Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Mister Rascal

Mister Rascal 1 1

“டமால்!!!!’ 



Advertisement

அதிர வைத்த துப்பாக்கி சத்தத்தில் ஆங்காங்கே இருந்த பறவைகள் எல்லாம் படபடவென சிறகு அடித்து கூட்டமாய் விலகி பறந்தது. 

சில மாதங்களுக்கு முன்பு…!

Advertisement

Advertisement

வியர்க்க விறுவிறுக்க லேசாக மூச்சு வாங்கியபடி கதவை திறந்தாள் ஷைலஜா. வாக்கிங் ஷூவை கழட்டி அதனிடத்தில் வைத்தவள், நேரே ஹாலுக்கு போக, டீப்பாய் மீது கைத்துண்டு அவளுக்காக காத்திருந்தது.

மிருதுவான துண்டில் தன் வியர்வையை அழுந்த துடைத்துக்கொண்டே ஆளை விழுங்கும் சோபாவில் சரிந்தாள்.

Advertisement

கையெட்டும் தூரத்தில் இருந்த ரிமோட்டால் தொலைக்காட்சியை உயிர்ப்பித்ததும் செய்தி சேனல் ஓட ஆரம்பித்தது. 

அதற்கு ஒரு கண்ணையும் இரு காதுகளையும் கொடுத்துவிட்டு துளிக்கூட கசங்காமல் இருந்த அன்றைய நாளிதழை புரட்டிக்கொண்டே அதில் தன் மறுக்கண்ணை பதித்தாள்.

சில நொடிகளில் வீடே நிறையும் வாசத்தோடு காப்பி கோப்பையை எடுத்துக்கொண்டு அவள் அருகே வந்தாள் துர்கா. ஷைலஜாவின் வேலையாள், அந்த வீட்டில் அவளுடன் இருக்கும் ஒரேயாள் என்றும் சொல்லலாம்…!

ஷைலஜாவின் எதிரே இருந்த டீப்பாயில் கோப்பையை வைத்துவிட்டு அவள் நகரப்போக, டிவியில் ‘போலிஸ் துணை கண்காணிப்பாளர் மிஸ் ஷைலஜா’வின் தீரசெயல்’ என்று தலைப்பு செய்தி வர, அப்படியே நின்றாள் அவள்.

ஷைலஜாவோ ஒருமுறை டிவியை பார்த்துவிட்டு பின் காப்பியை அருந்த ஆரம்பித்தாள்.

‘சென்னையில் வெகுநாட்களாய் இரவில் ஆள்கடத்தல் செய்து வந்த கும்பலை ஒரே ஆளாய் நின்று மடக்கி பிடித்த பெண் போலிஸ்! அவரின் இந்த துணிகர செயலை முதலமைச்சர், ஆளுநர் உட்பட பலரும் பாராட்டி பேசி வருகின்றனர்’ 

மேலும் அந்த செய்தி நீள, தன்னருகே இருப்பவளை பெருமையாய் அன்றி சற்று பயத்துடன் ஏறிட்டாள் துர்கா.

அவள் எவ்வளவு நேரம் அப்படியே நின்றாலும் அந்த போலிஸ் கண்டுக்கொள்ள போவதே இல்லை என்பது அவளுக்கே தெரியும், என்றதால், “அக்கா!” என்றழைத்தாள்.

கண்ணை கூட நிமிர்த்தாது, “ம்ம்!” என்றாள் ஷைலஜா.

அதுக்கூட ‘உறுமல்’ போன்ற தொனியில் துர்காவுக்கு பட, லேசாக தயங்கியபடியே, “நைட்ல இப்படி தனியா போவாதீங்க அக்கா!” என்றாள் ஒருவாறாய் தைரியத்தை திரட்டி. 

எதிரே இருந்தவளிடம் எந்தவித எதிர்வினையும் இல்லை. 

