Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

MKMK Episode 20.2

“ஆமா என்னோட அப்பாவை பற்றி பேசினாலே உனக்கு கோபம் மூக்குக்கு மேல வரும்.”

 

“இல்லை உங்க அப்பாவை பத்தி பேசினால் எனக்கு ஜில்லுனு இருக்கு போதுமா? இந்த பிரச்சனையை நானே பாத்துக்கிறேன். நீ உன் வேலைய மட்டும் பாரு. போதும்.” என்றான் கோபமாக.

 



Advertisement

“ யார்கிட்டயாவது கேட்டு வாங்கி தான் ஆகணும். பார்க்கலாம் ஒருத்தன் இல்லைன்னு சொன்னா என்ன இன்னொருத்தன் கிட்ட கேட்டு வாங்கி கொடுத்துதான் ஆகணும்.” என்றுவிட்டு அன்று அலைந்து திரிந்த சோர்வுடன் படுத்த அடுத்த நொடி உறங்கிப் போனான் சுகந்தன்.

“எவ்வளவு டயர்டா தூங்குறான் பாரு. ஏற்கனவே வைர வளையல் வாங்கியதில் நிறைய செலவு ஆயிடுச்சு. இன்னும் அஞ்சு லட்சமா? இனிமேல் இவன் கிட்ட பேசி பிரயோஜனம் கிடையாது. அத்தை கிட்ட பேசலாம்.” என்று முடிவெடுத்தாள் சாதனா.

மாலை அலுவலகத்தில் இருந்து கிளம்பும்  போதே ‘இன்னிக்கி சாயந்திரம் வீட்டுக்கு போனதும் அத்தைகிட்ட பேசணும்.’ என்று நினைத்துக் கொண்டு ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தாள் சாதனா.

Advertisement

ஒரு சிக்னலில் வண்டியை நிறுத்திவிட்டு பச்சை  சிக்னலுக்காக காத்திருந்தாள். அப்போது சேகர் அவனுடைய பைக்கில் பக்கத்தில் வந்து நின்றான். இவள் அவனை பார்த்தாள். அவன் இவளை பார்த்த மாதிரி தான் இருந்தது. அவள் புன்னகைத்தாள். அவன் பதில் புன்னகை  செய்யவில்லை.

Advertisement

‘சரி கவனித்து இருக்க  மாட்டார்.’ என்று நினைத்துக்கொண்டு

“மாப்பிள்ளை” என்று கூப்பிட்டாள்.

அவன் திரும்பவில்லை.

Advertisement

சாதனா மீண்டும் “மாப்பிள்ளை மாப்பிள்ளை” என்று சற்று வேகமாக கூப்பிட்டாள்.

அவனைத் தவிர அவனை சுற்றி இருப்பவர் அனைவரும் அவளைப்  பார்த்தார்கள்.

அதில் ஒருவன் “உங்கள தான் கூப்பிடறாங்க போல இருக்கு.” என்று சேகரை தொட்டு கூப்பிட அவன் அவளைப் பார்த்தான்.

“ஹாய்” என்றாள் சாதனா.

அவன் “ஹாய்” என்றான் உணர்ச்சியற்ற குரலில்.

அப்போது சாதனாவுக்கு ஒன்று தோன்றியது.

‘இவனிடம் பேசினால் என்ன?’ என்று நினைத்தாள். நினைத்ததை செயலாற்றும் விதமாக

“நான்… நாம…. ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசலாமா?” என்று தயங்கி தயங்கி கேட்டாள்.

“நம்ம ரெண்டு பேருமா? பேச என்ன இருக்கு?” என்று ஆச்சரியமாகக் கேட்டான் அவன்.

“ஒரு பத்து நிமிஷம். பக்கத்துல இருக்கிற பார்க்கல பேசலாமா?” என்று கேட்டாள்

அவன் சிறிது நேரம் யோசித்துவிட்டு “சரி” எனவும் பச்சை சிக்னல் மாறுவதற்கும் சரியாக இருந்தது.

‘பச்சை சிக்னல் வந்துடுச்சு. நல்ல சகுனம் மாதிரிதான் தெரியுது.’ என்று நினைத்து மகிழ்ந்தாள் சாதனா.

