Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Malar Kanai Veesaathey

Malar Kanai Veesaathey 7 2

“சரி, எனக்கும் உங்களை விட்டா வேற ஆள் இல்லை. நான் நைட் கால் பண்ணுறேன். கொஞ்சம் பேசணும். பேசலாம் தானே?”

“கண்டிப்பா பேசலாம். தாராளமா பண்ணுங்க. ஒரு வேளை நீங்க கால் பண்ணினப்ப நான் எடுக்கலைன்னா கூட நான் மெஸ்ஸேஜ் பண்ணுறேன். அப்ப கால் பண்ணுங்க”



Advertisement

“சரி நான் வரேன்”, என்ற படி அவள் நடக்க ஆரம்பித்தாள்.

Advertisement

“வினோதினி..”

Advertisement

“ம்ம்”

Advertisement

“இன்னைக்கு ஒரு நாள் நான் டிராப் பண்ணவா?”, என்று தயக்கமாக கேட்டான்.

எந்த மறுப்பும் இல்லாமல் “சரி”, என்று அவள் சொல்ல சந்தோஷமாக வண்டியைக் கிளப்பினான். அவன் பின்னே எந்த தயக்கமும் இல்லாமல் ஏறி அமர்ந்தாள் வினோதினி. அவள் மனதில் தன்னை அன்னியமாக நினைக்க வில்லை என்று அவன் மனம் நிம்மதி கொண்டது.

பஸ் ஸ்டாண்டில் அவளை இறக்கி விட்டுவிட்டு அவன் சென்று விட்டான். அவள் விஜியின் வீட்டை நோக்கி நடந்தாள். நண்பர்களுடன் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்த ரவியின் கண்களில் இந்த காட்சி விழுந்து தொலைத்தது.

“என்ன ரவி, உங்க மதினியார் அந்த இன்பா வண்டில வந்து இறங்குறாங்க?”, என்று கேட்டான் ஒருவன்.

“இதுவா பெரிய விஷயம்? இன்னைக்கு காலைலயும் அவங்க அவன் கூட தான் போனாங்க”, என்றான் இன்னொருவன்.

“என்ன டா சொல்ற?”, என்று கேட்டான் ரவி.

“ஆமா டா, நான் காலைல பால் வாங்க வந்தப்ப உன் மதினி பஸ்க்கு நின்னுட்டு இருந்தாங்க. கொஞ்ச நேரத்துல மயங்கி விழுந்துட்டாங்க. எல்லாரும் சேர்ந்து தான் மயக்கத்தை தெளிய வச்சாங்க. அப்ப வந்த இன்பா தான் அவங்களை பேங்க்க்கு ஏத்திட்டு போனான்”, என்றான்.

“ஓ”, என்று சொன்ன ரவிக்கு ஏதோ தவறாக பட்டது. “இவளுக்கு எப்படி இவன் கூட பழக்கம்? இன்னைக்கு காலைல மயங்கி விழுந்ததுனால தான் பழக்கமா? இதை அத்தை கிட்ட வத்தி வைக்கணுமே?”, என்று எண்ணிக் கொண்டான்.

வினோதினி வீட்டுக்கு போகும் போது வாசலிலே ரிஷியை வைத்துக் கொண்டு நின்றிருந்தாள் ஆர்த்தி. அவளைக் கண்டு புன்னகைத்த வினோதினி ரிஷியையும் கொஞ்சினாள். அப்போது அங்கே விஜி வர அவள் முகத்தைக் கூட பார்க்காமல் ஆர்த்தியிடம் “டிரஸ் மாத்திட்டு வரேன்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாள்.

“எப்பவும் இவ திமிர் மட்டும் அடங்கவே அடங்காது”, என்றாள் விஜி.

“அவங்களுக்கு திமிர்னா உங்களுக்கு இருக்குறதுக்கு பேர் என்ன மதினி?”, என்று நக்கலாக கேட்டாள் ஆர்த்தி.

