Margazhi Poove..!- 7.1
தன் அறையின் பால்கனியில் இருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான் விஜய். அந்த காலை நேரத்தில், துளசி பனித்துளி விழுந்த துளசியைப் போல் பளிச்சென்று இருந்தாள். காதில் ,கழுத்தில் என்று ஒன்றும் அணியவில்லை. ஆனால் துடைத்து வைத்ததைப் போன்று முகம் பளிச்சென்று இருந்தது.
அவளை நினைக்கக் கூடாது, பார்க்கக் கூடாது என்று விஜய்யின் மனம் எண்ணினாலும், அந்த எண்ணங்களை எல்லாம் நொடியில் தவிடு பொடியாக்கும் வித்தையை கற்றிருந்தால் போலும்.
“எதுக்கு விஜய் இந்த வேண்டாத வேலை..? அந்த திமிர் பிடிச்சவ இப்ப உன்னைப் பார்த்தா, அதுக்கும் ரங்க ராட்டினம் ஆடுவா..!” என்று மனசாட்சி எச்சரிக்கை செய்தாலும், அவனின் கண்கள் என்னவோ அவளைக் காணும் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தது.
யாரோ தன்னை நீண்ட நேரம் பார்ப்பதைப் போன்று தோன்ற, சுற்றும் முற்றும் பார்த்த துளசி, பட்டென்று மேலே பார்த்தாள். யாரையும் காணவில்லை.
Advertisement
‘நமக்குத்தான் அப்படித் தோணுதா..?” என்று நினைத்தவள், உள்ளே செல்ல,
“என்ன துளசி? இன்னைக்கு ஆபீஸ் போகலையா..?” என்று அங்கு வந்த வள்ளியம்மை கேட்க,
“இல்ல பாட்டி..! இன்னைக்கு ஷாப்பிங் போறேன்..!” என்றாள்.
Advertisement
“தனியாவா…?” என்றார்.
Advertisement
“இல்லை ரோசு வரா..!” என்றாள்.
“யாரு அந்த லூசா..?” என்றார் வள்ளியம்மை.
“பாட்டீஈஈ…” என்று பல்லைக் கடித்தவள்
Advertisement
“லூசு இல்லை என் பிரண்ட் ரோசு..!” என்றாள் பொறுமையாக.
“அருண் இல்லைன்னா விஜய் யாரையாவது கூட்டிட்டுப் போங்க..!” என்றார்.
“அதெல்லாம் ஒரு மண்ணும் தேவையில்லை. எங்களுக்குப் போகத் தெரியும். நாங்க என்ன சின்னப் பப்பாவா..?” என்று கேட்டுக் கொண்டிருக்க,
“நீ பெரிய பாப்பா தான். நானும் அப்பாவும் கோவிலுக்கு போயிட்டு வரோம்…!” என்றபடி வந்தனர் வித்யாவும், சுரேஷும்.
“ம்ம்..” என்று துளசி சொல்ல,
“பார்த்துப் போயிட்டு வாங்க வித்யா..!” என்றார் வள்ளி.
“சரிம்மா..!”
“அப்படியே…! என் மகளுக்கு நல்ல புத்தியைக் குடு..! கல்யாணத்துக்கு சம்மதிக்க வைன்னு வேண்டிக்க வித்யா…!” என்றார் வள்ளி.
“அம்மா..!” என்று வித்யா பேச வருவதற்குள்…
“இன்னொரு தடவை இதைப் பத்தி பேசுனிங்க… அடுத்த நிமிஷம் நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன்..!” என்றாள் துளசி.
“என் மக, நாங்க கிழிச்ச கோட்டைத் தாண்டினது இல்லை. ஆனா அவ மக நீ மட்டும் தான் இப்படி இருக்க. நீ செய்றது தான் சரின்னு நினைச்சுகிட்டு..!” என்றார் வள்ளி.
“காலையிலையே ஆரம்பிச்சாச்சா…? இதென்ன வீடா இல்லை வேற எதுவுமா..?” என்று ரத்னவேல் கேட்க,
“அந்த சந்தேகம் தான் எனக்கும்..!” என்றாள் துளசி.