ஆனால் அது அவளது மணவாழ்க்கைக்கு சிகப்பு  சிக்னல் என்று அவளுக்கு அப்போது தெரியாது போனது.

சகுணம் எல்லா நேரத்திலும் சரியாக இருப்பது கிடையாது என்பதை அவள் அனுபவப்பூர்வமாக தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.

 

சேகர், சாதனா இருவரும்  சிமெண்ட் பெஞ்சில் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். சாதனா ‘கூட்டிட்டு வந்துட்டோம். எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியல.’ என்று  தாங்கிக் கொண்டு இருந்தாள்.

எனினும் ‘இன்னிக்கி இதை பேசி ஒரு முடிவுக்கு கொண்டு வந்தே ஆகணும். பாவம் சுகந்தன். எவ்வளவுதான் கஷ்டப்படுவான்? இவர்கிட்ட பொறுமையா எடுத்து சொல்லு புரிய வச்சு இனிமே இப்படி கஷ்டப்படுத்த விடாமல்  பார்த்துக்கணும்.’ என்று நினைத்து உறுதி கொண்டாள்.

தயங்கி தயங்கி

 

“மாப்பிள்ளை அது… வந்து…. இப்பதான் கந்தன், சுகன்யா சீமந்தத்திற்கு  வைர வளையல் வாங்கிப் போட்டான். அப்புறம் உங்களுக்கே தெரியும். சுகன்யா கல்யாணத்துக்கு வாங்கிய கடனை கொஞ்சம் கொஞ்சமாக  அடைத்துக் கொண்டு வருகிறான். இப்போ வந்து நீங்க அஞ்சு  லட்சம் கேட்டு இருக்கீங்க.” என்று அவள் சொல்லும்போதே அவன் முகம் இறுகியது .

 

அதைப்பார்த்து சாதனாவின் மனம் லேசாக பதறியது. எனினும் சுதாரித்துக்கொண்டு

“இல்லை எனக்கு உங்க நிலமை  புரியுது. உங்க வியாபாரத்துக்கு இந்த பணம் தேவைப்படுது. இதை நீங்க உரிமையா சுகந்தன்கிட்ட கேட்டு இருக்கீங்க. நீங்க பண்ணது கரெக்டு தான். ஆனால் பாருங்க. அவன் ரொம்ப  கஷ்டப் படுறான். நிறைய பேர் கிட்ட கேட்டு பார்த்தான். ஆனால் யாருமே நீங்க சொன்ன ஒரு வாரத்துக்குள்ள கொடுக்க தயாரா இல்லை. பாவம் இதனால நேத்துக்கூட ஒரே தலைவலின்னு கஷ்டப்பட்டுட்டு இருந்தான். அதனால நீங்க….” என்று இழுத்தாள்.

“சொல்லுங்க. அதனால என்ன சொல்ல வந்தீர்களோ, சொல்லி  முடிங்க.” என்று நிதானமாகவே கேட்டான்.

‘பரவாயில்லை நாம எதிர்பார்த்த அளவுக்கு இவன் மோசமில்லை. நாம சொன்னா கேட்டு  புரிந்து கொள்வான்னு நினைக்கிறேன்.’ என்று நினைத்து

 

“நீங்க உங்க அப்பாகிட்ட கேட்கலாம் இல்லையா?” என்று மனதில் இருந்ததை கேட்டாள்.

அவன் அதற்கு பிறகு எதுவும் பேசவே இல்லை. அப்போது அவனது கைபேசி ஒலித்தது. எடுத்து பேசியவன் “இதோ வர்றேன்” என்று கைப்பேசியின் தொடர்பை துண்டித்து விட்டு அவளைப் பார்த்து

“நான் போகணும்.” என்று சொல்லிவிட்டு அவள் முகத்தை பார்க்காமல் நடந்து சென்று விட்டான்.

 

‘என்ன பதில் சொல்லாமலே போறாரு?’ என்று நினைத்தபடி சாதனா வீட்டுக்கு வந்தாள்.

தாமரை சமையலறையில்  சட்னி அரைத்துக் கொண்டிருந்தாள்a.

