Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Nimir Episode 3.2

அடுத்த நாள் காலை வழக்கம் போல தன் வேலைகளை முடித்துவிட்டு பத்தரை மணி அளவில் வெளியே கிளம்புவதற்கு தயாராக வந்தாள் வெண்மதி.

அவளை எதிர்பார்த்து  காத்துக் கொண்டிருந்தது போலவே அங்கு சோபாவில் உட்கார்ந்து இருந்தாள் லலிதா.  அவளைப் பார்த்ததும்

“எங்க போற வெண்மதி?”

“நேத்து போக முடியாம போயிடுச்சு. அந்த வேலையை இன்னிக்கி முடிக்கலாம் என போறேன் பெரியம்மா.” என்று பொறுமையை இழுத்து பிடித்துக்கொண்டு கூறினாள் வெண்மதி.



Advertisement

“இன்னைக்கு என்னோட அண்ணன் குடும்பத்தோட வீட்டுக்கு  வர்றார்.  இந்த நேரத்துல நீ இங்கே இல்லன்னா நல்லா இருக்காது.  நீ எங்கேயும் போகாதே.  இங்கேயே இரு.”

“நான் இங்கே இருந்து என்ன பண்ண போறேன் பெரியம்மா? நீங்க எல்லாரும் பேசிக்கிட்டு இருங்க.  நான் போயிட்டு வேலைய முடிச்சுட்டு சீக்கிரமா வந்துடறேன்.”

“என்னோட அண்ணன்  குடும்பம் வராங்கனு சொல்றேன்.  கொஞ்சம் கூட மரியாதை இல்லாம இப்படி பேசற ? உனக்கு அவ்வளவு தான் எங்க அண்ணன் மேல மரியாதையா?”  என்று பெரிதாக குரலெடுத்து கத்தினாள் லலிதா.

Advertisement

லலிதாவின் குரலை உள்ளிருந்து கேட்டுக்கொண்டிருந்த லட்சுமி வெளியே வந்து “வெண்மதி பெரியம்மா சொல்றதை கேளு.  அவங்க வந்து போனதுக்கு அப்புறம் நீ கவிதா வீட்டுக்கு போ.” என்று கூறி அவளை அறைக்கு அனுப்பினார்.

Advertisement

உள்ளே நுழைந்தவள் தன் பையை கழற்றி அந்த படுக்கை மீது  போட்டு விட்டு போனை  எடுத்து கவிதாவுக்கு தொடர்புகொண்டு   “ஹலோ கவிதா நான் வெண்மதி பேசுறேன்.  இன்னைக்கும் என்னால உங்க வீட்டுக்கு வர முடியாது.”

“ஏண்டி அப்புறம் எப்படி ப்ராஜெக்ட் பண்றது ? நாளைக்கு சப்மிட் பண்ணனும் ஞாபகம் இருக்குல்ல?”

“எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.”

Advertisement

“அப்புறம் ஏண்டி வர மாட்டேன்னு சொல்ற?”

“பெரியம்மாவோட அண்ணன் குடும்பத்தோடு இங்க வராங்க.”

“சரி அதுக்கு நீ  ஏன் அங்க இருக்க போற?”

“இதை நான் கேட்டதுக்கு தான் பெரியவங்க கிட்ட மரியாதை இல்லாம பேசுறேன்னு என் மேல கம்ப்ளைன்ட் வருது என்னத்த பண்றது?” என்று சலித்துக்கொண்டாள் வெண்மதி.

“சரி சரி.  நான் உனக்காக வெயிட் பண்றேன்.” என்று கூறிவிட்டு போனை வைத்தாள் கவிதா.

 

லலிதாவின் அண்ணன் அண்ணி அவர்களின் மகள் வைஷ்ணவி 11 மணி அளவில் வீட்டுக்கு வந்தனர்.  பொதுவாக எல்லோரும் நலம் விசாரித்த பிறகு வெண்மதி வைஷ்ணவி இருவரும் சோபாவில் உட்கார்ந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தனர்.

“எப்படி இருக்க வெண்மதி ?” என்றாள் வைஷ்ணவி.

“நான் நல்லா இருக்கேன்.  நீ எப்படி இருக்க வைஷ்ணவி?”

“என்ன பார்த்தா தெரியல?  நான் ரொம்ப நல்லா இருக்கேன்.” என்று கையில் போட்டிருந்த வளையலை வெண்மதி முன்பு ஆட்டியபடியே கூறினாள்.

இந்த வளையல்களை பற்றி வெண்மதி கேட்கவேண்டும் என்று இப்படி செய்கிறாள் என்பது புரிந்தது. எனினும் அதைப் பற்றி கேட்க ஆர்வம் இல்லாததால் அவள் வேறு திசை திரும்பினாள்.

