Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Nimir Episode 5.2

“நீங்க வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்துட்டு வரலையா? இல்லை  நானும் என்னோட ஃப்ரெண்ட்ஸ் நாலு பேரு சேர்ந்து ஒரு ரூம் எடுத்து தங்கி  இருக்கிறோம். வெளியில வாங்கி தான் சாப்பிடுவோம்.”

“நாலுபேரு தங்கி இருக்கீங்கன்னு சொல்றீங்க.  நீங்க எல்லாரும் சேர்ந்து சமைச்சு சாப்பிடலாமே.” என்றாள் கவிதா.

“ஆமாம் நாங்களும் அந்த  ஐடியாவுல தான் சமைப்பதற்கு தேவையான எல்லாமே வாங்கி கொஞ்சநாள் சமைச்சு சாப்பிட்டோம். அப்புறம்  சமைக்கிறது சாமான்கள்  கழுவுவதுன்னு வேலை அதிகமாக அதிகமாக யார் எதை செய்யறதுன்னு தேவையில்லாம  எங்களுக்குள் பிரச்சனை வந்துருச்சு”

“எல்லோரும் சேர்ந்து தான் செய்யணும்.” என்று கவிதா மேலும் கூற “ஆமாம். ஆனா எங்க ரூம்ல இருக்கிற எல்லோரும் கொஞ்சம் சோம்பேறி. உடம்பு வளைய மாட்டேங்குது. என்ன பண்றது.”



Advertisement

“உங்களையும் சேர்த்து தானா?” என்று கவிதா கேட்க

“ஆமாம்.” என்று உண்மையை ஒத்துக் கொண்டான் விஜய்.

“உங்கள் நேர்மையை நான் பாராட்டுகிறேன்.” என்று கவிதா கூற மூவரும்  சிரித்தனர்.

Advertisement

 

Advertisement

“நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே  டெல்லி தான். எங்கப்பா பேங்க் மேனேஜர்.  அம்மா ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை செஞ்சிட்டு இருந்தாங்க. எங்களுக்கு பூர்வீகம் மயிலாடுதுறை தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி எங்க தாத்தா இறந்து போயிட்டாங்க.  அதனால எங்க அப்பா, அம்மா,  நான், என்னோட தம்பி இங்க வந்துட்டோம். எங்கப்பா ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு  மயிலாடுதுறை வந்துட்டாரு. அம்மா வேலையை விட்டுட்டாங்க.”

“உங்களுக்கு இந்த ஊரை பிடிச்சிருக்கா?”

“எங்க அப்பாவுக்கு இந்த இடம் ரொம்ப பிடிச்சிருக்கு.  அவர் பிறந்து வளர்ந்த இடத்துக்கு வந்ததனால அவருக்கு ரொம்ப சந்தோஷம் தான். அம்மாவுக்கும் எனக்கும் கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு.” என்று சிறு கவலை  காட்டி கூறினான் விஜய்.

Advertisement

 

பேசிக்கொண்டிருக்கும்போதே அங்கு இன்னொருவன் வந்தான். “ஹாய் விஜய்” என்ற என்றபடியே விஜய்யின் முதுகினை தட்டினான்.

விஜய் திரும்பி “ஹாய் செல்வா” என்று பதிலுக்கு அவனிடம் சொல்லிவிட்டு வெண்மதி, கவிதா இருவர் பக்கமும் திரும்பி

“இவன் என்னோட ஃப்ரெண்ட் செல்வா. நானும் இவனும் ஏ. ஆர் இஞ்சினியரிங் காலேஜில்  படிக்கிறோம்.  இவங்க குடும்பமும் முன்னாடி டெல்லியில இருந்துச்சு.  இவங்க அப்பா எங்க அப்பா கூட வேலை செஞ்சாரு.  இவனோட அப்பா ரிட்டயர்ட் ஆனதுக்கு அப்புறம் இங்க வந்து செட்டில் ஆகிட்டாங்க.  இவன் அப்பாவும் எங்க அப்பாவும் சின்ன வயசிலிருந்தே  பிரண்ட்ஸ்.  அதே மாதிரி நாங்களும் பிரண்ட்ஸ்.”

“நானும் உங்க கூட ஜாயின் பண்ணிக்கலாமா?”

என்று செல்வா வெண்மதி கவிதா இருவரையும் பார்த்து பொதுவாக கேட்டான்.

“ஓ எஸ். உட்காருங்க.” என்று வெண்மதி கூறினாள்.

நால்வரும் சாப்பிட தொடங்கினர்.

“நீங்களும் வெளியே தான் சாப்பிடுவீங்களா?”

“ஆமாங்க கவிதா.” என்றான் செல்வா.

“நாங்கள் எங்களை பற்றி நிறைய சொல்லி விட்டோம். நீங்க உங்கள பத்தி சொல்லுங்க கேட்போம்.” என்று ஆர்வமாக கேட்டான் விஜய்.