“நீ மேல போ துளசி..!” என்று வித்யா சொல்ல,
“ஆமா..! இதை விட்டா வேற ஒன்னும் உங்களுக்குத் தெரியாது. எப்பப் பாரு, மேல போ துளசி, ரூம்க்கு போ துளசின்னு சொல்லிக்கிட்டு..!” என்று எரிந்து விழுந்தாள் அவள்.
“இப்ப என் மக என்ன சொல்லிட்டான்னு இந்த பேச்சுப் பேசுற…?” என்று வள்ளி சண்டைக்கு வர,
“இங்க பாருங்க பாட்டி..! நான் உங்க மககிட்ட சண்டைக்குப் போகலை. என் அம்மாகிட்ட சண்டை பிடிக்குறேன். அதைத் தடுக்குற உரிமை யாருக்கும் இல்லை.புரியுதா..?” என்றாள்.
“வள்ளி..! கொஞ்சம் அமைதியா இரு..! இப்ப கொஞ்ச காலமா… இந்த வீட்ல தொட்டத்துக்கு எல்லாம் சண்டை வருது. யாரும் யார்கிட்டயும் சாதாரணமா பேச முடியுல.பேசுற ஒவ்வொரு பேச்சுக்கும் சண்டை…!” என்று மனசு வெறுத்துப் போய் பேசினார் ரத்னவேல்.
“பாட்டி அவங்க பேரனுக்கு ஜால்ரா தட்டுறதை நிறுத்துற வரைக்கும் இப்படித்தான் பிரச்சனை வரும்..!” என்றாள் துளசி.
“இப்ப எதுக்கு அவனை இதுல இழுக்குற…?” என்றார் வள்ளி.
“பிள்ளையையும் கிள்ளிவிட்டுட்டு தொட்டிலையும் எப்படி ஆட்டுறதுன்னு அவனுக்குத் தான் நல்லாத் தெரியுமே..!” என்றாள்.
இதையெல்லாம் பார்த்த விஜய்யின் அப்பா ராஜ சேகர் நொந்து போனார். அவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அந்த வீடு தான். இப்போது அந்த வீட்டிலும் நிம்மதி இல்லை. ஒவ்வொருவரும் சண்டைக்கான நேரத்தை எதிர்நோக்கி இருந்தனர் என்றே சொல்லலாம்.
“அம்மா..! இனி நீங்க விஜய்யைப் பத்தி கவலைப் படவும் வேண்டாம். அவனைப் பத்தி யார்கிட்டயும் பேசவும் வேண்டாம்.எனக்கே சில சமயம் கோபம் வருது..!” என்றார் ராஜசேகர் அமைதியாக.
அவர் பேச ஆரம்பித்ததும் துளசி அமைதியாகிப் போனாள். ஏனோ எல்லோரையும் எதிர்த்து பேசுவதைப் போல் அவரை அவளால் பேச முடியாது.
“என் பேரனைப் பத்தி நான் கவலைப் படாம வேற யார் கவலைப் படுவா..? அப்ப அவனுக்காக நான் எதுவும் செய்யக் கூடாதா சேகரு..!” என்றார் வள்ளி.
“நான் அப்படி சொல்லலை! எதுக்கு எல்லாருக்கும் மனகஷ்ட்டம். விட்ருங்க. இதைப் பத்தி இனி பேசாதிங்க. விஜய்யும் அதை விரும்பலை. யாருமே பேசக் கூட விரும்பாத ஒரு விஷயத்தை பேசி எல்லாரும் மனசு கஷ்ட்டப் படுறதுக்கு, அதை அப்படியே விட்ருங்க. துளசிக்குன்னு ஒரு பையன் பிறந்திருப்பான். விஜய்க்குன்னு ஒரு பொண்ணு பிறந்திருப்பா. விதி எதை முடிவு பண்ணுதோ அது தான். நாம பேசி என்ன ஆகப் போகுது.