அது பொறுக்க முடியாமல் வைஷ்ணவி ஆரம்பித்தாள்.

“இந்த வளையல் பாத்தியா வெண்மதி?” என்று கேட்க வேறு வழியின்றி அவள் பக்கம் திரும்பினாள் வெண்மதி.

“ஆம் பார்த்தேன்.  ரொம்ப நல்லா இருக்கு.”

“இது டைமன் பேங்கில்.  ரொம்ப காஸ்ட்லி. எங்க அப்பா எனக்காக வாங்கி கொடுத்திருக்கிறார்.  இது கூடவே டயமண்ட் நெக்லஸ் டைமன் ஸ்டட் எல்லாமே செட்டா வாங்கி  இருக்கோம். இன்னைக்கு எல்லாத்தையும் போட்டுக்கிட்டு வரலாம்னு நினைச்சேன். அம்மாதான் ஏதாவது பங்க்ஷன் போனா போட்டுக்கலாம்னு சொல்லிட்டாங்க.  இல்லனா நான் எல்லாத்தையும் உன்கிட்ட காமிச்சு இருக்கலாம். நீயும் இதெல்லாம் பாக்குறதுக்கு ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கும்.” என்று வேண்டுமென்றே குத்தலாக பேசினாள்.

 

“எனக்கு இந்த நகை மேலெல்லாம் இன்ட்ரஸ்ட் கிடையாது.  நீ போட்டுட்டு வந்திருந்தா கூட நான் அதையெல்லாம் பார்த்து  ரசிச்சு இருக்கமாட்டேன்.” என்று அவள் மூக்கை உடைத்தாள் வெண்மதி.

 

“சூப்பர் அக்கா செம நோஸ்கட். போதுமா உனக்கு?” என்று கூறிக்கொண்டே அங்கு வந்தான் கார்த்திகேயன்.

“எங்க அக்காவுக்கு காசு பணம் நகை மேல இன்ட்ரஸ்ட் எப்பவுமே கிடையாது. படிப்பு மேல தான் இன்ட்ரஸ்ட்.  அதைப் பற்றிக் கொஞ்சம் பேசலாமா?” என்று ஆரம்பிக்க…

“நான் அத்தை கிட்ட பேசணும்.” என்று அங்கிருந்து தப்பிக்க முயன்ற  வைஷ்ணவியை

“எங்க ஓடற? அம்மா உங்க அம்மா கிட்ட பேசிகிட்டு இருக்காங்க. கொஞ்ச நேரம் எங்க கிட்ட பேசிட்டு போ.” என்று அவளை நிறுத்தினான் கார்த்திகேயன்.

“அப்புறம் உன்னோட படிப்பெல்லாம் எப்படி போகுது வைஷ்ணவி ?” என்றாள் வெண்மதி சிறு கள்ளச் சிரிப்புடன்.

அவள் எடுத்துக் கொடுத்ததை புரிந்துகொண்டு “உங்களுக்கு தெரியாதா அக்கா? வைஷ்ணவி  பி. இ.  நாலு வருஷம் முடிச்சாச்சு.”

“ஆமா.  சரி நான் கிளம்புறேன்.” என்று எழுந்திருக்க  முயன்றாள் வைஷ்ணவி.

“இரு வைஷ்ணவி. இன்னும் நான் முடிக்கவே இல்ல. உன்னோட பெருமையெல்லாம் சொல்லவேண்டி இருக்குல்ல?  வெயிட் பண்ணு. வைஷ்ணவி காலேஜ் படிப்பு  முடிஞ்சிடுச்சு.  ஆனால் எவ்வளவு அரியர்  இருக்குன்னு வைஷ்ணவிக்கே தெரியாது”.

“அப்படியா வைஷ்ணவி?” என்று   தெரியாதவள் போல கேட்டாள் வெண்மதி.

“ஆமாக்கா. வைஷ்ணவி அரியர் எக்ஸாம் எழுதினாள். எழுதி இருக்கிறாள். எழுதுவாள்.” என்று ராகம் இழுத்து கூற வெண்மதி கார்த்திகேயன் இருவரும் சேர்ந்து சிரித்தனர்.

இதில் கோபம் அடைந்த வைஷ்ணவி

“அத்தை” என்று அழும் குரலில் கத்தினாள்.

அதைக் கேட்டு அங்கு வந்த லலிதா “இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்னை கிண்டல் பண்றாங்க அத்தை.  வீட்டுக்கு வந்த பொன்னை இப்படியா ரெண்டு பேரும் சேர்ந்து அழு வைப்பீங்க ? வெண்மதி இதுதான்  உனக்கு தெரிஞ்ச மரியாதையா?  என்று வெண்மதி மீது பாய்ந்தாள் லலிதா.

