Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Oru Mudivin Thuvakkam

Oru Koottuk Kuyilgal 10 2

 மனைவியின் தவறுகளை, இது நம் வாழ்வியலுக்கு ஒத்துவராது என்று அவ்வப்போது சுட்டிக் காட்டவும் அவன் தவறுவதில்லை.

ஒருவாறாக, தனது கனவு நகரத்தில், தன் முதல் வாரத்தை போக்கியிருந்த சந்த்ரிகாவிற்கு,  நினைத்தது போல வேலை வேட்டை அத்தனை எளிதல்ல என்று கொஞ்சம் தாமதமாகத் தான் புரிந்தது.

‘கணவன் தன் கம்பெனியில் பரிந்துரை செய்யட்டுமா? என்று கேட்கும் போதே, சரி என்று சொல்லியிருந்தால், இந்நேரத்திற்கு நானும் வேலைக்கு போயிருக்கலாம்’ என்று சந்த்ரிகா எண்ணாமலில்லை.

இருந்தாலும் அதை கணவனிடம் காட்டிக் கொள்ள அவள் தன்மானம் இடம் தரவில்லை.



Advertisement

இதோ… இப்போது கூட ஒரு சில நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து விட்டு தான் உட்கார்ந்திருக்கிறாள்.

மாலை ஆகவும் முகம் கழுவி, தன்னைத் திருத்திக் கொண்டு கணவனின் வரவை எதிர்நோக்கி இருந்த சந்த்ரிகாவின் மனது, ‘சீக்கிரமே ஒரு வேலையைப் பாத்துட்டு போயிடணும். இல்லைன்னா, பிள்ளையைப் பெத்துட்டு புருஷனுக்காக காத்திருக்கிற சாதாரண பொண்ணுங்க போல என் வாழ்க்கையும் ஆகிடப்போகுது’ என்று எண்ணிக் கொண்டது.

‘பெண் என்பவள் யாரையும் சார்ந்தவளாக இருக்க கூடாது.  அவளுக்கென்று சுய அடையாளம் இருக்க வேண்டும். அவள் ஆணுக்கு சளைத்தவளில்லை, அடிமையும் இல்லை’ என்ற எண்ணங்கள் அவள் இளமனதில் ஆழப்பதிந்து கிடந்தன.

Advertisement

சந்த்ரிகாவின் எண்ணங்களில் தவறில்லை. ஆனால் சரியான புரிதலோடு அத்தனை கருத்துக்களும் அவள் மனதில் தடம் பதித்திருக்கின்றனவா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

வேலை விட்டு வந்த கணவனிடம், “செம போரா இருக்கு சசி” என்று சந்த்ரிகா சொல்ல, “நாளைக்கு எனக்கு லீவ் தான். அப்படியே கொஞ்சம் வெளியே போய்ட்டு வருவோம்” என்றான் சசிதரன்.

சொன்னபடியே, மறுநாள் காலை உணவிற்கு பிறகு மனைவியை வெளியே அழைத்து வந்தான் சசிதரன். முதலில் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த கோவிலுக்கு அழைத்து சென்றவன், நகரின் முக்கியமான இடங்களுக்கு எல்லாம் அழைத்து கொண்டு சென்றான்.

 நல்ல பெரிய ஹோட்டலில் மதிய உணவை முடித்துக் கொண்டார்கள்.

Advertisement

பின்னர் நகரின் பெரிய மாலுக்கு அழைத்து சென்று, அங்கிருந்த பெண்களுக்கான ஆடையகத்தில், “உனக்கு தேவையான ட்ரெஸ் எடுத்துக்கோ சந்த்ரி” என்று மனைவியிடம் சொல்ல, அவள்  எடுத்து குவித்தவற்றைப் பார்த்து மயக்கம் வராத குறைதான் கணவனுக்கு.

ம்ம்… அத்தனையும், அல்ட்ரா மாடர்ன் என்ற பெயரில் இருந்த அரைகுறை உடைகள்.

“என்ன சந்த்ரி இப்படி செலக்ட் பண்ணியிருக்க?” என்று சசிதரன் கேட்க,

“வேலைக்கு போகணும்ல சசி, நாமளும் கொஞ்சம் டீசெண்ட்டா உடுத்திட்டு போனா தானே, நம்மளையும் மதிப்பாங்க” என்றாள் மனைவி.

“இந்த ட்ரெஸ் எல்லாம் நீ போட்டுட்டு போனா உம்மேல மதிப்பு வராது சந்த்ரி” எந்த ஒளிவுமறைவுமின்றி தன்மனதின் எண்ணத்தை பளிச்சென்று சொல்லிய சசிதரன்,

“நம்ம உடம்பை மறைக்கத்தான் ட்ரெஸ். ஆனா, நீ எடுத்து வச்சிருக்குறது எல்லாம் அப்படி இருக்கான்னு நீயே பாத்து சொல்லு” என்றான்.

