Nimir Episode 18.1
நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
குழந்தைகளின் கள்ளமில்லாத சிரிப்பினை பார்த்த வெண்மதிக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. அதில் ஒரு
ஏழு வயது மதிக்கத்தக்க சிறுமி இவளிடம் வந்து
“அக்கா அக்கா நான் உங்க ஷால்ல ஒளிஞ்சிகிறேன். நீங்க யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.” என்று கூற
Advertisement
வெண்மதியும் “சரி” என்று அவளுடைய ஷாலை சிறுமி மீது போட்டு அவளை மறைத்துக் கொண்டாள்.
அவளை தேடி வந்த பத்து வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவள்
“அக்கா இங்கே பச்சை பாவாடை போட்டு ஒரு பொண்ணு வந்ததே. பாத்தீங்களா?”
Advertisement
“ இல்லையே” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அந்த 7 வயது சிறுமி தன்மீது மூடப்பட்டிருந்த ஷாலில் இருந்து மெதுவாக எட்டிப்பார்த்தாள். அப்போது அவளை பார்த்த அந்த பத்து வயது சிறுமி
Advertisement
“கண்டுபிடிச்சிட்டேன். கண்டுபிடிச்சிட்டேன்.” என்று உற்சாகமாக கத்தியபடியே குதித்தாள்.
இப்படி சுறுசுறுப்பாக அங்குமிங்கும் ஓடித் திரிந்து விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை பார்த்த வெண்மதியும் தன் கவலையை மறந்து சுறுசுறுப்பானாள். குழந்தைகளுடைய உற்சாகம் இவளையும் தொற்றிக்கொண்டது. பின்பு எல்லோரும் சேர்ந்து அந்தாக்ஷரி விளையாடினர். இவளும் கலந்துகொண்டு பதிலுக்கு பதில் பாட்டு பாடினாள். உற்சாகமாக மகள் பாடுவதை பார்த்த லட்சுமியும் உற்சாகமானார். அவரும் சில பழைய பாடல்கள் பாடினார்.
“ உன் சமையல் அறையில் நான் உப்பா? சக்கரையா?” என்று ஒரு இளைஞன் ஒரு இளம் பெண்ணை பார்த்து வழிந்து கொண்டே பாட
Advertisement
“மிளகாய்த்தூள்” என்று அந்த பெண்ணின் தாய் பதில் சொன்னாள். மேலும் “போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு.” என்று அந்தப் பெண பாட அனைவரும் சிரித்தனர்.
இப்படி அந்த நேரம் கலகலப்பாக இருந்தது வெண்மதிக்கு. மாலை 4 மணிக்கு இருவரும் ஆட்டோ பிடித்து கடற்கரை சென்றனர். கடற்கரையில் கால் நனைத்தவாறு வெகுநேரம் விளையாடிக்கொண்டிருந்தனர். பிறகு பக்கத்தில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கே சுண்டல் , மாங்காய் வாங்கி கொறித்தபடி பேசிக்கொண்டு நடந்தனர்.
“மதி நாம ஹோட்டல் போய் சாப்பிடலாமா?”
“சரிமா சாப்பிடலாம்.”
“சாப்பிட்டுட்டு வீட்டுக்கு கிளம்புவதற்கு சரியா இருக்கும்.”
“ஆமாம் அம்மா.” என்று கூறிவிட்டு இருவரும் சாப்பிட்டனர்.
பிறகு பேருந்து நிலையம் சென்று விழுப்புரம் செல்வதற்கான பேருந்தில் ஏறி விழுப்புரம் வந்து இறங்கினர். இரவு ஒன்பது மணியளவில் வீடு வந்து சேர்ந்த இருவரையும் பார்த்து முறைத்தார் பெரியம்மா.
“காலையில போனீங்க. இப்பதான் வரீங்க. அம்மாவும் பொண்ணும் சேர்ந்து ஊரை சுத்த ஆரம்பிச்சிட்டீங்களா? குடும்பம் உருப்பட்ட மாதிரிதான். காலையில கல்யாணத்துல சாப்பிட்டு இருப்பீங்க. மத்தியானமும் நைட்டும் எங்க சாப்டீங்க?”
“பெரியம்மா அது ரெஸ்டாரண்டில் சாப்பிட்டோம்.”