“எங்க இரண்டு பேர் பெயரும் உங்களுக்கு தெரியும். அதுவே இப்போதைக்கு போதும். இப்போதான் முதன் முறையா நாங்க உங்கள பார்க்கிறோம். எல்லாத்தையும் இப்பவே சொல்லனுமா? அப்புறம் எப்ப உங்ககிட்ட சொல்லனும்னு தோணுதோ, அப்ப சொல்றோம்.” என்று வெண்மதி முடித்துவிட்டாள்.

“சரி. உங்க இஷ்டம்.” என்று கூறிவிட்டு நால்வரும் பொதுவாக பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.

 

அன்று மாலை ஆறரை மணிக்கு  வீட்டுக்கு சோர்வாக வந்தாள் வெண்மதி. தன் கைப்பையை சோபாவின் மீது வைத்தவள் அங்கேயே உட்கார்ந்தாள். அவளை பார்த்ததும் லட்சுமி

“கை கழுவிட்டு வந்து சாப்பிடுமா. நான் போய் சாம்பார் பொரியல்,  சூடு பண்ணி வைக்கிறேன்.” என்று சமையலறையில் புகுந்தார் லட்சுமி. சோபாவின் மீது சாய்வாக உட்கார்ந்தவள் தன்னை மீறி சோர்வினால் அப்படியே படுத்து உறங்கிவிட்டாள். சமையல் அறையில் இருந்து வெளியில் வந்த லட்சுமி உறங்கிக்கொண்டிருந்த வெண்மதியை பார்த்தார். அவளது உறக்கத்தை கலைக்க விரும்பாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

“விளக்கு வச்சிருக்கிற நேரத்தில  வயசு பொண்ணு இப்படி நடுவீட்டில் தூங்கினா  நல்லாவா இருக்கு?” என்று  பெரியம்மாவின் குரலைக் கேட்டு திடுக்கிட்டு விழித்து எழுந்தாள் வெண்மதி. எழுந்தவள் தன்னுடைய கைப்பையை எடுத்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றாள்.

“நான் உன் கிட்ட தான பேசிட்டு இருக்கேன் . நீ என்னடான்னா   காதுல விழாத மாதிரி எழுந்து போய்கிட்டு இருக்க?” என்று அதிலும் ஒரு குற்றம் கண்டுபிடித்தார் பெரியம்மா.

“சாரி பெரியம்மா. டயர்டா இருந்தேன். அதான் எனக்கே தெரியாமல் தூங்கிட்டேன். இனிமே இந்த நேரத்துல தூங்க மாட்டேன்.” என்று மன்னிப்புக் கேட்கும் குரலில் கூறினாள்.

“ சரி சரி போய் முகத்தை கழுவிட்டு பெண்ணா லட்சணமா இரு.” என்றார் பெரியம்மா.

வெண்மதி தன் அறைக்குள் புகுந்து முகத்தை கழுவிவிட்டு பால்கனியில் நின்று கொண்டு தன் நீண்ட கூந்தலை வாரிக் கொண்டிருந்தாள். அந்த வழியாக வந்த பெரியம்மா “இப்பதான உன்கிட்ட நான் விளக்கு வச்சிருக்கேன்னு சொன்னேன். இந்த நேரத்துல இப்படி தலையை விரித்துப் போட்டுக் கொண்டு நிக்கற. இதையெல்லாம் காலையிலேயே செய்யறதுக்கு என்ன? இந்த நேரத்துல இப்படி இருந்தா வீட்ல மகாலட்சுமி தாங்குவாளா?” என்று மீண்டும் வெண்மதி ஏதோ பெரிய தப்பு செய்து விட்டது போல பேச ஆரம்பித்தார்.

“காலையில தலை  குளித்தேன் பெரியம்மா. அதனால தலை காயவைக்க நேரம் இல்லை. அதனால  போனி டெயில் போட்டுக்கிட்டு போனேனா தலை முடியில் சிக்கல் விழுந்துருச்சு.  அதனால தலை வாரிக்கொண்டு இருக்கேன்.” என்று பெரியம்மாவுக்கு விளக்கம் கூறிக் கொண்டு இருக்கும்போதே அங்கு கார்த்திகேயன் வந்தான்.

“அம்மா ஏம்மா இப்படி அக்காவை படுத்துறீங்க? பாவம் முதல் நாளா ஒரு கம்பெனிக்கு போயிட்டு டயர்டா வந்திருக்காங்க. கொஞ்சம் அவங்கள  ஃப்ரீயா விடுங்க.”

“இது என்னடா வம்பா போச்சு?  நான் நல்ல புத்தி தானே சொன்னேன்.” “என்ன நல்ல புத்தி சொன்னீங்க? தூங்குவதும் தலை வாருவதும் ஒரு தப்பா?”

“ எதை எப்போ எங்கே எப்படி செய்யணும்னு சொன்னேன். அவ்வளவுதான். எங்க அம்மா அப்பா எனக்கு சொன்னதை நான் இவளை என்னோட பொண்ணா நினைச்சு இப்படி சொன்னேன். இதுல என்னடா தப்பு இருக்கு ?”