அவ்வளவு தான்… சுர்ரென்று கோபம் மூண்டவளாக, “பட்டிக்காடு மாதிரி பேசாதீங்க சசி” என்றுவிட்டாள் வேகமாக.

“நாம போடுற ட்ரெஸ், நம்மை தப்பான கண்ணோட்டத்தில் யாரையும் பார்க்க தூண்டக் கூடாது. அதைச் சொல்லுறதால நான் பட்டிக்காடுன்னா, பட்டிக்காடாவே இருந்துட்டு போறேன்” அலட்டிக்கொள்ளாமல் பதில் சொன்னான் சசிதரன்.

“ஒரு பொண்ணு அவ இஷ்டப்படி ட்ரெஸ் போடவுமா  சுதந்திரம் இல்லாம போச்சு இந்த நாட்டுல?” கோபம் சற்றும் குறையாமல் வெடுவெடு என்று முகத்தை வைத்துக் கொண்டு சந்த்ரிகா கேட்க,

“பெண் சுதந்திரம் ங்குறது ட்ரெஸ்ல இல்ல, அவங்க செயல்ல தான் இருக்கு. நாம போடுற ட்ரெஸ் நமக்கு கம்பீரத்தை தரணும், தன்னம்பிக்கையை கூட்டணும்…”

“கூடவே, அவளுக்கு கம்ஃபர்டபிளாவும் இருக்கணும்…” கணவனின் வார்த்தைகளை இடைமறித்து நக்கலாகச் சொன்னாள் சந்த்ரிகா.

“கண்டிப்பா கம்ஃபர்டபிளா இருக்கணும்…” அழுத்தமாகச் சொல்லிய சசிதரன், “யாரும் உன்னை எட்டுமுழ சாரியைக் கட்டிட்டு வேலைக்கு போகச் சொல்லலை. அதுக்காக இந்த மாதிரி ட்ரெஸ்ஸஸ்… நோ சான்ஸ்” உறுதியாக சொல்லிய சசிதரன்,

“உன் முன்னேற்றத்துக்கு எந்த அளவு சப்போர்ட்டா இருக்கணும்னு நான் நினைக்கிறேனோ, அதே அளவு உன்னோட தவறான முடிவுகளையும், இது தப்புன்னு சொல்லுற ரைட்ஸ் எனக்கு உண்டு” என்று, பிடிவாதமாக அந்த உடைகளை மறுத்து, வேறு உடைகளை வாங்கச் சொன்னான்.

“நான் செலக்ட் பண்ணி  வச்சிருக்கிற இந்த ட்ரெஸ்ஸஸ் வேண்டாம்னு நீங்க சொன்னா,  வேற எந்த ட்ரெஸ்ஸூமே எனக்கு வேண்டாம்” என்று, வேறு உடைகளை வாங்கவும் மறுத்து விட்டாள் சந்த்ரிகா.

கணவன், மனைவி இருவருமே தங்களின் பிடிவாதத்தை, தங்கள் துணையின் கோபத்திற்காக தளர்த்திக்கொள்ள முன்வரவே இல்லை.

தங்களுக்குள் இப்படி ஒன்று நடந்தது என்றே காட்டிக்கொள்ளாமல், இருவரும் இயல்பு போலவே  நடமாடி கொண்டிருந்தார்கள்.

அடுத்த வாரத்தில் நடந்த ஒரு நேர்காணலின் எல்லா படிகளையும் சந்த்ரிகா வெற்றிகரமாக கடந்து, பணிநியமன உத்தரவையும் பெற்றுவிட, மனைவியை வெளியே அழைத்து சென்று, விலையுயர்ந்த மடிக்கணிணியை பரிசளித்தான் சசிதரன்.

“எங்கிட்ட தான் ஏற்கனவே இருக்குதே, அப்புறம் எதுக்கு?” என்று மறுத்த சந்த்ரிகாவிடம், “இது புது மாடல் சந்த்ரி, வேலைக்கு போற உனக்கு தேவைப்படும்” என்று சொல்லி, வாங்கிக்கொள்ள வைத்தான் சசிதரன்.

ஆடை விஷயத்தில் கணவன் மீதிருந்த கோபம் மடிக்கணினி மூலம் தீர்ந்து போனது சந்த்ரிகாவிற்கு.

வேலைக்கு போகும் நாளை ஆசை ஆசையாக எதிர்பார்த்து சந்த்ரிகா காத்திருக்க, நாளை விடிந்தால் வேலைக்கு போக வேண்டும் என்ற நிலையும் வந்தது.

உற்சாக மிகுதியில், இரவு நேரத்தில் கணவனிடம் பேசிக்கொண்டிருந்தவள், திடீரென்று வாந்தி எடுக்க பயந்து போனான் சசிதரன்.

“வா… ஹாஸ்பிடல் போய்ட்டு வந்திடலாம்” என்று சசிதரன் மனைவியை அழைக்க, அவளோ, “ஏதாவது ஃபுட் ஒத்துக்கலையா இருக்கும், வாமிட் பண்ணிட்டேன்ல சரியாப் போகும் சசி” என்று வர மறுத்தாள்.

