்டான்னு யோசிச்சு யோசிச்சு நீயும் கஷ்டப் பட்டு அவளையும் கஷ்டப் படுத்தாதே”, என்று சொல்லி விட்டு கீழே சென்றார்.

அவன் மனதில் இருக்கும் கேள்விகளுக்கு அவர் பேசியதில் இருந்து பதில் கிடைத்தது போல இருந்தது. ஏற்கனவே கொஞ்சம் குழம்பி இருந்தவனின் கண்ணோட்டத்தை ஈஸ்வரன் கொஞ்சம் திசை திருப்பி இருந்தார். ஒரு ஆசனாக இருந்து அவர் சொன்ன விஸயங்களை அசை போட்டவனுக்கு சில எதிர்பார்ப்புகளும் உருவானது. அதே நேரம் அதற்கான எதிர்வினை என்னவாக இருக்கும் என்று பயமாகவும் இருந்தது.

கிட்ட போனா திட்டுவாளா? கத்துவாளா? கடிச்சு வைப்பாளா? என்று குழம்பினான். கூடவே அவளுக்கு தன்னைப் கணவனாக பிடிக்குமா என்ற மிகப் பெரிய கேள்வியும் வந்தது.

யோசனையை தவிர்த்து விட்டு அவன் அறைக்கு வந்த போது யுக்தா நல்ல உறக்கத்தில் இருந்தாள். முதல் முறையாக விடி விளக்கு வெளிச்சத்தில் தன்னுடைய மனைவியை கூர்ந்து பார்த்தான்.

இத்தனை நாள் அவன் பார்த்த பார்வைக்கும் இப்போது அவன் பார்க்கும் பார்வைக்கும் பல வேறுபாடுகள் இருந்தது.

அவளுடைய தலை முடி, நெற்றி கன்னம் மூக்கு, உதடு என அவன் பார்வை அவளை வருடியது. அப்போது பார்ப்பது தவறோ என்று எண்ணிய அவளது இடையை கூட வெகு நேரம் அவன் பார்வை தழுவியது. மனைவி என்ற உரிமைப் பார்வையை அவன் வீசிக் கொண்டிருக்க அவளோ நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.

முதல் முறையாக வெகு நேரம் அவளை ரசித்துக் கொண்டிருந்தான். பின் லண்டன் சென்றதும் அவளிடம் மனம் விட்டுப் பேச வேண்டும் என்று முடிவெடுத்தான்.

ஆனால் அடுத்த நாளில் இருந்து அவன் செயல்களில் சிறிது மாற்றம் இருந்தது. அவள் அறைக்குள் இருந்தால் வெளியவே சுற்றிக் கொண்டிருப்பவன் இப்போதெல்லாம் அவள் எங்கே இருக்கிறாளோ அங்கே இருக்க ஆரம்பித்தான். அவள் முன்னிலையில் உடை மாற்ற தயங்கியவன் இப்போது அவளை ஆராய்ச்சி செய்து கொண்டே உடை மாற்ற ஆரம்பித்தான். அவளுக்கு அவன் செய்கைகள் எல்லாம் வியப்பையும் குழப்பத்தையும் ஒருங்கே தந்தது. கூடவே சில தடுமாற்றங்களையும் தான்.

அடுத்த நாள் இரவு யுக்தா அறைக்குள் வரும் போது கரண்ட் கட் ஆக பயந்து போனாள். “ஆ அம்மா”, என்ற அலறலுடன் அவனை நோக்கி ஓடி வர அவளை வாரி அனைத்துக் கொண்ட யுவன் “ஒண்ணும் இல்லை டா. நான் தான் இருக்கேன்ல? கரண்ட் இப்ப வந்துரும்”, என்று சமாதானப் படுத்தினான்.

அவன் பேசியதும் பயம் போய் விட்டாலும் அவனை விட்டு விலகாமல் அவன் மார்பில் ஒட்டிக் கொண்டு நின்றாள். அவனுமே அவளை விலக்க நினைக்க வில்லை. இந்த நிலையில் கல்லூரி டூர் போன போது இப்படி கட்டிப் பிடித்த படி நின்றது தான் அவனுக்கு நினைவில் வந்தது. அப்போது அவளை விலக்க போராடியவன் இப்போது அவளை இன்னும் தன்னுடன் சேர்த்து அணைத்தான்.

அவன் மாற்றம் கொஞ்சம் புரிந்தவளும் அவனுக்குள்ளே சென்று விடுவது போல ஒட்டிக் கொண்டாள்.

கரண்ட் வந்ததும் இருவரும் சிறிது தயக்கதுடன் தான் விலகினார்கள். ஆனால் ஒருவரை ஒருவர் எதிர்க் கொள்ள தான் சங்கடமாக இருந்தது.

அவள் தலை குனிந்த படி அமைதியாக நிற்க “இப்ப பயம் போயிருச்சா டி?”, என்று கேட்டான்.

“ம்ம்”, என்றவள் அமைதியாக படுத்துக் கொண்டாள்.

அவளது அமைதி அவனுக்கு குழப்பம் தர “கோபமா இருக்கியா யுக்தா?”, என்று கேட்டான்.

“ம்ம்”

“என்ன ஆச்சு அம்மு?”, என்று அவன் கேட்டதும் அவசரமாக அவன் முகம் பார்த்தாள். அவள் பார்வை கேட்டது “என்னை அம்முன்னு கூப்பிட உனக்கு இத்தனை நாளா டா?”, என்று.

அது புரிந்தவன் “சாரி அம்மு. சரி என்ன கோபம்னு சொல்லு டி”, என்றான்.

“நீ என் கூடவே இருப்பேன்னு தானே சொன்ன?”

“ஆமா நீ என் கூடவே இருக்கணும்னு தான் உன்னைக் கல்யாணமும் பண்ணுனேன்”

“பொய் சொல்லாத. அம்மா கட்டாயாத்துல தான் கல்யாணம் பண்ணின. நான் இப்ப அதைக் கேக்க வரலை. நீ மட்டும் என்னை விட்டுட்டு லண்டன் போற? பிளீஸ் என்னை விட்டுட்டு போகாத யுவன்”, என்று குழந்தை போல கெஞ்சினாள்.

அவள் சொன்னதைக் கேட்டு அவனுக்குள் உற்சாக ஊற்று உருவானது. “ஒரு பத்து நாள் தான் அம்மு. அம்மா அப்பா கூட இருந்துக்கோ. நம்ம வீட்ல தானே இருக்க? அப்புறம் என்ன தயக்கம்?”, என்று சொல்லி அவளை ஆழம் பார்த்தான்.

“நம்ம வீடு தான். ஆனா நீ இருக்க மாட்டியே?”, என்று உதடு பிதுக்கியவளை முதல் முறையாக அள்ளி அணைக்க வேண்டும் போல ஒரு உணர்வு எழுந்தது.

அதை அடக்க நினைக்காமல் “கொஞ்சம் கிட்ட வாயேன்”, என்று அழைத்தான். மறுபேச்சு பேசாமல் அவன் அருகே வந்து படுத்தாள் யுக்தா.

அவளைப் பார்த்து புன்னகைத்தவன் அவளை இறுக அணைத்தான். அவள் வியப்பாக அவனைப் பார்க்க “உன்னை எப்படி டி விட்டுட்டு போவேன். நீயும் என் கூட தான் வர. நாம ரெண்டு பேரும் தான் போறோம். ஆனா அங்க உனக்கு கொஞ்சம் போர் அடிச்சா எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கணும், ஓகே வா?”, என்று அவன் சொன்னதும் சந்தோசத்துடன் அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள் யுக்தா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!