“நீங்க என்னதான் போலிஸ்’ன்னாலும் இப்படி வேண்டாம் க்கா! ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம்  இருக்காது! அவனுங்க அத்தனை ஆம்பளைங்க… நீங்க ஒரே…” துர்கா பேச்சை முடிக்கும் முன்னே ஷைலஜா வெடுக்கென சோபாவில் இருந்து எழுது நிற்க, விதிர்த்து ஈரடி பின்னால் போனாள் துர்கா.

எழுந்தவளோ, “டிபன் எடுத்து வை!” என சாதாரணமாய் சொல்லிவிட்டு அறைக்குள் போக, இழுத்து வைத்த மூச்சை அப்போதுதான் வெளிவிட்ட துர்கா, 

‘ஐயோ நான் ஒரு கிறுக்கி… ஆம்பளை, பொம்பளைன்னு பேசுனாலே அக்காக்கு ஆகாதுன்னு தெரிஞ்சும் உளறிக்கொட்டுறேன்! ஏதோ இன்னைக்கு நல்ல மூட் போல, அர்ச்சனை’ல இருந்து தப்பிச்சேன்!’ என அவள் நல்ல நேரத்தை நினைத்து சந்தோசப்பட்டபடி அடுக்களைக்குள் நுழைந்துக்கொண்டாள். 

  

குளித்து முடித்து வெளியே வந்த ஷைலஜா, ஹேர் டிரையரில் தன் கழுத்து வரை கிடந்த கூந்தலை உலரவிட்டாள்.

நீட்டாக அயர்ன் செய்து கட்டிலில் வைத்திருந்த தன் காக்கி உடையை காணும்போது துர்காவை நினைத்து லேசாக முறுவல் கூட பூத்தது அவளுக்கு.

சில நேரம் அவள் நினைப்பதுண்டு! துர்கா இல்லை என்றால் தான் எப்படி இருப்போம் என்று!!!

இத்தனைக்கும் அவளை விட இரண்டு மூன்று வயது குறைந்தவள் தான் எனினும், தன் எத்தனை அக்கறையை பார்த்துக்கொள்கிறாள்?! 

சின்ன சின்ன தேவைக்கு கூட வீட்டிற்குள் அவளை ஒட்டியே தன்னறியாமல் பழகிப்போயிருந்தாள் ஷைலஜா.

இதையெல்லாம் மனதில் நினைப்பதோடு சரி! வெளியே அவளிடம் சேர்ந்தார்ப்போல பத்து வார்த்தைகள் கூட பேசுவது கிடையாது! அவளிடம் என்று இல்லை! யாரிடமும் அனாவசியமாய் பேசுவது அவளுக்கு அறவே பிடிக்காத ஒன்று!!!

துர்காவின் மிளகாய் சட்னி வாசம் அறைக்குள் வரை அத்துமீறி நுழைந்து, அவள் வயிற்றின் அமிலங்களை சுரக்க செய்ய,

சுவரில் தொங்கிக்கொண்டிருக்கும் அவள் குடும்ப புகைப்படத்தை நிமிர்ந்து பார்த்தவள், ‘நீங்க எல்லாரும் சேர்ந்து தான் இந்த அடிமையை எனக்கு அனுப்பி வச்சுருக்கீங்கன்னு நினைக்குறேன்!’ என்று மானசீகமாய் சொல்ல, ‘ஆம்’ என உணர்த்துவதை போல அவளது அலைபேசி ஒலி எழுப்பியது.

அரிதான தன் புன்னகையை கண்ணாடியில் கண்டபடியே அழைப்பை இயக்கி காதுக்கு கொடுத்தாள்.

மறுபுறம் பேசியதை கேட்டதும் அவள் புன்னகை காணாமல் போக, “வரேன்!!!” என்றுவிட்டு எப்போதும் போன்ற இறுகிய முகத்துடன் தன் காக்கி உடையை எடுத்து அணிந்துக்கொண்டவள், அறையை விட்டு வெளியே வரும்போது அவளுக்கான உணவோடு மேசையருகே காத்து நின்றாள் துர்கா.