என் பையன் சின்ன வயசுலையே தாயை இழந்தவன். வரப் போற பொண்ணு அவனுக்கு அவன் அம்மாவோட இடத்தையும் நிரப்பனும். பிடிக்காதவங்களை சேர்த்து வைச்சா… நான் பொண்டாட்டி இல்லாம பட்ட கஷ்ட்டத்தை, அவன் பொண்டாட்டி இருந்தும் படுவான். அவன் அப்படி இருக்குறதை என்னால பார்க்கவே முடியாது.
என் பையனுக்கு எந்த குறையும் இல்லை. இன்னைக்கு சரின்னாலும் அவனுக்கு கழுத்தை நீட்ட எத்தைனையோ பேர் காத்திட்டு இருக்காங்க. தாயாவும் தந்தையாவும் இருக்குறது நான் தான். என் பையனுக்கு என்ன வேணும்ன்னு அவனே முடிவு பண்ணட்டும். நீங்க விட்ருங்க…” என்றார் ராஜ சேகர்.
அவரின் வார்த்தைகள் தெளிவாக இருந்ததே தவிர குரல் அப்படி இல்லை. கொஞ்சம் பிசிர் அடித்தது. இருந்தாலும் மனதில் பட்டதை சொல்லி விட்டார்.
“என்ன சேகரு..? இப்படி சொல்லி எங்களை ஒதுக்கிப் போட்ட..! என் பேரனை நான் அப்படியா வளர்த்தேன்..!” என்று அழுகவே தொடங்கி விட்டார் வள்ளி.
“நான் யாரையும் எந்த குறையும் சொல்லலைம்மா..! ஆனா இன்னைக்கு என் மனைவியோட நினைவு தினம். அது கூட இங்க யாருக்கும் நியாபகத்துல இருக்கா என்னன்னு எனக்குத் தெரியலை. ஆனா, இன்னிக்கு மட்டுமாவது எங்களை நிம்மதியா விடுங்கன்னு சொல்றேன்…” என்றார்.
அவரின் இந்த பேச்சில் வள்ளியே வாயடைத்து விட்டார். உண்மையில் யாருக்கும் நியாபகம் இல்லை.
“வேணும்ன்னு மறக்கலை சேகரு..!” என்றார் ரத்னவேல்.
“நான் தப்பா ஒன்னும் சொல்லைப்பா..! ஆனா, இப்படியே போனா…? என்று நிறுத்தியவர், என் பையன் என்ன சொல்றானோ அது தான்..!” என்று பேச்சை முடித்து விட்டார் ராஜ சேகர்.
“என்ன மச்சான்..! என்னென்னமோ பேசுறிங்க…? நாங்க எல்லாம் இல்லையா..?” என்றார் சுரேஷ்.
எத்தனை பேர் இருந்தாலும், ஒரு மனுஷனுக்கு பொண்டாட்டி இருக்கணும். ஒரு மகனுக்கு அம்மா இருக்கனும்ன்னு சமீப காலமா தெரிஞ்சுகிட்டேன் மாப்ள. நானும் இல்லைன்னா…விஜய்..விஜய்யோட நிலைமை..!” என்று பொத்தென்று சோபாவில் அமர,
“அப்பா…!” என்று புயல் வேகத்தில் வந்தான் விஜய். நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். எங்கே கீழே வந்தால் கோபத்தில் தன்னை மீறி கத்தி விடுவோமோ என்று தான் அமைதி காத்தான். சேகரின் வேதனையை அதற்கு மேல் அவனால் கண்கொண்டு காண முடியவில்லை.
“எதுக்குத் தேவையில்லாம கண்டதையும் யோசிக்கிறிங்க…? நீங்க உள்ள வாங்க முதல்ல..!” என்று அவரை அழைத்துக் கொண்டு போனான் விஜய்.
“உனக்கு இங்க பிடிக்கலைன்னா… நாம வீட்டை விட்டு போய்டலாம் விஜய்..!” என்று அவர் பிசிர் தட்டிய குரலில் சொல்லிக் கொண்டே நடக்க, அதைக் கேட்ட ரத்னவேலிற்கும், வள்ளியம்மைக்கும் மனமே கனத்துப் போனது.
ராஜசேகர் திடமானவர் தான். மனைவியின் இழப்பைத் தாங்கிக் கொண்டவருக்கு மகனுக்கு ஒன்று என்றால் தாங்க முடிவதில்லை.