“இப்படியே வெளிய சாப்பிட்டு காசை கரியாக்குங்க. அந்த காசை என்கிட்ட கொடுத்து இருக்கலாம் இல்ல. போன வாரம் வீட்டை பெயிண்ட் அடிக்க எவ்வளவு செலவு ஆச்சு தெரியுமா? அதுல கொஞ்சம் காசாவது கொடுத்தீங்களா? ரெண்டு நாள் முன்னாடி மோட்டர் ரிப்பேர் ஆயிடுச்சு. அதுக்கு எவ்வளவு செலவு ஆச்சு தெரியுமா? இப்படி இந்த வீட்டில தினமும் எவ்வளவோ செலவு இருக்கு. அதுக்கு எல்லாம் பத்து பைசா கூட கொடுக்க உங்ககிட்ட பணம் இருக்காது. ஊரை சுத்த மட்டும் எப்படி தான் காசு பணம் வருமோ தெரியல. இப்படியே எல்லாத்துக்கும் எங்க தலையில மிளகாய் அரைச்சிட்டு, நீங்க ஜாலியா ஊரை சுத்திட்டு வெளியே சாப்பிட்டுட்டு பொறுமையா தூங்குறதுக்கு மட்டும் வீட்டுக்கு வாங்க. நாங்க எல்லா செலவையும் பண்ணி நீங்க ரெஸ்ட் எடுப்பதற்கு வீட்டை ரெடி பண்ணி வச்சிருக்கோம். கொஞ்சமாவது மனசாட்சி வேணும். இப்படி எல்லா செலவையும் இவங்க தலையில கட்டிட்டு நாம மட்டும் சொகுசா இருக்கிறோமே. அப்படின்னு மனசு உறுத்தன்னும். எப்படி தான் இப்படி கொஞ்சம் கூட உறுத்தல் இல்லாம உங்களால் இருக்க முடியுதோ? தெரியல.” என்று வார்த்தைகளை கொட்டினார் லலிதா.
இதனை கேட்டுக்கொண்டிருந்த லட்சுமி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். வெண்மதிக்கு தான் வருத்தமாக இருந்தது. இந்த சிறையிலிருந்து விடுதலை பெறப்போகிறோம் என்று இனிய கனவு கண்டுகொண்டிருந்த அவள் ஆசையில்தான் மண் விழுந்துவிட்டதே. அவள் முகத்தில் மீண்டும் சோகம் படர்ந்தது. இதைக் கவனித்த லட்சுமியின் முகத்திலும் சோகம் படர்ந்தது .
தன்னிடம் அனுமதி கேட்காமல் மகளை அழைத்துக்கொண்டு தன் இஷ்டம்போல வெளியே சென்ற லட்சுமியை பார்த்து ஆச்சரியமும் கோபமும் ஒன்று சேர்ந்து வந்தது. இவளை இப்படியே விட்டால் தனக்கு சமமாக இந்த வீட்டில் ஒரு எஜமானியாக மாறி விடுவாளோ! என்று பயம் வந்தது லலிதாவுக்கு. எனவே வழக்கம்போல பணத்தை காரணம் காட்டி லட்சுமியை தனக்கு கீழே வைத்திருக்க வேண்டும் என்று முடிவு எடுத்திருந்தார் லலிதா. அதன்படி இருவர் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தார் அவர். இருவரும் சிரித்தபடியே பேசிக்கொண்டு வரவும் இவருக்கு இன்னும் பொறாமை அதிகரித்தது. இப்படியே விட்டால் அவருடைய எஜமானி பதவி பறிபோய்விடும் என்று பயந்து இருவரையும் பணத்தை காரணம் காட்டி மட்டம் தட்டினார். அவர்கள் இருவர் முகத்திலும் தெரிந்த சோகத்தை பார்த்து திருப்தி அடைந்தார் லலிதா.
தன் அறைக்கு சென்று உடையை மாற்றிய லட்சுமி, வெண்மதியின் அறைக்கு சென்றார்.
“மதி என்னமா? பெரியம்மா பேசினதை கேட்டு கவலைப்படுகிறாயா? இதுக்கெல்லாம் கவலை படக்கூடாது. பெரியம்மா நம்மளை கஷ்டப்படுத்த வேணும்னே இப்படி பேசுறாங்க. அவங்க பேச்சை பெரிசா எடுத்துக்காதே. அப்படி நீ பெருசா எடுத்துகிட்டா தான் அவங்களோட நோக்கம் நிறைவேறும். நீ அதை பெருசா எடுத்துக்கலனா அவங்க நோக்கம் நிறைவேறாது. இவங்களால அதிகபட்சம் என்ன பண்ண முடியும்? இந்த மாதிரி நம்மள நோகடிக்க முயற்சி எடுக்க முடியும். அவ்வளவுதான். அதை நாம கண்டுக்காம விட்டாலே போதும். அவங்க முயற்சி தோல்வி அடையும். இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கு எல்லாம் நீ கவலைப்பட்டு உன்னோட எனர்ஜியை வேஸ்ட் பண்ணாதே. இப்போ நீ போய் நிம்மதியா தூங்கு.” என்று சிறிது சோகமாக தெரிந்த மகளை தேற்றினார் தாய்.