கால்கள் ஒரு நொடி தயங்கினாலும், “வரேன்!” என்றுவிட்டு அவள் முன்னேற, “அக்கா, சாப்பிட்டு போங்க!” என்ற துர்காவின் கெஞ்சலுக்கு செவி மடுக்காமல், விறுவிறுவென தன் அப்பார்ட்மென்ட் லிப்ட்டுக்குள் புகுந்தாள் சைலஜா.

இது அடிக்கடி நடப்பது தான் என்பதால், வெகு நேரம் அங்கேயே நிற்காமல், அவளுக்கான உணவை டப்பாக்குள் போட்டு அடைத்தவள், எப்போதும் அழைக்கும் ஒரு ‘ப்ரைவேட் டெலிவரி பாய்’யை தொடர்புக்கொண்டாள்.      

‘சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம்’

காலை நேர பரபரப்பில் இயங்கிக்கொண்டிருந்தது. 

அதன் உள்ளே ஷைலஜா நுழைந்தபோது வழமையாய் அவளுக்கு கிடைக்கும் ‘வணக்கங்களுக்கு’ மத்தியில் இன்று ‘வாழ்த்துகள்’ அதிகம் கிடைத்தது.  

பின்னே, இன்றைய ‘தலைப்பு செய்தியே’ அவள்தான் எனும்போது வாழ்த்துகளுக்கா பஞ்சமாய் போய்விடும்!?

எதிர்ப்பட்ட அத்தனை பேரிடம் இருந்து கிடைத்த வாழ்த்துகளை சிறு தலைப்போடும், சம்பிரத்தாயமாய் விரிந்த உதடுகளோடுமே வரவேற்றாள் அவள்.

சிலர் உண்மையாய் வாழ்த்து சொன்னாலும், பலரது கண்களில் நாடகத்தன்மையை தான் கண்டாள் அவள். கூடவே லேசாக இளக்காரமும்!

‘ஒரு பொம்பளை இந்த வேலை செஞ்சுருக்காளா?’ இப்படி சிலர்.

‘ஒத்த பொம்பளை தனியா போய் அத்தனை ஆம்பளையயும் புடிச்சுட்டாளாம்! இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு!’ இப்படி சிலர்.

‘ஹும்! இது சும்மாவே திமுரு பிடிச்சது… இதுல இது வேறயா? இனி என்ன ஆட்டம் காட்டுமோ!?’ இப்படியும் சிலர்.

ஆனாலும், வாய் மட்டும் ‘வாழ்த்துகளை’ வாரி இறைத்தது.

இதையெல்லாம் அறிந்தாலும் அவளிடம் எந்தவித பாதிப்பும் இருக்காது. 

‘பத்து ஆம்பளைங்க மத்தில ஒரு பொண்ணு பைக்’ல ஓவர் டேக் பண்ணாலே அதை தாங்கிக்க முடியாத இடத்துல, அத்தனை ஆம்பளைங்களுக்கு நடுவுல அவனுங்களை விட ஒரு படி மேல நிமிர்ந்து நிக்குற பொண்ணை எப்படி நல்ல விதமா நினைப்பானுங்க!?’

நாய் குணம் கடிக்கும்! என்பதை போல ‘ஆம்பளைங்க இப்படிதான்!’ என்று ‘ஜென்டரைஸ்’ செய்துவிட்டு இலகுவாய் கடந்துவிடுவாள்.

‘கமிஷனர்’ அறையை நோக்கி அவள் நடக்க, அவள் வருவதை கண்டதும் வேகவேகமாய் அவளிடம் வந்தான் விக்கி… விக்னேஸ்வரன்! அவளின் ஜூனியர்!