“அம்மா அக்கா எதுவும் செய்யல.  நான்தான் சும்மா விளையாட்டா பேசிக்கிட்டு இருந்தேன். அதை வைஷ்ணவி தான் சீரியஸா எடுத்துக்கிட்டு பிரச்சனை பண்றா.” என்று நடுவில் புகுந்து அக்காவுக்காக  பரிந்து பேசினான்.

“முதல்ல வைஷ்ணவியை அவ இவன்னு பேசுவதை நிறுத்து. அவ உன்னை விட பெரியவ. கொஞ்சம் மரியாதையா பேச கத்துக்கோ.  வெண்மதியை மட்டும் அக்கான்னு கூப்பிடற,  இவளை மரியாதையா கூப்பிட மாட்டேங்குற.  எதுக்கு இப்படி ஓரவஞ்சனை பண்ற ?”

“அவங்க அவங்க நடந்துக்கிற விதத்தில தான் அவங்க அவங்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கும்.”

“இப்போ நான் என்ன தப்பா நடந்துக்  கிட்ட? எல்லாம் இந்த வெண்மதி சொல்லிக் கொடுக்கறது. எல்லாத்துக்கும் காரணம் இந்த வெண்மதி தான். இவள கொஞ்சம் அடக்கி வைங்க அத்தை.”

“எங்க அக்கா அடக்கமா தான் இருக்காங்க.  நீ தான் ஓவரா தேவையில்லாம ஆடிக்கிட்டு இருக்க. அடக்கத்துக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.”

“நிறுத்துடா! வீட்டுக்கு வந்து இருக்கிற விருந்தாளிகிட்ட இப்படித்தான்  நடந்து கொள்வாயா? சரி வைஷ்ணவி நீ என்கூட வா. உனக்கு சமம் இல்லாத இவகிட்ட எல்லாம் என்ன பேச்சு வேண்டி இருக்கு?”

“கரெக்டா சொன்னீங்க அத்தை. நீங்க போங்க இதோ நான் வந்துடறேன்.” லலிதா அங்கிருந்து சென்றாள்.

“உன்னை மாதிரி கஷ்டப்பட்டு படிச்சு யார்கிட்டயும் போய் வேலை செய்ய வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. எங்க அப்பாவோட சொத்து கோடி கணக்குல இருக்கு. அது எல்லாமே எனக்கும் என் அண்ணனுக்கும் தான். அப்புறம் எதுக்கு நான் படிக்கணும்? எனக்கு சமம் இல்லாத உன்கிட்ட நான் பேசினது  என்னோட தப்பு தான்.  வர்றேன்” என்று அங்கிருந்து சென்றுவிட்டாள் வைஷ்ணவி.

 

“அக்கா வைஷ்ணவி பேசினதை எல்லாம் மனசுல  வெச்சுகாதே. அவளுக்கு உன்னை பார்த்தால் பொறாமை. அதனாலதான் இப்படி பேசிட்டு போறா. எங்க அம்மாவையும் சேர்த்துதான் சொல்றேன்.”

 

“இவ பேச்சை எல்லாம் நான் எப்பவுமே பெருசா எடுத்துக் கொண்டதே கிடையாது. இதெல்லாம் எனக்கு  புதுசு கிடையாது.” என்று கூறிவிட்டு எழுந்து தன் அறைக்கு சென்றாள் வெண்மதி.

மதியம் தடபுடலாக விருந்து தயாரானது. லட்சுமி உதவிக்கு ஒரு   வேலைக்காரப் பெண்ணை வைத்துக் கொண்டு அவ்வளவையும் தயார் செய்தார்.  வெண்மதி தன்னால் முடிந்த உதவியை செய்தாள் விருந்து முடிந்ததும் அனைவரும் தூங்குவதற்காக அறைக்கு சென்றனர் லட்சுமியும் வெண்மதியும் மதியம் சாப்பிடுவதற்கு  4 மணி ஆனது .

 

சாப்பிட்டு முடித்ததும் மாலைக்கு காபி, டிஃபன், இரவு உணவு என்று திரும்பவும் சமைக்க ஆரம்பித்தார்.

இப்படி எல்லா வேலையையும் முடிக்க அவருக்கு  இரவு எட்டு மணி ஆனது. இரவு உணவை முடித்து விட்டு எல்லோரும் சென்று விட்டனர்.

10 மணி அளவில் சாப்பிட்டு முடித்துவிட்டு சோர்வாக தன் அறைக்கு வந்து படுத்துக் கொண்டார் லட்சுமி. இவை யாவையும் பார்த்துக்கொண்டிருந்த வெண்மதி, அவரது காலை மெதுவாக அமுக்கி  விட்டாள்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!