“அம்மா உங்க காலம் வேற. எங்க காலம் வேற. நீங்க பக்கத்துல இருக்குற ஸ்கூலுக்கு போயிட்டு வந்துட்டு  அதை அதை அந்தந்த நேரத்தில் செஞ்சுகிட்டு இருந்தீங்க. இப்போ காலமே மாறிப்போச்சு.  பொண்ணுங்க ரொம்ப தூரம் ட்ராவல் பண்ணி படிப்பு வேலைன்னு போற காலம் ஆயிடுச்சு. அதனால அவங்க வேலைய அவங்க அவங்களுக்கு எப்ப எப்ப  வசதி படுமோ அப்போ அப்போ அவங்க வேலையை அவங்க பார்த்துக்குவாங்க. நீங்க சொன்ன மாதிரி உங்களுக்கு ஒரு பொண்ணு  இருந்திருந்தா உங்களுக்கு பொண்ணுங்களோட கஷ்டம் புரிஞ்சிருக்கும். சித்தியோட பொண்ணுதானே அதனால உங்களுக்கு அக்கா கஷ்டம் புரிய வாய்ப்பே கிடையாது. அதுக்கும் மேல உங்க பொண்ணா இருந்திருந்தா இவ்வளவு தூரம் நீங்க பேசுற அளவுக்கு விட்டிருக்க மாட்டா. உங்க கூட நல்லா சண்டை போட்டு இருப்பா. அக்கா  பெரியம்மாகிட்ட எப்படி சண்டை போடுவது என கொஞ்சம் பொறுத்து போறாங்க. அதனால அந்த மரியாதையே நீங்களே  காப்பாத்திகோங்க. அவ்வளவுதான் நான் சொல்லுவேன்.” என்று அவளை எச்சரிக்கும் குரலில் கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.

சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றுகொண்டிருந்தாள் வெண்மதி. தான் மனதில் பேச நினைத்ததை அப்படியே பேசிய தம்பியை எண்ணி மகிழ்ந்தாள். இதையே வெண்மதி பேசி இருந்தால் இந்நேரம் இந்த வீட்டில் பெரிய  சண்டையாகி இருக்கும். இவை எல்லாவற்றையும்  கார்த்திகேயன் பேசியதால் வேறுவழியின்றி மௌனமானாள் லலிதா.

எனினும் வெண்மதியை முறைத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

வெண்மதி கீழே இறங்கி வந்து சாப்பிட்டு முடித்துவிட்டு தாய்க்கு சிறிது நேரம் சமையல் அறையில் உதவி விட்டு தன் பாட புத்தகங்களை எடுத்து வந்து பால்கனியில் அமர்ந்தாள். ஒரு ஐந்து நிமிடம் படித்திருப்பாள். “வெண்மதி” என்று பெரியம்மா அழைக்கும் குரல் கேட்கவும் ‘திரும்பவுமா’ என்று மனதினுள் சலித்துக் கொண்டாலும் வேறுவழியின்றி கீழே இறங்கி வந்தாள் வெண்மதி.

 

“சொல்லுங்க பெரியம்மா.  என்ன  வேணும்?”

“நான் என்ன உன் கிட்ட காசு பணத்தையா கேட்க போற? அப்படியே நான் கேட்டாலும் உன்கிட்ட என்ன கொட்டியா கிடக்கு எனக்கு குடுக்குறதுக்கு என்ன வேணுமா என்ன வேணும். கேக்குற கேள்விய பாரு.” என்று அவள் கூறிய ஒரு வார்த்தையிலிருந்து  பிரச்சனையை ஆரம்பித்தார் பெரியம்மா எதுவுமே பேசாமல் அமைதியாக நின்றாள் வெண்மதி.

“தோட்டக்காரன் பூ பறித்துக் கொண்டு வந்து குடுத்துட்டு போயிருக்கான். இதையெல்லாம் கட்டி வை.” என்று ஒரு  கூடை பூவை காட்டினார் பெரியம்மா.

“இதை எல்லாத்தையும் நான்  கட்ட வேண்டுமா? இந்த வேலையை எப்பொழுதும் செல்வி அக்கா தானே செய்வாங்க.”

செல்வி,அந்த வீட்டில் வேலை செய்து  கொண்டிருப்பவள். அவளுக்கு வயது முப்பது இருக்கும். வெண்மதி அவளை செல்வி அக்கா என்றே அழைப்பாள்.

“அவளுக்கு வேற வேலை இருக்கு. அப்புறம் நீ அவளை விட ரொம்ப நல்லா பூ கட்டுவாய். நாளைக்கு கோயிலில் விசேஷம் இருக்கு. அதனால இந்த மாலையை நீயே கட்டி கொடு. சாமிக்கு மாலை கட்டி  போட்டா உனக்கு நல்ல புருஷன் கிடைப்பான். அதனால பதிலேதும் பேசாம சொன்னதை செய்.” என்று அதிகாரமாய் கூறிவிட்டு சென்றுவிட்டார் பெரியம்மா.  வெண்மதி வேறுவழியில்லாமல் அந்த மாலையை கட்டி முடித்தாள்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!