“குட் மார்னிங் மேடம்!” என்றவன், “கமிஷனர் சார் உங்களுக்காக தான் வெய்ட் பண்றாரு! சீக்கிரம் போங்க!” என்று சொல்ல, அவன் உடல்மொழியில் தெரிந்த அவசரத்தில், 

“என்ன விஷயம்?” என்றாள் அவள்.

“அது… தெரியல மேம்!” என்று அவன் சொன்னதே அவனுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என்பதை அவளுக்கு உணர்த்த, “ஓகே!” என தோள் குலுக்கியபடி கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

விறைப்பாய் ஒரு சல்யூட் வைத்து அவள் வணக்கம் சொல்ல, “ம்ம்!” என்றவர், எதிரே இருந்த இருக்கையை கை காட்டினார்.

அவள் அமர்ந்ததும், “கேஸ் என்னாச்சு?” என்றார் குரலில் சுரத்தே இன்றி!

“சார்… போயிட்டு தான் இருக்கு! நேத்து கூட அது விஷயமா தான் போனேன்!”

கை நீட்டி நிறுத்தியவர், “உன்கிட்ட குடுத்த கேஸ் மூணு மாசமா அப்படியே நிக்குது! அதை முடிக்குறதை விட்டுட்டு மத்த எல்லா கேஸ்’லயும் தலையை நீட்டிட்டு இருக்க!” என்றார் காரமாய்.

“சார்… ஐ டின்ட் டூ இட் இன்ட்டென்ஷ்னலி! நான் நம்ம கேஸ் விஷயமா தான் அங்க போனேன்! ஆனா, கண்ணு முன்ன ஒரு தப்பு நடக்குறதை பார்த்துட்டு எப்படி சார் அப்படியே வர முடியும்!?” என்றாள்.     

 

“நீ என் வாயை அடைச்சுடலாம்! ஆனா, என்னை கேள்வி கேட்குறவங்களுக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்?” அவர் கேட்ட விதமே மேலிடத்தில் நன்றாய் வாங்கி கட்டியிருக்கிறார் என்பதை உணர்த்தியது.

“சார், இன்னும் பத்து நாள் போதும்! நான் கிட்டத்தட்ட நெருங்கிட்டேன்! எப்படியும் முடிச்சுடுவேன்!” என்றவள் சொல்ல, “உப்ப்ப்!” என தன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கண்ணை மூடியவர்,

“நீ இதுவரை எந்த கேஸ்’லயும் பத்து நாளுக்கு மேல நின்னது இல்லை! உன்கிட்ட வந்தாலே அது முடிஞ்சதுக்கு சமம்!  இதெல்லாம் தெரிஞ்சு தான் ‘நீ ஒரு பொண்ணு’ன்னு கூட யோசிக்காம உங்கிட்ட கேஸை கொடுக்க சொல்லி எனக்கு ஆர்டர் வந்துச்சு!” அவர் இப்படி சொல்ல, அவரறியாமல் பல்லை கடித்தாள் ஷைலஜா.

“ஆனா, நீ!!!” நிறுத்தியவர், “ம்ச்!” என்று சலிக்க, இன்னும் அவர் திட்டியிருந்தால் கூட பரவாயில்லை என்று தோன்றியது அவளுக்கு.

“சார்! திஸ் இஸ் மை லாஸ்ட் சான்ஸ்! பத்தே நாள்! கண்டிப்பா நான் முடிச்சுடுவேன்!” திடமாய் சொன்னவளை அலுப்பாய் பார்த்து மறுப்பாய் தலையசைத்தவர், 

“உன் சான்ஸ் நேத்து நைட்டோட முடிஞ்சுடுச்சு! இப்போ நீ இந்த கேஸ்’ல இல்லை!” என்று விட, நம்ப முடியாத திகைப்பில் “சார், வாட் டூ யூ மீன்!?” என்றாள். 

அவளது ஆறு வருட போலிஸ் வாழ்க்கையில் எத்தனையோ குற்றங்களை விசாரித்து கண்டுப்பிடித்திருக்கிறாள்! ஆனால், அவள் முடிக்க முடியாமல் திணறுவது ‘இது’ ஒன்றில் தான்! 

