Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Mister Rascal

Mister Rascal 13

அன்று வீட்டிலிருந்த ஷைலஜா காலை உணவுக்கும் வெளியே வரவில்லை, மதிய உணவு வேளை கடந்தும் வெளியே வரவில்லை என்றதும் துர்காவுக்கு அதீத கவலையாய் போனது.

 

சில நாட்களாய் அவளும் பார்க்கிறாள் தானே!? ஷைலஜா அவளாகவே இல்லை. அவளது நிமிர்வு, தெளிவு, கம்பீரம் எல்லாம் களவாடப்பட்டுவிட்டதை போல தோன்றியது.



Advertisement

 

என்னவென்று கேட்டாலும் சொல்லிவிடும் ரகமா அவள்? முறைத்தே துரத்தி விடுவாள்!

 

Advertisement

பொருத்து பொருத்து பார்த்தவள் மெல்ல அவள் அறைக்கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

Advertisement

 

மடியில் ஒரு தலையணையை வைத்து அழுத்தி பிடித்துக்கொண்டு கண்மூடி கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் ஷைலஜா.

 

Advertisement

தயக்கமாய், “அக்கா?” என்று அழைக்க, ஒரு குரலுக்கே விழித்தவள், “என்ன?” என்றாள்.

 

“சாப்பாடு!?”

 

“ப்ச்… பசிக்கல!”

 

“நேத்து நைட்டும் சாப்பிடல! இன்னைக்கு விடிஞ்சதுல இருந்து காஃபி கூட குடிக்கல! எப்படிக்கா பசிக்காம இருக்கும்?”

 

“ப்ச்… துர்கா… தொல்லை பண்ணாத! போ!” அலுப்பாய் சொன்னாள்.

 

எப்போதும் போல சரியென்று போக முடியவில்லை அவளால். ஷைலஜாவின் அருகே கட்டிலில் அமர்ந்தவள், “உங்க மனசுல ஏதோ பாரம் இருக்கு! என்னன்னு சொல்லிட்டா லேசாகிடும்! என்கிட்ட சொல்லுங்கக்கா!” என்றாள்.

 

ஷைலஜாவிற்கும் தன் குழப்பங்களை தனக்குள்ளே வைத்து வைத்து ஒரு வித அழுத்தமே உண்டாகியிருக்க, சொல்லலாமா? என்று எண்ணம் வந்துவிட்டது.

 

“அக்கா… சொல்லுங்க”

 

துர்கா மீது இருக்கும் சிறு சந்தேகத்தை முதலில் தீர்த்துக்கொள்ள நினைத்தாள் ஷைலஜா.

 

“அன்னைக்கு நான் ஒரு செயின் போட்டுட்டு போனேன்ல? அதுல கூட கேமரா இருக்குன்னு சொன்னேனே!?” என்று கேட்க,

 

“ஆமா அக்கா… உடைச்சுடுவேன்னு என்னை எடுக்கவிடல நீங்க!” என்றாள் துர்கா.

 

“அந்த செயின்ல கேமரா இருக்குன்னு யார்கிட்டயாவது சொன்னியா நீ?” என்றதும், ‘ங்கே’ என்று முழித்தாள் துர்கா.

 

“என்னக்கா சொல்றீங்க? நான் யாருக்கிட்ட சொல்லுவேன்? நான் தான் யார்க்கிட்டயும் பேசுறதே இல்லையே?”

 

“அப்போ ரகுக்கிட்ட நீ சொல்லல?”

 

“ரகு’வா?”

 

“ப்ச்… அதான் பூபதி!”

 

“அந்த அண்ணே நம்பர் கூட என்கிட்ட இல்ல.. நான் எப்டிக்கா சொல்லிருப்பேன்!?” துர்கா கேட்பதும் சரிதானென்றே தோன்றியது.

 

ஷைலஜா யோசனையில் இருக்க,

“அக்கா… என்னை சந்தேகப்படுறீங்களா?” உள்ளேப்போன குரலில் அவள் கேட்கவும் தான் ஒரு மாதிரி ஆகிவிட்டது ஷைலஜாவிற்கு.