“சேகரண்ணா இந்த ஒரு வாரமும் இப்படித்தான் இருக்காருப்பா. ஆபீஸ்ல இருந்தாலும் எதாவது யோசனையிலேயே இருக்கார். என்னன்னு தான் தெரியலை. ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட முடியாம போய்டுச்சு..” என்றார் சுந்தர சேகர்.
“என்னடா சொல்ற சின்னவனே..?” என்று அதிர்ந்தார் வள்ளி.
“அவர் தாம்மா வீட்ல சொல்ல வேண்டாம்ன்னு சொன்னார். ஒரு மாதிரி வியர்த்து, படபடன்னு வந்து மயங்கிட்டார். அப்பறம் ஹாஸ்பிட்டல் போயிட்டு தான் வீட்டுக்கு வந்தோம்..!” என்று சுந்தர் சொல்ல,
“வர வர இந்த வீட்ல என்ன நடக்குது..? யாரும் எதுவும் சொல்லாம இருந்தா எங்களுக்கு என்ன தெரியும்..? நாங்க எதுக்கு இருக்கோன்னு எங்களுக்கே தெரியலை..?” என்றார் ரத்னவேல் தாத்தா.
“உங்க பொண்ணுக்கு அவ விரும்பற மாதிரியே ஒரு பையனைக் கட்டி வைங்க மாப்பிள்ளை. இனி அவ கல்யாண விஷயத்துல நாங்க தலையிட மாட்டோம்..!” என்றார் ரத்னவேல் கறாராக.
“அப்பா..!” என்று வித்யா அதிர,
“ஒன்னு மட்டும் சொல்லனும்ன்னு நினைக்கிறேன். நாங்க விஜய்க்கு துளசியை பேசி முடிக்கலாம்ன்னு சொன்னது, வேற எந்த காரணத்துக்காகவும் இல்லை. நம்ம பேத்தி…நம்ம பேரனை நல்லா பார்த்துக்குவா அப்படின்ற ஒரு நப்பாசை தான். எவ்வளவு காசு பணம் இருந்தாலும்…சொந்தம் எல்லாம் பக்கத்துல இருக்குற மாதிரி வருமா. நான் சொல்றது இன்னைக்கு விளையாட்டாத் தெரியலாம். ஆனால் ஒரு நாள் எல்லாரும் உணருவிங்க..!” என்று சொல்ல,
“ஏன் மாமா இப்படி எல்லாம் பேசுறிங்க…! எல்லாம் நல்லாதாவே நடக்கும். என்னை நம்புங்க..!” என்றார் சுரேஷ்.
“உங்களை மட்டும் தான் மாப்பிள்ளை நம்பினோம். ஆனா, நீங்களும் உங்க மக விருப்பம் தான்னு சொல்லிட்டிங்க..!” என்றார் வள்ளி.
“இப்ப மாமாவும் என்ன சொல்லிட்டு போறார்..? அவர் பையன் விருப்பம் தான் அவருக்கு முக்கியம்ன்னு சொல்லிட்டு போறார். அதையே என் அப்பா சொன்னா, அது தப்பு..!”என்றாள்.
“துளசி..! வாயை மூடு..!” என்றார் சுரேஷ் சற்று சத்தமாக. அதிர்ந்து விட்டாள் துளசி. கொஞ்சமும் தன்னை விட்டுக் கொடுக்காத அப்பா, தன்னிடம் அதிர்ந்து கூட பேசாத அப்பா, இன்று கொஞ்சம் குரல் உயர்த்திப் பேசியதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்கு காரணமும் விஜய் என்றே எண்ணினாள். அவளுக்கு எது நடந்தாலும் அதற்கு விஜய் மட்டுமே பொறுப்பு என்பதைப் போல் அவள் மனதில் பதிந்திருந்தது.
அறைக்குள் சென்ற விஜய்யோ…
“என்னப்பா நீங்க..? என்னாச்சு உங்களுக்கு…? எப்பவும் இப்படி பேச மாட்டிங்களே..?” என்றான்.