வெண்மதிக்கு தாயின் பேச்சினை கேட்க கேட்க அவள் மனதில் இருந்த பாரம் கரைவதை உணர்ந்தாள். எதை எப்படி செய்வது என்று யோசிக்க முடியாமல் குழம்பி போய் இருந்த அவள் புத்தியில் தெளிவு பிறந்தது. தன்னை தேற்றுவதற்காக தான் தாய் இவளை திருமணத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார். அங்கிருந்து கடற்கரை, பூங்கா மற்றும் உணவு விடுதி என்று அழைத்துச் சென்று தன் மனதை மாற்றியிருக்கிறார். தாயை நினைக்கையில் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. பெரியம்மா காலால் சொல்லும் வேலையை தலையால் செய்து முடிக்கும் தாயா இப்படி அவளுக்கு தைரியம் சொல்லிக் கொண்டிருப்பது?
ஏன் தான் இந்த அம்மா இப்படி அடிமை மாதிரி பெரியம்மா சொல்ற வேலையை செஞ்சுகிட்டு இருக்காங்களோ ? இவங்களுக்கு கொஞ்சம்கூட தைரியமே கிடையாது என்று பலமுறை நினைத்திருக்கிறாள் வெண்மதி. ஆனால் அது முற்றிலும் தவறு என்று இப்பொழுது நிரூபித்திருக்கிறார் தாய். பள்ளி படிப்பை கூட முடிக்காத தாய் ஒரு மனநல ஆலோசகர் போல பட்டப்படிப்பு முடித்த இவளுக்கு ஆறுதலும் தைரியமும் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
அவரைப் பார்க்கப் பார்க்க வியப்பாக இருந்தது வெண்மதிக்கு. அவளது பார்வையில் அவள் மனதை படித்த லட்சுமி
“என்னமா அப்படி பார்க்குற? ஸ்கூல் பக்கமே போகாத உன்னோட அம்மா இப்படி பேசறாளேன்னு பாக்குறியா? இதெல்லாம் நான் வாழ்க்கையில கத்துக்கிட்ட அனுபவ படிப்பு.”
“இவ்வளவு தைரியமாகவும் தெளிவாகவும் இருக்கீங்க. அப்புறம் ஏன் பெரியம்மாவுக்கு அடங்கி போறீங்க?”
“குடும்பத்தில் பிரச்சனை வர வேண்டாம்னு நினைக்கிறேன். என்னை அதிகாரம் பண்றதுல அவங்களுக்கு ஒரு சந்தோஷம். அந்த சந்தோஷத்தை நான் அவர்களுக்கு கொடுத்துட்டா அவங்க நம்மள தொந்தரவு பண்ண மாட்டாங்க. அதனால நா அமைதியா போயிடறேன். எனக்கு இதுல கஷ்டம் இல்லை. நம்மளால அவங்க சொல்ற மாதிரி வீட்டை பாதுகாக்க பணம் தர முடியாது. ஆனா இதையாவது செஞ்சிட்டு போகலாமே.”
இதை கேட்ட வெண்மதியின் முகம் சுருங்கியது. அதை கவனித்த லட்சுமி “ஆனா எனக்கு தெரியும். இதுவே நிரந்தரம் கிடையாது. நாமளும் இந்த வீட்டில் சம உரிமையுடன் இருக்கிற நாள் கூடிய சீக்கிரம் வரும். எனக்கு நம்பிக்கை இருக்கு நீ வரவழைப்பாய்!”என்று ஆறுதலாக பேசினார்.
இதனை கேட்ட வெண்மதி தன் முயற்சியை கைவிடாமல் சென்னையிலும் பாண்டிச்சேரியிலும் மேலும் சில நகரங்களிலும் வேலை விண்ணப்பம் அனுப்பி கொண்டிருந்தாள்.
இப்படியே ஒரு வாரம் சென்றது. பாண்டிச்சேரியில் இருந்த சில கம்பெனிக்கு அவளே நேராக சென்று வேலை விண்ணப்பத்தை கொடுத்து விட்டு வந்தாள்.
வார கடைசியில் இரண்டு நாள் விடுமுறையில் ஊருக்கு வந்த கவிதா வெண்மதியை தேடி அவள் வீட்டுக்கு வந்தாள். வெண்மதியின் தெளிவான முகத்தை பார்த்தவளுக்கு நிம்மதியாக இருந்தது.
“பக்கத்துல இருக்குற பார்க்குக்கு போகலாம் வரியா மதி?”
“ஓகே கவி போகலாம்.” என்று இருவரும் கிளம்பி பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு வந்தனர்.
பூங்காவில் கவிதா வெண்மதியிடம்
“என்னடி உன்னை பெண் பார்க்க வந்ததா கேள்விப்பட்டேன்.”
“ஆமாடி என்னை பெண் பார்க்க வந்தாங்க. ஆனா அவனுக்கு என்னை பிடிக்கலையாம்.”
“அதுக்கு இப்படி மூஞ்சில அடிச்ச மாதிரியா சொல்லிட்டு போவாங்க? அம்மா வருத்தப்பட்டு சொன்னாங்க. உன்னைப்போய் அவனுக்கு புடிக்கலையா? அவன் கண்ணுல ஏதோ கோளாறு. என நினைக்கிறேன். அவனை ஒரு நல்ல ஐ டாக்டர்கிட்ட தான் போக சொல்லணும்.”