 

“இல்ல” என்று மறுத்து சொல்ல வர, “தப்பில்ல க்கா… உங்க வேலையே அதானே? சந்தேகப்படாம குற்றவாளியை கண்டுப்பிடிக்க முடியுமா என்ன?” தன்னை தானே சமாதனம் செய்துக்கொண்டு அவளையும் சமாதானம் செய்தாள் துர்கா.

 

ஷைலஜாவிற்கு சங்கடமாய் இருந்தது.

 

“சாரி துர்கா! நான் ஏன் இப்படி இருக்கேன்னு எனக்கே தெரியல! பாக்குற எல்லார் மேலையும் சந்தேகமா இருக்கு!” என்றாள்.

 

“கேஸு தான் முடிஞ்சுடுச்சுல?” அவள் புரியாமல் கேட்க,  “அப்படி தான் சொல்றாங்க… ஆனா அது முடியல” என்றாள் ஷைலஜா.

 

துர்கா பதில் பேச தெரியாமல் அமைதியாமல் இருந்தாள்.

 

சில நேர அமைதியை கலைத்தது ஷைலஜாவின் குரல்.

 

“எனக்கு ரகு மேல தான் சந்தேகம்!”

 

வெளிப்படையாக அதிர்ந்துப்போனாள் துர்கா.

 

“ச்ச! என்னக்கா அந்த அண்ணனை போயி?” சொல்வதே தாங்கவில்லை துர்காவுக்கு.

 

“ஏன் அவர்மேல தப்பே இருக்காதா?”

 

“இருக்காதுக்கா! அவர் உங்களுக்குன்னே பொறந்தவரு!” இப்படி சொன்னவளை வெறுமையாய் பார்த்தாள் ஷைலஜா.

 

“என்ன க்கா?”

 

“ப்ச்! எதையும் நல்லவிதமா மனசு ஏத்துக்க மாட்டேங்குது!

 

“நீங்க ரொம்ப குழம்பிப்போய் இருக்கீங்க! அதான் இப்படி கண்டதும் தோணுது! வயிறு முட்ட சாப்பிட்டுட்டு வந்து உட்காந்து யோசிங்க! எல்லா குழப்பமும் ஓடிடும்!” என்றவள் அவள் மறுக்க மறுக்க கேட்காமல் பறிமாறினாள், உடன் நின்று உண்ணவும் வைத்தாள்.

 

உண்மையில் வயிறு நிறைந்ததும் ஒரு தெளிவு பிறந்ததை போல இருந்தது அவளுக்கு.

 

அவள் தெளிவாகிவிட்டதை உணர்ந்த துர்கா மெல்ல, “உங்களுக்கு ஏன் பூபதி அண்ணா மேல சந்தேகம்?” என்றாள்.

 

ஷைலஜாவும் சொல்ல தயங்கவில்லை.

“முன்னாடி சந்தேகம் இல்லை! எப்போ என்கிட்ட என்னை பத்தின விஷயம் எல்லாம் சொல்லி, என் மாமா பையன் பேரை சொன்னாரோ… அப்போ இருந்தே லேசான சந்தேகம்!” என்றாள்.

 

“ரகு சொன்ன விதம்… அவர் தான் மாமா மகன்னு சொல்ற மாதிரி இருந்துச்சு! அதை தெளிவுப்படுத்திக்க நான் கேட்கவந்தப்போ எல்லாம் ஏதோ ஒரு தடங்கல்… அது அதுவா வந்துச்சா இல்ல அவரே அவாய்ட் பண்ணாரான்னு தெரியல!”

 

துர்கா, “அவர் உங்க சொந்தமா இருக்க வாய்ப்பில்லையோ!?”

 

‘இல்லை’ என மறுப்பாய் தலையசைத்தவள், “என் மாமா பையன் ரகுக்கு சின்ன வயசுலேயே ஏதோ சம் இன்பெக்ஷன்னு ஒரு மைனர் ஆபரேஷன் செஞ்சு கால் சுண்டு விரல் ஒன்ன ரிமூவ் பண்ணிட்டாங்க!” என்றுவிட்டு,

 

“இந்த ரகு’க்கு பத்து விரலுமே இருக்கு!” என்றாள்.