‘எப்படி இருந்தவன் என் மகன்..? எவ்வளவு கம்பீரமாய் வளைய வந்தான்…? எவ்வளவு திறமையானவன்?’ என்று அவனைப் பார்த்துக் கொண்டே மனதிற்குள் பேசிக் கொண்டிருந்தார் ராஜ சேகர்.
“என்னப்பா ஆச்சு..? சொல்லுங்க..?” என்று மீண்டும் உலுக்கினான் விஜய்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை விஜய். இதுவரைக்கும் உனக்கு நான் ஒண்ணுமே செஞ்சதில்லை.கூட இருந்து வளர்க்கலை. அம்மாவும் இல்லாம, அப்பா என்னோட அருகாமையும் இல்லாம வளர்ந்தாலும் உன்கிட்ட ஒரு குறை சொல்ல முடியாது. இதை எல்லாம் இப்ப நினைச்சா எனக்கு குற்ற உணர்வா இருக்குப்பா..!” என்றார் சேகர்.
“அப்படி எல்லாம் எதுவுமே இல்லப்பா. இன்னைக்கு நான் இந்த அளவுக்கு இருக்கக் காரணமே நீங்க தான். நீங்க பக்கம் இருந்து வளர்க்கலைன்னாலும், பாட்டி, சித்தி எல்லாரும் இருந்தாங்களே. நான் என்னைக்குமே அப்படி பீல் பண்ணதே இல்லை. நீங்க தேவையில்லாம மனசைப் போட்டுக் குழப்பிக்கிற வேண்டாம்..” என்றான் தெளிவாய்.
‘இப்ப இருக்குற தெளிவு நடந்தது எல்லாம் தெரிஞ்சா….அப்பவும் இருக்குமான்னு தெரியலையே விஜய் ‘ என்று மனதிற்குள் என்ன,
வெளியே பேச்சு சத்தம் எதுவுமின்றி அமைதியாகத் தெரிய, தனக்குள் சிரித்துக் கொண்டான் விஜய்.
மனைவியின் நினைவு தினத்தில் கொஞ்சம் நொறுங்கித்தான் போயிருந்தார் ராஜ சேகர். எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் இறந்த மனைவியின் நினைவு அவருக்கு அதிகமாய் இருந்தது.
நடந்ததைக் கேள்விப்பட்ட பிரவீணுக்கு, துளசி மேல் கோபமாகத் தான் வந்தது. அருணுக்கோ துளசியிடம் பேசக் கூட விருப்பம் இல்லை. நடந்த எல்லா விஷயத்திலும் நீலா மட்டும் எதுவும் பேசவில்லை.
விஜய் அலுவலகம் கிளம்பி வர, துளசியும் ஷாப்பிங் செல்வதற்காக கிளம்பி வந்தாள். இருவரும் ஒரே நேரத்தில் அறைக்குள் இருந்து வெளியே வர, அனுமதியின்றி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
ஒரே நிமிடம் தான்..! பார்வையைத் திருப்பிய விஜய் பட்டென்று கீழே இறங்கிவிட்டான். ஆனால் சில நிமிடங்கள் அப்படியே நின்றிருந்தாள் துளசி.
ஏதோ ஒரு உந்துதலில் அவள் மீண்டும் பார்க்க, அவனோ அவளைக் கண்டு கொள்ளவே இல்லை. வள்ளியம்மையிடம் பேசிக் கொண்டிருந்தவன், வாசலில் கார் சத்தம் கேட்க,
“இந்த நேரத்துக்கு நம்ம வீட்டுக்கு யார் வராங்க..?” என்று நிமிர்ந்து பார்த்தான். ரத்னவேல் தாத்தாவும் அப்படியே பார்க்க, காரை விட்டு இறங்கிய கனகவேலுவைப் பார்த்த வள்ளிப் பாட்டி…
“ஆத்தி..!” என்று கையிலிருந்த டம்ளரை கீழே விட்டார். அந்த சத்தத்தில் அனைவரும் வர, விஜய்யைத் தவிர பெரியவர்கள் அனைவர் முகத்திலும் அதிர்ச்சி. துளசியும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