சிறிது நேரத்தில் வினோதினி உடை மாற்றி வந்து ஆர்த்தியிடம் பேசிக் கொண்டிருந்தாள். “மதினி டிரஸ் மாத்திட்டு வந்துட்டாங்க. அவங்களுக்கு டீ கொடுங்க விஜி மதினி”, என்றாள் ஆர்த்தி.

அதற்கு விஜி ஏதோ சொல்ல வர “எனக்கு எதுவும் வேண்டாம் ஆர்த்தி”, என்றாள் வினோதினி. என்ன நடந்திருக்கும் என்று ஆர்த்தியால் புரிந்து கொள்ள முடிந்தது.

அப்போது அங்கே ஆர்த்தியின் அம்மா அப்பா இருவரும் வந்து வினோதினியிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களை முறைத்து விட்டு உள்ளே சென்று விட்டாள் விஜி.

அவள் செய்கை ஒரு வித எரிச்சலைத் தர “அவளுக்காக நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன் அத்தை. மாமா நீங்களும் அவளை மன்னிச்சிருங்க”, என்றாள் வினோதினி.

“அடுத்தவங்க தெரிஞ்சு செய்ற தப்புக்கு நீ ஏன் மா மன்னிப்பு கேக்குற? எங்களுக்கு இது பழகிருச்சு. உன்னைப் பாத்த பிறகு எங்களுக்கு தோனுறது ஒண்ணு தான். அவளை எதுக்கு உங்க அம்மா உன்னை மாதிரி வளக்கலை?”, என்று கேட்டாள் ஆர்த்தியின் அம்மா.

“அப்படியும் சொல்ல முடியாது. நல்ல குணம் பிறக்கும் போதே வரணும்”, என்றார் ஆர்த்தியின் தந்தை. விஜி பற்றி பேசாமல் வெகு நேரம் வினோதினியிடம் பேசி விட்டே சென்றார்கள். ஆர்த்தியும் அவர்களுடனே சென்று விட்டாள்.

அவர்கள் சென்றதும் ரிஷியைத் தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் வினோதினி. “நைட்டுக்கு சமைக்க போறேன். உனக்கு நாலு சப்பாத்தி போதுமா?”, என்று கேட்டாள் விஜி.

“இல்லை எனக்கு வேண்டாம். நான் வெளில வாங்கிட்டு வந்துட்டேன்”, என்று பேச்சைக் கத்தரித்தாள் வினோதினி.

“இது என்ன புது பழக்கம்? என் வீட்ல இருந்துட்டு வெளிய வாங்கிச் சாப்பிடுவியா?”, என்று விஜி கேட்க அவளை ஒரு மார்கமாக பார்த்த வினோதினி “நீ சாப்பாடு தருவேன்னு நான் பாத்துட்டே இருந்தா இன்னைக்கு மாதிரி ரோட்ல தினமும் மயங்கி விழனும். ஒரு நாள் பட்டதே போதும். எனக்காக நீ எந்த கஷ்டமும் பட வேண்டாம்”, என்றாள்.

“கேஸ் காலியாயிரும், அதான் சொன்னேன்”, என்று சமாதானமாக விஜி சொல்ல “இப்ப எனக்காக நீ நாலு சப்பாத்தி சேத்து போட்டா உன் கேஸ் காலியாகிரும் தானே? அதனால வேண்டாம்”, என்றாள் வினோதினி.

“கேஸ்க்கு ஆயிரம் ரூபாய் உன் பேக்ல இருந்து எடுத்துக்கிட்டேன். அதனால தான் செஞ்சு தறேன்னு சொன்னேன்”

“என்னது இன்னைக்கும் பணம் எடுத்தியா? யாரைக் கேட்டு எடுத்த?”, என்று கோபத்துடன் கேட்டாள் வினோதினி.

“அம்மா பணம் தானே? நான் யாரைக் கேக்கணும்?”, என்று விஜி கேட்க அவளை முறைத்துப் பார்த்த வினோதினி “என் பர்ஸ்ல இருந்து பணம் எடுக்குறது இதுவே கடைசியா இருக்கட்டும். உனக்கே தெரியும் என்னைப் பத்தி. அப்புறம் நைட் ரிஷியை என்னோட ரூமுக்கு அனுப்பாத”, என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லி விட்டாள்.