 

‘ஓ!’ என கேட்டுக்கொண்ட துர்கா, “ஏன்க்கா அண்ணனா உங்ககிட்ட வந்து நான் உன் மாமா மகன்னு சொல்லுச்சா? இல்லல? ஒருவேளை நீங்க தப்பா புரிஞ்சுருக்கலாம்ல?” என்று கேட்க,

 

“ஒருத்தர் மேல சந்தேகம் வராத வரைக்கும் அவங்களுக்கு வக்காலத்து வாங்க தான் சொல்லும் மனசு!” என்றாள் ஷைலஜா.

 

“போங்க க்கா!” என்றவள், “இன்னைக்கு அண்ணன் கூட வெளில போறீங்கல்ல? ரெண்டு நாள் அவரோட இருந்துட்டு வாங்க! சந்தேகம் எல்லாம் காணா போய்டும்!” என்று வெள்ளையாய் சிரிக்க, அவள் முகத்தை பார்த்த ஷைலஜாவிற்கு மனதுக்குள் ஒரு அழுத்தம்.

 

“துர்கா… நான் திரும்ப வர ரெண்டு மூணு நாள் ஆகும்! பத்திரமா இருந்துக்கோ! வெளில எதுக்கும் போகாத! எதாவது வேணுனா செக்யூரிட்டி கிட்ட சொல்லி வாங்கிட்டு வர சொல்லு! நைட்ல கதவை லாக் பன்னிருக்கொமான்னு நல்லா செக் பண்ணு!” என்றாள்.

 

“என்னை பத்தி கவலையே படாதீங்க ககா! நான் பத்ரமா இருந்துப்பேன்!” சிரித்துக்கொண்டே சொன்னவளின் கன்னத்தை ஒரு கையால் தாங்கியவள்,

 

“நீ என் தங்கச்சி மாதிரி! உன்னை திட்டிட்டே தான் இருப்பேன்! ஆனாலும் ரொம்ப பிடிக்கும் உன்னை!” முதல்முறையாய் தன் மனதில் இருந்து வெளிப்படையாய் சொன்னாள் ஷைலஜா. துர்காவின் கண்கள் நிறைந்துப்போனது.

 

“இந்த உலகம் எல்லாருக்குமானது! யாரை சார்ந்தும் யார் வாழ்க்கையும் இல்லை! நானே இல்லன்னாலும் நீ தைரியமா இருக்கணும்! எதுக்கும் பயப்படக்கூடாது!” என்று சொல்ல, துர்காவின் தேங்கிய கண்களில் இருந்து நீர் சரசரவென இறங்கியது.

 

“இப்படியெல்லாம் பேசாதீங்க க்கா! இந்த வாழ்க்கை நீங்க போட்ட பிச்சை! புதர்ல பாதி உயிரா கடந்த என்னை நீங்க அப்படியே விட்டுருந்தா நான் செத்து ஐஞ்சு வருஷம் ஆகிருக்கும்!” என்று பேச, இவளிடம் கொஞ்சம் குழைந்தாள், இவள் பூமி வரை தழைவாள் என்பது புரிந்த ஷைலஜா,

 

“இப்படி பேசாதன்னு பலமுறை சொல்லிட்டேன் துர்கா! ஒழுங்கா கண்ணை துடைச்சுட்டு போய் எங்களுக்கு ஏதாவது ஸ்நேக்ஸ் ரெடி பண்ணு! டைம்முக்கு பொறந்தவன், டான்னு வந்து நிப்பான்!” என்றான் ரகுவை திட்டிக்கொண்டே!

 

சட்டென சிரித்தவள், வேகமாய் கண்களை துடைத்துக்கொண்டு, “நான் தான் சொன்னேன்ல! அண்ணன் உங்களுக்குன்னே பொறந்தவரு!” என்று சொல்லிவிட்டு ஓட, நினைத்துப்பார்த்தவளுக்கு சிரிப்பாய் வந்தது.