அருகே சென்றுவிட்டதாக எண்ணும்போது அப்படியே புரட்டிப்போட்டு ஆரம்பித்த இடத்திலேயே கொண்டு வந்து நிறுத்தியது இந்த வழக்கு!

அதுவே அவளுக்கு ஒரு வெறியை கொடுக்க எப்படியேனும் இதை முடித்தே தீர வேண்டும் என இருக்கும்போது இப்படி ஒரு பதிலை இவரிடம் இருந்து அவள் எதிர்ப்பார்க்கவில்லை.

“சார், நீங்க என்னை நம்பலையா?” 

“உன்னை நம்பினதால தான் இவ்ளோ கான்பிடென்ஷியலான கேஸை உனக்கு சஜஸ்ட் பண்ணேன்!!!” என்றவர்,

“உன்னை நம்பினதுக்கு எனக்கு கிடைச்ச கிப்ட் என்ன தெரியுமா?” என்றார்.  

அவள் பார்த்துக்கொண்டே இருக்க, “ட்ரான்ஸ்ஃபர்” என்று அவர் சொன்னதும் விழிகள் தெறிக்க அதிர்ந்துப்போனாள் அவள்.

“சார்!?” அதிர்ச்சி விலகாது இருப்பவளிடம், 

“இன்னும் ரெண்டே வருஷத்துல ரிடயர்மென்ட் வாங்கிட்டு பேரன் பேத்தியோட சந்தோசமா இருக்கலாம்ன்னு இருந்தேன்! ஆனா, இந்த வயசுல ஒரு ட்ரான்ஸ்பர்! அதுவும் குஜராத்’க்கு!”

இது அதை விட அதிர்ச்சி அவளுக்கு!

“சார்…. பட் ஓய்?”

“நம்ம இந்த கேஸை சால்வ் பண்ண டிலே பண்றதே அவங்களுக்கு கோபம்! இதுல நீ வேற ஒரு கேஸை புடிச்சுட்டன்னு டிவி’ல வரவும், நம்ம அவங்க விஷயத்துல லெதார்ஜிக்’கா இருக்கோம்ன்னு நினைச்சு ஆத்திரத்துல எனக்கு ட்ரான்ஸ்பர்!”

அதுவரை தான் செய்தது கொஞ்சமும் தவறில்லை என்று இருந்தாள். இப்போதும் அது தவறில்லை தான்! அவள் கடமையை தானே அவள் செய்தது. ஆனால், அது வேறொருவரை பாதித்து விட்டது எனும்போது வருத்தமாய், குற்ற உணர்வாய் இருக்க, 

“ஏதோ என்னால முடிஞ்சது, அவங்க கோபம் என்னை தாண்டி உன் பக்கம் வராம பார்த்துக்கிட்டது!” என்று அவர் சொன்னபோது, 

“ஏன் அங்கிள்!” என்றாள் தன்னைமீறி!

லேசாய் சிரித்தவர், “என் நண்பனுக்காக! அவன் பொண்ணுக்காக! இதுக்கூட பண்ண மாட்டேனா!?” என்றவர், தன் நாற்காலியில் இருந்து எழுந்தார்,

அவளும் எழுந்துக்கொள்ள, “நான் கொஞ்சம் மெடிக்கல் லீவ் எடுத்திருக்கேன்! இங்கிருந்து குஜராத் போய், தங்குறது, திங்குறது எல்லாம் ஏற்ப்பாடு பண்ணனுமே!” என்று இலகுவாய் சொல்லி சிரித்தவர், 

“உன் ஆன்ட்டி’யை கூப்பிட்டா பேரன் பேத்தியை விட்டு வர மாட்டாளாம்! வயசான காலத்துல தேவையா எனக்கிந்த சந்நியாசம்?” என்றார் கிண்டல் போல!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!