சாதனா தன் கைப்பையை வைத்துவிட்டு கைகால்களை  கழுவிவிட்டு சமையலறை சென்றாள்.

“அத்தை நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.” என்று ஆரம்பித்தாள்.

“என்ன சொல்லணும்? சொல்லு.” என்று  கேட்டபடி சட்னியை தாளித்துக் கொண்டிருந்தார் அவர்.

“அது.. அதுவந்து… அத்தை… மாப்பிள்ளை, சுகந்தன்கிட்ட அஞ்சு லட்சம் ரூபாய் கேட்டிருக்கிறார் இல்லையா?” என்று அவர் முகத்தை பார்த்து கேட்டாள் சாதனா.

கடுகு வெடித்துக் கொண்டிருந்தது எண்ணெயில் மட்டும் இல்லை. அவர் முகத்திலும் கூட தான்.

‘நாம ஏதாவது தப்பா கேட்டுட்டோமா?’ என்று ஒரு நொடி தயங்கினாள். தாமரை  ஸ்டவ்வை அணைத்து விட்டு ஹாலிற்கு வந்தார்.

 

“இப்போ என்ன சொல்ல வர்ற?” என்று சாதனாவை பார்த்து கேட்டார்.

“அத்தை, சுகந்தன்அஞ்சு லட்சத்துக்கு ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கான். அதனால மாப்பிள்ளை கிட்ட சொல்லி அவரை வேற எங்கேயாவது ஏற்பாடு பண்ணிக்க சொல்லலாம் இல்லையா? அத்தை அவரோட அப்பா கிட்ட கூட கேட்கலாம். அவங்க அப்பா  வசதி தானே?” என்று தயங்கி தயங்கி கேட்டு முடித்தாள்.

“இப்போ என்ன சொல்ல வர்ற? உன் புருஷன் கிட்ட பணம் வாங்கக் கூடாதா?”

“அப்படி சொல்ல வரல அத்தை. இப்பதான் சுகன்யாவுக்கு வைர வளையல் வாங்கி போட்டிருக்கான். அதுக்குள்ள அஞ்சு லட்சம் வேணும்னா அவனும் என்ன தான் பண்ணுவான்?” என்று கேட்டாள்.

“இப்போ என்ன வளையல் போட்டிருக்கான்னு சொல்லி காட்டுறியா?” என்று கோபமாக கேட்டார் தாமரை.

அதேநேரம் “ஆமாம் அத்தை. சொல்லி தான் காட்றாங்க இவங்க. என்கிட்ட கூட பார்க்ல வச்சு சொல்லி காட்டினாங்க.” என்று மாமியார் மருமகள் பேசிக்கொண்டிருக்கும்போது இடை புகுந்தான் சேகர்.

“அதுவும் எப்படி தெரியுமா? ரொம்ப கோபமா  கத்தி பேசினாங்க. வீட்டு மாப்பிள்ளைன்னு கொஞ்சம் கூட மரியாதை இல்லாம இப்படியா பேசுவாங்க? என் அப்பா கிட்ட கேக்க எனக்கு தெரியாதா? இவங்க சொல்லித்தான் நான் அதை செய்யணுமா? செய்யணும்னா நானே செய்திருப்பேன் இல்ல? இவங்க வந்து எனக்கு ஏதோ பெரிய வழி காட்டின மாதிரி பேசினாங்க.

அது மட்டும் இல்ல. சுகன்யாவின் கல்யாணத்துக்காக நிறைய கடன் வாங்கி இருக்காராம் சுகந்தன். அதனால ரொம்ப  கஷ்டப்படுகிறாராம். எல்லாத்துக்கும் காரணம் நான் தானாம். அதனால் இனிமேல் சுகந்தன்கிட்ட பணம் கேட்க கூடாதாம். அப்புறம் இன்னும் என்னென்னமோ சொன்னாங்க. எப்படி எடுத்து எரிஞ்சி பேசினாங்க தெரியுமா?” என்று பொய் சேர்த்து கூறினான் அவன்.

இதைக் கேட்ட தாமரை முகம் மாறியது.

 

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!