 

மாலை சொன்னதை போலவே ஏழு மணிக்கு டான் என வந்து நின்றான் ரகு. காலர் இல்லாத டீஷர்ட், முட்டியை தொடும் ஷார்ட்ஸ் என சிறு பையன் போல அவன் வந்து நிற்க, தன்னை மீறி அவனை ரசித்தாள் ஷைலஜா.

 

அவளும் குர்தி, லெகின் என சாதாரண உடையில் இருக்க, அவளை போல ரகசியமாய் ரசிக்காமல், “லுக்கிங் கிரேட்!” என வாய்விட்டே பாராட்டினான்.

 

காரில் ஏறியதும், ஆயிரம் பத்திரம் சொன்னாள் துர்காவிற்கு. ஏனோ அவளை தனியே விட்டுப்போக மனமே இல்லை! இதுதான் அவளை கடைசியாக பார்ப்பது என்பதை போல ஜன்னல் வழியே அவள் முகம் மறையும்வரை பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

“மேடம்… கொஞ்சம் தலையை உள்ளே இழுத்தீங்கன்னா, ஜன்னலை மூடிட்டு ஏசியை போடலாம்!” என ரகு சொல்லும்வரை பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

அமைதியான பயணம்! சென்னை சிட்டியை தாண்டும்வரை பெரிதாய் பேச்சுவார்த்தை இல்லை!

 

நடேசனுக்கு அழைத்தாள் ஷைலஜா. தான் வரும்வரை தனது அப்பார்ட்மெண்டில் காவலாய் இருக்க முடியுமா என கேட்டு அவர் ஒப்புதல் சொன்னதும் தான் அவளுக்கு நிம்மதியாகிற்று!

 

“ஹப்பா! மேடம் இனி தான் பேசுவாங்க போல என்கிட்ட!” கேலி போல அவன் சொல்ல, முறைப்பதை போல பாசாங்கு செய்தவள்,

 

“எங்க போறோம்?” என்றாள்.

 

“சொன்னதான் வருவியா?”

 

“இப்போ சொல்லிட்டு தான் என்னை கூட்டிட்டு போறீங்களா?”

 

சிரித்தான் அவன்.

 

“சொல்லுங்க ரகு!”

 

“போகும்போது உனக்கே தெரியும்!”

 

இதற்குமேல் கேட்டாலும் சொல்லமாட்டான் என்பதால் அவள் அமைதியாகிவிட, கார் நெடுஞ்சாலையை தொட்டதும், “போட்டியை ஆரம்பிக்கலாமா?” என்றான்.

 

‘என்ன போட்டி?!’ உண்மையில் அதெல்லாம் நினைவில் இல்லை அவளுக்கு.

 

சிறிது யோசித்ததும் நேற்று பேசியது நினைவில் வர, “ஆர் யூ சீரியஸ்?” என்றாள்.

 

அவன் உறுதியாய் தலையாட்டினான்!

 

“நீ என் ரசனையை கேள்விக்குறியாக்கிருக்க! அதை எப்டி என்னால பொறுத்துக்க முடியும்?” அவன் கேட்க, மொபைலை நோண்டினாள். ஒரு பாடல் கூட இல்லை அவளிடம். ஆனால் என்ன? இருக்கவே இருக்கிறது ‘யூடியுப்’

 

தைரியமாய் களத்தில் குதித்தவள், முதலில் அவனை இறங்க சொன்னாள்.

 

அதற்கெனவே காத்திருந்தவன் போல தட்டிவிட்டான்.

 

‘இஸ்….ஆஆ’

‘நான் ஆளான தாமரை…!’

‘ஜிங்ஜிங்ஜிங் ஜிஜிங் ஜிங்ஜிங்ஜிங்’

‘ரொம்ப நாளாக தூங்கல…!’   

‘ஜிங்ஜிங்ஜிங் ஜிஜிங் ஜிங்ஜிங்ஜிங்’

 

காரின் அமைதியில் இரவின் இருளில் சப்தமாக ஒலித்தது.