 பூமியே தட்டாமாலையாக சுற்றியது போன்ற  தலைசுற்றலோடு அடுத்து ஒரு வாந்தி வர, இப்போது சந்த்ரிகாவுக்குமே, சோர்வோடு பயமும் சேர்ந்து கொண்டது.

கூடவே, ‘நாளைக்கு வேலைக்கு போக வேண்டும் என்ற நிலையில், என்ன இது?’ என்ற சலிப்பும் ஏற்பட,  கணவனின் முகம் பார்த்து, “ஹாஸ்பிடல் போய்ட்டு வந்துடலாமா சசி?” என்றாள் பதட்டத்தோடு.

ஆனால், அதற்கு நேர்மாறாக, சசிதரனின் முகம் பூரித்து கிடந்தது.

இரண்டு சகோதரிகளோடு, ஒரே வீட்டில் வளர்ந்தவனுக்கு, சட்டென்று மனைவியின் வாந்திக்கான காரணம் பிடிபட, “நாம அப்பா, அம்மா ஆகப்போறமா சந்த்ரி?” என்றான் வாயெல்லாம் பல்லாக.

கணவனின் கேள்வியில் விதிர்விதித்து போன சந்த்ரிகா, “அதெப்படி சசி? நமக்கு கல்யாணம் ஆகி ஒரு மாசம் கூட இன்னும் முடியலையே!” என்றாள் வேகமாக.

‘மனமோ  கணவன் சொன்னது போல மட்டும் இருந்து விடக்கூடாது’ என்று இடைவிடாது கூவியது.

“எல்லாம் மாமனோட வேகம் அப்படி செல்லம்” கண்ணடித்தபடி , மனைவியை தன்னோடு அணைத்து,  விடுவித்தவன், “நான் போய் ப்ரெக்னென்ஸி டெஸ்ட் பண்ணுற கிட் வாங்கிட்டு வரேன், நாமளே டெஸ்ட் பண்ணி பாத்துடலாமா சந்த்ரி?” என்றான் ஆர்வமாக.

கணவனின் ஆர்வத்தைக் கண்டு பயமாக இருந்தது சந்த்ரிகாவிற்கு. ‘ஒருவேளை இது குழந்தையாக இருந்து விட்டால், என்னுடைய காரியர் என்னாவது?’ என்ற எண்ணம் தான் அவளுக்கு முதலில் ஓடி வந்து நின்றது.

‘அப்பா இல்லாததைக் காரணம் காட்டி, திருமணத்திற்கு முன் வெளியூரில் சென்று வேலை பார்க்க மறுக்கப்பட்டது போல,  குழந்தையைக் காரணம் காட்டி, இப்போது வேலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுவிடுமோ?’ என்று பயமாக இருந்தது சந்த்ரிகாவிற்கு.

“கவனமா இருந்துக்கோ, இதோ வந்துடுறேன்”  ஆர்வத்தின் மொத்த உருவமாக தன் வண்டிச் சாவியை எடுத்துக் கொண்டு ஓடினான் சசிதரன்.

பத்து நிமிடங்களில் திரும்பி வந்தவனின் கையில், ஒரு ஸ்வீட் பாக்ஸ்ஸூம், இடம் பிடித்திருக்க, ‘அப்படித் தானென்று உறுதியே செய்து விட்டானா?’ என்று சோர்ந்து போனது சந்த்ரிகாவின் மனது.

“இப்போ பாக்குறதை விட, எர்லி மார்னிங் பார்த்தா தான், ரிசல்ட் கன்ஃபர்ம்மா இருக்குமாம் சந்த்ரி. அதனால காலையில் பார்க்கலாம், ஓகே யா” என்றவன்,

“புளிப்பா ஏதாவது குடிக்கணும் போல இருக்கா? நான் சாத்துக்குடி ஜூஸ் போட்டு தரட்டுமா?” என்று, மனைவியின் கர்ப்பம் உறுதியானது போலவே அவளை கொண்டாடத் தொடங்கினான்.

அன்று இரவு, பேச்சு முழுவதும் சசிதரனுக்கு,  குழந்தை பற்றியதாகவே இருந்தது.

சந்த்ரிகாவோ, ‘இந்த தடவை மட்டும் இல்லைன்னு ஆக்கிடுங்க கடவுளே, அப்புறம் நான் வேலையில் ஸ்டெடி ஆகுறவரைக்கும் வராமல் பாத்துப்பேன்’ என்று அவசரகதியில் ஆண்டவரிடம் சரணடைந்திருந்தாள்.

மறுநாள் காலையும் வந்தது. சிறு வாழ்த்தோடு மனைவியின் கைகளில் ப்ரெக்னென்ஸி கிட்டை வைத்து பாத்ரூமிற்குள் அனுப்பி வைத்த சசிதரன், கண்களில் கனவோடு வெளியே காத்து நிற்க, முடிவைக் கண்டு அதிர்ந்து போய் நின்றிருந்தாள் சந்த்ரிகா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!