“அதுவும் என் வீட்ல உள்ள ரூம் தான் அக்கா. அதை மறந்துறாத”

“ஆமா தாயி மறந்துட்டேன். உன் ரூம் தான். நான் தங்கி இருக்குற உங்க வீட்டு ரூமுக்கு அவனை அனுப்பாத. போதுமா?”

“அவன் தான் உன் கூட படுக்கணும்னு வரான்”

“அவன் வறேன்னு சொன்னாலும் அவனை அடிச்சு உன் கூட படுக்க வை. அவனால நான் என் தூக்கத்தை தொலைக்க முடியாது”

“ஒரு சின்ன குழந்தையைப் பாத்துக்குறதுல இப்படி பேசுற? அவ்வளவு கல் நெஞ்சக்காரியா நீ? சே”

“யார் கிட்ட இளகின மனசா இருக்கணும்? யார் கிட்ட கல் நெஞ்சக் காரியா இருக்கணும்னு நான் உன் கிட்ட இருந்து தான் கத்துகிட்டேன் விஜி. சாயங்காலம் வந்தாங்களே, உன்னோட மாமனார் மாமியார். அவங்க வீடு தானே இது? அவங்க உழைச்சு கட்டின வீடு தானே இது? அவங்களை வாங்கன்னு ஒரு வார்த்தை சொன்னியா? இது எல்லாம் அம்மாவுக்கு தெரியணும். உன்னை மகளே இல்லைன்னு தலை முழுகிருவாங்க. ஆமா உன் கிட்ட போய் நான் எதுக்கு இதெல்லாம் சொல்லிட்டு இருக்கேன்? நீ எல்லாம் திருந்துற ஜென்மமா? ரிஷியை நைட் என் ரூமுக்கு அனுப்பாத. அவ்வளவு தான். இனி யார் வந்து கதவைத் தட்டினாலும் நான் திறக்க மாட்டேன்”

“இது என் வீடு. எனக்கே கதவை திறக்க மாட்டேன்னு சொல்லுவியா?”

“உன் வீடு தான். ஆனா இப்ப அந்த ரூமை நான் வாடகைக்கு எடுத்துருக்கேன்னு நினைச்சிக்கோ”

“அப்ப வாடகைப் பணம்?”, என்று விஜி கேட்க அவளை நான்கு அறை அறைய வேண்டும் போல இருந்தது வினோதினிக்கு.

“அதான் என் பேக்ல இருந்து திருடிருக்கியே? அப்புறம் என்ன?”, என்று எரிச்சலுடன் கேட்டாள்.

“என்ன நீ திருடின்னு எல்லாம் சொல்ற?”, என்று அதற்கும் விஜி எகிற “தப்பு தான் மா. உன் குணம் தெரிஞ்சும் உன் கிட்ட பேசிட்டு இருக்குறது தப்பு தான்”, என்றவள் ரிஷி புறம் திரும்பி “ரிஷி குட்டி சமத்தா போய் டி‌வி பாருங்க. அம்மா சாப்பாடு தந்த பின்னாடி அம்மா கூட தூங்குங்க. வினும்மாவுக்கு வேலை இருக்கு சரியா?”, என்று சொல்லி விட்டு தன்னுடைய அறைக்குச் சென்று விட்டாள்.

அறைக்குச் சென்றதும் இதற்கெல்லாம் காரணமான தேவியை நினைத்து எரிச்சலாக வந்தது. எப்போதுமே வேலை முடிந்து வந்ததும் தேவியை அழைப்பவள் இன்று அழைக்கவே இல்லை. அப்படியே கட்டிலில் படுத்து விட்டாள்.

இரவு எட்டு மணி ஆகும் போது கதவைத் தட்டிய விஜி “அக்கா சாப்பிட வா”, என்றாள்.

“எனக்கு வேண்டாம்னு சொன்னேன்ல? நான் வாங்கிட்டு வந்துட்டேன்”, என்று கதவைத் திறக்காமலே குரல் கொடுத்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!