ஷைலஜாவின் ரோமக்கால்கள் எல்லாம் ஒரு நொடி சிலிர்த்து அடங்கியது அந்த குரலில்.

 

“எப்படி?” என்றான் புருவம் தூக்கி!

 

வேண்டுமென்றே முகத்தை சுளித்தவள், “இதெல்லாம் பாட்டா?” என்றாள்.

 

“ஓஹோ! சரி உன் எசப்பாட்டை போடு.. எப்படின்னு பாப்போம்!” அத்தனை கிண்டல் அவன் குரலில்.

 

தேடினாள்…! எதை போடுவென்றே தெரியவில்லை. கணக்கு தெரியாவன் கையில் அல்சீப்ரா கேள்வித்தாளை திணித்தது போல இருந்தது அவள் நிலை.

 

வெளியே மிகவும் ஜம்பமாய் பேசிவிட்டதால் வேகவேகமாக தேடினாள்.

 

அவனோ, “பைவ்… ஃபோர்…” என கவுண்டவுன் துவங்க, கையில் வந்ததை தட்டினாள்.

 

‘பூவினை திறந்துக்கொண்டு… போய் ஒளிந்த வாசமே…

பூவுடன் மறுபடியும்… உனக்கென்ன சிநேகமே!’

 

உண்மையில் இந்த பாடலை அவள் கேட்டதே இல்லை. அவசரத்தில் தட்டிவிட அருமையாய் இருந்தது கேட்க!

 

கெத்தாக ஒரு லுக் விட்டாள்.

 

‘ஹும்!’ என்றவன், அடுத்து தட்ட,

 

‘வாடி என் கூட…

மலையேற…மலையேற…

என் சேல கூடாரம்…

பனி மூட விளையாட…

 

ஏய் மேலே இருந்து நான் பாத்தா… அந்த அருவி கரைகள் தெரியாதா?!

கீழ இருந்து நான் பாத்தா அந்த நிலவே உருகி வழியாதா?!’

 

இடையில் இருந்து ஓடியது. வரிகளை கேட்டதுமே, ‘ச்சீ ச்சீ!’ என்றுவிட்டாள்.

 

“உன் டர்ன்!”

 

இடைப்பட்ட நேரத்தில் எடுத்து வைத்திருந்ததை ஓடவிட்டாள்.

 

‘ஹே மிஸ்டர் மைனர் என்ன பாக்குற?’

 

பாடல் ஆரம்பிக்க, ‘மைனர் இல்ல… ராஸ்கல்’ என்று அவள் கிசுகிசுத்ததும், பஜக்கென அவனுக்கு இந்த பாடல் பிடித்துப்போனது.

 

‘என் இரவுகளை இம்சையாக்க நினைக்குற…!

காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற….

காதலை கைகுலுக்கி இழுக்குற!’

முழு பாடலும் ஓடும்வரைக்கூட அவன் நிறுத்தவில்லை.

 

“நைஸ்!” என்றான் அவளிடம்.

 

“இப்போ உங்க டர்ன்!” மிதப்பாக சொன்னாள்.

 

‘ஒத்தரூவா பொட்டுக்காரி!

ஒத்துழைக்க கெட்டிக்காரி!

தலதலன்னு குலுங்கிவரும்…

தாகம் தீர்க்கும் தண்ணி லாரி!!!’

 

‘அய்ய!’ என்றானது அவளுக்கு.

 

‘பின்னழகு பூந்தோட்டம்!

முன்னழகு மாந்தோட்டம்!’ இன்னும் போக,

 

‘ச்சீ.. கன்றாவி! நிறுத்துங்க” என்றவள் அதை அமத்த போக, ஒரு கையால் தடுத்தவன்,

 

“அடுத்து கவனி!” என்றான்.

 

‘வீடு சொத்தெல்லாம் உன் பேரில் எழுதித்தாரேன்!

கூட நீ இருந்தா கும்மாளம் தான்!’ என்று ஓட, அவளை பார்த்து கண்ணடித்தவன், “என்ன வரியா?” என்று கேட்க, அடுத்து பாட்டே போட முடியாத அளவுக்கு அடிதடி தான் உள்ளே!!!

 

 

சற்றே நீண்ட நேர பயணத்தை முடித்து அவன் காரை நிறுத்தும்போது, நன்றாக இருட்டி இருந்தது.

 

உடலை லேசாக குளிர்கவ்வ, கைகளை பரபரவென தேய்த்துக்கொண்டாள்.

 

அது ஒரு ஹோட்டல்!

 

ரிசெப்ஷன் சென்றவன் சுய விவரங்கள் சொல்லி, இரண்டு அறைகள் புக் செய்ய, திகைப்பாய் பார்த்தாள் அவனை.

 

அவள் பார்வையை உணர்ந்தவன், “என்ன?” என்றதும்,

 

“எல்லாத்துக்கும் ரெடியா இருன்னு பில்டப் எல்லாம் குடுத்தீங்க?” என்றாள் நக்கலாய்.

 

“ஆமா! தனியா தூங்க! தனியா குளிக்க… இப்படி எல்லாத்துக்கும் ரெடியா இருன்னு சொன்னேன்! நீ என்ன நினைச்ச?” என்றான் அப்பாவி போல.

 

முறைத்துக்கொண்டு முகத்தை திருப்பினாள்.

 

“நீ எப்படியோ தெரியாது! நான் ரொம்ப ஒழுக்கமான பையனாக்கும்!” என்று சொல்லி அவள் பிபியை தூக்கிவிட்டவன் அடுத்த இரண்டு நாட்களுமே அந்த வேலையை செவ்வனே செய்தான்.

 

குடகு மலை அருகே இருந்தனர். சுற்றிப்பார்க்க நிறைய இருந்தது. பேசிக்கொள்ள, சிரித்து விளையாட என்று ஷைலஜாவின் நாட்கள் அழகாய் இருந்தது. அவள் இதுவரை இப்படியொரு நிம்மதியை, சந்தோசத்தை அனுபவித்ததே இல்லை. எப்போதும் ஒரு இறுக்கம், முறைப்பு என்றே இருந்தவளை மொத்தமாய் மாற்றி வைத்தான் இந்த இரு நாட்களில்.

 

வாழ்க்கை இப்படியே போய்விடக்கூடாதா என்று அவள் எண்ணும் அளவிற்கு நன்றாய் போனது.  அன்று திறந்தவெளியில் நெருங்கி வந்தவன், இன்று மூடிய அறைக்குள் கூட அருகே வரவில்லை. கண்ணியமாய் இருந்தான். அவளுக்கே ஆச்சர்யம் தான்!

 

இரு நாட்களும் இரு நொடிகள் என ஓடியிருக்க, மீண்டுமாய் சென்னை நோக்கி பயணம்! அதே இரவு நேரம்!

 

பாடல்கள் எல்லாம் இல்லை!

 

ஷைலஜாவின் கரத்தை அழுத்தமாய் பற்றிக்கொண்டு காரை செலுத்திக்கொண்டிருந்தான் பூபதி.

 

அவன் கரத்தை தனக்குள் பொத்தி வைத்திருந்தவள், அதில் இருந்த மோதிரத்தை வருடி, “டிசைன் நல்லா இருக்கு! ஆனா, எங்கயோ பார்த்துருக்கேன்!” என்றாள்.

 

“ரியலி?” என்றவன், “இட்ஸ் அ ரேர் பீஸ் டைமன்ட்!” என்றான்.

 

“ஓ!” என்றவள், அதன் அழகை பார்த்துக்கொண்டே இருந்தாள்.

 

“ஷைலு…!?”

 

அவன்புறம் திரும்பினாள்.

 

“லெட்ஸ் கெட் மேரீட்!” முடிவாய் சொன்னான்!

 

மறுக்க தோன்றவில்லை அவளுக்கு. இந்த இருநாட்கள் கொடுத்த தாக்கம் அவளை மௌனமாய் தலைகுனிய செய்ய, “வெட்கப்படுறியா?” என்றான் சீண்டலாய்.

 

வெட்கம் தான் வந்துதொலைத்தது. கீழுதட்டை அழுத்தமாய் கடித்துக்கொண்டாள்.

 

அந்த அழகை நன்றாய் பார்க்க ஆசைக்கொண்டு அவன் திரும்ப கார் ஒரு குலுங்கு குலுங்கி நின்றுப்போனது.

 

“ஓ… ஷிட்!!!”

 

“என்னாச்சு ரகு?”

 

“தெரியல!” என்றவன் இறங்கி என்னவென்று பார்க்க ஆரம்பித்தான்.

 

இருபக்கமும் அதிக மரங்கள் நிறைந்த பகுதி! சுற்றிலும் இருட்டு தான் என்றாலும் சற்று தூரத்தில் ஒரு கடை தெரிந்தது.

  

“நான் அங்க போய் மெக்கானிக் கிடைப்பாரான்னு கேட்டுட்டு வரேன்” என்றவள் அவனை விட்டுவிட்டு அங்கே சென்றாள்.

 

ரகு மொபைலை எடுத்து டார்ச்சை இயக்க, திடீரென தூரத்தில் இருந்து, “ரகூஊஊஊஊ!” என்ற அலறல்.

 

தூக்கிவாரிப்போட்டது அவனுக்கு.

 

குரல் அவன் ஷைலுவுடையது ஆயிற்றே!

 

“ரகூஊஊ! விக்கி ஓடுறான்! சீக்கிரம் வாங்க!” என்றவள் எங்கோ ஓடிக்கொண்டிருந்தாள்.

 

இருட்டில் தடம் பிடித்து அவனும் வேகமாய் அவள் பின்னே ஓட, மரங்கள் நிறைந்த பகுதிக்குள் எங்கே கால்படுகிறது என்ற சுரணை கூட இல்லை இருவருக்கும்.

 

ஓடும் அவனது காலடி சப்தத்தை பின்தொடர்ந்தே ஓடினர் இருவரும்.

 

ஒருகட்டத்தில் ஷைலுவை முந்திக்கொண்டு ஓடினான் ரகு.

 

மூச்சுமுட்ட ஓடிக்கொண்டிருந்தபோது, சடாரென தன் ஓட்டத்தை நிறுத்திய ஷைலஜா, மூச்சுவாங்க நின்றாள்.

 

பின்வந்தவளின் காலடி சப்தம் அடங்கியதில் வெளிறியவன், டார்ச் கொண்டு அவளை பார்க்க,  பேயறைந்ததை போல நின்றுக்கொண்டிருந்தாள்.

 

“ஷைலுமா? என்னடா ஆச்சு?” பதறிக்கொண்டு வந்தான் அவளிடம்.

 

“ரகு?” என்றவளுக்கு குரல் நடுங்கியது!

 

“சொல்லு!” சுற்றிலும் பார்த்துக்கொண்டே கேட்டான்.

 

“ரகு… இந்த மோதிரம்!?” அவள் கேட்க, பயங்கர எரிச்சல் அவனுக்கு.

 

“இதை பேசுற நேரமா இது!?”

 

ஆழ மூச்செடுத்தவள், “செத்துப்போன ஜெகன் கைல இருந்த மோதிரம் உங்க கைக்கு எப்படி வந்துச்சு!?” என்றாள் நேர்ப்பார்வையாய்.

 

அப்பட்டமான அதிர்ச்சி அவன் முகத்தில்!

 

“நான் பாத்துருக்கேன்! அவனோட போட்டோல! அவன் வீட்ல இருக்க எல்லா போட்டோலையும்! இதே மோதிரம்! இதே தான்!” என்று அடித்து சொன்னாள்.

 

அவன் மறுத்து ஏதேனும் சொல்லப்போகிறான் என ஆவலாய் அவள் அவன் முகம் பார்க்க,

 

“ஆமா! ஜெகனை நான் தான் கொன்னேன்!” என்றுவிட்டான் ரகுனந்தபூபதி.

 

ஒருநொடி ஷைலஜாவின் மூச்சுப்பாதையே அடைப்பட்டுப்போனது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!